Samstag, Dezember 13, 2003

என் இனமே..........என் சனமே...........!

பொ.கருணாகரமூர்த்தி

பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவியிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன்.

"மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும் , கரையோரமாக ஸ்பெயின் கனறித்தீவின் வெண்மணல் புரளும் கோடைகாலத்துக் கடற்கரைகளையும் ஒருசேரக்கொண்ட அழகிய தீவு இலங்கையென்று எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறார்." என்று தன் கனவுகளை மகள் கனிமொழி விரிக்க

"எங்கள்(?) பயேர்ண் மாநிலத்தை விடவும் சிறிய குட்டித்தீவாமே இலங்கை? " என்று தன் ஆச்சர்யத்தை எல்லாளன் குவிக்கவும்

" குட்டித்தீவென்றால் அது நிச்சயம் அழகானதாய்த்தானிருக்கும்." என்று மிகவும் தெரிந்தவளைப்போல ஆமோதித்தாள் ஆறுவயது வெண்ணிலா.

பிள்ளைகளின் ஜீவிதக்கனவும் அவர்களின் பாடசாலைவிடுமுறையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான போர் ஓய்வும் அதிசயமாய் காலப்பாட்டையில் ஒருங்குவியவும் வீட்டுக்குக் கார்பெட் போடவும் தளபாடங்கள் வாங்குவதற்காகவும் கட்டியசீட்டை அவசரமாக எடுத்து விமான டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொண்டு ஆரவாரமாக இலங்கைக்குப் புறப்பட்டோம்.

என்ன தோன்றிற்றோ ஐயாவுக்கு எங்கள் வீட்டை நம்மூரிலேயே குடியிருப்பு அடர்த்தி குறைவான ஒரு இடத்திலேயே கட்டியிருந்தார். சூரியக்கதிர்தாக்குதல்கள் இடப்பெயர்வுகளின்போது கல்லுக்கல்லாய் வீட்டையும் ஓடுகள், ஜன்னல் நிலை கதவுகள் மதில் கேற் உட்பட அனைத்தையும் ஒருவாறு இடம்பெயர்த்துவிட்ட எம் இனமும் சனமும் காலி வளவில் எதுக்கு இவங்களுக்கு இந்தப் பெரிய மரங்களென்று முற்றத்தில் நின்ற வேம்பையும் மாவையும் வேலியையும் சேர்த்துப் பெயர்த்துவிடவே வீட்டின் திறப்புகள் மட்டுமே எஞ்சின. பெரியம்மா வீட்டிலே தங்கியிருந்த அம்மா ஏற்கெனவே எமக்கு எல்லா விபரமும் எழுதியிருந்தாராதலால் நாங்களும் பெரியம்மா வீட்டுக்கே போயிறங்கினோம். வழியில் பஸ்ஸ¤க்குள் கணியன் "ஐயோ கதவைச்சாத்தாமல் ஓடுறானுவள் நான் கீழை விழப்போறேன்.............. ஐயோ சீற்றுக்குக் கீழாலை றோட்டும் தெரியுது ஹில்·ப.......ஹில்·ப" என்று கத்தினான்.

எங்களைப் பார்க்கத் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்த உறவுகள், நண்பர்கள் செங்கரும்பு, நுங்கு, செவ்விளனிக்குலைகள், இராசவள்ளிக்கிழங்கு, வெள்ளரிப்பழம், கெக்கரிக்காய், மாம்பழம், என்று கொண்டுவந்து குவித்த வண்ணமிருந்தார்கள். பெரியம்மாவேறு ஒடியல்கூழ், மாங்காய்போட்டு வாளைமீன் குழம்பு ,இறால் பொரியலென்று தினமும் சமைத்து அசத்திக்கொண்டேயிருக்க பொழுதுகள் சந்தோஷமாய்க் கழிந்துகொண்டிருந்தன.

இருந்த வெய்யிலுக்கும் காங்கைக்கும் போய் தொண்டமானாற்றுக் கடலில் இறங்கினால் நல்லாயிருக்கும் போலிருந்தது, போனோம். எனினும் கடலில் இறங்கக் கால்கள் கூசின.

அது சுழிகள் அதிகமுள்ள கடல். திடீர் திடீரென வந்து ஆட்களை இழுத்துச்சென்றுவிடும். முன்னமுமொருமுறை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாலு பிள்ளைகளை ஈவிரக்கமில்லாமல் ஒரேயடியாய் இழுத்துச்சென்று கொன்ற கடல். அப்போதெல்லாம் வராதபயம் இப்போது தொண்டமானாற்றுக் கடலைப்பார்க்க வந்தது.

குமுதினிப் படகினில் யார் வெட்டினார்கள்
நெடுந்தீவுக் கடலினில் யார் கொட்டினார்கள்
அமுதெனும் சிறுவனை யார் குத்தினார்கள்
அதனாலே வரும் பாவம்யார் கட்டினார்கள்
கப்பல் உலாவரும் கடலே பேசு
உப்புக் காற்றே ஊதத் தொடங்கு !


"ஊ ஊ ஊ ஊ..... " என்று ஊதிச்செல்கிற உப்புக்காற்று புதுவையாரின் கவிதை வரிகளைக் காதில் சொல்லிச்செல்லவும் கடல் சிவப்பாக இருப்பதுபோலவும் கடலில் வீசப்பட்ட பாலகர்கள் அலைகளோடு மிதந்து வருவது போன்றும் பிரமை தட்டியது.

எங்கள் கிராமமான புத்தூருக்கு கொய்யகம் கட்டிவிட்டதுபோலிருக்கும்; குறிச்சிக்கு காளியானையென்று பெயர். அங்குதான் சரவணன் வீடு இருக்கிறது. இக்காளியானையைக் கடந்தும் சாவகச்சேரி நோக்கிய திசையில் ஒரு மைல் தள்ளித்தான் எங்கள்வீடு இருந்தது. அக் குறிச்சிக்கு அந்திரானை என்று பெயர். புத்தூருக்கும் அச்சுவேலிக்கும் இடையில் தூக்கிச் சொருகிவிட்டுள்ளதுபோலுள்ள பகுதி ஆவரங்கால். இவ்விநோதமான பெயர்கள்; எதன் வேரிலிருந்து தோன்றியவையோ தெரியவில்லை. ஏதாவது காரணப் பெயர்களாகக்கூட இருக்கலாம். ஊரணி, புத்தர்கலட்டி, நாரந்தனை, அம்போடை, குஞ்சு மந்துவில், வாதரவத்தை, வீரவாணி என்று ஒன்றுசேர்ந்த பத்தூர்கள்தான் காலப்போக்கில் மருவிப் புத்தூரானது என்றுகூட ஒரு கருத்து இருக்கிறது.


காளியானையின் பெரும்பான்மையர் வெள்ளாளர்கள்தான் எனினும் புத்தூர் மேற்கின் வெள்ளாளர்கள் காளியானை வீடுகளில் சம்பந்தம் கலப்பதோ, சொம்பு எடுப்பதோ இல்லை. நாட்டில் மணியம், விதானை, உடையார் பதவிகளை வகிக்க ஒறிஜினல் வேளாளரால் மட்டுமே முடிந்த காலத்திலிருந்து மேற்கு வெள்ளாளர் மணியத்தின் மகன் மணியம், விதானையின் மகன் விதானை , றிஜிஸ்த்தார் மகன் றிஜிஸ்த்தாரென்று பதவிகளைப் பரம்பரைச் சொத்தாக்கி அனுபவித்தவர்களாதலால் ஒரு காலத்தில் இவர்களுக்கு ஊருக்குள் நிலபுலன்கள், தோட்டம், வாரம், எடுபிடி, படிப்பு பந்தா ஏனையோரைவிட அதிகம் இருந்தன.
மேற்கில் ஒருவருக்கு யாழ் - மின்சாரநிலைய வீதியில் மலாயா கபேயிலிருந்து ராணி தியேட்டர் உள்ளிட்ட சி.வி. பாட் கடைவரையிலான கட்டடங்கள் சொந்தமாயிருந்தன. இன்னொரு குடும்பத்துக்கு யாழ் சின்னக்கடையில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளும் , யாழ் கச்சேரிவளவும், பழையகச்சேரியும் (பின்னால் நில அள¨வாளர் அலுவலகமானது) அதனருகே மலைவேம்புகள் நிற்கும் பெருவளவில் ஆரம்பித்து நிலங்கள் தற்போதைய புளு றிபண் ஹொட்டல்வரை சொந்தமாயிருந்தன. தங்கள் நிலபுலங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவென்றே சரிவரத் தெரியாதோர் ஊரில் இன்னும் அநேகம்பேர் இருக்கின்றனர்.

காளியானையார் பெருநிலபுலன்களோ, கோட்டை கொத்தளங்களோ வைத்து ஆண்டதாய் சரித்திரம் கிடையாது. ஆனால் யாரையாவது பிடித்துக்கேட்டால் "என்ரை காணிக்குள்ள வடக்குப்பக்கமா வீடுகட்டினனேயெண்டால் புத்தூர் தபாற்கந்தோரிலிருந்தும்; தெற்குப் பக்கமாகக்கட்டினனேண்டால கைதடித் தபால்கந்தோரிலிருந்தும் காயிதம் வரும்" என்றும் பீற்றுவார்கள்.
அவர்கள் தோம்பு இருப்பதாகச்சொல்லும் காணிகள் பலவும் ஊரி நிறைந்த தரிசுகளும் கலட்டிகளுந்தான். நடப்பில் இப்போதும் பலபேருடைய வீடுகள் மண்வீடுகள்தான், அனேகமானோரின் வளவுகளுக்குச் செப்பனான வேலிகளே கிடையாது. ஆனாலும் அக்காலிப்பெருங்காய டப்பாக்களில் இன்னும் நாங்கள் வெள்ளாளர் என்ற ஜாதியவாசனை மட்டும் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

சரவணனை என் நண்பன் என்பதிலும் 'கிளாஸ் மேட்' என்று சொல்வதுதான் பொருத்தம். தமிழில் வகுப்புத்தோழன் என்றாலும் அதுவும் அவனை நண்பனென்பதற்கே அணுக்கமாக்கும். நண்பனென்றால் எமக்கு பல விஷயங்களில், கருத்துக்களில் இரசனைகளில் ஒற்றுமைகள் இருந்திருக்கும். அவனிடம் அரசியல் உலகியல் கருத்துக்களில் வேற்றுமைகளிருந்தால் பரவாயில்லை சாதியம், மனித நேயம், பெண்விடுதலை ஆகியவற்றில் நவீனசிந்தனைப் போக்குகளின் வாடையே அறியாத பூர்ஷ¥வாக அவனிருப்பதால் என் மனதுக்கு அணுக்கமானவனாகக் கொள்ளமுடியாமல் இன்னும் சில மனத்தடைகள் உள்ளன என்போமே.

கல்லூரி நாட்களில் ஒரு நாள் சரவணன் சொன்னான்: "அரசாங்கம் புத்தர் கலட்டியில் பெளத்த பாடசாலையைக் கட்டினதுதான் கட்டிச்சு எளியான் சாதியெல்லாம் செருப்பு நடப்போடை எங்கடை ஊருக்குள்ளால முற்றத்தால திரியுதுகள்"

" மேற்குத்தெரு வேளாளர் தங்களுடைய கல்லூரியில் தாழ்த்தப்பட்டிருந்தோருக்கும் இடங்கொடுத்திருந்தால் அவர்களுக்கு சிங்களம் படிக்க வேண்டிய நிலமை எதுக்கு வருகுது? சாதியம் இந்த மதத்தின் மாற்றவேமுடியாத சாபக்கேடென்றுதானே அம்பேத்கார் தானாகவே பெளத்தத்தை; தழுவினார், பெரியார் எல்லோரும் இஸ்லாத்துக்கப் போங்கடா என்றார். பெளத்தபாடசாலை சிங்களமெல்லாம் இங்க வந்ததுக்கே நம்முடைய ஐக்கியக்குறைவுதானே காரணம்?"

சாதியத்தை இப்படிப்பற்றியிருக்கும் சரவணன் விலங்கியலிலோ தாவரவியலிலோ சேதனப் பரிணாமம் , மரபியல் பகுதிகள் சிறப்பாகவே செய்வான். ஒரு நாயுக்கும் மனிதனுக்குமுள்ள (முலையூட்டி விலங்குகள் என்ற வகையில்) ஒற்றுமைகளைக் கேட்டால் மைல் நீளப்பட்டியலே போடுவான். அதெல்லாம் சும்மா பரீட்சைக்கு மாக்ஸ் வாங்கத்தான்............ ஆனால் மானுஷத்துக்குள் சாதியச் சங்கதிகள் நித்தியம் வாய்ந்தவை.

மேற்குத்தெருவிலிருந்து வரும் ஒரு மாணவி நான் ஸ்கூலுக்குக் மட்டம் போடும் நாட்களில் எனக்கான நோட்ஸ்களையெல்லாம் பிரதி எடுத்துத் தருவதுடன் வகுப்பில் ஏனைய மாணவிகளைவிட என்னோடு கொஞ்சம் நெருக்கமாக இருந்தாள். என்னிடமும் அவளுக்கான மென்மையான பக்கங்கள் கொஞ்சம் இருக்கவே செய்தன. பின்னாளில் விடுதலை இயக்கப்பாசறைப் பணிகளில் என் கவனங்கள் குவிந்துவிட சங்கதி டெவலப் பண்ணுப்படாமலே போனது. அதைவிட அவளிடமும் வேறு காரணங்கள் இருந்திருக்கும். அதுவே சரவணனுக்கு உளைஞ்சிருக்கவேணும் ஒருநாள் என்னிடம்: " உவள் உப்பிடித்தான் எல்லோரோடையும் குழையிறாள்...........வேசை."" என்றான்.

சரவணனுக்கும் வறுமையோடான விவசாயக் குடும்பந்தான். எண்ணிக்கை சரிவரத்தெரியவில்லை சாவிச்செற் போல மில்லிமீட்டர் வித்தியாசங்களில் ஆண்களும் பெண்களுமாக ஏழெட்டுச் சகோதரங்கள். எல்லாமே ஒருமாதிரியான மலிவான மண்ணெய் நாறும் கூப்பன் துணிகளில் தொள்ளல்சட்டைகள் தைத்துப் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போகுங்கள். அவர்களுக்கு வெங்காயம் மிளகாய் பயிர்ச்செய்யக்கூடிய தறை கொஞ்சம் அந்திரானையில் இருந்தது. அத்தோடு அவனது தந்தை ஒரு வண்டி மாடுவைத்துக்கொண்டு சீவியத்தைத் தள்ளிக்கொண்டிருந்தார்.
கல்லூரிநாட்களில் எனக்குச் சேதன இரசாயனத்தில் கொஞ்சம் சிக்கல்களிருந்தன. அதனால் நான் யாழ்ப்பாணத்தில் ரியூட்டோரியல் வகுப்புக்களில் பிரபலமாயிருந்த வி.ரி.கந்தசாமி மாஸ்டரிடம் அப்பகுதிகளில் பிரத்தியேகமாக டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்பாடக்குறிப்புகள் சிலது தனக்கும் தேவையென்று சரவணன் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்தான், அரைமணிக்கு மேலாகப் பேசிக்கொண்டிருந்திருப்போம்.

அக்கா இருவருக்குமாகச் சூடாகத் தேனீர் கொண்டு வந்தார். எம்பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது. எனக்கு எப்போதும் தேனீர் கோப்பி மிதமாக சூட்டிலிருக்கையிலே குடித்துவிட வேணும்.
சரவணனோ தேநீரைத் தீண்டுவதாயில்லை. "தேனீர் ஆறிவிடப்போகிறது குடியப்பனே" என்று இரண்டு மூன்று தடவைகள் சொல்லியிருந்திருப்பேன். நான் அதை வேறுயாருக்கோ சொல்கிறேன் போன்றதொரு பாவனையில் தேவநிஷ்டையில் இருந்தான். எனது கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவித்தனமாக "நல்ல அளவான சூடா இருக்கப்பா குடி " என்றுகூடச் சொல்லிப்பார்த்தேன். அவன் அதைச் சட்டைசெய்வதாயில்லை. இனியென்ன நான் பருக்கி விடவாமுடியும்? சிலவேளைகளில் ஆறின தேனீர்தான் அவனுக்குப் பிடிக்கும்போல, பிறகு குடிப்பானென்று இருந்தேன். கடைசி வரையில் அவன் குடிக்கவேயில்லை. நான் தேநீர் குடிப்பதில்லையென்றோ அல்லது "நான் இன்று கெளரிவிரதமென்றோ காயத்திரி விரதமென்றோ" என்றோகூடச் சொல்லவில்லை. தன் பாட்டுக்கு எழுந்து போனான்.

அதை அவதானித்த அம்மாவும் அக்காவையே ஏசினார்.

"அவங்கள் எங்கள் வீடுகள்ல தேத்தண்ணியெல்லாம் குடிக்காங்கள், நீ ஏன் கொடுத்தனி?"
" ஏனாமணை குடிக்காயினம்..............?"
"அது ஆரம்பத்தில இருந்தே அப்பிடித்தான்...............!"
" தம்பியின்ரை கிளாஸ்மேற்றாச்சேயென்றுதான் கொடுத்தனான், வந்தது மூன்றாம் நூற்றாண்டுப் பிரகிருதியென்று யாருக்குத் தெரியும்?"
" நானென்ன அவனுக்கு வெத்திலையா வைச்சன்........... தனக்கு நோட்ஸ் வேணுமெண்டான் வந்தான், தேத்தண்ணி குடிக்காட்டிப்போறான் ..............எமக்கென்ன?"

மறுநாள் பள்ளிக்கூடத்தில் வெகு இயல்பாக என்னிடம் பேசினான். எனக்கு அவனைத் தவிர்க்க வேணும் போலிருந்தாலும் தவிர்க்க முடியாதபடியரு நிர்ப்பந்தம். இரசாயனவியல் செய்முறைகளில் என் ஆய்வுசாலைப் பார்ட்னர் அவன்தான், பிணைத்துவிட்டிருந்தார்கள். வட்டவட்டமான கையெழுத்தில் அவன் தயாரிக்கும் பிறாக்டிக்கல் றெக்கோர்ட் அழகாகவிருக்கும்.

அது திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்த நேரம். மாணவர்களின் உயர் எண்ணிக்கைக்கு வகுப்பறைகள் போதுமானதாக இருக்கவில்லை. தேவையான நிதியை ஊர் மக்களிடமே திரட்டிக் கட்டங்களை விஸ்த்தரிப்பதென்று பெற்றார் ஆசிரியர் சங்கத்தில் முடிவுசெய்து அதிபரோடு சேர்ந்து கல்லூரி வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஊர்ப்பிரமுகர்களும் , பெற்றோரும் , ஆசிரியர்களும், சில மாணவர்களுமாக ஊருக்குள் ஒரு நாளைக்கு ஒரு பிரிவென்று வைத்துக்கொண்டு நிதி திரட்டப் புறப்பட்டோம்.

நிதி திரட்டும் குழுவானது பிரமுகர்களின் வழிகாட்டலில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்குப் போவதைத் மிகக் கவனமாகத் தவிர்த்துக்கொண்டிருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. குழுவில் எல்லோரிடமும் தமாஷாகப் பேசிப்பழகக்கூடிய பண்டிதர் சுப்பிரமணியத்திடம் என் மனக்குறையை வெளியிட்டேன். பண்டிதரோ
"நீயும் நல்ல விசர்க்கதை பறையிறாய்............... கறையான் புத்தெடுக்க நாகம் குடிபுகுந்த கதையாயல்லோ நாளைக்கு முடியும்" என்று அலறவும் முழுக்குழுவினரும் அதுபெரும் அங்கதம்போல் கோரஸாய் சிரித்து ஓய்ந்தனர்.
ஸ்ரீசோமாஸ்கந்தக்கல்லூரிக்கு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஆசிரியர்கள் நியமனமாவதைக்கூட மேற்கு வேளாளர்கள் தம் அரசியல் செல்வாக்கைப் பாவித்துத் தடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட இவ்வதிபரோ 1972ல் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளையும் துணிச்சலாக அனுமதித்துப் பெருமை கொண்டார்.

தியாகி சிவகுமாரன் மரணித்திருந்த நேரம். பொலீசாரைக் கண்டிக்கும் விதத்திலும் பாடசாலைகளைப் பகிஷ்கரிகுமாறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்த மாணவர்கள் பலர் கைதானபோது சரவணனும் அகப்பட்டு கோப்பாய் பொலீஸில் 3 நாள் றிமாண்டி¢ல் இருந்தான்.
அடுத்த நாள் நான் கோப்பாய்ச்சந்தி ஐயர்கடையில் வாங்கிப்போன இட்லி வடையையும் ஒறேஞ்பார்லியையும் சாப்பிட்டான்.

1974ல் ஏப்ரலில் பல்கலைக்கழக புதுமுகப்பரீட்சை அண்மிக்கவும் வாரவிடுமுறையில் அச்சுவேலி ரியூட்டறியன்றில் சில பாடங்களில் இருவரும் மேலதிக வகுப்புக்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இயற்பியல் ஆசிரியருக்கு முதனாள் ஓவராகப்போட்ட சாராயம் எழுந்திருக்க விடாமற்பண்ணியதால் வகுப்பு 'கட்' ஆனது.
கட்டப்பராய் பாலேந்திரனுக்கு ஐடியா வந்து சொன்னான் ~~தொண்டமானாத்துக் கடலிலே போய் ஒரு முங்கு முங்குவோமா?"
" உடுப்புக்கெங்கை போறது?"
"பென்டரோடை இறங்கவேண்டியது............வெய்யில்லை பதினைஞ்சு நிமிஷத்தில காஞ்சுடும்."
"காஞ்சுடும் காஞ்சுடும்."
அனுபவசாலிகள் வழிமொழிய எல்லாச் சைக்கிள்களும் தொண்டைமானாறு நோக்கித் திரும்பின. இடையில் புதுப்பனங்கள்ளுச் சேகரித்தோம். மதியம் திரும்பும் வரையில் கடலில் விளையாடினோம்.. கடல் குளிப்பு பசியைக்கிளப்புமென்பது தெரிந்ததுதான். குளிப்போடு பனங்கள்ளு சேர்ந்துகொண்டு கொடுமை செய்தது. பனங்கள்ளும் கடற்குளிப்பும் சேர்ந்துகொண்டு திடீரென வயிற்றில் 'பேர்ள் ஹாபர்'தாக்குதலைத் தொடங்கின. எல்லோருக்கும் குளுக்கோஸ் ஏற்றினால்தான் எடுத்து மறுஅடி வைக்கலாம் போலொரு நிலமை. கண்கள் சொருகத்தொடங்க கணமும் கடலில் நிற்கமுடியவில்லை. வீடு நோக்கிப் புறப்பட்டோம்.

இடையில் தோட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு இழுத்துக் கொண்டிருந்தனர். கிழங்கைப்பார்த்த சிவபாதம் (பின்னாள் குட்டிமணி, தங்கத்துரையுடன் வெலிக்கடையில் மடிந்தவன்) அபிப்பிராயப்பட்டான்.
" இந்தக் கிழங்கை டிசுப்பேப்பர் மாதிரி மெல்லிசாய் வெட்டி மச்சான் மிளகாய்த்தூளும் உப்பும் தூவிப்பொரிச்சு அடிச்சால்.........."
"அடிச்சால்...........?"
"இந்தப்பசிக்கொரு கணிதமாயிருக்கும்."
" நான் பின்னே இருக்காதென்றனே......... நீயும் கனக்க அடிச்சிட்டாய் இந்தா கையைத்துடை." என்று தன் அப்பியாசக் கொப்பியிலிருந்தொரு தாளைப் கிழித்துக்கொடுத்தான் இன்னொருவன்.

எதைப்பார்த்தலும் சாப்பிடவேணும் போலிருந்தது. பசி இப்படியெல்லாம் பண்ணுமென்று ஜீவிதத்தில் உணர்ந்தது அன்றுதான். கட்டப்பராய், இடைக்காட்டுப் பையன்கள் குறுக்குப்பாதையால் வெட்டிக்கொண்டு போய்விட, வீதி எங்களுக்கு பட்டத்துவால்போல் துடித்துக்கொண்டிருக்க நானும் சரவணனும் மட்டும் தனியாக கண்களைப் பூஞ்சிக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.

அச்சுவேலியை பஸ் நிலையத்தைக் கடக்கவும் வீதியோரக்கடைகளில் கொத்துரொட்டி அடிக்கும் சத்தமும் வீதிக்கு வலம் வந்த அதன் வாசமும் சைக்கிள் சில்லுகடையே குறுக்காக யாரோ அலவாங்கைச் செலுத்தியதுபோல் அவற்றை மேற்கொண்டு நகரமுடியாதபடி அழுத்திப்பிடித்தன.
" கொத்து அடிக்காமல் என்னால அங்கால ஒரு அடிகூடப்போகேலாது." என்றேன்.
"நான் கூடாதென்றேனே..............என்னட்டைச் சல்லிக்காசில்லை." என்றான் சரவணன்.
என்னிடம் நோட்ஸ் புத்தகங்கள் வாங்குவதற்காக அம்மா முதனாள் தந்திருந்த பத்து ரூபாய் இருந்தது. அவதிக்குதவாத காசு பிறகெதுக்கு முதல்ல இந்தப்பிரச்சனை களைந்து உயிர்பிழைப்போம்.

" என்னட்டை இருக்குக்காசு , நோ புறப்ளம்."

நாங்கள் டியூசனுக்கு வந்து போகும்பும்போது டீ குடித்து சிகரெட் புகைக்கும் வாடிக்கைக்கடை. இருவரும் அவசரமாய் உள் நுழைந்தோம்.
ஆளுக்கு டபுள் கொத்து சூடாக அடித்து நிமிர்ந்தபோதுதான் முன்னாலிருப்பவர்கள் கலங்கலில்லாமல் தெரிந்தனர்.
பின்னால் கோல்ட் லீ·பின் தீரத்துக்கு செஸ்ரோரொபியின் பெப்பர்மின்ட் காரக்கூட்டு திவ்யமாயிருந்தது. சரவணன் புகையெல்லாம் பிடிக்கமாட்டான். சூழஇருப்பவர்களின் அசெளகர்யங்களுக்கும் ஆரோக்கியக்குறைவுக்கும்; சூழல் மாசுபட்டுப்போவதற்கும் தான் ஏதுவாக இருப்பதைத் தாங்கமுடியாத உயர் சீலம் அவனது.

ஐந்து வருஷங்களுக்கு முன்னர் நான் ஒரு முறை தனியாக இலங்கைபோய் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.
இப்போது நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு வந்திருந்தான். நீண்ட இருபது வருஷங்கள். முன்னந்தலையில் கொஞ்சம் நரை விழுந்திருந்ததைத் தவிர அவனில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. என் தொப்பையைக் கிண்டலடித்தான்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப்பட்டம் பெற்ற பின்னால் உள்ளுராட்சி சிறகத்திலே சேர்ந்தானாம் , அரச சேவையில் இருந்தவர்களெல்லாம் வெளிநாடு வெளிநாடென்று கழன்றுவிட சேவைமூப்பின் அடிப்படையில் விரைவிலேயே சிறகத்தின் உயர் அதிகாரியாகியிருந்தான்.

சர்வதேசம் - உள்ளுர் என்று பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். தன் சகோதரிகள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டதாகவும் அவர்களில் இருவருக்கு கனடா மாப்பிள்ளைகள் கிடைத்ததால் அவர்கள் அங்கேயே போய்விட்டதாகவும் சொன்னான். மீதிக்குடும்பம் சூரியக்கதிர்த்தாக்குதலில் இடம் பெயர்ந்து போனதிலிருந்து(வன்னி) பாண்டியன் குளத்திலேயே தங்கிவிட்டதாகவும் தான் கோப்பாயில் சட்டத்தரணி பாலசிங்கத்தின் ஒரே மகளைத் திருமணஞ்செய்ததாகச் சொன்னான். அறுபதுகளிலேயே புது போர்ஜோ 504 இலே உலவிய பணமனிதன். சற்று இடைவெளிவிட்டு கொடுப்புக்குள் சிரிப்போடு "செமை சீதனம்........... அநேகமாய் அவற்றை முழுஆதனமும்" என்றான்.இருக்காதா பின்னே?

" நீ சிங்களத்தியைக் கட்டினதும் அறிஞ்சன்............. ஏன் இப்படிக் குறுக்க இழுத்தனீ..........? "

நான் கார் விபத்தொன்றில் சிக்கி இடுப்பை உடைத்துக்கொண்டு ஆஸ்பத்தரியில் இரண்டு மாதங்கள் காலை மேலே தூக்கிக்கொண்டெல்லாம் அசையாமல் படுத்திருந்திருக்கிறேன். அதுபற்றி யாருக்குமே இங்கு தெரிந்திருக்கவில்லை. விசித்திரமாய் சிங்களத்தியைக் கட்டினேன் என்றொருசெய்தி இத்தனை கடல்கள் மலைகள் பாலைவனங்கள் தாண்டி வந்திருக்குப் பாருங்களேன்.

என் ஆயிஷா மாத்தளைத் தமிழ்ப்பெண். பத்து வயதிலேயே ஜெர்மனிக்கு வந்துவிட்டவர். இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவளெனினும் அவள் பெற்றுக்கொண்ட கல்வியும் , டீசநயன கழச வாந றுழசடன என்ற சேவை அமைப்பில் சேர்ந்துகொண்டு இரண்டு வருஷங்கள் எதியோப்பியாவில் புரிந்த தன்னார்வப் பணியும் அவளுக்கு எந்த மத மார்க்கத்திலுமே நம்பிக்கை இல்லாமற் செய்துவிட்டன. அவள் தேடல்களெல்லாம் மானுஷ , வாழ்வியல் மார்க்கத்தில்தான். பகுத்தறிவும் , இலக்கியத்தாகமும் மானுடநேயமுமுள்ள பெண்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்க பிள்ளைகள் வந்து அவனுக்கு "வணக்கம்" சொன்னார்கள்.

"அட ஆச்சர்யமாயிருக்கு........... பிள்ளைகள் தமிழ் கதைக்கினமே?"

"தமிழ்பிள்ளைகள் தமிழ்கதைக்காமல்...........?"

"எனக்கு சிங்களமோ ஜெர்மனோ புரியாது. ஜெர்மன்காரர்கள் மொழிப்பற்று அதிகமுள்ளவர்களாம், லேசில் இங்கிலிஷ் பேசமாட்டார்களென்றும் அறி;ந்திருக்கிறேன். உன்ர வை·புக்கு இங்கிலிஷ்; பேச வருமில்லை?"

"எல்லாவற்றையும்விடத் தீந்தமிழ் நன்றாய் வரும்."

" சும்மா விடுகிறாய் எனக்கு."
"பேசித்தான் பாரேன்."
எமது சம்பாஷணைக்கு இடையூறில்லாது தானே தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டுவந்த ஆயிஷாவுக்கு

"இது சரவணன் என் ஸ்கூல் நண்பன்" என்றே அறிமுகம் செய்து வைத்தேன்.
"வணக்கம்" நமஸ்கரித்தாள்.

"இப்படியரு நண்பர் இருப்பது எனக்குத்தெரியாதே...........ஏன் நீங்கள் இவருக்குக் ஏதும் கடிதங்;கூடப் போட்டதாகத்தெரியவில்லையே?" என்றவள் அவனைப்பார்த்து "ஏன் நீங்கள் குடும்பத்தையும் கூட்டிவந்திருக்கலாமே?" என்றாள் அப்பாவியாய்.

அப்பிடியெல்லாம் லேசில் வந்திடுவார்களா இவர்கள்............
ஒரு இடைவெளிவிட்டுத்தான் இவர்களால் பழகமுடியும்; என்பதோ,
என் உயர்ந்த நண்பர்கள் வரிசையில் இவன் இல்லை என்பதோ, யாழ்ப்பாண சாதியத்தையும் அதன் உட்கட்டுமானங்களையும் அறிந்திராத அவளுக்கு எப்படிப் புரியப்போகிறது? ஏன் இவ்வளவுகாலம் கழித்தென்னைப் பார்க்க வந்திருக்கிறானே............ என் கணிப்புகள் தவறாகக்கூட இருக்கலாம். இந்த நீண்டகால இடைவெளி நிச்சயம் அவன் சிந்தனையோட்டங்களை, கருத்துக்களைப் புடம் போட்டுமிருக்கலாம்.

"இவ்வளவு சரளமாய்த் தமிழ் கதைக்கிறாவே?"

" கதைப்பா..........விஷயத்தைப் பொறுத்து இதைவிட அதிகமாகவும் கதைப்பா."
" உனக்குப் பொன்னென்ன பூவென்ன கண்ணே.........ஞாபகமிருக்கா?"
என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான்.
"ஐயோ.... முழுக்கத்தான் சொல்லுங்களேன்....... நானும் சிரிக்க" என்று ஆர்வமானாள் ஆயிஷா.

"அப்போ ஸ்ரீதரின் 'அலைகள்' என்றொரு படம் வந்து கலக்கிக்கொண்டிருந்த நேரம். இருவருமாகப் படத்தை மெற்னி பார்த்திட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம். அதில வர்ற இந்தப்பாட்டின் பல்லவியை வழி நெடுகிலும் கண்களை மூடியபடி மூக்குப்பொடி அள்ளுகிற மாதிரி கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
புதுக்கல்யாணப் பெண்ணாக உன்னை
புவிகாணாமப் போகாது கண்ணே.........
என்று அனுபவித்து பாடிக்கொண்டு நீர்வேலிச்சந்திக்குக்கிட்ட வந்த சரவணனுக்கு பட்டப்பகல்ல முன்னால நிறுத்தியிருந்த தட்டிவான் தெரியாமப்போச்சு."

"பிறகு?"

"பிறகென்ன இடிபட்டுத் தொபுகடீரென்று விழுந்து மூக்குடைஞ்சதுதான்."

" பிறகு? "

"பிறகென்ன மூக்கால ரத்தம் ஓடத்தொடங்கிவிட்டுது."

"பிறகு?"

" கோப்பாய் ஆஸ்ப்பத்தரிக்குப்போய் மருந்து கட்டினதுதான்."

இப்படிப் பல சம்பவங்களை மீட்டுயிர்ப்பித்துச் சிரிக்கையில் கூடவே என் பிள்ளைகள் அங்கு வந்து செய்த தமாஷ்களையும் அவனுக்குச் சொன்னேன்.

"இங்கே பெரியம்மாவிட்ட ஒரு வெள்ளைக்குட்டிப்பூனை ஒன்று இருக்கு, அங்கார்............ அதில நின்று தெண்டா எடுக்குது அதுதான். சனசந்தடியயில்லாமல் வெளிச்சுப்போயிருந்த வீட்டில் நாங்களும் போயிறங்கி அமர்க்களம் பண்ணினது அதுக்கும் குஷியை ஏற்படுத்தியிருக்க வேணும். நடையிலும் தலைவாசலிலும் குசினியிலுமாக எங்களோடு உரசிக்கொண்டு திரிஞ்சுது. குட்டிப்பூனையல்லே.......... பெரியம்மா சொன்னா: இந்தப்பூனையும் குறுக்கையும் மறுக்கையும் சும்மா சுத்துது ஆற்றையன் காலுக்குள்ள அநியாயமாய் மிதிபடப்போகுது."

"அப்பிடியெண்டால் அதின்ரை பாட்டரியைக் கழற்றிவிடுங்கோவன்.சும்மா இருக்கும்" என்றான் கணியன்.

பின்பொருநாள் பெரியம்மா மீன்குழம்புக்கு மிளகாய் கூட்டரைக்க அம்மியைக் கழுவிக்கொண்டிருந்தார்.
அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா கேட்டாள்:
" பாட்டி... என்ன தெய்யிறீங்கள்? "
"அம்மி கழுவுறன்டா."
" அம்மியென்டால்...........?"
" இதுதான் அம்மி......... இதில அரைக்கிறது கிறைண்டர்."
" அப்பிடியெண்டா எங்கை அதோன்ரை பிளக் வயர் ?"
" இதுக்கு கன்றென்ட் தேவையில்லை, இப்பிடித்தான் அரைக்கிறதென்று இழுத்து அரைத்துக்காட்டினார். அவளுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம்."

" நான் பள்ளிக்கூடத்தால் திரும்பும்வேளைகளில் வழியில் வெற்றிலை வாங்கிச் சப்பும் மாடு மேய்க்கும் மனுஷி என்னைப் பார்த்து சரியாக அப்பாவைப் போலவே இருக்கிறீர் என்றவர் இன்னும் என்னை எமது மூத்த அண்ணன் என்று நினைத்தே என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்."

நம் பேச்சிடையே ஆயிஷா சரவணனுக்கு எத்தனை பிள்ளைகள் என்பதை விசாரித்து தன் உறவினருக்காக வாங்கிவந்த சில உடுப்புக்களை அவனுக்குக்கொடுக்க முன் வந்தாள். நானும் என் பங்குக்கு இரண்டு டீ சேர்ட்டுக்களையும் இரண்டு டிரெளசர் துணிகளையும், லோஷனோடு ஒரு ஷேவிங் செட்டையும் சேர்க்க அவற்றோடு உருகிவிடாது எஞ்சியிருந்த சொக்கலேட் சட்டங்கள் சிலவற்றையும் ஒரு பையில் வைத்து ஆயிஷா கொடுத்தாள். வாங்கிக்கொண்டு விடைபெற்றுச்சென்றான்.

அவன் போனபின்னால் நாங்கள் முற்றத்தில் கொஞ்சநேரம் பாட்மின்டன் விளையாடினோம். மாலையானாலும் வியர்த்தொழுகியது.
"ஒரு டவல் தாரும் குளிச்சிட்டு வாறேன் " என்றேன். "இதோ" என்றுவிட்டுத் தலைவாசலுக்குள் போன ஆயிஷா சரவணனுக்கு வைத்த தேநீர் தீண்டப்படாமல் இருப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டு
"என்னப்பா உங்கள் சிநேகிதர் தேத்தண்ணி குடிக்கவேயில்லை, மறந்திட்டார்." என்றாள். தேநீர் கிளாசை எட்டிப்பார்த்த எழிலியும் " ஓம் அப்பா.................... அந்த மாமா தேத்தா குச்சேல்ல.." என்றாள் வருத்தத்துடன்.

ஆயிஷாகூடத் தன் வாழ்க்கையில் கொஞ்சம் நிறவெறி, பாசிசம், நாஷிசத்தை அனுபவித்திருந்திருக்கலாம், ஆனால் சாதியம்?
என் பிள்ளைகளுக்கும் அவைகளை உணரும் வயது பற்றாது.
முன்னவற்றைவிடவும் சாதியம் நீண்டகால வரலாறுடையது. அறிவை விடவும் அனாதியானது. ஒரு சகமனிதனின், விருந்தோம்புவானின் உணர்வுகளைச் சட்டை செய்யாத உள்வைரம் பாரித்திட்ட வன்மம் அது. ஜென்மாந்தரங்களுக்கும் தொடர்வது.

ஜாதிய அநாகரீகங்கள், அவமானங்கள், அவமதிப்புகளின் நிழல்கூட இவர்கள் மேல் படவேண்டாம். அதன் அசிங்கமான முகத்தைக் காண புரிய நேர்ந்தால் இவர்களும் வெட்க வேண்டிவரும்.

" ஜா.......... சிநேகிதன் மறந்துவிட்டான்............... நீங்களும் மறந்துவிடுங்கள்." என்றேன்.

"எல்லா வெள்ளாளனையும் சந்தேகி " என்ற கூற்று முதன்முதலாக மிகவும் அர்த்தம் மிக்கதாகப் பட்டது.

தேநீர் ஆடைகட்டி வெகுநேரமாகியிருந்தது.

*********************
(மல்லிகை , ஜனவரி-2003 38வதுஆண்டுமலர்.)

Montag, Dezember 08, 2003

ஜெயலலிதா

-கருணாகரமூர்த்தி-


(1)

ஜெயலலிதாவுக்கு பூஞ்சையான அனீமியாத்தேகம். இடை வயிறு பிருஷ்டம் எல்லாம் ஏகத்துக்குப் பேதமின்றி சுள்ளல் வாழை போலிருக்கும். குடிசை வாசி. தென்னகத்து ஜெயலலிதாவின் ஐஸ்வரியங்களைக் கனவு காணக் கூடக்; தெரியாது. என்ன போகிற போகிற இடங்களில் ஏதாவது அவளுக்கு சுவாரஸிமானதாய் பட்டுவிட்டால் போதும் மணிக்கணக்கில் அதையே விடுப்புப் பார்த்துக்கொண்டு நிற்பாள். அவளுக்கு சுவாரஸியம் தரும் விஷயம் இன்னதுதான் என்றில்லை. அது நடுங்கல் சின்னவிக்கிழவனின் தலையோடு சேர்ந்து குலுங்குகிற குருவிக்குடுமியாயிருக்கலாம், தௌ;ளு உதறத் துள்ளும் ஒரு நாயாயிருக்கலாம், அல்லது கைலாசநாதர் வீசி எறிந்த சிகரெட்டுப் பக்கெற்றாகக்கூட இருக்கலாம். பார்க்கத் தொடங்கினாளானால்; ஒரு தபஸாக அதனுடனேயே ஒன்றிப்போய்;விடுவாள்.
பிறகு அவளை இந்த லோகத்துக்குத் திருப்ப எவராவது அவள் காதுக்குள் கூக்காட்டினால் சரி அல்;;;லது அவளாக எப்;;;போது மீளுவாள் என்று சொல்ல முடியாது.

அவள் தாய் லெச்சுமியோ அவளது இந்தப் பேய்ப்பார்வை பேச்சியம்மனின் குறைபாடென்று எத்தiயோ தடவைகள் அம்மனுக்கு கண்மடல் செய்வித்து அர்ப்பணித்தும் பூசாரியைக்கொண்டு கயிறு மந்திரிச்சுக்கட்டியும் விட்டாள். அம்மனும் குணமாக்கிவிட்ட பாடாயில்லை.

புத்தர் கலட்டி பௌத்த பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவள் 1968 ஏப்றில் கலவரங்களுக்காக தொடர்ந்தாற்போல் பத்துநாட்கள் மூடியிருந்த பாடசாலை மீண்டும் திறந்தபோது -சேதுவேராக்காரங்கள் பள்ளிக்கூடத்துக்குள்ளே பூந்து புள்ளங்களை அள்ளிக்கொண்டு போறாங்களாம்- என்று கள்ளம் பண்ணிக்கொண்டு சேதுவார (சேகுவேரா) தினங்கள் முடிய பள்ளிக்குப்போக மறுத்தேவிட்டாள்.
உள்ளதுக்குள்ள ஆளுமோ அச்சுப்பிச்சு, அதுவும் படிப்புமில்லையென்றால் இவள் எப்படித்தான் தன் காலத்தைத் தள்ளுவாளோ என்ற கவலையில் தகப்பன் பொன்னனும் எவ்வளவோ சொல்லி அவளைப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப் பார்த்தான். அவனால் முடியவில்லை.
“அம்மாவுக்கும் படிப்பு பத்தாதுதானே............... கையெழுத்து வைக்கத்தெரியா............. அவவைப் போகச்சொல்லு முதல்ல.”
மடுத்தது மடுத்ததுதான்.

சிங்கப்பூர் பென்சனியர் கைலாசநாதர் புத்தர் கலட்டியில் மேற்குத்தெரு வெள்ளாளரின் பள்ளக்காணி ஒன்றுள் கொட்டில் போட்டு குடியிருந்த பொன்னன்-லெச்சுமி குடும்பத்தை மாதம் இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம் பேசி அந்திரானை ஏற்றத்தில் தன்னுடைய தென்னந்தோப்புக்கு காவலாய் குடியிருக்கச்சொல்லி கொட்டிலும் போட்டுக்கொடுத்துக் குடிவைத்ததிருக்கிறார். லெச்சுமி ஆரம்பத்திலேயே பென்சனியரிட்டை நிபந்தனையாய் சொல்லிப்போட்டாள்.

“சம்பளத்தை என்ர கையிலதான் தரவேணும். அந்தக்குடிகார ஏக்கி கையில கொடுத்திட்டு என்னை அலைய விட்டிடாதையும்.”

கைலாயரும் நல்ல மனுஷன். அவர்களுக்கு வெளியில போய் வேறு வேலைகள் செய்யப்படாது அப்பிடியிப்பிடியென்று எந்த நிபந்தனையுமே விதிக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் காணி பார்க்க வரும்போதே காசை எண்ணி அவள் கையில் கொடுத்துவிடுவார்.
பொன்னனும் லெச்சுமியும் தோப்புக்கு குடிவந்தது முந்தாநாள் மாதிரியிருக்கு. இன்றைக்கு பதினேழு வருடங்களாகிவிட்டன.

அவர்கள் அங்கே குடிவந்த வருஷம் பிறந்தவள்தான் ஜெயலலிதா. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம். ஜி. ஆருடன் வந்து தெறித்த ஜெயலலிதாவைக் கண்ணோடு பொன்னன் கொண்டுதிரிந்த வேளைபார்த்து இவளும் வந்து பிறக்க உடனே ஜெயலலிதா என்று பெயர் வைத்துவிட்டான்.

பென்சனியர் கொடுக்கிறது கவுண்மேந்துச்சம்பளம் மாதிரி மாதாமாதம் அவர்களுக்கு வள்ளீசா சாப்பிட்டுப் பிழைக்க போதும்.
லெச்சுமியும் வெங்காய வைப்பு, தாளரிவை , மிளகாய் பிடுங்க என்று அச்சுவேலி இடைக்காடு வளலாய் ஈறாகப்போய் ஏதாவது சம்பாதிப்பாள். சம்பாதிச்சு பொன்னனுடைய கண்ணில காட்டாமல் சேர்த்துச்சேர்த்து வைச்சிருந்திட்டு எங்கையாவது வட்டிக்கு கொடுத்து பெருக்குகிறேனென்று கொடுத்து ஏமாந்துவிடுவாள். பொன்னனுடைய பாஷையில தாயும் மகளும் படு பேச்சியள். விபரம் பத்தாததுகள்.

பொன்னன் பேர்போன குழிவாள் அரிவுகாரன். நல்ல உழைப்பாளி. அதுவும் தான் மேல்வாள் அரிவுகாரனென்று அவனுக்கு சரியான லெவெல். நீர்வேலி திருநெல்வேலி அரிவு பட்டறைகளிலே சாதாரண முட்டாள் தர தொழிலாளிகளுக்கு 20 அல்லது 30 ரூபாய் சம்பளமென்றால் பொன்னன் அவர்களுடன் சதுரஅடிக்கணக்கில் வேலையைப் பொருத்தத்தில் பேசி எடுத்து தினம் 50 ரூபாய் உழைத்துக்கொண்டு வருவான். எவ்வளவுக்கெவ்வளவு உழைப்பாளியோ அவ்வளவுக்கவ்வளவு சோக்காளி.

முப்பது ரூபாய்க்கு எப்படியும் குடித்துவிடுவான். லெச்சுமி கையிலேயும் காசு புழக்கமிருக்கென்று தெரிந்தால் அவளிடம் ஒரு சதமும் தரமாட்டான். வேலை முடிந்த பின்னால்; ஊரிலுள்ள கள்ளுக்கொட்டில்; எல்லாம் எண்ணித் தடவிக்கொண்டு அவனால் சைக்கிள்; எனச்சொல்லப்படும் துருவேறிய அந்த இரும்புக்குழலில் ஏறி
“ அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடன் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா- உன்
தாயகம் காப்பது கடமையடா................ ” என்று பாடிக்கொண்டு வீடுவந்து சேர இரவு ஒன்பது பத்து மணியாகும.;
பொன்னனின் லைட் இல்லாத அந்த வாகனத்தை அதை அவன் ஓட்டி வருகையில் அதன் சக்கரங்கள் தோசை சுடுவதுபோல ஒரு மாதிரி ஓவலாய் சுற்றிச் சுற்றிவர பெல்லைத் தவிர்த்து அதன் ஏனைய பகுதிகள் அனைத்தும் ஒவ்வவொரு வகையான சத்தம் எழுப்பும். அதை பொன்னனைத் தவிர நல்ல சைக்கிள் சேர்க்கஸ் வித்தை தெரிந்தவர்களன்றி மற்றவர்கள் ஓட்டிவிட முடியாது.

கோழி கேருவது மாதிரி கேரிக்கொண்டு அவன் சைக்கிள் தூரத்தில் வரும்போதே தாயும் மகளும் கண்டுபிடித்துவிடுவார்கள்.

ஏதாவதொரு நினைப்பு வந்து வடையோ, வாய்ப்பன்னோ அல்லது வேறேதாவது தின்பண்டமோ வாங்கிவந்தால் வாசலிலேயே “லலிதாக்குட்டி............ லெச்சுமிச்செல்வம்” என்று அன்பு பெருகச் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டு வருவான்.
லெச்சுமியும் நல்ல மூடிலிருந்தால் “ஓய்;...........ஓய்..........ஓய்” என்று கொண்டு வாசலுக்கே போய் அவனை வரவேற்பாள்.

பொன்னனுடைய ஒரு நல்ல பழக்கம் எத்தனை மணிக்குத்தான் இரவு வந்து படுத்தாலும் அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைக்குப்போவான். அதனால் அவனது வேலை வட்டகையிலும் நம்பகமான ஒரு தொழிலாளியென்று அவனுக்கு நல்ல பெயர்.

பொன்னன் மனம் மிக மகிழும் மற்றொரு விஷயம் சினிமா.
நாடோடி மன்னன், மனோகரா, ஹரிதாஸை 50 தடவையும், மன்னாதிமன்னன் , பக்கீஷா, அஞ்சானாவை, கீத்தை 40 தடவையும், , பாசமலர், மர்மயோகி , சித்திரலேகா, அனார்க்கலி, சர்வாதிகாரி, உத்தமபுத்திரன், வணங்காமுடியை 30 தடவையும் பார்த்ததாகச் சொல்லுவான்.

பொன்னனுக்கு நல்ல குரல் வளம். கொஞ்சம் கள்ளு உள்ளேபோய் பிசிறுகள் எடுபட்டு தொண்டை திறந்த பின்னால் எடுத்த எடுப்பிலேயே மேல் ஸ்தாயியிலேறி-

எங்கள் திராவிடப்பொன்னாடே
கலை வாழும் தென்னாடே
இயலிசை நாடகம் அறம் பொருளின்பம்
இலங்கும் செந்தமிழ் நாடே................ என்று பாடினானேயானால் சும்மா டி. ஆர். மஹாலிங்கமே உயிர் பெற்று வந்துவிட்டது போலிருக்கும்.
“இவ்வளவு படம் பார்த்திருக்கிறியே................ ஒரு படத்துக்கும் லெச்சுமியைக் கூட்டிக்கொண்டு போறேல்லையே?”
“கட்டின புதிசில அவளையும் மூன்று நாலு படத்துக்கு கூட்டிக்கொண்டுதான் போன்னானணை................. அது பேய்க்கு கதை ஒண்டும் விளங்காதும். இடையில நாரியுக்கை உளையுது வீட்டைபோவம் எண்டுவள்............ கரைச்சல். இப்பிடித்தான் எங்க வீட்டுப்பிள்ளை பட இடைவேளைக்குப் பிறகும் கேக்கிறாள் இது வேறை படமோவெண்டு.............. எனக்குச் சங்கையீனமாய்போச்சும்.”

தனியப்போய் ஒரு சின்ன(அரை)ப்போத்தல் எடுத்து மடியிலை சொருகி வைத்துக்கொண்டிருந்து இடைசுகம் தொண்டையை நனைச்சுக்கொண்டு ஃபோர் ஏசெஸ் புகையை நெஞ்சுக்கு ஏத்திக்கொண்டு (அப்போதெல்லாம் தியேட்ருக்குள் சிகரெட்டுப் பிடிக்கலாம்) படம் பார்க்கிற சுதிக்கு லெச்சுமி மாதிரி ஆட்களின் கூட்டெல்லாம் இடஞ்சல்.
எம். ஜி. ஆரின் ஃபைட்டுகளுக்கு, லவ் சீன்களுக்கு எவ்வளவுதான் விசிலடிச்சிருந்தாலும், சிவாஜியின் எத்தனையோ படங்களுக்கு வெறியில்லாமல் அழுதுமிருக்கிறான். எம்.ஜி.ஆரோ சிவாஜியோ என்று விவாதம் வந்திட்டால் மாத்திரம் பொன்னன் எப்போதுமே எம். ஜி. ஆரின் சைட்தான்................... சிவாஜி ரசிகர்களை ஓரம் கட்டவே பார்ப்பான்.
அதுக்கொரு தக்க காரணமில்லாமலுமில்லை.
-ரசிகர் மன்றப்பத்திரிகைகள் எல்லாம் படிக்கிற, விஷயம் விளங்கின- யாரோ சொன்னவையாம்
சிவாஜியை ரசிகர்கள் அபிமானிகள் என்று சாமானியர் யாரும் போய் இலேசில் நெருங்கவோ பேசவோவெல்லாம் முடியாதாம். ஆனால் பொன்மனச்செம்மல் அப்பிடியில்லையாம். அவரைப் பார்க்கவென்று எந்தவொரு மனிதன்தான்; அவர் வீட்டுக்குப்போனாலும் ஒரு நிமிஷமென்றாலும் பார்த்து பேசி விசாரிச்சு சாப்பிடவைத்துத்தான் அனுப்புவாராம். சிலபேர் அவர் சும்மா பேருக்காகக் கொடுத்தார், புகழுக்காகக் கொடுத்தார், வாரிசு இல்லாததால கொடுத்தார் என்றெல்லாம் விமர்சிப்பாங்கள்தான்............ காரணங்கள் ஒரு பக்கம் இருக்கட்டுமே.................. மனுஷன் கொடுத்தான் அதுவல்லோ முக்கியம்;. அதனாலே அந்த வள்ளல் மேலே அவனுக்கு அபரிமிதமான அபிமானம், பக்தி .

அவர் குண்டடிபட்டு இருந்தபோது இவன் இரண்டு நாள் சாப்பிடவேயில்லை. பிறகு இந்தியாவுக்கு போன யாரிடமோ அவருக்கு இரண்டு போத்தல் ஹோர்லிக்ஸ்; வாங்கிக்கொடுத்து விட்டிருக்கிறானென்றால் பாருங்கள்.

பொன்னன் சனிக்குச்சனி எந்த ஊரிலிருந்தென்றாலும் கிடாய் பங்கெடுத்து முழுகத் தப்பமாட்டான். முழுக்கு நாட்களில் அவன் பாவிக்கிறதெல்லாம் வைள்ளைப்போத்தல் தான். அவன் அப்பிடி முழுகி கீறி சாப்பிட்டு நல்ல மூட்டோடு இருக்கிற மாலை நேரங்களில் பாடச்சொல்லியோ, பழைய படக்கதையோ கேட்டுப்பார்க்கவேணும். பிறகு படத்திற்கே போகத்தேவையில்லை.
படம் பிடிச்ச டைரக்டரே அத்தனை சீன்களையும் ஞாபகம் வைத்திருந்து அப்படி முழுக்காட்சிகளையும் ஒழுங்காய் விபரித்துவிடுவாரோ தெரியாது. பொன்னன் மிக நுணுக்கமாக விபரித்து சரியான கட்டத்தில சரியான பாடலைப்பாடி அசத்துவான்;. நித்திரையில்தான் எழுப்பிக்கேட்டாலும் மனோகரா, பராசக்தி, மஹாதேவி வசனங்கள் அனைத்தையும் பிசகாமல் பேசிக்காட்ட அவனால் முடியும்.

இவர்கள் வதியும் தோப்பை அடுத்திருப்பதுதான் முருகேசர் வளவு. இவர்கள் நயநட்டங்கள் நல்லது கெட்டதுகள் எல்லாத்துக்கும் ஒருவகையில் அந்தக்குடும்பம் ஒரு போக்கிடம் மாதிரி. முருகேசர் மனைவி நல்லபிள்ளையிடந்தான் லெச்சுமி பொன்னனைப் பற்றிய புகார்களையைல்லாம் கொடுத்து வைப்பாள். புகார்கள் அங்கே கோப்புக்கள் நிரம்பும்போது நல்லபிள்ளை பொன்னனைக் கூப்பிட்டு புத்திமதிகள் சொல்லுவார்.
லெச்சுமியும் விவரம் மட்டான ஆள்தான். கிழக்கே மட்டுவில் கண்ணகை அம்மன் கோவில், மேற்கே புன்னாலைக்கட்டுவன், வடக்கே மறவன்புலவு(பிறந்தகம்), தெற்கே வல்லிபுரக்கோவிலுக்கு அப்பால் இப்புவிப்பந்தில் வேறொரு சிற்றூரைத்தானும் அவள் பாதங்கள் பரவியதில்லை. வற்றாப்பளை அம்மனை ஜீவிதத்தில் ஒரு தடவையாவது தரிசித்துவிட வேணுமென்ற தீராத கனவு ஒன்று அவளுடன் எப்போதுமே உண்டு.

நல்லபிள்ளை வீட்டுக்கு ஒரு நாள் ஏதோ அலுவலாக வந்த லெச்சுமி இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு அவரிடம் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டாள்:
“மெய்யாலுமணை............... இனிமேல் சின்னத்தம்பிதான் (அரியாலையிலிருந்து வந்து இவர்களது குடியிருப்புத் தோப்புக்குள் கள்ளுக்கட்டிறவர்) சி.ஐ.டியாம் எங்கவூருக்கு................?”

“ஆர்.............. சொன்னது?”

“இல்லை ஊருக்கை பரவலாய் பறையினம்............. எதுக்கும் என்னத்துக்கும் வீண் வில்லங்கத்தை.......... நீரெதுக்கும் ஆளோடை கண்டபடி கதை வச்சுக் கொள்ளாதையும்............”

குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு தடவைகளாவது தண்ணி அள்ள, சமையாத நாட்களில் கொஞ்சம் கறி சோறுவாங்க , துண்டுபொறுக்க (தைத்து மீந்தவை) என்று இப்படி ஏதாவது அலுவல் ஜெயலலிதாவுக்கும் அங்கு இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு அப்போது ஒரு பத்து வயதிருக்கும். ஒரு நாள் அவள் முருகேசர் வீட்டு முற்றத்தில் முழிசிக்கொண்டும் மயிந்திக்கொண்டும் நிற்கிறாள். அவர் நடுவில் மகன் ஆனந்தராகவன் கண்டு அவளை என்ன விசயமென்று விசாரித்திருக்கிறான்.
“ரெண்டு ஈச்சங்கொட்டையை விழுங்கிப்போட்;டன்.................. அதுதான் என்னாலும் செய்யுமோவெண்டு...................”
“எத்தினை?”
“ர்ர்ர்ர்ரெண்டு”
“அட நாசமே இனி வயித்துக்க முள்ளீஞ்சு முளைச்சு வாயாலேயெல்லே குலை தள்ளப்போகுது.................. அதுவும் ரெண்டு விழுங்கியிருக்கிறாய் ஒண்டு முளையாட்டிலும் மற்றது கட்டாயம் முளைக்குமென்ன......... எப்பிடியும் கட்டாயம் ஒப்பிறேஷன் செய்துதான் கொட்டையளை எடுக்கவேணும்........”
“என்ர ஐயோ...............!”
குழறிக்கொண்டு வீட்டுக்கு ஓடிப்போய்; அங்கும் தாயோடு சொல்லி குத்தி முறிஞ்சிருக்கிறாள்.
இரவு பார்த்தால் அழுது ஓய்ந்து விக்கிக்கொண்டிருந்த ஜெயலலிதாவை போர்த்தி மூடிக்கொண்டு கை லாம்பு வெளிச்சத்தில் கூட்டி வந்தாள் லெச்சுமி.

“மெய்யத்தான் இவளுக்கு ஒப்பிரேசன் பண்ண வேணுமோவும்?”

“போங்கடி வேலையத்த இவளுகளே...............”

நல்லபிள்ளை இருவரையும் ஏசி அனுப்பினார்.

(2)

இன்று பொன்னனும் வேலைக்குப்போய்விட்டான். தாயும் காய் (வெங்காய) நடுகைக்கு எங்கேயோ போய்விட்டாள். காலையிலே தாய் சுட்டுக்கொடுத்த தோசையைச் சாப்பிட்டுவிட்டு இருந்தவளுக்கு மொய்த்த மாதிரி ஒரு குட்டித்தூக்கம் சுழற்றிக்கொண்டு வரவே பாயை விரித்துப்படுத்தாள். பன்னிரண்டு மணிக்கு மேல் தற்செயலாக விழிப்பு வரவும் தாய் தன்னைக் கருவாட்டுக் குழம்பும் வைத்து சோறும் வடிக்கச்சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. அரக்கப்பரக்க எழுந்து அலுமினியக் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணிக்காக முருகேசர் வீட்டுக்கு ஓடினாள்.

அங்கே ஆனந்தராகவன் பல்கலைக்கழக புகுமுகத்தேர்வுக்கு இரண்டாந்தடவை தோற்றுவதற்குத் தயார் பண்ணிக் கொண்டிருக்கிறான். சோதனைக்கு இன்னும் எண்ணிப் பதினொருநாட்களே இருக்கின்றன. ஒவ்வொரு பாடத்திலும் மீட்பதற்கு மலையளவு விஷயங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா வழக்கம்போல ஆனந்தராகவன் படித்துக்கொண்டிருந்த அறை ஜன்னல் எதிரில் வந்து நின்றுகொண்டு வெள்ளோந்தி போலத் தலையைச் சாய்த்துக்கொண்டும் கண்வெட்டாதும் அவனைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் அவனுக்கு எரிச்சல் பீறிட்;டுக்கொண்டு வந்தது.
அவளின் துவணை தவாளிப்புகள் ஏதுமற்ற நோஞ்சான் உடம்புக்குச் சம்பந்தமில்லாதவாறு கொந்தாலி மாதிரி முகைச்ச அவள் மார்புகள் சரியாக கவசமிடப்படாததால்;; செவ்வனே தெறியோ ஊசியோகுத்தப்படாத சட்டையூடாக துருத்திக்கொண்டு -வண் கேர்ள் ஷோ- காட்டுகின்றன. பார்வையை மட்டும் இப்படி எங்காவது ஃபோகஸ் பண்ணிவிட்டாளேயென்றால் இதுமாத்திரமல்ல அரையான்தான்; அவிழ்ந்து விழுந்தாலும் அவளுக்கு ஸ்மரணை இராது.

ஆனந்தராகவன் முன்பொரு தடவை அவளுடையை டிறேட் மார்க் பார்வையைப் பரிசோதிக்ப்போய் 1000கிலோ வோல்ட்ஸ் மின்சாரத்தால் தாக்குப்பட்டுமிருக்கிறான்.

ஒரு நாள் மாலை, வீதியால்; எங்கேயோ தன்னுடைய ஊர் வாசிகசாலையில் மாலைவேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்துவைக்கும் அரிவரங்கத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறான். எதிரில் வந்த ஜெயலலிதா இவனைப் ஃபோகஸ் பண்ணுகிறாள். அவளைத் தான் கடந்துபோன பின்னாலும் தன் பின்பக்கத்தையும் அப்படி ஃபோகஸ் பண்ணிக்கொண்டுதான் நிற்பாளோ என்றொரு ஐமிச்சம்; இவனுக்கு. சட்டெனத் திரும்பிப்பார்த்தான். அவள் நின்று அவனையே பார்த்துக்கொண்டுதான் நிற்கிறாள்.
ஏதாவது விஷமம் பண்ணவேணும் போலிருக்கவே மெல்ல ஒற்றைக் கண்ணை சுருக்கினான். சட்டெனப் பதிலுக்கு ஜெயலலிதா மின்னி அடித்தாளே கண். மார்லின் மன்றோ கெட்டாள் போங்கள்.
போலந்து வொட்கா ஒரு லிட்டர் -றோ-வாக இறக்கின மாதிரி தலைக்குள் கிறுகிறுத்தது அவனுக்கு.
அம்மா நல்லபிள்ளை மதியம் சமையலுக்கு மீன் வாங்கிவர காரைக்கூடல் வைரவர்கோவில் புளியடிப்பக்கம் போயிருக்கிறார். தம்பியும் தங்கையும் பள்ளிக்கூடம் சென்றுவிட்டிருந்தனர். அக்கா நீலாவதி மாதவிலக்கு இரண்டு மாசத்துக்குமேல் தள்ளிப்போனதால் ஐந்தாவது தடவையும் பிள்ளையோ என்ன கோதாரியோ என்ற பயத்தில் செக் பண்ணுவிக்க கிளினிக்குக்கு போய்விட்டாள்.
அவர்கள் திரும்புவதற்குள் முன் ஒரு கோல்ட் லீஃப் புகைக்கவேணும்.
இந்த நேரம் பார்த்து இவள் மோகினிப்பார்வையோடு வந்து நிற்கிறாள்.
“என்ன...?” வெறுப்பாகக் கேட்டான்.
கண்களை ஒரு நடன பாவத்துடன் தாழ இறக்கி குடத்தைக் காட்டினாள்.

அவன்தானே கிணற்றடிக்கு எழும்பிப்போய் அவள் குடத்திற்கு தண்ணீர் அள்ளி வார்த்துவிடவேண்டும். எரிச்சல் வராதா பின்னே?
“ நீ ஏன்டி புத்தர் கலட்டிக்குள்ள வந்து பிறந்து தொலைச்சாய்? ”
(ஜெயலலிதா மனதுள்: - ம்............... இல்லாட்டி வந்து தாலிகட்டிப்போடுவர்-)
“என்ன அங்க முணுமுணுப்பு?”
“ எணே சாத்திரியும் மெய்யாலும் சொன்னவர் என்ர குறிப்புப் பலனுக்கு எனக்குச் சீமையில பிறக்கிற யோகமாம்................ துர்க்கிரகமொண்டு எங்கையோ குறுக்கால பாத்து கணக்;கைக் கெடுத்துப்போட்டுதாம்...........”
போலியாக நீளப்பெருமூச்செறிந்தாள்.
“ ஆரை............. ?”
“ ...........என்னை.......... ”

ஊருக்கென்னவோ ஜெயலலிதா பேச்சிதான். அவளுடன் பழகுகிறவர்களுக்குத்தான் சரியான ரைமிங்கில் தடாலடிப்பதில்கள் தர அவளுக்குள் ஒரு ராணி அப்புக்காத்து இருப்பது தெரிய வரும்.

“வீட்டில ஒருதருமில்லை நீ சத்தம்போடாமல் தண்ணியை அள்ளிக்கொண்டு போ..”
“ஆத்தே.............. கமக்காறிச்சி கண்டால் கிளிச்சுக்காயப் போட்டிடும். ”
( அவள் -கமக்காறிச்சி- , -எசமாட்டி- என்று கிண்டல் மிகையாகுபெயர் கொண்டு அழைப்பதெல்லாம் அவனது தாயைத்தான். )
“அவ ஒண்டுங்காணமாட்டா............. நான் சொல்றன்....... நீபோய் அள்ளெண்டிறன்.......... எனக்கு கனக்கப்படிக்க வேணும்.”
“ நீ என்னத்துக்கு படிக்கிறாய்...............?”
“ஆங்............. என்னத்துக்கெண்டு இப்ப சொல்லேலுமே பன்னிரண்டாம் வகுப்பெண்டு வையன்.”
“ பெறவு........ பெரீய உத்தியோகம் கிடைக்குமாக்கும்.................”
“ நீ இதில நிண்டு ஞாயம் பண்ற நேரத்திற்குத் தண்ணி அள்ளிக்கொண்டு போடுவாய்......... போடி. ”

ஏதோ எதிர்காற்றில் நடப்பவள் போலப் பிரயத்தனப்பட்டு நடந்து போனாள். கிணத்தடிக்குப் போனதும் துலாவில் தண்ணியிறைக்கும் சத்தம் கேட்டு யாராவது மற்ற வளவுக்காரர்கள் பார்க்க நேரலாமென்று அவளுக்கு பயம் வந்தது. நல்ல நீளக்கயிறொன்று வளையமாடி கிழுவங்கதியாலில் கொழுவியிருந்தது. அதை எடுத்து தனது குடத்தில் கட்டி மெல்லக் கிணற்றினுள் இறக்கினாள். உருவுதடம் கழுத்தில் சரியாக இறுகவில்லை. குடம் தண்ணி மொண்டுகொண்டதும் கிணற்றுள்ளேயே நின்று கொண்டது.

“போச்சு போச்சு.................. ஓடியா............ ஓடியா.” என்று கைகளைக் காற்றில் வீசியபடி கத்திக்கொண்டு கொண்டு திரும்பி ஓடிவந்தாள்.
“என்னடி போச்சு................?”
“குடம் கிணத்துக்க விழுந்து போச்சு.”
“ ம்....... கெட்டிக்காரி.......... அதையேன் போட்டுத்தொலைச்சனி?”
விழிகள் வெளிப்பிதுங்க முழுசினாள்.
இவளிடம் விசாரணை வைக்க இது நேரமில்லை. வீட்டுக்கோடிக்கு ஓடிப்போய் அங்கு அசப்பிலிருந்த கொக்கைத்தடியை எடுத்துவந்து கிணற்றுக்குள் இறக்கினான் ஆனந்தராகவன். குடமிருந்த பக்கம்நிழல் விழுந்து இருட்டாகவிருந்தது. குடம் சரியாகத் தெரியவில்லை. அதன் வாயுள் சத்தகத்தைக் கொழுவ பகீரதப்பிரயத்தனம் வேண்டியிருந்தது. திரும்பத் திரும்ப முயன்றான். முதுகால் வியர்த்து வழிந்தது.

தானே தண்ணியை இறைத்துவிட்டிருந்தால் இந்த விபரீதமெல்லாம் ஏற்பட்டிருக்காதேயென்று தன்னையே நொந்துகொண்டு மீண்டும் கொக்கையை கீழே இறக்கினான். அது குடத்துக்கு வெளியே எங்கேயோ போனது.
“உனக்கு எடுக்கத்தெரியாது போலை கிடக்கு.....................”
அவளது விமர்சனத்துக்கு காது கொடுத்தால் இப்போ காரியமாகாது. மீண்டும் முயற்சித்தான்.
“உனக்கு எடுக்கத்தெரியாது போலதான் கிடக்கு....................”
அவன் எரிச்சலுடன் நிமிர்ந்து அவளைப்பார்க்க.........
ஜெயலலிதா அவனை மேற்கண்ணால் கிண்டல் பார்வை பார்த்துக்கொண்டு ஒரு சரச மூட்டில் நிற்கிறாள்.
இம்முறை ஒருவாறு கொக்கசை;சத்தகத்தின் அலகு குடத்தில் கொளுவிவிட்டது. மெல்ல மெல்ல மேலே தூக்கினான்.

“ அட.............க்கெட்டிக்காறன்தான்.................. ஆரும் எடுக்கிற மாதிரி எடுத்தா எடுபடுமென்ன.....................”
“ உன்னுடைய பாராட்டுக்கு மிச்சம் நன்றி. நீ கெதியாய் தண்ணியைக் கொண்டு இடத்தைக்காலி பண்ணு...... ?”
“எஎஎஎன்ன கலைக்கிறாய்............... என்னை................ நீயெல்லே முந்தி வளைச்சனி............?”

ஏதும் முற்பிறப்பு ஞாபகத்திலிருந்து பேசிறாளோ.............. இந்த நவீன சகுந்தலையைக் கண்டு ஆனந்தராகவனுக்கு திகில் உண்டானது.

“என்னடி............ என்ன பேத்துறாய்............?”
“ இல்லை......... முந்தி நீ என்னை வளைச்சதை அயத்துப்போனியோ என்டிறன.;...........”

“பேந்து.........?”

“ம்ம்ம்ம்..............பேந்து........ நான் வளைய................ தான்.............தொப்பெண்டு விட்டிட்டு. ”

“ நில்லிஞ்சை வேசைக்குமரி............... எப்பவடி நானுன்னை வளைச்சனான்.................... இண்டைக்கு உனக்கு இதால சாத்தாமவிடன்...........” என்றுகொண்டு அவள் குடத்துக்குப் போட்ட கயிற்றை நாலாய் மடித்துக்கொண்டவன் துரத்தத்தொடங்கவும்; தண்ணிக் குடத்துடன் ஓடி மறைந்தாள்.

இது வெறும் முசுப்பாத்தியல்ல. வரவர ஜெயலலிதா நல்லாய் கெட்டுத்தான் போனாள். பேச்சுத் தொனி மாத்திரமல்ல அவளின் போக்கு வாக்குகளிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆனந்தராகவனுக்கு இவள் ஏதாவது வில்லங்கத்துள் தானாகவே போய் மாட்டிவிடுவாளோ என்று பயமாகவிருந்தது. இதைப்பற்றி யாருடன்தான் பேசமுடியும்?
ஒரு வயதுக்கு வந்திட்டமே என்ற பாங்கினை இல்லாமல் தன் பாட்டுக்கு குதிச்சுக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரிந்த ஜெயலலிதாவை நீலாவதி ஒரு நாள் கூப்பிட்டு -நீ இனிமேல் இதைப் போட்டுக்கொண்டுதான்; ஆட்களுக்கு முன்னால் வரவேணும்- என்று சொல்லி தன்னுடைய இரண்டு உட்சட்டைகளைக் கொடுத்தனுப்பினாள்.

அடுத்து தீபாவளி வந்த கையோடு பொன்னன் கையிலும் நல்ல காசுப்புழக்கம். ஜெயலலிதாவுக்காக நிறைய துணிமணிகள் வாங்கினான். நீலாவதியும் அவைகளில் நல்ல நவீன பாணிகளில் சட்டைகள் தைத்துக்கொடுத்தாள்.

புதுச்சட்டைகள் கிடைத்த பின்னால் ஜெயலலிதாவும் நல்லாய் ஸ்டைல் பண்ண வெளிக்கிட்டிட்டாள். எப்போ பார்த்தாலும் கியூட்டிகுரா பவுடர் வாசம் தூக்கியடிக்குது அவளிலை. மங்கி குறொப்பெல்லாம் வெட்டியிருக்கிறாள். பின்னலைப்பின்னி இப்போவெல்லாம் முன்னுக்குத்தான் விடுகிறாள். பாவாடைக்கு மாட்சாக அடிக்கடி அரைத்தாவணிகளை மாற்றிக்கொள்கிறாள். கூப்பன் கடைக்கு போவதென்றாலும் மறவாமல் கியூடெக்ஸ் எல்லாம் அடிக்கிறாள். மறவன்புலவிலிருந்து மாத்திரமல்ல வதுரி விழான் பக்கமிருந்தெல்லாம் விடலைப்பெடியள் இப்போ அடிக்கடி பொன்னன் வீட்டுக்கு மாமா மாமியென்று முறைகள் சொல்லிக்கொண்டு வருகினம். இரவிலை பத்துப்பதினொரு மணிக்குப் பிறகும் ஒரே அமர்க்களமாய் அந்தப்பக்கம் கதைச்சுச் கேட்குது.

ஆனந்தராகவனும் ஊரவர் எல்N;லாரும் வந்து கிணத்தில தண்ணி அள்ளிக்கொண்டுபோக அனுமதிக்கவேணும் என்று வீட்டில் பலதடவைகள் போராடித் தோற்றுப் போயிருக்கிறான்.
“ஊரோடினால் ஒத்தோடு............... தனித்தோடினால் பார்த்தோடென்றிருக்கு............ ஊரோடேக்கை நாங்களும் ஓடுவம். இப்ப தனித்தேடேலாது மகன்.”

“நாங்கள் முன்மாதிரியாய் செய்துகாட்டுவம்.......... ஊரும் பின்பற்றும்.”

“உடுவில் எம்.பி வீட்டில(அப்போது ஒரு தலித்து இருந்தார்) ஒரு பத்துப்பேர் போய் எங்கட வீடு ஒழுக்காய் கிடக்கு............... இண்டைக்கிஞ்சை படுக்கப்போறமென்று கேட்டுப்பாருங்கோ.............. இதென்ன பொதுமடமோ என்று உங்களைத்துரத்தாமல் படுக்க விட்டிட்டார் எண்டால் நானும் விடுகிறன்............. உன்ர வீட்டுக்கை உள்ளட்டுப்படுக்கிறன் என்கிறதும் உன்ர கிணத்தில தண்ணி அள்ளுறன் என்றதும் ஒருவகை அராஜகம் அத்துமீறல் மகன். தருமமில்லை. வீட்டுக்கிணறு வேறை பொதுக்கிணறு வேறை. என்னுடைய கிணத்தில யாரை அள்ளவிடுகிறதெண்டது என்னுடைய சுதந்திரம். இதில யாரும் தலையிடேலாது.”

தகப்பன் தத்துவம் பேசினார்.

இந்த விடாக்கொண்டர் இருக்கும்வரை அது சாத்தியப்படப்போவதில்லை என்றுதான் அப்போது நினைத்தான். ( பிறகு இந்த குலக்கொழுந்து முருகேசரின் சாதி அபிமானம் கோத்திரம் மரபுகளெல்லாம் மண்ணில் கொட்டுண்டு பரவுப்படுகிற மாதிரி ஆனந்தராகவன் பின்னாளில் வேறொரு காரியம் பண்ணினான். அவ்வூரில் ஜாதியத்தின் உக்கிரம் தணியும்படியாக அதுபோல் வேறும்பல சம்பவங்கள் நடந்தேறின. அவை பிறிதொரு சந்தர்ப்பத்தில்; தனியாக.)

(3)

பொன்னனும் லெச்சுமியும் வருஷத்தில் அனேகமான நாட்கள் சந்தோஷமாகவே இருப்பார்கள். எப்போதாவது பொன்னன் மிகையாக குடித்துவிட்டு வரும்நாளில் லெச்சுமி சமைக்காது விட்டிருந்தால் மட்டும் வந்ததும் ஏறுப்பாடுதான். அவர்கள் சண்டை கேட்க சுவாரஸியமாயுமிருக்கும். அடிக்கடி அவர்கள் வீட்டிலிருந்து கேட்கும் வசனம்

“ தங்காளைக்காட்டி அக்காளைக்கட்டி வைச்ச நாய்க்கூதியள்தானேடி நீங்கள்? ”

“ எட............ பனங்கள்ளு மொய்ப்போட பொம்பிளை பாக்க வந்து தலையைக் கவிண்டுகொண்டிருந்திட்டு........... தங்காளைப் பாத்திட்டுப்போன சொரமணையத்த சீமனோட வந்த என்னைக்கேளன். ”

சண்டை உக்கிரம் அதிகமானால் பனங்காய் விழுந்தமாதிரி லெச்சுக்;கு மொத்திக்கேட்கும். அனேகமாக அவனுக்கு அகப்படாமல் தோப்புவேலியிலிருக்கும் நீக்கலை விரிசலாக்கிவிட்டு ஆனந்தராகவன் வீட்டுக்கு ஓடிவந்து நல்லபிள்ளையிடம் முறையிடுவாள்.
மறு நாள் நல்லபிள்ளையின் பஞ்சாயத்து நடக்கும்.
“ ஏன்ரா தின்னி............ நீ உழைக்கிறதை அப்பிடியே கோப்பிறேசனில குடுத்திட்டு வந்தா உன்ர பெண்டில் பிள்ளையள் என்ன காத்தையே குடிக்கிறது? ”


“ எணே கண்ணாணை நேத்தும் அவளிட்டை அம்பது ரூபாய் குடுத்தனானும்................. அதைமுடிஞ்சு மறவன் புலவுக்கு அனுப்பிப்போட்டு இண்டைக்கு அரிசியில்லை சமைக்கேல்ல என்று மாய்மாலம் வடிக்கிறாள் நீலி கேளும். ”

பிறகு லெச்சுமிக்கும் தனியாக அர்ச்சனை விழும்.

“ மோளையுமெல்லோ வேலைக்கு கூட்டிக்கொண்டு போறனி.............. பிறகென்ன அரிசிப்பஞ்சம் வந்ததுங்களுக்கு............ பசியோட வாறவனுக்கு ஒரு சுண்டு வடிச்சுப் போடிறதுக்கென்ன உனக்கு............? ”

“.............. ம்ம்ம்ம்ம் அவளெங்கையணை உழைக்கிறாள்............... காய் அரிய வந்தால் மோட்டைப் பார்த்துக்கொண்டிருப்பள். மோட்டைப் பார்க்கிறதுக்கும் ஆரும் சம்பளம் குடுக்கினமே? ”

ஒரு இரவு நல்லபிள்ளைக்கு மாவிடிக்க உதவிக்கு ஜெயலலிதா வந்திருந்தாள். வீட்டிலிருக்க லெச்சுமிக்கும் பொழுதுபோகவில்லை. சற்றுநேரம் கழித்து அவளும் அங்கே வர ஜெயலலிதா தாயைக்கேட்டாள்: “எணை நான் அடுக்களைத் தட்டியைச் சாத்தாம வந்திட்டன்.............. இக்கணம் கோழி உள்ளட்டுக் கொத்தப்போகுது................. நீ வரேக்க சாத்தின்னியேணை?”
“ம்ம்ம்ம்…………............ அங்கே என்ன கிடக்கு கொத்த...................?”
ஒற்றை வாக்கியத்தில் வீட்டு நிலமை பிரத்தியட்ஷம்.
லெச்சுமி விறாந்தையில் சுவரோடு சாய்ந்து கால்களை நீட்டி உட்கார்ந்தாள்.


“காட்டிலே நரி முயலைப் பிடித்து இரையாகக்கொள்வது பழியில்லையென்றால்.................
புலி மானைப் பிடித்துப் புசிப்பது பாவமில்லையென்றால்...................
நான் மஹாதேவியை அடைய விழைவது மட்டும் அதர்மமாகுமோ? ஹஃஹஃஹஃஹா................!!!!!!!! அடைந்தால் மஹாதேவி...........!!!!!! அன்றேல் மரணதேவி............!!!!!!”

பொன்னனின் உணர்ச்சிகரமான மஹாதேவி பட வசனங்கள்; அவர்கள் வீட்டுலிருந்து வந்தன.
“வசனங்கள் தூள் பறக்குது..................கொப்பன் வந்திட்டான் போலை...?” நல்லபிள்ளை கேட்டார்.
“ஏதோ கோப்பிறேசனிலை வேளைக்குக் கள்ளொழிஞ்சுதாக்கும்...............” என்றுவிட்டு கழுத்தை நொடித்தாள் ஜெயலலிதா.
“வேலையாலை வந்தவனுக்கு பசிக்காதே............... இந்தப் மாவைக் கொண்டுபோய் அவனுக்கு புட்டைக்கிட்டைக் குத்திக்குடு.” என்று அவர் அரித்த மாவில் கொஞ்சத்தை பொட்டலம் பண்ணிக் கொடுக்கவும் லெச்சுமி வாங்கிக்கொண்டு போனாள்.

தாய் போன பின்னால் நல்லபிள்ளையுடன் பெரிய மனுஷித்தோரணையில் தகப்பனைப் பற்றிப்புகார்களை அடுக்கிக்கொண்டே மாவிடித்தாள்.
“ உவர் ஒரு பிள்ளையெண்டு என்னத்தை எனக்குத் தேடிவைச்சிருக்கிறார்.................... கோடி நிறைய சாராயப் போத்திலுவள்தான் கிடக்கு............. எவன் வரப்போறான் உதுக்கு?”

நல்லபிள்ளை வேறேதோ அலுவலாய் சற்றே விலகியதும் ஆனந்தராகவன் ஜெயலலிதாவைக்கேட்டான்:

“வெளியூர் நாய்களும் இந்தப்பக்கம் இப்ப கனக்கப் புழங்குது போலை..................?”

“………ம்ம்ம் உள்@ர் நாய் கடியன் எண்டால் ஏனாமணை வெளியூரானுகள் சுத்துது?”
பொல்லைக் கொடுத்து வாங்கிக்கொண்ட அடி வேகமாய்; அவனை அறைக்குள் செலுத்திற்று.

மாவிடித்து முடிந்து சாப்பாடானதும் ஜெயலலிதா காலால் நிலத்தில் வட்டம் போட்டுக்கொண்டு நல்லபிள்ளையிடம் சொன்னாள்:
“நாளைக்கு வல்லிபுரக்கோயில் சித்திரைப் பௌர்ணமி விசேசமாமணை. சனம் கொஞ்சம் வான் பிடித்துப்போகுது நாங்களும் பொங்கப்போறம்.”
நல்லபிள்ளை நாலாக மடித்த பத்து ரூபாய் நோட்டொன்றை அவளின் கைக்குள் வைக்கவும் இருட்டுள் ஓடி மறைந்தாள்.

அடுத்த நாள் பொங்கலுக்கு புதிய பானையும் வேண்டிய ஏனைய சாமான்களையும் வாங்கிக்கொண்டு ஜெயலலிதாவும் லெச்சுமியும் சி;ற்றுந்திலேறிக் குதூகலத்துடன் கோயிலுக்குப் போனார்கள். ஜெயலலிதாவிடம் தனியாக பத்து ரூபா பொன்னனும் கொடுத்துவிட்டிருந்தான்;.

சிற்றுந்தில் ஆரவாரமாய் வல்லிபுரக்கோவிலில் போயிறங்கிய ஜெயலலிதா அடுப்புக்கல்லுகளை நகர்த்தி வந்து பொங்கல் உலையேற்றும் வரையில் தாய்க்கு ஒத்தாசை பண்ணிக்கொடுத்தாள். உலை கொதிக்க நேரமாகும் போலிருக்க ஜெயலலிதா ஆசையாய் தேன்முறுக்கு ஒன்றை வாங்கிக்கடித்துக்கொண்டு கோயிலைச் சனத்தை கடைகளைச் சுத்திப்பார்ப்பமென்று புறப்பட்டாள்.

லைட் இஞ்ஜின்காரர் குலையுடன் நாட்டியிருந்த வாழைமரங்களில் உலக்கைநாத வெளிச்சங்களைப் பொருத்திக்கொண்டிருந்ததை சற்றுநேரம் வேடிக்கை பார்த்தாள்.
அது அவ்வளவு சுவாரஸியமாய்ப் படவில்லை அவளுக்கு. அப்பாலே மெல்ல நகர்ந்தாள்.
அச்சுவேலி பஸ்நிலையத்தில் வாடகைக்கார் வைத்திருக்கும் பிரபல உள்@ர் உயர் ஜாதிக்கொசப்பும் அங்கே சந்தையில் இரவில் உறையும் குறப்பெண்களைத் தூங்கவிடாது துரத்திக்கொண்டிருப்பவனும், மேற்படி சந்தைக்கு அம்பனிலிருந்து அம்சமாய் நல்ல வனப்பான கட்டுடம்புடன் பனங்கட்டி வியாபாரத்துக்கு வரும் கனகாவை கூட்டாளிகளுடன் பந்தயம் கட்டிக்கொண்டு; கடத்தியவனுமாகிய பரதன் கோயில் வளவின் ஒரு மூலையில் நிறுத்தியிருந்த தனது காருக்குள் காற்றோட்டமாக ஒற்றைக் கதவைத்திறந்து வைத்துக்கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டு திறந்த மார்புடன் படுத்திருக்கிறான்.

தற்செயலாக அதற்குள் எட்டிப்பார்த்த ஜெயலிதாவை அவன் தில்லான் மீசையும் புலிப்பல்லுச் சங்கிலியும் கண்ணில்பட்டு அவை உலக மகா அதிசயங்களாக மயக்கித்தொலைக்கின்றன..................
“என்ன கிளி பார்க்கிறாய்.............?”
“சும்மாதான்..................”
“அப்ப இஞ்சையுள்ள வந்துபாரன்.”

போகிறாள்.
சற்று நேரத்துக்குள்ளெல்லாம் ஜெயலலிதாவோடு மற்றுமொரு நிசும்பனையும் ஏற்றிக்கொண்ட பரதனின் கார் உடையார்கட்டை நோக்கிக் அம்புருவிப் பறக்கிறது.

(4)

அன்று பொன்னன் வேலை முடிந்து திரும்புகையில் வழக்கமான கோப்பிறேசனுக்குள் போய் அமர்ந்து தாகந்தீர முதல் போத்தல் கள்ளைக் குடித்துவிட்டு அடுத்த போத்தலுக்கு ஓடர் பண்ணிவிட்டு பீடி ஒன்றைப் பற்றவைக்கையில்தான் வேலைத்தலத்தில் பெடியள் அச்சுவேலி லிபேட்டியில் அன்று குலேபகாவலி கடைசி நாளென்று கதைத்தது ஞாபகம் வந்தது.
மற்றைய போத்தலையும் வாங்கி அவசரமாகக் குடித்துவிட்டு சைக்கிளை அச்சுவேலிப்பக்கமாக விட்டான்.
புதுப்பிறின்டாக இருக்கவேணும். படம் முதன்முதல் வெளிவந்த காலத்தில் இருந்த மாதிரியே வலு கிளியராயிருந்தது. மஹா சந்தோஷம். அனுபவித்துப்பார்த்தான்.

-சய்க்................ இளமையும் அலையலையாய் தோள் நீளத்துக்கு தலைமயிரும் மந்தகாசப்புன்னகையும் எம். ஜி. ஆர் உண்மையில் ஆணழகன்தான். அந்த மகராசன்தான் உண்மையான ஏழைப்பங்காளி. என்ன கடவுள் ஒரு குழந்தையை குருத்தைக் கொடுக்காமல் விட்டிட்டுது. பரவாயில்லை. தலைவர் படத்தில இருக்கிற மாதிரி என்றைக்கும் இளமையாய் ஆரோக்கியமாய் இருக்கவேணும்.-
மனதார வேண்டிக்கொண்டான்.
படம் முடிந்து சைக்கிள் வாகனத்தில் ஏறியதும் பொன்னனுக்கு பாட்டுப்பாட்டாய் வந்தது. சத்தமாய் எடுத்து விட்டுக்கொண்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்தான்.

“மயக்கும் மாலைப்பொழுதே நீ போ.........போ..........
இனிக்கும் இன்ப இரவே நீ வா.......... வா..........
இன்னலைத் தீர்க்க வா..............

பன்னீர் தெளிக்க பனிபெய்யுமே............
பசும்புல் படுக்க பாய் போடுமே.............
பொன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே...........

மயக்கும் மாலைப்பொழுதே ..........”

“டாய்.............. யாற்றா பண்டி இருட்டில பாட்டெழுப்பிறது............... இறங்கடா சைக்கிளாலை........ கழட்டடா காத்தை...........”
“காக்..........காக்........... காத்தைக்கழட்டிறது சரி.............. பிறகு அடிச்சுவிடப் பொம் வைச்சிருக்கிறியோ............?”

கேட்டுவிட்ட பின்னாலதான் பொன்னனுக்கு கிராம சபை லைட்டுக்கம்பத்து வெளிச்சத்தில நிற்;பது இரண்டும் பொலீஸ்காரர்களென்று தெரிந்தது.
சைக்கிளால் அவசரமாய் குதித்தான்.
“ஐயா................ தெரியாமலொரு பிழை நடந்துபோச்சு........... நா.......நா........நா........ நானாரோ பெடியள்தான் பகிடி பண்றாங்களெண்டு நெனைச்சிட்டன்.........”
-எஸ்- மாதிரி வளைஞ்சுகொண்டு சைக்கிளைப்பிடித்தபடி நின்ற பொன்னனைப் பார்த்த பொலிஸ்காரருக்கும் சிரிப்பு வந்தது.
“சரி போ...........போ...........”
தொண்டைமானாற்றில் இருந்து வல்லை வெளியால் செம்மணி நோக்கி நடந்த ஊதல் காற்று பொன்னனில் குளிரைப் போர்த்தியது.
சைக்கிளை உருட்டிக்கொண்டு ஒரு பதினைந்தடி போனவனுக்கு வாய் நமநமத்து பீடி ஒன்றடிச்சால் உவப்பாய் இருக்கும்; போலிருந்தது. பொக்கெற்றைத் தடவிப்பார்த்தான். பீடிக்கட்டைக் காணவில்லை. சைக்கிளால் குதிக்கையில்தான் கீழே விழுந்திருக்கவேணும.; திரும்பிவந்து லைட்டுக்கம்பத்து வெளிச்சத்தில் அவ்விடத்தைத் துழாவித்தேடினான்.
“என்ன தேடிறாய்.............?” பொலிஸில் ஒன்று கேட்டது.
“பீடிக்கட்டு விழுந்து போச்சையா...............”
எல்லாவிடத்திலும் தேடிப்பார்த்தான். காணவில்லை. இரவில் இனி எந்தக் கடையும் திறந்திருக்காதே.................. என்பதை நினைக்க பீடித்தாகம் அதிகமாகியது. பொலிசுக்காரரும் நல்லவர் போலயிருக்கு........... ஒன்று கேட்டுப்பார்ப்பமோ..............
சைக்கிளை மெதுவாய் ஒரு பொலிஸ்காரர் அருகில் உருட்டிக்கொண்டு வந்து சாரத்தை ஒதுக்கி பவ்வியமாக நின்றுகொண்டு கேட்டான்.
“அதைக்காணேல்லையாக்கும்................. ஐயாவிட்ட பீடியிருந்தால் எனக்கும் ஒன்று தந்து.......... நீங்களும் ஒன்றைப் பத்திறது........”

ஒரு பத்து இருபதுக்காவது வகைசெய்யும் வகையில் கிழக்கிலிருந்து ஒரு வைக்கோல் லொறிகூட வராத எரிச்சலில் இருந்தவனுக்கு கோபம் வந்தது.
“போடா எண்டுவிட்டால் குசும்பா பண்றாய் றாஸ்கல்............?” பொன்னனின் இரண்டு செவிகளையும் பிடித்து இழுத்து அரப்பு கசக்குவதுபோல் கசக்கி முறுக்கி விட்டான்.

கன்னங்கள் இரண்டு பக்கமும் அரத்தாளால்; தேய்த்ததுபோல் எரியஎரிய வீடு வந்துசேர்ந்தவனுக்கு வளவுக்குள் பத்துப்பன்னிரண்டு பேர் மௌனமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டு ஒன்றுமாய் புரியவில்லை.
லெச்சுமி பொன்னனைக் கண்டதும் அழுதாள். பொன்னன் மேலும் கலவரமாக அங்கு நின்றவர்களில் ஒருவன் சொன்னான்.
“ஜெயலலிதா.................. "
" எ... எ... எ... என்ன.................. ஜெயலலிதா? "
" கோயிலடியில யாரோடையோ மாறிவிட்டாள்.”
“ஆ......ஆரோடை மாறினவள்..............?”
“அது தெரிஞ்சா விட்டிட்டு வந்திருப்பமே.....?”
“ லசுப்பீக்கரிலை சொல்லித் தேடினியளோ..........?”
“லசுப்பீக்கரிலை சொல்லியும் வராததிலைதான் எங்களுக்கு ஓடிவிட்டாளென்ற சமசியம் வலுத்தது.”
“அவளைத் தன்ர பாட்டுக்கு போகவிட்டிட்டு நீ எந்தப் பிரியனோடையடி பறைஞ்சு கொண்டிருந்தனி தோறை?”
இன்னும் என்னென்னவோ கெட்டவார்த்தைகள் எல்லாம் சொல்லி லெச்சுமியைத் திட்டினான். அவளுக்கு அடிக்க வேறு போனான். அவர்கள் தடுத்துவிட்டார்கள்.

யாருடன் ஓடியிருப்பாள் என்று எவருக்குந்தெரியவில்லை. பொன்னன் மறுநாள் வதுரிக்கும், மறவன்புலவுக்கும் போய் சந்தேகத்துக்குரிய பெடியங்கள் எல்லாரும் நிற்கிறாங்களோ என்று பார்த்துவிட்டு வந்தான்;. அவர்களைச் சோகம் விசாரிக்க வந்த உறவினர் பலரும் உணாவில் யோகர்சுவாமியாரிடம் போய் அருள்வாக்கு கேட்கும்படி சொன்னார்கள். போனான்.

சுவாமியாரைப் பல பிரச்சனைகளையிட்டும் தரிசிக்க வந்தமக்கள் கூட்டம் கோயிலுக்கு வெளியில் அலைமோத தண்ணியிறைப்பு மிஷின் திருட்டொன்றைப் பிடிக்க போயிருந்த சுவாமியார் நல்ல வெறியில் காரிலிருந்து இறங்கினார். இறங்கியதும் “ஆச்சி...... ஆச்சி.........” என்றுகொண்டு கோவிலுக்குள் புகுந்தவர் சுவரில் தொங்கிய பெரிய தேங்காய்ச்சிரட்டையாலான குடுவையுள்கையில் கைவிட்டு கொஞ்சம் விபூதி எடுத்துக்கொண்டு பொன்னன் நின்ற திக்கில் கையை நீட்டி “ஒரு குஞ்சைக் காணேல்லையென்று தேடிவந்தவன் சமூகத்துக்கு வா.” என்றார்.
சாமியாரின் பூடகப்பேச்சு புரியாமல் பொன்னன் திகைக்க அவனோடு கூடப்போன ஒருவன் “சாமி கூப்பிடுது முன்னே போ” என்றான்.
பொன்னன் சண்டிமடிப்பை அவிழ்த்துத் தளரவிட்டுவிட்டு துண்டை இடுப்பிலை கட்டிக்கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு தயங்கித் தயங்கிப் போய் அவருக்கு முன்னே நின்றான்.
சாமியார் கண்களை மூடிக்கொண்டு அருள்வாக்கு அருளினார்:
“உன்ரை குஞ்சு மணவினைகாண வீட்டை விட்டு வெளிக்கிட்டிருக்கு. முடிஞ்சிருக்கிற மணம் நிலைக்காது, குஞ்சு வீடுதேடிவரும். ஆச்சியே அனுப்பி வைப்பா....................... எப்பவென்று கேளாதை, ஒருவெள்ளைக்கான (வெள்ளைப்போத்தல் சாராயம்) தட்ஷிணையை வைச்சிட்டு ஆச்சியை நம்பிப்போய்க்கொண்டே இரு.”

இரண்டு நாளாய் லெச்சுமி ஒன்றும் அடுப்பிலேயே ஏற்றவில்லை. பொன்னன் கூட எதுவும் சாப்பிடாமலே இருந்தான். கிட்டவிருந்த உறவுகள் கடையில் தோசை பலகாரங்கள் என்று வாங்கிக்கொண்டு வந்து கொடுத்திருந்தார்கள். எதுவும் சீண்டப்படாமலே கிடந்து காய்ந்தன. என்னதான் குடித்துப்புரண்டாலும் அவனுக்குள் இருந்த பிள்ளைப்பாசம் எல்லோருக்கும் ஆச்சர்யம் தருவதாயிருந்தது.

தினமும் பொழுது பட்டானபின் நல்லபிள்ளையிடம் போயிருந்து அரற்றிக்கொண்டிருப்பான்.
“எனக்கு மனசுல சோகம் முட்டிப்போச்சுதும். விளங்காத பிள்ளையெண்டாலும் நான் பெத்த பிள்ளை........... எங்கே போச்சென்டு தெரியேல்லை..............”
பொன்னனின் கண்கள் கலங்குவதைப்பார்க்க ஆனந்தராகவனுக்கும் பரிதாபமாயிருந்தது. தேற்றினான்.
“ஒண்டுக்கும் யோசியாதை பொன்னு......... அவள் நல்லபடி திரும்பி வருவாள்.”
“உணாவில் யோகியாரும் சொல்லியிருக்கிறார்................. உசுருக்கொரு வில்லங்கமுமில்லையாம். மணவினை நாடிப்போன நீ யாரோட எங்கையெண்டு சொல்லிப்போட்டுப் போயிருந்தால் இந்தப் பரிதவிப்பு எங்களுக்கு இருக்காதில்லை. நானே கவுரதையாய் பேசி முடிச்சுவைச்சிருப்பனில்லை. இப்பிடி நாலு சனம் பல்லிலை போடுற மாதிரி வந்திருக்காதே................ அவளுக்கிப்ப என்னவும் பதினேழுதானே நடக்குது இன்னும் கொஞ்சம் உலகம் பிடிபடட்டும் எண்டுதானும் நானும் விட்;டிட்டிருந்தனான்............ இப்பிடி நாறடிச்சுப்போட்டாளே................. எனக்கு இண்டைக்கு கள்ளுக்கும் மனமில்லை.”

சஞ்சலமும் ஏகாந்தமுமாய் மேலும் நாலு நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாள் மாலை கருக்கட்டி ஒரு மைம்மல் நேரம். சாவகச்சேரிப் பக்கமிருந்து வந்த ஒரு சாம்பல் நிற சம்மர்செட்கார் நிதானமாக ஜெயலலிதாவை அவள் வீட்டுவாசலில் இறக்கிவிட்டுத் திரும்பிப்போனது.

ஜெயலலிதாவைக்கண்ட சின்னிக்கிழவிதான் முதலில் “ஓ........” வென்று ஒப்பாரி வைக்கவும் சனம் அதிலே கூடிவிட்டது.
“ உனக்கேன் புத்தி இப்படிப் போதலிச்சுப்போச்சு பிள்ளை...........?”
லெச்சுமி ஓடி வந்து மகளைக் கட்டிப்பிடித்து அழுதாள்.
கூட்டத்தில் ஒருத்தி மூளியாயிருந்த அவளைப் பார்த்ததும் துணுக்குற்று கேட்டாள்
“எங்கையடி காதான்?”
“ அதைப் பரந்தனில வித்துப்போட்டுத்தானே போத்தல் , சாப்பாடு எடுத்துக்கொண்டு அங்காலை கூட்டிக்கொண்டு போனவை.”
எங்கேயோ இருந்து ஓடி வந்த பொன்னன் ஜெயலலிதாவைக் கண்டு வாயடைத்துப்போய் நின்றான்.
சின்னிக்கிழவி கேட்டாள்.
“ஆரடி உன்னைக் கூட்டிக்கொண்டு போனது............... என்ன சொல்லிக்கூட்டிக்கொண்டு போனவங்கள்............?”
சனம் தெருவில் அமளிப்படுவதைக் கண்டு வெளியில் வந்த ஆனந்தராகவனைக் காட்டி -
“ ரெண்டுபேர்................. ஒராள் உவரை மாதிரி இருக்கும,; அவர்தான் கூட்டிக்கொண்டுபோய் கலியாணங்கட்டிறன் எண்;டவர். பெரீய்ய்ய மீசை வைச்சிருக்கிறார்;...........”
மோவாயில் விரலால் மீசை வரைந்து காட்டினாள்.
பினனர்; சைக்கிள் கான்டிலில் பிரம்புக்கூடையைக் கொழுவிக்கொண்டு கடைக்குப் போகப்புறப்பட்டு வந்த எதிர் வீட்டு சின்னத்துரை அண்ணை (வயது 45) யைக்காட்டி-
“ என்னை வச்சிருந்த மற்றவருக்கு உவற்றை வயதிருக்கும்.”
அவர் தலையில் கையை வைத்து “ என்ரை வாய்க்கால் தரவைக்கொம்பா................” என்று அலறினார்.

மற்ற நாள் பேச்சியம்மனின் கோவிலில் அவளுக்கு ஐந்தாறு நூல்கள் மந்திரிச்சுக் கட்டிவிட்டு மறவன்புலவிலிருந்து வந்த லெச்சுமியின் உறவுக்காரர் ஜெயலலிதாவை தம்முடன் கூட்டிக்கொண்டு போனார்கள்.

இரண்டு வாரம் கழிந்து ‘அவளுக்கு சோறுகொடுப்பித்தாயிற்று’ என்று சேதி காற்றோடு வந்தது. மாப்பிள்ளை வட்டித்தொழிலால் மறவன்புலவை வாங்கக்கூடிய பணக்காரனாம்.

கடைசிப்பாடம் சோதனை நன்றாக எழுதிய திருப்தியில் ஆனந்தராகவன் சைக்கிளில் வந்துகொண்டிருந்தான்.

ஜெயலலிதா பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு கல்யாணக்களையோடு எதிர்திசையில் வந்துகொண்டிருந்தாள்.
மைனர்சங்கிலி , டெர்லின்சேர்ட்; , ஒற்றை விபூதிக்கீற்றின் மேல் சந்தனப்பொட்டு சகிதம் மெட்டாக இருந்த அங்குட்டன் மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து வயது இருக்கும், ஒருகாலும்; மற்றையதைவிட குள்ளம்போலும.; அவளுக்கு பத்தடிகள் பின்னே விந்தி விந்திக் கொண்டு நடந்து வந்தான்.
இப்போதும் ஃபோகஸ் பண்ணித்தொலைப்பாளோ....................?
ஆனந்தராகவனுக்கு மனதுள் சங்கடமாகவும் பயமாகவுமிருந்தது.
அவன் சைக்கிள் அண்மித்ததும் அவள் சட்டென வீதியின் மற்றப்பக்கத்திற்கு மாறினாள். நிலத்தைப் பார்த்துக்கொண்டு போகிற அவள் முகத்தில் வெட்கம் வழிந்து வழிந்து சொட்டுகிறது.
ஜெயலலிதா முதன்முதலாக வெட்கப்பட்டதை கண்டு ஆனந்தராகவன் ஆச்சர்யம் தாளமுடியாமல் அவர்களைக் கடந்த சென்ற பின்னாலும் திரும்பிப்பார்க்கிறான்.

அவர்கள் இருவரும் ஒருவர் கையை மற்றவர் பாந்தமாகப் பற்றியபடி சென்று கொண்டிருந்தனர்.


.......19.01.1999 ----- பூவரசு . ஜெர்மனி ---
அவர்க்கென்று ஓர் குடில்.....

ன்று நாகர்கோயில் கப்பல்த் திருவிழாவில் தீர்க்கப்படுவது போன்று பாரிய சத்தத்துடன்; பலாலி இராணுவ முகாமிலிருந்து ஷெல்களும் றொக்கட்டுகளுமாய் தீர்த்தவண்ணமிருந்தார்கள்.

அச்சுவேலி , ஆவரங்கால் , புத்தூர் , சிறுப்பிட்டி , நீர்வேலி போன்ற இடங்களில் சரமாரியாக ஷெல்கள் விழுந்து வெடிக்கத் தொடங்கின.

“ஆமி பலாலி முகாமை விட்டு வெளிக்கிடப்போகுது போல கிடக்கு . . . ”
மக்கள் எல்லோரும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள்.

மக்களும் எத்தனை தடவைகள் என்றுதான் பங்கருக்குள்ளே இறங்கி ஏறுவார்கள். வயதானவர்களுக்கு இது ஒரு கொடுமையான தண்டனை. பாட்டி சிறீமாவோ இப்படி ஒரு தண்டனையை ஒருநாளுக்கு அனுபவிக்க நேர்ந்திருந்தால் அன்றே பரலோக யாத்திரையை ஆரம்பித்திருப்பா. இது தன் குட்டியைத்தானே தின்னும் இன முதலைகள் ஆளும் நாடு. ஓரு விடியல் ஏற்படும்வரை அப்பாவிகள் அனுபவிக்கத்தான் நேரும்!

சதா பங்கருக்குள் எப்போதும் முடங்கியிருப்பது எத்தனை நாளுக்குத்தான் சாத்தியம்? வெளியில் வந்து இருந்தாலும் விழுந்து வெடிக்கும் ஷெல்லின் கூறுகள் ஆளைச் சீவிக்கொண்டு போகலாம். வீட்டிற்குள் இருந்தாலும்தான் . ‘ஜிவ் ’; வென்று கூவிக்கொண்டு வரும் ஷெல்கள் கூரையில் விழுந்து வெடித்துச் சிதறலாம். மக்கள் தூக்கமின்றி தவித்தார்கள்.

மார்கழிப் பனியின் குளிர்மை இன்னும் காற்றில் கலந்திருந்த மென்காலை நேரம். சிற்பாசாரி ஆனந்தரங்கர் சந்தியாவந்தனம் முடித்துக் கொண்டு தன் கலைக்கூடத்துள் நுளைந்தார். அதன் நடுவிதானத்தில் மொறீசியஸ் நாட்டிற்கு அனுப்புவதற்காகத் தன் நாலைந்து மாத உழைப்பில் உருவாகி முடியுந்தறுவாயில் கொலுவாய் நின்ற தேவியின் சிலைகளை கைகளைக்கட்டிய வண்ணம் பார்த்துக்கொண்டு நின்றார்.

சரிவிகிதத்தில் அம்சமாகச் சமைந்துவிட்ட அங்கங்கள் , நீண்ட விழிகளில் சுடர்ந்த தீட்சண்யம் , நடுவில் இன்னொரு தீபமாய் வளர்ந்த நாசி , வீணையெனத் ‘திடு’ப்பென ஒடுங்கிப் போகும் இடை . . . . . இவைகளையெல்லாம் ஒருங்குசேரப் பார்க்கப் பார்க்க அவருக்குத் தன் சிருஷ்டிப்பாற்றல் மீது கர்வம் வளர்ந்தது!

அவர் மனைவி சாந்தாம்மாள் பனை வெல்லத்துடன் தேனீர் கொண்டுவந்து கொடுத்தார். அதைக் குடித்துவிட்டு தன் ஆயுதப் பெட்டியைத் திறந்து பல தினிசில் அரத்தாள்களை எடுத்துவைத்துக் கொண்டு தேவியை ‘பொலிஷ்’ செய்ய ஆரம்பித்தார். அவர் உதடுகள் அவரையுமறியாமல் ‘கனகதாரா’ ஸ்லோகங்களை உச்சரிக்கத்தொடங்கின.
மீண்டும் மழை பொழிவதைப் போல் ஷெல்கள் விழத் தொடங்கின. யாரோ தெருவில் ‘ஆமி அச்சுவேலி , தோப்புப் பக்கமாய் வந்திட்டுதாம் ’ என்று பேசிக் கொண்டு போனார்கள். ‘இருக்காது சும்மா வதந்தியாயிருக்கும் ’ என்று நினைத்தபடி மீண்டும் அவர் தன் கருமமே கண்ணாயினார்.

‘படா’ரென்று ‘ஷெல் ’ ஒன்று விழுந்தும் , அதைத் தொடர்ந்து மரங்கள் முறிந்தும் கேட்டன. அவர் மனைவி பங்கருக்குள் அவரையும் “ஓடியாங்கோ . . . . ஓடியாங்கோ” என்று அழைத்தபடி ஓடிப்போய் நுழைந்தார். வேகமாக வந்து பங்கருக்குள் புகுந்து கொண்ட ஆசாரியாருக்கு மூச்சிரைத்தது. ஒரு பத்து நிமிடங்கள் இடைவெளி விட்டது மாதிரி ஓய்வாயிருந்தது. ‘வெளியே போகலாமா’ என்று அவர்கள் எண்ணவும் ‘ஷெல்’ ஒன்று விழுந்து வெடித்து நிலமே அதிர்ந்தது. ஒரு பனை உயரத்திற்கு மண் மலைபோல எழும்பி வேறென்ன அழிவு நடந்ததென்றே பார்க்கமுடியவில்லை. செவிப்பறையும் நெஞ்சும் அதிர்ந்து வலிக்க........
‘ஈஸ்வரா . . . . ! ’ என்று அரற்றினர் இருவரும்.
புழுதி சற்றே அடங்கியதும் ஆசாரியார் வெளியில் வந்து பார்த்தார். அவர்கள் வீட்டில் பாதியும் உடைந்து சிதறிப் போயிருக்க தரையெல்லாம் கூரை ஓட்டின் சிவந்த சில்லும் சிதறல்களும். இடிபாடுகளைக் கடந்து கலைக்கூடத்தினுள் எட்டிப்பார்த்தவருக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சி! ஓயிலாக ஒரு நடன பாவத்தில் விரல்களில் ‘டோலஹஸ்த்த’ முத்திரையை எழிலாகப் பிடித்தபடி செல்லமாக கீழ் நோக்கி வளைந்திருந்த தேவியின் இடது கை ஒடிந்து தரையில் கிடக்கிறது . . . ஆசாரியருக்கு பேச்சேதும் வரவில்லை.............. உதடுகள் மாத்திரம் துடிக்கின்றன. ‘இவர்கள் உயிருடன் இருக்கிறார்களோ’ எனப் பார்க்க வந்த சில அயல் சனங்களும் நடந்த விபரீதம் கண்டு பேச்சடைத்து நிற்கின்றனர்.

எல்லோர் வீட்டுப் படலைகளிலும் விடுதலைப் போராளிகள் தட்டிச் சொல்லிக்கொண்டு போகிறார்கள். “ஆமி வடக்கை ‘மூவ்’ பண்ணுகிறான்.................. றொக்கட்டால அடிக்கப்போறான்.............. எல்லோரும் உடன் வெளியேறி மட்டுவில் பக்கமாய் போங்கோ............... ” வீதியில் லோஞ்சர்களும்;;;;;, ஏ. கே 47 களும் படபடத்தன. ஜனங்கள் சிதறித் தறிகெட்டு ஓடினார்கள். இவர்களுக்கும் ஓடவேண்டும் என்பதைத் தவிர அக்கணம் வேறொன்றும் தோன்றவில்லை. இருவரும் பின்வேலிக் கதியால்களை நீக்கிக்கொண்டு தபாற்கந்தோர் ஒழுங்கைக்குள் ஓடினர். மூச்சிரைத்தது. நாலா திசையிலும் மேலும் பல ஷெல்கள் விழுந்து வெடிக்கவும் இன்னும் வேகம் பிடித்தனர். ஒழுங்கையில் மிதத்திக்கொண்டிருந்த கல்லொன்று ஆனந்தரங்கரின் காலை மோதிப் பெருவிரல் நிகத்தை இரண்டாகக் கிழித்தது! வேதனை தாளமாட்டாமல் விரலைப் பொத்தியபடி அமர்ந்துவிட்டார். இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்ததைப் பார்த்துப் பதைத்த சாந்தம்மாள் தன் சேலைத் தலைப்பை கிழித்து விரலைச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட்டார். தொடர்ந்தும் காலைக் கெந்தியபடியே நடந்து பிரதான வீதிக்கு வந்தால்....................... இருபத்தைந்து திருவிழாக் கூட்டம் ஒன்றாக அணிவகுத்தது போல யாரும் தம் வாழ்வில் காணாதபடி ஜனக்கூட்டம் சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்தது. புத்தூர் சந்தியால் ஜனத்திரளுடன் சேர்ந்து திரும்பிச் சாவகச்சேரி வீதியில்..............................

ஒரு அரை மைல் நடந்திருப்பார்கள்................... றோட்டில் ஒரு இடத்தில் ஆடுகள் பலியிட்ட இடம்போல இரத்தம் ஓடி உறைந்து கிடக்கிறது. வேலியோரமாக தொடையளவில் அறுபட்ட மனிதனின் காலொன்று தனியாகக் கிடந்தது. மேலும் பல மனித அவயவங்களும் மாமிசத் துண்டங்களும் வீதியில் அங்குமிங்கும் சிதறிக் கிடக்க வேறோரிடத்தில் தனியான சிறு குவியலாகவும் மாமிசம் கொஞ்சம் குவிந்து கிடக்கிறது. எல்லா மாமிசமும் ஷெல்லின் பகுதிகள் பட்டுக் கறுப்பாய் வேகியிருந்தன! அவர்களைத் தாக்கிய ஷெல்களின் கூறுகள் எவ்வளவு உஷ்ணமானவையாய் இருந்திருக்கவேண்டும்?

இவைகளைப் பார்த்து மயங்;கி விழப்போன சாந்தம்மாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ஆனந்தரங்காச்சாரியார். அவளுக்குத் தெளிக்கக்கூட ஒரு கோப்பை தண்ணீர் எவரிடமும் இல்லாதிருந்தது. முன்னே போய்க்கொண்டிருந்த மக்கள் திரள் மீது ஷெல் விழுந்து வெடித்ததாக சொன்னார்கள். சிதறிப் போனவர் எவரென்றோ எத்தனை பேரென்றோ யாருக்கும் தெரியவில்லை! இந்த அனர்த்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தால் மேலும் ஷெல்கள் அங்கே விழலாம்.

ஜனக்கூட்டம் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

மக்கள் கூட்டம் கடகங்களுடனும், சு10ட்கேஸ்களுடனும், சுருட்டிய பாய்கள், அலுமினியப் பாத்திரங்களுடன், நடக்கமுடியாத முதியோரையும் நோயாளரையும் வண்டிகளில் ஏற்றித் தள்ளிக்கொண்டும் அந்திரானை வெளியை அண்மிக்கவும் பத்துப் பதினைந்து ஹெலிக்கொப்டர்கள் இராட்சதக் கழுகுகளெனப் படபடத்துப் பதிந்து வானில் வட்டமிட்டன. ஜனங்கள் “ ஐயோ.............. அழிவான்கள்.............. சுடப்போறாங்கள்................! ” என்று அலறியபடி வயல் வெளியூடாகவும், தரவை வெளியாலும் தறிகெட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினர்.

தாம் பிறந்த மண்ணிலேயே ஏதிலிகளாய் நொந்து வெளியேறும் அப்பாவி மக்களிடத்தில் மரண பயத்தை உண்டாக்கி மகிழ வந்த கிரஹாதர்கள் மேலும் சில வட்டங்கள் அடித்துவிட்டுத் திரும்பிப் போயினர்.

சு10ரியன் கன்னப்பொட்டை எரிக்கத் தொடங்கினான். எல்லோருக்கும் தாகம் எடுத்தது. சின்னக் குழந்தைகளும், சிறுவர்களும் தண்ணீர் கேட்டு அழுதனர். வீரவாணி அம்மன் கோவில் கிணத்தில் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தண்ணீரை அள்ளிக் குடித்துப் பார்த்தால் ஓங்களிக்கக்கூடிய அளவுக்கு உப்புக் கரித்தது!

குழந்தைகளைச் சமாதானம் பண்ணிக்கொண்டே மேலும் நாலு மைல்கள் நடந்து வந்த மக்கள் மட்டுவில் கண்ணகை அம்மன் கோவிலை அடைந்ததும் மக்கள் கேணிப்படிகளில் தடதடவென இறங்கிப் பாசிகளை விலக்கிவிட்டுத் தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தனர்.

நடமாடமுடியாத முதியவர்களையும், நோயாளிகளையும் கோயில் பிரகாரத்திலும் மேற்கு மடத்தின் திண்ணைகளிலும் கிடத்தினர். இவ்வளவு தூரத்தையும் நடந்தே வந்ததால் ஆனந்தரங்காச்சாரியரின் விரலில் இருந்து ஏராளம் இரத்தம் வெளியேறியிருந்தது. அவருக்குத் தலைலைச் சுற்றியது. மடத் திண்ணையில் சாய்ந்ததுதான்................ அயர்ந்து தூங்கிவிட்டார்.

சாந்தம்மாள் ‘அடையாள அட்டைகளையும், வீட்டினுள் இருந்த இருநூற்றுச் சொச்ச ரூபாய் பணத்தையுமாவது எடுத்து வந்திருக்கலாமே’ என்று அரற்றிக்கொண்டிருந்தார். இந்த அம்மன் சந்நிதானத்திலும் பல விக்கிரகங்களும், வாகனங்களும் ஆசாரியாரின் கைவண்ணத்தில் உருவானவைதான். கண்ணகை அம்மன் கோவில் முகாமையாளரைத் தவிர மட்டுவில், சாவகச்சேரியில் அவர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் வாய்ந்தவர்களோ உறவினர்களோ இல்லை. கோவிலைச் சுற்றியும் பிரகாரத்திலும் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் எத்தனை பேர் அவருக்கு வேண்டியவர்களாகவும், நண்பர்களாகவும், உறவினர்களாகவுமிருப்பார்கள். யாருக்கென்றுதான் அவர் இப்போ உதவக்கூடும்?
‘யாருக்கும் போய் தொந்தரவு கொடுக்கப்படாது.............. யாருக்கும் சங்கடம் ஏற்படுத்தவுங்கூடாது........’ என்று நினைத்தவர்கள் அவரைப்போய்ப்பார்க்கவேயில்லை!

மாலை மூன்று மணியானதும் மெல்ல ஆசாரியருக்கு விழிப்பு வரமுதலே கால் வலியும், பசியும் விழித்துக்கொண்டன. மீண்டும் சு10ழலின் அவலமும் அசௌகரியங்களும் கௌவ்வ மனதில் அந்தகாரம் சு10ழ்ந்துகொண்டது. இவைகள் எவையையும் உணராத நிலை தூக்கம். மரணத்தைப் போலும் தூக்கம். மரணித்துவிட்டால் நல்லது போலிருந்தது. தன்னை நம்பியிருக்கும் சாந்தம்மாள் எங்கே போவாள்? ஓரு பிள்ளையிருந்தாலாவது அது கவனிக்கும் என்று கண்ணை மூடிவிடலாம்.
மனிதனால் எதனைத்தான் சாதிக்க முடிகிறது . . . . ? வாழ்ந்தது போதும் இனி இறப்போம் என நினைத்தபோதுதான் இறக்கமுடிகிறதா? பட்டுக்கம்பளம் விரித்ததைப் போல, சிலசமயங்களில் சரிவில் இறங்குவதைப் போல, பின் ஏறுவதைப் போன்ற சிரமமாக, கல்லும், பெரியகொத்துக்கட்டிகளும் கொண்டு கிடப்பதான கொழுவி இழுக்கும் முட்களும் புதர்களும் கொண்டு வேதனை தருவதாக, அபூர்வமாக தென்றலும் பரிமளமும் வீசுவதாக . . . . . யாரோ ஒருவன் தன் இ}ஷ்டப்படி போட்டுத் தரும் பாட்டையில்தான் நடக்கிறோம் என்று பட்டது அவருக்கு. சதுரம் தானாக ஓயும் வரையில் வாழ்வைத் தவிர அவருக்கு வேறு எதுவும் செய்யமுடியும் போல் தெரியவில்லை!

ஏதிலிகளுக்கு உதவும் தன்னார்வக் குழுக்கள் சில எங்கிருந்தோ சமைத்த உணவுகளாய் பொட்டலங்களில் கொண்டு வந்து மக்களுக்குப் பரிமாறினர். இருவருக்குமே உணவின் மணம் நாசியைத் தொட்டதும் குடலைப் பிடுங்குவதைப் போல அகோரமாய் பசித்தது. ஆசாரியாரோ வெளியிடங்களில் சாப்பிட்டுப் பழக்கமில்லாதவர். கௌரி தீட்சை பெற்றவர். ரொம்பவும் ஆச்சார அனுட்டானங்களைக் கவனிப்பவர். ஆசாரத்தைக் கடைப்பிடிக்காத உறவினர் வீடுகளிலேயே கை நனைக்க மறுப்பவர் . . . . மனைவியின் முகத்தைப் பார்த்தார். அது வாடிய பஷன் பழத்தின் தோலைப்போல சுருங்கியிருந்தது. அவரும் புருஷனைப் பார்த்து உள்@ரப் பயத்துடன் ‘சாப்பிடுவோமா’ என்று ஜாடையாகக் கேட்டார்.

“சந்தியா வந்தனம் வந்தனம் செய்யலாமா . . . . ? ”

அவரும் மெல்ல இறங்கி வந்திருப்பதை உய்த்தவர்,

“காலுடைந்து கிடக்கு என்ன மசிராண்டிச் சந்தியாவந்தனம் . . . . ? ” என்று எரிந்துவிழுந்தார்.

வாழ்வே ஒரு தாம்புக் கயிற்றில் தொங்கும் போது, ஆசாரமும் அனுட்டானமும் எதுவரையில் சாத்தியம்? உணவுப் பொட்டலங்களை வாங்கிச் சாப்பிட்டனர். அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மேற்கொண்டு எந்தத் திசையில் நடப்பதென்றுந் தெரியவில்லை. அவருடைய மூன்றுமாதக் கடுமுழைப்பில் சிருஷ்டிக்கப்பட்டுக் கையுடைந்துபோன தேவி கண்முன் வந்து வந்து மறைந்தாள். மீண்டுமொருமுறை மெல்லக் கண்ணயர்ந்து உறக்கமோ இல்லை விழிப்போ என்று கூறமுடியாத நிலையில், அவருக்குத் தான் விளைந்து குலுங்கும் ஒரு வயல் நடுவே நிற்பதைப் போல் இருந்தது. மெதுவாகக் காற்று வீசவும் நெற்கதிர்கள் அலை அலையாகக் தாழ்ந்தும் உயர்ந்தும் சந்தத்துடன் விளையாடின. பின் நிஜத்திற்கு மீண்டதும் சிறிது நேர மௌனத்தின் பின் மனைவியைக் கேட்டார்:

“வவுனிக்குளத்திற்குப் போவமேப்பா. . . . . ? ”

வவுனிக்குளம் என்றதும் சாந்தம்மாளுக்குப் பெருமூச்செறிந்தது. ஒரு காலம் அங்கே அவர்களுக்கு அரசின் குடியேற்றத் திட்டத்தில் வழங்கிய 5 ஏக்கர் காணி நீர்ப்பாசன வசதியுடன் இருந்தது. சிறப்பாக மழை பெய்து குளம் நிரம்பியிருக்க வேணும் இரண்டு போகமும் விதைக்கலாம். போகத்திற்கு 200 புசல் நெல் விளையும். எழுபதுகளின் ஆரம்பத்தில் இரண்டு மூன்று வருடங்கள் பருவ மழை தவறி போகங்கள் பொய்த்துவிட ஏற்பட்ட விரக்தியில் அவ்வூர் வாசியான நாகுமணி என்பவனுக்கு வாய்த்த விலைக்கு விற்றுவிட்டு ஊரைப்பார்த்து வந்துவிட்டார்.

“எமக்கொரு விடிவு வரும் வரையில் ஒரு குடில் போட்டுக்கொண்டு பிழைச்சிருக்க நாகமணி அப்பிடியொரு அரை ஏக்கர் காணி தன்னும் தரமாட்டானோ.............. ? ” அவர் நம்பிக்கையுடன் கேட்கவும் சாந்தம்மாளுக்கு அதைவிட வேறு மார்க்கம் ஏதும் தோன்றவில்லை. சம்மதித்தார்.

எழுந்து மெல்லக் கெந்தியபடி ஆசாரியார் நடக்கத் தொடங்கவும் சீதையெனச் சாந்தம்மாளும் பின் தொடர்ந்தார். மாலைக் கருக்கலில் சாவகச்சேரியை அடைந்தால் அந்நகர் திருவிழாக் கூட்டமொன்றில் ‘பவர்கட்’ ஏற்பட்டது போல் மக்களும் சந்தடியுமாய், ஆனால் இருளில் மூழ்கிப் போயிருந்தது. டிறிபேர்க் கல்லூரி வளவு, பஸ் நிலையம், சந்தைக் கட்டிடங்கள், நீதிமன்ற வளவு, எதிரில் இருந்த தேவாலயம், புகைவண்டி நிலையம் எங்குமே மக்கள் மக்கள் மக்கள்...............! பெரிய தேனீக்கூட்டில் தேனீக்கள் இயங்குவது போல் மக்கள் எல்லாத் திசையிலும் சாரியாகவும்;, தனியனாகவும் இயங்கிக்கொண்டிருந்தனர்.

செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவரை அடையாளங்கண்டு விரல் காயத்தைக் காட்டி முறையிட்டபோது, அவர் இன்னுமொருவரை முதலுதவிப் பெட்டியுடன் கூட்டி வந்து காயத்தைக் கழுவி மருந்திட்டுக் கட்டிவிட்டார். நீதிமன்ற வளவின் காரை பெயர்ந்த திண்ணையில் ஒரு சிறிய இடம் கிடைத்தது. போட்டுப் படுக்க ஒரு சணல் சாக்குக் கூடக் கிடையாதபடிக்கு ஒரே நாளில் வாழ்வு பறித்தெடுக்கப்பட்டு பஞ்சைப் பராரிகளாக்கப்பட்டதை நினைத்துச் சிரிக்கவோ அழவோ முடியாமல் அவர் மனது விச்ராந்தியாக மிதந்து கொண்டிருந்தது.

அதிகாலையில் சு10ரியோதயத்திற்கு முன்னமே எழுந்து கிளாலியை நோக்கி நடக்கத் தொடங்கிய சனக்கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்துகொண்டு மெல்ல மெல்ல நடந்தார்கள். கிளாலியை வந்தடைய மாலையானது. அங்கும் ஏதிலி அகதிகளுக்கு உதவுவோர் , மற்றும் பல தன்னார்வத்தொண்டர்கள் அங்கு வந்து சேர்ந்த மக்களுக்கு கஞ்சி வார்த்தனர். களைப்பிலும் பசியில் புறப்பட இருந்த உயிர்கள் இழுத்து மீண்டும் கட்டப்பட்டன. இரண்டு நாட்கள் காத்துக் கிடந்த உயிர் பிழைத்து கிளாலிக்கடலைக் கடந்து ஆலடிக்கு வந்தனர். கால் தூக்கிவைத்து நடக்க முடியாதபடிக்கு உபாதை தந்தது.

இரண்டு சைக்கிள் இளைஞர்கள் அவர்களை காரியரில் இருத்தி கிளிநொச்சியில் கொண்டு வந்துவிடுவதாகவும் அறுநூறு ரூபாய்கள் தரும்படியும் பேரம் பேசினர். கடைசியாக ஐநூறு ரூபாய்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர். கிளிநொச்சி வந்ததும் (சைக்கிள் இளைஞர்களிடம் தெரிவித்தபடியே) சாந்தம்மாளின் காதுத் தோடுகளை விற்பதற்காக ஒவ்வொரு இடமாக அலைந்தனர். யாரிடமும் அதை வாங்குவதற்குப் பணமில்லை. சிலர் அறாவிலை கேட்டனர். களைத்துப் போன இளைஞர்களில் ஒருவன் கேட்டான்:

“பெரியவரே . . . . இந்தத் தோடு என்ன நிறையிருக்குமென்றீர்? ”

“முக்கால் பவுணுக்கு மேலிருக்குப்பா . . . . திருடன் கையில் கொடுத்தாலும் இரண்டாயிரம் ரூபாய் தருவானே . . . . ”

“சரி இப்ப என்னதான் விலை வேணுமென்றீர் . . . . ? ”

“ இப்போதைக்கு ஐநூறு கழிச்சுத்தான் கொடுத்தாலும் பரவாயில்லை . . . ”

“ இன்னும் நமக்கு உங்களோட அலையேலாது. ஏங்கள் பிழைப்புக் கெட்டுப் போகும் . . . அதனாலை ஒரு தோட்டைத் தாங்கோ . . . . போய்க்கொண்டேயிருக்கிறம் . . . . ”

இளைஞர்கள் சென்று மறைந்துவிட்டார்கள்!

சைக்கிளில் இருந்து நெடுந்தூரம் வந்தது கால் ‘விண்’ ‘விண்’ணென்று வலித்தது. முதலில் ஆஸ்பத்திரிக்குப் போனார்கள். அங்கும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் நம்பர் எடுத்துக்கொண்டு மரநிழலிலும், தாவாரங்கள் வழியேயும் காத்துக் கிடந்தார்கள். இரண்டோ மூன்று டாக்டர்கள்தான் அவ்வளவு பேரையும் கவனித்தார்கள். மதியம் திரும்பி மூன்று மணியாகியும் இவர்கள் முறை வரவில்லை. கால் வலி தாங்கமுடியாதிருக்கவே வேலியில் இருந்து பிடுங்கப்பட்டது போலத் தெரிந்த பாதிக்கம்பிக் கட்டை ஒன்றை நிலத்தில் போட்டு அதில் தனது காயம் பட்ட வலது காலைச் சற்றே உயரமாக வைத்துக் கொண்டு இருந்தார். வலி சற்றுக் குறைவதைப் போல இருந்தது.

சரியான சாப்பாடும் உறக்கமும் இல்லாது இவ்வளவு தூரமும் கால் நடந்த களைப்பால் வெட்டி வெய்யிலில் போட்ட பூசனிச்செடியைப் போல துவண்டு போயிருந்த சாந்தம்மாள்................. சிவந்த அந்த மனிதன் நாலைந்து நாள் வெயிலில் வாடி வதங்கி மழிக்காத கன்னங்களுடன் பரிதாபகரமாய் கால் வலியால் அவதியுறுவது கண்டு வழிந்த தன் கண்ணீரை ஆனந்தரங்க ஆச்சாரியார் காணாதபடிக்கு இரகசியமாகத் துடைத்துக் கொண்டார்.
ஆசாரியார் ஏன் அம்மரக்கட்டையைக் காலுக்கு உயரமாக வைத்திருக்கிறார் என்பதை உணராத, சட்டை ஒன்றுமே போட்டிராத ஒரு ஏழெட்டுமாதச் சிசுவை மார்போடு இடுக்கிக் கொண்டிருந்த ஒரு ஏழ்மைப் பெண் “ஐயா . . . ஐயா . . . அந்தக் கட்டையைத் தாறீங்களா . . . . ஒரு வேளை பொங்கிப்பேன் ” என்று யாசித்தாள்.

அவரின் காலைப் பரிசோதித்த டாக்டர், கிழிந்து போயிருந்த நகங்களை கொறட்டால் பற்றியபடி “பெரியவர் விறைப்பூசியில்லை கொஞ்சம் தாங்கிக் கொள்ளுங்கோ ” என்றபடி பிடுங்கிவிட்டார்.
“ஆஆஆஆ . . . . ” என்று அலறியபடி மயங்கியே போய்விட்டார் ஆசாரியார்.
சற்றுத் தெளிவு வந்து கண்முன்னே வெண்பஞ்சுகள் பறந்துகொண்டிருந்தபோது “ஆஸ்பத்திரியில் இடமேயில்லை . . . . நீங்கள் வெளியில்தான் அட்ஜஸ்ட் பண்ணித் தங்கிக்கொள்ள வேணும் . . . . ” என்று டாக்டர் சொல்வது ஆழக்கிணற்றிலிருந்து வரும் குரல்போலக்கேட்டது.

அவர்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் வரவும், வழியில் யாரோ ஒரு பெண் மீதமிருந்த அவர்களின் தனித் தோட்டைத் எண்ணுhறு ரூபாய்க்குக் கேட்டாள்.

“சரி . . . . கொடுத்திடு” என்று சைகையால் காட்டினார் ஆனந்தரங்கர். அப்பணத்தில் ஒரு சட்டியும், பானையும், கொஞ்சம் அரிசியும் வாங்கினர். இப்போது விறகு தேடவேண்டியதாயிற்று. விறகு வாங்கப் போன சாந்தம்மாள், கூடவே கொஞ்சம் வெங்காயமும் வெண்டைக்காயும், பிஞ்சு மிளகாயும், உப்பும் வாங்கி வந்தார். வீதியோரமாகக் கல்லு வைத்து அடுப்பு மூட்டிச் சாதம் பொங்கிவிட்டு வெங்காயத்துடன் வெண்டிக்காய் மிளகாய், உப்பு, நீர்விட்டு அவித்துச் சாப்பிட்டார்கள்.

ஒரு மாட்டுவண்டிக்காரரிடம் அவர் வைக்கோல் அடைய வைத்திருந்த இரண்டு சாக்குகளையும் விலை கொடுத்து வாங்கினார்கள். அவர்கள் சமைத்த இடத்திற்குப் பக்கமாக இருந்த வீரை மரத்தடியில் இரவு படுக்கலாமென எண்ணியிருந்தனர். சாப்பாடு முடித்து கொண்டு சாக்கையும் கொண்டு அம்மரத்தடிக்குப் போனபோது மலையகத்தவர்கள் போலும் அங்கே இரண்டொரு பிள்ளைகளுடனான வேறொரு குடும்பம் அவ்விடத்தைக் கூட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தது.
அதுதான் அவர்களது வாடிக்கையான பள்ளிகொள்ளுமிடம் போலும்!
இவர்கள் அங்கே தயங்கி நிற்கவும் அவன் அழைத்தான். “ஐயா வாங்க . . . . இங்கை இதில தூங்கிக்கலாம் . . . . நமக்குத்தான் இதெல்லாம் பழகிப்போன வாழ்க்கை . . . . இடம் . . . . புதிசா வர்ற விருந்தாளிங்களை உபசரிக்க வேணாமோ . . . . . ? ”


ஆசாரியாருக்கு வெட்கமாயிருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். இன்னும் பலர் கையில் கிடுகுகளையும், உரப்பைகளையும் வைத்துக்கொண்டு வாகனப் போக்குவரத்து அற்ற வீதியிலே இரவைக் கழிக்க ஆயத்தமாவதைக் கண்டார். ஒரு காலம் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் தம்மால் தாழ்த்திவைக்கப்பட்ட ஏழைக் குடியானவர்களுக்கு அளித்த ஆசனங்கள்தான் கிடுகும், சாக்கும்!

மலையகத்திற்குக் கூலிவேலை செய்து பிழைக்க வந்த, இழித்துப் பழிக்கப்பட்ட ஒரு அன்பன் வெறுங் கட்டாந்தரையைப் பங்குபோடவே - என்ன வெள்ளை மாளிகை விருந்துக்கு உபசரிப்பதைப் போலல்லவா உபசரிக்கிறான்.

தயங்கித் தயங்கி அவர்கள் மரத்தடிக்குச் செல்லவும், அவன் பெண்டாட்டி சொன்னாள், “ தோ............. இந்த ஐயாதான் அப்போதெ இந்த வெறகு கட்டையைத்
தந்தது............... ” அவள் கண்களில் இன்னும் நன்றி மின்னிட்டது.

மரத்தடிச் சந்தோசம் சில மணிகள்தான் நீடித்தது. யாரா மழை வேண்டித் தவமிருந்தது போலும்.............. சாமமாகவும் மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். ஆசாரியாரும் சாந்தம்மாளும் ஆஸ்பத்திரி வளவினுள் நுழைந்தனர். கட்டுப்படுத்த முடியாதபடி ஆஸ்பத்திரியின் எல்லா அறையினுள்ளும் ஜனங்கள்! ‘தூங்க இடம் வேண்டாம். கால் காயம் நனைந்துவிடாதபடி வைத்துக்கொள்ள ஒரு இடமிருந்தால் போதும்’ என்றிருந்தது.
“இலங்கையிலும், இந்தியாவிலும்;, ஆசியாவிலும், ஏன் முழு உலகத்திலுமே மழைக்கு வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாத எத்தனை பாவிகள் இருப்பார்கள்?” என ஆனந்தரங்காச்சாரியார் எண்ணிப் பார்த்தார். ‘கொஞ்ச நாட்களாகவே தனக்கு ஏற்படும் அனுபவங்களும், அதைத் தொடர்ந்து வரும் புதிய சிந்தனைகளும்.................’

அவருக்குச் சிரிப்பு வந்தது.

இத்தகு ரம்யமான பொழுதுகளுடன் நுளம்புக் கடியோடு ஜோராகப் பொழுதைக் கழித்துக்கொண்டு மூன்றாம் நாளும் ஆஸ்பத்திரிக்குப் போய் காவலிருந்து காயத்திற்கு மருந்து கட்டிக்கொண்டு வருகையில் யாரோ ‘ கிளிநொச்சி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு டிராக்டர் வவுனிக்குளம் - துணுக்காய் புறப்படவிருப்பதாகவும் ஆளுக்கு 250 ரூபாய் வசு10லிப்பதாகவும் ’ பேசிக்கொண்டதை அறிந்து இருவரும் போய் அதில் இடம் பிடித்துக் கொண்டனர். 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்போ, தார் போடுதலோ இல்லாமல் குன்றுங் குழியுமாக இருந்த பாதை தூக்கித் தூக்கிப் போட்டது. டிராக்டர் வளைந்தும், மடங்கியும், சேறை வாரிப் பெரிய டயரினால் பின்னால் தெளித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்தது.
குடியேற்றத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை ஒரு குடும்பத்தின் அங்கத்தினருள்ளும், இரத்த உறவுடைய சகோதரங்களுக்கும் கையளிக்க முடியுமேயன்றி - வெளியார் எவரிடமிருந்து வாங்கவோ விற்கவோ முடியாதென்று இலங்கைக் குடியேற்றக்காணிச் சட்ட விதிகளில் ஒரு ஷரத்து உண்டு. இவர்களது காணியை வாங்கமுதலே இது நாகமணிக்கும் தெரியும். காணிப்பதிவு விடயமாகக் காணிப்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற போது காணிப்பதிவாளர் சொன்னார் “உனது நிலைமை எனக்குத் தெரியுது . . . . நீ ஆனந்தரங்காச்சாரியரின் பிறந்த மாவட்ட உபபிரிவான புத்தூருக்குப் போய் அவர்களின் கிராம சேவகரிடம் நீ ஆனந்தரங்காச்சாரியாரின் இரத்த உறவினன்தானென்று ஒரு சத்தியக் கடதாசி பெற்று வந்தால்தான் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்துதரமுடியும். ” நாகமணி விழுந்தடித்துக் கொண்டு புத்தூர் கிராமசேவையாளர் துரைசிங்கத்திடம் ஓடினான். நாகமணியின் விண்ணப்பத்தை முழுவதும் கேட்ட கிராம சேவையாளர் அமைதியாகவே சொன்னார்.

“நீர் ஆனந்தரங்க ஆச்சாரியாரின் உறவினரல்ல என்பது நான் மனசார அறிந்த விஷயம் . . . . என் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு சத்தியக் கடதாசி என்னால் தரமுடியாது! யாராவது காசு வேண்டிக்கொண்டு அப்படிச் செய்துதரக்கூடிய கிராம சேவையாளர் யாரும் மாற்றலாகி புத்தூருக்கு வருவினம்தானே . . . . ? அப்போது நீர் உமது காணியை மாற்றிக்கொள்ளலாம். நீர் அவசரப்படத்தேவையில்லை. ஆசாரியர் ஆனந்தரங்கரை எனக்குப் பலகாலமாய் தெரியும் . . . . மிச்சம் நேர்மையான மனிதன் . . . . அவர் என்றைக்குமே உம்மிடம் வந்து எனது காணியைத் திருப்பித் தா . . . என்று நிற்கப் போவதில்லை! ”

இருவருக்கும் டிராக்டர் குலுக்கியடித்ததில் பொருத்துப் பொருத்தாகத் தேகம் நோ எடுத்தது. மாலையாகவும் டிராக்டர் மல்லாவிச் சந்தியில் வந்து நின்றது. அவர்களுக்கு இன்னும் இரண்டு மைல்கள் உள்ளே யோகபுரத்திற்குப் போகவேண்டும்.

பழைய நண்பர்கள், பழகியவர்கள், தெரிந்தவர்கள் என்று ஒரு சனமுமே அவர்களுக்குக் கண்ணில் படவில்லை. இளம் தலைமுறையினருக்கோ அவர்களை யாரென்றே தெரியவில்லை. இங்கும் அகதிகள்தான் நீக்கமற நிறைந்திருந்தார்கள். மற்றப்படி இருபது வருடத்திற்கு முன்பிருந்தது போலவே இன்னுமே கிடுகாலே வேய்ந்த ஏழெட்டுக் கடைகள்தான் இருந்தன.
நாகமணிக்கும் குழந்தைகள் இருக்குமோ இல்லையோ, ஒரு விசுக்கோத்துப் பெட்டி வாங்கிக்கொண்டு போகக் கூட இயலாதபடி அவர்களிடம் பணமெல்லாம் தீர்ந்துவிட்டிருந்தது. மெல்ல நடக்கத் தொடங்கினர். சில அகதிகள் மரநிழல்களில் அங்கத்தைய காடுகளிலும் வயல்வெளிகளிலும் கிடைக்கக்கூடிய கொவ்வை, முசுட்டை, சுண்டைக்காய், முளைக்கீரை, பனங்கீரை, புதினா, அகத்தியிலை என்பவற்றில் கறி சமைத்துக்கொண்டிருந்தனர். ஆசாரியாருக்கு சில மர நிழல்களில் இளைப்பாறுகின்றபோது மற்ற அகதிகளிடம் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேசவேண்டும் போல் இருந்தது. ‘நானே பரதேசி . . . இதில் இவர்களை விசாரித்துத்தான் என்னாகப் போகிறது ’ என்று மேலே நடந்தார்.


ஆனந்தரங்காச்சாரியாருக்கு எப்போதும் தன் கலைத்துவத்தின் மீதும் சிருஷ்டியாற்றல் மீதும் அளவிடமுடியாத வித்துவச் செருக்கு இருந்தது.

கலைத்துவம் செறியாத எந்தப் படைப்பையும் அவர் ஆராதித்தது கிடையாது!

எவனொருவனிடம் கலை ரசனையில்லையோ. . . . . அவனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதென்பது அவர் நம்பிய தத்துவம்!

அவர் கலைக்கூடத்தில் சாதாரண மேசை, கதிரை போன்ற பொருட்களைச் செய்விக்க வந்தோரிடம்,

“தம்பி . . . இது பட்டுக்குஞ்சம், விளக்குமாற்றின் வேலை பார்க்காதென்றோ, அம்மி கொத்திறதுக்குச் சிற்பி எத்தகையனே? ”என்றோ சொல்லி அனுப்பிவிடுவார்.
இன்று, ‘சு10ரியர், சந்திரர், பந்துக்கள், சபையோர், அக்னி சாட்சியாக இறுதிவரையிலும் ஏழு முழம் புடவையும், ஆகாரமும் தந்து வெயிலிலிருந்தும், குளிர், பனி, மழையிலிருந்தும் காப்பேன்’ என்று உறுதியளித்துக் கைப்பிடித்தவளின் பசியைப் போக்க முடியாமல்............... கிருஹஸ்த தர்மத்தையே கடைப்பிடிக்கமுடியாத நிலை வந்து விடுமோ என எண்ணுகையில் முதன் முதலாக வாழ்;கை பற்றியும், அது காட்டும் கோரப்பற்களைக் கண்டும் பயந்தார்!

“நாகமணி அரை ஏக்கர் நிலம் எமக்குக் குத்தகைக்காவது தருவான். அதில் ஒரு குடில் சமைத்துக் கொண்டு, ஒரு ஏர் செய்ய வேண்டும். ஓரிணை மாட்டைக் கூலிக்கேனும் பிடித்து இந்த ஈரம் மாற முதலே உழுதுவிட வேண்டும். கொஞ்சம் எள்ளு, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் மரவள்ளி, கொஞ்சம் நிலக்கடலை அங்கே போடவேண்டும், சாந்தம் வேணுமென்றால் வாய்க்கால் கரையோரமாகப் பயத்தம் விதைகளையும் பூசணி விதைகளையும் ஊன்றட்டுமே! ”

மெல்ல நடந்து வந்து நாகமணியின் காணி முனைக்கு வந்தபோது, அவருக்குக் கண்ணன் மாளிகையைக் கண்ட குசேலரின் பரவசம் பிறந்தது. பொழுது நன்கு மறைந்துவிட்டிருந்தது. அந்தியின் கருக்கலில் மேற்கு வானம் சிவப்பாகவும், மன்னார்க் கடற்காற்று துரத்தி வந்த சில மழை மேகங்களையும் கொண்டிருந்தது. பதிவாகச் சில கூழைக் கடாக்களும், நாரைகளும் வவுனிக்குளம் நோக்கிப் பறந்துகொண்டிருந்தன.

படலையில் போய் நின்று ‘பவ்’ யமாக அழைத்தார்.

“தம்பி . . . . நாகமணி! ”

“யாரது? ” என்றபடி வந்த நாகமணிக்கு இவர்களைப் பார்த்ததும் முகம் இறுகிப் போனது. ஒரு சம்பிரதாயத்திற்காவது “வாங்கோ” என்று சொல்ல மறந்து மலைத்துப் போய் நின்றான்.

“கெட்டுப் போனவன் கிழக்கே போ என்பார்கள்................. நான் கொஞ்சம் தெற்காக வந்துவிட்டேன் ” என்றார் ஆச்சாரியார் புன்னகையுடன்.

எப்படியும் உள்ளே அழைப்பான் என்ற நம்பிக்கையில் உள்ளே பார்த்தனர். அவரே வைத்து விலாட்டு, அம்பலவி, செம்பட்டான் எல்லாம் பெருவிருட்சங்களாக வளர்ந்தும் கனிந்தும் நின்றன. வேலியோரம் நாட்டிய முருங்கை மரங்கள் சடைத்தும் ஆயிரக்கணக்கில் காய்த்தும் பறிக்கப்படாத காய்கள் முற்றிவெடித்துச் சிதறியுமிருந்தன.

நடுவளவில் இன்னுமொரு கிணறு வெட்டிக்கட்டியிருந்தான்.

நாகமணி தொண்டையைச் செருமிவிட்டு வேறொரு திசையில் பார்த்துக்கொண்டு வேகமாகப் பேசினான்.

“ஆசாரியார் வயதில பெரியவர் நீங்கள். என்னைக் குறைவிளங்கப்படாது.............. இந்தக் காணிப் போமிற்று இன்னும் என் பெயருக்கு மாற்றப்படவில்லையென்ற விஷயம் உங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்களிப்ப உங்கடையூரை ஆமி பிடிச்சுப்போட்டானென்று வந்திருக்கிறியள்............. வந்த ஆமி திரும்பிப் போறதென்றது இன்டைக்கோ, நாளைக்கோ, அடுத்த வருஷமோ இல்லை ஒருநாளுமில்லையோ ஆரும் அறுதியிட்டுக்கூறேலாது.................. நானும் உங்கடை நிலைமையைப் பார்த்து ஒரு பக்கமாயிருங்கோ என்று சொல்லிவிட....................... நாளடைவில எந்த மனிசருக்கும் மனது மாறிறது சகஜம்தானே.................... போமிற்றை வைச்சிருக்கிற நீங்கள் போய் இயக்கத்தில நான் இந்த ஆண்டிப் பயலைக் காணியைக் கவனிக்கச் சொல்லியிருத்தின்னான்..................... இப்ப எழும்பிறானில்லை என்றொரு வழக்கைக் கொடுக்க...................... நான் வெளியேறிற நிலை வரக்கூடாது பாருங்கோ............... ! ”

“சீ............... அப்படியொரு அயோக்கியனென்றா இந்த ஆனந்தரங்கனை நினைத்துக்கொண்டிருக்கிறாய்................ அற்ப மானிடா! ” என்று கேட்கவேணும் போல் இருந்தது. வலிந்து அவர் மௌனம் காத்தார்.

“இரண்டு லட்சம் பெறக்கூடிய காணியை பதினையாயிரத்தை எறிஞ்சு அமுக்கின கொள்ளைக்காரனெல்லே நீ................! ”

ஆவேசப்பட்ட சாந்தம்மாளை அடக்கினார்.

“ஏய்............. சாந்தம்! அப்படியெல்லாம் நாம பேசக்கூடாது, விலை தலை எல்லாம் முடிஞ்சுபோன கதை. தன் காணியை நாம மீண்டும் பிடித்து விடுவோமோ என்ற பயம் அந்த மனுஷனுக்கு இருக்கும் போது, மேலும் நாம தர்க்கித்து, அதனால் மேலும் அவர் மனக்கிலேசத்தை வளர்க்கப்படாது............... அது நமக்கு நன்மையும் தராது............... தர்மமுமில்லை ! ”

மெல்ல நடந்து அவர்களின் பக்கத்துக் காணிக்காரரும், பழைய தோஸ்துமான நடராசாவின் படலையில் போய் நின்று கூப்பிட்டார்கள்.

“நடராசா . . . தம்பி . . . நடராசா! ”

பதினெட்டு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் வெளியில் வந்தான்.

“தம்பி நீர் நடராசாவின் மகனோ................. ராசா ஐயா வீட்டில நிக்கிறாரே? ”

“ஐயாதானே போனமாதம் போட்டார்! ”

“எங்கை ராசா? ”

மேலே வானத்தைக் காட்டினான்.

இருவருக்கும் மேலொரு மின்னல் இறங்கிய அதிர்ச்சி!

“ஏனப்பு........... என்ன நடந்தது..............? ஒரு காய்ச்சல் தடுமல் என்று படுத்தறியாத மனுஷனாச்சே! ”

“கொஞ்சக்காலமாய் அவருக்கு மெல்லிய டயபிட்டீஸ் பிரச்சினையிருந்தது.................... ஒவ்வொரு நாளும் ஊசி போடுவிக்க வேணும்................ இப்பத்தான் ஆஸ்பத்திரியளில மருந்து மாயங்களில்லையெண்டது தெரியுமே................... ஒரு நாள் தலையைச் சுத்துதென்று படுத்தார். அடுத்தநாள் போயிட்டார்.................. ”

“நீங்கள் யாரென்று.................? ”

“ஐயாவுக்கு எங்களைத் தெரியும்!”

ஏக காலத்தில் இருவரிடமும் நீண்ட பெருமூச்சுக்கள் எழுந்தன.

இப்போது தம்மை அகதியாய் மட்டுமல்ல அனாதைகளாயும் உணர்ந்தனர். கால் போன திசையில் நடக்கத் தொடங்கினார்கள்.

அவர்களுக்கென்றொரு குடில் கிடைக்காமலா போகும்?


கணையாழி - 10.04.1996.
-----------------------------------------அக்கரையில் ஒரு கிராமம்

பொ.கருணாகரமூர்த்திஜீவிதத்தில் ஒரு தடவையேனும் நான் போயேயிருக்காத என் அப்பாவின் கிராமத்திற்குப் போவதில் முதன்முதல் சந்திரத்தரையில் கால் பதிக்கப்புறப்பட்ட நீல் ஆம்ஸ்றோங் குழுவினருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரபரப்பு , ஆர்வம், திறில் எல்லாமே எனக்கும் உண்டானது.
திருச்சி விமானநிலையத்திலிருந்து பஸ் ஸ்ராண்டிற்கு டாக்ஸி ஒன்றைப்பிடித்து வந்து இரண்டு மணிநேரம் காவல் இருந்து புதுக்கோட்டை போகும் பஸ்ஸைப் பிடித்தேன். பஸ் பயணமும் மேலும் ஒரு மணிநேரம் இருந்தது. பஸ் ஸ்ராண்ட்டில் மக்களுடன் மாடுகளும் கலந்து நின்றன . இனி வடகாட்டிற்குப் போகவேண்டும். கூட்டமாக நின்று டீ குடித்துக்கொண்டு நின்ற நடத்துனர்கள், ஓட்டுனர்கள் குழாத்தை அணுகி மெல்ல விசாரித்தேன்.
“ ஏங்க..... வடகாட்டுக்கு போறதுக்கு எந்த பஸ்ஸைப்பிடிக்கணும்......? ”

“ அந்தா மூணாவதா நிக்குதில்ல டவுண் பஸ்.......... அதுல போய் குந்து..... ” என்றபடி அந்த பஸ் நின்ற திசையில் டீ கிளாஸை நீட்டினான் ஒருவன்.
பஸ் தில்லைநாயகி என்று நெற்றியில் நாமம் சு10டியிருந்தது. சீட்டுக்கள் எதுவும் காலியாய் இல்லை. எல்லாமே நிரம்பிவிட்டிருந்தன. பஸ்ஸின் முன் பக்கமாக ஏறி இஞ்ஜினுக்குப் பக்கமாக இருந்த இடை வெளியில் சு10ட்கேஸை வைத்துவிட்டு ஒரு பக்கமாக நின்றுகொண்டேன்.
டீயைக் குடித்து முடித்து சாவாகாசமாக வெற்றிலை போட்டு சிகரெட் எல்லாம் பிடித்த பின்னால் ஓட்டுனரும், நடத்துனரும் வந்து ஏறினார்கள். நம்மவூரில் பிக்குமார் செய்வதைப்போல வண்டியின் முன்வாசலால் ஏறிய ஆளுங்கட்சியின் ஏதோவொரு வட்டச்செயலர் ஒருவர் முன்சீட்டில் உட்கார்ந்திருந்தவரை சுட்டுவிரலை மடித்துக்காட்டி எழுப்பிவிட்டுத்தான் அமர்ந்து கொண்டார்;.
ஒரு சிறு முணுமுணுப்புக்கூடியின்றி தனது உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு எழுந்து அப்பாவியாக தம்பத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான் அவ்விளைஞன.;
“ வடகாட்டுக்கு ஒரு டிக்கட் ” என்றவுடன் நடத்துனர் என்னை ஏற இறங்கப்பார்த்தான்.
“ ஏன் திருவரங்குளத்துக்கில்லையா.....? ”
“ வடகாடு என்கி;றேனில்ல......... ”
“ .......இல்ல திருவரங்குளத்திலதான் சிலோங்காரங்க காம்ப்..... இருக்கு...... ”
பார்வையிலேயே சிலோன்காரன் என்கிறதைப் புரிந்துகொள்கிறார்கள்.
டிக்கெட்டை எழுதிமுடிக்கமுன்னே அவரிடமிருந்து இரண்டாவது கேள்வியும் ஜனித்தது.
“ வடகாட்டில யாரைப்பார்க்க.......? ”
இனியும் விட்டா“ பொண்டாட்டி முழுகிட்டிருக்காங்களா.....முழுகாமலிருக்காங்களா....? ” என்றுங்கேட்பான் போல இருந்தது. எரிச்சலாக இருந்தாலும் அவன் பதிலுக்காக
முகத்தையே பார்த்துக்கொண்டு நிற்கி;றான். சொன்னேன்.
“ தாசில்தாரர் சுந்தரப்பெருமாள் என்று......... ”
“ அவரை எப்படி...........? ”
“ அவரு நம்ம பெரியப்பா...... ” “
“அப்படீங்களா....... அடடடா! ”
முன் சீட்டில் மாவட்டத்திற்குப் பக்கமாய் உட்கார்ந்திருந்த இளைஞனை
“...ட்டேய்... எழுந்திர்ர்றா.... சாரை யாரென்னு நெனெச்சே......நம்ம பஸ்ஸ{ மொதலாளியோட மருமவப்பிள்ளடா... அவரு நின்னுக்கிட்டு வாறாரு.....நீ ஒக்காந்துக்கினு வர்றே....எந்திர்றா..... சார்.......ஒங்க வண்டி சார் இது......... நீங்க ஒக்காந்துக்குங்க....... ”
இளித்தான் .

இவனுடைய அதட்டலுக்குப் பயந்த இளைஞனோ கிஞ்சித்தும் எதிர்ப்பின்றி ஏதோ தெய்வக்குற்றம் செய்தவனைப்போலப் பதறி எழுந்து பவ்யமாக எழுந்து ஒரு ஓரமாக நின்றான்.
“ என்னாங்க தப்பு.... ஒங்க பஸ்ஸ{.... நீங்க ஒக்காரம....நல்ல ஞாயந்தான் போங்க.... ”


பஸ்ஸில் இருந்த ஜனங்கள் முழுவதும் இந்த சீனை வேடிக்கை பார்க்க...... என்னைத் தோளில் பிடித்து அமர்த்தி இருத்திவிடுவான் போல இருந்தது, வேறு வழியின்றி அமர்ந்தேன.;
திருவரங்குளம் அடைந்ததும் ஒரு இளைஞர் கும்பல் யாழ்ப்பாணத்தமிழ் கதைச்சுக்கொண்டு நின்றது. மார்க்கெட் பக்கமும் இன்னொரு கும்பல். தெரிந்தவர்கள் எவராவது தென்படுகிறார்களா என்று பார்க்கிறேன். ஊகூம்.;..........
வடகாட்டை அடையவும் மாலை மூன்று மணியாகிவிட்டிருந்தது. கண்டக்டர் சு10ட்கேஸை எடுத்துக்கையில் தந்து மிக்க மரியாதையாக இறக்கிவிட்டார். அதொரு சிறிய சந்தி. ஒரு சிறிய கூரை வேய்ந்த தேனீர்க்கடையும் , பலசரக்குக்கடையும் மாத்திரம் டல்லடித்துக்கொண்டு இருந்தன. விருட்ஷமாய் நின்ற புளியமர நிழலில் சிலர் உண்டகளைப்போ பசியோ படுத்திருந்தார்கள்.
எந்தப்பக்கம் போவதென்று தெரியவில்லை. தேனீர்க்கடையில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். அதிலொருவர் கேட்டார்.

“ தாசில்தாரு உறவா.... ” எல்லா விபரமும் அறிந்த பின்னால் வீட்டைக் காட்டுவதென்பதுதான் அவ்வூர்ப்பழக்கம் போல. சொன்னேன்.
“ ஆமா..”
“.........யார் வேணும்.....?”
“........ அவங்க என் பெரியப்பா...... ”
“....அடாடாடா....... யாரு வு}10ட்டையாருவந்து கேட்கிறீக........ (பக்கத்தில் நின்றவனிடம் என் சு10ட்கேஸைக்காட்டி) வாங்கடா பொட்டியை ஐயாகிட்டை....... கல்வூட்டுக்கார ஐயா சீமையில இருந்து வாராக...... மசமசன்னு பார்த்துக்கிட்டு நிக்கிறியே எருமையாட்டம்....”

அவனோ பிடுங்காத குறையாக சு10ட்கேஸை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
“ ஐயா ஒரு கடதாசி போட்டிருந்தீங்கன்னா....... பெரிய ஐயா வண்டி அனுப்பியிருந்திருப்பாருல்ல........”
யாரும் எதிர்பாராமல் போய் இறங்கும் என் திட்டத்தை இவர்கள் எப்படித்தான் புரிவார்கள்?
ஒரு பெரஹரா கூட்டம் போல் என்னை ஒரு கும்பல் புடை சு10ழ நான் முன்னே சென்று கொண்டிருந்தேன.; அவர்கள் பாரதி அவாவிய தூண்களும் , கூடமும் , மாடமும் தோப்புமாய் அமைந்திருந்த ஒரு பழைய பங்களாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அந்தப்பழைய வீட்டில் முன் விறாந்தையில் ஒரு ஈஸிசேரில் இருந்தபடி பெரியப்பா யாரோ இருவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
நாங்கள் கூட்டமாக உள் நுழையவும் உரையாடலை நிறுத்திவிட்டு எழுந்து வந்தார்.
கூட்டத்தில் ஒருவன் முந்திக்கொண்டு சொன்னான்;.
“ ஐயா... சீமையிலிருந்து வாறாக.......! ”
பெரியப்பா மூக்குக்கண்ணாடியைப் போட்டுக் கொண்டு என்னைத் தீர்க்கமாகப் பார்க்கிறார்.
“.... சீமையிலிருந்தல்ல..... சிலோனிலிருந்து வர்றேன்....... வாகீசன்... ”

பெரியப்பா உடனே கண்டுபிடித்து விட்டார்.
“ ..... நீ..... சிவனு பிள்ளையில்ல..... ”
“ .... ஆமா... ”

திடீரென்று இரண்டு தரம் விம்மினார் . பின் மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டார்
“ ஙொப்பன் போன தீபாவளிக்குக் கூட கடதாசி போட்டான் தான் வாரேன்னு...... கடைசியா நீங்கல்லாம் இருங்கன்னுட்டு யாரு கண்ணிலும் படாம இப்படி கணக்கை முடிச்சுட்டுப் போயிட்டானா....... என்னா அவன் ஒடம்புக்கு....... என்னா சொன்னான்....? சாகறப்ப எங்களையெல்லாம் விசாரிச்சானா....? ”
“ ஒடம்புக்கு ஒண்ணு என்னு அவர் படுத்ததே கிடையாது பெரியப்பா...... ஒருநா மாலையிலை கொஞ்சம்போல நெஞ்சு வலிக்குதென்னார்;..... பிறைவேட் டாக்டர்கிட்ட கூட்டிப்போய் காமிச்சு மருந்து எடுத்தோம். டாக்டரும் பயப்பிடும்படியா ஒண்ணுமேயில்ல......... ரொம்பவும் ஸ்றெயின் எடுத்திட்டா இந்த வயதில வர்றதுதான்....... பெட் றெஸ்ட் எடுத்திட்டா எல்லாம் சரியாயிடும் என்றார். வீட்டுக்கு வந்து இரவு பிரெட் ரோஸ்டும், கோழி சு10ப்பும் சாப்பிட்டிட்டு நல்லா பேசிச்சிரிச்சிட்டு; படுத்தவர்தான்........... காலைல எந்திருக்கவேயில்ல.................!. ”

பெரியம்மா வந்து என்னை கட்டிப் பிடிச்சுக்கொண்டு சின்னதாய் ஒரு ஒப்பாரி வைத்தார்.

“ நரசிம்மன் டீக்கடையிலயில்லா ஐயா வந்து வீட்டை விசாரிக்கிறாக.....
....... இது என்னா கதை......... யாரு வீட்டை யாரு விசாரிக்கிறது........? ” என்றபடி என்

கன்னத்தில்; பெரியம்மா செல்லமாய் இடித்தார்.
கல்வீட்டுக்கு யாரோ சீமையிலிருந்து வந்திருக்காக...... செய்தி ஊர் பூராகப் பரவவும் திமு திமு வென்று வீடு பூராவும் ஜனம் முற்றுகையிட்டது. உரிமையுடன் கூடத்திற்கே வந்துவிட்டவர்கள் உறவினர்களென்றும், தூரத்தே நின்றுகொண்டும், தூணைப்பிடித்துக்கொண்டும் நின்றுபார்த்தவர்கள் பண்ணையில் வேலை செய்பவர்களென்றும் தெரிந்துகொண்டேன.;
பெரியம்மாவைத் தவிர்ந்த ஏனையபெண்கள் அனைவருமே வயது வித்தியாசமின்றி கூடத்தைச் சுற்றியிருந்த நாலைந்து அறைகளின் கதவுகளின் பின்னாலிருந்தும் பார்த்தனர்.
“அவோகளை கூட்டி வரேல்லியா...........? ” அசரீரி ஒரு அறையிலிருந்து வந்தது.

“ என்ன கேட்கிறாங்க......? ” பெரியம்மாவைக் கேட்டேன், அவர் மொழிபெயர்த்தார்.

“ .....உம்பொண்டாட்டியை கூட்டி வரல்லியான்னு கேட்கிறாள்...... ”

“ கேட்கிற நீங்க யாருன்னுதான்........ எனக்குத்தெரியலையே............இப்பிடி கொஞ்சம் முன்னாலதான் வாங்களேன் .......... ”
ஆண்கள் சமூகத்துக்கு முன்னால் இலேசில் யாரும் வந்துவிட மாட்டார்கள். உள்ளே தொடர்ந்து மௌனம்.

“ உங்களை யாருன்னு பார்க்காம நான் பதில் சொல்லப்போறதில்ல..............! ”

பெரியம்மா சொன்னா
“ பார்த்தா அவ உனக்கொரு அத்தைமுறை ஆகணும்.......... யேய் ....... வசந்தி வாடி......... சித்த மின்னவாடி...... அவன் கேட்கிறானில்ல......... ”
ஏராளம் வெட்கம் சுமந்து கன்னங்கள் சிவக்கச்சிவக்க சின்னச்சின்ன அடிகள் வைத்து குளுகுளுவென்று என்னை விட இளமையாக ஒரு அத்தை வந்து பத்தடி தூரத்தில் அடுக்கியிருந்த நெல்லுச்சாக்குகளில் ஒன்றின் மூலையைப் பிய்த்துக்கொண்டும், முகத்தை நாற்பத்தைந்து பாகைகள் மேற்காகத் திருப்பி வேலியில் ஓணான் ஏதாவது ஓடுகிறதா என்று ஆய்வது போல் பார்த்துக்கொண்டும் நின்றாள். அவளை மேலும் சங்கடசிரமப் படுத்தாமல் சொன்னேன்:
“அவங்க எஸ்டேட் கொம்பனி ஒண்ணில வேர்க் பண்ணுறாங்க.......... லீவ் எடுப்பது கஸ்டம்........ ஆகட்டும் அடுத்தவாட்டி பார்க்கலாம்......... ” இதைக்கேட்டதும் உள்N;ள ஓடி மறைந்தாள்.
பெரியப்பா சத்தமாகக் கேட்டார்
“....ஏன்டா பொம்மனாட்டிங்களக்கூட உத்தியோகத்துக்கு அனுப்புவாங்களா அங்க.......!”
நாங்கள்; கூடத்தில் பேசிக்கொண்டிருக்க உள்ளே முப்பது நாற்பது பேருக்கான பெருஞ்சமையல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. வெளியே அடுப்புமூட்டி இரண்டு பெரிய தாமிரக்கொப்பரைகளில் வெந்நீர் தயாரானது.

“ ஐயா அந்த மரக்குத்தியில குந்துங்க........ நான் மொண்டு ஊத்தறேன் ” என்றுகொண்டு கீரைக்கொட்டை நிறத்தில் ஒருவன் வந்தான்.

“அதெல்லாம் வேண்டாம் நானே ஊத்திக்கிறேன்.......

“ ...ஐயையோ........ பெரிய ஐயா வைவாரு.......நீங்க ஒக்காந்துக்குங்க.......”

பெரிய பாத்திரமொன்றால் மொண்டுமொண்டு ஊத்தினான். நாலுபேர் குளிக்கப்போதுமான அளவு வெந்நீர.;
குளித்து முடியவும் நான் சாரத்தை உடுத்துக்கொண்டு வந்தேன். பெரியப்பா அலறினார்......
“ ஐயைய்யைய்ய............. இதென்ன லுங்கி கட்டிண்டு......... வேஷ்டி இல்லையா...? அவனுக்கு ஒரு வேஷ்டி கொடுங்கடி...” உத்தரவிட்டார.; அவர்களுக்கு சாரம் கௌரவமான உடையல்ல போலும்!
நாங்கள் சாப்பிடத்தயாராகவும் வெளி;யே போயிருந்த பெரியப்பா மகன் ஒருத்தன் மோட்டார்ச்சைக்கிளில் வந்து இறங்கினான். அவன் பெயர்கூட ஞாபகத்திற்கு வரமறுக்கிறது. பெரியப்பா
“ ஒன்ட அண்ணாடா ” என்று அறிமுகப்படுத்தவும் மரியாதையாய் நமஸ்க்கரித்தான்.
சாப்பாட்டு மேசையில் பெரியப்பா முன்பாக அமர்ந்தபோதுதான் அவருக்காக நான் வாங்கிவந்த துழாnலெ றுயடமநச ரின் ஞாபகம் வந்தது. சு10ட்கேஸில் இருந்ததை எடுத்து வந்து கொடுத்தேன.; வாங்கிக்கொண்டவர்
“ இதை உள்ள வை ”என்று பெரியம்மாவிடம்;
நீட்டினார்.
“ எதுக்குப் பெரியப்பா உள்ளாற வைக்கிறீங்க...... சாப்பிட முதல் ஒரு சிப் எடுக்கலாமே...... நல்லா பசியைக்கிளப்பும்......... வேணுன்னா உங்களுக்கு நான் கொம்பனி தர்றேன்......... ”

எல்லோரும் நான் ஏதோ தகாதவார்த்தை; பேசிவிட்டமாதிரி மூச்சை நிறுத்திவிட்டு என்னை ஆச்சரியத்துடன் நோக்கினர.; ஓஹோ...... என் வண்டவாளத்தை இங்கே இறக்கியிருக்கப்படாதோ?
“ ....நீ...... சும்மா தமாஷ்தானே பண்ணிறாய்......... குடிக்கமாட்டாயில்ல.......” பெரியப்பா நம்பிக்கையுடன் பார்த்தார். இதோ தப்பிக்க வழி ! சாதுர்யமாய் பயன் படுத்தினேன்.
“ ....ஆமா பெரியப்பா தமாஷ்தான்பண்ணினேன்..... ”
அதைக்கேட்ட பின்னரே எல்லோருக்கும் திரும்ப மூச்சு வந்தது.
பதினைந்து இருபது கறிகள் சமைத்திருந்தார்கள.; சாதத்தைப் போட்டுக்கொண்டு முதலில் பொரியல்......பின் கூட்டு.... அதற்குமேலே குழம்பு என்று தனித்தனியே பரிமாறினார்கள். சாப்பிட்டு முடியுந்தறுவாயில் எல்லாமே போதும்.......
“ சொதியை விடுங்கள்...... ” என்றேன்.
“ ...அதென்ன கொதி......? ”
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். சமையற்காரனை பெரியப்பா கேட்டார்
“ ...ஒனக்குந்தெரியாதா...... கொதின்னா என்னன்னு......? ”
வெளிப்பிதுங்கிய அவன் பரிதாப முழிகளைப் பார்த்து நானே விளக்கினேன்.


“... ஆகட்டும்..... நாளைக்கு நிச்சயமா பண்ணித்தர்றேன்........................ இன்னிக்கு ரசம் ஊத்திக்கடா ராஜா.. ” என்று எனக்கு பெரியம்மா ரசம் ஊத்தினார்.

இரவு பத்து மணியாகியும் வீட்டில் கூட்டம் மசமச என்று ஓய்ந்த பாடாயில்லை. அது என் விஜயத்தினால் மாத்திரம் அல்ல தினமும் அப்படித்தான் என்பது பின்னாலேயே தெரிந்தது. என்னதான்; குக்கிராமமாய் இருந்தாலும் மின்சாரவசதி இருந்தது பெரிய சௌகரியமாயிருந்தது.
காலை விடிந்து பார்த்தபோதுதான் நேற்று தெரிந்ததை விடஅந்த வீடு பெரிய பெரிய அறைகளுடன் இரண்டு மடங்கு பிரமாண்டமானதாய் இருந்தது. தாத்தா காலத்தது. சட்டப்படி பார்த்தால் எனக்கும் அதில் ஒரு பங்குண்டு.

சத்யஜித் ரே யின் படமொன்றில்(அந்நியன்?) பல காலம் தேசாந்திரியாய் திரிந்து விட்டு ஊர் திரும்பும் ஒரு பெரியப்பா “ எங்கே அவர்கள் தனியாகவே ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் சொத்துக்களில் பங்கு கேட்டு விடுவாரோ ” என்று எண்ணிஎண்ணி அக்குடும்பம் பூரா அவர் கிளம்பும் வரையில்; அவரைக்கண்டு பயப்படும். அது நினைவுக்கு வரவும் எனக்கு சிரிப்பு வந்தது.
பெரியப்பா வீட்டில் எனக்கு எல்லா உறவுமுறைகளிலும் பெண்கள் இருந்தார்கள், மேலும் அயலில் இருந்தும் நிறைய உறவினர் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் வந்து என்னைப் பார்த்துவிட்டு “ கண்டிப்பா நீங்க ஊருக்குத்திரும்ப மொதல் எங்க வு}10ட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுதான் போகணும்.... ” என்று அழைப்பும் விடுத்தார்கள்.
எந்தப் பெண்ணாயினும் ஆண்கள் எதிரில் நின்று பேசவே பயப்பட்டார்கள். பெண்ணியம், பெண்விடுதலைக்கருத்துக்கள் அந்த ஊருக்கு வரவே பயப்படும். வீட்டுப்பெண்கள் கழுவுதல், துடைத்தல், பெருக்குதல், சமைத்துப்போடுதல், வெற்றிலை மடித்துக்கொடுத்தல் என்பவற்றுடன் நின்றுகொண்டார்கள.;
அக்கிராமத்தில்; இன்னும் கொஞ்சம் வசதியாக நிலபுலன்கள் இருந்தவர்கள் வீடுகளிலும் பெண்கள் ஆண்களுக்குச்சமதையாக வயல்களிலும் தோட்டங்களிலும் உழைத்தார்கள். ஆடுமாடுகளைப் பராமரித்தார்கள்.
ஏழைவீட்டுப்பெண்கள் மற்றவர்கள் வீடுகளிலும் வயல்களிலும் தோப்புக்களிவும் பாடுபட்டார்கள்.
பெரியப்பா பையன் தன் மோட்டார்சைக்கிளில் என்னை ஆலங்குடி , பேராவூரணி, அறந்தாங்கி என்ற ஊர்களெல்லாம் சுற்றிக்காண்பித்தான்.
போகும் வழியெங்கிலும் வீதியின் இருமருங்குகளிருலும் தொடர்ச்சியாக இருபது முப்பது மைல் நீளத்திற்கு புளியமரங்கள் விருட்ஷங்கொண்டிருந்தன. தவிரவும் சில ஊர்களில் முன்னரே நன்கு திட்டமிட்டு நாட்டியிருந்த இயூகலிப்ரஸ் வகை மரங்களை வானுயர ஓங்கி வளர்ந்திருந்தன! பரவலாக எங்கும் குழாய்க்கிணறுகளும் , பம்புசெட்டுகளும் அமைக்கப்பட்டு நல்லமுறையில் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள்.

கிராமங்களில் அதிகாலைப்பொழுதுகள் உண்மையில் அனுபவித்தற்குரியவைதான். இரவு பெய்தபனியில் நனைந்திருந்த புற்கள் நடக்கும்போது கால்களை நனைத்தன. மேகத்துள் இருந்து வெளிப்படுபவர்கள் போல எங்கோ மைல் தொலைவிலிருந்து பெண்கள் குடங்குடமாக தண்ணீர் மொண்டுகொண்டு பனிப்புகாரூடாக வந்துகொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் பெரியப்பாவின் வீட்டுக்கு முன்பாக அவருக்கே சொந்தமான தோட்டத்தில் குழாய்கிணறும் பம்புசெட்டும் இருந்தது.
இருந்தும் இவர்களை ஏன் இவ்வளவு தூரம் நடக்கவைக்க வேணும்?
காலை நல்ல வீட்டுத்தயாரிப்பு நெய்யில் முறுகச்சுட்டுத்தந்த
தோசைகளை உள்வாங்கிவிட்டு ஒரு ஈஸிசேரிலிருந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். எதிலிருந்த வெற்றிலைத்தட்டத்தைப் பார்த்ததும் காதல் பிறந்தது. எழுந்து என் பக்கமாக இழுத்தேன்.

“..... இருங்க புது வெத்தலை கொண்டாரேன்..........! ”
உள்ளிருந்து ஒரு அசரீரி வந்தது. பார்த்தால் என்N;ன ஆச்சர்யம்! வசந்தி ஐந்தாறு புதிய வெத்திலைகளைக் கழுவி எடுத்துக்கொண்டு வந்தாள்.
“ ........அ10ங.;....... வாங்க அத்தேய்......... ” என்றேன.;

அழகாக வெட்கப் பட்டாள். வெத்திலையைத் தட்டத்தில் வைத்துவிட்டுத் திரும்பியவள் ஏதோ நினைத்துக்கொண்டவள்போல் நின்று கேட்டாள்:
.......ய்ய்யேன் அவாகளை....... கூட்டியாரலை.........? ”
“ ...அதுதான் நேத்தே சொன்னேனே...................... அவங்களுக்கு அங்கே வேலை இருக்கென்னு...... ”
“.......சிலோன்பாஷையில சொன்னா நமக்குப்புரியுமா......? அண்ணனுக்கென்னாப்புரியும்............. ” (பெரியப்பாவைத்தான் சொல்றாள்)
“...சிலோன்பாஷையில சொன்னனா..........? ”

“...அஃதான்.....இங்கிலீஸ{ மாதிரி......நிறுத்தாம பேசிட்டு இருந்தீங்களே.......”
“........ அப்ப இரண்டு நாளா நான் கதைச்சதெல்லாம்......ஸாரி பேசிட்டிருந்ததெல்லாம்........ புரியல்லயா...? ”
“ .....சுத்தமா ஒண்ணும் புரியல..... பாப்பா மழலை மாதிரியிருந்திச்சா...... ஏதோ பேசிட்டிருக்கிறீங்களேயென்னு கேட்டிட்டிருந்தோம்...... ”
நானு ஒயாவில ரயில் பிடிச்சதிலிருந்து...... வடகாடு வந்து இறங்கிய காண்டம் வரை பகுதிபகுதியாய் பண்ணிய உபந்நியாசங்கள் எல்லாம் வீண்.
இப்போ எனக்கு வெட்கமாயிருந்தது! வார்த்தைகளை இனி தேர்ந்தே பேசுவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

“.....ஏன் பெரியப்பா...... வீட்டுக்கு முன்னால குழாய்க்கிணறு இருக்கு. சின்னதாய் ஒரு மோட்டரைப் பூட்டி , சின்னதா ஒரு ஓவர்கெட் டாங்கும் கட்டிட்டம்னா....... தண்ணிப்பிரச்ன தீர்ந்திடும்ல.......பாவம் இந்தப்பெண்ணுங்க எம்மாந்தூரம் சுமந்திண்டு வருதுங்க..... ”

அவருக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை.
“ ...நீயொண்ணு.....அவாளுக்கும்.....தின்னது செரிக்கணும்ல...... ”
“ .....பெண்ணுங்க பாவம் பெரியப்பா.....ஒரு கொத்தனாருக்கு சொல்லி அனுப்புங்க..... ”

ஒரு வாரத்திலே டாங் கட்டி முடிந்தது. திருச்சிக்கு ஆளனுப்பி மோட்டர்பம்ப் செற்,
pஎஉ குழாய் என்பன எடுப்பித்து நானே அவற்றை பொருத்திக் கொடுத்தேன.;
வீட்டு முற்றத்திலே குழாயைத் திறக்கவும் சும்மா பழிங்கன்ன நீர் அருவியாய் கொட்டியது! பெண்களுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. அவர்களுக்கெல்லாம் நான் ஒரு தேவகுமாரனைப்போல் தென்பட்டேன். பாயாசம், லட்டு, சீடை, முறுக்கு, கொழுக்கட்டை என்றெல்லாம் பண்ணித்தந்து தங்கள் மகிழ்ச்சியைக் காட்டினார்கள்.
பஸ் கொம்பனி மாமாவும் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்தார்.

“ அடடடா........ இப்படி ஒரு பம்பு பூட்டிக்கலாமென்று இதுவரையில நம்ப மண்டையில தோணாமப்போச்சே.........! ” அங்கலாய்த்தார். அவரோடு ஒட்டிக்கொண்டு கொத்தவரங்காய் ஒடிசலாய் வடிவேலு போலிருந்த ஒருவர் சொன்னார்:

“........நமக்கு மின்னயே தெரியும் பம்பு ப10ட்டிக்கிட்டா தண்ணி வருமென்னு........ பெரியவாளுக்கு நாம புத்திஸொல்ற மாதிரி இருக்கப்படாதேயென்னு இருந்துப்புட்டேன்........ஹி...ஹி...ஹி..... தம்பிக்கு என்னையை நெனவிருக்கில்லா.......? ”

“ இல்லையே...... நினைவில்லை.... ”
குற்றஞ்சுமத்தும் தொனியில் நிலத்தைப்பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டு கேட்டார்:

“ அதுக்குள்ளாக மறந்துபுட்டீக இல்லை.........? ”


“ இல்லையே..........இப்போதானே; மொதல் தடவையே வந்திருக்கேன்....... உங்களைய பார்க்கிறேன்.......... ”


“ ....நல்லாய்த்தான்...தமாஷ{பண்;ணுறீங்க......... ஒங்கள எத்தனவாட்டி உப்புச் சுமந்திருப்பேன்...? ”


பெங்க@ரில் மருத்துவம் படித்துவிட்டு தனியார் ஆஸ்பத்தரியொன்றில் பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்த என் இன்னொரு சித்தப்பா மகள் மலர்மகள் நான் வந்திருக்கிறேன் என்று அறிந்து ஒரு கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்தாள்.

தொழில் தவிர அவளுக்கு கதை, கவிதை, ஓவியம், ஜென்பௌத்தம், அத்வைதம், உபநிஷதம், ஸ்மிருதிகள், தத்துவம் என்று உலகத்து விடயங்கள் எல்லாவற்றிலும் ஆர்வமிருந்தது.மணிக்கணக்கில் உட்காரந்து பேசுவோம.; விவாதிப்போம். கொஞ்ச நாட்கள் கிராமத்தில் பொழுது போக்க நல்லதுணையாக இருந்தாள். பகல் வேளைகளில் இருவரும் சேர்ந்தே ஊர் முழுவதும் சுற்றினோம். ஓவியங்கள் - சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற சிற்றன்னவாசல், சமணர்குகை எல்லாம் போய்ப்பார்த்தோம் ஆண்கள் சமூகத்தில் பெண்களையே அழைத்து பேசாத, அவர்களைப் பொருட்டாக மதித்து
அவர்கள் அபிப்பிராயங்களையே காது கொடுத்துக் கேளாத அக்கிராமத்தின் பெண்களுக்கு நான் மலர்மகளுடன்; உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பது பேராச்சர்யமாயிருந்தந்தது!

சும்மா சும்மா கதவிடுக்குகளிலிருந்தும், நடைக்கு அப்பாலிருந்தும் என்னை வேடிக்கை பார்த்த பெண்களிடமும் அப்பப்போ வேண்டுமென்றே ஏதாவது பேச்சுக்கொடுப்பேன். நாட்கள் கழிய மெல்ல மெல்ல தம் படுதாகைகளை நீக்கிக்கொண்டு என்னை நோக்கி வந்தனர்.
அப்படி வந்தவர்களை இன்னும் நெருக்கிவைத்த நிகழ்ச்சி ஒரு காலை நடந்தது.

நானும் மலர்மகளும் அரட்டை அடித்தபடியே இட்லி சாப்பிட்டுவிட்டு அவள் வெற்றிலைபோடுவதால் உடல், பல் நலத்திற்கு விளையும் தீங்குகள் பற்றி அடித்த விரிவுரையைக்கேட்டுக்கொண்டே நான் வெற்றிலைத் தட்டத்தில் நல்ல சீவல்ளைத் தேடிக் n;காண்டிருக்க வெளிமுன்றலில் இரண்டு துணிவியாபாரிகள் தலையில் துணிப் பொட்டளிகளுடன் தோன்றினர்.

“ஐயா......... நல்ல சின்னாளம் , காஞ்சீ;புரப்;பட்டு எல்லாமிருக்கு எடுக்கிறீகளா............?

“ ஐயா புடவையெல்லாம் உடுத்திறதில்லை..... அதெல்லாம் பொண்ணுங்க சமாச்சாரம்........ கூப்பிடு மலர் பெரியம்மாவை... ”
புடவையென்றதும்.......... இராணித்தேனீயும் கூட்டின் மற்றக் கும்பலும் போல வீட்டிலிருந்த முழுப்பெண்களும் பெரியம்மாவைத் தொடர்ந்து வேடிக்கை பார்க்க வந்தனர்.
என்னதான் நினைத்துக்கொண்டாவோ சொன்னா: “ ஆம்புளைக அசலூரு போயிருக்காக....... போயிட்டு இன்னொருவாட்டி வாங்க பார்க்கலாம்.......! ”
வியாபாரிகள் முகம் இருண்டு இறுகியதைக் கண்டுகொள்ளாமலே கேட்டா:
“ காப்பியோ மோரோ குடிக்கிறீயளா......? ”
“ ஏன் பெரியம்மா....என்னையைப்பார்த்தா ஆம்பிளை மாதிரித்தெரியல்லையா.....?” என்றேன்.
“ அதுக்கில்ல..... புடவை துணியெல்லாம் பெரியப்பாவை கலந்துக்காம எடுத்தா கோச்சுக்குவார்.... ”
“ சரி..... இன்னிக்கு நானிருக்கேன்.... பெரியப்பா கோச்சுக்க மாட்டாராம்......... இறக்குங்கப்பா மூடைங்கள.....” என்றேன்.
பெரியம்மா இடைமறித்தார்: “...... கொஞ்சம் பொறு ராஜா.... பணமெல்லாம் பெரியப்பா கைலதானிருக்கு.........ஒண்ணும் அவசரப்படாதப்பா...... ”
“ அதுக்கெல்லாம் நானிருக்கேன்றனில்ல............நீங்க ஒண்ணும் பேசக்கூடாது.....இப்போ செலக்ட் பண்றது மட்டுந்தான் ஒங்க வேலை..... ”

அவ மறுக்கமறுக்க முன்கட்டுத் திண்ணையில் நொடியில் கடைவிரிக்கப்பட்டது.
“ ........நல்லதாய் பட்டு என்ன இருக்கு காட்டுங்க..... ” என்றாள் மலர்மகள்.
எல்லாச்சேலைகளுமே நல்ல இறுக்கமாய் இழைகள் ஓடப்பட்டிருக்க ஜரிகைகளிலும் ஒரு தரமிருக்கவே செய்தது. ஒரு பேட்டியில் பட்டு நெசவாளியொருவர் எப்படி உண்மையான காஞ்சீபுரம் சேலையை இனங்காணுவது என்று விளக்கியிருந்தது ஞாபகம் வந்தது.
“ ..காஞ்சீபுரம் பட்ல விஷேஷம் என்னன்னா...... சேலையோடு சேர்த்தே நாங்க முகதலையையும் நெசவு பண்றதில்ல....... முகதலையை தனியே நெசவு பண்ணிட்டு பினனாலதான் உடலோட சேர்த்து இழைப்போம்.. ”
வியாபாரிகள் எடுத்து அவள் பக்கமாய் காஞ்சீபுரம் என்று நீட்டியவைகளை ஆராய்ந்து பார்த்தேன். முகதலைப்பகுதி தனியாக இழைக்கப்பட்டே இருந்தது.
“ பெரியம்மா ஒங்களுக்கு பிடித்த பட்டுச்சேலை ஒண்ணு எடுத்துக்குங்க......... ”
ஏராளம் தயக்கத்தின் பின் ஒரு சேலை எடுத்தார்.
“ மலர்மகள் நீயுமொண்ணு எடுத்துக்கோ....... ழே கரளளiபெ pடநயளந ”
அழகான காஞ்சீபுரமொன்றைத் தேர்ந்தெடுத்தாள்.
“ சரி இன்னொரு பட்டு இதேமாதிரி செலக்ட் பண்றியாடா.... ”
“ யாரு..... அண்ணிக்குத்தானே.....? போட்டோவில பாத்தது....... என்னைவிட சிவப்பாயிருப்பாங்கல்ல? ”
“ அண்ணிக்கில்ல... இவ சாந்திக்கு ”
எல்லாருமே “ ............... ங்ங்ங்...... ” என்று ஏககாலத்தில் வாயைப்பிளந்தனர். நான் விளக்கினேன்.
“ மத்தப்பெண்டுகள் எல்லாமே சும்மா எட்டவெட்ட நின்று என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க அவதான் நேரடியாய் எங்கிட்ட “ வீட்டுக்காரியை ஏங்கூட்டி வரல்லேன்னு........? ” துணிச்சலாய் கேட்டவ. இந்த வடகாட்டில பெண்ணியம் நோக்கி முதல் அடியை எடுத்துவைத்த அந்த புரட்சிப்பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி...... என் எளிய பரிசு........! சரி அவவே தனக்குப்பிடிச்சத எடுத்துக்கட்டும்.......... எங்க கூப்டு அவளை! ”
அதிர்ச்சியிலிருந்து விடுபடாதவள் “ வாடி மின்னே.....! ” என்று பெரியம்மா அதட்;டவும் புதுமணப்பெண் மாதிரி சின்னச் சின்ன அடிகளாக எடுத்து வைத்து வந்து பெரியம்மாவின் முகத்தையே பார்த்துத் தயங்கிக்கொண்டு; நின்றாள்.
“ உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்க. ” என்றேன். சேலை அடுக்குக்குள் ஏதோ கொடுக்கன் இருப்பதைப்போல கையை வைக்கப் பயந்து கொண்டு நின்றாள். மலர்மகள் அவளுக்கு மாட்சான சில சேலைகளை எடுத்துக்காட்டவும் அதிலொன்றைச் சடுதியில் ஈஸிக்கொண்டு உள்ளே மறைந்தாள.;

“ இதுக்கு அடுத்த ரகத்தில வேற என்னப்பா இருக்கு...? ”
“ ஏராளம்....இருக்குசார்.....கோடம்பாக்கம்...... கண்டாங்கி..... கோயம்புத்தூர்......... ” என்று அடுக்கிக் கொண்டே எடுத்துப்போட்டான்.
“ சரி.....இன்னும் எத்தனை பொண்ணுங்க பாக்கியிருக்கு? ”
மலர்மகள் தலைகள எண்ணிவிட்டு சொன்னாள் “ ஒம்பது......! ”
“ சரி.....நீங்க எல்லாரும் இதுல யாருக்கு எது பிடிச்சிருக்கோ ..... ஆளுக்கொண்ணு எடுத்துக்கங்க........ ”
“ பாத்து எடுங்கடி........ ரொம்பவெல அதிகமெலாம் வாணாம்........ ”என்று பெரியம்மா பச்சைக்கொடியைச் சாய்க்கவும்.....
ஒருவiர்யொருவர் முண்டியடித்துக்கொண்டு சேலைகளை எடுத்தார்கள்.

“லுழர யசந வழழ புநநெசழரள......!” என்றாள் மலர்மகள்.

சேலைகள் அன்பளிப்பு செய்ததும் , மலர்மகள் கூட இருந்ததும் பெண்களுக்கும் எனக்குமான இடைவெளியை நீக்கி நெருக்கத்தை அதிகரித்துவிட்டிருந்தது!
விடுப்பு முடிவடையவும் மலர்மகள் பெங்க@ர் திரும்பிவிட்டாள். இப்போ பெண்கள் எல்லாம் என்னோடு அரட்டைக்கச்சேரிகள் வைக்கவே ஆரம்பித்துவிட்டார்கள். தினமும் மாலைவேளைகளில் ஒரு மாதர்மன்றமே கூடிவிடும்.

மேற்கு நாடுகளில் பெண்கள் என்னவென்னவெல்லாம் சாதனைகள் பண்ணுகிறார்கள் என்றெல்லாம் எடுத்துக்கூறுவேன.; பெண்களின் வேலைச்சுமைகளைக் குறைக்க என்னவென்ன நவீன கண்டுபிடிப்புகள் எல்லாம் வந்துள்ளன...... மைக்கிரோ வேவ் அடுப்புகள், வாஷிங் மெஷின்கள், வாக்கும் கிளீனர்கள் என்று விபரித்தேன்.
“ இதெல்லாம் இந்தப்பூமியில்தானா.........? ” என்பது போன்ற அதிசயத்துடன் அங்கார்ந்து கேட்பார்கள். சொந்த மனைவி உடனிருக்க வீட்டிலேயே வேறுபெண்களைக்கூட்டிக் கொட்டமடித்துக் கொண்டிருந்தவனின் லிங்கத்தை வெட்டி எறிந்த பெண்ணின் துணிச்சல் கதையைச் சொல்லுவதா விடுவதா என்று என்னுள் போராட்டமாக இருந்தது.

நானும் ஊர் திரும்ப இன்னும் நாலைந்து நாட்களேயிருக்க....... ஒரு நாள் வீட்டில் எல்லாருமே இருக்கையில் பெரியப்பா என்னிடம் கேட்டார்:

“ ....... ஆமா.... உனக்கு எத்தனை பசங்கள்..........? ”

முதலில் என்னைக் கலாட்டாதான் பண்ணுகிறார் என்று நினைத்துச் சும்மா சிரித்துக்கொண்டிருந்தேன். பின்பு மீண்டுந்திருப்பிக்;கேட்டார்.

“ இல்லை பெரியப்பா நமக்கின்னும் கிடைக்கல............ ”

“ உண்மையாவா...? ”

“ நிஜமாத்தான் பெரியப்பா........ ”

“ அப்ப நீ பேசாம வசந்தியைக்கட்டு! ”
நான் சிரித்தேன்.
“ அங்க அவ இருக்கிறா இல்லை....? ”

“ அவ அங்க இருக்கட்டும்...... இவள இங்க கட்டு;........... இந்த வருஷமே பேரனைப்பார்த்திடறேன்....... ”
“ பாவம்.....அவ ரொம்ப சின்னப்பொண்ணு...... பெரியப்பா........ ”

“ ....என்னாது ...சின்னதும்.... பெரிசும்னு...பேசிக்கிட்டு.....ஆணெண்டால் விருட்ஷம்பாங்க.... சும்மா உம்னு சொல்லு......ஜாம்னு முடிச்சுரலாம்.....
- ஏதோ கல்யாணமே முடிந்துவிட்ட மாதிரி குதூகலித்தார.;
உள்ளே வசந்தியை யாரோ கிண்டல் பண்ணுவது ஸ்படிகமாக காதிலே விழுந்தது.
“ ......அப்போ ஒனக்கு வூட்டுவேலை மாத்ரந்தானிருக்கும்...... கொடுத்து வைச்சவடி நீ........”
எனக்குள் நான் நெளிந்துகொண்டிருப்பதைப் புரிவார் எவருமிலர்.
பிறகு தினமும் இதேபேச்சை எடுத்து என்னை வற்புறுத்தத்தொடங்கி விட்டார்.

ஏதோ நல்லகாலம்...... “ நம்ம கேஸ் கண்டியில் மஜிஸ்திரேட்கோர்ட்;டில் இருக்கிறது, எப்பிடியும் இரண்டு மாதத்தில் டிவோர்ஸ் கிடைத்துவிடும் ” என்கிற விஷயத்தை முதலிலேயே உளறி இருந்திருப்பேனாயின் நான் அங்கிருந்து மீண்டு வந்திருக்கவேமுடியாது.

பெரியம்மா எங்கள் அரட்டை அரங்கப்பக்கமாய் வரும் போதெல்லாம் பொத்தாம் பொதுவில் கேட்பா: “........அடி யென்னாங்கடி சொல்லுறாக மவ.....? என்னமும் யோசிக்கிறாகளாமா...? ”

மறு நாள் காலை எழுந்து உட்கார்ந்திருக்கிறேன். நேரே என்னிடம் வசந்தி வாறாள்.

“ எதுக்கு மாமா அம்மாந்தூரத்ல போயி இருக்கீங்க......? ”

அவள் மந்திரக்குரலில் மாமா என்றதும் என்னுள் பன்னீர்த்திவலைகள் தூவப்பட மனசு சற்றே ஆடித்தான் போகிறது.

“ ஏதோ அப்பா உத்தியோகம்னு போனாரா...... நாங்களும் அங்கேயே பொறந்திட்டோம்...... ”

“ சரி.....சரி எந்திருங்க....எந்திருங்க.....குளிக்க வெந்நீர் போட்டிட்டேன்.... ஆறிடப்போவுது......... நானே தண்ணியை மொண்டு ஊத்தவா..? ”

இது வெறும் வெகுளித்தனத்தாலா......இல்லை யாரும் சொல்லிக்கொடுத்தாங்களா....
புரியவில்லை.
“ ஐயையைய்ய..... வேண்டாந்தாயீ...... யாரும் என் பக்கத்திலே நின்னாலே என்னால குளிக்கமுடியாதும்மா..... வெந்நீர் போட்டதுக்கு ரொம்பவும் நன்றி ....... நானே குளிச்சுக்கறேன்.... ”

குளித்து முடிந்ததும் அவள் என்னருகே இன்னொருமுறை வர நேர்ந்த போது கேட்டேன்:

“ வசந்தி ஒனக்கு இப்போ எத்தனை வயசு.......? ”

“ இருவத்திமூணு......”

“ எனக்கு...... நாற்பத்துமூணு தெரியுமோ.... பழைய ஆளுங்கதான் விபரமில்லாம பேசறாங்கன்னா.......பெண்ணியம் பெண்விடுதலை பத்திப்பேசற நானே இதுபோல முட்டாள்த்தனம் எல்லாம் பண்ணலாமா...? ”

“ ஒங்களை ஆரம்பத்திலயும் புரியல மாமா......... இப்ப புறப்படறப்பவும் புரியலை.........எப்படீன்னாலும் நீங்க படிச்சவங்க...... சரியாய்த்தானே செய்வீங்க...”

பின்பெல்லாம் வசந்தியின் கண்களை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தேன்.

ஊர் வந்ததும் முதற்காரியமாய் ஆங்காங்கே தலையில் வெள்ளியாய் நீட்டிக்கொண்டு நின்றவற்றை கறுப்பாக்குவதற்கு வாங்கிய முழுச் சாயசாதனங்களையும் குப்பையில் சேர்த்தேன்.

மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது.

- இனியும் சூல் கொள் -

23 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு மலர். செப்டம்பர்.1997.
30. 03. 1997 பெர்லின். ..................