Montag, April 04, 2005

கதறீனா

-பொ.கருணாகரமூர்த்தி-

அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப் போர்வை தந்த கதகதப்பில்; பாவனி பூனைக்குட்டியைப்போல் பக்கத்தில் முடங்கித் தூங்கிக்கொண்டிருக்கிறாள். படுக்கைஅறை போன் உறுத்தாமல் கூக்காட்டுகிறது. அதற்குள் விடிந்துவிட்டதா என்ற ஆச்சர்யத்தில் மணிக்கூட்டைப் பார்க்கிறேன்......... இல்லை விடிந்திருக்கவில்லை மணி ஒன்றரைதான் ஆகியிருந்தது. போனில் யாருடைய அழைப்பென்று பார்த்தேன். என் அலுவலகத்திற்கு வந்த அழைப்பொன்றே தன்னியக்கமாக என் போனுக்குத் தரப்பட்டிருக்கிறது . முன்பொருமுறை இப்படித்தான் ஒருவருக்கு அகாலவேளையொன்றில் போன் பண்ண நேர்ந்தபோது அவருடைய தானியங்கி பேசியது: "தோழரே உலகந்தான் பாதியாகக் கிழிந்துபோனாலும் இவ்வேளையில் என்னால் ஒன்றும் ஆகப்போறதில்லை. ஆகையால் தயவுசெய்து நாளை காலை தொடர்புகொள்ளவும். நன்றி."
இனி என்ன எழும்பியதுதான் எழுப்பியாயிற்று......... பேசிவிடவேண்டியதுதான்.
"ஹலோ..........வணக்கம். இணைப்பில் இங்கே கணியன்."
" வணக்கம்! திரு.கணியன்......... நான் ஜொகான் பம்பேர்க்......... ஹில்சென்பா·க்கிலிருந்து பேசுகிறேன். தங்களுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடிய வேளையில் போன்செய்ய நேர்ந்தமைக்கு முதலில் பொறுத்தாற்றவும். "
" பரவாயில்லை........... அதுவும் என் தொழிலில் ஒரு பகுதிதான்........ நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள்."
" ஸ்ரீ£லங்கன் தமிழ் பிரஜை சம்பந்தப்பட்ட வழக்கொன்றுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர் இங்கே உடனடியாகத் தேவைப்படுகின்றார்."" என்ன பொலீஸ் வழக்கா? ""இல்லை........ இது கொஞ்சச் சொத்துக்கள் சம்பந்தமான குடிசார் வழக்கு...... இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒப்பந்தமொன்று. "" சரி........... எங்கே எப்போது ? "" வின்டர்பேர்க் குடிசார்மன்றில் காலை பத்துமுப்பதுக்கு."" அது முன்னூற்றைம்பது கிலோமீட்டருக்கு மேலிருக்குமே ஏன் நீங்கள் முன் கூட்டித்தெரிவிக்கவில்லை? "" முதலில் நீதிமன்றமே சீகன் சர்வதேச மொழிபெயர்ப்பு பணியகம் மூலம் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாடு சென்றிருந்த அவர்களின் மொழிபெயர்ப்பாளர் உரிய நேரத்துக்குத் திரும்ப முடியவில்லையென்று ·பாக்ஸ் கொடுத்திருப்பதாக இப்போது அறிவிக்கிறார்கள்......... அதனால்தான் பிரச்சனை......... மன்னிக்கவும். "
" தவணை எடுக்கவே முடியாதா? "
" காலதாமதம் மேலும் சிக்கல்களைத்தான் அதிகரிக்கும். சீக்கிரம் முடித்துவிடவே விரும்புகிறோம்." " சரி. பொறுங்கள்.............. இன்றைய என்வேலைத்திட்டத்தைப் பார்க்கிறேன்." நல்லகாலம் . அன்றைக்கு அதிமுக்கியம் என்று கருதமுடியாதவையும் பின் போடத்தக்கவையுமான சில பணிகளே இருந்தன.
" ஓகே......... என்னால் சமூகமளிக்க முடியும்."
" மிக்க நன்றி.......... வணக்கம்."
மீண்டும் படுக்கைக்குத் திரும்பினேன்.டெலிபோன் சம்பாஷணையால் விழித்துக்கொண்ட பாவனி என் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டு விபரம் கேட்டாள்.
" என்ன கேஸாமோ? "
" ஓம்............ கேஸ்தான். "
" எங்கே....... எப்போ? "
"வின்டர்பேர்க்கில........... காலமை."
" அது போலந்து பக்கமல்லே............. அதால போடர் பாய்ஞ்சு வந்த நம்ம சனம் யாரும் மாட்டிட்டுதோ? "
" இல்லை இந்த இடம் இன்னும் கொஞ்சம் தென் மேற்கே........... இதேதோ சொத்து சம்பந்தமான ஒப்பந்தமாம்........... இப்பதான் நம்ம ஆட்களும் நிறைய வீடு......... கடை......... ......... நிலமென்று வாங்குகிறார்களே......... ஏதுமப்பேர்ப்பட்ட பிரச்சனையாகவிருக்கும். நான் போன்ல விபரம் கேட்கேல்லை ......... தட்'ஸ் அன்·பெயர்."
" அவசரமாமோ? "
" தவணைக்கு முடிக்க விரும்புது பார்ட்டி. "
" நாலைந்து மணி நேர டிறைவிங் வருமே......... ஏலுமேப்பா உங்களுக்கு? "
"திடீரென்று ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு முடியாமல் போறதால ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்க உதவுறதில ஒரு சந்தோஷம். அதோட புதிசா ஊரிலேயிருந்து உதவியென்று வந்திருக்கிற கடிதங்களுக்கு இதில வர்ற சம்பளமும் டிராவலிங்பட்டாவும் உதவும். "
"சரிதான்........ உங்களைத் தனியாய் விடுறதும் றிஸ்க்......... அப்போ நானும் வாறன் . "
" வாட்........ எ பிறிட்டி ஐடியா......... ஐ அப்பிசியேற் யுவர் பிளெஷர் கொம்பனி டார்லிங். காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே........அவன் காரியம் யாவினும் கைகொடுத்து......."
" போதும்....... கவிஞரே போதும்! "
நிச்சயம் என்னைப்போலவே அந்தக் கவிஞனும் அனுபவிச்சிருக்கவேணும்.
" சரிசரிசரி.......குளிர்றதேபோதும் எக்ஸ்றா வேணாம்............ எத்தனை மணிக்கு இறங்கிறோம் ? "
"ஒருநாள்போல ஒருநாள் இருக்காது. ஸ்கூல்ஸ் வக்கேஷன்ஸ் முடியிற டைம் ' ஹைவே 2 ' வில போக்குவரத்து இறுகச் சந்தர்ப்பமிருக்கு. ஒரு நாலரை ஐந்துக்கே இறங்கிவிடுகிறது சே·ப் அன்ட் பெட்டர். "
பாவனி வள்ளுவன் காலத்திலும் வாசுகியின் ஒன்றிவிட்ட சித்திமகளாகவேனும் கொஞ்சக்காலம் வாழ்ந்திருக்க வேண்டும். அக்காலத்தில் இருந்ததாக நம்பப்படும் வழக்கங்களின் எச்சங்கள் மிகமிக அதிகம் . தானே அலாரம் வைத்து நாலுமணிக்கு எழும்பிக்கொண்டு கொஞ்சம் பியர்ஸ் ஆப்பிளன்ன பழவகைகளோடு வழிக்கொறியலுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ¤ம் பிளாஸ்க்கில் கோப்பியும் எடுத்துத் தானும் உடுத்தித்தயாராகிக்கொண்டு எனக்கு முகம் கழுவியவுடன் குடிப்பதற்கான நெஸ்கபேயையும் எடுத்துக்கொண்டுவந்து தன் குளிர்ந்த கைகளை என் கண்களில் இதமாக ஒற்றி என்னை எழுப்பினாள்.
ஆனால் ஒன்று காருக்குள் ஏறினதுமே சீமாட்டிக்குக் கண்கள் வலியம் டபிள் டோஸ் அடிச்சதுபோல ஒருமாதிரிச் சொருகிக்கொண்டுபோகும். பாவனி எப்போதாவது நித்திரைவராமல் அவஸ்த்தைப்பட நேர்ந்தால் ஆளை காருக்குள் சும்மா உட்காரவைத்துவிட்டு அதை ஸ்டார்ட் பண்ணிவிட்டால் போதும்........ அடுத்த நிமிஷமே "ஹொர்....ஹொர்' கேட்கும்.
பாவனியின் கண்கள் தூக்கக்குறைவால் சிவந்து சொக்கிக் குறாவிக்கொண்டிருக்கின்றன. அவளைப் பேசவைக்கிற மாதிரி ஏதாவது பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது கிச்சக்கிச்ச மூட்டிக்கொண்டிருக்கவேணும் அல்லது கார் ஹைவேயில் ஏற முதலே அவள் 'ஸோலோ' வாசிக்கத்தொடங்கிவிடுவாள். காரை ஓட்டிக்கொண்டு இரண்டாவதைப் பண்ணமுடியாதாகையால் நான் முதலாவதைப் பரீட்சித்தேன்.
"முன்னாலை போகிற புதுமொடல் நிசான் மிக்கிறா தௌசனின் பின்பக்கத்தைப்பார்த்தீரா? " அசுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு
"ஏன் உங்களுக்குத் தெரிஞ்ச ஆட்களாருமதில போகினமோ?'' என்றாள்.
"இல்லையப்பா காரின்ரை பின் ஷேப்பைப்பாரும்......... பார்க்க உமக்கு என்ன தோன்றுதென்று சொல்லும்? "கொட்டாவி விட்டபடி மீண்டும் எனது வில்லங்கத்துக்காகப் பார்த்தாள். பார்த்துவிட்டு
"ஏன் எப்பிடியிருக்கு? "
"அதின்ரை ஹ¥ட்டும் பொடியும் சேர்ற இடம் ஒரு பெண்ணின்ரை இடுப்பு மாதிரி அழகாய் ஒடுங்கேல்லை? ""அடடடடடடா............... மிக்கிறா மினி மைனருக்கு இடுப்பு......... சிற்றோனுக்கு மூக்கு......... பீட்டிலுக்கு முழி......... மொண்டியாவுக்கு சொக்கு......... சியாறாவுக்குச் சிரிப்பு தெருவிலபோகிற காருகளிலுமே உங்களுக்குப் பெண்டுகள் அம்சமாகவே தெரியுது. நல்ல ஒரு சைக்கியார்டிஸ்டைப் பார்த்து முதல்ல இதைச் சுகப்படுத்தலாமோவென்று கேட்கவேணும்."
" இருக்கட்டுமே........... அது என்னுடைய சார்ப் சென்ஸ் ஒப் டேஸ்ட் ......... ஒரு ஒப்பீடு ......... ஒரு அழகியல் தரிசனம்......... அதை நானொரு பலவீனமாய் ஒரு போதும் நினைக்கேல்ல. "
"அப்பிடியே இருக்கட்டும் ராஜா........இருந்தால் அதுகளை வெளியே பினாத்தாமல் உனக்குள்ளேயே வச்சிரன் கண்ணா. "
" இந்தப் பூமியில காதல் மயக்கங்கள் கல்யாணம் இதுகளெல்லாம் இன்னும் இருக்குதில்ல? "
" ஸோ............வாட்? "
" சோபனமும் இளமையும் மிக்க குமரியே..........உன்னோடு கொஞ்சவும் ஸ்பரிசிக்கவும் முயங்கவும் எனக்கு இச்சையாகவுள்ளது என்பதுதான் உண்மையும் நோக்கமுமாகவுமிருக்க அதை ஒப்பனை பண்ணி 'மயிலே உன்னிடம் மயங்குகிறேனென்றோ'......... 'அழகே உன்னை ஆராதிக்கறேனென்றோதானே' பயலுகள் பசப்புறாங்கள்? சில பெண்ணியவாதிகள் மறுக்கிறார்கள் என்கிறதுக்காக பெண்ணினத்தின் மேல் ஆண்களுக்கு அனாதியிலிருந்தே வரும் ஆகர்ஷிப்பு மாறிவிடுமா? இப்போ நீர் என்னுடைய பெஸ்ட் ·ப்றென்ட் என்கிறதால என்னுடைய உணர்வுகளை பூச்சில்லாமல் உம்முடன் பகிர்ந்துகொள்றன்......... படுக்கை அறையில மாதிரி. "
" கிழித்தீர்......... பூப்போல 'பொண்ணு' ஒன்று என்று எதிர்ல பக்கத்தில வாற கார்கள் எதிலாவது சொருகிவிடாமல் நிதானமாய் ஓட்டப்பாரும். "
உதடுகளைச் சுழித்தொரு வலிச்சம் காட்டினாள்.
" காரிகைகளின் அம்சங்களைப் பார்த்துத்தான் காரையே மனுஷன் இணக்கினானென்கிறதைச் சொல்ற பரிபாடல் கவிதை ஒன்றிருக்கு தெரியுமோ? "
" பரிபாடலென்றால்...? "
"அழிஞ்சுபோகவிருந்த சங்கத்தமிழ் இலக்கியம் ஒன்று தற்செயலாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சாவாலே காப்பாற்றப்பட்டது."
" வேண்டாமென்றால் விடவா போறியள்.............கொஞ்சம் எளிமையாய் விளங்கிற வகையாயிருந்தால் சொல்லுங்கோ."

"நின் சொகுசும் தண்மையும் 'பென்ஸ¤'ள

நின் நளினமும் பாந்தமும் 'சிவிக்'குள
நின் கந்தமும் ஜொலிப்பும் 'கியா'வுள
நின் சந்தமும் இசையும் 'மொறிசு'ள
நின் எளிமையும் மிருதும் 'கோல்·'புள
நின் சாந்தமும் காந்தியும் '·பியட்'டுள
நின் வேகமும் துடிப்பும் 'றெனோ'வுள
நின் உழைப்பும் உறுதியும் 'சாப்'புள
நின் ஒளிப்பும் ஒண்மையும் '·போட்'டுள. "

" இப்படிச் சந்தமும் வேகமும் மிருதும் காருகளில மட்டுமிருக்க நீங்கள் மட்டும் சௌவ்ளே......... டொச்சு வைக்கல் லொறியள் மாதிரி விட்ட விட்ட இடத்திலேயே நகராமல் முக்கிக்கொண்டிருந்து மற்றவையின்ரை உயிரை எடுப்பியளாக்கும்? "
" அதுதானே கிளி உங்களோடையே நாங்கள் சாகிறது? "
" முந்தி ஒருநாள் வாசுவின்ர வை·ப் மாலதியை சின்ன மேக் எண்டாலும்....... மொறிஸ்மைனர் மாதிரிச் செக்ஸியாய் இருக்கிறாள் எண்டனீங்கள்............ இப்பிடித் தறிகெட்ட கற்பனைகளோட தெருவிலபோற காருகளிலேயே கிண்ணென்றிருக்கிற மாரைப்பார் மடியைப்பாரென்கிற மனுஷனென்று தெரிந்திருந்தால் பப்பா உங்களுக்கு என்னைத் தந்தேயிருக்கமாட்டார்.......................... ம்ம்ம்ம்ம்ம்ம் . "
" இந்தக் கவிதைகள் எழுதிறவங்கள் இருக்கிறாங்களே அவங்களுக்குக் தோன்றுகிற கிறுக்கல்களை எதுக்கு நாலு பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கிறாங்கள் தெரியுமே.......... சிலவேளை தங்களைப்போலை கற்பனை வேறும் நாலுபேருக்கிருந்து ரசனையை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தலாமென்றொரு ஆதங்கந்திலதானே? "
" இப்படி வந்து நடுவழியில உங்களோட ராவுப்படறதுக்கு 'ராமா'வென்று நான் வீட்டிலேயே இருந்திருப்பன்."தலையில் அடித்துக்கொண்டாள். " யார் அந்த வில்லன்? " " சாவக்கொல்லுவன். "
" அப்ப நான் யாரோடை ராவிறதாம்? "
விரையும் சாலையிலிருந்து என் பார்வையை விலக்காமலே என் ஞானவலயத்தின் பக்கப்புலன்களால் பாவனி கண்களைச் சுழற்றி என்னைத் துளைப்பதை உணர்கிறேன்.
" வீட்டில விட்டிட்டு வந்திருந்தால் உடனே 'விசுக்'கென்று ஒரு சேலையைச் சுத்திக்கொண்டு கோயிலுக்குப் போய் "அப்பனே மயூரபதியப்பா............... என் கர்ப்பத்தை அநியாயமாய் இப்படித் தள்ளிக்கொண்டே போறியே..... அந்தக் காலவெளியை ஈடுசெய்யிற மாதிரி இரட்டைக்குழவிகள்ல மூன்றாய்க் கொடுத்திடப்பா'வென்று முட்டியிருப்பீர்."
நான் வண்டியை விரட்டுவதற்கு இடையூறில்லாமல் லேசாய் என் வலது தோளில் சாய்கிறாள். பின் இருவரிடையே வேண்டாதொரு மௌனம் கனக்கிறது. குழந்தை பற்றிப் பேச்சு வந்தால் பாவனி இப்படித்தான் அடிக்கடி மௌனமாகிவிடுவாள்.
காரை நூற்றிநாற்பதுக்கும் நூற்றிஐம்பதுக்குமிடையில் விரட்டியதாலும் ......... நவீன அறிவியலின் கைங்கரியமான ஆட்டோ நவிகேட்டரின் துல்லியமான வழிகாட்டலாலும் பத்து மணிக்கெல்லாம் நீதிமன்றின் வளாகத்துள் நுழைந்துவிட்டோம்.
எங்கள் தலைக்கறுப்பைக் கண்டதுமே காத்திருந்த இரண்டு ஜெர்மன்காரர்கள்; நேராக எம்மிடம் "குட்டன் மோர்கன்'' என்றபடி வந்து கைலாகுதந்து "நான் ஜொகான் பம்பேர்க்......... இவர் என் சகோதரர் திரு. கெவின் பம்பேர்க்......... இன்னும் ஒரு சகோதரர் திரு. மத்தியாஸ் ஸ்மிட்த்தும் சகோதரி திருமதி. சப்றினா ஹொ·ப்மானும் கூட வந்திருக்கிறார்கள். நீங்கள் திரு.கணியன்............ கூட வந்திருக்கும் இளம்மாது உங்கள் உதவியாளராக இருக்கலாமென்பதும் எம்கணிப்பு. '' என்றனர் விநயமாய். "அவர் என் மனைவியுங்கூட.........'' என்றேன். " முற்றிலும் பொருத்தமானவர்தான் '' என்று முகமனுக்குக் கூறிவிட்டு எங்களை மேலே கூட்டிச்சென்றனர்.
"இன்னும் அரை மணிநேரம் இருக்கிறதே......... நாங்கள் எதிரிலிருக்கிற கா·பேரீறியாவில் ஒரு கோப்பி குடித்துவிட்டு வாறமாதிரி உத்தேசம்'' என்றேன்." கவலையைவிடுங்கள் காலை ஆகாரமே உங்களுக்காக மேலே தயாராகவுள்ளது.'' என்று முதலாம் மாடியில் எங்களை ஒரு விசாலமான ஓய்வு அறைக்குள் அழைத்துச்சென்றார்கள். அறையின் மையமாக இருந்த பெரிய மேசையில் எமக்கான காலை ஆகாரம் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது.நாங்கள் காலை உணவை முடிக்கும்வரை நல்ல தாதியரைப்போலக் கூடவிருந்து உபசரித்தவர்கள் எம்மிடம் தேர்தெடுத்த வார்தைகளில் தந்திக்குரிய சிக்கனத்துடனும் விழிப்புடனும் அளவாகவே உரையாடினார்கள். சாப்பாடானதும் எடுப்புத்தொலைபேசிகளை அணைத்துவிட்டு நேரே விசாரணை மண்டபத்துள் நுழையவே நேரம் சரியாயிருந்தது.
விசாரணை நடைபெறும் மண்டபவாசலில் இருந்த அறிவிப்புப்பலகையில் அன்று விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளில் அது இரண்டாவது எனவும் இதர சுருக்க விபரங்களும் அச்சிடப்பட்டிருந்தன.

தேதி: 13.03.2002
வழக்கு இலக்கம் : 08 05 54
நேரம் 10:30 மணி
வாதிகள்: (1) திரு. ஜென்ஸ் பம்பேர்க். (2) திரு.கெவின் பம்பேர்க். (3) திருமதி. சப்றினா ஹொ·ப்மான்......... (4) திரு. மத்தியாஸ் ஸ்மிட்த்.
வாதியின் சட்டநெறியாளர்: திரு.பீட்டர்ஸ் ·பிறிடெறிக்.
பிரதிவாதி: திருமதி. கதறினா எலிசாராணி பம்பேர்க்சட்டநெறியாளர்: ------------
நீதிபதி : திருமிகு. கார்லோஸ் லுக்ஸம்பேர்க்
சரியாகப் பத்து முப்பதுக்கு உள் நுழைகிறோம். பிரதிவாதியான தமிழ்ப்பெண் எப்படி இருப்பாரோ என்று அறிய ஆவலாக இருந்தது. முன் நாற்பதுகளில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்தார்கள்.
சாம்பல் நிறத்தில் பெரியகொலர் வைத்த புல்லோவரும் கணுக்காலுக்கு மேல் ஒரு சாண்வரை வரும் கறுத்த முக்கால் பாவாடையும் அணிந்திருந்தார். வழக்கு ஆரம்பிக்கும்வரையில் இரண்டு கைவிரல்களையும் கோர்த்துப் பின்னி நெஞ்சுக்கு நேரே வைத்துக்கொண்டு கண்களைமூடி தேவனுடன் எதையோ விசாரஞ்செய்பவரைப்போல முகத்தில் பரவும் விகாசத்துடன் இருந்த அவர் தோற்றம் அங்கி அணியாதவொரு கன்னியாஸ்த்திரி ஜெபித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. ஒடிசலான தேகம் கறுத்தமுரசும் லேசான மிதப்புப் பல்வரிசையோடு ஒரு சந்நியாசினியைப்போலிருந்த அம்மாதை பம்போர்க் எனப்படும் ஜெர்மன்காரர் நிச்சயமாகப் பாலியல் நோக்கங்களுக்காகத் திருமணம் செய்திருக்கமாட்டார்.
ஜெர்மன் நீதி மன்றங்கள் ஒன்றும் உயரமான ஒரு அரைவட்ட டெஸ்க் சாட்சிக்கூண்டுகளென்று இந்திய சினிமாக்களில் வருவதைப் போலிருக்காது. ஒரு சிறிய கல்லூரி விரிவுரைமண்டபத்தைப் போலிருக்கும். நீதிபதிக்குச் சமதையாக அவர் எதிரிலேயே வாதி, பிரதிவாதி, சாட்சிகள், சட்டத்தரணி, மொழிபெயர்ப்பாளர்கள், பதிவாளர், எழுத்தர், உதவியாளர்கள், பொலீஸ் வழக்காயின் பொலீஸ்காரர்கள் அனைவரும் அமர்ந்து பேசலாம். விசாரணைகளின்போது யாரும் கைகட்டி நிற்பதோ; போலி பவ்யம் காட்டுவதோ இல்லை.
எதிரிலிருப்பவர்களை ஊடுருவித்துளைப்பது போன்றதொரு பார்வைகொண்ட நீதிபதி அவரது நீண்ட கறுத்த அங்கியைப் பெண்பிள்ளைகளைப்போல மடித்துக்கொண்டு தனது ஆசனத்தில் அமர்ந்தவுடனேயே வழக்கு ஆரம்பிப்பதாக அறிவித்தார்.
பிரதிவாதியின் பக்கத்தில் எனக்கு ஆசனம் போட்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் பாவனி . பார்வையாளர்களென்று எவருமில்லை. வழமைபோல் முதலில் வாதிகளின் அறிமுகம். பின்னர் பிரதிவாதியின் அறிமுகம். அதைத்தொடர்ந்து வழக்கின் விபரத்தை நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு வரிகளாக ஒரு உத்தியோகத்தர் வாசிக்கவும் நான் அதை பிரதிவாதிக்குத் தமிழ்ப்படுத்தப் பணிக்கப்பட்டேன். திருத்தங்கள் இருக்குமாயின் பிரதிவாதி சுட்டிக்காட்டின் அவை கவனத்துக்கு எடுக்கப்படுமெனவும் நீதிபதி சொன்னார்.
" கதறினா எலிசாராணி செபஸ்டியான்புள்ளே என்னும் கன்னிப்பெயருடையவரும்......... 1961ம் ஆண்டு வைகாசி மாதம் 17ந்தேதி ஏத்துக்கால் நீர்கொழும்பு ஸ்ரீ£லங்காவில் பிறந்த இலங்கைப் பிரஜையுமாகிய நான்."
" சரி. "
" 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம்தேதி கொழும்பிலுள்ள ஜெர்மன் தூதுவராலயத்தில் கொழும்பு மத்தியபகுதி விவாகப்பதிவாளர் முன்னிலையில் ஜெர்மனி லூணபேர்க்கில் 1936ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் தேதியன்று பிறந்தவரும் பெர்லினர் வீதி. 25......... ஹில்சென்பா·கை வதிவிடமாகக்கொண்டவருமான திரு. வேர்ணர் பம்பேர்க் என்னும் ஜெர்மன் பிரஜையை விவாகப்பதிவு செய்துகொண்டதன் மூலம் திருமணம் செய்துகெண்டேன் .........."
" சரி."
" 17.08.2001 இயற்கை எய்திவிட்ட திரு. வேர்ணர் பம்பேர்க்கின் பிள்ளைகளாகிய திரு. ஜென்ஸ் பம்பேர்க். திரு.கெவின் பம்பேர்க். திருமதி. சப்றினா ஹெல்முட். திரு. மத்தியாஸ் ஸ்மிட்த் ஆகியவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உபகாரமாத் தரும் இருபதினாயிரம் ஜெர்மன் மார்க்குகளைப் பெற்றுக்கொண்டு அதன் பிரதியுபகாரமாக திரு. வேர்ணர் பம்பேர்க்குக்குச் சொந்தமான அசையும் அசையாச் சொத்துக்களிலும் ......... அவரது பிறமுதலீடுகளெதிலும் இனிமேல் பாத்தியதை அதாவது உரிமை கொண்டாடமாட்டேனென்று இம்மன்றில் உறுதி மொழிகின்றேன்."
மூன்றாவது நீண்ட வசனம் வாசிக்கப்பட்டதும் எனக்குள் தட்டிய பொறியில் வழக்கின் தன்மையும் அத்தோடு இருக்கக்கூடிய அனைத்துச் சதிகளும் ஓடி வெளித்தன.
கதறீனாவை வேர்ணர் பம்பேர்க் என்கிற ஜெர்மன்காரர் இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
வாதி : 4 மத்தியாஸ் ஸ்மித் என்பவர் வாதிகளின் தந்தையான வேர்ணர் பம்பேர்க்கின் சட்டரீதியல்லாத இன்னொரு மனைவியின் புத்திரன்.
இறந்ததாகச் சொல்லப்படும் இந்த ஜெர்மன்காரின் இந்த அப்பாவி விதவையின் பேதமையைப் பயன்படுத்தி அவரின் முதல் இரண்டாவது தாரத்துப் பிள்ளைகளாகச் சொல்லப்படும் இக்கிங்கிரர்கள் ஆளுக்கு இருபதினாயிரம் மார்க்குகள் என்றொரு சிறிய எலும்பை முன்னால் எறிந்துவிட்டு கிழவரின் அனைத்துச் சொத்துக்களையும் சுருட்டுவதற்கு கூட்டுச்சேர்ந்து சூழ்ச்சி பண்ணுகிறார்கள். வாக்குமூலஒப்புதல் சட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி என் கண்முன்னாலே கோழியைக் கேட்டுக் குழம்புவைக்கின்ற சதியொன்று அரங்கேறப்போகிறது. இந்தப்பிரச்சனையில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. இவ்வளவு கால வாழ்வனுபவமிருந்தும் இத்தனை பேதையாக இருக்குமவர்மீதெனக்குக் கோபம் கோபமாக வருகிறது. கூலிக்கு நாற்று நடவந்தவன் எல்லைக்கு வழக்குப் பேசுவதெங்கனம்?
" அதென்ன தம்பி அசையும் அசையாச் சொத்துக்கள்? "
நிதானமாக விளக்கினேன்.
" பிற முதலீடுகளென்றென்னவோ சொன்னாங்களே...........? "
" அவர் ஏதாவது கொம்பனிகளிலே தொழில்துறைகளிலே இன்வெஸ்ட்மென்ட் செய்திருப்பார் ......... பங்குகள் வைத்திருப்பார். அந்தச் சொத்துக்களிலும் பங்கு கேட்கமாட்டேனென்று."
சொல்லப்பட்ட விஷயம் எத்தனை வீதந்தான் புரிந்ததோ தெரிவில்லை. மனுஷி மலங்க மலங்க என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
என் முகத்தை வெகுஇயல்பாக வைத்துக்கொண்டு
" அம்மா.....இஞ்சைபாருங்கோ இவங்கள் உங்களை நல்லாய்ச் சுத்தப்பார்க்கிறாங்கள்......... அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கென்று உங்களுக்குத் தெரியாதுதானே. அவர் சொத்துக்களின் முழுவிபரத்தை எனக்குத் தெரிவித்த பிறகுதான் அதுபற்றி நான் முடிவுசொல்லாமென்று சொல்லுங்கோ. இப்பவே முடிவுசொல்ல வேண்டிய அவசியமில்லை......... தாராளமாய்க் கால அவகாசம் கேட்கலாம்......... கேளுங்கோ.'' உதவ முயன்றேன்.
நான் சொன்னவை அவரைப் பாதித்ததாகவோ; நான் காட்டிய கோணத்தில் அவற்றை அவர் புரிய முயன்றதாகவோ தெரியவில்லை. தொடர்ந்தும் வெகுளியாகவே முழித்துக்கொண்டிருந்தார்.
" கண்ணின் மணிபோல என்னை வைச்சுக்காத்த என்ரை பம்பேர்க் மகராசனே இல்லையாம்..........எனக்கேன் தம்பி அவங்கட சொத்து......... அது அவங்கடதானே? "
போச்சுடா........... அதைச்சொல்லிமுடித்ததும் அவருக்குப் பொலுக்கென்று கண்ணீர் கொட்டிற்று. டிஸ¤வை எடுத்து ஒத்திக்கொண்டார்.
நீதிபதி " பிரதிவாதி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார் போலிருக்கிறதே என்ன விஷயம்? '' என்றார் ஆர்வத்துடன்.
" அவருக்கு தன் கணவரின் நினைப்பு வந்துவிட்டதாம்......... அவர் எப்படித் தன்னைக் கவனித்துக்கொண்டாரென்பதைச் சொல்கிறார்."
"பிரதிவாதி இவ்வழக்கு சம்பந்தமான விஷயங்களை மட்டுமே இங்கு பேசலாம்."
" உணர்ச்சிவசப்படவேண்டாம்........... எங்கிறார் தலையாரி. '' என்றேன்.
" ஐ குட் நொட் கீப் எவே ஹிஸ் தோட்ஸ் மை சண்........ இட்ஸ் இம்பொஸிபிள."
" அம்மா உந்தப் பாஷை அவங்களுக்கும் கொஞ்சம் விளங்கும் ......... பிறகு கதை கந்தலாய்ப்போயிடும். எங்கட பாஷையில மட்டும் கதையுங்கோ."
"எந்த மசிராண்டிக்கெண்டாலுந்தான் எனக்கென்ன பயம்? "
திருமதி . கதறீனா பம்பேர்க் யாருக்கும் பயப்படவேண்டியதில்லைத்தான்......... அவர்தான் ஒப்பந்தமெதுவும் செய்துகொள்ளமாட்டேன் முடியாது என்று மறுத்துவிடுவாரோவென்று அவரை ஒரு நரிக்குரிய தந்திரப்பார்வையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வாதிகள்தான் உள்ளுக்குப் பயந்துகொண்டிருக்கிறார்கள்."இம்பொசிபிள்'' என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மனுஷி ஏதோகுறுக்கே இழுப்பதாகப் புரிந்துகொண்ட (வாதி:1) ஜென்ஸ் பம்பேர்க் கலவரமானான். அமைதி இழந்து கைகளைப் பிசைந்துகொண்டிருந்தான்.
நான் சூசகமாகச் சொல்வதைப் பற்றிக்கொள்ளும் வல்லபம் அவரிடம் அறவே இல்லை. நான் மனுஷியை மீண்டும் நாசூக்காக உசார்ப்படுத்த முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.மன்றில் அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமேல் அவரோடு வலிந்து மல்லுக்கட்டி எதையும் புரியவைக்க முடியாது. மேலும் இதிலுள்ள றிஸ்க் என்னவென்றால்............ அங்கு சொல்லப்படுவதைவிடவும் அதிகமான வார்த்தைகள் உபயோகித்து பிரதிவாதியுடன் உரையாடினேனாயின் அது நான் பிரதிவாதிக்குப் புத்திமதி சொல்வதான சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்கள் என் மொழிபெயர்ப்பை முழுவதும் மறுதலிக்கலாம்.
நான் பணியை சரியாகத்தான் செய்தேனா என்பதை உறுதிப்படுத்தவும் இரண்டாவது ஒப்பீட்டுக்காகவும் அவர்கள் என் மொழிபெயர்ப்பை எனக்குத் தெரியாமலேயே ஒலிப்பதிவுகூடச் செய்யலாம். பிரதிவாதி சொல்வதை உடனடியாக அப்படியே பெஞ்சுக்குச் சொன்னேனாயின் விஷயம் உடனேயே முடிவுக்கு வந்துவிடும்.
நான் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு முரணானதுதான்......... எனினும் என் ஆற்றாமையில் பிரதிவாதி சொல்வதை நீதிபதியிடம் சொல்வதுபோன்ற பாவனையுடன் சொன்னேன்.
" குழப்பமாகவுள்ளது........... நிதானமாகத்தான் முடிவுசெய்யவேண்டும் என்கிறார்."
முதலாவது மகனுக்கு வந்த சினத்தில் முகம் சிவந்தது. எழும்பி நாலரைக்கட்டைச் சுதியில் கத்தினான்:
" எங்கள் நிபந்தனைகளை ஏற்கெனவே அவருக்குச்சொல்லியிருந்தோம். அவர் தனக்குச் சம்மதம் என்றும் அதை இன்று சட்டமூலம் உறுதிசெய்வதாகவுந்தான் இங்கு வந்தார். இப்போ முரண்படுவது எங்களை ஏமாற்றுவதாகும்."
" உவன் ஏனாமணை முக்கிறான்........? '' என்றார் கதறீனா.
நீதிபதியிடம் கேட்டேன்.
"வாதி நம்பர்:1 என்ன சொல்கிறாரென்று பிரதிவாதி கேட்கிறார்.........? "
நட்பான தோரணையில் 'சொல்லும்படி' சைகை காட்டினார்.
" நீங்கள் தங்களுடைய நிபந்தனைகளுக்குச் சம்மதப்பட்டுத்தான் வந்தீங்களாம் என்கிறான். ஒன்றுக்கும் அவசரப்படாதையுங்கோ நிதானமாய் யோசியுங்கோ நிதானம். நிதானம்! "
" நான் மறுப்பேதும் சொல்லேல்லையே? "
அவரை நோக்கி முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு
"அம்மா.............. இதை நல்லாய் நுட்பமாய் கவனியுங்கோ......... இங்கே ஒருக்கால் ஒத்துக்கொண்டால் ஒத்துக்கொண்டதுதான் பிறகு மாத்திச்சொல்லவோ, வாபஸ் வாங்கவோ முடியாது. அவங்கள் செய்யவிருக்கிற ஒப்பந்தத்தில பாவிக்கிற வாசகங்களைப் பார்த்தால் உங்கள் கணவருக்கு நீங்கள் நினைக்கிறதைவிட அதிகம் சொத்துக்கள் இருக்குப்போலயிருக்கு. அவருக்கிருக்கக்கூடிய முழுச்சொத்துக்களில் சட்டத்தின்படியும் தர்மத்தின்படியும் ஐந்தில் ஒரு பங்காவது உங்களைச் சேர்ந்தாகவேண்டும். சொத்தின்ரை மொத்தப்பெறுமதி தெரியாமையிருக்கையில இந்த எண்பதினாயிரம் ஒரு மூக்குப்பொடியாய்க்கூட இருக்கலாம். முழுச்சொத்து விபரத்தையும் கேட்கிற அதிகாரமும் உரிமையும் உங்களுக்கு இருக்கு............ உங்களுக்கு இன்னும் நிறையச் சந்தர்ப்பமிருக்கு. இன்னும் நல்லா யோசிச்சு முடிவைச் சொல்றனெண்டு சொல்லுங்கோ? "
" பிறகேன் அப்பன் இன்னொருவாட்டி உலைவான்? "
இது சரிப்பட்டுவாற கேஸல்ல........... இப்போது எனக்குச் சங்கடமாகவிருந்தது.
அவர் ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தால் அவன் விபரத்தைப் பிட்டுப்பிடுங்கியிருப்பான்.'எவ்வளவு சொத்து காலஞ்சென்ற கனவான் வேர்ணர் பம்பேர்க்குக்கு இருக்கிறதென்று பிரதிவாதிக்குத்தெரியுமா' என்ற கேள்வி பெஞ்சிலிருந்து வராதவரை இக் கூட்டுச்சதிக்கு பெஞ்சும் ஒத்துழைப்பதாகவே எனக்குப் பட்டது. இச்சந்தர்ப்பத்தில் நானொரு சட்டத்தரணியாக இல்லாதிருக்கிறேனே என்று ஆதங்கமாகவிருந்தது.
எதிர்க்கட்சிக்காரரிடம் தனியாய்பேசி அதிக பணத்தை வாங்கிக்கொண்டு தான் ஒப்புக்கொண்ட வழக்கில் தாமே தோற்றுத் தன் கட்சிக்காரரை "அம்போ'வெனக் கைவிடும் பல சட்டத்தரணிகளை நான் இங்கும் பார்த்திருக்கிறேன்.
ஒரு அப்பாவித் தமிழ்ச்சகோதரி கண்முன்னே வஞ்சிக்கப்படுகிறாள். என்னால் எதுவுமே செய்யமுடியாதிருக்கிறது.
கண்ணை மூடி அரை நிமிஷம் சிந்தித்த பின்னால் கதறீனா சொன்னார்:"அவங்கள் நாலு பேருமாய் வலியவந்து எனக்கு எண்பதினாயிரம் மார்க்குகள் தருகிறோமென்று சொல்லுறாங்கள். கர்த்தர் எனக்குத்தர விரும்புகிறது அதுதானென்றால் நான் எதுக்கு மல்லுக்கட்ட வேணும் ? அது சரியுமல்ல.ஒரு மீனுக்கே வகையற்ற அபலை நான் . ஆண்டவனோ இந்த மனிதர்கள் ரூபத்தில் ஒரு ஓடம் நிறைஞ்ச மீனுகளைத் தருகிறான். அதற்குமேலும் கடலிலுள்ள மீன் பூராவும் எனக்குத்தான் என்று ஆசைப்படுவது மகாதப்பு மகன்......... அதர்மம். எதைக்கொண்டு வந்தோம் கொண்டு போவதற்கு? எதைத்தான் இங்கு தேடினோம் இழப்பதற்கு? எவன் தந்தானோ அவனே கொள்வான். எதுவும் தங்காது......... நாம் எல்லாரும் ஓட்டைப்பாத்திரங்கள்தான் வைத்திருக்கிறோம் மகன்.நான் என்னுடையதென்றதுவும் அவர்கள் தங்களதென்றதுவும் எல்லாமே தேவனின் இராட்சியத்துக்கே உரியவை. அவனுக்குச் சம்மதமில்லாத எதுவும் எனக்கு வேண்டாம். அவன் சித்தம் எதுவோ எல்லாம் அதன்படி நடக்கட்டும்.எனக்கென்ன பிள்ளையா குட்டியா சொத்தை வைச்சுக்காக்க.........? விழுகிற இடத்தில புதைக்கப்படப்போகிற ஒரு அகதி. அந்தமனுஷன் பெற்றமக்களுக்கே பாத்தியதையுள்ள பிதுரார்ஜிதங்களை நான் அனுபவிக்கிறது பரலோகத்துக்கே அடுக்காது . அந்த மனுஷனோட வாழ்ந்த சின்ன உறவுக்கு அவங்களாய் மனமொப்பித்தாறது எதுவெண்டாலும் எனக்கு சம்மதமெண்டு சொல்லு மகன். "
பிரதிவாதி புரிதலோடு என்னுடன் ஒத்துழைப்பராயின் எதையாவதுசொல்லி ஒப்பந்தத்தை நிறுத்திவிடலாம். இது பலியாடே ' சீக்கிரம் வெட்டு வெட்டு ' என்கிறது. கீதையின்சாரத்தை ஒரு கிறிஸ்தவப்பெண் மொழிவது வியப்பாயிருந்தாலும் மறுபடியும் மறுபடியும் தரையிலே நின்றுகொண்டு ஒரு லௌகீகியாகவே சிந்திக்கும் எனக்கு அவர் முடிவைப்பாராட்ட முடியவில்லை. வீணாக அவசரப்பட்டு சூழ்ச்சியும் தந்திரமும்கொண்ட இந்த ஒப்பந்தத்தை மன்றில் ஒப்புக்கொள்வதால் அவருக்கு வரவிருக்கும் இழப்புக்களைத் தெரிந்துகொள்ளாமலும் அதையடுத்து நடக்கவிருப்பவற்றை ஊகிக்கக்கூட முடியாமலுமிருக்கும் அவரின் அசட்டுத்தனத்தின்மேல் எனக்குத் தாளமுடியாத எரிச்சலே வந்தது. இனி எதுவும் என்னால் செய்வதற்கில்லை. "இந்தக் குத்தியன்தான் குறுக்கே நிக்கிறான்''என்றொரு வார்த்தை இங்கிலீஷில் வந்துதேயென்றால் என்கதையும் தலைகீழாய்விடும். விஷயம் கைநழுவிப்போகிறதுதான். ஆனாலும் வேறுமார்க்கமில்லை. நான் நாற்றை மட்டும் நாட்டிவிட்டுப்போகும் முடிவுக்கு வந்தேன்.
அவரது பூரண சம்மதத்தை அப்படியே பெஞ்சுக்கு எடுத்துச் சொன்னேன். வாதிகள் அனைவருக்கும் தம் வியூகத்தில் வென்றுவிட்ட ஆனந்தம். அதைக்கொண்டாட அவர்கள் வீட்டில் பெருவிருந்தே ஏற்பாடாகலாம். அனைவரும் அழுத்தம் குறைந்து றிலாக்ஸ் ஆனார்கள். அனைவர் முகத்திலும் அதுவரை இல்லாத ஒரு விகசிப்பு!
இறுதியாக அவ்வொப்பந்தத்தை திருமதி. கதறீனா பம்பேர்க் சுயஅறிவுடனும்......... எவருடைய நிர்ப்பந்தமின்றியும்......... பிரக்ஞைபூர்வமாகவும் செய்கின்றாரென அசகுபிசகுகளுக்கு இடந்தராத சட்டநுணுக்கங்களுடனான வாசகங்களால் புனையப்பட்டு அக்குடிசார்மன்றில் பதிவுசெய்யப்பட்டது.
எம்மைத் தனியறையில் தங்கவைத்தது......... அவர்களாகவே எமக்குக் காலைச்சாப்பாட்டு ஏற்பாடுபண்ணி வைத்திருந்தது......... எல்லாமே வழக்கு ஆரம்பிக்க முதல் நாம் கதறீனாவைச் சந்தித்து அவர்களது ஒப்பந்தம் பற்றித் தெரிந்துவிடாமலிருக்கவும், அவரை உசார்ப் படுத்திவிடாமலிருக்கவும் வாதிகள் பண்ணிய மாயவியூகத்தின் பகுதிகளென்பது இப்பொழுதுதான் புரிகிறது.
மன்றில் சாந்தசொரூபிபோல் தெரிந்த நீதிபதி, மழுங்க மழுங்கச் ஷேவ் செய்து உயர்ரக உடைகளில் கனவான்கள்போலத் தோன்றிய வாதிகள், அவர்கள் சட்டத்தரணி, எவர்மீதும் எமக்கு மரியாதை ஏற்படவில்லை. வழிப்பறிக்காரர்கள்போலவும் ......... சவப்பெட்டி தூக்கிச்செல்ல வந்தவர்கள் போலவும் தெரிந்தார்கள். அம்மன்றின் நிழலில் நிற்கவே பிடிக்கவில்லை. சீக்கிரம் விட்டு வெளியேறினோம்.
தெளிவான வானம். அற்லஸில் பார்த்தாற்போல் சுருக்கங்கள் மடிப்புக்களுடன் மரகதப்பச்சை வெல்வெட்டைப் போர்த்திக்கொண்டு முடிவில்லாமல் நீளும் வின்டர்பேர்க்கின் மலைத்தொடர்கள்மேல் சூரியக்கதிர்கள் தடையில்லாது இறங்கி ஒளிர நாளும் நாடும் அழகாகவே இருந்தன. உயரமான குன்றுகளிலிருந்து கீழே பார்த்தால் பேர்லினைப்போலவே ஊர் முழுவதும் நீக்கமற தேவாலயங்கள் செறிந்திருப்பது தெரியவே கன்னத்தில்போட்டுக்கொண்ட பாவனிக்கு அவ்வனைத்துத் தெய்வங்கள் தேவதைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவள் போல் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பிறந்தன.
வின்டர்பேர்க்கை ஒரு றவுண்ட் வந்து அவ்வூரில் சிறப்பாக என்னனென்வெல்லாம் இருக்கென்று விசாரித்தோம். தங்களுர் திராட்சையில் கைத்தயாரிப்பிலான உலர் வைன் பிரசித்தம் என்றார்கள்......... வாங்கினோம் (செமை கிக்). மற்றும் பலபுராதன கோட்டைகளும் அரும்பொருளகங்களும் உள்ளன என்றார்கள்......... போய்ப்பார்த்தோம். மாலை மயங்கத் தொடங்க வயிற்றையும் கிள்ளத்தொடங்கியது. இத்தாலியன் உணவகமொன்றில் புகுந்து சலாத்தும் ஸ்பாகெட்டியும் ......... லசானியாவும் சாப்பிட்டுவிட்டு பெர்லின் நோக்கிப் புறப்பட்டோம்.
கோவில்களின் செறிவைப்பொறுத்தவரையில் தமிழகத்துக்கு திருச்சியென்றால் ஜெர்மனிக்கு பெர்லின். இத்தனை போரழிவுகள் சிதைவுகளின் பின்னும் பூஜைகள் ......... ஆராதனைகளுண்டோ இல்லையோ பெர்லின் நகர எல்லைக்குள் மாத்திரம் 160 தேவாலயங்கள் இருப்பதால் நகருள் எங்கு நின்று எத்திசையில் நோக்கினும் பார்வைப்புலத்துள் குறைந்தது இரண்டு தேவாலயக் கோபுரங்களாவது தென்படும். ஐந்தாவது மாடியிலிருக்கும் எம் பிளாட்டில் பாவனி அதிகாலையில் எழுந்து குளித்துப் பூசி காயத்திரி மந்திரத்தை செபித்துக்கொண்டு; குசினி ஜன்னலினூடு தெரியும் 2 கோபுரங்களையும்......... வதியும் அறை ஜன்னலினூடு தெரியும் 3 கோபுரங்களையுந்தான் சேவிப்பாள்.
" மனுஷி கணவனோடு வாழ்ந்த காலத்தில் மனுஷனுக்கென்னென்ன ஆஸ்திகள்.........என்னென்ன சேமிப்புகள் இருக்குதென்று விசாரிக்காமலேயே அறியயாமலேயே வாழ்ந்திருக்குதென்றால் ஆள் கொஞ்சம் வித்தியாசமான டைப்தான்.'' என்றாள் பாவனி.
" நானும் உதைத்தானப்பா இப்ப யோசிச்சனான்.''
"அந்தப் பெருங்குணத்துக்காகத்தான் கிழவன் மனுஷியைக் கட்டிச்சோ யார்கண்டது? நாலு பிள்ளைகளோடு ஒரு யாழ்ப்பணத்துத் தமிழ்ப்பெண்ணைத் திருமணஞ்செய்து கொண்டு அப்பிள்ளைகள் அத்தனை பேரையுமே இங்கே அழைத்துப் படிக்கவைத்து அவர்களையும் நல்ல நிலையில் வைத்திருக்கும் ஒரு ஜெர்மன்காரரை எனக்குத் தெரியும். இன்னொருவர் ' ஒரு குடும்பத்தைத் திருமணஞ்செய்தேன் ' என்று நாவல்கூட எழுதியிருக்கிறார். அவருக்கும் அப்படி அனுபவங்களாக்கும். ஒரு விஷயத்தைக் கவனித்தீரா............ திருமணங்களுக்கு காரணங்கள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. நம் பெரியாரைப் பார்க்கேல்லையா? வயதான பின் மனிதர்கள் திருமணம் செய்யிறது மேற்கிலதான் அதிகம். ஆர்ஜென்டினா எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே தன்னோடு பலகாலங்கள் நண்பராகவும் 12 வருடங்கள் உதவியாளராகவும் இருந்த மரியா கோடமாவை தன் 84வது வயதில்தான் திருமணம் செய்தார்."
ஹைவேயில் வாகனங்கள் குறைவாகவிருக்கவே சவாரி சந்தோஷமானதாக இருந்தது.
" எனக்கென்றால் இனி மனுஷியை இருக்கிற வீட்டாலும் மெல்லக் கலைச்சுப்போடுவாங்கள். தெருவில தனிச்சு நின்று அந்தரிக்கப்போகுது என்றதுதான் கவலையாயிருக்கு. "
" நான் நினைக்க நீர் சொல்லுறீரப்பா.......... இட்ஸ் றியலி அமேஸிங்! நாமென்னதான் வேறை செய்ய முடியும்? "
இப்படிப் பலதடவைகள் நமக்கு நடந்திருக்கின்றது. " டாய்லெட்ல தனியக் கண்டபோது பின்னால சிலவேளை உதவுமேயென்று எங்கட பிஸினெஸ் காட்டை மனுஷிக்குக் குடுத்தனான்."
"·பன்டாஸ்டிக்........... யூ ஆர் அன்கொம்பெயறபிளி க்யூட் அன்ட் கிளெவர் டியர். "
எனக்கு இப்போது அவள்மேல் முன்னெப்பொழுதையும்விட அதிகமாகக் காதல் வந்தது.ஒரு முன்னிலவுக்காலம் அது. நேரத்துடனேயே வந்துவிட்ட உழவாரஅலகு வடிவில் முற்றாதவொரு நிலவு மென்னூதா முகில்களினிடையே நீந்திக்கொண்டு அந்தக் குளிரோடும் வனிலா ஐஸ்கிறீமாய் உருகிக் கொஞ்சிக் கொஞ்சிப் பொழிகிறது.
பவானி கைகளை உயர்த்தி அழகாகச் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு சுகமான தூக்கத்துக்குப் பூனைக்குட்டி மாதிரி தன் இருக்கையில் பலதினுசிலும் கோணங்களிலும் சாய்ந்தும் முடங்கியும் உட்கார்ந்து இசைவு பார்க்கிறாள்.

கோலம்போடும் பெண் அழகு
தலைசீவும் பெண் அருவி
சமர்த்தான பெண் புதையல்
சோம்பல் களையுமிவள் கவிதை
என்னுள் பொறிக்கும் கவிதையோடு ஒரு முத்தத்துக்கான உத்தேசத்துடன்கடைக்கண்ணால் மெல்லப் பார்க்கிறேன்.
அவள் தூங்கிவிட்டிருந்தாள் தன் குழந்தைக்கான கனவுகளுடன்.
...............................................................................
தாமரை டிசெம்பர் 2003.

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்.

(1)
இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் ஏதாவது பார்த்துவிட்டோ கிறுக்கிவிட்டோ படுக்கைக்குப் போகலாமென்றால் அவனது செல்லமகள் ஹோம் வேர்க் பண்ணுகிறேனென்று சொல்லிக் கணினியை மூன்று மணிநேரமாக உருட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் இப்போதைக்கு அதைவிட்டு நகரப்போவதில்லையென்று தோன்றவும் " சோபி(தா)க்கண்ணா உன்ரை புறொஜெக்டைக் கொஞ்சம் மினிமைஸ் பண்ணிவிட்டு எனக்கேதாவது மெயில்ஸ் வந்திருக்கோவென்று பார்த்துச்சொல்லடா செல்லம் நான் படுக்கப்போறன்." என்றான். அவளும் நொடியில் தனது புறொஜெக்டை கீழே அமுக்கிவிட்டு அவனது மெயில்களை செக் பண்ணினாள். பண்ணிவிட்விட்டு
"ஹாஹ் ஹஹ்....ஹா..... வண் அண்ட் ஒன்லி மெயில் ·ப்றம் யுவர் எக்ஸ்·ப்றெண்ட் டாட்." என்றாள்.
"யூ மீன் கனீத்தா?"
"எக்ஸாட்லி"
அவன் முகம் விகசித்து ஆர்வமாவதைப் பார்த்ததும் பெருமனது பண்ணி
"தென் யு கோ த்றூ யுவ மெயில் ·பர்ஸ்ட் டாட்......" என்றுகொண்டு கதிரையை விட்டெழுந்தாள்.
கனீத்தாவும் சித்தார்த்தனும் ஸ்நேகித்திருந்த காலத்திலும் இண்டர்நெட் இருந்ததுதான், ஆனாலும் இப்போதுபோல் வீட்டுக்குவீடு அதைப் பயன் செய்யும் வசதிகள் பெருகியிருக்கவில்லை.
கனீதாவுக்கு நினைப்பு வந்தவேளையெல்லாம் முன்பு கடிதம் எழுதுவாள், இப்போதும் அதே அரைகுறை ஆங்கிலத்தில் மின் கடிதம். கடிதத்தில் எழுதப்படும் வரிகளைவிட வரிகளிடையேயான எழுதாத வெளிகள் உணர்த்தும் சங்கதிகள் அதிகம்.
'ஒற்றை ஆளாக உழைத்து சூப்பர் மார்க்கெட் எல்லாம் கட்டமுடியாதென்று சொன்னபோது என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை சித்தார்த். நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் தப்பானவை, முதிர்ச்சியற்றவை நான் எத்தனை ஞானசூனியமாகவும், அசட்டுப் பேதையாகவும் இருந்திருக்கிறேன் என்பது காலம் கடந்துதான் புரிகிறது. ஏனென்று தெரியாமலே எதுக்கோ பேராசைப்பட்டு என்பொம்மையை நானே போட்டு உடைத்துக்கொண்டுவிட்டேன். இத்தனை காலத்தின்பின் உன்னுடன் வாழ்ந்த சிறுகனவையும், என்னால் முடிந்த அளவுக்கு என் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறேன் என்ற சிறு திருப்தியையும் மட்டும் நீக்கிவிட்டேனாயின் இப்போது என் மனது எந்தக்கிறுக்கலும் இல்லை. 'பிளாங்' ஆகிவிட்டது. ஆனல் மிகப்பெரிய பிளாங். " பிளாங் ஆக மனதை வைத்திருக்கமுடிந்தாலேபோதும் அதுவே பெரிய வரம்"என்று நீதான் முன்பு அடிக்கடி சொல்வாயே, அந்தவார்த்தைகள் என்செவியோரங்களில் இன்னமும் ஒலிக்கின்றன. 'அண்ணன் இப்போது டிராவல் ஏஜென்சி ஒன்று வைத்து நடத்துகிறான். நல்ல வருமானம், நன்றாகவே சம்பாதிக்கிறான். மாலிகாவுக்குத் (சகோதரி) திருமணமாகிவிட்டது. அவளுக்கு இரண்டு குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறாள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படியோ நகரத்தான் போகிறது. உன் காலை நான் இப்படி வாரிவிட்டுங்கூட அவற்றின் தடயங்கள் எதுவுமில்லாமலே ஒரு தடவைகூடச் சினக்காமல் எப்படித்தான் உனக்கு இத்தனை கூலாக பதில்கள் எழுத முடிகிறது சித்தார்த்? என்று ஒரு மெயில்.
'விலைகொடுத்து எனது உடலையும் அது தரக்கூடிய சுகிர்தங்களையும் வாங்க வந்தவர்களிடையே என் கூட்டுக்குள் தானாய் வந்துசேர்ந்த ஒரு நேசப்பறவையை விரட்டிவிட்டுவிட்டேன். என் ஜீவனில் கலந்துவிட்ட உன் அன்பின் வெதுமையும் , என்போர்வைக்குள் இருக்குமுன் தேகத்தின் வாசமும் இந்த ஜீவிதத்தில் அகலாது. நீ எனக்கு நிவர்த்திக்கவே முடியாத இழப்பு சித்தார்த்.' என்னை மன்னிக்கும்படி உன்னிடம் கேட்பதுவுங்கூட அபத்தம்தான். இருந்தாலும் நீ மிக மிக உயர்ந்தவன் என்னை மன்னித்திருப்பாய். நம்புகிறேன் என்று இன்னொருமுறை.
சனங்களின் பொதுப்புத்தியில் பட்டு 'ஓடுகாலிப்படையா ஓடிவிடுவள்' என்று கண்ட நிண்ட பேர்வளிகளும் சொன்னபோது 'இல்லை இவள் வேறு, வித்தியாசமென்று' இவர்களுக்கெல்லாம் காட்ட வேணுமென்று இருந்தவனுக்கு அவளின் பிரிவு தந்த ஏமாற்றமும் அவமானமும் விபரிக்கமுடியாதவைதான். ஆனாலும் அவற்றையெல்லாம் பொறுத்தாகிவிட்டது.இப்போது அவள் எழுதும் மெயில்களெல்லாம் காரணமில்லாமலே கலைந்துபோன அந்தச் சந்தோஷக்கனவின் இரைமீட்டல்கள்தான்.
' முன்பெல்லாம் இரவுப் பணியுள்ள நாட்களில் அதுமுடிய வந்து அதிகாலைவேளைகளில் கிளாசிக் இசை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருப்பாயே சித்தார்த். இப்போதும் அதுபோலவே எழுதிக்கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். எழுது , அப்படியாயின் இந்தப் பைத்தியக்காரியின் கதையையும் ஒருநாள் எழுது.'
(2)
சித்தார்த்தன் கனீத்தாவுடன் என்றுதான் விமானநிலையத்தில் வந்து இறங்கினானோ அன்றிலிருந்து பெர்லின் தமிழ் வட்டகை அவனை ஏதோ மழலையர் தோட்டத்தில் குண்டுவைத்த ஒரு கிரிமினலைப்போலவும், மனுச்சமூகத்துக்கே ஒவ்வாதவொரு பிராணியைப் போலவும் வினோதமாகப் பார்க்கிறது.
முப்பத்தியிரண்டு வயதாகியும் கட்டைப்பிரமச்சாரியாய் தனிமையில் கிடந்து மறுகியபோது அவனைக் கண்டேகொள்ளாத, அவனுக்காகப் பரியாத தமிழ்ச்சமூகம் இப்போது ஒரு தாய்லாந்துக் குமரியைக் கொண்டுவந்து இறக்கி விட்டான் என்ற மாத்திரத்தில் இவனால் எமது கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் எல்லாமே சீரழிந்து போய்விட்டதென்று கூவுது. எங்கிருந்து கனீத்தாவைக் கூட்டிவருகிறான் என்ற சூட்ஷ¤மம் மட்டும் பிரத்தியட்ஷமாகிச்சென்றால் நித்திரையிலேயே அவனை அடித்துக் கொன்றுவிடுவார்கள்.
“ என்ன மச்சான், சப்பட்டையொண்டைத் தள்ளியந்திட்டியாம்...............?”
“ இவளுக்குச் சப்பட்டையில்லை.............. வேணுமெண்டால் வந்து பார்க்கிறியா?”
இவனுடன் கொஞ்சநாள் ஒன்றாக வேலை செய்த நடுவயதுக்காரர் ஒருவர்-“ இவ்வளவு காலமும் ஒழுங்காயிருந்திட்டு திடீரெண்டு இப்பிடிக்குறுக்கை இழுப்பீரெண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.................ஐசே, சய்க்! இரண்டு நாள் பாங்கொக் 'பார்க்கப்போன' உம்மோட தொத்திக்கொண்டு வந்தவள் எண்டால் ஐட்டம் சமசியந்தான், எதுக்கும் காசு களஞ்சைக் கனக்க வீட்டில வைச்சிருக்காதையும்............. அள்ளிக்கொண்டு பறந்திடுவாளவ. ”
இன்னொருவர் ரெலிபோனில்-“ ச்சாய்!.............. தோட்டக்காட்டிலை இருந்தெண்டாலும் ஒரு தமிழ்ப்பெட்டையாய்ப் பார்த்துக் கூட்டியராதையுமன். இனிப் பிள்ளையளுமல்லே 'ஞங் சொங் ஷ¤ங்’ எண்டப்போகுதுகள்..........” வெகுவாகக் கரிசனைப்பட்டார்.
“ அங்கைதான் பாரும் முதல்ல ட்றை பண்ணின்னான்................ ஆனால் அங்கையிருந்து யாரும் ஜெர்மனிக்கு வரத்தயாரில்லையாம்............... உம்மடை தமிழ்ப்பற்றையிட்டு எனக்குச் சதுரம் முழுக்கச்சிலிர்க்குதெண்டால் பாருமன்.”
' மலையகத்துப்பெண் என்றால் இரண்டாம் பட்ஷந்தான் 'என்ற கருத்து ஜென்மத்தில்கீரிமலையைத் தவிர வேறொரு மலையையும் கண்ணாலும் கண்டிராத பேர்வழிகளிடங்கூட ஜீன்ஸில் பற்றி, பிளேனில் தொற்றி, ஜேர்மனியில் வந்து இறங்கிவிட்டிருக்கும் அழகை என்னவென்பது?
இதுவரையில் ஒரு நாளும் சித்தார்த்தனுடன் முகங்கொடுத்தே பேசியிருக்காத வெகுதூரத்து உறவு மாமியொருவர் வலியவே போன்பண்ணி ஒரு மணிநேரம் உபதேசங்கள் செறிந்த விரிவுரையொன்று எடுத்தார். அதன் சாராம்சமாவது: “ அவளவை சாகஸக்காரியளாம், குடும்பத்துக்கெல்லாம் துண்டாய் ஆகாதாம், ஏதோ செலவளிச்சுக் கூட்டிவந்தனீர் கொஞ்ச நாளைக்கு வைச்சிருந்திட்டுக் கலைச்சுவிடும். ” என்பதுதான். "கட்டினவள மாதிரி வெளியிலயெல்லாம் கூட்டிக்கொண்டு திரியவேண்டாமாம், உலகம் முழுக்க விஷயம் நாறிச்சென்றால் பிறகு அறவே ஒருத்தரும் பெண்தராயினமாம். ”அந்த மாமியிடமே கல்யாண வயதில் ஒன்றுக்கு இரண்டு குமருகளிருக்கு, இரண்டுக்கும் லண்டன், கனடாவில எக்கவுண்டன்ட், இஞ்ஜினியர் றேஞ்சில மாப்பிள்ளைகள் தேடுகினம்.“ அப்ப ஏன் இவ்வளவு காலமும் நீங்கள் ஒருத்தரும் முன்வந்து பெண்தரவில்லை?” என்று அமுக்க அமுக்க எழுந்துகொண்டிருந்த ஸ்பிறிங்கேள்வியை உள்ளே மடித்து வலிந்து இருத்தினான்.
இதெல்லாம் முதலிலேயே சித்தார்த்தன் எதிர்பார்த்ததுதான். இருந்தும் அவற்றைப் பக்கமாகத் தூக்கிப்போட்டுவிடும்படி, அவனுக்குத்தைரியம் தருவதெல்லாம் கனீத்தாவின் வெளிப்படையான போக்கும் , மனதை நெக்குருக வைத்துச் சிறைகொள்கிற மாதிரி பல்வேறு தினுசுகளில் வெள்ளையாக அவள் அவ்வப்போது காலும் மந்திரப் புன்னகைகளுந்தான்.ஒரு சமயம் ஈச்சஞ்கொட்டைப்பற்கள் முழுவதையும் காட்டி அப்பாவிச்சிறுமியாய் , ஒரு சமயம் ஏராளம் வெட்கம் கலந்து, ஒரு சமயம் பச்சைக் குழந்தைமாதிரி , ஒரு சமயம் சரசமும் காதலும் சொட்ட, ஒருசமயம் குறும்பாக, ஒரு சமயம் ஸ்நேகபாவமாய், ஒரு சமயம் தாய்மையும் கருணையும் கனிய...... வாழ்வின் அறுந்தும் தொடர்ந்தும் வரும் திட்டுக்கள் , கோணல்கள், சரிவுகுழிகள், வழுக்கல்கள் , இருட்டுக்களெனக் கலந்து வரும் அனைத்து யதார்த்தங்களையும் மறக்கச்செய்துவிடும். இந்த ரசங்களையெல்லாம் கவனிக்கும் எவருக்கும் மனதுள் செல்லமாய் கடிக்கும்.
இவைகள் தவிர்ந்து இயல்பிலேயே மயக்கம் தோய்ந்த அவள் விழிகளிலே மிதக்கும் எதற்கோவான ஒரு ஏக்கமும், கொம்பு தேடும் ஒரு கொடியின் பரிதவிப்பும் சித்தார்த்தனை என்னவோ செய்தது. பத்து நாளே உறவில் அவனை அறியாமலே அவளை ஜீவிதபரியந்தம் அணைத்து வரித்துக்கொள்ளும் உறுதியான காபந்துக்கரங்கள் அவனுள்ளிருந்து எழுந்துகொண்டுவிட்டன. சித்தார்த்தனும் அவன் அத்தியந்த நண்பன் அமலனும் சேர்ந்து பலநாளாகத் திட்மிட்டுக்கொண்டுதான் தாய்லாந்துக்கு சிங்கப்பூரூடாக புறப்பட்டார்கள். ஆனால் அமலனோ முதலிலேயே சொல்லிவிட்டிருந்தான்:
“ மச்சான்............ ஊரிலயிருந்து கனகாலமாய் அம்மா கொழும்புக்கு வாறதுக்கு முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறா, சிலவேளை கப்பல் ஓடத்தொடங்கி அவ கொழும்புக்கு வந்திட்டாவேயென்றால்................. நான் தாய்லாந்து விஜயம் கட் பண்ணிக் கொழும்புக்குத்தான் போவன், குறைவிளங்கப்படாது.”
சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தமிழ் உணவகங்களும் தோசையும், போளியும், இடியப்பமும், வாழையிலையில் மரக்கறி சாப்பாடும், கோயிலும் குளமும், நோக்கின திக்கெங்கிலும் புடவையிலும், சுடிதாரிலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு தென்பட்ட தமிழ்ப்பெண்களுமாக ஏதோ யாழ்ப்பாணத்துக்கே வந்துவிட்டமாதிரி அவர்களுக்குக் குதூகலமாயிருந்தது.அவர்கள் தங்கியிருந்த அந்த ஹொட்டலிலும் வெளிநாடுகளுக்குப்போக வந்த நம்ம ஆட்கள் நிறையப்பேர் தங்கியிருந்தார்கள். அவர்கள்தான் முதலில் இவர்களை தெக்கோ மார்க்கெட், ஹனீபாஸ், கல்யாணசுந்தரம், கோமளவிலாஸ், வீரமாகாளி அம்மன்கோவில் என்று கூட்டிச்சென்றார்கள். ஒரு நாளிரவு செட்டிநாடு ஹொட்டலில் காடைக்கறியுடன் சாப்பிட்டுவிட்டு வந்து அக்குழாத்திடையே பீடா சக கோல்ட்லீ·ப் புகையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அமலன்“ நாளைக்கு தாய்லாந்து எம்பாஸிக்கு விசாவுக்குப்போகவேணும்.” என்று உளறினான். சித்தார்த்தன் கண்ணை உருட்டி புடையனைப்போல "உஸ்ஸ்ஸ்ஸ்உஸ்” என்று சீறி எச்சரிக்கவும் அமலனுக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை........... அவன் அலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்க சித்தார்த்தன் ஜெர்மனில் சொன்னான்:
“ தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத ஆட்களின் சமூகத்தில், தேவையில்லாத தகவல்களை விடாத குரங்கே! ”
“ அப்படி என்னத்தைச் சொல்லிப்போட்டனென்று குதிக்கிறாய்? ”
“ தாய்லாந்துக்குப் போறமெண்டு ஊளையிட்டாய்..............”
“ ஓ ஜா. மை காஷ்........ மை ப்ளைட்.......... மை ட்றிப். யாருக்கென்ன நஷ்டம்?”
“ குரங்கே வெஸ்டிலையிருந்து சிங்கப்பூருக்கு வாற சனம் சுழிச்சுப்போட்டுப் பிறகேன் பாங்கொக்குக்கு ஓடுறதெண்டு இஞ்சை எல்லாருக்கும் தெரியும்................... அனாவசியத்துக்கு வாயைக்கொடுத்து நாறாதை.”
“ ஆமோ............ அப்படியுமொன்டிருக்கோ?”
“ அப்ப நாங்கள் தாய்லாந்துக்குப் போகயில்லையெண்டு எல்லாருக்கும் சத்தமாய் சொல்லட்டே?”
மறு நாள் காலையே அமலனின் தாய் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டதாக தகவல் வரவும் அவன் எயர்லங்காவில் அங்கே பறக்கவும்...............சித்தார்த்தன் தன் கூட்டத்தைக் காய்வெட்டிவிட்டு தனியே டாக்ஸியில் போய் தாய்லாந்து விசா எடுத்துக்கொண்டுவந்து மறுநாள் பாங்கொக் பறந்தான். (3)
சிங்கப்பூரைப்போன்றே பாங்கொக் வீதிகளிலும் அவ்வப்போது தேமதுரத்தமிழோசை காதில் வந்து விழவேசெய்தது. வெளிநாடுசெல்ல முயலும் ஈழத்தமிழருக்கு இது இரண்டாவது தரிப்பு. அவர்கள் மத்தியில் தானேதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன் மாதிரி நடந்துகொண்டான். பெட்ச்புரி றோட்டில் ஒரு மதறாஸ் றெஸ்ரோறன்டில் பிடித்துக்கொண்ட ஈழவர் சிலரிடம் கூசாமல் “ ஐ கம் ·ப்றம் ஷிஷேல்ஸ்....... நேட்டிவ் ரமில், பட் ஐ கான்ட் ஸ்பீக்....... யூ சீ.” என்றெல்லாம் அவிழ்த்தான். அவர்களில் பொழுதுபோகாத யாராவது தன் கிரியாம்சைகளை வேவுபார்க்கலாமென்ற முன்னெச்சரிக்கையில் சற்றே ஒதுக்காக சிலோம் பக்கமாய் ஒரு ஹொட்டலில் தன் அறையை எடுத்துக்கொண்டான்.முதல் நாள் பூங்கா, கடற்கரை, திறந்தவெளி உணவகங்கள் என்று சுற்றிப்பார்த்தான். இரண்டாம் நாள் காய்கறி, பழங்கள் குவிந்துள்ள மார்க்கெட்டுகளெல்லாம் போய் அங்கு என்ன புதிதாகக் கிடைக்குதென்று அலசினான். கொழும்பிற்போலவே புளிப்புக்குறைவான மாங்காய்த் துண்டங்களைத் தோல்சீவி அம்பரல்ல, கெக்கரிக்காய், அன்னாசி நறுக்குகளுடன் குச்சியில் கோர்த்து உப்பும் மிளகுப்பொடியும் தூவி விற்றார்கள்.மிளகாய் வெங்காயம் போட்டு தாளித்த ஆவிபறக்கும் பெரிய சுண்டல் கடலையுடன் இறால் பொரியலைக் கலந்து விற்றார்கள். மேலும் பன்னிரண்டு வருஷங்களாய் கண்ணாலும் காணாமலிருந்த றம்புட்டான் பழம், விதைகளற்றுத் தேனாக இனித்த கொய்யாப்பழம், செவ்விளனி, மாம்பழம் என்று கண்டதெல்லாவற்றையும் வாங்கி ஆசைதீரச் சாப்பிடுகையில் எதுக்கும் அமலனும் கூட வந்திருந்தால் இன்னும் ஜாலியாயிருந்திருக்குமென்றும் எண்ணினான்.
றெடிமேட் உடுப்புகள் விற்கும் கடையொன்றில் நிற்கையில் மேலே வந்து விழுந்து மாரால் உரசிவிட்டு அவனைக் கடந்து அப்பாலே போன ஓர் விடலைப்பெண், நின்று திரும்பிப்பார்த்து இவனுக்குக் கண்ணடித்தாள். அன்று மாலை இன்னொருத்தி கூட்டத்துடன் நடக்கையில் அருகாக வந்து பிருஷ்டத்தில் ஸ்பரிசித்தாள். வெளிநாட்டுக்காரன் எவனுக்காவது டொலரில் விலைபோக பின்னும் முன்னும் இளசுகள் அலைந்துகொண்டிருந்தன.
சித்தார்த்தனுக்கு காலையில் அரும்பி, மதியம் போதாகி, மாலையில் மலர்ந்துவிட்டிருந்த நோய் வெளியே புறப்படச்செய்தது. ஹொட்டலுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த டாக்ஸிகளில் ஒன்றில் ஏறி “ இரவு நேரம் பாங்கொக்கில் என்னப்பா விஷேஷம்?” என்றான்.கேட்ட பின்தான் அக்கேள்வியே அபத்தமானதாகப்பட்டது. இவன் மனதைப் படித்துக்கொண்ட டிரைவர் சொன்னான். “ றோசாப்பூக்கொத்துகளாட்டம் பெண்கள் பாங்கொக்கில் மாதிரி உலகத்தில வேறெங்கும் பார்க்கமுடியாதே சார்! ”அப்பதிலில் தன் நாட்டுப் பெண்களையிட்டான அவனது கர்வம் ஏகமாய்த் தொனித்தது.“ பார்த்தால் போச்சு........... ” அசுவாரசியமான தொனியில் சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தா¡ன்.டாக்ஸி 'றோஸ் கார்டன்’ என்றொரு நைட்கிளப்புக்குள் நுளைந்தது. பாரிய வளவொன்றில் அமைந்திருந்த அக்கிளப்பின் வெளிவளாகத்திலும் உள்ளேயும் நிறைந்திருந்த வெள்ளைக்காரர்களைப் பார்க்க திரும்பவும் ஐரோப்புக்கே வந்துவிட்டது போலிருந்தது. புறப்படுகையில் இருந்த தைரியம் மறைய மனதில் கூச்சமும், தயக்கமும் கூட்டணி போட்டன.“ ச்சே.... இந்த அமலன் வெளிக்கிட்ட மாதிரியே என்கூட வந்திருந்தால் எனக்கேன் கால் பின்னுது................. கடைசியில் தனியேவிட்டிட்டு காலை வாரிவிட்டானே இடியற். ” என்று சபித்தான். இதயத்தின் அடிப்பு வேகம் சற்று ஆர்முடுக தேகமும் வியர்க்கலானது.தான் வேற்றுக்கிரகம் ஒன்றுக்கு வந்துவிட்டமாதிரி உணர்ந்தான். கோல்ட் லீ·பை பற்ற வைத்துக்கொண்டு சிந்தித்தான். "இவ்வளவு கனவான்களும் காமம் உந்தி இதே நோக்கத்தில் வந்திருக்க நான் எந்தக்கொம்பனுக்குப் பயப்பிடவேணும்? இப்படித் தயங்கிறது எவ்வளவு கோழைத்தனம்." "மனமே பி ·ப்றாங் ,பி ஸ்றோங்” கட்டளைகள் இட்டான்.
தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டு இப்படிக் கிளப்புகள் ஆயிரம் கண்டவனின் பாவனையில் பார்வையில் ஒருவித அலட்சியத்தை வரவழைத்துக்கொண்டு டையை சரிபண்ணி இறுக்கிவிட்டுவிட்டுக் கம்பீரமாக உள்ளே நடந்தான். உள்ளே இப்படியான இடங்களுக்கேயான வண்ணங்களில் ஊதா, றோஸ், வயலற் ஹலோஜன், நியோன் விளக்குகளின் ஒளிவெள்ளம். 'என்டர் த டிறகன்’ படத்தில் வருவது போன்று பதினாறு திக்கிலும் கண்ணாடிச்சுவராலான பாரிய கூண்டொன்றுக்குள் ஒரே இளங்குட்டீஸ்களாகக் குவித்துவிட்டிருந்தார்கள். அக்குவாறியம் பார்ப்பது போல் அக்குட்டிகளைச் சுற்றிச்சுற்றி கண்ணாடிச்சுவரில் மூக்குகள் உரச பார்த்துக்கொண்டிருந்த சுதேச விதேச வாடிக்கையாளர்களுக்கு 'மாமா' உத்தியோகத்திற்கென்றே படைப்பில் வார்க்கப்பட்டிருந்த, தமிழ்ப்படக் கதாநாயகர்கள் டூயட் காட்சிகளில் அணிவது போன்று தோல் வார்களும் கையிலும் காலிலும் தோளிலும் முதுகிலும் குஞ்சங்களும் தொங்கும் வெள்ளைநிறத்தில் கோமாளி சூட்டும் தொப்பியும் அணிந்து கன்னங்களில் றோஸ் நிற அரிதாரப்பூச்சும் பூசியிருந்த மாமா ஒருத்தர் ஒவ்வொரு பெண்ணினதும் அங்க லாவண்யங்களை ஆங்கிலத்தில் சூடேற்றும் விதத்தில் விதந்து வர்ணித்து அவர்களின் விலையையும் மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு இரவுக்கான அவர்களின் விலை மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் பாத்துக்கள் வரையிருந்தது.
ஒருத்தியை யாராவது வாங்கிக் கூட்டிக்கொண்டு போய்விட்டால் அவ்விடத்திற்கு இன்னொரு புதியவள் அழகுராணிப்போட்டி மேடைக்கு வருபவள் மாதிரி ஒயில் நடைபோட்டு வந்து நுழைவாள். சித்தார்த்தனின் பக்கமாக வந்த மாமாவைக் கிட்டப்பார்த்தான். நகச்சாயம், உதட்டுச்சாயங்களுடன், கண்ணுக்கு மையும் வேறு எழுதிய தோடுடைய செவியன் நெத்திச்சுட்டி, சூரியப்பிறை, சந்திரப்பிறை, லோலாக்கு, நீங்கலாக அனைத்து நகைகளும் வெள்ளியில் சூடியிருந்தார். அவர் “ ஹே! ஜங் மன்.............. சொர்க்கத்தின் இன்ப ஊற்று இவள்............. நன்றாகச் சரசம் புரிவாள்........... உனக்காகத்தான் ஜனித்தவள். ” என்று ஷோபனா பாணியில் அபிநயத்து கண்களால் எறிந்த திசையை நோக்கவும் அங்கிருந்து ஒரு பிந்துகோஷ் இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அப்போதே விலாஎலும்புகள் 'சடக்''முடக்'கென மூங்கில் கழிகள்மாதிரி நொருங்கியது போலிருந்தது. அவன் முகம் போனபோக்கைப் பார்த்து மைக்கைப் பதிவாகப் பிடித்துக்கொண்டு அவன் காதில் ஏதோ தாய்லாந்து அரசாங்கம் அவனுக்காகத்தரும் இராஜ சலுகைபோன்று "ஆயிரம் பாத்துக்கள் குறைத்துக்கொண்டு தந்தாலும் எனக்குச் சம்மதமே” யென்று கிசுகிசுத்துவிட்டுக் கண்ணடித்தார்.
பிந்துகோஷை விட்டுவிட்டு சீமை முயல்மாதிரி பயந்துகொண்டும், தோற்றத்தில் அப்பாவி மாதிரியுமிருந்த ஒருத்தியைச் சித்தார்த்தன் வாங்கினான். மாமா மைக்கில் “ நம்பர் 23 "என்றதும் அவள் எழுந்து கூண்டின் பக்கவாட்டிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள். பணம் செலுத்தியானதும் அவளின் போட்டோ ஒட்டியிருந்த ஒரு பத்திரத்தைக் காட்டினார்கள். மெடிகல் ·பிட்னெஸ் சேர்டிபிகேட் என்பதைத்தவிர மீதமெல்லாம் தாய்மொழியில் கிளறியிருந்தது. ஜீன்ஸ¤ள் நுழைந்துகொண்டு நொடியில் அறைக்குளிருந்து புறப்பட்டு வந்தவள் காலங்காலமாக அவனையே காதலித்தவளைப்போல சித்தார்த்தன் கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு போய் டாக்ஸியில் ஏறினாள்.டாக்ஸியில் என்ன அவளுடன் பேசுவது என்றே அவனுக்குத்தெரியவில்லை. சற்றுத்தூரம் போனதும் அவளே பேசினாள்: “ சாருக்கு எந்த ஊர்? ”
“ பிறந்தது ஸ்ரீலங்கா............. இப்ப இருக்கிறது ஜெர்மனி.”
“ ஏன் அவ்வளவு தூரத்தில? ”
சித்தார்தனுக்கு கொஞ்சம் புழுகவேணும் போலிருந்தது, அல்லது சமாளிக்கவுந்தான் இயலாது.“ உத்தியோகம் ” என்றான் யோசிக்காமல்.ஹொட்டல் அறைக்குள் வந்ததும் ஜெர்க்கினைக் கழற்றி ஹாங்கரில் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்துகொண்டு முதலில் 'பசிக்குது' என்றாள். மேசையில் இருந்த மெனுவை அவளிடம் கொடுத்து "வேண்டியதை ஓடர்பண்ணிக்கொள் "என்றான். சேர்விஸை போன்அழைத்து தனக்கானதை ஓர்டர் பண்ணிக்கொண்டே "சாருக்கு"என்றாள். ஒரு பெண்ணுடன் ஹொட்டல் அறையில் தனிமையில் இருக்கும் அனுபவம் தரும் பரபரப்பே அவனுக்கு இன்னும் அடங்கியிருக்கவில்லை. சும்மாதானும் எதையோ ஓர்டர் பண்ணிச் சாப்பிடுவதாகப் பெயர்பண்ண அவள் இறால் , கோழி என்று பல ஐட்டங்களை வருவித்து நன்கு ரசித்துச்சாப்பிட்டாள்.
சாப்பாடானதும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு "உனக்கும் வேணுமா?” என்று அவளுக்கும் ஒன்றை நீட்டினான்."உவ்வே "என்று குமட்டிக்காட்டித் "என்னிடம் கெட்டபழக்கங்கள் எதுவும் இல்லை” என்றாள். அடுத்து என்ன செய்வது................ எப்படி ஆரம்பிப்பது ஒன்றும் தெரியவில்லை. அவள் ஜீன்ஸையும் , ப்ளவுஸையும் கழற்றி ஹாங்கரில் போட்டுவிட்டு வந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திச்சோம்பல் முறித்தவாறே கொட்டாவி விட்டபடி"ஒரே அசதி............. நான்கொஞ்சம் சீக்கிரமே படுக்கலாமா? "என்றாள்.
“ என்ன காரணம் அவ்ளோ அசதி...........? ”
"இரண்டு பேர் (விரல்களில் காட்டினாள்) ஒரு ஜப்பான்காரனும் ஒரு பிரெஞ்ச்காரனும் இன்று பகல் பூரா என்னைப் பிசைந்தெடுத்துவிட்டார்கள்.”
"உண்மையாகவா.......? ”
பிறேஸியரை அவிழ்த்துக்காட்டினாள். எலுமிச்சை நிறத்ததான சின்னமார்புகள் அங்கங்கே தேமல் படர்ந்ததுபோலக் கன்றிச் சிவந்து போயிருந்தன.
"பகலிலும் வேலைசெய்வீர்களோ? ”
"எப்போதுமென்றில்லை........... கேஸ் வந்தால் போன் பண்ணுவார்கள். ”
"போகாமலுமிருக்கலாந்தானே.........?”
" பணம் வேண்டியிருக்கே............ அதுவும் நாளைக்கு எனக்கு 'மெடிகல் செக் அப்' ஐந்நூறு பாத்துக்கள் அழுதால்தான் டாக்டர் சேர்டிபிக்கேட் தருவான். ”
"இன்று நான் நாலாயிரம் பாத்துக்கள் கொடுத்தேனே.................. உனக்கு அதில் எத்தனை கிடைக்கும்? ”
“ அவங்கள் கமிஷன் நூறு போக, மீதியெல்லாம் அரசாங்கத்துக்கு வரி கட்டிவிடுவார்களாம். ஐநூறுதான் தந்தார்கள். ”
"உண்மையாகவா.......? ”
தன் ஹான்ட் பாக்கைத்திறந்து ஐந்து நூறு பாத் தாள்களை எடுத்துக்காட்டினாள்.
"சரி நான் உனக்கு ஆயிரம் பாத்துக்கள் தாறேன். ”
"தாங்ஸ்............ மிகவும் நல்ல மனது உங்களுக்கு! ”
சிகரெட்டை அணைத்துவிட்டு சித்தார்த்தனும் போர்வைக்குள் புகுந்துகொண்டான். எனினும் முன்னேறத் தயக்கமாயிருந்தது. அவளது நொந்த மார்புகளைப் பார்த்த பின்னால் அவனை வருத்திக்கொண்டிருந்த காமத்தில் பாதி விடை பெற்றுக்கொண்டுவிட்டது. சும்மா அவள் மேல்கையைப்போட்டு இடையைக் கட்டி நெருக்கினான், வெந்நீர்ப்பை மாதிரி வெதுவெதுப்பாயிருந்தது. வயிற்றைத் தடவிப்பார்த்த விரல்களுக்கு அவை என்றுமே அனுபவித்திராத ஸ்பரிசமாதலால் கோதுமை மாப்பெட்டிக்குள் விழுந்த அணிற்பிள்ளை மாதிரி மீள மனமின்றிச் சற்று நேரம் அங்கேயே குதித்து விளையாடின. பணத்துக்கே வந்தவளாயினும் ஏற்கெனவே கசங்குப்பட்டு வந்திருப்பவளை இன்னும் தான் முகர்வது தர்மமாகுமா? அவன் மனதின் ஒருமூலை தத்துவவிசாரம் செய்ய ஆரம்பிக்கவும் கைகளை எடுத்தான்.
அவள் “ விஷயத்தைச் சீக்கிரம் முடித்தீர்களாயின் நான் சற்றே தூங்குவேன், கொன்டெமை எங்கே வைத்திருக்கிறீர்கள்? ” என்றாள்.
“ என்ன..........கொன்டெமா? ”
“ ம்.....கொன்டெம்! ”
“ அது எதுக்கு.........?"
“............ப்ச்! ” என்ன கேள்வியிது என்ற மாதிரிப்பார்த்தாள்.
“ ரொம்ப அவசியமா, ஏன் நீ கொண்டாரல்லயா? .....................? ”
“ அவசியம். பின்னே உங்களுக்கு எயிட்ஸ் இல்லையென்று எப்படி நம்பிறது? ”
'நியாயந்தான் , நான் எந்தவொரு பெண்கூடவும் இதுவரை போனதேயில்லேடி’ என்பதைச்சொன்னால்கூட இவள் நம்பிவிடுவாளா என்ன, இப்படி எத்தனை பேர்தான் வாக்குறுதி கொடுத்தார்களோ.... இப்படி ஒரு தொழில் பண்றவள் நம்பவுங்கூடாதுதான். இவளுடன் பேசித்தன்னை நிரூபிக்க முயற்சிப்பது அபத்தமாயிருக்கும்.
“ நிஜமாக நீ கொன்டெம் கொண்டுவரவில்லையா............. ? ”
“ பெண்ணைக் கூட்டிவரமுன் கொன்டெம் வாங்கி வைத்துவிடவேண்டுமென்று உங்களுக்குத்தெரியாதா? ”
ஏதோ தினப்படி அவனுக்கு இதுதான் தொழில் என்பது மாதிரிக்கேட்டுவிட்டுக் கையால் வாயைப்பொத்திக்கொண்டு சத்தம் வராமல் சிரித்தாள். அவனுக்குத் தன் முட்டாள்த்தனம் உறைத்தது.
“ பத்து மணியாகிறதே கொன்டெம் எங்கே கிடைக்கும் இனி...........? ”
“ கடைகள் எல்லாம் பூட்டியிருப்பார்களே.......... ச்சொச்சொ..........”
றிசெப்சனில் விசாரிக்கலாமென்று போனைச்சுழற்றினான். அங்கும் பெண்குரலொன்று "ஹலோ கான் ஐ ஹெல்ப் யூ ?" எனவும் கூச்சத்தில் வார்த்தைகள் வரமறுத்தன.
“ சொறி.....எவ்றிதிங் ஓகே. ” என்றுவிட்டு றிசீவரை வைத்தான்.
அசதியில் இருப்பவளை வெளியில் அனுப்பி "எப்படியாவது கொன்டெம் கொண்டுவா” என்று அனுப்புவதும் நியாயமாகப்படவில்லை. நான் போய் இனியாரை விசாரித்து கொன்டெமுக்காக பாங்கொக் வீதிகளில் 'லோ' 'லோ' 'லோ' வென்றலைந்து வெட்கக்கேடு. மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். ஒன்றுமில்லாமல் இரவெல்லாம் இவளுடன் என்ன ஜென் பெளத்தம் பற்றியும், கொன்பூஸியஸ் பற்றியெல்லாமா விசாரம் செய்யமுடியும்........... விடியும்வரை எப்படித்தான் இவளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்வது? அவளைத் திரும்பிப்பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். 'பொருட்பெண்ணிடம் எதையுமே அனுபவிக்கமுடியாதென்று' சும்மாவா சொன்னார்கள். எரிச்சல் அதிகமாக அவளிடம் சொன்னான்: “ நீயுன் வீட்டுக்குப்போறதென்றால் போ.”அவள் திடுப்பென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவனைக் கேட்டாள்:
"நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? ”
" யெஸ்............ ”
" ஏன் என்னைப் பிடிக்கலையா? ”
"பிடித்தென்ன மிஸ், கொன்டெம்தான் இல்லையே.......? ”
“ உங்களை நிலையை நினைத்தால் எனக்கு பரிதாபமாகவிருக்கு................ ஆனாலும் கொன்டெம் இல்லாமலென்பது படுபயங்கரமான றிஸ்க்! கொன்டெமில்லாமல் கூடவேகூடாதென்பது எங்கள் கம்பனி உத்தரவுகூட.......அப்படியே நாலு இடத்தில் நேர்ந்தால் சுகாதாரமாயிருக்காதே? ”
யார்யாரெல்லாம் தன்மீது 'பரிதாபப்படுகிறார்கள்' என்பதை நினைக்க எரிச்சல் இன்னும் அதிகமாகியது.
“ உன் நியாயத்தை ஒப்புக்கொள்வதால்தான் சொல்கிறேன்.................. நீ போகலாம். ”
" ஒன்றும் கோபமோ வருத்தமோ இல்லையே.............? ”
“ இல்லை. ”
ஆயிரம் பாத்துக்களை இழக்கவேண்டியிருக்கேயென்று நினைத்தளோ பிறகும் அவள் தயங்கிக்கொண்டு நின்றாள்.
அவன் பர்ஸை எடுத்து ஆயிரம் பாத்துக்களை எண்ணவும் அவள் முகம் பிரகாசமாகியது.
“ நீங்களாகத்தான் என்னை அனுப்பிவைத்தீர்களென்று ஒரு குறிப்பும் வேணும். ”
டைரியில் ஒரு தாளைக்கிழித்து எழுதிவிட்டு அதில் ஆயிரம் பாத்துக்களையும் வைத்து மடித்துக்கொடுத்தான்.
நன்றியுடன் பெற்றுக்கொண்டு அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வணங்கி விடைபெற்றாள்.
மறு நாள் டாக்ஸிக்காரன் சித்தார்த்தனைத் தூரத்தில் கண்டதும் பெரிதாக ஸலாம் வைத்தான்.
“ கொம்பனி எப்படி? ”
இவன் உதட்டைப்பிதுக்கியதைப் பார்த்துவிட்டு சொன்னான்:
“ உங்கள் டேஸ்ட் எனக்குப்புரிகிறது சார்........... உங்கள் டேஸ்ட்டுக்குத் தகுந்த மாதிரிப்பெண்கள் கிராமங்களில்தான் கிடைப்பார்கள்......... என்ன ஒரு இருநூறு கிலோ மீட்டர்வரை பணயம் செய்யவேண்டிவரும். ”
“ அதனாலென்ன................ ”
அவன் வந்த நோக்கமே அதுதானே. (4)
அன்றே 200 கி.மீட்டர் தொலைவிலிருந்த சராபுரி (நம்ம ஊர்ப்பெயர் மாதிரியில்லை?) என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். சற்றே மலைப்பாங்கான பகுதி அது. ஐயன்னா, ஓவன்னா வளைவுகள் கொண்ட வீதியில் காரை இலாவகமாக ஓட்டிக்கொண்டே டாக்ஸிக்காரன் சொல்லிக்கொண்டு வந்தான். “ நாகரீகம் பரவாத கிராமம் அது. நீங்கள் இங்கே ஒரு நாளைக்கு அழுத பணம் அங்கே ஒருவாரத்திற்குப்போதும். 'பேயிங் மருமகனாக' அவர்கள் குடும்பத்தில் உங்களை ராஜா மாதிரி உபசரிப்பார்கள். ”
சராபுரி சேர்ந்ததும் முதன்முதலில் அவன்கூட்டிப்போன இடமே சித்தார்த்தனுக்குப் பிடித்துப்போய்விட்டது.இருபதுக்கு உள்ளும் புறமுமான வயதிலும், தோற்றத்திலும் அதிகம் வித்தியாசமில்லாமல் லட்டும், ஜாங்கிரியும் மாதிரி இரண்டு பெண்கள் இருந்தார்கள். மாலிகா , கனீத்தா என்று இருவரும் சகோதரிகளாம். யாரை வேணுமானாலும் வைத்துக்கொண்டு இரண்டுவாரங்கள் தங்க 3500 பாத்துக்கள் என்றார் (அப்பன்) மாமா.எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பாத்துக்களை வீசி அவர்களை அசத்தினான் சித்தார்த்தன். என்ன வகைச்சாப்பாடெல்லாம் பிடிக்குமென்று கனீத்தாவைக்கொண்டு மாமி கேட்பித்தார். உள்ளதே அரைகுறை , அதிலும் அவர்கள் ட, ஸ, ல, ள க்களைப் பேதமற நசித்துச் சப்பிச் செப்பிய ஒரு வகையான மழலை ஆங்கிலத்தின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள அசாதாரண திறமை வேண்டியிருந்தது. முதலில் குளிக்க வெந்நீர் போட்டுத்தந்தார்கள். குளித்துமுடிந்ததும் ஒருத்தி பெரிய "டவலை"க் கொண்டுவந்து தலையை நன்கு உலர்த்திவிட்டாள். இன்னொருத்தி பெண்களுக்குச் செய்வதுபோல் அகில்புகையைக் கொண்டுவந்து அவன் கேசத்துக்குப் பிடித்தாள். சூப்பர் சாப்பாடானதும் இருபெண்களையும் மாமியாரே அனுப்பிவைக்க அவர்கள் அவனுக்கு இடமும் வலமுமாக பாமா ருக்மணியென வந்து நின்றனர். முதற்பார்வையிலேயே கனீத்தாவின் கண்களின் அதீத காந்தம் அவனைக் ஈர்த்துவிட்டிருந்தது. அவர்கள் அவனுக்கு காட்டிய அறையினுள் அவளையே தன் "சூட்கேஸைக்” கொண்டு போய் வைக்கச்சொன்னான்.
அவனது முதலிரவு அலாதியாய் அமைந்தது. மகா அனுபவஸ்த்தன் போல ஒரு சிப்பம் கொன்டெம் எடுத்துப்போயிருந்தான். ஒன்றுக்குத்தானும் வேலையிருக்கவில்லை. இவன் 'எல் போட் கேஸ்’ என்பதைப் புரிந்துகொண்டு அவனுக்கேற்ற விதத்தில் படு பாந்தமாக கனீத்தா அனுசரித்தாள். சித்தார்த்னுக்கும் அவளை விவரிக்க முடியாத வகையில் பிடித்துப்போனது. போகப்போக கனீத்தாவுடனான பிணைப்பின் ஆழம் அதிகமாகி அவளை ஒரு பொருட்பெண் என நினைக்கவே அவனால் முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஜென்மஜென்மாந்தர உறவிருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகத்தான் தான் தாய்லாந்து வந்து அந்தச் சராபுரிக்கிராமத்தில் அவளைச்சந்திக்க நேர்ந்ததாகவும் எண்ணினான். வாலிபம் வந்தநாள் முதற்கொண்டு தான் கொண்ட காமத்திற்கும் விரகத்திற்கும் முதன் முதலில் அர்த்தம் கற்பித்தவள் யாராக இருந்தாலென்ன அவளுக்கு தன்னை ஒருவிதத்தில் நன்றிக்கடன் பட்டவனாக உணர்ந்தான். அவளைப் பிரிந்துவிடுதல் என்பது அவனால் இனிமேல்முடியாது போலிருந்தது.
மறுநாள் காலை பனிமூட்டம் படிந்தொடுங்கி வெளிச்சம் தோன்றவும் ஜன்னல் வழியே கீழே மலையின் அடிவாரத்தில் வீதிகளும் வீடுகளும் உருவாகின. எங்கேயோ வெளியே செல்வதற்காக புறப்பட்ட 'மாமா’ இவன் அறைக்கு வெளியே வரும்வரை காத்திருந்து சொல்லிவிட்டுத்தான் போனார்.
“ ஏன் அப்படி.............? ”
“ அதுதான் வழக்கம். ”
மதியம் இவன் குளிப்பதற்கு ஆயத்தமாகவும் “ மைத்துனன் "என்று சொல்லிக்கொண்டு கப்பிறிக் காற்சட்டையும் கையில்லாத பனியனும் அணிந்த ஒரு இளைஞன் வந்தான். மூத்தபிள்ளையான அவனுக்குத் திருமணமாகிவிட்டதாவும் இப்போ இரண்டு வீடுகள் தள்ளியிருப்பதாகவும் கனீத்தா சொன்னான். அரை லிட்டருக்கும் மேல் ஒலிவ் எண்ணெய் கொண்டுவந்து அவனை ஒரு சிறிய மரவாங்கில் புற்பாய் ஒன்றைவிரித்துப் படுக்கச் சொல்லிவிட்டு, அவனுடம்பெல்லாம் தேயோதேயென்று சூடுபறக்கத் தேய்த்து மசாஜ் செய்துவிட்டான். சுகம்ம்ம்மாக இருந்தது. சித்தார்த்தன் அவனுக்கு நூறு பாத்துக்கள் கொடுக்கவும் வாங்கிக்கொள்ள கடைசிவரை மறுத்துவிட்டான்.மாலை கனீத்தாவுடன் அந்த ஊரைச்சுற்றினான். ஊரை வளைய வரும் சிறிய அருவியும் , அதன் சிறு நீர்வீழ்ச்சியும் , எங்கும் கோப்பியும், சோயாவும் பயிரிட்ட தோட்டங்களுமாக பசுமையாக இருந்தது சராபுரி.இன்னொரு நாள் அங்கு கூடும் சந்தையை போய் வேடிக்கை பார்த்தான். அங்கும் அவனது விருப்பத்திற்குரிய செங்கரும்பும் , இளநீர்க்குலைகளும் நிறைய வந்திருக்கவே புகுந்துவிளையாடினான். சராபுரியின் யார்வீட்டு மருமகனோ ஒரு வெள்ளைக்காரன் முகத்தில் தேன்நிலவுக்களை மாறாமல் ஒரு சுதேசிக்குமரியை அணைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தான்.ஒரு இரவு வாடகைக்கார் வைத்துக்கொண்டு திருவிழா நடந்துகொண்டிருந்த பங்சொங் என்ற பக்கத்துக்கிராமத்திற்கு கனீத்தாவுடன் போய் அவர்களின் நாட்டுக்கூத்தும் கிராமிய நடனங்களும் பார்த்தான். நம்மூர் நாட்டிய நாடகங்கள்போல ஆனால் பாவங்களும் , முத்திரைகளும் குறைந்த பல நடன நிகழ்வுகள் அங்கே நடைபெற்றன. மாமியார் வேறு இறைச்சி , நண்டு, கணவாய், இறால், எனத்தினம் ஒரு சமையல் வேளைக்கொரு சூப்பென்றாக்கி அவனைத் திக்குமுக்காடப் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தது. கனீத்தாவுடன் சுற்றோசுற்றென்று ஊரைச்சுற்றியாகிவிட்டது. எனினும் பிரிதலை மனதால் எண்ணிப்பார்க்கவே கஷ்டமானதாக இருந்தது. ஒரு நாள் அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் “ நீ என்ன உசத்தி? ” என்று அறிவுஜீவித்தனமான எதிர்க்கேள்வியெல்லாம் போடமாட்டாள் என்ற துணிவில்
“ எதற்கு இப்படியான ஒரு வாழ்க்கை முறை? "என்றான் நோவேற்படாதவாறு.
“ அல்லது எப்படி உங்களைச் சந்தித்திருப்பேன்..............? ”
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே பார்த்தாள். சற்று இடைவெளிவிட்டு தன் நைட்கவுணின் பொத்தான் ஒன்றைத்திருகியபடி சொன்னாள்:“ அப்பாவுக்கு குறைவான வருமானம்.......... நான்தான் குடும்பத்தை கவனிக்கவேணும்............ மேலே கொண்டுவரவேணும்............... நிறைய பணம் சம்பாதித்து ஸ்திரமான நிலைக்கு வந்து ஒரு சூப்பர் மார்க்கெட்டும் கட்டிக்கொண்ட பின்னால் நான் சுதந்திரப்பறவையாகிவிடுவேன். ”வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு மலர்ந்தாள். “ அதற்கிடையில் எயிட்ஸ¤ம் வந்து விடலாமல்லவா? ”
மீண்டும் இரண்டு நிமிடங்கள் மெளனமாய் தரையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னாள் :
“ எயிட்ஸ் கொலனியில கொண்டுபோய் குடியேற்றிவிடக்கூடிய ஆபத்தும் இருக்குத்தான்.............. ஆனால் வேற வழி எதுவும் எனக்குத்தெரியல்லே............ வாழ்க்கை அவ்வளவு தூரம் எங்களுக்கு அபாயகரமானதாகவும் இறுக்கமானதாயிருக்கு சார்......”
பணம் அதிகம் சம்பாதிக்க விரும்பியவர்கள் தங்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளை இலகுவான மூலதனமாக்கிச் சம்பாதித்தனர். அது அங்கீகரிக்கப்பட்ட தேசியத்தொழிலாக குற்றவுணர்வோ லஜ்ஜையோவின்றி தேசம் முழுவதும் நடைபெற்றது.
“ என்னோட உனக்கு எப்பவும் வாழ இஷ்டமா கனீத்தா.............? ”
“ நான் அவ்வளவு பேராசைக்காரியில்லை.”
“ நான் உன்னைக் குஷிப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை................... ”
“ நிஜமாலுமா...............? ”
“ நிஜமாலும்.......... ”
“ நடக்கக்கூடியதா...........? ”
“ நடக்கும். ”
“ அப்போ என்னையும் ஜெர்மனிக்கு கூட்டிப்போய்விடுவீர்கள்.......... இல்லை?”
“ கூட்டிப்போவேன்.......... ”
“ என் கனவுகள் எல்லாம் எளிதாய்விடுமில்லை.....................? ”
அவன் கேள்வியின் 'த்வனி’ முழுவதையும் அவள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையென்றே பட்டது.
(5)
பெர்லினில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. கண்களை அகல விரித்துவிரித்து எல்லா இடங்களையும் அதிசயித்துப் பார்த்தாள்.விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள் அவர்களை வேடிக்கை பார்க்க வீட்டில் வந்து கூடினர்.சித்தார்த்தன் வீட்டிலிருக்காத, மற்றும் வேலைக்குப் போன நேரங்களில் வந்திருந்த நண்பகளிலொருவன் “ நானும் போய் கூட்டி வாறதுக்கு தாய்லாந்தில ஒரு பொம்பிளை ஒழுங்கு பண்ணித்தரேலுமோ......?” என்றானாம்.இன்னொருவன் தான் சாப்பிடக்கொடுத்த கடலையால் தன்னையே சுண்டிப்பார்க்கிறானாம்.இன்னொருவன் “ சோக்கான குட்டி"என்று கன்னத்தில கிள்ளிறானாம்.இவர்களெல்லாருக்கும் ஏதாவது கொடுத்தால் 'தங்களோடையும் அவள் படுக்கவந்திடுவாள்’ என்று நினைக்கிறார்கள்.
சித்தார்த்தன் கண்டிப்பாக அவளிடம் சொல்லி வைத்தான்.
“ ·ப்றெண்டென்று சொல்லிக்கொண்டு நான் இல்லாத நேரம் வாற ஒரு நாயையும் உள்ளே எடுக்காதே.”
சித்தார்த்தன் வேலையால் வந்ததும் பொழுதுபோக்குக்காக ஒவ்வொருதினமும் ஒவ்வோரிடத்துக்கு அவளை அழைத்துப்போனான். சில நாட்கள் கழித்து மாலை நேர ஜெர்மன் வகுப்பொன்றிலும் அவளைச் சேர்த்துவிட்டான்.ஜெர்மன் இலக்கணம் அவளுக்கு புரியவே முடியாமலிருந்தது.
“ ஏன் சித்தார்த்தன்............... அவசியம் நான் ஜெர்மன் படிக்கவேணுமா? ”
“ அப்போதானே பார்ட் ரைம் ஜொப்பென்றாலும் கிடைக்கும் ”
“ கிடைத்து.............. ”
“ வீட்டுக்கு நீ பணம் அனுப்பவேண்டாமா............... உன் கனவுகள் நிறைவேற வேண்டாமா..............? ”
“ சரி....... ” என்றாள் மூன்றாம்பிறை ஸ்ரீதேவிமாதிரியின் மன்னையுடன்.
ஒரு மாதம் கழித்து பெர்லின் திரும்பிய அமலன் நேராக அவனிடம் வந்து “ காழ்......... காழ்.......... காழ்........... ” என்று கத்தினான். “ வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிட்றாவென்டால் தோலையும் மடியில கட்டிக்கொண்டு வந்து நிக்கிறியே வெலுத்தி................. நான் கொழும்பிலேயே அறிஞ்சிட்டன் ”
“ அதுக்குள்ள அங்கேயும் நாறிட்டுதுதே................. நாறட்டும். ஆனால் குதிக்கிற உங்களில் ஒருவரேனும் என் உணர்ச்சிகளின் இரசாயனத்தை கொஞ்சமாவேனும் புரிஞ்சுகொண்டு பேசுகிறீர்களில்லையே எண்டதுதான் என்னுடைய ஆதங்கம். ”“ இருக்குமிருக்கும்................. முன்னபின்ன காணாமலிருந்திட்டுக் கண்டறியாத 'ஒண்டை'க்கண்டால் உப்பிடித்தான் சிலருக்குப் பித்தம் தலைக்கேறிச் சித்தம் பிசகிறதாம்................ பிறகு இந்தமாதிரி விளங்காத்தனமாய் எல்லாம் புசத்துவாங்களாம்................. ·ப்றொயிட் சொல்லியிருக்கிறார். விசர்பிடிச்ச குக்கனே எக்கேடாவது கெட்டுத்தொலை.”
"அதென்ன குக்கன்? ”
“ விசர்பிடித்தால் வாலைத் தொங்கப்போட்டுக்கொண்டு, நாக்கால ஒழுக ஒழுக அலையுமே நாலுகால்ல............. கண்ட இடத்தில அடிச்சுக்கொல்லுவாங்கள்....... அதைத்தான் உம்ம லெவலுக்கு சற்றே சங்கை கருதிக் காவியத்தமிழில் பகர்ந்தோம்.......... ”
அமலன் போனபின்பு கனீத்தா அவனிடம் கேட்டாள்:
“ ஏன் உங்கள் ·ப்றென்ட் கோவிச்சிட்டுப் போறார்? ”
“ அவனுக்குக் கொஞ்சம் எரிச்சல் தாறமாதிரியான மூலவியாதி கனீ............... அதோட இப்பதானே ஊரிலிருந்து வந்தவன் தண்ணி வித்தியாசத்தில சலமும் எரிஞ்சு தலப்பு கடுப்பாய்க் கடுக்குதாம்.”
“ பொய்....... பொய்...... பொய்........ நீங்கள் ஒன்றும் என்னைச் சமாதானப்படுத்த முயலவேண்டாம்............... உங்க ·ப்றென்ட்ஸ் எவருக்குமே நீங்கள் என்னைக் கட்டுறது இஷ்டமில்லை........ இது எனக்குப் புரியாமலில்லை. ”
" கனீ டியர்............ உனக்கு நானாச்சு, நீ எந்தப் பிரமஹத்தியையும் கண்டுகொள்ளாத.”
அப்போதைக்குச் சமாதானமானாலும் அந்நிகழ்வின் பின்னால் அமலனை எப்போ கண்டாலும் ஏதோ காட்டுவிலங்கு ஒன்றைக் கண்டதுபோல மிரண்டாள்.
வாழ்விலும் வெளியிலும் வசந்தம். தெருவாகனங்களும் ரயிலும்கூட சந்தமும் இசையும் கொண்டே இயங்குவனவாகப்பட்டன. இயற்கையும் இசையும்கூட முன்னதைவிட இன்பம் தருவனவாக இருந்தன.அவளுடனான இணைவில் வாழ்வின் அவன் திறந்தே பார்த்திராத புதிய கதவுகள் பல திறந்துகொண்டன. பிரேமை தரும் புதிய அனுபவங்களால் இன்னும் வாழவேண்டிய ஆசையும் புது உற்சாகம் பிறந்தன. தன்னை இந்த வாழ்வுக்காய் புதிதாகப் பிறந்தவனாய் உணர்ந்தான்.
ஒரு சனிக்கிழமை சித்தார்த்தன் கனீத்தாவையும் காரில்கூட்டிக்கொண்டு காய்கறிகள் வாங்குவதற்கு தமிழ்க்கடைக்கு கடை ஒன்றுக்குப்போனான். சுடிதாரும் கொலுசும் வாங்கித்தரச்சொன்னாள். வங்கிக்கொடுத்தான். மரக்கறி செக்ஷனுக்குவந்தபோது அவனுக்குப்பிடித்தமான குரங்குவாலன் பயற்றங்காயும், நல்ல பிஞ்சு வெண்டைக்காய்களும் கிடக்கக்கண்டு கடைக்காரரிடம் ஒவ்வொரு கிலோ போடச்சொல்லவும் இன்னொரு உதவியாளர் உள்ளேயிருந்து கமறினார் : "அது ஊத்தவானின்ரை ஓடருக்கு எடுத்துவைத்திருக்கிறன்...................... ”
கடைக்கார இளவல் நெளிந்துவிட்டு ஒரு அசட்டுச்சிரிப்புடன்
“ அண்ணை குறை நினைக்காதையுங்கோ............. உந்த இரண்டு ஐட்டத்திலயும் எங்களுக்கு நெடுங்கால வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பவ்பத்துக்கிலோ ஓடர் இருக்கு.......... இருக்கிறதே காணும்போலத் தெரியேல்ல................. இண்டைக்கு வேற மரக்கறியில பார்த்து எடுங்கோ........... சோக்கான முத்தல் பலாக்கொட்டையெல்லாம் அங்காலயிருக்குப் பாத்தியளே............. அடுத்த முறையாகட்டும் உங்களுக்கு நான் வேண்டிய மரக்கறி எடுத்து வைத்துத்தாறன். ” என்று சொல்லிக்கொண்டிருக்கவும் நடுத்தரவயது தாய்லாந்துக் குண்டுமாமி ஒருவர் காரில் வந்து பெரிய கூடையுடன் இறங்க கடைக்காரின் காய்கறிகளின் இருப்பில் பாதி வெண்டைக்காய் பயற்றங்காயுட்பட அவருக்கே வியாபாரமாகியது. அவர்தானாம் 'ஊத்தவான்’.
கனீத்தாவைக் கண்டவர் மிகவாஞ்சையுடன் வந்து அவளுடன் தாயில் பேசி அவளைப்பற்றி விசாரித்தார். அவள் என்னை அறிமுகம் செய்யவும் எனக்கும் நமஸ்கரித்தார். அவரது ஊரும் சராபுரிக்கு மிகச்சமீபம்தானாம், திரும்பத்திரும்பச் சொல்லிமகிழ்ந்தார். இவள் போன் நம்பரைக்கேட்டு வாங்கிக்கொண்டார்.
“ எதுக்காம் இத்தனை காய்கறி? ”
கடைக்கார இளவல் கனீத்தாவை மேற்கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும் நெளிந்தான்.
“ அவ தாய்ப்பெண்கள் 'வேலை செய்யிற கிளப்' ஒன்றுக்கு சாப்பாடு சப்ளை பண்ணிறவாம். ” என்றுவிட்டு இரகசியமாக கண்ணடித்தான்!
கனீத்தா வீடடின் ஜன்னல்களுக்கெல்லாம் புது கேட்டின்கள் தைத்துப்போட்டாள். கண்டபடி இறைந்துகிடந்த புத்தகங்களையெல்லாம் தூசுதட்டி ஷெல்·பில் அடுக்கிவைத்தாள். உடுப்புகள் எல்லாவற்றையும் கழுவி ஸ்திரிபோட்டாள். பாத்றூம் உட்பட வீடு முழுவதும் பளிச்சென்று துலங்கியது. சமையலையும் முடித்து வைத்துவிட்டு அவனை எதிர்பார்த்திருப்பதில் தமிழ் மரபுபேணும் குடும்பப்பெண்களை ஒரேயடியாய் தூக்கியடித்தாள்.அவனுக்கு எங்கிருந்தோ வந்தவள் எதற்காகத் தனக்கு இப்படியெல்லாம் பண்ணவேண்டும் என்றிருந்தது. எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போலவும் இந்தக் கனவு கலைந்துவிடாதிருக்க வேணுமென்று ஏக்கமாயும் இருந்தது.
நாளாக ஆக கனீத்தாவுக்கும் வீட்டைச்சுத்தம் பண்ணுவதுவும், ஜெர்மன் வகுப்புக்குப் போய்வருவதுவும் தினப்படி நேரசூசிகை போட்டதுபோல் செய்ய லேசாக அலுப்புத்தட்டத் தொடங்கியது.சித்தார்த்தனுக்கும் அவளின் நூடில்சையும் , சூப்பையும் சாப்பிட்டுச்சாப்பிட்டு நூடில்சைக் கண்டாலே புரட்டத்தொடங்கியது.ஒரு வித்தியாசம் இருக்கட்டுமேயென்று தமிழ்நாடு றெஸ்ரோறன்டுக்குக் கூட்டிப்போனால் கனீத்தாவுக்கு உறைப்பும், புளிப்பும், மசாலை வாசமும், கொத்துமல்லியிலையும் அறவேபிடியாது, சரியாகச் சாப்பிடமாட்டாள்.சீனாவோ தாய்லாந்து றெஸ்ரோறன்டுக்குப் போனால் அவனால் அனுபவித்துச் சாப்பிடமுடியாதிருக்கும்.
ஒரு நாள் சித்தார்த்தனுக்கு எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த போது ஐந்திணைக்கவிதை ஒன்று ஞாபகம் வரவும் புன்னகைத்தான். இதைக்கவனித்துக் கொண்டிருந்த கனீத்தா "என்னவாக்கும் தனிமையில் மோனப்புன்னகை? ” என்றாள்.
“ ஒன்றுமில்லை ஐந்திணை ஐம்பது என்றொரு பழைய இலக்கியத்தில் முன்பு படித்த கவிதை ஒன்று ஞாபகம் வந்துது அதுதான்................. ”
“ நல்ல வேடிக்கையாக இருக்குமோ? ”
“ அல்ல........... காதலை , அன்பை , விட்டுக்கொடுத்தலை உணர்த்துவதாக இருக்கும்.......... ஒரு அற்புதக்கவிதை. ”
“ சொல்லுங்கள் பார்க்கலாம். ”
“ சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டி கலைமா - தன் கள்ளத்தின் ஊச்சம் சுரமென்பதென்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி......................... "எண்டால்.......?”"அதாவது காட்டில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஜோடி மான்களுக்குக் கடுமையான தாகம் எடுத்ததாம். எங்கும் நீருக்காக அலைந்தோ அலைந்துவிட்டுக் கடைசியில் ஒரு சுனையை அடைந்தபோது அது வற்றி ஒரு சொற்ப தண்ணீரே அங்கு காணப்பட்டுதாம். ஆவல் மிகுதியால் இரண்டு மான்களுமே நீரில் இறங்கி வாயைத் தண்ணீரில் வைத்துக்கொண்டாலும் சுனையிலுள்ள நீர்மட்டிலும் சற்றும் குறையவே காணோமாம்.கலைமானோ பாவம் பெண்மான் தாகம் தாங்கமாட்டாதது அ·தே குடிக்கட்டும் என்று தான் குடிப்பது போலப்பாவனை பண்ண....... பெண்மானோ ஆண்மானுக்குத்தான் தாகம் அதிகம் அதுவே முழுவதையும் குடிக்கட்டும் என்று நினைத்து தானும் சும்மா குடிப்பதுபோலப் பாவனை பண்ணிற்றாம்.................. ”
கனீதாவுக்கு கவிதையினதோ, கவிதை சுட்டும் சம்பவத்தின் நயமோ சிறிதும்பிடிபடவில்லை. நல்லூரில் தீர்த்தத்தை அடுத்துவந்த சந்தனத்தையும் வாங்கிக் குடித்த வெள்ளைக்காரன் மாதிரிக்கு விளங்கிய பாவனையில் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்துவிட்டு.
" இரண்டுபேரும் பங்கிட்டுக்குடித்திருக்கலாமே........ பைத்தியக்கார மான்கள்." என்றாள்.
இவளுக்குத் தான் 'தொப்ளர் இபெ·க்ட்டைப்' புரியவைக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என எண்ணிப்பார்த்த சித்தார்த்தன் வாய்விட்டே சிரித்துவிட்டான்.
“ என்ன வந்தது உங்களுக்கு இன்றைக்கு? "என்றாள் கனீத்தா கோபமாக.
ஒரு மனைவியிடம் கிடைப்பதெல்லாம் இவ்வளவுந்தானா? கவிதை, இலக்கியம், தத்துவம் சார்ந்த அவனது தேடல்களை அவளுடன் விசாரம் செய்ய முடியவில்லையென்றால்.......................... தவித்தான்.காதலிகூட இருந்து பாட்டுக் கலந்திடவேண்டும் என்று அவாவியவன் வாஞ்சை, அனுபவமென்ன சாதாரணமானதா?அவளின் இதயத்தை என்னதான் புரிய முயற்சித்தாலும் விளைவு ஏதோ ·பில்டர் கண்ணாடியால் பார்த்த மாதிர,¢ மொழிபெயர்ப்புக் கவிதை படித்தமாதிரியான அனுபவந்தான்.அவளுக்கும் அப்படித்தான். என்னதான் பேசினாலும், எவ்வளவுதான் பேசினாலும் ஏதோ பொச்சம் அடங்காதமாதிரியிருந்தது.
ஊத்தவான் ஒருநாள் நலங்கேட்டுப் போன்பண்ணினாள். போன்தானே பேசுகிறாள் பேசிவிட்டுப்போகட்டும்.................. என்று சித்தார்த்தன் நினைக்கவும் கனீத்தா டெலிபோன் றிசீவரைப்பொத்திக்கொண்டு “ அவளை எப்போது வீட்டுக்கு அழைக்கலாம்? "என்றாள். “ வேண்டாம் ” என்று சைகையால் காட்டினான்.கனீத்தாவின் முகம் முதல் தடவையாக இருண்டது. தாயில் எதையோ சொல்லிவிட்டு றிசீவரை வைத்தாள். உதடுகள் துடித்துக்கொண்டிருக்க கண்களிலிருந்து சில வைரமுத்துக்கள் நிலத்தில் குதித்தன.
“ நான் மனம்விட்டுப் பேசக்கிடைத்த ஒரே நட்பு, அவ இங்க வாறதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை................ நீங்கள் சொன்ன பிரேமை இவ்வளவுதானா......................?” விம்மினாள்.சித்தார்த்தனுக்கு உள்ளூரக் கலவரமாகிவிட்டிருந்தது. சமாளித்துக்கொண்டு அவளைச் சமாதானப்படுத்தினான்.
“ இது இந்த அளவுக்கு உன்னை நோகவைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை டியர்................ ”
“ ஊத்தவான் எங்கள் வீட்டுக்கு வர்றது உங்களுக்கு கெளரவக்குறைச்சல் என்று நினைக்கிறியள்.................. எனக்குத்தெரியும்.”
“ கெளரவக்குறைச்சல் என்பதெல்லாமில்லை............ எதுக்கு அவ சினேகிதம்.............இங்கே ஜேர்மன்காரர்களைக் கல்யாணம்செய்த தாய் நாட்டுப்பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு மன்றமே வைத்திருக்கிறார்களாம்............... அட்டிரஸை எடுத்து ஒருநாள் அங்கே போனமென்றால் எத்தனை பேரைச்சந்திக்கலாம்.! ”
“ ஊத்தவான் எனக்க அயலூர்க்காரி என்பதுதான் உங்களுக்குத்தெரியுமே...........அவமாதிரி மற்ற வேறுயாரும் என்மேல உண்மைப் பட்ஷமாயிருக்காயினம்............... அவ எனக்கு விசாஎல்லாம் புதுப்பித்துத்தாறன் என்டிருக்கிறா................. ”சித்தார்தனுக்கு இப்போது சுரீரென்று பற்றிக்கொண்டு வந்தது. தேவையில்லாமல் விசா புதுப்பித்துத்தருகிறேன்............... அதுஇது என்று தங்கள் வீட்டுவிடயங்களில் மூக்கைநுழைக்கும் ஊத்தவானின் நோக்கங்கள் நிச்சயம் நல்லதாயிருக்காது.
“ அப்ப விசா எப்பிடிப் புதுப்பிப்பது என்பது தெரியாமலோ உன்னைக் கூட்டிக்கொண்டுவந்தனான்? ”
'அதற்கேன் மனுஷன் இப்படிச்சீறுகிறான்’ என்பது கனீத்தாவுக்கும் பிடிபடவில்லை.அன்று முழுக்க மன்னையைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள். அவன் “ சரி சரி ஒரு நாளைக்கு அவளைக் கூப்பிடு............... ” என்றதும் மீண்டும் முகம் விகசித்து முழுநிலவானது.
ஒரு நாலுநாள் போயிருக்கும் சித்தார்த்தன் மாலை வேலையால் திரும்பவும் கனீத்தா ஒரே பாட்டும் கூத்துமாய் ஸெற்றிக்கும் ஸோபாவுக்குமாகக் குதித்துக்கொண்டிருந்தாள். இயல்பிலேயே அவளுக்கு டிவி ஷம்பூ விளம்பரங்களில் வருபவர்களைத் தோற்கடிக்கும் கருகருவென்ற நேரான கேசம். அதில் அன்று செறிவான சிறுசிறு பின்னல்கள் பின்னிவிட்டுத்தலையில் பல நிறங்களில் மணிகள் கோர்த்து குறுக்கும்மறுக்குமாக வலைவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
“ என்ன இதெல்லாம்...................? ”
“ இன்று ஊத்தவான் வந்திருந்தாவே............”சரி............... எவளாவது வந்து தொலையட்டும்............ இவள் மூஞ்சியை இறக்கிவையாமல் இருந்தால் சரிதான்.
" அப்புறம்"
“ அவதான் இதெல்லாம் எனக்குப் பண்ணிவிட்டா......... ” தலையைப் பல கோணங்களிலும் சரித்துச் சரித்துத் தன் அலங்காரத்தைக் காட்டினாள் குழந்தை மாதிரி.
“ வேறை..............? ”
“ ·ப்றைட் றைஸ், ஜியாஸி (இது உள்ளே பொடிபண்ணப்பட்ட இறைச்சி, வெஞ்சனங்கள் சேர்த்து நிரப்பப்பட்டிருக்கும். விருந்துகள் விழாக்களின்போது ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும பஸ்டா வகையிலான ஒரு சீன உணவு. பார்வைக்கு சின்னச்சின்ன சமோஸாக்களைப் போலவிருக்கும், காரமான சோஸ் எதனுடனாவது தொட்டுக்கொண்டு விளையாடினால் சும்மா கணிதம் பேசும்.) எல்லாம் கொண்டு வந்தாவே.......... ”
(6)
கனீத்தாவின் பெற்றோர்களிடமிருந்து கடிதங்கள் ஒழுங்காய் வந்தன. சித்தார்த்தனையும் சுகம் விசாரித்து எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்துச்சொல்லுவாள்.ஊத்தவானும் ஏதோ கட்டிக்கொடுத்த மகளைச் சீராட்ட வாற மாதிரி மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் வந்து போய்க்கொண்டிருந்தாள்.
இலையுதிர்காலம் ஆரம்பித்து விட்டிருந்த ஒரு மாலை சித்தார்த்தன் வழமைபோல் வேலையால் ஒரு சீப்பு பியருடன் வந்து பஸ்ஸரை அழுத்தினான். கலகலத்துக்கொண்டு வந்து கதவைத்திறக்கும் கனீத்தாவைக் காணவில்லை.
'சொல்லிக்கொள்ளாமல் எங்கும் போகமாட்டாளே................ கடைகளில் குளிர்காலத்து சேல்ஸ் நேரம்............. எங்கேயாவது ஷொப்பிங் போயிருப்பாள்.’ என்று எண்ணிக்கொண்டு தனதுதிறப்பினால் கதவைத்திறந்து உள்ளே வந்து காத்திருந்தான்.
இரவு ஏழே முக்கால் மணியுமாகியது. கனீத்தா வந்தபாடில்லை. பொலீஸ¤க்குத் தகவல் கொடுக்கலாமா என நினைத்தான். ஊத்தவானுடன் எங்காவது வெளியே போயிருப்பாளோ.................. அப்படிச்சொல்லாமல் கொள்ளாமல் எதையும் செய்யும் வழக்கமில்லையே............... ஊத்தைவானின் டெலிபோன் நம்பர் எங்காவது எழுதிவைத்திருக்கிறாளா பார்க்கலாமென்று அலுமாரியைத்திறந்தான். அவளுக்காக அவன் முதன்முதல் வாங்கிக்கொடுத்த வெள்ளிமருவிய சூட்கேஸைக் காணவில்லை.ஏதோ விபரீதமாக நடந்துவிட்டதென்பது புரிந்தது. அடுத்து என்ன செய்வதென்பது தெரியவில்லை. அவள் பிரிந்து போகவேணுமென்று முடிவெடுத்தால் நான் வற்புறுத்த முடியாதுதான். எதையும் சொல்லிக்கொண்டு செய்திருக்கலாமே............ ஆசியாக்கடை இன்னும் பூட்டியிருக்கமாட்¡ர்கள். அவர்களுக்கு போன் பண்ணினான்.
“ தம்பி உங்களிட்ட நிறைய காய்கறிகள் வாங்குகிற அந்த தாய்லாந்து தடிச்ச மனிசி ஊத்தவானோ கூத்திவானோ என்று அவவின்ர டெலிபோன் நம்பர் அல்லது அட்டிறஸ் தெரியுமோ? ”
“ டெலிபோன் நம்பர் தேடினால் எடுக்கலாந்தான்.............. ஆனால் எனக்கு அவவின்ரை அட்டிறஸ் தெரியும்.............. பல தடவை அவவீட்டுக்கு நானே நேரேபோய் சரக்கு சப்ளை பண்ணியிருக்கிறன் ”
“ நல்லது................. சொல்லும் ”
“ Rehberg U-Bahn இல (சுரங்க ரயில்) இறங்கி வெளியே வந்தால்................. ட்றெயின் போற திசையில வலப்பக்கமாய் இரண்டாவது அப்பார்ட்மென்ட் வீடு வாசல்ல கிளிங்கலில (அழைப்புமணி) பெயர் இருக்கு. ”
காரை எடுக்கப்போனவன் ஒரு கணம் இந்நேரம் டிராபிக்குக்குள்ளால் நூற்றெட்டு சிக்னல்களில் நின்று நின்று போவதைவிட ட்றெயினிலேயே போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டு விரைந்துபோய் ஊ-பாணைப் பிடித்தான். இடையில் Adenauer Platz என்ற சந்திப்பில் இறங்கி ட்றெயின் திசைமாறவேண்டி அதற்கான நகர்படிகளை நோக்கி ஓடுகிறான். எங்கிருந்தோ ஒரு பாலஸ்தீனி இளைஞன் இவனைக் கண்டுவிட்டு குளவியாய் அவனை நோக்கி ஓடிவந்தான்.
"ஹேய்.............மன்.......... ஹேய்.............. ”
"என்ன? ”
"என்னிடம் ஹஷீஷ் வாங்கு. ”
" வேண்டாம். ”
"ஏன் வேண்டாம்? ”
"நான் பாவிப்பதில்லை........ ”
"ஏன் பாவிப்பதில்லை.............? ”
" பழக்கமில்லை."
"ஏன் பழக்கமில்லை?"“...................”" தொலை........ கஞ்சல் பாக்கிஸ்த்தானி.”
அத்தையின் பாடல்ல, குத்தியன் மாருக்கு நிக்கிறான்.............ம்ம்ம். இவனுடன் பேச்சை வளர்த்தினால் அடுத்த படலம் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு புரள்வதாய்த்தானிருக்கும். அதற்கு இப்போ நேரமில்லை. கத்தியெடுத்துச் சொருகவும் தயங்காது இந்தக் கும்பல். பகவானே உம்மால் முடிந்தால் தம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கல்வியையும் தொலைத்துவிட்டு வழிதவறி நிற்கும் இந்த மா·பியாக் குழந்தைகளை இரட்ஷியும். கன்னத்தில் போட்டுக்கொண்டு அடுத்த ட்றெயின் வரும் மேடைக்கு ஓடினான். வீட்டைக்கண்டுபிடிப்பதில் எதுவித சிரமமுமிருக்கவில்லை. பஸ்ஸரை அமுக்கவும் ஊத்தவானே கதவைத்திறந்தாள்.
“ கனீத்தா இங்கே வந்தாளா...............? ”
“ ஜா......... வந்தாள்............. அடுத்த அறையிலிருக்கிறாள்...... ”
ஒரு வதியும் அறையை மருவிய இன்னொரு அறையைக்காட்டிவிட்டு அவள் உள்ளே நகர்ந்தாள். சித்தார்த்தன் அந்த அறைக்குள் நுழைந்தான்.உள்ளே ஒரு கட்டிலில் அசோகவனத்துச் சீதைமாதிரி அமர்ந்திருந்தாள் கனீத்தா. அவனைக்கண்டதும் நிதானமாக எழுந்துவந்தாள்.
“ எதுக்கு இப்பிடிச் சொல்லாமல் கொள்ளாமல்.................? ”
சற்றே திறந்திருந்த கதவை முற்றாகச் சாத்திவிட்டு வந்தவள் முதல்தடவையாக அவன் கண்களை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள். கண்கள் லேசாக ஈரங்கொண்டு மின்னின. அக்கணம் அவனுக்கு அவள் யாரோ ஒரு அந்நியள் மாதிரிப்பட்டாள்.
“ சித்தார்த்தன் நீங்கள் நல்லவரில்லை. மிக........ மிக....... மிக....... மிகவும் நல்லவர். ஆனால் எனது வாழ்க்கை அங்கேயில்லை என்று எனக்கு படுகுது................உங்களுக்கு எதிரில் நின்று நான் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படும் தைரியம் மனத்தெம்பு எனக்கில்லை சித்தார்த்............... ”
“ உன்னை யாரும் பயமுறுத்தினாங்களா............ என்ன நடந்தது சொல்லு கனீத்தா என்னிடம் எதையும் மறைக்காதை......ப்ளீஸ். ”தலையை இரண்டு பக்கமும் மெதுவாக ஆட்டினாள்.
“ பின்னே என்னை விட்டிட்டுப் போக இப்ப என்னதான் அவசியம் வந்தது............... உன் மூளையை யார் கழுவிவிட்டது ..........? உனக்கு இதெல்லாம் வேண்டாத சகவாசமென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவைச்சது இதுக்குத்தான் .................. ”
“ சித்தார்த்தன்.............. என் மூளையை யாருமே சலவை செய்யேல்லை.............ஒழுங்காகத்தான் இருக்கு. நீங்கள் வீணாக ஊத்தவானைச் சந்தேகிக்க வேண்டாம்...... அவர் நல்லவர், என் விஷயத்தில் அவர் தலையீடு ஒன்றுமேயில்லை. பூஜ்யம். எனக்கு வழி வேறொன்று இருக்கிறதாக எனக்குப்படுகிறது................. எதிர்காலம் பற்றி எனக்குத்தெரிகின்ற காட்சிகளையும், கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில எடுத்துச்சொல்ல எனக்கு திறமை போதாமலிருக்கு. வருந்துகிறேன். இது நானே எடுத்துக்கொண்ட தீர்க்கமான முடிவுதான், இதற்குள் வேறு எவருடைய ஆலோசனைகளோ நிர்ப்பந்தமோ இல்லை, சத்தியம். ”
“ உனக்கு நான் என்னதான் குறைவைத்தேன்.............? ”
“ நீங்கள் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை................ ஆனால் எனக்காக நீங்களாகவே பல குறைகளை ஏற்றுக்கொண்டும் , சகித்துக்கொண்டும் வாழுகிறீர்கள்.............. அதுதான் எனது துன்பம். ”
"அப்போ இவ்வளவு நாள் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்.................பைத்தியக்காரத் தனமாய் இப்ப என்னதான் சொல்ல வர்றே நீ ............. ”(அவள் தன் மழலை ஆங்கிலத்தில் செப்பியதன், செப்பமுயன்றதன் பிழிவு இது.)
“ சித்தார்த்தன்........... என்னைப்பாருங்கள். நல்ல தாம்பத்யம் என்பது வெறும் மோகங்களாலோ, செக்ஸினாலோ அமைந்துவிடுவதில்லை................. அங்கே அடிப்படையிலான ரசனைக்கலப்புகள் கருத்துப்பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேணும், அப்போதுதான் அது சுவைபடும்................. எங்களுடைய வாழ்க்கையைப்பாருங்கள்............... குறைந்தபட்ஷம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப்போகிறதாவென்று................. நான் கிராமத்தில் பிறந்து நாகரீகம் தெரியாமல் வளர்ந்துவிட்ட ஒரு பட்டிக்காட்டுப்பெண். உங்களின் கவிதையிலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும் எனக்கு எக்காலத்திலும் எனக்கு ஈடுபாடு வரப்போவதேயில்லை................ எனக்காக நீங்கள் உங்களின் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிட்டீர்கள்................. உங்களின் சிறந்த சிநேகிதன் என்று நீங்கள் சொல்ற அமலனே இப்போ வீட்டுக்கு வாறதில்லை. உங்கள் பெற்றோரை நினைத்தாலே எனக்குப் பயமாகவே இருக்கிறது.................. இந்த ஒருத்தியால் அவர்களையும் நீங்கள் இழக்கப்போவது எனக்குப் புரியாமலில்லை. எந்தக்காலத்திலும் உங்கள் தாயாரிடம் உங்கள் மருமகளை இன்ன இடத்தில் பிடித்து வந்தேன் என்று சொல்லிவிடமுடியுமா...............? யோசித்துப்பாருங்கள். நீங்களே சொல்றபடி பொம்மை மாதிரி இந்த உடலைத்தவிர வேறென்னதானிருக்கு என்னிடம்.............? நீங்கள் இலட்சிய வாழ்வொன்றை உங்கள் ரசனைக்கேற்ப ஏற்படுத்திக்கொள்ள முற்றிலும் தகுதிகளும் வாய்ப்புக்களும் கொண்டவர். பாயவே தெரியாத இந்தக்குதிரையோட சேர்ந்து நீங்களும் நொண்டுவதை இடறுப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தர்மம் இல்லை. தெரிஞ்ச தேவாங்கு என்பதற்காகத் தோளில்போட்டுக்கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியமும் உங்களுக்குமில்லை. இலேசாகவும் உல்லாசமாகவும் பனிச்சறுக்கல் மாதிரிப்பயணிக்கக்கூடிய உங்கள் கால்களுக்குள் புகுந்துகொண்டு இடைஞ்சல் பண்ணிக்கொண்டு நான் சமாதானமாக இருப்பேனென்று நினைக்கிறீர்களா............ அதில எனக்குச் சம்மதமோ, இஷ்டமோ இல்லை. எனக்கு நன்றாகவே தெரியுது......... எனது பாதை வேறு. அதிலதான் நான் பயணப்படவேணும், பயணப்படவும் முடியும். அதனால் அந்தப்பாதைக்குத்தான் நான் இப்போ வந்திட்டன். அதில எப்பிடிச் சறுக்கப்போறேனென்றது எனது விதி. என்னோடு சேர்ந்து வர்றதென்பது, உங்களுக்கு முழுக்கத் துன்பமான அனுபவமாயுமிருக்கும், உங்களால அது முடியவும் முடியாது. என் மேலான பிரேமையால சமூகத்தையும், உறவுகளையும் கணக்கிலெடுக்காது என்னோடு வாழவிரும்பும் உங்களுடைய தியாகத்தையும், மனோதைரியத்தையும் நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். உங்கள் ஈடுசெய்யமுடியாத அன்புக்கு எனது நன்றிகள்.ஆனால் இந்தப்பிரிவு எங்களிருவருக்கும் நல்லது. என்னைப் புரிந்துகொள்ளுங்கள் சித்தார்த்தன். ”
அன்று நள்ளிரவாகும்வரை அவர்கள் விவாதித்துக்கொண்டார்கள்.
அடுத்த கோடையில் ஒரு நாள் தற்செயலாக பிஷ்மார்க் வீதியில் தாய்லாந்து, தாய்வான், பிலிப்பின்ஸ் என்று கிழக்காசிய இளசுகளாலேயே செறிந்ததும் Butterflies என்று திருநாமங்கொண்டதுமான செக்ஸ்பார் அருகே சித்தார்த்தனின் காருக்கு முன்போன டாக்ஸியொன்று நிறுத்தப்பட வேறும் இரண்டு குமரிகளுடன் கனீத்தா இறங்கிப்போவதைக் கண்டதும் அவன் மெல்ல ஹோர்ணை அடித்தான்.
“ ஹாய்............... சித்தார்த்!"என்று கண்கள் விரிய குதூகலத்துடன் கைகளை அசைத்துக்கொண்டு ஓடி வந்தாள்.
“ எப்பிடியிருக்கிறீர்கள் சித்தார்த்தன் செளக்கியமா..............? ”
“ செளக்கியமே......... ”
“ நீ........... எப்படி...?”
“ செளக்கியத்துக்கு குறைவில்லை.............. புதுசா கார் பழக ஆரம்பித்திருக்கிறேன்............. சீக்கிரம் லைசென்ஸ் கிடைத்திடும்.”
“ அப்படியா..............சந்தோஷம். ”
“ ஊரிலிருந்து கடிதங்கள் எல்லாம் வருகிறதா.........?”
“ வந்துகொண்டேயிருக்கு........... எல்லோருமே செளக்கியமாம். இவளைப்பார்த்தாயா........... எந்நாட்டுக்காரிதான் வந்து ஒரு வருஷமேயாகவில்லை, அதற்குள் தங்களூரில் புதுவீடு வாங்கிவிட்டாளாம்........................ நானும் வெகு விரைவில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கிவிடுவேன்.”
அவள் கண்கள் கனவுகளால் நிரம்பியிருந்தன.


சரிநிகர். 25.02.1998 ..................................