Dienstag, Oktober 21, 2003

31.10.2003 இன்று எமது அன்பு அன்னை
திருமதி. பொன்னையா இராசம்மா அவர்களின்
முதலாவது நினைவு தினமாகும்.
பலநாள் மனதில் நின்றகேள்வி இன்று அவர்தம்
அஞ்சலிக் கவிதையாகிறது.நின் தேகச்சூடு
எம்மீது தணியாது
காலநதி நீளம்
காத்த கவின்பேடே

நீர் கொள்ள(ப்) போனாலும்
யாவர்க்கும் நின்று
ஓராறுதரம் சொன்ன
நிழற் தருவே

நான் பொருள்தேடும்
உலகோடு தடுமாறி
ஓய்ந்துன் மடிதேடி
வருகையிலே
மலர்ந்து
" வாடா " வென்றேனும்
இனிதாக ஓர் வார்த்தை
கூறாமல்
பறந்ததும் ஏன் கூறு ?

Montag, Oktober 13, 2003

உபச்சாரம்.strong>

பொ.கருணாகரமூர்த்தி .பெர்லின்
(ஜெர்மனி -பூவரசு-இதழ் தன் ஏழாவது ஆண்டுநிறைவையொட்டி நடாத்திய சிறுகதைப்போட்டியில்1998 முதற்பரிசை பெற்றது இக்கதை.)

அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு
“உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு......... மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்....... இந்த மாதம் நீ; வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்............ ”என்றான்.

“ஓ........ஜா.....!”

மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான.; இரவுமுழுதும் மனைவி லதாவுடன் பிரான்ஸ{க்குப் போவதா, இல்லை சுவிஸ{க்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. பிரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம்.
கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும,; அண்ணனின் குழந்தை மயூரனுக்கு வாங்கிய ஏராளம் பரிசுப்பொருட்களாலும் டிக்கி நிரம்பி வழியவழி;ய அவர்களது கார் அஷ்டமி,நவமி, மரணயோகம், கரிநாள் தவிர்த்த ஓர் நல்லோரையில் ஷ_ரிச் நோக்கிக் கோலாகலமாய் புறப்பட்டது.

எட்டு மணிநேரச்சவாரிக்களைப்போடு ஷ_ரிச்சில் அண்ணன் வீட்டுவாசலை அடைந்தும் உள்ளே அடிஎடுத்து வைக்க மேலும் நாலு மணிநேரம் நற்றவமியற்ற வேண்டியிருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போனதாக ஏப்றன் கட்டிக்கொண்டு கண்ணாடி ஜன்னல்கதவுகளைத் துடைத்துக்கொண்டு நின்ற அயல்வீட்டுக்காரி செப்பினாள்.

“அப்போ அவர்கள் பேபி....? ”

“எங்காவது ஹோர்ட்டில் (குழந்தைகள் பராமரிப்பகம்) விட்டிருக்கலாம்!.”
இவர்கள் நிலமையை அறிந்தும் சுவிஸ்க்காரி அந்நியரை அதுவும் கறுத்த வெளிநாட்டுக்காரரை தன் வீட்டுக்குள் அழைத்து உட்காருங்கோ என்று உபசரித்துவிடுவாளா என்ன.......
தன்பாட்டுக்குக் கதவைச்சாத்திக்கொண்டு உள்ளே போனாள்.

அண்ணியும் வேலைக்குப்போய்விடுவாள்...... பகலில் யாருமிருக்கமாட்டோம்
என்பதை முதலி;லேயே சொல்லித்தொலைத்திருந்தால்....... இரவு வந்துசேரும்படியாகப் புறப்பட்டிருக்கலாம். இப்படிக் கைக்குழந்தையுடன் தெருத்தூங்கவேண்டியிருந்திராது. “சுவிஸ{க்குவருகிறோம்.” என்று ரெலிபோன் பண்ணியபோதே அண்ணன் உள்ளுக்கிழுத்தது ஏனென்று இப்N;பாதான் லதாவுக்கு மெல்ல ஓடி வெளித்தது. எனினும் ராகுலனை மேலும் குழப்பவேண்டாமேயென்று சமர்த்தாயிருந்தாள்.
ராகுலன் லதாவைக் கல்யாணம் கட்டுவதற்கு முன் அவனை ஷ_ரிச் ரெயில்நிலையத்துக்கே வந்து காத்துக்கிடந்து வார்த்தைக்கு வார்த்தை “அத்தான்.........அத்தான்.........” என்று அன்பொழுக அழைத்து நிலபாவாடை விரிக்காத குறையாக அழைத்துப்போனதும் இN;த மைத்துனன்தான்.

பயணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்ததில் முதலிரண்டுநாளும் இருவருக்குமே சரியான தூக்கமில்லை. பயணத்தின்போது உட்கார்ந்தது போதாதென்று மேலும் தொடர்ந்து காரில் உட்கார்ந்திருக்;க இருக்க முதுகுத்தண்டுவடம் ஜிவ்ஜிவ்வென்றுவலித்தது.
கொஞ்சம் நடந்து திரிந்தால் நல்லாயிருக்கும் போலிருந்தது. ஆனாலும் களைப்பும் அசதியும் அனுமதிப்பதாயில்லை.
குளிர்வேறு. காரைச்சூடுபண்ண அடிக்கடி ஸ்ரார்ட் பண்ணவேண்டியிருந்தது.
உடம்பைக்கொண்டுபோய் கட்டிலில் எப்போதான் எறிவோம் என்றிருந்தது.
அவர்கள் எப்போதுதான் வருவார்கள்.......... இது எப்போசாத்தியமாகும் என்று தெரியாமல் வெட்டிக்கு வீதியில் காத்திருப்பது இரத்தஅழுத்தத்தை உச்சத்திற்குக்கொண்டுபோக குழந்தைவேறு பசியெடுத்து அலறத்தொடங்கினாள். அவளுக்குப் பால் கரைக்க வேண்டிய வெந்நீர் வேறு தீர்ந்துவிட்டிருந்தது.
ஒரு ரெஸ்ரோறன்டைத் தேடிப்போய் கேட்;டபோது அவன் உள்ளே பைப்பில் பிடித்திருக்கவேணும் “ வெந்நீர் ” என்று சொல்லிக்கொண்டு வந்து கொடுத்தான். அச்சூட்டில் மா கட்டிபட்டுக் கரைய மறுத்தது.
“ வேறேதாவது கடையில கேட்டுப்பார்ப்பமே..... ” என்று காரைக்கிளம்பவும் ஒருவாறாக விருந்தோம்புவார் காரும் வந்து லான்ட் பண்ணியது. ”

இவ்வளவு நேரம் தெருவில் காக்கவைத்ததிற்காக ஒரு “சொறி”யாவது சொல்லவேணுமே...... ஊஹ_ம்! “ இத்தனை மணிக்கு வந்துசேர்வோம் என்று உறுதியாக முன்பே சொல்லாதது உங்களது தப்புத்தான் ” என்றார்கள்.
அதையிட்டு ஒருவிவாதம் நடத்த அவர்களிடம் மேலும் சக்தியில்லை. மௌனம் காத்தனர்.
வழியில் சாப்பிடுவதற்காகப் பண்ணிக் கொண்டுவந்த சான்ட்விச்சுகள் நிறையவே எஞ்சிக்கிடந்தன. அவை எல்லோருக்கும் இரவுச்சாப்பாட்டிற்குப் போதுமானதாக இருந்தன.

லதா எடுத்துச்சென்ற விளையாட்டுச்சாமான்கள், உடுப்புகள், பட்சணங்கள் அண்ணாவின் குழந்தை மயூரனை கவர்ந்துவிட அவளுடன் ஏதோ பலகாலம் பழகியவன் ‘அத்தே அத்தே’ என்று இழைந்தான்.

மறுநாள் காலை அண்ணன் வேலைக்கப்புறப்பட தானும் வெளிக்கிட்டுக்கொண்டு வந்த அண்ணியார் சுகுணா லதாவுக்குச் சொன்னாள்:
“ நானும் ஓரிடத்தை போகவேணும்...... வரக்கொஞ்சம் செல்லும் செல்லும். ”
ஓரிடத்துக்கு என்றால்...... “அதைப்பற்றி மேலே கேளாதே” என்பதுதான் அதற்குரிய உளவியல். இது லதா அறியாததா?
அவர்கள் குழந்தை மயூரனையும் இழுத்து வைத்துச் சட்டையை அணிவிக்கையில் மட்டும் லதா சொன்னாள்:
“மயூரன் நிற்கட்டும் அண்ணி நான் பார்த்துக் கொள்ளமாட்டனே...... ”
“ வேண்டாம் லதா அவன் பயங்கரக்குழப்படிவிடுவன், ஒருவருக்கும் அடங்கான்......... ”
அதற்கு முன்N;னபின்N;ன ஒருநாளும் முகம் பார்த்திராமலேயே லதாவைக்கண்டதிலிருந்து அவன் குழைஞ்சு அவளுடன் சேர்ந்தமாதிரியைப் பார்க்க அப்படி அது அடம்பிடிக்கிற குழந்தைமாதிரியே தெரியவில்லை. இயல்பில் குழந்தைகளில் அதீதபிரியமுள்ள லதாவுக்கு மொழுமொழுவென்றிருந்த அவனுடன் விளையாடவேணும்போலவும் ஆசையாயிருந்தது. இருந்தும் அவனையும் அவர்கள் வெளியே இழுத்துக்கொண்டு போவதன் சூத்திரம் முழுவதும் அறியாமல் வற்புறுத்திக்கேட்கவும் தயங்கினாள்.

அவர்கள் புறப்பட்டுப் போனபின்பு குசினியுள் போய்ப்பார்த்தார்கள். நார்முடையொன்றுள் கொஞ்சம் முளைவிட்ட உருளைக்கிழங்கு, புருவமெனக் குனித்தும் வாடியும்போன ஒரு கூர்க்கன் (கெக்கரிக்காய்), ஒரு பிளாஸ்டிக் பைக்குள்(எழுதித்தான் எடுப்பித்தார்களோ?) கோழிகூடக் கொறிக்கத் தயங்கும் ஒரு சுண்டு குறுணல்அரிசி தவிர வெளியாய் வேறொரு சமைக்கக்கூடிய வஸ்த்தும் இருப்பதற்கான தடயங்கள் ஒன்றும் புலப்படவில்லை.
பிறிட்ஜைத் திறந்து பார்த்தார்கள். யார்சாபமோ ஐஸ{டன் ஐஸாய் கல்லாய்ச் சமைந்துபோய் மல்லாக்கக் கிடந்தது ஒரு கோழி (அதுவும் கிறில் பண்ணுவதற்கான மலிவுப்பதிப்பு ). அதையங்கிருந்து பெயர்த்தெடுக்கக்கூடிய ஈட்டியோ, வேலன்ன ஒருபோர்க்கருவியோ, கடப்பாரையோ தென்படுகிறதா என்று தேடினார்கள்.
திடீரென கி.செ.துரையின் கதையொன்றில் சிவபதமடைந்த தேதி தெரியாத கோழியைச்சாப்பிட்ட ஒருவர் வயிற்றுள் கடுஞ்சமர்மூண்டு கலக்கி அவதிப்படுத்திய சம்பவம் ஞாபகம் வரவும்.........
அந்த எண்ணத்தை அதிலேயே போட்டுவிட்டு ஆபைசழள ஆயசமவ தேடிப்போய் ஆட்டிறைச்சி மற்றும் சாமான்கள் வாங்கிவந்து சமைத்துச் சாப்பிட்டார்கள்.
மாலையானதும் அண்ணன்குடும்பம் வந்து சேர்ந்தது. சாப்பாடானதும் அண்ணன் செற்றிக்குள் சாய்கோணத்தில் இருந்துகொண்டு ராகுலனிடம் ஜெர்மனியில் தனிநபர் வருமானம், சேமிப்பு சாத்தியஅசாத்தியங்கள், நடப்பு வட்டிவீதங்கள், மற்றும் அத்யாவசிய நுகர்ச்சிப்பண்டங்களின் விலைதலைகள் பற்றி உசாவினார். பின்னொரு கோழித்தூக்கம் போட்டார். அலாம் வைத்தது போல் ஏழு மணிக்கு எழும்பி பாத்றூம் போனார். பின் ஜாக்கெட்டை மாட்டினார்.
“எனக்கு ஒரு அலுவலிருக்கு வெளியில.” என்று வெளியேறியவர்தான் எல்லாரும் படுக்கைக்குப்போனதன் மேல் பதினொருமணிக்கு வந்து பூனைமாதிரி ஓசைப்படாமல் மாடியேறிப் போனார்.

மறுநாளும் இதே செயன்முறைகள் நேரசூசிகை போட்டதுபோல் நடந்தேறின. ஆனால் அண்ணியார் சுகுணாமட்டும் கொஞ்சம் மாற்றி தான் தையல்கிளாஸ{க்குப் போவதாகச் சொன்னாள்.

மூன்றாம்நாள் காலை புறப்படமுதல் அண்ணியார் லதாவிடம் சொன்னாள் : “ மயூரனை கின்டர் ஹோர்ட் ஒன்றில கொஞ்சநாளாய் விடுகிறனாங்கள்........ புதுசில தனிய நிக்கிறானில்ல அழுகிறான்....... அதுதான் நானும் போய்க்கூட நிக்கிறனான்........தனிய நிற்கப்பழகிட்டனென்றால் நானுமெங்கையென்டாலும் பார்ட் டைம் ஜொப்புக்குப் போகலாமென்றார் இவர்......... அவரும் தனியாளாய் அடிச்சு என்னத்தைத்தான் மிச்சம் பிடிக்கிறது இந்த நாட்டில இருக்கிற விலைவாசியி;ல...... ”

அன்று மாலை அவர்கள் வந்திறங்கக்கூடிய நேரந்தான்....... ரெலிபோன் அடிக்கிறது. எடுப்பதா விடுவதா என்று லதா குழம்பவும்..... மீண்டும் மீண்டும் மீண்டும் அடிக்கிறது.
ராகுலன் சொன்னான் “போய் எடும் சிலவேளை கொண்ணனாய்கூட இருக்கலாம் ”

போய் எடுத்தால் மறுமுனையில்.........
“குறுய்ஸ் கொட்..... நான் சூசாரா.... மன்னிக்கவேணும் அப்போது உன்னிடம் உறுதிப்படுத்திக்கொள்ள மறந்துவிட்டேன்..........துகுணா........ நீ முன்னர் ஒத்துக்கொண்டபடி அடுத்த வார இறுதிநாட்கள் இரண்டும் என்னுடைய ஷிப்ட் வேலையையும் சேர்த்துச்செய்வாய்தானே....?”
(வியட்னாமோ தாய்லாந்துக்காரி....... வார்த்தைகளை நசித்தும் சப்பியும் மழலை பேசினாள்.)
“மன்னிக்கவேணும் நான் சுகுணாவல்ல..... அவர் வீட்டுவிருந்தாளி. இது சுகுணா வாறநேரந்தான் நீங்கள் அவர் வந்த பிறகு பேசுவது நல்லது. குறுய்ஸ் கொட்.....! ”

சுகுணா அண்ணனைத் திருமணம் செய்தாலோ செய்யாமலிருந்தாலோ நெருங்கிய உறவுக்காரியாதலால் தங்களை ஏகமாய் வரவேற்பாள், உபசரிப்பாள், வாஞ்சையாய் பாந்தமாய் இருப்பாள், கதைப்பாளென்று எண்ணி எதிர்பார்த்து வந்த லதாவுக்கு அவள் ஏதோ கடன்காசைக் கேட்கப் போயிருக்கிறவர்களிடம் பேசுவதுமாதிரி; முகங்கொடுக்காமல் கதைக்கிறதும் திருப்பிறதும் பெரும் ஏமாற்றமாயும் அவமதிப்பாயுமிருந்தது, ஆனாலும் ராகுலனிடம் வெளியாகச் சொல்லமுடியவில்லை.

வெளியில் போயிருந்த அவர்கள் வீடு திரும்பவும் லதா அண்ணியாரிடம் சொன்னாள்:
“சூ....சாரா என்று யாரோ போன் எடுத்தார்கள் ”
திடீரென்று அவள் முகம் கலவரமாகியது. மறைத்துக்கொண்டு ஆனால் குரலில் சற்றுப்பதட்டத்துடன் கேட்டாள்:
“எ...எ..எ.என்னவாம்..........? ”
எனக்கு அவள் பேசிய சுவிஸ்ஜெர்மன் ஒண்டும் விளங்கேல்லை...... எதுக்கும் “நீங்கள் வந்தாப்போல எடுங்கோ என்றன்...வைச்சிட்டாள்”; என்ற பிறகுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
உதட்டை வலிந்து மலர்த்தி எமது தலைவி சந்திரிகாவைப் போலொரு சிரிப்பை உதிர்த்துவிட்டு“ என்னோட தையல்கிளாஸ{க்கு வாற ஒரு தாய்லாந்துப்பிள்ளை..”என்றாள்.
நாலாம்நாள் மாலை அண்ணன் சாப்பிட்டபின்னால் பான்பராக் போட்டுக்கொண்டு கோழித்தூக்கம் போடமுதல் திருவாய்மலர்ந்தார். “ஜெர்மனியைப்போல இல்லை..... இஞ்சை........ கண்டகண்டபாட்டுக்கு ஆக்களைப் பிடிச்சு அனுப்பிறாங்கள்....... நீங்களும் அறிஞ்சிருப்பியள்தானே............. எந்த நேரமும் விசாக்காட்டைப் பிடுங்கிக்கொண்டு ஊருக்கேத்திற நிலமை எங்களுக்கும் வரலாம்........ முந்தி உளைச்சதுகளை அப்பிடியே வீட்டுக்குக்குடுத்தன்........ அடுத்தவளுக்குச் சீதனங்கொடுத்தன்........ லதாவைக்கூப்பிட்டன் கையிருப்பு காலி. இனிமேற்கொண்டு பார்ட் டைம் ஜொப் ஏதாவது பண்ணிக்கிண்ணினால்த்தான் நாலு காசைப்பார்க்கலாம் அதுதான் இப்ப கொஞ்சநாளா பின்னேரத்தில பார்ட் டைம் ஜொப்பொன்றுக்குப் போறனான்............. ”


ராகுலனுக்கு அவர் கையிருப்பை அறிவதில் ஓரு சுவாரஸ்யமுமில்லை. அவன் பேச்சில் அசிரத்தையாய் முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தான். அண்ணாச்சி தொடர்ந்தார்..........

“அங்கை சமையலெண்ணை லீற்றர் ஒண்டரை மார்க்கென்றியள்.........இஞ்ச லீட்டர் அஞ்சு பிராங்கெல்லே..........வரேக்க மட்டும் உந்தப்பெரிய கொம்பியில பத்து லீற்றர் கேசில ஒரு பத்து அடிச்சந்திருந்தா....... சும்மா ஐநூறு மார்க் வெளிச்சிருக்கும்.......... ”

(ராகுலன் மனதுள் -யாருக்கு.....?-)
கதை மீண்டும் பொருண்மியத்திக்கிலே செல்ல அறுவை தாங்காமல் ராகுலன் கேட்டான்:

“உங்கடை ஷ--_ரிச்சில என்னதான் விஷேசம்........ அதைச்சொல்லுங்கோ......... ”

“ விஷேசமெண்டு......?- ”

“இங்க யாரும் ரூரிஸ்ட்டுக்கள் வந்தால் என்னத்தைப் போய்ப்பார்க்கிறவை....? ”

“ நானூறு கிலோ மீட்டர் தள்ளி..........ஜெனீவா என்றால் யூ.என்.ஓ கட்டிடத்தைச்சொல்லலாம்......... இஞ்சை ஒரு நூற்றைம்பது இருநூறு கிலோமீட்டரில ஒரு சேர்ச் இருக்காம் ........எங்கட சனமும் சிலது போறது......... வடக்கை ஷெளகவுசனில ஒரு நீர்வீழ்ச்சியிருக்காம்.......... நானென்றால் இதொண்டுக்குமின்னும் போகேல்ல.........இருக்கிற வேலைக் கரைச்சலுகளுக்கை எங்களுக்கெங்கால நேரம்.........? ”

லதா ஆற்றாமல் கேட்டாள்:
“அப்ப ஒரு ஆபத்து அந்தரத்துக்குத்தன்னும் உங்களுக்கு லீவு எடுக்கேலாதோ அண்ணை? ”

“இப்ப மற்ற வேலைக்குத்தான் லீவெடுத்தாலும்.......
பார்ட் டைம் வேலைக்கு எடுத்தேனென்டால் எங்கையெண்டிருக்கிற நம்ம சனமே ஓடிப்போய் புகுந்திடும்.......... பிறகு கோவிந்தாதான்...........கிறிஸ்மஸ் லீவுக்கை வந்திருந்தியளெண்டால் சோக்காய் எல்லாம் பார்த்திருக்கலாம்........ ”

(ராகுலன் மனதுக்குள் “ இதுதான் ஸ்னோ மலையாய் கொட்டிக்கிடக்கு பார்.......- ”
என்றிருப்பான்.)

இவர்கள் ஒரு நாளாவது லீவு போட்டுவிட்டு தம்மோடு சந்தோஷமாக நிற்பார்கள் அல்லது ஏதாவது ஒரு இடத்திற்குக் கூட்டிப்போவார்கள் என்ற நம்பிக்கை அறவே பொய்த்து இவர்களது -பொருள் முதல் உலகம்- வேறென்பதும் புரிந்து போயிற்று.


சடுதியான காலநிலை மாற்றம் ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ லதாவின் குழந்தைக்கு பகல் முழுவதும் லேசாக உடம்பு காய்ந்தது. பின்னேரமும் கொஞ்சம் சிணுங்கிக்கொண்டிருந்தாள். மயூரனுக்கும் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிடும் என்ற பயத்தில்போலும் அண்ணனும், அண்ணியும் மாலை முழுவதும் மாடியில் இருந்த தம்படுக்கையறையே கதியென்று கிடந்தார்கள். கீழிறங்கவேயில்லை.
அண்ணன் பார்ட் டைம் வேலைக்குப்போய்வந்து மீண்டும் கடுவன் பூனைமாதிரி; மாடிக்கு ஏறிப்போனான்.
அண்ணி குசினிக்குள்ளிருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் அவனுக்குக் கொடுத்தாள். ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட அவர்களை “என்ன..... குழந்தைக்கு இப்ப எப்பிடியிருக்கு....?”
என்று விசாரிக்கவில்லை. லதாவும் தன்னுள் உதிர்ந்து போயிருந்தாள். ராகுல் தன் குடும்பத்தைப்பற்றி அவர்கள் விருந்தோம்பும் பாங்குபற்றி மிகமட்டமாக எடைபோடப்போகிறான் என்ற பயத்தில் மௌனம் காத்தாள். ராகுலுக்கும் அவர்கள் போக்கால் அங்கே மேற்கொண்டு தங்க அதைரியமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
இரவுமுழுவதும் குழந்தை அடிக்கடி சற்றே கண்ணயர்வதும் பின் எழும்பி அழுவதுமாயிருந்தது. இருவரும் மாறிமாறி தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு சிறிய கூடத்திலும் ஆளோடியிலும் உலாத்தினார்கள்.

குழந்தையின் அழுகையில் அண்ணன்காரனுக்கு வந்த உறக்கம் கலைந்து கலைந்து போனது, சினமுண்டானது. அடுத்த தடவை தூக்கம் கலைந்தபோது எரிச்சலுடன் எழும்பி வெளியேவந்து மாடிப்படியில நின்று அதட்டினான்.

“ ஏய்........ லதா உந்தப்பிள்ளையைக் கொஞ்சம் அழாமல்தான் பாரன்....... மனுஷர் விடியவேலைக்குப் போகவேணுமல்லே.......- ”


“ பிள்ளைக்குச்சாடையாய் மேல் காயுது அண்ணை...... அதுதான் அழுகிறாள்.... ”


“ சுகமில்லையெண்டால் நேரத்தோட டொக்டரிட்டை காட்டியிருந்திருக்கலாமில்லை! ”


அற்பப்பயலே அவர்கள் உனது விருந்தினர்கள். நீயல்லவா டாக்டரிடம் கூட்டிப்போயிருக்க வேணும்.

“ பராசெற்றோமோல் ஒன்று குடுத்திருக்கிறன்...... தணியுதோ பார்ப்பம்....”

“ என்ன குடுத்தியோ....... இனியும் கத்தினால் மயூரனும் எழும்பி
வாசிக்கத்தொடங்கிடுவான்........ பிறகெனக்கு வெளியில குதிக்கிறதைத்தவிர வேறை ஒண்டுஞ்செய்யேலா...........”

பிள்ளையே பெற்றுக்கொள்ளாதவன் மாதிரி அவன் பொழிந்துவிட்டு உள்ள போகவும் ராகுலன் லதாவின் காதில் மெல்ல ஆனால் உறுதியான குரலில் சொன்னான்:

“..... நாங்கள் உறவென்று நம்பி பிழையான இடத்துக்கு வந்திட்டம்............ இப்ப பிள்ளைக்குச் சட்டையைப் போட்டிட்டு...... நீரும் உடன வெளிக்கிடுறீர். இதுக்கு மேலயுமிங்கை ஒரு நிமிஷந்தன்னும் என்னால தங்கேலாது......... ”

லதா ஒரு மறுப்பும் சொல்லவில்லை. அவனோடு ஓசைப்படாது வெளிக்கிட்டாள். குழந்தையின் சாமான்கள் எல்லாம் சரிதானாவென்று இன்னொருதரம் சரிபார்த்துவிட்டு தம் சூட்கேஸ்களைத் தூக்கிக் கொண்டு மெதுவாய் வெளியேறிக் கதவைச்சாத்தினார்கள்.

காரில் போய் அமர்ந்த பின்புதான் இயல்பாக மூச்சேவிடவே முடிந்தது. நிம்மதி உண்டானது.

கார் சுவிற்சலாந்து-ஜெர்மனி எல்லை நகரமான பாசலை அண்மிக்கவும்
மலைகளும், அதன் சாரலில் அமைந்திருந்த அழகழகான வீடுகளும,; பள்ளத்தாக்குகளும், தூரிகையால் இழுத்துவிட்டது போலிருந்த நதிகளும், பாலங்களும், சுரங்கப்பாதைகளும்; மறைந்து விடை பெற்றன. சமதரையிலான விரைவுசாலையில் மணிக்கு 120 கி.மீ வேகங்கொள்ள அனுமதித்திருந்தார்கள்.
எதிர்த்திசையில் ஆபிரிக்க இறக்குமதியான வெள்ளாடுகளை நிறைத்துக்கொண்டு வேகமாக வந்த பாரவுந்தொன்று அவர்களது காரையும் சற்றே குலுக்கிவிட்டு சுவிஸ் நோக்கி அம்புருவிப்பறந்தது.
சற்றே பயந்துவிட்ட லதா சொன்னாள்:- “கண் மண் தெரியாதமல் அவன் பறக்கிற வேகத்தைப்பார்த்தியளே........?”

“ எல்லாம் கொண்ணன் கோவிச்சுக்கொள்ளப்போறாரெண்ட பயத்திலதான்........”

“ என்ன அண்ணை கோவிக்கப்போறாரெண்டோ....... என்னப்பா சொல்லுறியள்.......? ”

“ அதெல்லாம் அவர் எங்களுக்காக ஓடர் பண்ணின ஆடுகளல்லே....... அதுதான் விருந்துக்கு லேட்டானால் கொண்ணை கோவிச்சுக்கொள்ளப்போறாரேயெண்டு கிலியில பறக்கிறான்.......”

சுவிஸ் நோக்கிக் கார் திரும்பியதிலிருந்தே சிரிப்பைத் தனியாகவே கழற்றி வைத்திருந்த லதா கண்களில் நீர் முட்டும்வரை கனிந்து குலுங்கிச்குலுங்கிச் சிரித்தாள்.

“ என்னவோ தெரியாதப்பா அண்ணை முந்தி முந்தியிப்படியில்லை..... இப்ப சரியாய் மாறித்தான் விட்டார். அண்ணியோட சேர்ந்து எதுக்கெடுத்தாலும் , ஒரு இடத்தை போறம், ஒரு சாமான் வேண்டவேணும், ஒரு ஆக்கள் தந்தவை, ஒரு பகுதி வரும், ஒரு அலுவலிருக்கு......... என்று சஸ்பென்ஸ் வைத்துத்தான் கதைக்கிறார். ”

“ அது சஸ்பென்ஸ் மாத்திரமில்லை....... மற்றவர்களை நாங்கள் ஒரு இடைவெளியோடதான் வைத்திருக்கிறம் என்கி;றதின்ற படிமம் அது..! ”

அண்ணாச்சி அவர்கள் வீடு தேடிவந்து “ நாங்கள் வேலைப்பழுவில உங்களைச் சரியாய் உபசரிக்காம விட்டிட்டம்....... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
என்று வந்து சாஷ்டங்கமாய் காலிலெல்லாம் வீழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால் சிலவேளை சொல்லிக்கொள்ளாமல் வந்ததுக்காக ரெலிபோனில் ஏதாவது பெனாத்தலாம். வீட்டுக்கு வந்ததும் முதலில் ரெலிபோன் இணைப்பைப் பிடுங்கிவிட்டார்கள்.
குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய்க் காட்டியதில் அன்று மாலையே காய்ச்சல் சுகமாகித் தவழ்ந்தோடித்திரிந்தது.

மறுநாள் மாலை தோட்டத்தில் சாய்வுகதிரையைப் போட்டுக்கொண்டு ராகுலன் ஹேர்மன் ஹெஸ்ஸவின் சித்தார்த்தாவை வாசித்துக்கொண்டிருக்கையில் அங்கே சிற்றுண்டியும் சேமியாப்பாயாசமும் கொண்டு வந்த லதாவைக்கேட்டான்:

“ ஊர்லாப்தான் இன்னும் ஒரு கிழமை இருக்கே.... பாரீஸ{க்குப் போவமே.......? ”

அப்போ அவனை லதா மேற்கண்ணால் பார்த்த ஓர் பார்வையிருக்கே.........ச்சொச்சொச்சொ!

நாங்கள் மெல்ல மாறுவோமே............. ராகுலன் அதை தனியே ரசிக்கட்டும்.
ஜெர்மனி - பூவரசு 19.12.1997. பெர்லின்

Samstag, Oktober 11, 2003

கூடு கலைதல்

-
அலுவலகம்விட்டு அறைக்குத் திரும்பும் வழியில் எனது பொழுதுபோக்கு வேலைகளுக்கு வேண்டிய சில எலெக்ரோனிக் உதிரிப்பாகங்கள் வாங்க வேண்டியிருந்தது. வெள்ளவத்தை டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை பஸ்தரிப்பில் இறங்கி வாடிக்கையான அந்தக் கடையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்.

எதிர்த்திசையில் வந்து, என்னை உரசுவதுபோல் கடந்து சென்றிருந்தவரைக் கண்டதும் ஆச்சர்யம் என் முகத்தில் ஓங்கி அறைந்தது. திரும்பி;ப் பார்த்தேன்.

பெண்கள் வைப்பதைப்போல சின்னச் சின்னதாக, ஆனால் அவசர அடிகள் வைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த அவ்வதிசயக் கணத்தில் ~இது அவர்தானோ அல்லது அவர் சாயலில் வேறு யாரேனுமாக இருக்குமோ| என்று சற்றுச் சந்தேகமாகவும் இருந்தது.

என் மலைப்பு நீங்குவதற்குள் அவர் இருபது மீட்டர்; கடந்துவிட்டிருந்தார். பிடரியில் காலிய முழுநிலவு நீங்கலான மீதிப்பரப்பு முழுவதும் வெள்ளம் அள்ளிய வயலில் தப்பிப்பிழைத்த பயிரைப்போல நரைத்த முடி இங்கொன்றும் அங்கொன்றுமாக வெகு ஐதாக முளைத்திருந்தது. போட்டிருந்த வெள்ளை ஷேர்ட்டிலும் காற்சட்டையிலும் திட்டுதிட்டாகப் பல நாள் அழுக்கு. சித்த சுவாதீனம் தப்பிய ஒரு மனிதக்கோலம்.

~அவர் எமது ஆர்ட் மாஸ்டராக இருக்கமாட்டார்| என்று ஒரு கணம் தோன்றினாலும் அதை உறுதி பண்ணாதவரை சமாதானமற்ற மனது முரண்டுபிடித்தது.

'சேர்... சேர்... சேர்..." என்றுகொண்டு ஓடிப்போய் அவரை முன்மறித்தேன்.

என்னை வழிப்பறிக்காரனைப்போல மிரட்சியுடன் நோக்கியவர் கையில் வைத்திருந்த தோல் பையைக் கக்கத்துள் இடுக்கிக்கொண்டு ஏதோ மிக அவசர அலுவலாகச் செல்பவர்போல் என்னைத் தவிர்த்துவிட்டு இன்னும் வேகமாக மேலே செல்ல முயன்றார்.

கவிஞர் அப்துல் ரகுமான், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகியோர் அணியும் தினிசில் பெரிய கறுப்புச் சட்டத்துடனான கண்ணாடி அணிந்திருந் தார்.

அதனூடாகத் தெரிந்த அதே பரிச்சயமான தீட்ஷண்யம் மிக்க விழிக்கோளங்களில் முந்திய மலர்வும் சினேகமும் தொலைந்திருந்தன. எனினும் அவை சந்தேகமின்றி ~நான் பழைய அதே சிவானந்தன் ஆர்;ட் மாஸ்டர்தான்| என்றன. முகத்தில் ஒரு வாரத்தாடி. அதுவும் நரைத்துவிட் டிருந்தது.

'சேர்... சேர்... சேர்... நீங்கள் எங்கட சிறீசோமாஸ் கந்தாக் கல்லூரி ஆர்ட் மாஸ்டரல்லே."

நிமிர்ந்து என்னை அந்நியமாகப் பார்த்தார்.

'சேர்... நீங்கள் எங்கட சிறீசோமாஸ்கந்தாக் கல்லூரி ஆர்ட் மாஸ்டரல்லே."

நடையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, ஈடுபாடு எதுவுமற்று மீண்டும் அதேபோல் என்னைப் பார்த்தார்.

'சேர்... சேர்... சேர்... நீங்கள் எங்கட சிறீசோமாஸ்கந்தாக் கல்லூரி ஆர்ட் மாஸ்டரல்லே."

'ஓம்... அதுக்கிப்ப என்ன?"

எங்கள் பழைய சிவானந்தன் மாஸ்டருக்கு இப்படிப் பேசவராது... எங்கோ கொஞ்சம் கோளாறிருக்கு.

'நான் திவாகரன்."

மீண்டும் என்னை ஆச்சர்யப்பட்டு ஆச்சர்யப்பட்டுப் பார்த்தார்.

'நான் உங்கள் மாணவன் திவாகரன் சேர்."

நடையின் வேகம் இன்னும் கொஞ்சம் குறைந்தது.

'உங்கள் புத்தூர் சிறீசோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவன் திவாகரன் சேர், என்னை ஞாபகமில்லையோ சேர்...

டேய்... முசக்குட்டி, முசக்குட்டி என்பீங்களே... அது நான்தான் சேர், இப்ப இப்பிடி யானைக்குட்டியாய் வளர்ந்திருக்கிறன்."

ஸ்நானப்பிராப்தியிலிருந்து என்னை ஞாபகம் செய்ய முயன்றவர்போலும் நெற்றியைச் சுருக்கிக் கொண்டும், அதேவிதமாகப் பார்த்துக்கொண்டும் மெல்ல மெல்ல நடந்தார்.

நானும் அவரோடுகூட நடந்துகொண்டே

'இவ்வளவு காலங்கழித்துத் திடீரென்று உங்களைக் கொழும்பில சந்திக்கிறது எனக்குச் சந்தோஷமாயிருக்கு சேர்" என்றேன்.

இப்போது நடப்பதை நிறுத்திவிட்டிருந்தார்.

'ஒன்றும் ஞாபகத்திலில்லை மகன்."

என் கோணங்கித்தனமான உடலவதாரம் வேறு நேரம்பார்த்து காலை வாருகிறது. எமக்கு எவ்வளவு காலப் பழக்கம்? எனக்கு ஆச்சர்யத்தைவிட என் அப்பாவே ~என்னைத் தெரியவில்லை| என்றதுபோல் என்மேல் கழிவிரக்கமே வந்தது.

எவருக்கும் ஒரு முப்பத்தைந்து, நாற்பது வயதுக்குமேல் உடலமைப்பு முகவாகுகளில் பெரிய மாற்றங்களேதும் ஏற்படாதாகையால் பொதுவாக மாணவரு;கள் ஆசிரியர்களை மறந்துவிட சந்தர்ப்பம் அரிது. கல்லூரிக் காலத்தில் அலர் அகவைகளில் இருக்கக்கூடிய மாணவர்கள் அதைக் கடந்து மனிதரு;களாக மாறும்போது தோற்றத்திலும் பெரிதும் மாற்றம் நிகழ்ந்துதான் விடுகிறது.

பதின்மூன்றாம் வாய்ப்பாடு மனனமாகவில்லை யென்று என்னை ஆண்டுக்கணக்காக விரட்டியடித் துக்கொண்டிருந்த ஆறுமுகம் வாத்தியாரே ஒருமுறை சந்தித்தபோது என்னைத் தெரியவில்லை யென்று சொல்லியிருக்கிறாரு;.
(எனக்கு இப்போதாவது பதின்மூன்றாம் வாய்பாடு தெரியுமாவென்று நீங்கள் கேட்பதுவும் கேட்கிறது. அதைவிட்டிடுங்கள், சின்ன விஷயம்.)

'இங்கே எப்படி... எப்போ வந்தீர்கள்?"

'நான் என்னுடைய பென்ஷன் விஷயமாய் வந்தனான். அதை முடிச்சுத்தராமல் முகத்துவாரத்துப் பார்ட்டி கொண்டுபோய் என்னை ஆஸ்பத்தரியில விட்டிட்டுது. அங்கை மனுஷனிருக்கமுடியாது.......... வந்திட்டன்."

பயந்த ஒரு சிறுவனைப்போலத் திக்கித்திக்கிப் பேசினார்.

'முகத்துவாரத்தில யார் இருக்கிறது...?"

'......"

மௌனமாகவிருந்தார்.

மிகவும் களைத்துப்போய் வருவதாகத் தெரிந்தது. அணுக்கத்தில் வியர்வையும் அழுக்குமாகச் சேர்ந்து முறித்த பிள்ளைக்கற்றாழைமாதிரிக் கமழ்ந்தார். நாசிரோமங்கள் தம்பாட்டுக்கு வளர்ந்து சாமரம் வீசிக்கொண்டு நின்றன. கார் றிப்பெயர் பார்த்தவர்போலவும் நகங்களில் அழுக்கேறியி ருந்தது. கன்னத்தில் அகலமான ஒரு பிளாஸ்டர் ஒட்டியிருந்தது. அதுவும் அழுக்கில் கறுப்பேறியிருந்தது.

'சரஸ்வதியில போய் ஒரு டீ சாப்பிடுவோமா சேர்?"

சற்றே தயங்கிவிட்டு

'எ குட் ஐடியா" என்றார்.

அவரைக் கூட்டிக்கொண்டு காலி வீதியைக் குறுக்கறுத்து சரஸ்வதியை நோக்கி நடக்கையில் அவதானித்தேன் மாஸ்டர் தன் வலது காலை கொஞ்சம் நொண்டியபடியே நடந்தார்.

'சேருக்கு காலிலே என்ன நோவோ?"

'லேசா ஒஸ்டியோ ஆர்த்திறிடிஸ்... முழங்கால் மூட்டுடெலும்பு தேய்ஞ்சுபோச்சு, வயசாச்சில்ல?"

இந்தக்கோலத்N;தாடு நம்மைக் ஹொட்டலுள் விடுவார்களோவென்று சந்தேகமாயிருந்தது. இவ்வார ராசி பலன்வேறு ~அவமானப்பட நேரும் ஜாக்கிரதை| என்று எச்சரித்திருந்தது.

கல்லாவிலிருந்த உசிலைமணி தினமும் எகிறுகின்ற விலைவாசிகள் பற்றி யாருடனோ நொந்து கொண்டிருக்க நாம் அவர் கவனியாதவொரு நுண்கணத்தில் உள் நுழைந்தோம்.

அங்கு நின்றிருந்த பரிச்சயமான பரிசாரகரிடம் 'தம்பி எங்களுக்கு டீயும் வடையும் கொண்டாரும்|| என்றேன்.
'டீ எதுக்கு" என்றவர் மென்றுவிழுங்கிவிட்டு 'சாப்பிடலாமே" என்றார்.

'ஓம்... வெறி குட் ஐடியா. தாராளாமாகச் சாப்பிடலாமே!

சரி, நான் மதியம் சாப்பிட்டாச்சு சேர், அதனால ... நான் டீ, வடை சாப்பிடுறன.; நீங்கள் சாப்பாடு சாப்பிடுங்கோ சந்தோஷம்."

எமது விருப்பத்தைச் சொன்னோம்.

உள்ளே சாப்பாடு இருக்கிறதா என்று பார்த்து வருவதாகச் சொன்ன பரிசாரகரு; திரும்பிவந்து 'இறைச்சி முடிஞ்சுபோச்சு, மீன்கறியும், மரக்கறிகளுந்தானிருக்கு, பரவாயில்லையா?" என்றார்.

மாஸ்டர் 'ஜா... தட்ஸ் மோர் தான் இனஃப்..." என்றார்.

பல ஆண்டுகளின் பின் அவரின் இங்கிலிஷைக் கேட்க ஆசையாகவிருந்தது.

'சிவப்பு நாட்டுமுட்டையிலை இரண்டு ஒம்லெட்டும் கொண்டுவாரும்."

எக்ஸ்டிரா ஓடர் பண்ணினேன்.

மீன் குழம்பைச் சோற்றில் பிசைந்து சாப்பிட்ட அவரது ஆவலைப் பார்க்கச் சாப்பிட்டுக் குறைந்தது இரண்டு, மூன்று நாட்களாவது இருக்கும் போலிருந்தது.

தாய்க்கோ தந்தைக்கோ பசியென்றால் தாங்குமா...? இது குரு. மனது நெக்குருகியது.

சாப்பிட்டு முடித்ததும் கிளாசில் தண்ணீரைப் பருகிவிட்டுக் கேட்டார்:

'எங்கே வேலை பார்க்கிறீர்?"

'செலான் பாங்கில எக்கவுண்ட் செக்ஷன்."

'புத்தூரில யாருடைய மகன்?"

'கந்ததாசனென்று..."

'எந்த கந்ததாசன், றைஸ் மில் வைத்திருந்தாரே அவரா?"
'அவர் கந்தசாமி."

'கோப்பிறேட்டிவில வேலை பார்த்தாரே அவரா?"

'அவரும் கந்தசாமிதான்."

'சதுர்க்கோஷ்டிகள் வைத்திருந்தாரே ஒருத்தர்?"

'அவருமில்லை சேர். இவர் யாழ்ப்பாணத்தில கடைச்சல் பட்டறை வைத்திருந்தவரு;. சேறின்ர மோட்டார் சைக்கிளேமாதிரி ஆனால், இன்னும் பழைய ஒரு பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிளில போய் வந்து கொண்டிருப்பார்."
(அவர் அதில் ஏறிஓடிய தூரத்தைவிட தள்ளிக்கொண்டு ஓடிய தூரம் அதிகம்.)

தெரிந்திருக்காது. அவர் ஒன்றுஞ்சொல்ல வில்லை.

'என்னுடைய சைக்கிள் உமக்கு இன்னும் ஞாபகமிருக்கா?"

'அந்த சைக்கிளுக்கு மட்டும் அதன் ஸ்பீடோ மீட்டர் பெற்றோல் டாங்கின் மேலிருப்பது எனக்கு அந்த வயதில அதிசயமாகவிருக்கும். அதனால அதைச் சுத்திச்சுத்திப் பாப்பேன்."

ஒரு காலம் புத்தூர் சிறீசோமாஸ்கந்தக் கல்லூரி குமாரசுவாமி அதிபரின் தலைமையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. அவ்வேளையில் நகர்ப்புற கல்லூரிகளுக்கு இணையான தொகையில் அங்கிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்கத் தொடங்கவும் நகரங்களிலிருந்தும் மாணவர்கள் அங்கு வந்து படிக்க ஆரம்பித்தனர். இவ்வதிபர் கல்லூரியே தன் ஆச்சிரமமாக ஒரு தபோமுனிவனைப் போலத் தங்கி வாழ்ந்து தன் வருமானம் முழுவதையும் கல்லூரியின் வளாச்சிக்காகவும், ஏழை மாணவர்களின் கல்விக்காகவும் செலவு செய்த மாமனுஷன். தனது சமூகத்துக்கே தன் வாழ்நாளை அர்ப்பணித்த அவரது வாழ்வே தனியான வேறொரு தியாகக் கதை.

அவர் காலத்தில்தான் சிவானந்தன் மாஸ்டர் ஓவியக்கலை ஆசிரியராக அங்கு பணியாற்றினார். சுதுமலையிலிருந்து ஒரு மொறிஸ் மைனர் காரில் வந்துபோவார். எங்கள் வகுப்புக்கு மட்டும் ஓவியத்துடன் சிறப்பாக ஆங்கிலமும் எடுத்தார். ஆங்கிலப் பாடமென்றால் வகுப்புக்குள் நுழையும்போதே படிப்பித்துக்கொண்டுதான் வருவார். வில்லியம் வேர்ட்ஸ்வேர்த்தின் கவிதைகள் அவருக்கு பாதிக்குமேல் அத்துபடி.

சில நாட்களில் மட்டும் அபூர்வமாக அந்தப் பழைய பச்சை நிற மோட்டார் சைக்கிளில் வருவார். இருக்கைகள் தனித்தனியாக பொருத்தியிருக்கும், அதற்கு என்ன பெயரென்றுந் தெரியாது. ஆனால் அது சிங்கப்பூர் மொடலென்று அப்போது ~விஷயம் தெரிந்தவர்கள்| சொல்வார்கள்.

எப்போதும் ~வைட் அன்ட் வைட்|தான் அணிந்திருப்பாரு;. மிஞ்சிப்போனால் டிரௌசரை மாத்திரம் லைட்டான சந்தனக்கலரில் அணிவார். அது தவிர்ந்து வேறெந்த நிற உடையிலுமே அவரை நாம் பார்த்ததில்லை. பொக்கெட் வைத்திராத லண்டன் மைக்கேல் ஷேர்ட்டுக்கள் அவர் அணிந்து நாம் பார்த்ததுதான். அவர் அணியும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் சப்பாத்தில் யாரும் முகமே பார்க்கலாம்.

ஓவியப்பாடத்திற்குப் பயன்படும் கலர் பொடிகள் ஏதாவது உடையில் கொட்டிவிட்டாலுமென்ற முன்னெச்சரிக்கையில் ஆர்ட் றூமில் தனது பீரோவில் மேலதிகமாக இரண்டு செட் உடுப்புக்கள் வைத்திருப்பரு;. உடையில் அவ்வளவு சுத்தமும் ரசனையும். மீசை கிடையாது. தினமும் மழுங்க சேவ் பண்ணியிருக்கும் புஷ்டியும் ஆரோக்கியமுமான கன்னங்கள். உச்சியோ , கன்னமோ என்று தீர்மானிக்க முடியாத இடத்தில் வகிடெடுத்து அலையலையாக கறுத்திருக்கும் முடியை நாதஸ்வரக்காரர் போலப் பின்னோக்கி வாரியிருப்பார். சிகரெட் எதுவும் பிடிக்கமாட்டார். ஆதலால் உதடுகள் சிவந்தேயிருக்கும். கைவிரல்கள் பியானோ கலைஞர்களது விரல்களைப்போல மெலிந்து நீண்டிருக்கும். நகங்களை வெட்டிச் சுத்தமாக வைத்திருப்பார். மாணவர்களிடமும் விரல்களைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்பார்.

அதிர்ந்து பேசத்தெரியாது. கருணை கசியும் கண்களால் யாரைப்பார்த்தாலும் பெண்மையுடன் கூடிய ஒரு மென்னகையை அவிழவைப்பார். சின்னப் பற்கள் கொஞ்சமாகத் தெரிய அழகாயிருக்கும். மிகவும் நட்பான தோரணை. அதனால் அவர் அணுக்கத்தில் எப்போதும் மாணவர்கள் சூழவேயிருப்பர்.

ஓவிய வரைதல் பலகையில் அழுத்தூசியால் பொருத்தப்பட்டிருக்கும் வெற்றுத்தாளில் பல்வேறு வர்ணங்களைத் தூரிகையில் தொட்டு எமது இஷ்டம்போல் விசிறச்சொல்வார். நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு விசிறி முடியவும் மாஸ்டர் வேறொரு தூரிகைகொண்டு தன் வேலையை ஆரம்பிப்பார்.

சிந்திய நிறங்களினு}டே வானமும் கடலும் அலையும் கட்டுமரமும் பறைவைகளும் சூரியனும் ஜனித்துவரும். சிலவேளைகளில் பசிய நெடுவயலும் பயிரும் உழவரும் காளைகளும் உயிர்கொண்டு வரும் அழகை அங்கார்ந்து பார்த்திருப்போம்.

ஒருமுறை யாரோ கறுப்பு வர்ணத்தைத் தற்செயலாக தாளில் விசிறிவிட்டார்கள். அது வெள்ளை உடையில் ~கரும்பேன்| பிடித்தமாதிரி சிறு சிறு புள்ளிகளாகத் தாளெங்கும் பரவிக்காட்சியளித்தது. ஒரு தாள் வீண் என்றே நினைத்திருந் தோம். மறுநாள் அதைப் பார்த்தபோது அத்தனை புள்ளிகளும் மானிடத்தலைகளாய் மாறி ஜனத்திரள் செறிந்த ஒரு மாபெரும் மாநாடாகியிருந்ததைக் கண்டு வியந்தோம்.

பொங்கல், புதுவருஷம், தீபாவளி வந்தால் மாணவர்கள் போஸ்ட்காட்கள் வாங்கி வைத்துக்கொண்டு ஆர்ட் றூம் வாசலில் கியூவில் நிற்பார்கள். அனைவருக்கும் நிமிஷத்தில் விதவிதமான ஓவியங்கள் வரைந்து தருவார். சிலவேளைகளில் அட்டையில் வைத்த போனாமுனை எடுக்கப்படாமலே முடிவுறாத அலைகளாகச் சுழித்துச் சுழித்து வந்து ஈற்றில் ஒரு நவீன ஓவியமாக முடிவுற்றிருக்கும்.

நண்பர்களுக்கு அனுப்புவதற்காக அவரைக் கொண்டு நான் வரைவித்த அஞ்சலட்டைகளில் பலவற்றை அனுப்ப மனது வராமல் நானே வைத்துக்கொண்டது ஞாபகம். தூரிகையில் வர்ணங்களைத் தொடும்போதும் வரையும்போதும் விரல்களில்; நடன பாவங்களும், பல முத்திரைகளும் வெளிப்படும்.

முட்டையே ஒழுங்காக வரையத்தெரியாத நம்மைச் சேர்த்துவைத்துக்கொண்டு லியனார்டோ டாவின்ஸி, மைக்கேல் அஞ்ஜலோ, அல்பிறெட்ச் டியூறர், போல் கௌகுயின், வான் கோவ் , பிக்காஸோ, ரவிவர்மா, கிளாசிக்கல் ஆர்ட்ஸ், மொடேர்ண் ஆர்ட்ஸ், சர்றியலிஸ்டிக் ஆர்ட் என்று நிறைப்பேசியிருக்கிறார்.

சிவானந்தன் மாஸ்டர் பத்துப் பதினைந்து மைல் தூரம் இருக்கக்கூடிய சுதுமலையில் இருந்து கல்லூரிக்கு வந்துபோய்க்கொண்டிருந்ததால்; படிக்கும் காலத்தில் அவரைப் பற்றியோ, அவர் குடும்பம் பற்றியதான பெர்சனல் விஷயங்களோ யாருக்கும் அதிகம் தெரியாது. சிலர் அவர் குடும்பம் சிங்கப்பூரில் வாழ்ந்துவிட்டுத் திரும்பிவந்ததாகச் சொல்லுவார்கள். அவரும் தன் குடும்பமன்ன பிற விஷயங்கள்பற்றி அன்னாளில் வேறு யாரிடமும் கலந்து கொண்டதாகவும் தெரியவில்லை.

ஒரு தோல் பையுள் டைம்ஸ், நியூஸ்வீக், றீடேர்ஸ் டைஜஸ்ட், நஷனல் ஜியோகிறபி மற்றும் ஓவியங்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சஞ்சிகைகள் நிறைய வைத்திருந்து படிப்பார். அவர் பேசும் ஆங்கிலத்தின் உச்சரிப்பு அசல் ஆங்கிலேயப் பாணியிலேயே இருக்கும்.

சிவானந்தன் மாஸ்டரின் ஆசிரிய சேவையில் பல அர்ப்பணிப்புகள் இருந்ததாகச் சொல்வார்கள். அவர் தன் சேவைக்காலத்தில் ஒரு நாளாவது ஒரு நிமிஷமாவது கல்லூரிக்கு லேட்டாக வந்ததில்லை. எல்லா ஆசிரியர்களையும்போலவே வருடத்தில் சம்பளத்துடனான 32 நாட்கள் விடுப்பு இவருக்கும் உள்ளதுதான். தன் சேவைக்காலத்தில் ஒரு நாளாவது பணிநாட்களில் விடுப்பு எடுத்துக்கொண்டது கிடையாது. தனது சகோதரியின் புருஷன் மறைந்த அன்றும் கல்லூரிக்கு வந்திருந்தது அவர் கடமை உணர்வின் அதி உச்சப்படி.

அதை ஏதோவிதமாக அறிந்துவிட்ட அதிபரே நேரே அவரிடம் வந்து 'சரியான கிறுக்குப்பிடிச்ச மனிஷனாய் இருக்கிறீரே ஓய்... மனுஷன் கொள்கைகள், சித்தாந்தங்களுக்காக வாழ்றதா... இல்லை வாழ்க்கைக்காகச் சித்தாந்தமா... அரசாங்கம் சம்பளத்தோட தாற லீவையே எடுக்காமவிடுறது சுத்த பைத்தியக்காரத்தனமில்லை... போம்... போய் ஆகவேண்டிய காரியத்தைப் பாரும்" என்று அவரைக் கார்வரைக்கும் தள்ளிக்கொண்டுபோய் ஏற்றிவிட்டார்.

குமாரசுவாமி அதிபரையே நேரில் பார்ப்பதுபோலிருக்கும் சிவானந்தன் மாஸ்டர் வரைந்த ஓர் உருவப்படம், கல்லூரியில் அதிபரின் காரியாலயத்தின் கிழக்குச் சுவரில் நான்; கல்லூரியை விடுத்தபோதுமிருந்தது.

'கொலிச்சில வேறு யாரிட்டையெல்லாம் படிச்சீர்?"

'சிவவீரசிங்கம் மாஸ்டர்தான் லாஸ்ட் இயரில கிளாஸ் டீச்சர்."

'ஓ... அவனா?" என்றுவிட்டுப் புன்னகைத்தார்.

இவரால் சிவவீரசிங்கம் மாஸ்டரை மறக்கவே முடியாதென்பது எனக்குத் தெரியும். இவர் காலத்தில்தான் இன்னுமொரு அறிவுஜீவியும் முழுக்கிறேக்குமான சிவவீரசிங்கம் மாஸ்டரும் அங்கு படிப்பித்தார். இந்த இருவருக்கும் ஒரு நாளும் சரிப்பட்டு வராது.

இவரை அவரும், அவரை இவரும் ~வைத்தியம் பார்க்கப்படவேண்டிய கேஸ்கள்| என்று கூறிக்கொள்ள நிறையக் காரணங்களும் இல்லாம லில்லை .

முழு நாத்திகரான சிவவீரசிங்கம் கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பட்டுவேஷ்டி, உத்தரீயம், விபூதிப்பட்டை , சந்தனப்பொட்டு சகிதம் வந்தார். மறுநாள் கல்லூரியன்று சாம்பல்நிற கோட் சூட்டுக்கு, கருஞ்சிவப்பு டை கட்டி வெள்ளைக்காரத் துரை ~கெட் அப்|பில் வந்தார்.

ஒருமுறை அவரு; எமக்குப் பாடம் நடத்திக்கொண் டிருந்தபோது ஒரு விநாயக சதுர்த்தியோ என்னவோ ஒரு நூறுபேர்வரையில் அருகிலுள்ள சிவன்கோவிலில் இருந்து ஏதோவொரு விக்கிரகத்தை அலங்கரித்துச் சகடையில் வைத்து எமது கல்லூரி அருகிருக்கும் ஒழுங்கையூடாக நெய்ப்பந்தங்கள், சங்கு, சேமக்கலம், மேளதாளத்துடன் தள்ளிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

மேளச்சத்தம் அதிகமாகவிருந்ததால் நடத்திக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டுக் காத்திருந்தவர் ஊர்வலம் கடந்து சென்றதும் சொன்னார்:

'போற சனத்தில ஒரு ஆள் ஆயிரம் கலோரீஸ் செலவு செய்வதாயிருந்தாலும், இதில இப்ப ஒரு லட்சம் கலோரீஸ் அட்டர்லி வேஸ்ட்."

வகுப்பே சிரிப்பால் அதிர்ந்தது.

அவரது சிறப்புப் பாடம் ~பொட்னி|. ஒருமுறை அவரிடம் விசுவாசமாகப் படித்த மாணவி ஒருத்தி உயர்தரப்பரீட்சை முடிவுகள் வந்;தபோது அவரிடம் நன்றியுடன் போய் ~சேர் எனக்கு பொட்னியில -பி- கிடைச்சிருக்கு| என்று சொன்னாள்.

சிவவீரசிங்கம் திருப்பிக்கேட்டுது: 'அதுக்கு எனக்கென்ன?"

பிள்ளை அவமானத்தால் வெம்பி கேவிக் கொண்டு திரும்பிவந்தது.

சிவவீரசிங்கத்தின் பெண்வெறுப்புக்கும், பிரமச்சாரியத்திற்கும் காரணம் ~அவரது தாம்பத்திய விருப்புக்கான நரம்பு நன்னாரிவேர் மாதிரிக்காய்ந்து போய்விட்டதே| என்பது ~அசகு| மாஸ்டரின் கண்டுபிடிப்பு.

கல்லூரியில் ~அசகு| என்று அழைக்கப்படும் அ.ச.குமரேசன் என்றொரு பட்டையணிந்து வரும் ஐம்பதுகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் பிள்ளைகளில்லாத ஆசிரியர் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மாலையில் நீரு;வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் சப்பறாக் கட்டை, தாளத்தோடு பஜனை நடத்திவந்தார். பின்னர் அப்பஜனையில் சுருதிப்பெட்டி மீட்டுக்கொண்டும் , ஜால்ராபோட்டுக்கொண்டும், அவ்வப்போது சேர்ந்துபாடியும் வந்த ஒரு இளம் ஸ்திரியை எப்படியோ அவர் மடக்கித் திருமணம் செய்துகொண்டது சிவவீரசிங்கத்துக்குத் துண்டறப் பிடிக்கவில்லை.

'கல்யாணம் செய்திட்டார், இனி என்ன செய்யப்போறார்?|| என்பது போன்ற காட்டமான பல விமர்சனங்கள் வந்தபோதும் கிறுங்கினாரில்லை அசகு. அவரது திருமணத்தன்று சிவவீரசிங்கம் கல்லூரிக்கு வந்தவுடன் அ.ச.குமாரேசன் மாஸ்டரது வகுப்புக் கரும்பலகையில் பெரிதாக எழுதினார்.

--அசகு இன்று நீர் செய்வது முழுப் பிசகு--

ஹோட்டலைவிட்டு வெளியே வந்து எதிரிலிருந்த பஸ் தரிப்பிடத்திற்கு நடந்தோம். மாலை நாலு மணியாகியிருந்தும் வெய்யிலின் காங்கை சற்றும் குறைந்திருக்கவில்லை.

மாஸ்டரிடம் பணமெங்கே இருக்கப்போகிறது. மாதம் முடிய உள்ள பத்து நாட்களையும் சமாளிக்க வைத்திருக்கும் முன்னு}றையும் அவர் கைச்செலவுக்கு கொடுத்துவிட்டு யாரிடமாவது கைமாறிச் சமாளிக்க வேண்டியதுதான்.

இன்று மாலை (என்னுடன் வேலை செய்யும்) அல்விஸ் தெமட்டகொடவில் தன் மைத்துனன் வீட்டுக்கு ஒரு றேடியோகிராம் திருத்துவதற்காக வரச்சொல்லி விலாசம் தந்திருக்கிறான். இன்றே அதைத் திருத்த முடிந்தால் கிடைப்பதில் இன்றைய எதிர்பாராத செலவை ஈடுசெய்யலாம். மாஸ்டருக்கு எங்கே போகவேணும் என்பதைக் கேட்டு அவரை அந்தத் திசையில் போகும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு நான் தெமட்டகொடவுக்கு 155 பஸ் பிடிக்கவேணும்.

'சேர் அப்ப முகத்துவாரத்திலேதான் இப்ப தங்கியிருக்கிறியளோ?"

'.........."

முகத்துவாரம் என்றதும் அவரு; முகம் கலவரமாகியது. அங்கு யாரையோ அவருக்குப் பிடிக்க வில்லை. மௌனமாகவிருந்தார். முகத்துவாரத்தைப் பிடிக்கவில்லையோ அல்லது பதில் சொல்லப் பிடிக்கவில்லையோ அல்லது சொல்லத் தெரியவில்லையோ அவர் மௌனத்திலிருந்து எதுவும் புரியாதிருந்தது. எனக்கு நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது.


'சேருக்கு என்னுடைய விலாசம் தாறன், சனி ஞாயிறுகளில நேரங்கிடைத்தால் அந்தப் பக்கம் வாங்கோ."

'நீர் எங்க இருக்கிறீர்?"

'இங்கதான் வெள்ளவத்தை ~மனிங் பிளேசில|.||

'ஃபமிலியோடையா?"

'இல்லை சேர் நான் இன்னும் பச்சிலர்."

'மனிங் பிளேசுக்கு எப்பிடிப் போவீர்?"

'இப்படி நடந்துதான்..."

'அப்ப நடவும் நானும் வாறன்."

தெமட்;டகொட பார்ட்டிக்குத் தான் நாளைக்குச் சமாதானம் சொன்னாலும் இந்தக் கோலத்தில் இவரை நான் பங்குபோட்டிருக்கும் அறைக்குக் கூட்டிப்போனால்; அங்கிருந்து நானே விரட்டப்படும் அபாயமிருப்பதை மாஸ்டர்தான் எங்ஙினை அறிவார்?

வங்கிச்சிறாப்பர் கொழும்பில் கொம்போட்டபிள் றூம் எடுத்து இருப்பதாயின் சம்பளம் வாடகையோடு போய்விடும். நீர்கொழும்பில் போய் கொஞ்சக்காலம் இருந்து பார்த்தேன். எட்டு மணிநேரப் பணிக்கு போக்குவரத்தில் நாலு மணிநேரம் பஸ்ஸில் சஞ்சரிக்க வேண்டியிருந்தது. எப்போதும் இருந்து பயணிக்கலாம் என்பதற்கு உத்தரவாமும் கிடையாது.

கடைசியாக பாமன்கடை ஈறோஸ் தியேட்டர் பக்கம் ஜன்னல்கள் இல்லாத ஒரு எட்டுக்கு நாலு ஒடுங்கல் அறையில் மூச்சுமுட்டிக்கொண்டிருந்த என்னை ஊரோ, உறவோ, கல்லூரித்தோழமையோ, முன்பரிச்சயமோ எதுவும் இல்லாமலேயே மனிதம் இன்னும் முற்றாக உலகிலிருந்து அழிந்துவிட வில்லை என்பதற்கு அத்தாட்சியாக மனிங் பிளேசில் தன் அறையிலே பங்குபோட வைத்தவன் என் ஒபீஸ்மேட் வருணன். அறையைப் பங்குபோட்ட பரோபகாரி மட்டுமல்ல வாடகையைக்கூட சமபங்கிடாமல் எம் சம்பளத்தின் விகிதத்தில பகிர்வோம் (அவன் அக்கவுண்டன்ட்) என்று சொன்ன மென் ஹிருதயன்.

இவரை அழைத்துப்போக வருணன் என்ன சொல்வானோ, அவனுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ, அவன் மனத்தைப் புண்படுத்திவிடுவேனோ என்று உண்மையில் இப்போது பயமாக இருந்தது.

சிவானந்தன் மாஸ்டர் எனக்குத்தானே குரு. அவனுக்கு வெறும் ~யாரோ|தானே?

அவர் அணிந்திருந்த டிரௌசரின் நிறத்தை இப்போதுதான் அவதானித்தேன். பிறவுண் நிறமாக இருந்தது. வாழ்க்கை பல விஷயங்களை அவரிடமிருந்து அடித்துச்சென்று விட்டிருப்பது தெரிந்தது.

அறைக்குள் நுழைந்ததும் ~வாட் எ பிறிட்டி றூம்| என்ற படி தன் புராதன தோற்பையை மேசையில் வைத்தார். சப்பாத்துகளைக் கழற்றி அறைமூலையில் வைத்தார். ~அப்பாடா|வென்று வருணனின் கட்டிலில் சாய்ந்தார்.

~சேர் அது என்னுடைய கட்டிலில்லை. என் ஃப்றெண்டின்ரை| என்று சொல்ல நினைத்தேன். மூளையின் செயலிகள் செயற்பட மறுத்தன.

பகல் எங்கெங்கெல்லாம் அலைந்து திரிந்தாரோ பத்து நிமிஷத்துள் அயர்ந்து தூங்கிவிட்டார்.

எந்த நேரமும் வருணன் வந்துவிடலாம். எப்பிடித்தான் எகிறிக் குதிக்கிறானோ, அவனைச் சமாளிக்கத் தேவையான வார்த்தைகளை தேடி நிரைப்படுத்திக்கொண்டு கெட்டிலுள் தண்ணீரை வார்த்து அதை ஓன் பண்ணிவிட்டு நிமிரவும் என் மானசீக ஒத்திகைகளுக்கு அவகாசம் தராமல் ஒரு குஷி மூட்டில் வருணன் விசிலோடு அறைக்குள் நுழைந்தான்.

என்றாலும் தன் கட்டிலில் உரிமையுடன் படுத்திருப்பவரைப் பார்த்ததும் 'ஹ{ இஸ் திஸ் லூனாட்டிக்?" என்றான்.

'மச்சான் தயவுசெய்து பெலத்துக் கத்தாதை... உன்ரை இங்கிலிசை மடிச்சு முதல்ல உள்ளை வை ராஜா... எனக்கும் என் சந்ததிக்கும், உனக்கும் உன்ர கோத்திரத்துக்கும் தெரிந்ததைவிட மனுஷனுக்குக் கூட இங்கிலிஸ் தெரியும். அவர் இங்கிலிஸ் எம்.ஏ ஹோல்டர் சாந்திநிகேதன். இன்று என்னுடைய விருந்தாளி" என்றுவிட்டுத் தயாரான வெந்நீரில் அவனுக்கு விருப்பமான போர்ன்வீட்டாவைப் பாலுடன் கலந்து கொடுத்து சாந்தப்படுத்திக்கொண்டு சிவானந்தன் மாஸ்டர் என் குரு என்பதையும் அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த விருத்தாந்தம் முழுவதையும் பிட்டுவைத்தேன்.

'ஏன் இப்பிடி, ஹிப்பிக்கோலத்தில இருக்கிறார்?"

'அதுதான் மச்சான் எனக்கும் புரியேல்ல... டிசிப்பிளின்ஸ் அன்ட் பிறின்சிபிள்ளோட ஒரு பிரபுபோல வாழ்ந்த மனுஷனடா... இப்போ ஏதேதோ டிப்பிறசனுகள்போல கிடக்கு. வாழ்க்கை எல்லாம் தலைகீழாகி ஆளே இப்பிடி மாறிப்போனார், என்னையே அவரால முழுசாக ஞாபகப்படுத்த இயலாமல் இருக்கென்டால் பாரன்."

'பின்னைப் போகட்டுமென்டு விடாதையன், என்னத்துக்குப் பிடிச்சந்தனி?"

'எனக்கு வருணன் கிடைச்சமாதிரி மாஸ்டருக் கொரு திவாகரன், ஒரு படிப்பிச்ச டீச்சரைப் பார்த்த ஆனந்தம், இப்படியாக ஆகிவிட்டரேயென்ற அதிர்ச்சி... மனசு கேட்கேல்லைப் பார்."

'உனக்குத்தான் பெரிய மனசிருக்கிறதாய் நினைப்பு. அதுக்குள்ள சமத்காரமாய்ப் பேச்சு வேறை... எப்போதும் தன்னால முடிஞ்சதைத்தான் தூக்கவேணும், முட்டாள்தனம் பண்றது இது முதல்தடவை அல்ல... பி பிறைக்டிகல் மான்."

'கோவிக்கிறியோ?"

'கோவிக்கேல்ல...-----(கெட்ட வார்த்தை)க்கிறன்... ஆளைச் சீக்கிரம் வெளிய அனுப்பு, இப்ப சில்வா கண்டானெண்டால் (வீட்டுச் சொந்தக்காரன்) வெளிநாட்டு ஏஜென்ட் வேலை முடிஞ்சு இப்பவிஞ்சை என்ன பைத்தியக்கார ஆஸ்பத்தரியோ நடத்திறியள் எண்டு இரண்டு பேரையும் பிடிச்சு ஒரேயடியாய் வெளியே தள்ளப்போறான். நடு றோட்டில நிக்கவேணும், கொழும்பில லொட்ஜூகளும் இப்ப எல்லாம் ஃபுல் கண்டியோ."

முன்பு வெளிநாட்டுக்குப் போவதற்காக ஏஜென்டுக்கு காசுகட்டிப்போட்டு தங்க லொட்ஜுக்கு காசில்லாமல் அலைந்த இரண்டு ஊர்ப்பையன்களை நான் கூட்டிவரவும், அவர்களை ஆறுமாதத்துக்கு மேல் வைத்திருக்க உதவிய புரவலன் அவன். அதில் ஒருவன் வெளிக்கிட்டுப்போய் போலந்தில் எங்கேயோ தொங்கிவிட்டான். மற்றவன் இங்கே பொலீஸ் தொந்தரவு தாங்காமல் நீர்கொழும்பில் எங்கேயோ யாருடனோ இன்னும் நிற்கிறான்.

வருணனின் அச்சமும் கோபமும் நியாயமானவை. எனக்கே இடம் தந்த அவனது அசௌகரியங்களுக்கு நான் ஏன் இப்படிக் கருவியாகிப் போகிறேன்?

இரவானது. மாஸ்டருக்கு வியர்த்துக்கொட்;டியது. ஃபானைப்போட்டு (அதுவும் வருணனதுதான்) மெல்ல அவர் பக்கம் திருப்பி வைத்தேன். ஏழு மணிக்கு மேல் மெல்லக் கண்விழித்தார். எனது டவலைக்கொடுத்து, கூட்டிக்கொண்டுபோய் பாத்றூமைக் காட்டினேன். முகம் கழுவிவிட்டு வந்தார்.

வருணனை அறிமுகப்படுத்தினேன். 'ஹலோ" என்றார்.

எல்லோருக்குமாக மீண்டும் தேநீர் தயாரித்தேன்.

'இரவு இங்கே சான்ட்விச்தான், சாப்பிடுவியள் தானே சேர்?" என்றேன்.

'பின்ன இடியப்பம் தோசை செய்துதர எங்களுக் கென்ன பெண்டாட்டிமார்களா இருக்கினம்?" என்று விட்டு ~இஸ_க்..... இஸ_க்...... இஸ_க்...| என்று காற்று வெளிவரக் கெக்கலித்துச் சிரித்தார்.

அவர் அப்படிச் சிரிப்பதை அன்றுதான் பார்த்தேன்.

'மை போய்ஸ் யூ ஆர் ரூ ஜெனறஸ், ரூ ஜெனறஸ்..." என்றபடி சாப்பிட்டார்.

எமது பள்ளிப் பருவத்தில் ஒருநாளில் எட்டு மணித்தியாலங்கள் பெற்றார் கிடைத்திருப்பார்களோ, எங்கள் ஐயங்களைத் தீர்க்கவும் கற்பிக்கவும் வழிநடத்தவும் ஆசிரியர்கள் தயாராக அருகில் இருந்தார்கள். அவர்களை நாங்கள் என்றாவது முழுமையாகப் பயன்படுத்தியதுண்டா?

இல்லையென்றேபடுகிறது.

இரவு என்னிடமிருந்த சலவைசெய்த பெட் ஷீட்டை வருணனின் கட்டிலுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு எனது கட்டிலில் மாஸ்டரைப் படுக்கவைத்தேன்.

அடுத்த நாள் காலை இருவருக்கும் காப்பி போட்டுக்கொடுத்துவிட்டு தமிழ்;க்கடைக்குப்போய் தோசையும் வாழைப்பழமும், சில ஆங்கிலத் தினசரிகளும், மாஸ்டருக்கு டூத் பிறஷ_ம் வாங்கி வந்தேன். எல்லோரும் சாப்பிட்டான பின் நாங்கள் ஆபீஸ் புறப்படும்போது அவரும் சிலவேளைகளில் புறப்படுவாரென்று எதிhபார்த்தோம்.

அவர் நாங்கள் புறப்படுவதில் கவனம் கொள்ளவே இல்லை. தினசரிகளில் ஆழ்ந்துபோயிருந்தார்.

~சேர் புறப்படுங்கோ| என்பது அவர் கழுத்தில் பிடித்துத் தள்ளுவதாகாதா?

அவர் புறப்படவில்லை.

~ஏதோ எல்லாம் உன்பாடென்பதுபோல்| வருணன் அறையைவிட்டு முதலில் புறப்பட்டுப்போய் விட்டான். நேரம் எட்டரை ஆகிவிட்டிருந்தது. அடுத்த பஸ்ஸை நான் பிடித்தேயாகவேண்டும்.

அவர் பார்க்கும்படி அறைத்திறப்பையும் ஐம்பது ரூபாய் காசையும் மேசையில் வைத்து 'சேர் வெளியில் போவதானால் மறவாது அறையைப் பூட்டுங்கோ, மதியம் சரஸ்வதியில போய் சாப்பிடுங்கோ" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

'எத்தனை மணிக்கு வருவீர்?"

'நாலு மணிக்கெல்லாம் வந்துவிடுவேன்."

'சரி... கெதியாய் வாரும்" என்றார்.

அலுவலகத்தால் வந்ததும் பார்த்தேன்.

பணம் வைத்த இடத்திலேயே தீண்டப்படாமல் இருக்க, அவர் நான் மருதானை செகன்ட் ஹான்ட் கடையொன்றில் வாங்கியிருந்த ஜேம்ஸ் ஜாய்ஸின் அட்டையில்லாத யூலிசெஸை வைத்துப் புரட்டிக்கொண்டிருந்தார்.

'சேர் இன்னும் சாப்பிடவில்லைப்போலிருக்கு?"

'.............."

அப்பாவியாய்ச் சிரித்தார்.

வெளியில் கூட்டிப்போனேன். அனேகமாக எல்லாக் கடைகளிலும் சாப்பாடு தீர்ந்துவிட்டிருந்தது. முகமதியா கடையில் வெள்ளையப்பமும் சீனிச்சம்பலும் வாங்கிக்கொடுத்தேன். சாப்பிட்டார். அலுவலகத்தில் இரண்டாயிரம் ரூபா சம்பள முற்பணம் எடுத்துக்கொண்டுவந்திருந்தேன். மாஸ்டருக்கு ஒரு சாரமும் ஒரு டவலும் இரண்டு ஷேர்ட்டும் ஷேவிங் செட்டும் வாங்கி ஒரு டிரௌசரும் தைப்பித்துக் கொடுத்தேன்.

தனியாக அவருக்கு சுவேந்திரா சோப் வாங்கிக்கொடுத்து குளிக்கவைத்தேன்.

அவர் போட்டிருந்த உடுப்புக்களை ஒரு பொலித்தீன் பையில் போட்டுக்கட்டி கட்டிலின் மூலையில் தள்ளிவைத்தேன்.

குளிப்பு தந்த இதம் இரவு நல்ல சுகமாகத் தூங்கினார்.

நானே கூடப்போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலொழிய தானே போய் ஹொட்டலில் சாப்பிட மறுத்தார். ஆதலால் அவருடைய மதியச் சாப்பாட்டை நான் சரஸ்வதியில் சொல்லிவைத்து நான் அலுவலகத்திலிருந்து வரும்போது பார்சலாக கொண்டுவந்து தரவேண்டியிருந்தது.

தனக்கிருந்த வசதிகளை நினைத்துக்கொள்கிறாரோ என்னவோ சாப்பிடும்போது சிலவேளைகளில் அவரது கண்கள் கலங்கிப்போகின்றன.

மனிதன் மற்றவர்களுடைய அந்தரங்கங்கள்பற்றி எதுவும் விசாரிப்பதில்லை. அதேபோல் தன்னுடையதைப்பற்றியும் விளம்புவதில்லை.

பொழுதுபோகாத வருணன் நான் இல்லாத வேளைகளில் அவருடைய பூர்வாசிரமம்பற்றி மெல்ல உசாவியிருக்கிறான். அவரோ அவைபற்றி எதுவுமே பேச விரும்புகிறாரில்லையாம்.

'முகத்துவாரத்துக்கு மட்டும் போகமாட்டேன், அவன் மனுஷனேயில்லை" என்றாராம்.

ஒரு வாரம் கடந்துவிட்டிருந்தது.

வருணன் மாஸ்டர் இரவில் தன்னில் கத்தியைக் கித்தியைச் சொருகிவிருவாரோ என்ற பயத்தில் பாண்கூட வெட்ட மறுக்கும் கத்தியைக்கூட மேசைலாச்சியுள் வைத்துப் பூட்டித் திறப்பை உள்மடிக்குள் வைத்துக்கொண்டே இரவில் து}ங்கினான்.

பின்னர் இடையில் மூன்று நான்கு நாட்கள் தன் வேறொரு ஃப்ரெண்டின் அறையில்போய் படுத்தான்.

சித்தசுவாதீனம் குன்றியுள்N;ளாருக்கு உலகத்திலுள்ள அனைவருமே எதிரிகளாகவும், எல்லோரும் தன்னைத் தாக்கத் தருணம் பார்த்திருப்பதாகவும் படுமாம். அதனால் மாஸ்டருக்குக்கூட எந்நேரமும் நிலமை மாறலாம், எதையும் செய்யலாம் என்பது அவன் வாதம்.

ஒரு ஆங்கில நாவலில் ஒரு பைத்தியம் அப்படித்தான் திடீரென்று விழித்துக்கொண்டு காரணமின்றியே அருகில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரின் குரல்வளையை ஷேவிங் பிளேடால் அறுத்துவிடுகிறதாம்.

வருணனை நான் மிக அசௌகரியப்படுத்துகிறேன்.

விழிப்புவரும் இரவுகளில் மனச்சாட்சி பல ஊசிகள் கொண்டுவந்து என் உடல்பூரா குத்திக்குத்தி மேலே தூங்கமுடியாமலடித்தது.

வருணன் தனது அறையையே எமக்குவிட்டுத் தந்துவிட்டு தான் போய் வேறொருவர் அறையில் படுத்துக்கொள்ளும் அளவுக்கு அவனிடம் நாம் பண்ணும் அடாவடித்தனம் மனதுக்குச் சங்கடம் தந்தது.

அலுவலகத்தில் இன்னொரு நண்பனொருவனிடம் எனது முழுப் பிரச்சினையையும் போட்டுவைத்தேன்.

'இந்தக் கொழும்பில அப்பிடி ஒரு சுதுமலைப் பார்ட்டி யாரும் இல்லாமல் போகாது... நான் விசாரிக்கிறேன்" என்றவன் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிற தமிழர்களின் விபரங்களை கணனியில் துழாவி இரண்டொரு விலாசங்கள் எடுத்துத்தந்தான்.

முதலாவது வாடிக்கையாளரது கொழும்பு விலாசம் செல்வத்துரை இராமநாதபிள்ளை, அஜந்தாஸ் சாறி எம்போறியம், மணிக்கூட்டு கோபுர வீதி, புறக்கோட்டை என்றிருந்தது. அது கொழும்பில் பிரபலமான புடவைக்கடைதானே? அங்கு விற்பனைப் பிரிவில் ~ஒருவரைக் கண்டால் தலையாட்டுகின்ற| அளவுக்குப் பழக்கமும்கூட. நேரே போய் அவரிடம் விஷயத்தை வேண்டிய வீதத்தில் சுருக்கிச்சொல்லி முதலாளியைப் பார்க்கவேண்டுமென்றேன்.
அவர் நேரே முதலாளியிடம் என்னைக் கூட்டிப்போனார். பேசினேன். முதலாளி ~தான் குரும்பசிட்டியென்றும் தன் மனைவியின் ஊர்தான் சுதுமலையென்றும் அவரிடம் விசாரித்தால்தான் விபரமான தகவல் கிடைக்குமென்றும்... தம்பி இயக்ககியக்கம் ஒன்றுமில்லைத்தானே| என்று கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு அன்றே மாலை ஏழுமணிக்கு மேல் வீட்டுக்கு வரச்சொல்லி முகவரி தந்தார்.

போனேன். அந்தக் கோடீஸ்வரி முதலாளினி எளிமையாக நூல் சேலையில் இருந்ததே முதலில் பிடித்துப்போனது. முதலாளியும் விஷயத்தைக் முதலிலேயே கொஞ்சமாய் சொல்லிவைத்திருப்பார் போலுள்ளது.

'சிவானந்தன் மாஸ்டர் என்று பாருங்கோ ஒரு ஆர்ட்மாஸ்டர் அறுபதுகளில சுதுமலையிலிருந்து ஒரு பச்சை மொறிஸ் மைனர் காரில வந்து புத்தூர் சோமாஸ்கந்தாவில படிப்பிச்சவவர்" என்றதும்...

என்னைக் கையமர்த்திவிட்டு மேலே சொல்லலானார்.

'தெரியும் தம்பி அவர் சிங்கப்பூர் பென்சனர் குமரப்பெருமாள் என்று அவருடைய ஒரே மகன். என்னோடை வயதொத்த பிள்ளைதான், இரண்டு தலைமுறையாய் சிங்கப்பூரில நல்லாய் வாழ்ந்த குடும்பம் பாரும். அவன் பிறந்ததுகூடச் சிங்கப்பூரிலதான். அந்தப் பிள்ளை பிறந்து பதினைந்து பதினாறு வயது நடக்க அவை இங்கால வந்து சேர்ந்திட்டினம். அந்தப் பிள்ளையோட அவை வந்திறங்கினதுகூட ஏதோ நேத்தெண்டதுபோல எனக்கின்னும் கண்ணுக்க நிக்குது.

இங்கே வரும்போது பயலுக்கு சரியாய் தமிழும் கதைக்க வராது. தகப்பன் பிறகு அவனை ஜஃப்னா கொலிச்சில போடிங்கில விட்டுத்தான் படிப்பிச்சவர். அவன் ஆர்ட் மாஸ்டரென்று இப்ப நீங்கள் சொல்லித்தான் தெரியுது. பிறகு தாய்வழியில சொந்தத்துக்கதான் கலியாணமும் கட்டினவன் பாரும். பெண்சாதியும் மகராசி ரதிதேவியென்று பேருக்கேற்ற ரதிமாதிரித்தான் இருப்பாள். முகம் கனிந்து சிரிச்சாளேயென்டால் எப்போ இன்னொருக்கா சிரிப்பாள் என்றிருக்கும். ஏதோ இவனுக்குக் கொடுப்பினை இல்லைப்போல கிடக்கு ஒரு ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள். இரண்டாவது பிரசவத்தில காயாசுவாதம் வந்து வேளைக்கே அவள் செத்துப்போனாள். அவள் செத்ததல்லத் தம்பி சோகம் அவன்ரை பிள்ளையள் இரண்டையும் குறுக்காலை அள்ளிக்கொண்டு போனதுதான் ஆகக்கொடுமை."

'என்ன அம்மா சொல்லுறியள் பிள்ளையளும் செத்துப்போச்சோ?"

'ஓம் ராசா மூத்தது பெடியன், அவன் இந்தத் தரப்படுத்தலுக்குள்ளாலும் இஞ்ஜினியறிங் என்டர் பண்ணி இரண்டாம் வருஷம் படிச்சுக்கொண்டிருக்கும்போது எண்பத்தேழில பேராதெனிய யூனிவேசிற்றி யில நாலு தமிழ் ஸ்ருடன்ட்ஸைக் காணேல்லயெண்டு கதை வந்துதல்லே அதில இந்தப் பெடியனும் ஒண்டு தம்பி. சிங்களப்பெடியளோ, இல்லைக் காடைகளிசறையளோ, ஆமி பொலிஸோ இன்டைக்கும் பெடியை இல்லாமப்பண்ணினது யாரெண்டது தெரியா, ஆனா ஆளில்லை.

பிறகு தங்கைக்காரியும் வெறிபிடிச்சுப் படிப்பைக் குழப்பிக்கொண்டு திரிஞ்சு இயக்கத்தில சேர்ந்து முல்லைத்தீவு தாக்குதலிலை அவளும் போட்டாள். மனுஷன் இப்ப தனி மரமாய்ப்போச்சு."

'மாஸ்டரின்ரை தாய் தகப்பன் யாரும் இருக்கினமோ?"

'தாய் மனுஷி வேளைக்கே செத்துப்போச்சு, தகப்பன் இன்னும் இருக்கிறாரோ செத்துப்போனாரோ தெரியேல்லை. நானும் ஊர்மண்ணை மிதிச்சு எங்க பதின்மூன்று வருஷமாச்சு, அதில மெய்யாத்தான் எனக்கும் தெரியேல்லை. அவரிப்ப இருந்தாலும் வயதும் எண்பதுக்கு மேலேதான் பேசும்."

அருகிலிருந்த வெற்றிலைத்தட்டத்துள் சில நல்ல பாக்குச்சீவல்களைத் தேடியபடியே மேலும் சற்றே யோசித்துவிட்டுச் 'செத்துத்தானிருப்பர்" என்றார்.

'வேறை யாரும் சொந்தம் கிந்தமெண்டு...?"

'ரமணியென்று சொல்லி பெண்சாதியின்ரை தமையன் ஒருத்தன் இருக்கிறான். இஞ்சைதான் முகத்துவாரத்தில இருக்கிறனெண்டு கடையில கண்டபோது ஒருமுறை சொன்னவன். அட்டிரஸ்தான் தெரியேல்லை."

நெற்றியைத் தேய்த்துவிட்டுக்கொண்டே, 'இன்சூரன்ஸ் கோப்பறேசனிலயோ, மஸ்கன்ஸிலயோ வேலை செய்யிறதாய் சொன்ன ஒரு சின்ன ஞாபகம், இரண்டு மாசத்துக்கு முன்னையும் கண்டு கதைச்சனான் தம்பி, நான் ஏன் மோனை விலாசத்தை விசாரிச்சன்?"

என்னுடன் பேசிக்கொண்டே குசினி வாசலுக்கு கைகளைத் துடைத்தபடி வந்த உதவிப் பெண்ணுக்கு கண்களால் சில சமிக்கைகள் கொடுத்தார்.

'படிக்கிற காலத்தில மாஸ்டருக்கு சுதுமலையென்டது மட்டும் எங்களுக்கு தெரியும். மற்றும்படி அவர் தன் குடும்பத்தைப் பற்றி மாணவர்களான எங்களோடை ஏன் கதைக்கப் போறார்? இன்றைக்கு ஆராயவேண்டி வந்திட்டுது அதுதான். தந்த தகவல்களுக்கும் மிச்சம் பெரிய நன்றி மடம்."

உதவிப்பெண் நுரைக்கின்ற கிறீம் சோடா கொண்டுவந்தாள். அவர் அதை எழுந்து வாங்கி என் கையில் தந்தார்.

'ஓ... தாங்ஸ்."

'அப்பிடி என்னதான் வந்தது ராசா?"

'~விஷயம் என்னண்டா சிவானந்தன் மாஸ்டர் தற்போது என்னோட என்ரை றூமிலதான் தங்கியிருக்கிறார். நீங்கள் சொன்ன இத்தனை சம்பவங்களும் சேர்ந்து கொடுத்திருக்கக்கூடிய டிப்பிறசனுகளால மனுஷன் லேசாய் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார், தன்பாட்டிலை ஒரு இலக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தவரை நான்தான் தற்செயலாய் கண்டுபிடிச்சுக் கூட்டிவந்தனான். ஆனா எத்தனை நாளைக்குத்தான் நானும் அவரைக் கவனித்துப் பராமரிக்கலாம்? அதனால அவரைச் சொந்தக்காரரோ, பாத்யதையுள்ள வேறு யாரிடமோ சேர்ப்பித்துவிட்டால் மனுஷன் நாதியற்று அலையாமல் மிச்ச ஆயுளை நிம்மதியாய் கழிக்குமேயெண்டு ஒரு ஆத்மார்த்த மான விருப்பம்."

'வாழ்ந்த மனுஷனுக்கு வந்த நிலமையைக் கேட்கப் பரிதாபமாய்த்தான் கிடக்கு. என்றாலும் அவை எங்களுக்குச் சொந்தமில்லை ராசா. நாங்கள் வெள்ளாளர், அவை மேற்குப் பக்கம் ...ர்;" என்று ஏதோ கெட்ட வார்த்தையை உச்சரிக்க நேர்ந்தது போலத் தாழ்ந்த குரலில் அவர்களின் சாதிப் பெயரைச் சொன்னார்.

வருணனுக்கு ஃப்றெண்டின் அறையில் என்ன அசௌகரியமோ இடையில் திரும்பவும் தானாக வந்து அறையில் தங்கினான். தங்கத்தொடங்கிய பின் இரண்டு நாளால் காதோடு இரகசியமாய் சொன்னான் 'மாஸ்டர் விறாந்தையில சில்வாவின்ரை கதிரையில படுக்கிறாராம், சில்வா வந்து முனகிவிட்டுப்போறான்."

'அதுக்கு என்ன சொன்ன நீ?"

'அவர் வைத்தியத்துக்காக வந்திருக்கிறார், கெதியில போடுவர் என்றிருக்கிறன். நல்ல காலம் கிழவன் ~என்ன சுகவீனம்| என்று மட்டும் துழாவேல்லை."

அது ஒரு ஈசிசேர். எங்கள் அறைக்கு முன்னான விறாந்தையின் மறுகோடியில் போட்டிருக்கிறது. எப்போதாவது மழை பெய்தால் மாத்திரம் கட்டைக் கிழவன் சில்வா அதில் கால் நிலத்தில படாமல் இருந்துகொண்டு மழையைப் பார்க்கும். மற்றும்படி சில்வா வீட்டிலும் யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. மறுநாள் ஒரு பிரம்புச் சாய்வுகதிரை வாங்கிவந்து மாஸ்டருக்கு கொடுத்தேன்.

அடுத்து வந்த வாரவிடுமுறை கழிந்து வந்த மறு திங்கள் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு முதலில் இன்சூரன்ஸ் கோப்பிறேசனைத் தேர்ந்து எடுத்துக்கொண்டு அங்கு விரைந்தேன்.

ரிஷப்சன் பெண் பெயரை விசாரித்து கணனியை நோண்டிவிட்டு மொனிட்டரிலிருந்து தலையைத் திருப்பாமலே 'மிஸ்டர். ரமணி டிவிஷன் மனேஜர் கொம்பன்சேசன்ஸ் டிப்பார்ட்மென்ட், தேர்ட் ஃப்ளோர் பிளீஸ்" என்றாள். கணனிக்கு மீண்டும் ஒரு நன்றி.

செக்கியுறிட்டிக்காரன் உடம்பெல்லாம் மெட்டல் டிடெக்டரால் தடவோ தடவென்று தடவிக் கூச்சங்காட்டிவிட்டு மேலே செல்லவிட்டான்.

மேலே சென்று மூன்றாவது ஃப்ளோரில் விசாரித்ததில் ஒரு மூலையில் இரண்டு ஸ்கிறீன்களால் தடுத்து ஆக்கப்பட்ட அவரது அறையைக் காட்டினார்கள். மேசை அருகே சென்று ~குட்மோர்ணிங்| சொல்லவும் ஃபைலுக்கு வெளியே கிளீன் ஷேவ் செய்த ஒரு தமிழ்முகம் எட்டிப் பார்த்தது.

'மிஸ்டர் ரமணி என்கிறது..."

'ஜா, தட்ஸ் மீ பிளீஸ். வட் கான் ஐ டூ ஃபோர் யூ தி யங் மன்?" என்றபடி எதிரிலிருந்த ஆசனத்தைக் காட்டினார்.

நான் தனித் தமிழுக்கு வந்தேன்.

'என் பெயர் திவாகரன்... சிவானந்தன் மாஸ்டரென்று..."

அவர் புருவங்கள் விரிந்தன.

'இஸ் எனிதிங் அன்பிளெசன்ட்?"

'ஓ... நோ!"

'வெல்... பின்னே அவரை எப்படி உங்களுக்குத் தெரிஞ்சுது?"

'நான் அவருடைய ஸ்ருடென்ட்."

'அப்படியா... கேஸ் இப்ப எங்க?"

'சொல்றன்."

'அந்தக் கேஸைக் கஸ்டப்பட்டுக் கொண்டுபோய் அங்கொடை ஆஸ்பத்தரியில சேர்த்துவிட்டனான், அங்கையுமிருக்கப் பிடிக்காமல் பிச்சுக்கொண்டு எங்கயோ வெளிக்கிட்டிட்டுது. சரி அதையிட்டு இப்ப என்ன பிரச்சினை... புதிசா ஏதுங்கோல்மால் பண்ணிச்சா?"

அஃறிணையில் பேசினார்.

'பிரச்சினையெண்டு ஒன்றும் பெரிதாயில்லை. மாஸ்டர் போனகிழமை வெள்ளவத்தையில காலி றோட்டில திசைகெட்டுப் போய்க்கொண்டிருந்தார். நானும் பள்ளிக்கூடம் விட்ட பிறகு அவரைக் காணேல்லை, வழியில கண்டவுடனே ஆளை உடனே என்னால மட்டுப்பிடிக்கவும் முடியேல்லை, ஒரு சந்தேகத்தில ஓடிப்போய் ஆளை முன் மறியாhய் மறிச்சுப் பேசிப்பார்த்ததில மாஸ்டர் கொஞ்சம் மென்டலி அப்செற் எண்டது புரிஞ்சுது, என்னையும் அவரால சரியாய் ஞாபகப்படுத்த முடியுதில்லை. மனங்கேட்கேல்லை ஆளைக்கூட்டி யந்து என்னோடைதான் வைச்சிருக்கிறன். அவர் என்னுடைய குரு அதனால அவரை என் ஆயுள்பரியந்தம் வைத்துக் காப்பாற்றவும் எனது மனது சம்மதம்... ஆனால் பிறக்டிகலாய் வேறும் பல பிரச்சினைகளும் எனக்கிருக்கிறதால என்னால அது முடியாமலிருக்கு பாருங்கோ. விபரமாய் சொன்னால் நானும் பச்சிலர், இரண்டாவது இந்தக் கொழும்பில எனக்கே கொஞ்சம் அக்கமடேசன் புறப்ளெம்ஸ் இருக்கு, வெட்கமில்லாமல் சொல்றதென்டால் நானே என் ஃபிரெண்ட ஒருத்தன்ரை றூமிலதான் தொங்கியிட்டிருக்கிறேன், அதுகள் எல்லாத்தையும் விட அவருடைய மெமொறிப் பிசகாலேயோ அல்லது அவரோட இயல்பான சுபாவத்தாலோ தெரியேல்லை தன்னுடைய தேவைகள் என்ன, விருப்பங்கள் என்னென்றதை எங்களோடை கலந்தொன்றும் கதைக்கிறாரில்லை. அதால எமக்கு அவருடைய மனதில உள்ளதை ஒன்றும் அறியேலாமலிருக்கு. குந்த ஒரு கிளை அகப்படாத ஒரு பறவையைமாதிரி அலையிற அந்த மனுஷனைப் பார்க்க எமக்கும் பரிதாபமாயிருந் தாலும் எம்மாலும் எவ்விதத்திலும் அவருக்கு மேல உதவவும் ஏலாமலிருக்கு."

'உம்முடைய நல்ல மனசு புரியுதெனக்கு, இதெல்லாம் நாங்கள் வைச்சிருந்து அனுபவிச்சது தான்... ஒன்றும் வாய் திறந்து பேசமாட்டான். அவன்டை முக்காவாசிப் ப்றொப்ளமே அதுதான். ஆனால் அவனைக்கூட வைச்சிருக்கிறது மகா றிஸ்க் பாரும்! றிஸ்க் அன்ட் , டேஞ்ஜர்! உடனை பொலிசிலை சொல்லி ஆளைத் திரும்ப ஆஸ்பத்தரியிலை சேர்ப்பிக்கவேணும். தாட் வில் பி த ஓன்லி அன்ட் குட் சொலு}ஷன்."

'நான் நினைக்கிறன் அவர் அவ்வளவுதூரம் பாதிக்கப்படேல்லையென்று. ஆறுதலாய் மனம்விட்டுப் பேச இரண்டு மனுஷர் தனக்கும் இருக்கினமென்று அவரை நினைக்க வைத்தாலே நோர்மலாய் விடுவார், அவருக்குத் தேவையெல்லாம் அன்பும் ஆதரவுடனுமான ஒரு சரணாலயந்தான்."

இப்போது எங்கிருந்தோ அவருக்கு ~டப்|பென்று கோபம் மூக்கின் மேல் வந்தது.
(இங்கிலீஷில் பொழிந்தார்.)

'அதைப்பாரும் நீரும் நானும் தீர்;மானிக்க ஏலாது. அவனோடை உலைஞ்ச எனக்குத்தான் அவனுடைய நிலமை சரியாய் தெரியும். எனக்கும் அவனையிட்டான அனுதாபமிருக்குத்தான்... மச்சானாச்சே? நானும் அதைவிட வேறை என்னதான் செய்யலாம் சொல்லும்?"

சிறு இடைவெளி மீண்டும் பேசினார்.

'ஜாப்னாவிலிருந்து யாரோடை வந்தானோ, எப்பிடித்தான் வந்தானோ தெரியாது. ஒரு நாள் டாக்ஸியிலை வந்து இறங்கினான். எனக்கின்னும் பென்ஷன் வரேல்லை, பென்ஷன் ஒபிஸிலை போய் என்னெண்டு விசாரிக்கவேணும் வா" என்றான்.

"He has papers at all. No Papers from his department, No papers from his college,No servicr Record, nothing...He posses not even his National Identity Card. You say how cn one Proceed with his case. NOnsense!"
நான் அவரைத் தமிழுக்குத் திரும்பத்திரும்பப் பிடிச்சுக்கொண்டு வந்துவிடவும் அவர் ஸ்பிறிங்கில் மீள்கிறாப்போலும் இங்கிலிசுக்கே திரும்பத்திரும்பத் தாவிக்கொண்டிருந்தார். ஏதோ நானே குற்றவாளிபோல தலையைக் கவிழ்ந்துகொண்டு அவர் சொன்னது எல்லாவற்றையும் கேட்டேன்.

'ஐடென்டிரிக் கார்ட் இல்லாமல் அங்கொடையிலும் சேர்க்கமாட்டம் என்றிட்டாங்கள். பிறகு றிஜிஸ்டர் கிளார்க், சைக்கோதெறபிஸ்ட் என்று கண்ட நிண்ட ஒவ்வொரு சும்ப நிசும்பனுக்கும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வெட்டியல்லே சேர்த்துவிட்டனான்... அடுத்த கிழமை பாவமென்று அவனிட்ட விசிட் பண்றன்... the fellow is missing.”

“What a irresponsible idiot!..........Stupid!”


இவ்வளவு காவலையும் மீறி மனுஷன் என்னண்டுதான் ஜம்ப் பண்ணினானோ ஜம்ப் பண்ணிட்டான்!||

ரமணியின் பேச்சில் ~மரியாதை| அவருக்கு வரும் கோபத்துக்கு நேர்விகித சமனாக இருந்தது.

'கன்னத்தில தழும்பொண்டும் கிடக்கு... தமிழன்தானேயெண்டு அடிச்சுக்கிடிச்சுத் துன்புறுத்தினாங்களோ தெரியேல்லை?"

'அது அதுக்கும் முதல்ல மருதானை பொலிஸிலே போய் ~எங்கேடா என்னுடைய அமரன், என்ட மகன் அமரனைக் கொண்டாங்கடா| என்று கேட்டுச் சண்டைபிடிச்சதன் அறுவடை."

'பொலீஸில போய் டெய்லி அவங்களுக்கு அலுப்புக் குடுத்துக்கொண்டேயிருந்தானெண்டால் நாடிருக்கிற நிலமையில அவங்கள் அடிச்சே கொண்டுபோட்டு மாறுவேஷத்தில் வந்த விடுதலைப்புலியளுடைய உளவு ஆள் என்னப்போறாங்க.

இந்த மனுஷன் யாரும் சொல்றதைக் கேட்டாத்தானே... ஒழுங்காய் இருந்தால் என்னோடை இருக்கவேண்டாமென்றனே? என்னோட இருக்கிறதில இவருக்கு என்ன கஷ்டம்?

வீட்டில இரப்பா என்றால் கேளாது. அப்பப்ப வெளிக்கிட்டிட்டிடும், வெளிக்கிட்டு கேற்றைத் திறந்துகொண்டு கிழக்கேயோ மேற்கையோ போகும். எங்கைதான் போகுதோ வருகுதோ தெரியாது, போனால் பாதி உலகத்தை; சுத்தோ சுத்தெண்டு சுத்திப்போட்டு ஒரு வாரத்தாலே பிச்சைக்காரன் மாதிரி வரும், வந்தால் யூ சே ஹெள கான் வண் அக்செப்ற் ஹிம்? டோன்ட் ஐ பொஸெஸ் எனி சோஷியல் டிக்னிடி..... ஓர் றெஸ்பெக்ட்? நல்லாய் இருக்கிற காலத்திலேயே ஹீ வாஸ் நொட் நோமல், அன் எக்ஸென்றிக் யூ ஸீ.

வாட் எவர் இட் ஸ்... சுகமாகிறவரை அவன் இருக்கவேண்டிய இடம் அதுதான் பாரும். நோபொடி கான் ஹெல்ப் ஹிம் எனி மோ!"

அறைக்குத் திரும்புகிறேன்.

மாஸ்டர் ஷேவ் எடுத்து முழுகிச் தலையுலர்த்தி அழகாக வாரிவிட்டுக்கொண்டு சுத்தமாக விறாந்தையில் பிரம்புக் கதிரையுள் இருந்துகொண்டு தன் நகங்களை வெட்டிக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துப் பச்சைப்பிள்ளை மாதிரிச் சிரிக்கிறார்.

அவருக்காக வாங்கி வந்த தினசரிப் பத்திரிகைகளைக் கொடுக்கிறேன்.

நன்றியுடன் வாங்கிக்கொண்டு 'திவாகர் ஐ அம் டிறபிளிங் யூ மச்" என்றார்.

'நோ சேர் நெவர்... திஸ் இஸ் மை பிளெஷர்."

இரவு வருணன் அக்கறையுடன் கேட்டான்: 'மைத்துனைக் கண்டியா... மாட்டரைப் போட்டியா... என்னா சொல்றான்?"

'ஆளை மென்டல் ஹாஸ்பிட்டலில தள்ளிட்டு நீ உன்பாட்டுக்கு போய்க்கொண்டேயிரு என்கிறான்டா... தான்கூட அப்பிடித்தான் செய்தானாம்."

மாஸ்டர் பத்திரிகைகள் எல்லாவற்றையும் இரவு கண்விழித்துப் படித்தார். மறுநாள் சொன்னார்:

'அவங்களுக்கு மற்றவங்களுடைய உயிரின்ர பெறுமதிதான் தெரியாது, இவங்களுக்கு தங்களின்ர உயிரின் பெறுமதியும் தெரியாது, மற்றவையின்ரை உயிரின் பெறுமதியும் தெரியாது. எல்லாரையும் அழிச்சு என்னத்தைப் பிடிக்கப்போறாங்கள்?"

~இழப்புக்களின் துயரமோ, அல்ல பேசி என்னதான் வரப்போகிறதென்கிற அவசமோ| அவரை மௌனிக்கவைத்துவிட்டன .

மனம் சகஜமான நிலைக்கு மீளும் மிகச்சிறு சமயங்களில் மௌனம் உடைந்து பேசினார். அவரைப் பேசவைக்க வேண்டுமென்றே சிவவீரசிங்கத்தை அடிக்கடி நினைவூட்டுவேன். முகம் மலர்ந்து சிரிப்பார்.

அன்று வருணனுக்கு என்ன நினைப்பு வந்துதோ அக்கறையாய் கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்துவிட்டு மாஸ்டரின் பழைய உடுப்புகள் போட்டுச் சுற்றிவைத்திருந்த பொதியைச் சுட்டிக்காட்டி 'இந்தப் பொதிக்கும் தீர்வு கிடையாதோ... தோழருக்கு அதை என்ன செய்வதாக உத்தேசம்?" என்றான்.

உண்மையில் எனக்கு அப்பொதி மறந்தேவிட்டிருந்தது. அவற்றை எடுத்துக்கொண்டு லோண்றிக்கு ஓடினேன்.

உடுப்புக்களைப் பார்த்த லாண்டிறிக்காரர் 'ஐய்யைய்ய... மெக்கானிக் வேலை பார்க்கிறவங்க கராஜ் உடுப்புகளெல்லாம் நாங்க கழுவிறதில்லை ஐயா" என்று அலறினார்.

'இவர் கராஜில அல்ல கலைக்கூடத்திலதான் வேலைசெய்வாரு, எக்ஸ்றாவா ஏதாச்சும் சார்ஜ் பண்ணுறதென்றாலும் பரவாயில்லை, இது ஒரு வேண்டிய மனிதருடையது, பார்த்துச் செய்து தாங்கோ."

'ஐயா மன்னிக்கவேணும், அது எந்தக்கூடத்து உடுப்பாயிருந்தறாலும் சரிதான், அதை வெள்ளாவியில வைச்சா மற்றவங்க உடுப்பையெல்லாம் நாசம் பண்ணிடும் பிறகு கஸ்டமர்களுக்கு நாம பதில் சொல்ல இயலாது, அவங்களுக்கு புதுசு வாங்கித்தர்ற நிலமையை நாமளா தெரிஞ்சு உண்டாக்கலாமா... சொல்லுங்க?"

ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

குருகுலத்தில் பெரியவர்கள்கூட எல்லாம் பண்ணினதுதானே. நானே பாத்றூமில் ரின்ஸோ வைக் கொட்டி அவற்றைக் கழுவலானேன்.

அதைப்பார்த்;த வருணன் சொன்னான்.

'அவருக்கல்ல உனக்குத்தான் மேலான் இழகிப்போச்சு... நீ இப்படியெல்லாம் பண்னா மனுஷன் இதுதான் தன்ரை வீடாக்குமென்டு நினைச்சுப் பெர்மனண்டா காம்ப்..."

'தோழர் சொல்ல வர்றது புரியுது... எந்த மனுஷனுக்கும் மரணம் வந்து எப்போதும் தலைவாசலில காத்திருக்குமாம். அதனால பிறருக்குச் சேவை செய்ய எப்போவெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குதோ அப்போதெல்லாம் செய்துபோடோணும். பிறகெல்லாம் சந்தர்ப்பங்கள் அமையுதோ என்னவோ?"

'என்ரை கவலை அதல்ல... தப்பித்தவறி அங்கொட ஆஸ்பத்தரியில இருந்து யாரும் வந்தால் அவரை விட்டிட்டு உன்னை இழுத்துக்கொண்டு போகப்போறாங்களே என்றதுதான்."

இப்பொழுதெல்லாம் மாஸ்டர் தூங்குவது மிக அருகிவிட்டது. இரவில் தூக்கம் வராமல் அடிக்கடி எழுந்திருந்தார். அவரு; தலைமாட்டிலிருந்த ~வாசிக்கும் விளக்கை படிக்கவோ பாத்றூம் போகவோ எப்போது வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் போட்டுக்கொள்ளலாமென்று| சொல்லியிருந்தோம்.

ஒருநாள் அந்த லைட்டைப் போட்டுவிட்டு முகட்டைப் பார்த்துக்கொண்டே நீண்டநேரம் படுத்திருந்தவர் சொன்னார்:

'அங்காலை பாதை தெரியேல்லை ஒரே இருட்டாய் கிடக்கு."

அவர் சுட்டும் படிமம் புரிகிறது.

அந்த இரவில் நாலைந்து தரம் எழுந்து பாத்றூம் போனார்.
டயாபடிஸ் பிரச்சினை ஏதுமிருக்குமோவுந் தெரியேல்லை. டெஸ்ட் பண்ணுவித்தால் நல்லது. டொக்டர் கதையேதும் எடுத்தால் மீண்டும் கலவரமாகிவிடுவாரோ தெரியவில்லை. அதுபற்றி அவரிடம் பேசப் பயமாகவிருந்தது.

அதன் பின் தினமும் இரவுகளில் பல தடவைகள் பாத்றூம் போய்வருவது வழக்கமாயிற்று. மறுநாள் காலை தேநீர் போட்டுக்கொடுக்கையில் பக்குவமாகச் சொன்னேன்.

'அடிக்கடி பாத்றூம் போகிறியள்போல கிடக்கு சேர், வட் எபௌவுட் எ பிளட் சுகர் டெஸ்ட்?"

'நோ டியர்... ஐ அம் ஃபெர்பெக்லி ஓல் றைட்!

தெயரா நோ ஜெனுயின் டக்ரேர்ஸ் இன் த ஹொஸ்பிடல்ஸ் நௌவடேஸ் யூ சீ, ஓல் பிளடி மொன்ஸ்டேர்ஸ்!"

'உங்களுக்கு என்னுடைய பாட்ஸில் படித்த கிருபரனை ஞாபகமிருக்கா, ஏன் உங்க ஸ்ருடன்ட்கூடத்தான் அவன் இப்போ கொள்ளுப்பிட் டியிலதான் தன்னுடைய பிறக்டிஸை வைச்சிருக்கிறான், ஒருக்கால் போய் கொன்சல்ட் பண்ணிட்டாப்போச்சு."

'நொட் நெசசறி அற் ஓல், ஐ அம் பிஸிக்கலி குயட் ஓல் றைட்... பிலீவ் மீ சண்."

முதலில் லேசான இருமல் கண்டது. பகலில் பரவாயில்லை ஓரளவு சமாளித்துவிடுவார். பின்னர் அதுவே படிப்படியாக அதிகரித்து பனியோ குளிரோ அதிகமிருக்கும் இரவுகளில் கடுமையான இருமலோடு ஆஸ்மா வேறு வந்து பெரும் அவஸ்தைப்பட்டார். மூச்சு இயல்பாயிருக்கவில்லை. அவர் சுவாசிக்க கஸ்டப்படுவது எமக்குப் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. அவரோ தனக்கு அப்படி ஒரு பிரச்சினையுமேயில்லை என்று சாதித்தார். டாக்டரைக் கண்டு பயப்படுகிறரோ அல்லது எங்களுக்குத் தொல்லைதரப்படாதென நினைக்கிறாரோ தெரியவில்லை.

எந்த கொழும்பு ஹொட்டல் சாப்பாடாயினும் மாசக்கணக்கில் அடுத்துச் சாப்பிட யாருக்கும் வைக்கோல் சாப்பிட்டமாதிரி இருக்கும். சிலவேளைகளில் அவர்களின் மரக்கறிகள் குழம்புகள் முழுக அவித்த அரப்பு மாதிரியிருக்கும். மாஸ்டர் வரவர மிகவும் குறைவாகவே சாப்பிட்டார். உடல் வேறு இளைத்துக்கொண்டுவந்தது.

கிருபரனிடம் போய் ஆலோசனை கேட்டேன். அவனோ 'ஆஸ்த்மா அலேர்ஜியால் வருவது. ஆன்டிஅலேர்ஜி மருந்துகள் நோயாளியைப் பரிசோதிக்காமல் தரவேகூடாது" என்றான். கடைசியில் சும்மா நம்மிடம் விசிட் வரும் ஒரு நண்பனைப்போல் வந்;து அவரைப் பார்த்துவிட்டுச் சில மாத்திரைகள் எழுதித்தந்தான். வாங்கிவந்து மூச்செடுக்க அவர் கஷ்டப்பட்ட வேளைகளில் தேநீரில் கரைத்துக் கொடுத்தேன். சுகமிருந்தது.

இடையில் சில்வா வேறு வந்து 'உங்க விசிட்டர் இரவில் சத்தமாய் இருமுறார், பத்துத்தரம் டொயலட் பிளஷ் பண்ணுறார், இங்கால மனுஷங்க தூங்கமுடியவில்லை" என்று இரண்டாந்தரமாக முனகினான்.

மாஸ்டர் உடல் பலவீனமாக இருந்தபோது அல்லது லேசாக காய்ச்சல் கண்டிருக்கும் நாட்களில் இரவில் வாய் புலம்பினார். அதுவும் இங்கிலிஷில் சுத்தமாய் ஒரு வார்த்தை புரியாது.

ஒருமுறை கட்டிலில் எழும்பி இருந்துகொண்டு 'ரதி இருந்தால் ஒன்றும் இப்படி நேர்ந்திருக்காது" என்றார்.

பின்பொரு நாள் 'இந்தக் கள்ளர் இனி எனக்குப் பென்ஷன் தராங்கள், எனக்கு அவங்கடை பென்ஷனும் வேண்டாம,; மசிரும் வேண்டாம். என்னை ரயிலேற்றி ஊருக்கு அனுப்பிவிடு" என்றார்.

அவர் யாரிடம் பேசுகிறார், என்னிடமா? அவர் என்னிடம் நேரில் கேட்கத் தயங்கும் விஷயங்கள் இப்படி இரவில் அவரறியாது நெஞ்சிலிருந்து வெளியில் கொட்டுகின்றனவா?

தமிழ்த்தேசிய விடுதலைக்கான போர் உக்கிர மாகி வடக்குக் கிழக்கில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுப்போன விஷயம் ஒன்றும் அவருக்குத் தெரியாது போலுள்ளது.

வருணன் இப்போது நிறையவே சிகரெட் பிடிக்கிறான்.

'எப்படி உனக்கு எப்பிடிடா மாஸ்டர் முன்னால சிகரெட் பிடிக்க முடியுது?"
'அவர் உனக்குத்தானே கண்ணா மாஸ்டர்... ஆஃப்டர் ஓல் டிறோயிங் மாஸ்டர்... எனக்கு வண் குப்பு ஓர் சுப்புதானே?"

'அதுவும் சரிதான்."

நான் சிகரெட் பிடிக்காதேயென்று எப்படி அவனை வற்புறுத்தலாம்?

காய்;ச்சல் தணிந்திருந்த ஒருநாள் மாஸ்டர் சற்றே வெளியில் போய்விட்டு வந்தார். காற்சட்டை முன் பக்கம் நனைந்திருந்தது.

வெளி விறாந்தையில் ஜன்னலோரமாய் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த வருணன் அவர் கோலத்தைக் கண்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு வெளியே ஓடினான்.

மாஸ்டருக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரம் விழித்துக் கொண்டிருந்துவிட்டுக் கேட்டார்:

'வாட்ஸ் றோங் வித் யுவர் ஃப்றென்ட்?"

'நந... நதிங்... நதிங் சேர்... ஹீ இஸ் கோயிங் அவுட் டு மீட் சம்பொடி... அன்ட் ஹீ வில் பி பாக் நௌ."

ஆனால் இரவு அறைக்கு வருணன் திரும்ப வில்லை. மாஸ்டர் இரவு தூக்கம் வராது படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார். மனோநிலை பாதிப்பின் முதற்குறி தூக்கமின்மை.

அடிக்கடி வாய் புலம்பினார்.

'எவ்றிதிங் சேஞ்ஜ்ட்"

'அவளிருந்தால் இந்தச் சீரழிவில்லை."

'ரதி...! ரத்தி...!

அமரனும் மாலதியும் பள்ளிக்கூடத்தாலே வந்திட்டாங்களா?

வந்திட்டா அவங்களை டோன்ட் லெட் தெம் இன்டூ மை ஆர்ட் றூம்... ஆல் த பெயின்டிங் ஆ ஜெட் ரூ டிறை."

அடுத்த நாள் ஒரு வியாழக்கிழமை. அலுவலகத்தில் பார்த்து வருணனைச் சமாதானப்படுத்த வேண்டும். அலுவலகம் சென்றதும் அவனைத் தேடினேன். பத்துமணியாகியும் அவன் வரவில்லை. அவனது டிபார்ட்மென்டில் விசாரித்தேன். அவன் வியாழனும் வெள்ளியும் விடுப்பு எடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.

~எனக்குச் சொல்லாமல் இப்படி எதுவும் செய்யமாட்டானே?|

நானும் அவனுக்கு கொடுத்த அலுப்பும் கொஞ்சம் ஓவர்.

மாலை பணி முடிந்ததும் அலுவலகத்தால் நேரே ஹொட்டலுக்குப் போய் மாஸ்டருக்கான சாப்பாட்டோடு காலையில் அவருக்காக ஸ்பெசலாக ஓர்டர் பண்ணிய மிளகு ரசத்தையையும் எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பினேன்.

அறைக்குள் மாஸ்டரைக் காணவில்லை.

சில்வாவை விசாரித்தேன், ~தான் காணவில்லை| என்றான்.

~எங்கேதான் போவார்... கடற்கரைப்பக்கமாக எங்காவது சுற்றிவிட்டுத் திரும்பி வருவாரென| எதிர்பார்த்தேன்.

அவர் வரவில்லை.

மறு நாள்

மறு நாள்

மறு நாள்

மறு நாள்... ஊகூம்!

ஒரு வாரமாயிற்று. ஆளைக் காணவே காணோம்.

அவர் மைத்துனர் ரமணிக்குப் போன் பண்ணினேன்.

'என்ன மறுபடி காணாமப் போயிட்டானா... லெட் ஹிம் கெட் லொஸ்ட்!" என்றார் வெகுசாதாரணமாக.

சம்பளம் எடுத்துக்கொண்டு வருணனிடம் போய் மாஸ்டர் காணாமற்போய்விட்டதைச் சொல்லி அவர் வருகையால் அவனுக்கு ஏற்பட்ட தொந்தரவுகளுக்கு மன்னிப்புக்கேட்டுக்கொண்டு அப்படியே அவனைச் சைனீஸ் றெஸ்றோறன்ட்டுக்குக் கூட்டிப்போய் ஃப்றைட் றைஸ், சைனீஸ் பியர் எல்லாம் வாங்கிக்கொடுத்து குளிர்த்திசெய்து அறைக்கு மீளவும் கூட்டிவந்தேன்.

அவன் முன்னை மாதிரியே விசிலடித்துக் கொண்டு வெகுசீக்கிரமே இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தான். போஸ்டில் வந்திருந்த குமுதங்களை வாஞ்சையுடன் படித்தான். ~ரம்பாவுக்கு அநியாயச் சதைபோடுது, சள்ளையிலும் முன்வயித்திலும் மடிப்புகள் வந்திட்டுது, படச்சான்ஸ_கள் பறக்கப்போகுதேயென்று| வெகுவாக வருத்தப்பட்டான்.

சில நாட்கள் பிரிவு எமக்குள்ளான ஆகர்ஷிப்பை அதிகப்படுத்தி இருந்தது. அதன் நிமித்தம் அவன் இரவு பருக மென்டிஸ் ஸ்பெஷல் வாங்கினான்;. நான் டேஸ்டுக்கு முகம்மதிய ஹொட்டலில் இறைச்சி றோஸ்ட் வாங்கினேன்.

அதை டிஷ் ஒன்றிலிட்டு, கழுவி உலர்ந்த கிளாசுகளை டீபோயில் தயார்பண்ணி வைத்துவிட்டு, எமது சிற்றொழுங்கை முக்கிலிருக்கும் பெட்டிக்கடையில் கொக்காகோலாவும் ஐஸ_ம் வாங்கிவர செருப்பை மாட்டிக்கொண்டு கதவைத் திறந்தேன்.

அங்கப்பிரதட்ஷை பண்ணிவிட்டு எழுந்துவரும் அடியாரின் திருக்கோலத்தில் புன்னகையோடு நின்றிருந்தார் சிவானந்தன் மாஸ்டர்.


(kANNil tHERIYUTHU VAnAM.-London 2002)

Dienstag, Oktober 07, 2003

ஆத்தி
பொ.கருணாகரமூர்த்திஅந்த மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள்.
எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தினு}டு யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டின் முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷமென்று சொல்லமுடியாது. தெருவிலிருந்து நோக்கையில் வீட்டை மறைத்துக்கொண்டு நிற்கப் போதுமானது. சின்னத்தம்பிப்புலவர் வீட்டுவாசலில் நின்றிருந்த

பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை
வீசு புகழ் நல்லுர்ரான் வில்லவரா யன்கனக
வாசலிடைக் கொன்றை மரம்.. .. ..

மாதிரிக்கு யாருக்கும் எமது வீட்டை அடையாளங்காட்டிக் குறிப்புச்சொல்லி விடுவதற்கும் உதவியாய் நின்றது அம்மரம்.

அனேகமாக காடுகளை வெட்டும்போது ஒரு காணியின் வீதிப்பக்க எல்லiயிலோ , இரண்டு காணிகளுக்கிடையில் அமையக்கூடிய எல்லை நிரையிலோ வரும் மரங்களைத் தறிக்காது விட்டுவைப்பது வழக்கம்.

அந்தக் காணி காடாக இருந்தபோது அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிய நல்ல மனிதர்;களுக்கு என்னதான் தோன்றியதோ வீட்டுக்குத் தெற்காக நின்ற அந்த மரத்தையும் வளவின் வடகிழக்கு மூலையில் ஒரு கொண்டல் மரத்தையும் விட்டு வைத்துவிட்டார்கள்.

கொண்டலின் கிளை பூராவும் தங்கமஞ்சளாகப் பூத்துத்தொங்குகையில் ஒரு அழகுதான். கொண்டல்; வண்ணன் என்று சிவனை அழைத்ததுவும் ரம்யமானதொரு கற்பனைதான். நன்கு முற்றிய கொண்டல் பழத்தை உடைத்தால் உள்ளே சொக்கிளேற்றுகள் போலும் சிறிய சிறிய வில்லைகள் அடுக்கில் காணப்படும். அதன் தித்திப்போ விபரிக்கமுடியாது. ஆனாலும் சாப்பிடமுடியாது. அன்னமுன்னா பழம் மாதிரித் திகட்டி வயிற்றைப்புரட்டும் ஒரு வகை இனிப்பு.

இந்த ஆத்திமரத்தின் பூ மெல்லிய றோசாவை விரும்பிய கத்தரி நிறத்திலிருக்கும், பெரிய அழகென்று கொண்டாடமுடியாது. அவரைக்காயைப்போல் மெலிதாக புளியங்காய்போல் வளைந்து நுனியில் விரியும் சிறிய ஒலிபெருக்கியைக்கொண்டு தலைகீழாகத் தொங்கும். அவரைக்காயைப் போலவே சற்று வைரமாக இருக்கும் அதன் காயைப் பிடுங்கி வெற்றிலைபோல் வாயிலிட்டுச் சப்பிக் குதப்பிவிட்டுத் துப்புவோம்.
ஆத்தியின் இலையை ஆடுமாடுகளும் விரும்பித் தின்னுகின்றன, இந்தமரம் வேறு தொன் கணக்கில் காய்த்துத்தள்ளுகிறதே, இதன் காயிலிருந்து முழுமனிதகுலத்துக்கும் பயன்படவல்லமாதிரி ஒரு உணவை ஏன் தயாரிக்கமுடியாதென்று அப்போதே எனக்குள்ளிருந்த விஞ்ஞானிக்கு சிந்தனைகள் முகைத்ததுண்டு.

ஆத்தி மரத்தின் புறப்பட்டை தடிமனான தக்கையைக் கொண்டிருக்கும். அத்துடன் அக்கோறைமரம் வாகாக திட்டுகளையும் மொக்குகளையும் தன்னுடலெங்கும் கொண்டிருந்ததால்; பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்த நான் அதில் அடிக்கடி ஏறி இறங்குவேன். அம்மரத்தின் கிளைவேர்கள் ஆலமரத்தைப்போல் தரைக்கு வெளியாகவே ஆரம்பித்து நாலு திசையிலும்; நீண்டுசென்று தரையுள் புகுந்தன.

அன்றும் மாலையில் அவ்வேர்களினிடுக்கில் சிறு ஓடக்; கவிவைப்போலும் உட்கவிந்திருக்கும் சார்மனையில் ஒரு சாக்கை விரித்துப் படுத்துக்கொண்டு வானத்தைப்பார்க்கிறேன். உலகத்திலுள்ள நிறங்களையெல்லாம் கரைத்து யாரோ அங்கே ஊற்றிவிட்டதைப் போலிருக்கிறது.

அதன் கீழாக சில வெண்முகில்கள் ஒன்றையொன்று துரத்தியபடி சென்றுகொண்டிருக்கின்றன. லேசாக வீசிக்கொண்டிருக்கும் காற்று குளிரைக் கொண்டிருக்கிறது. வவுனிக்குளத்திலிருந்தோ பாலியாற்றிலிருந்தோ கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும், கூழைக்கடாக்களும் மன்னார்க் கடலை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன.

~~மரத்துக்க பாம்பைப்பூச்சியிருந்தாலும் எழும்பி வீட்டுக்குள்ள வா.|| என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.

எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே ~~ இந்த ஆத்தி கோறைமரம் பாருங்கோ........... பாம்பைப் பூச்சியைக் குடிவரும், தறித்துவிடுங்கோ|| என்று தவறாது அறிவுரை சொன்னார்கள்.
அம்மரம் முற்றத்தில் ஏராளமாய் சருகுகளையும் உலர்ந்த காய்களையும் கொட்டிப் பெருக்குவதற்கு சிரமம் பண்ணியதேயல்லாமல் அதன் ஆயுளில் எமக்குப் வேறொரு நட்டணையும் பண்ணி யாமறியோம்.

நான் ஊருக்குப் போயிருந்த ஒரு நாளிரவு அம்மா வைத்துக்கொண்டு படுத்திருந்த தலையணைக்குக் கீழே ஏதோவொன்று நழுக்கு பிழுக்கென்று நழுவிச்சாம். எழுந்து விளக்கை ஏற்றிப்பார்த்தால் கருநாகமொன்று ~எஸ்| ஸாக வளைந்து படுத்திருக்குதாம்.
அம்மா தும்புக்கட்டையை எடுத்து அடிக்க ஓங்கவும் அது தன் ஓட்டமட்டிக்; நிக்கோனை எடுத்துப் படமெடுக்குதாம்.

அம்மாவின் மனத்திலு}றிய ஏராளம் ஜீவோபகாரத்துடன் உள்ள மெயின், உப , கடவுளர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தோன்றி பாம்பை அடிப்பதினின்றும் தடுத்தாட்கொண்டுவிட்டனர். அந்தப் பயங்கரமான அனுபவத்தின் பின்னர் ஒரு நாள் ~அம்மாவும் ஆத்தியைத் தறிக்கத்தான் வேணும்| என்றார்.

அப்பாவுக்கு லோகாயத விஷயங்களில் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் எதுவும் கிடையாது. அவர் பெரும்பான்மையரின் கருத்தை எதிர்;த்து மல்லுக்கட்டவெல்லாம் போகமாட்டார்.
ஆத்தியைத் தறிப்பது என்று முடிவெடுத்தான பின்னரும் யாரும் அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டாதிருக்கவே நான் ஒரு நாள் எங்கள் கோடரியை எடுத்து வேருள்ள பக்கமாக போட்டுப்பார்த்தேன்.
அக்கோடரியும் கள்ளி, மொந்தன், பெருங்கதலி இனங்களைத் தறிக்க மட்டுமே தயாரிக்கப்பட்ட வகைபோலும் அதன் வெட்டு வாதாரை சுருண்டு திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. மரம் தறித்தல் அப்போதைய பதின்மூன்று வயதுப் பையனுக்கான வேலையாகவும் படவில்லை, அப்போதைக்கு விட்டுவிட்டேன்.

அது 1963ம் ஆண்டு, ஒரு சித்திரை மாதம். காலபோக அறுவடைக்குப் பின்னால் யோகபுரத்தில் எல்லோர்; வீடுகளுள்ளும் நெல்லுச்சாக்குகள் நிறைந்திருந்த நேரம். சித்திரை சிறுமாரி என்றே சொல்வார்கள். இது மாறாக ஒருவாரமாகத் தொடர்ந்து வன்னிப் பிரதேசமெங்கும் அடைமழையாகப் பெய்துகொண்டிருந்தது.

அப்போது அது எட்டுப் பத்து வருஷங்களுக்குள்ளான குடியேற்றத்திட்டந்தான்.
இன்று போலவே அன்றும் எங்கும் தார் போடப்படாத பாதைகள.; மழை பெய்தால் டிராக்டரைத் தவிர வேறெந்த வாகனம்தானும் அப்பாதைகளில் செல்லமுடியாது. குறைந்த பட்ஷம் ஒரு டிராக்டர் வைத்துக்கொள்ள வசதி உள்ளவர்கள் மட்டும் வெளியில் வந்து நடமாடித்திரிய ஏனையவர்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு போத்தல் மண்ணெய் வாங்குவதானாற்கூட மூன்று மைல் தொலைவிலுள்ள மல்லாவிக்கோ அன்றேல் ஏழு மைல் தொலைவிலுள்ள வவுனிக்குளக்கட்டுக்குப் போனாலே சாத்தியம். கஞ்சியோ பொங்கலோ ஆக்கிச் சாப்பிட்டுவிட்டு பொழுது சாயவும் ஏதோ ஊரடங்கு அமுலில் இருப்பதைப்;போலும் மக்கள் படுத்துக்கொண்டார்கள்.

சூரியன் தொலைவில் காட்டுக்குள் பதுங்கிவிடவும் வானத்தின் வர்ணங்கள் மெல்ல மெல்ல விடைபெறத்தொடங்கின.

அது வானிலை அவதானிப்புகளோ , அவற்றை மக்களிடம் எடுத்துச்சென்று எச்சரிக்கவல்ல ஊடகங்களோ வளர்ச்சி அடையாதிருந்த நேரம்.
அப்பாவிடம் ஒரு சுருட்டுக்குப் புகையிலைவாங்க வந்த அயலிலுள்ள சின்னத்தம்பிக்கிழவன் நெற்றியைச்; சுருக்கிக்கொண்டு வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: ~ திக்குகள் நல்லாய்க் காணன.;.................ம்ம்ம் , கெட்ட ஊதற்காற்றொன்று தெல்லுமாறிமாறி வீசுது.............. புயலொன்று இறங்கலாங்காண்|.

அக்குடியேற்றக்;கிராமத்தில் யாருக்கும் காய்ச்சல் , குணங்கல் என்று வந்தால் பார்வை பார்த்து, ~~ விடுவிடு சங்கரி........... இறுஇறு சங்கரி........... பொறுபொறு சங்கரி.......... கடுகடு சங்கரி............ நறுநறு சங்கரி|| என்று விபூதி மந்திரிச்சுக்கொடுப்பது கிழவன்தான்.

கிழவன் வீட்டுக்குப் போய் ஒரு கால் மணியாகியிராது.

நாலைந்து மழைத்துளிகள் என் முகத்தில் குளிர்ந்தன.

~~ அட மழை வருகுது உள்ள வா .. .. ..|| என்று அம்மா மீண்டும் கூவினார். தென் மேற்கில் மின்னித்தெரிய மழை மெல்ல மெல்ல இறங்கத்தொடங்கியது. சற்றைக்கெல்லாம் பலமான காற்றும் வீசத்தொடங்கியது. மழை மெல்ல வலுக்கத் தொடங்கியதும் காற்றும் ஆர்ப்பரித்துப் பலமாக வீசத்தொடங்கியது.
கொலனி குடியேற்ற வாசிகளுக்கு ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் இலவசமாக கட்டித்தந்த இரண்டு அறைகளும் முன்பின்னாக ஆளோடியாக ஒடுங்கிய இரண்டு விறாந்தைகளையுங்கொண்ட சிறுவீடுகள் அவை. அனேகமானோர் வீட்டின் முன்னுக்கும் பின்னுக்கும் அமைந்த விறாந்தைகளில் சாய்வு பத்திகள் இறக்கியிருந்தார்கள். உள் அறைகளில் ஒன்றுக்கு மட்டுமே நிலத்திற்கு சீமெந்து இடப்பட்டுள்ளதால் அனேகமானோருக்கு அதுவே படுக்கை அறை. காற்று வேகம்பிடிக்க ஜன்னல்கள் படபடவென அடிக்கத்தொடங்கின. திறாங்குகள் உடைந்துபோயிருந்த ஜன்னல்களை அவை திறந்து திறந்து அடிக்காதபடிக்கு இழைக்கயிற்றால் வரிந்து கட்டினோம்.
முதலில் காற்று கிழக்கு மேற்காக வீசியது. எமது வீட்டின் கிழக்குப் பக்கமாக ஆடுகள் கட்டவும் விறகு சேமித்து வைத்திருக்கவும் போட்டிருந்த ஒத்தாப்பின் கூரை கப்புகளுடன் பிடுங்குப்பட்டு வீசப்பட அங்கே கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து அலறிக்கொண்டு மேற்கு விறாந்தைக்கு வந்து சேர்ந்தன. அம்மா விறாந்தையிலிருந்த மேசை ஒன்றைச் சரித்துப் போட்டு எரிப்பதற்காக வைத்திருந்த இரண்டு புறவெட்டுப் பலகைகளையும் மேசையுடன் சேர்த்து ஒரு மாதிரி அண்டைகட்டி ஆடுகளை அதற்குள் நிற்பதற்கு வசதி பண்ணிவிட்டார்.
ஒரு கணம் காற்று வேகம் குறைவது போலிருந்தது. அடுத்து பத்து நிமிஷத்தில் நான் சும்மா என்பதுபோல் காற்று மீண்டும் ஆர்முடுகித்தன் திசையையும் மாற்றி இப்போது தென்மேற்கிலிருந்து அசுரத்தனமாக வீசியது. அச் சிறுவீடுகள் தனியார் ஒப்பந்தக்காரர்களால் பாலியாற்றுக் குறுமணல் நிறைவீதத்தில் கலந்து அரிந்த கொங்கிறீட் கற்களால் கட்டப்பட்டவை.
அணை ஒன்றைத் திறந்துவிட்டதைப்போல வானம் பிரிந்து சாய்கோணத்தில் சாந்து பூசப்படாத அச்சுவர்களில் கொட்டவும் கேட்பானேன், மழைநீர் சுவரூடாக தங்குதடையின்றி நுழைந்து வீட்டுக்குள் பெருகியது.

போதிய கோணிசாக்குகள் இல்லாததால் கடந்தபோக அறுவடையின் நெல்லு ஐம்பது புசல் வரையில்; சீமெந்துத்தரை அறையில் தரையில் கொட்டப்பட்டிருந்தது. சுவர் ஊறி உள்ளே வந்த நீரால் நெல்லு நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா துக்கம் தாளாது அழவேதொடங்கிவிட்டார்.

அதற்குள் முன் விட்டு மணி ஆறு பிள்ளைகளுடன் என்னதான் செய்தாளோ அவள் புருஷனும் யாழ்ப்பாணம் போய்விட்டார், பக்கத்து வீட்டு நல்லையர் குடும்பம் என்ன செய்துதுகளோ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார். இரண்டு வீடுகளும் ஒரு நு}ற்றைம்பது மீட்டர் தள்ளியே இருந்தன. காற்று வீசிய வேகத்தில் வெளியே கால் வைத்தால் உருட்டிச் செல்லப்பட்டுவிடும் அபாயம். அவர்களைப் போய் பார்க்கவும் முடியவில்லை.
அதற்குள் அப்பாவும் பூநகரிக்கோ முறிகண்டிக்கோ கரி சுடப்போயிருந்தார்.
மன்னார்க்கடலிலிருந்து பிரளயக்கூவலுடன் வீசிய சூறாவளியில் ஆத்தி மரம் தலையைச்சுற்றி அருள் வந்ததுபோல் ஆடியது. அதன் சுழற்சிவேகத்தில் நுனிமரம் சுழன்று சுழன்று தரையை அடித்தது. சற்றைக்குள் ஆத்தி வேருடன் பிடுங்கப்பட்டு காற்றிலே ஒரு துரும்பைப்போலும் பறப்பதைப் பார்ப்போம் என்றிருந்தது. மரம் வீட்டில் வேறு மோதித்தொலைத்தால் என்ன விபரீதம் நடக்குமோவென்று பயமாகவுமிருந்தது.

அத்தனை அமளிதுமளிக்குள்ளும் அம்மா குசினிக்குள் புகுந்து சோற்றுப்பானையையும் , கறிச்சட்டிகளையும் மற்ற அறைக்குள் து}க்கிவந்து காரமான ஆரதக்கறிகள், தயிருடன் கொஞ்சம் சோறு குழைத்து எனக்கு கையில் தந்தாரென்பது ஞாபகம். எல்லோரது அம்மாக்களைப்போலவும் எனது அம்மாவும் ஆரதக்கறிவகைகள் சமைப்பதில் மிகவும் கெட்டிக்காரி. சாப்பாடான பின் சூடாக தேனீர் குடித்தால் இன்னும் தெம்பாக இருக்கும்போலிருந்தது. அடுப்புக்கால்கள் உட்பட குசினி நனைந்து தெப்பலாயிருந்தது.

நான் நனையாத நெல்லை அறையின் மற்றப்பக்கத்திற்கு மண்வெட்டியால் வாரிவிட்டு அதன்மேல் பாயைப்போட்டு படுக்க முயற்சித்தேன்.

அம்மா டிரங்குப்பெட்டியைத் திறந்து தோய்த்து உலர்ந்த தனது நு}ல்சேலைகள் இரண்டை எடுத்துத் தந்து ~நல்லாய் போர்.........| என்றார்.

காற்று மீண்டுமொருமுறை தன் திசையை மாற்றவும் தெற்கு விறாந்தையின் ஓடுகள் எடுத்து வீசப்பட்டுத் தரையில் விழுந்து படபடவென நொருங்கும் சப்தம் கேட்டது.

ஜலப்பிரளயம் வந்துவிட்டதாக எண்ணிய அம்மா

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி னோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க

என்று கந்தசஷ்டிகவசத்தைப் பாடலானார்.

வடக்கின் குடியேற்றக் கிராமங்களிலெல்லாம் மணிக்கூடுகள் அவ்வளவுக்கு புழக்கத்திலிருக்கவில்லை. நேரம் தெரியவில்லை. ~அம்மா இரண்டு மணியிருக்கும்| என்றார்.
பளீரென்று ஒரு பெரு மின்னல் தெறித்து வானந்தான் பற்றி எரிந்ததோ உலகமே பளீர்சிவப்பாகியிருக்க நீண்ட நேரத்துக்கு இடி இடித்து எதிரொலித்தது. சற்றுநேரம் எத்திசையில் நோக்கிலும் கண்களில் சிவப்பே தெரிந்தது.
காற்று ஒருவித தாளகதியுடன் தன் வேகத்தை ஏற்றியிறக்கிக்கொண்டு ஓ.. .. ஓ.. .. ..வென்று வீசவும் ஆத்திமரம் தன் கேசத்தை வீசிப்பேயாடுவதுபோல் சுழன்றாடுவதைப் பார்க்க படுபயங்கரமாக இருந்தது.. மீண்டும் ஒருதரம் வான வாவி தலைகீழாகப் புரண்டு கொட்டவும் பெருவெள்ளம் வீட்டினுள் இதோ நுழைகிறேன் நுழைகிறேன் என்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல்போலவே தெரிந்ததில் பாக்குக்கடல்தான் மன்னாரை மேவியிங்கு வந்துவிட்டதோ என்றிருந்தது. இந்த அவலம் வன்னியில் யோகபுரத்துக்கு மட்டுமேயானதா இல்லை முழு உலகத்துக்குமாவென்றுந் தெரியவில்லை. இனி வீட்டின் சுவர்கள் சரிந்துவிடக் காற்றில் அடிபட்டுவிடுவோமோ? கெடுதியும் அவலமும் விளைவிக்கவென்றே அவதாரம் எடுத்த ஒரு அசுரனைப்போலவும், ஊழிக்காற்றாக வந்து சுழன்றாடிக்கொண்டிருக்கும் புயல் மேலும் என்னவெல்லாம் செய்ப்போகிறது என்று தெரியாததால் நான் உள்ளுரப் பயத்தால் உறைந்துபோயிருந்தேன். அனேகமாக அப்பா இனி எங்களைப் பார்க்கமாட்டார், எனது அடுத்த பிறந்த நாள் இனி வரவேவராது என்று நம்பினேனாயினும் வெகு இயல்பாக இருப்பது போலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு புயலை அனுபவிப்பது வாழ்வில் இதுதான் முதன்முறை.
காணிநிலம் இல்லாத எளிய மக்களுக்கே குடியேற்றக்காணிகளைப் பங்கீடு செய்வதில் முதலிடம் கொடுப்பார்கள். அப்படிக் கிடைத்த காணியில் குடும்பமாக குடியேறியிருந்து விவசாயம் செய்யாவிட்டால் அக்காணியின் பெர்மிட்டை ரத்துச்செய்துவிடுவோம் என காணிக்காரியாலய அதிகாரிகள் பயமுறுத்தவும், யாழ்ப்பாணக்கல்லூரி ஒன்றில் ஒழுங்காகவே படித்துக்கொண்டிருந்த என்னை கல்லு}ரி அதிபர் எவ்வளவோ தடுத்தும் கேளாது அப்பா விடுத்துக்கொண்டுவந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க கதிரை மேசை வசதிகள்கூட இல்லாத யோகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.

அங்கு வந்த ஆரம்பத்தில் அப்பா செய்வித்துத்தந்த நாலுசில்லு வண்டியைத் தரதரவென இழுத்துக்கொண்டு திரிவதில் ஏதோ ~ஃபெறாறி ஸ்பைடரில்| உல்லாசிப்பதுபோலும் எனது புலன்கள் அனைத்தும் ஒன்றிச் சுகித்திருந்தன. பின் அவ்வன்னிப்பிரதேசத்தில் அடிக்கடி மிகமலிவாகக் கிடைக்கக்கூடிய மான், மரை, பன்றியிறைச்சிகளில் என் கவனம் திருப்பப்பட்டிருந்ததில் எனது கல்வியின் இழப்பு அவ்வளவாகத் தோற்றவில்iலை. பின்னர் அப்படித்தான் படிப்புத் தொலைந்து போனாலும் ஒரு டிராக்டரை வாங்கிவைத்துக்கொண்டு அங்கேயே பிழைத்துவிடலாமென்று பாமரத்தனமாக என்னை நானே சமாதானம் பண்ணிக்கொண்டேன்.

வாரவிடுமுறைகளை ஊரில் அனுபவிக்கவேண்டி வெள்ளிக்கிழமை மதியமே யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடும் ஆசிரியர்களின் கைப்பையையோ, பொதியையோ மல்லாவிச்சந்திக்குச் சுமக்க நேர்கையில் பல தடவைகள் அப்பாவின் தொலைநோக்கில்லாத செயலுக்காக மனம் வருந்தியதுண்டு.

தவணைவிடுமுறைகளின் போது ஊர் செல்லும்போதெல்லாம் பாட்டி ~அடுத்த ஆண்டு அவனை இங்கேகொண்டு சேர்த்துவிடுங்கோ நான் பார்த்துக்கொள்றன்| என்பார். எனக்கும் கண்களில் முட்டிக்கொண்டு வந்துவிடும்.

நாளைய நமது இருத்தல் பற்றித்தெரியாதபோது வவுனிக்குளம் வர நேர்ந்தமை எனக்குள் மீண்டும் இப்போது அழுகையைக்கொண்டு வந்தது.

இருந்த அத்தனை சேலைகளால் போர்த்தியபோதும் ஊசிக்குளிரால் உடம்பு வெடவெடத்தது. நான் படுத்திருந்த பாயில் உட்கார்ந்திருந்த அம்மா அதுவரை ஊறாதிருந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும் ஊடுசுவரின்மீது ஒரு சாக்கினால் போர்த்துக்கொண்டு; ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார். அவர் வாயில் இன்னும் கந்த சஷ்டிகவசம். ~இவ்வளவு துன்பம் செய்கிற கடவுளை எதற்குத்தான் பாடுகிறாரோ| என்றிருக்கிறது எனக்கு. இவ்வளவு பயங்கரத்துள்ளும் து}க்கம் வேறு வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறது. எப்போதுதான் அயர்ந்தேனோ, கண்விழித்தபோது காற்றும் மழையும் சற்றுக் குறைந்திருந்தன. அம்மா ~இனி புயல் ஓய்ந்துவிடும்| என்றார். மேலும் ஒரு மணி நேரத்தில் காற்றின் வேகம் தணிந்தது ஆனாலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது.
நிலம் வெளுத்த பின்னாலும் மழை பெய்துகொண்டிருந்ததால் அயலவர்கள் என்னசெய்கிறார்கள் என்று போய்ப்பார்க்க முடியவில்லை. ஒருவாறாக ஏழு மணிவரையில் மழை ஓய்ந்தது. சூரியனும் வெளியில் வந்து ஊரைப்பார்க்கத் தயங்கிக்கொண்டிருந்தது.
சின்னத்தம்பிக்கிழவன் கையில் அவரது கைப்பிடியில் எலிசபெத்மகாராணி எடின்பறோ கோமகன் இணையின் படம் போட்ட, நாற்பதாம் ஆண்டில் கறுப்பாயிருந்த குடையுடன் வந்தார்.

~என்னுடைய குடிலையும் நாம்பனுகளையும் காணேல்லை| என்றவர் ~இராசையாவின் பட்டறைக்கொட்டில் கூரைத்தகரங்கள் கிழிக்கப்பட்டுப் பணியாரக்குள கலிங்கில அங்கங்கே விசிறப்பட்டுக்கிடக்காம்| என்றார்.
வெள்ளம் வடிய சனங்கள் மெல்ல மெல்ல சகதிக்குள்ளால் வெளியில் நடமாடத்தொடங்கினர். அனேகமானோரின் வீடுகளின் கூரை ஓடுகள் முக்காற் பங்கும் காற்றில் பறந்துவிட்டிருந்தது.
ஊர் குருசேஷ்த்திரமாகி பெருமரங்கள் எல்லாமே சாய்ந்திருந்தன. பிடுங்கப்பட்டவை முறிக்கப்பட்டவை ஏதோவொரு ஒழுங்கில் ஒன்று கூட்டப்பட்டு ஆங்காங்கு குவிக்கப்பட்டிருந்தன. முருங்கைகள் வாழைகளின் கதைகள் சொல்ல வேண்டியதில்லை.
ஊர் முழுவதற்கும் பயன் தந்துகொண்டிருந்த இராசையா ஆசாரியார் வீட்டு ஜம்புநாவலும், கறிவேம்பும் சாய்ந்திருந்ததைக் கண்டு அவர் தாயார் தலையிலடித்துக்கொண்டு அழுதார். அவர்களிடம் திருத்த வேலைக்கு வந்திருந்த மாட்டுவண்டிகள் அடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டுபோய் முள்ளுக்கம்பிவேலிக்கு அப்பால் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன.
எங்குதான் வீசப்பட்டுதோ வளவுக்குள் நின்ற கொண்டல் மரத்தை அங்குரத்துடன் காணவில்லை. வாழைகள் குட்டியும் குலையுமாக முறுக்கித் திருகப்பட்டு நார்களாக்கப்பட்டிருந்தன.
கூரைகளோ, பத்திகளோ இறக்கப்படாது தனித்து நின்ற வீடுகள் பலவும் கூரைஓடுகளை முற்றாகவே இழந்திருந்தன.

எமக்கு தெற்கு விறாந்தையில் இரண்டு நிரை (இருபத்தைந்து முப்பது) ஓடுகளைத் தவிர ஆத்திமரம் ஒதுக்கமாய் நின்றிருந்த வடக்குப் பக்கத்து ஓடுகள் அப்பிடியே இருந்தது யோகபுரத்தில் எல்லாருக்கும் படு ஆச்சர்யம்.

~வங்காளவிரிகுடாவில் திடீரென ஏற்பட்ட பவனமணடல அமுக்க மாற்றத்தால்
கிளம்பிய புயலே இப்படி வடமேற்காகச் சுழன்று குமரிமாவட்டத்திலும் , வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாம்.|

இப்புயலின்போது இராமேஸ்வரத்தையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் பாம்பன்பாலம் தகர்ந்துபோனது.
இலங்கை - கிழக்கு மாகாணக் கடற்கரையோரத்தில் குடிசை போட்டு வாழ்ந்த பல மீனவக் குடும்பங்கள் உட்பட அங்கே பத்தாயிரம்பேர்கள் வீட்டையும் கூரையையும் இழந்தார்கள்.
வவுனிக்குளப் பிரதேச குடியேற்றத்திட்டத்தின் பிதாமகரான அப்போதைய அரசாங்க அதிபர் ஆழ்வார்ப்பிள்ளை நேரில் வந்து சேதங்களைப் பார்வையிட்டார். அவருடன் கூடவந்த அலுவலர்கள்; பட்டாளம் சிறுசிறுகுழுக்களாகப் பிரிந்து எல்லா கொலனி யூனிட்டுகளுக்கும் சென்று ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஏற்பட்ட நஷ்டங்களைக் கணக்கெடுத்தார்கள்.

இரண்டு மூன்று நாட்களில் முதல் நிவாரணமாக பல லொறிகளில் ஓடுகளும், மூலை ஓடுகளை வைத்துக்கட்ட சீமெந்தும், கோதுமைமா மூடைகளும் வந்திறங்கின.
மாங்குளம் துணுக்காய் கிறவல் வீதியைத் தவிர்த்து யோகபுரம், ஒட்டன்குளம் , கொத்தம்பியாகுளம், துணுக்காய் எப்பகுதியுள்ளுமே லொறிகள் போகமுடியாதாகையால் யோகபுரம் முதலாம் யூனிட் பல நோக்க கூட்டுறவுச் சங்க வளவினுள்ளும், இரண்டாம் யூனிட் நெற்சங்க வளவிலும் , மூன்றாம் யூனிட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் அவை இறக்கப்பட்டு கொலனிவாசிகளுக்கு விநியோகிக்கப்பட மக்கள் மாட்டு வண்டிகளிலும், தலைச்சுமையாகவும் அவற்றை எடுத்துச் சென்றார்கள்.

எமக்கும் நாற்பது ஓடுகள் தந்திருந்தார்கள், அவற்றையொரு சாக்கில் போட்டுக்கட்டி சைக்கிளில் இரண்டு நடைகளில் சகதியில் தாண்டிமிதந்து எடுத்து வந்திருந்தேன். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இவ்வுடனடி நிவாரணம் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

இவ்வேளை பாலியாற்றங்கரைக்கு மேற்காகவுள்ள பாண்டியன்குளத்தில் காடுவெட்டுவதற்கு வந்த (அப்பாவுக்குத் தெரிந்த) ஒப்பந்தக்காரர் ஒருவர் புயல் அனர்த்தங்களுடன் சற்று ஓய்வுவேண்டிப்போலும் தன் பட்டாலியனுடன் காடுவெட்டும் நீண்டபிடியுடனான கத்திகள், பளபளவென மின்னும் கோடாரிகளெனப் பல ஆயுதங்களை எங்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கேயோ போயிருந்தார். அவற்றுள் பளீரென்று வாதாரை மின்னிக்கொண்டிருந்த கூரிய கோடரியைப் பார்த்ததும் மீண்டும் எனக்குள்ளான சைத்தான் உயிர்பெற்றுக் கைகளைப் பரபரக்க வைக்கவும் கோடரியில் ஒன்றை எடுத்துச்சென்று ஆத்தியில் இடுப்பில் போட்டேன். பச்சை வெட்டுச்சிராய்கள் ~ஷ்யுக்| ~ஷயுக்| என்று பறக்கப் பறக்க கோடரி ~சதக்| ~சதக்|கென்று இறங்குகிறது. ஒரு சுற்று இறங்கியதும் மேற்பட்டையை அடுத்துள்ள உட்பகுதியிலிருந்து பாலும் உதிரமும் கலந்தது போல் திரவம் வடியவும் மனதை ஏதோ பண்ணுகிறது.
மீசை கறுக்காதா, கிருதா நெடுக்காதா என்ற ஏக்கங்கள் படிந்திருந்த பருவத்தில் மரத்தைத் தனியாக வெட்டுவதுதென்பது ஒரு வித ~பெரியஆள்த்தனமாகவே| படுகிறது. தொடங்கிய காரியத்தை இடைநிறுத்துவதா? தொடர்ந்து வெட்டினேன். பச்சையும் உயிருமாயிருந்த ஆத்தி காற்றில் ~ஓ| வென்று இரைந்துகொண்டு பாட்டில் சாய்கிறது.

பாட்டத்தில் சாய்ந்த ஆத்தியைப் பார்க்கவும் நெஞ்சில் கழிவிரக்கம் பிறக்கிறது. அதன் இருப்பின் கம்பீரம் இல்லையென்றாகி அவ்விடத்தில் பாழ்வெளி! மனது ஒப்புகின்றதில்லை , பிசைபடுகின்றது. ஜடமோ உயிரோ ஒன்றின் வீழ்ச்சியை பார்க்க நேர்வது அவலம். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ........? நெஞ்சில் ஒருவகை அவசமும், அந்தகாரம் நிறைகிறது.

உட்பாவாடை அணியாமல் சேலை கட்டுவதற்கோ, பாடி இல்லாமல் ரவிக்கை போடுவதற்காகN;வா அம்மாவால் தனியாக ஓரங்கட்டப்பட்டு அடிக்கடி அர்ச்சிக்கப்படும் அயல்வீட்டுத் திலகம்மாமி மரம் சாய்ந்ததும் இதற்காகவே காத்திருந்தவர்போல விரைந்து வந்து தன் ஆடுகளுக்காக இலைகளை ஒடித்துச் சாக்குகளில் அடைந்தார்.


வயலுக்குப் போய் வரம்புகளை வெட்டி வெள்ளத்தைக் கடத்திவிட்டுவந்த சின்னத்தம்பிக்கிழவன் மட்டும் ஆத்தி சாய்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு
~~ சின்னப்பெடியா!|| என்றார்.
~~ என்னப்பா?||
~~என்னொரு மடைவேலை செய்துபோட்டாய் காண்.......... திடீரெண்டு என்ன வந்ததுனக்கு?||

~~ இல்லையப்பா அது புயல்ப்போது சுழன்றாடின ஆட்டத்துக்கு முறிஞ்சிருந்துதேயென்றால் வீட்டையொரு பக்கம் பெயர்த்துக் கொண்டு போயிருக்கும்........? ||

~~ ஆனால் அது அப்பிடி ஒன்றுஞ்செய்யேல்லையே கிளி........ வீரையென்றால் கிழிஞ்சிருக்கும்...... முதிரையென்றால் முறிஞ்சிருக்கும்...... பாலையென்றால் சரிஞ்சிருக்கும்...... இந்த ஆத்தி நார்மரமாயும் கோறையாய் இருந்ததாலுந்தான் இந்தப்புயலிலே அப்பிடிக் கசங்கியும் பிழைச்சு நிண்டது காண் .. .. ..||

~~ஆமோ......? ||
~~ ஆத்தியின்ரை ஒதுக்கிலதான் உன்ரை வீட்டு ஓடுகள் தப்பினது காண்.........!||
பண்ணியது முழுமுட்டாள்த்தனந்தான். சின்னத்தம்பிக்கிழவன் ~காண் காண் காண்| எனவும் எனக்குள் துக்கம் அதிகரித்தது.

~ அவள் நினைவுகள் என்னால் ஒதுக்கிவிட முடியாதபடி என்னுள் தோன்றித்தோன்றித் துன்பம் செய்கின்றனவே........... என்றோ ஒருநாள் நான் அறியாமல் செய்துவிட்ட ஒரு பாவத்தைப்போல........ | என்று ஒரு உருதுக் கவிதையின் வரிகள் வரும்;. (நன்றி.அப்துல் ரகுமான்)

பச்சைமரத்தின் அருமை புரிந்த நாள்முதலாய் என் நினைவில் தொடர்ந்தும் படர்ந்தும் வரும் அவ் ஆத்திமத்தின் பவிசு இப்போதும் என்னை வருத்தாத நாளேயில்லை.

மூடாப்பு மந்தாரம் குறைந்து சற்றே வெய்யில் மினுங்கவும் மக்கள் தம்மிடம் நனையாதிருந்த தானியங்களுடன், கிழங்கு போன்றவற்றைப் பண்டமாற்றுச்செய்து உணவுப்பிரச்சiயைச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.

புயல் அடித்து ஓய்ந்து ஒரு வாரம் ஆகியிராது.

~~ நட்டாங்கண்டல் , வவுனிக்குளம் , மூன்றுமுறிப்பு, பன்றிவிரிச்சான், இரணைக்குளம் , பனங்காமம், ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, பகுதிகளில் இன்றைக்கு மீண்டும்; லேசாய் புயலடிக்கப்போகுதாம் || என்ற செய்தி விதானையார் வீட்டு டிரான்சிஸ்டர் றேடியோவிலிருந்து வவுனிக்குளப்பகுதி முழுவதும் பரவியது.

முன்னரைப்போல பல பயங்கரமாய் இருக்காதெனும்........ மன்னார், கள்ளியடி, வெள்ளாங்குளம் மீனவர்களைக் கடலுக்குப் போகவேண்டாமென்று எச்சரிக்கப் பட்டிருப்பதாவும் சொன்னார்கள்.

சுட்ட கரியை லொறி வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு எமக்கு என்னாச்சோ ஏதாச்சோவென்ற பரிதவிப்போடு அப்பாவும் வந்துசேர்ந்திருந்தார்.
ஊரில் யாருமே ஓடுகளை அதற்குள் வேய்ந்திருக்கவில்லை. எமக்கு இரண்டு நிரை ஓடுகள்தானே கொண்டுவந்தவுடனேயே அப்பா எடுத்து ஒவ்வொன்றாக மேலே தரத்தர நான் வேய்ந்து முடித்துவிட்டேன்.
மக்கள் பத்திகளையும் ஒத்தாப்புகளையும் சரிசெய்து தாம் சேகரித்த சொற்ப விறகுகளையும், தானியங்களையும், மழையிலிருந்து காப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.

மாலையானதும் மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நடுவானத்திலிருந்து தரையைத்தொட வெளிர்;நீலத்தில்; இறங்கிய நீண்ட மின்னற்கொடிகள் செவ்வூதாவாகி செஞ்சிவப்பாகிப் பொறித்ததில் பர்வதமொன்று பிளந்து உருண்டதுபோலும் அண்டம் உலுக்கப்பட்டு அதன் அதிர்வுகள் வியாபித்து வாழ்ந்தன. மழை மெல்ல மெல்ல வலுத்து நடுநசியில் உக்கிரமாகியது. சூறாவளியும் தன்னை மக்கள் சீக்கிரத்தில் மறந்து விடுதலாகாதென்று பின்னிரவில் மீண்டும் கோதாவுக்கு வந்திறங்கித் தன் வீரப்பிரதாபங்கள் அனைத்தையும் காட்டிச் சுழன்று சுழன்று சமராடியது.

வடக்குத் தெற்காக வீசிக்கொண்டிருந்த சூறாவளி ஒரு தரம் உச்சிவிட்டு தெற்கு வடக்காக சுழன்று பாட்டத்தில் கிடந்த ஆத்தியை உருட்டி வளவின் மூலையில் எங்கோகொண்டுபோய் ஒதுக்க, எங்கள் வீட்டு ஓடுகள் முழுவதும் காற்றுடன் அப்பளமாய் எழுந்து பறக்குந்தட்டுக்களாய் பறந்து முற்றத்தில் கலிங் கலிங்கென விழுந்து நொறுங்கிக்கொண்டிருக்க, வானச்சமுத்திரம் தலைகீழாகப் புரண்டு வீட்டினுள் நேராகப் பிரவகித்தது.

.. .. .. .. .. .. ..

03.02.2001 பெர்லின். (காலம் 2002-- கனடா)