Montag, April 04, 2005

வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்.

(1)
இதுவும் ஒரு வசந்தகாலம். இரவு நேரம் பதினொன்றை அணுகிக்கொண்டிருக்கிறது. சித்தார்த்தனுக்கு அதிகாலை நாலு மணிக்கு வேலைத்தளத்தில் அட்டென்டன்ஸ் காட் பஞ்ச் பண்ணியாகவேண்டும். இணையத்தில் ஏதாவது பார்த்துவிட்டோ கிறுக்கிவிட்டோ படுக்கைக்குப் போகலாமென்றால் அவனது செல்லமகள் ஹோம் வேர்க் பண்ணுகிறேனென்று சொல்லிக் கணினியை மூன்று மணிநேரமாக உருட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் இப்போதைக்கு அதைவிட்டு நகரப்போவதில்லையென்று தோன்றவும் " சோபி(தா)க்கண்ணா உன்ரை புறொஜெக்டைக் கொஞ்சம் மினிமைஸ் பண்ணிவிட்டு எனக்கேதாவது மெயில்ஸ் வந்திருக்கோவென்று பார்த்துச்சொல்லடா செல்லம் நான் படுக்கப்போறன்." என்றான். அவளும் நொடியில் தனது புறொஜெக்டை கீழே அமுக்கிவிட்டு அவனது மெயில்களை செக் பண்ணினாள். பண்ணிவிட்விட்டு
"ஹாஹ் ஹஹ்....ஹா..... வண் அண்ட் ஒன்லி மெயில் ·ப்றம் யுவர் எக்ஸ்·ப்றெண்ட் டாட்." என்றாள்.
"யூ மீன் கனீத்தா?"
"எக்ஸாட்லி"
அவன் முகம் விகசித்து ஆர்வமாவதைப் பார்த்ததும் பெருமனது பண்ணி
"தென் யு கோ த்றூ யுவ மெயில் ·பர்ஸ்ட் டாட்......" என்றுகொண்டு கதிரையை விட்டெழுந்தாள்.
கனீத்தாவும் சித்தார்த்தனும் ஸ்நேகித்திருந்த காலத்திலும் இண்டர்நெட் இருந்ததுதான், ஆனாலும் இப்போதுபோல் வீட்டுக்குவீடு அதைப் பயன் செய்யும் வசதிகள் பெருகியிருக்கவில்லை.
கனீதாவுக்கு நினைப்பு வந்தவேளையெல்லாம் முன்பு கடிதம் எழுதுவாள், இப்போதும் அதே அரைகுறை ஆங்கிலத்தில் மின் கடிதம். கடிதத்தில் எழுதப்படும் வரிகளைவிட வரிகளிடையேயான எழுதாத வெளிகள் உணர்த்தும் சங்கதிகள் அதிகம்.
'ஒற்றை ஆளாக உழைத்து சூப்பர் மார்க்கெட் எல்லாம் கட்டமுடியாதென்று சொன்னபோது என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை சித்தார்த். நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் தப்பானவை, முதிர்ச்சியற்றவை நான் எத்தனை ஞானசூனியமாகவும், அசட்டுப் பேதையாகவும் இருந்திருக்கிறேன் என்பது காலம் கடந்துதான் புரிகிறது. ஏனென்று தெரியாமலே எதுக்கோ பேராசைப்பட்டு என்பொம்மையை நானே போட்டு உடைத்துக்கொண்டுவிட்டேன். இத்தனை காலத்தின்பின் உன்னுடன் வாழ்ந்த சிறுகனவையும், என்னால் முடிந்த அளவுக்கு என் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்திருக்கிறேன் என்ற சிறு திருப்தியையும் மட்டும் நீக்கிவிட்டேனாயின் இப்போது என் மனது எந்தக்கிறுக்கலும் இல்லை. 'பிளாங்' ஆகிவிட்டது. ஆனல் மிகப்பெரிய பிளாங். " பிளாங் ஆக மனதை வைத்திருக்கமுடிந்தாலேபோதும் அதுவே பெரிய வரம்"என்று நீதான் முன்பு அடிக்கடி சொல்வாயே, அந்தவார்த்தைகள் என்செவியோரங்களில் இன்னமும் ஒலிக்கின்றன. 'அண்ணன் இப்போது டிராவல் ஏஜென்சி ஒன்று வைத்து நடத்துகிறான். நல்ல வருமானம், நன்றாகவே சம்பாதிக்கிறான். மாலிகாவுக்குத் (சகோதரி) திருமணமாகிவிட்டது. அவளுக்கு இரண்டு குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறாள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படியோ நகரத்தான் போகிறது. உன் காலை நான் இப்படி வாரிவிட்டுங்கூட அவற்றின் தடயங்கள் எதுவுமில்லாமலே ஒரு தடவைகூடச் சினக்காமல் எப்படித்தான் உனக்கு இத்தனை கூலாக பதில்கள் எழுத முடிகிறது சித்தார்த்? என்று ஒரு மெயில்.
'விலைகொடுத்து எனது உடலையும் அது தரக்கூடிய சுகிர்தங்களையும் வாங்க வந்தவர்களிடையே என் கூட்டுக்குள் தானாய் வந்துசேர்ந்த ஒரு நேசப்பறவையை விரட்டிவிட்டுவிட்டேன். என் ஜீவனில் கலந்துவிட்ட உன் அன்பின் வெதுமையும் , என்போர்வைக்குள் இருக்குமுன் தேகத்தின் வாசமும் இந்த ஜீவிதத்தில் அகலாது. நீ எனக்கு நிவர்த்திக்கவே முடியாத இழப்பு சித்தார்த்.' என்னை மன்னிக்கும்படி உன்னிடம் கேட்பதுவுங்கூட அபத்தம்தான். இருந்தாலும் நீ மிக மிக உயர்ந்தவன் என்னை மன்னித்திருப்பாய். நம்புகிறேன் என்று இன்னொருமுறை.
சனங்களின் பொதுப்புத்தியில் பட்டு 'ஓடுகாலிப்படையா ஓடிவிடுவள்' என்று கண்ட நிண்ட பேர்வளிகளும் சொன்னபோது 'இல்லை இவள் வேறு, வித்தியாசமென்று' இவர்களுக்கெல்லாம் காட்ட வேணுமென்று இருந்தவனுக்கு அவளின் பிரிவு தந்த ஏமாற்றமும் அவமானமும் விபரிக்கமுடியாதவைதான். ஆனாலும் அவற்றையெல்லாம் பொறுத்தாகிவிட்டது.இப்போது அவள் எழுதும் மெயில்களெல்லாம் காரணமில்லாமலே கலைந்துபோன அந்தச் சந்தோஷக்கனவின் இரைமீட்டல்கள்தான்.
' முன்பெல்லாம் இரவுப் பணியுள்ள நாட்களில் அதுமுடிய வந்து அதிகாலைவேளைகளில் கிளாசிக் இசை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருப்பாயே சித்தார்த். இப்போதும் அதுபோலவே எழுதிக்கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். எழுது , அப்படியாயின் இந்தப் பைத்தியக்காரியின் கதையையும் ஒருநாள் எழுது.'
(2)
சித்தார்த்தன் கனீத்தாவுடன் என்றுதான் விமானநிலையத்தில் வந்து இறங்கினானோ அன்றிலிருந்து பெர்லின் தமிழ் வட்டகை அவனை ஏதோ மழலையர் தோட்டத்தில் குண்டுவைத்த ஒரு கிரிமினலைப்போலவும், மனுச்சமூகத்துக்கே ஒவ்வாதவொரு பிராணியைப் போலவும் வினோதமாகப் பார்க்கிறது.
முப்பத்தியிரண்டு வயதாகியும் கட்டைப்பிரமச்சாரியாய் தனிமையில் கிடந்து மறுகியபோது அவனைக் கண்டேகொள்ளாத, அவனுக்காகப் பரியாத தமிழ்ச்சமூகம் இப்போது ஒரு தாய்லாந்துக் குமரியைக் கொண்டுவந்து இறக்கி விட்டான் என்ற மாத்திரத்தில் இவனால் எமது கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் எல்லாமே சீரழிந்து போய்விட்டதென்று கூவுது. எங்கிருந்து கனீத்தாவைக் கூட்டிவருகிறான் என்ற சூட்ஷ¤மம் மட்டும் பிரத்தியட்ஷமாகிச்சென்றால் நித்திரையிலேயே அவனை அடித்துக் கொன்றுவிடுவார்கள்.
“ என்ன மச்சான், சப்பட்டையொண்டைத் தள்ளியந்திட்டியாம்...............?”
“ இவளுக்குச் சப்பட்டையில்லை.............. வேணுமெண்டால் வந்து பார்க்கிறியா?”
இவனுடன் கொஞ்சநாள் ஒன்றாக வேலை செய்த நடுவயதுக்காரர் ஒருவர்-“ இவ்வளவு காலமும் ஒழுங்காயிருந்திட்டு திடீரெண்டு இப்பிடிக்குறுக்கை இழுப்பீரெண்டு நான் கனவிலும் நினைக்கேல்ல.................ஐசே, சய்க்! இரண்டு நாள் பாங்கொக் 'பார்க்கப்போன' உம்மோட தொத்திக்கொண்டு வந்தவள் எண்டால் ஐட்டம் சமசியந்தான், எதுக்கும் காசு களஞ்சைக் கனக்க வீட்டில வைச்சிருக்காதையும்............. அள்ளிக்கொண்டு பறந்திடுவாளவ. ”
இன்னொருவர் ரெலிபோனில்-“ ச்சாய்!.............. தோட்டக்காட்டிலை இருந்தெண்டாலும் ஒரு தமிழ்ப்பெட்டையாய்ப் பார்த்துக் கூட்டியராதையுமன். இனிப் பிள்ளையளுமல்லே 'ஞங் சொங் ஷ¤ங்’ எண்டப்போகுதுகள்..........” வெகுவாகக் கரிசனைப்பட்டார்.
“ அங்கைதான் பாரும் முதல்ல ட்றை பண்ணின்னான்................ ஆனால் அங்கையிருந்து யாரும் ஜெர்மனிக்கு வரத்தயாரில்லையாம்............... உம்மடை தமிழ்ப்பற்றையிட்டு எனக்குச் சதுரம் முழுக்கச்சிலிர்க்குதெண்டால் பாருமன்.”
' மலையகத்துப்பெண் என்றால் இரண்டாம் பட்ஷந்தான் 'என்ற கருத்து ஜென்மத்தில்கீரிமலையைத் தவிர வேறொரு மலையையும் கண்ணாலும் கண்டிராத பேர்வழிகளிடங்கூட ஜீன்ஸில் பற்றி, பிளேனில் தொற்றி, ஜேர்மனியில் வந்து இறங்கிவிட்டிருக்கும் அழகை என்னவென்பது?
இதுவரையில் ஒரு நாளும் சித்தார்த்தனுடன் முகங்கொடுத்தே பேசியிருக்காத வெகுதூரத்து உறவு மாமியொருவர் வலியவே போன்பண்ணி ஒரு மணிநேரம் உபதேசங்கள் செறிந்த விரிவுரையொன்று எடுத்தார். அதன் சாராம்சமாவது: “ அவளவை சாகஸக்காரியளாம், குடும்பத்துக்கெல்லாம் துண்டாய் ஆகாதாம், ஏதோ செலவளிச்சுக் கூட்டிவந்தனீர் கொஞ்ச நாளைக்கு வைச்சிருந்திட்டுக் கலைச்சுவிடும். ” என்பதுதான். "கட்டினவள மாதிரி வெளியிலயெல்லாம் கூட்டிக்கொண்டு திரியவேண்டாமாம், உலகம் முழுக்க விஷயம் நாறிச்சென்றால் பிறகு அறவே ஒருத்தரும் பெண்தராயினமாம். ”அந்த மாமியிடமே கல்யாண வயதில் ஒன்றுக்கு இரண்டு குமருகளிருக்கு, இரண்டுக்கும் லண்டன், கனடாவில எக்கவுண்டன்ட், இஞ்ஜினியர் றேஞ்சில மாப்பிள்ளைகள் தேடுகினம்.“ அப்ப ஏன் இவ்வளவு காலமும் நீங்கள் ஒருத்தரும் முன்வந்து பெண்தரவில்லை?” என்று அமுக்க அமுக்க எழுந்துகொண்டிருந்த ஸ்பிறிங்கேள்வியை உள்ளே மடித்து வலிந்து இருத்தினான்.
இதெல்லாம் முதலிலேயே சித்தார்த்தன் எதிர்பார்த்ததுதான். இருந்தும் அவற்றைப் பக்கமாகத் தூக்கிப்போட்டுவிடும்படி, அவனுக்குத்தைரியம் தருவதெல்லாம் கனீத்தாவின் வெளிப்படையான போக்கும் , மனதை நெக்குருக வைத்துச் சிறைகொள்கிற மாதிரி பல்வேறு தினுசுகளில் வெள்ளையாக அவள் அவ்வப்போது காலும் மந்திரப் புன்னகைகளுந்தான்.ஒரு சமயம் ஈச்சஞ்கொட்டைப்பற்கள் முழுவதையும் காட்டி அப்பாவிச்சிறுமியாய் , ஒரு சமயம் ஏராளம் வெட்கம் கலந்து, ஒரு சமயம் பச்சைக் குழந்தைமாதிரி , ஒரு சமயம் சரசமும் காதலும் சொட்ட, ஒருசமயம் குறும்பாக, ஒரு சமயம் ஸ்நேகபாவமாய், ஒரு சமயம் தாய்மையும் கருணையும் கனிய...... வாழ்வின் அறுந்தும் தொடர்ந்தும் வரும் திட்டுக்கள் , கோணல்கள், சரிவுகுழிகள், வழுக்கல்கள் , இருட்டுக்களெனக் கலந்து வரும் அனைத்து யதார்த்தங்களையும் மறக்கச்செய்துவிடும். இந்த ரசங்களையெல்லாம் கவனிக்கும் எவருக்கும் மனதுள் செல்லமாய் கடிக்கும்.
இவைகள் தவிர்ந்து இயல்பிலேயே மயக்கம் தோய்ந்த அவள் விழிகளிலே மிதக்கும் எதற்கோவான ஒரு ஏக்கமும், கொம்பு தேடும் ஒரு கொடியின் பரிதவிப்பும் சித்தார்த்தனை என்னவோ செய்தது. பத்து நாளே உறவில் அவனை அறியாமலே அவளை ஜீவிதபரியந்தம் அணைத்து வரித்துக்கொள்ளும் உறுதியான காபந்துக்கரங்கள் அவனுள்ளிருந்து எழுந்துகொண்டுவிட்டன. சித்தார்த்தனும் அவன் அத்தியந்த நண்பன் அமலனும் சேர்ந்து பலநாளாகத் திட்மிட்டுக்கொண்டுதான் தாய்லாந்துக்கு சிங்கப்பூரூடாக புறப்பட்டார்கள். ஆனால் அமலனோ முதலிலேயே சொல்லிவிட்டிருந்தான்:
“ மச்சான்............ ஊரிலயிருந்து கனகாலமாய் அம்மா கொழும்புக்கு வாறதுக்கு முயற்சி பண்ணிக்கொண்டு இருக்கிறா, சிலவேளை கப்பல் ஓடத்தொடங்கி அவ கொழும்புக்கு வந்திட்டாவேயென்றால்................. நான் தாய்லாந்து விஜயம் கட் பண்ணிக் கொழும்புக்குத்தான் போவன், குறைவிளங்கப்படாது.”
சிங்கப்பூர் வந்து இறங்கியதும் தமிழ் உணவகங்களும் தோசையும், போளியும், இடியப்பமும், வாழையிலையில் மரக்கறி சாப்பாடும், கோயிலும் குளமும், நோக்கின திக்கெங்கிலும் புடவையிலும், சுடிதாரிலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு தென்பட்ட தமிழ்ப்பெண்களுமாக ஏதோ யாழ்ப்பாணத்துக்கே வந்துவிட்டமாதிரி அவர்களுக்குக் குதூகலமாயிருந்தது.அவர்கள் தங்கியிருந்த அந்த ஹொட்டலிலும் வெளிநாடுகளுக்குப்போக வந்த நம்ம ஆட்கள் நிறையப்பேர் தங்கியிருந்தார்கள். அவர்கள்தான் முதலில் இவர்களை தெக்கோ மார்க்கெட், ஹனீபாஸ், கல்யாணசுந்தரம், கோமளவிலாஸ், வீரமாகாளி அம்மன்கோவில் என்று கூட்டிச்சென்றார்கள். ஒரு நாளிரவு செட்டிநாடு ஹொட்டலில் காடைக்கறியுடன் சாப்பிட்டுவிட்டு வந்து அக்குழாத்திடையே பீடா சக கோல்ட்லீ·ப் புகையுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அமலன்“ நாளைக்கு தாய்லாந்து எம்பாஸிக்கு விசாவுக்குப்போகவேணும்.” என்று உளறினான். சித்தார்த்தன் கண்ணை உருட்டி புடையனைப்போல "உஸ்ஸ்ஸ்ஸ்உஸ்” என்று சீறி எச்சரிக்கவும் அமலனுக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை........... அவன் அலங்க மலங்க முழித்துக்கொண்டிருக்க சித்தார்த்தன் ஜெர்மனில் சொன்னான்:
“ தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத ஆட்களின் சமூகத்தில், தேவையில்லாத தகவல்களை விடாத குரங்கே! ”
“ அப்படி என்னத்தைச் சொல்லிப்போட்டனென்று குதிக்கிறாய்? ”
“ தாய்லாந்துக்குப் போறமெண்டு ஊளையிட்டாய்..............”
“ ஓ ஜா. மை காஷ்........ மை ப்ளைட்.......... மை ட்றிப். யாருக்கென்ன நஷ்டம்?”
“ குரங்கே வெஸ்டிலையிருந்து சிங்கப்பூருக்கு வாற சனம் சுழிச்சுப்போட்டுப் பிறகேன் பாங்கொக்குக்கு ஓடுறதெண்டு இஞ்சை எல்லாருக்கும் தெரியும்................... அனாவசியத்துக்கு வாயைக்கொடுத்து நாறாதை.”
“ ஆமோ............ அப்படியுமொன்டிருக்கோ?”
“ அப்ப நாங்கள் தாய்லாந்துக்குப் போகயில்லையெண்டு எல்லாருக்கும் சத்தமாய் சொல்லட்டே?”
மறு நாள் காலையே அமலனின் தாய் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டதாக தகவல் வரவும் அவன் எயர்லங்காவில் அங்கே பறக்கவும்...............சித்தார்த்தன் தன் கூட்டத்தைக் காய்வெட்டிவிட்டு தனியே டாக்ஸியில் போய் தாய்லாந்து விசா எடுத்துக்கொண்டுவந்து மறுநாள் பாங்கொக் பறந்தான். (3)
சிங்கப்பூரைப்போன்றே பாங்கொக் வீதிகளிலும் அவ்வப்போது தேமதுரத்தமிழோசை காதில் வந்து விழவேசெய்தது. வெளிநாடுசெல்ல முயலும் ஈழத்தமிழருக்கு இது இரண்டாவது தரிப்பு. அவர்கள் மத்தியில் தானேதோ வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவன் மாதிரி நடந்துகொண்டான். பெட்ச்புரி றோட்டில் ஒரு மதறாஸ் றெஸ்ரோறன்டில் பிடித்துக்கொண்ட ஈழவர் சிலரிடம் கூசாமல் “ ஐ கம் ·ப்றம் ஷிஷேல்ஸ்....... நேட்டிவ் ரமில், பட் ஐ கான்ட் ஸ்பீக்....... யூ சீ.” என்றெல்லாம் அவிழ்த்தான். அவர்களில் பொழுதுபோகாத யாராவது தன் கிரியாம்சைகளை வேவுபார்க்கலாமென்ற முன்னெச்சரிக்கையில் சற்றே ஒதுக்காக சிலோம் பக்கமாய் ஒரு ஹொட்டலில் தன் அறையை எடுத்துக்கொண்டான்.முதல் நாள் பூங்கா, கடற்கரை, திறந்தவெளி உணவகங்கள் என்று சுற்றிப்பார்த்தான். இரண்டாம் நாள் காய்கறி, பழங்கள் குவிந்துள்ள மார்க்கெட்டுகளெல்லாம் போய் அங்கு என்ன புதிதாகக் கிடைக்குதென்று அலசினான். கொழும்பிற்போலவே புளிப்புக்குறைவான மாங்காய்த் துண்டங்களைத் தோல்சீவி அம்பரல்ல, கெக்கரிக்காய், அன்னாசி நறுக்குகளுடன் குச்சியில் கோர்த்து உப்பும் மிளகுப்பொடியும் தூவி விற்றார்கள்.மிளகாய் வெங்காயம் போட்டு தாளித்த ஆவிபறக்கும் பெரிய சுண்டல் கடலையுடன் இறால் பொரியலைக் கலந்து விற்றார்கள். மேலும் பன்னிரண்டு வருஷங்களாய் கண்ணாலும் காணாமலிருந்த றம்புட்டான் பழம், விதைகளற்றுத் தேனாக இனித்த கொய்யாப்பழம், செவ்விளனி, மாம்பழம் என்று கண்டதெல்லாவற்றையும் வாங்கி ஆசைதீரச் சாப்பிடுகையில் எதுக்கும் அமலனும் கூட வந்திருந்தால் இன்னும் ஜாலியாயிருந்திருக்குமென்றும் எண்ணினான்.
றெடிமேட் உடுப்புகள் விற்கும் கடையொன்றில் நிற்கையில் மேலே வந்து விழுந்து மாரால் உரசிவிட்டு அவனைக் கடந்து அப்பாலே போன ஓர் விடலைப்பெண், நின்று திரும்பிப்பார்த்து இவனுக்குக் கண்ணடித்தாள். அன்று மாலை இன்னொருத்தி கூட்டத்துடன் நடக்கையில் அருகாக வந்து பிருஷ்டத்தில் ஸ்பரிசித்தாள். வெளிநாட்டுக்காரன் எவனுக்காவது டொலரில் விலைபோக பின்னும் முன்னும் இளசுகள் அலைந்துகொண்டிருந்தன.
சித்தார்த்தனுக்கு காலையில் அரும்பி, மதியம் போதாகி, மாலையில் மலர்ந்துவிட்டிருந்த நோய் வெளியே புறப்படச்செய்தது. ஹொட்டலுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த டாக்ஸிகளில் ஒன்றில் ஏறி “ இரவு நேரம் பாங்கொக்கில் என்னப்பா விஷேஷம்?” என்றான்.கேட்ட பின்தான் அக்கேள்வியே அபத்தமானதாகப்பட்டது. இவன் மனதைப் படித்துக்கொண்ட டிரைவர் சொன்னான். “ றோசாப்பூக்கொத்துகளாட்டம் பெண்கள் பாங்கொக்கில் மாதிரி உலகத்தில வேறெங்கும் பார்க்கமுடியாதே சார்! ”அப்பதிலில் தன் நாட்டுப் பெண்களையிட்டான அவனது கர்வம் ஏகமாய்த் தொனித்தது.“ பார்த்தால் போச்சு........... ” அசுவாரசியமான தொனியில் சொல்லிவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தா¡ன்.டாக்ஸி 'றோஸ் கார்டன்’ என்றொரு நைட்கிளப்புக்குள் நுளைந்தது. பாரிய வளவொன்றில் அமைந்திருந்த அக்கிளப்பின் வெளிவளாகத்திலும் உள்ளேயும் நிறைந்திருந்த வெள்ளைக்காரர்களைப் பார்க்க திரும்பவும் ஐரோப்புக்கே வந்துவிட்டது போலிருந்தது. புறப்படுகையில் இருந்த தைரியம் மறைய மனதில் கூச்சமும், தயக்கமும் கூட்டணி போட்டன.“ ச்சே.... இந்த அமலன் வெளிக்கிட்ட மாதிரியே என்கூட வந்திருந்தால் எனக்கேன் கால் பின்னுது................. கடைசியில் தனியேவிட்டிட்டு காலை வாரிவிட்டானே இடியற். ” என்று சபித்தான். இதயத்தின் அடிப்பு வேகம் சற்று ஆர்முடுக தேகமும் வியர்க்கலானது.தான் வேற்றுக்கிரகம் ஒன்றுக்கு வந்துவிட்டமாதிரி உணர்ந்தான். கோல்ட் லீ·பை பற்ற வைத்துக்கொண்டு சிந்தித்தான். "இவ்வளவு கனவான்களும் காமம் உந்தி இதே நோக்கத்தில் வந்திருக்க நான் எந்தக்கொம்பனுக்குப் பயப்பிடவேணும்? இப்படித் தயங்கிறது எவ்வளவு கோழைத்தனம்." "மனமே பி ·ப்றாங் ,பி ஸ்றோங்” கட்டளைகள் இட்டான்.
தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டு இப்படிக் கிளப்புகள் ஆயிரம் கண்டவனின் பாவனையில் பார்வையில் ஒருவித அலட்சியத்தை வரவழைத்துக்கொண்டு டையை சரிபண்ணி இறுக்கிவிட்டுவிட்டுக் கம்பீரமாக உள்ளே நடந்தான். உள்ளே இப்படியான இடங்களுக்கேயான வண்ணங்களில் ஊதா, றோஸ், வயலற் ஹலோஜன், நியோன் விளக்குகளின் ஒளிவெள்ளம். 'என்டர் த டிறகன்’ படத்தில் வருவது போன்று பதினாறு திக்கிலும் கண்ணாடிச்சுவராலான பாரிய கூண்டொன்றுக்குள் ஒரே இளங்குட்டீஸ்களாகக் குவித்துவிட்டிருந்தார்கள். அக்குவாறியம் பார்ப்பது போல் அக்குட்டிகளைச் சுற்றிச்சுற்றி கண்ணாடிச்சுவரில் மூக்குகள் உரச பார்த்துக்கொண்டிருந்த சுதேச விதேச வாடிக்கையாளர்களுக்கு 'மாமா' உத்தியோகத்திற்கென்றே படைப்பில் வார்க்கப்பட்டிருந்த, தமிழ்ப்படக் கதாநாயகர்கள் டூயட் காட்சிகளில் அணிவது போன்று தோல் வார்களும் கையிலும் காலிலும் தோளிலும் முதுகிலும் குஞ்சங்களும் தொங்கும் வெள்ளைநிறத்தில் கோமாளி சூட்டும் தொப்பியும் அணிந்து கன்னங்களில் றோஸ் நிற அரிதாரப்பூச்சும் பூசியிருந்த மாமா ஒருத்தர் ஒவ்வொரு பெண்ணினதும் அங்க லாவண்யங்களை ஆங்கிலத்தில் சூடேற்றும் விதத்தில் விதந்து வர்ணித்து அவர்களின் விலையையும் மைக்கில் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு இரவுக்கான அவர்களின் விலை மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம் பாத்துக்கள் வரையிருந்தது.
ஒருத்தியை யாராவது வாங்கிக் கூட்டிக்கொண்டு போய்விட்டால் அவ்விடத்திற்கு இன்னொரு புதியவள் அழகுராணிப்போட்டி மேடைக்கு வருபவள் மாதிரி ஒயில் நடைபோட்டு வந்து நுழைவாள். சித்தார்த்தனின் பக்கமாக வந்த மாமாவைக் கிட்டப்பார்த்தான். நகச்சாயம், உதட்டுச்சாயங்களுடன், கண்ணுக்கு மையும் வேறு எழுதிய தோடுடைய செவியன் நெத்திச்சுட்டி, சூரியப்பிறை, சந்திரப்பிறை, லோலாக்கு, நீங்கலாக அனைத்து நகைகளும் வெள்ளியில் சூடியிருந்தார். அவர் “ ஹே! ஜங் மன்.............. சொர்க்கத்தின் இன்ப ஊற்று இவள்............. நன்றாகச் சரசம் புரிவாள்........... உனக்காகத்தான் ஜனித்தவள். ” என்று ஷோபனா பாணியில் அபிநயத்து கண்களால் எறிந்த திசையை நோக்கவும் அங்கிருந்து ஒரு பிந்துகோஷ் இவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அப்போதே விலாஎலும்புகள் 'சடக்''முடக்'கென மூங்கில் கழிகள்மாதிரி நொருங்கியது போலிருந்தது. அவன் முகம் போனபோக்கைப் பார்த்து மைக்கைப் பதிவாகப் பிடித்துக்கொண்டு அவன் காதில் ஏதோ தாய்லாந்து அரசாங்கம் அவனுக்காகத்தரும் இராஜ சலுகைபோன்று "ஆயிரம் பாத்துக்கள் குறைத்துக்கொண்டு தந்தாலும் எனக்குச் சம்மதமே” யென்று கிசுகிசுத்துவிட்டுக் கண்ணடித்தார்.
பிந்துகோஷை விட்டுவிட்டு சீமை முயல்மாதிரி பயந்துகொண்டும், தோற்றத்தில் அப்பாவி மாதிரியுமிருந்த ஒருத்தியைச் சித்தார்த்தன் வாங்கினான். மாமா மைக்கில் “ நம்பர் 23 "என்றதும் அவள் எழுந்து கூண்டின் பக்கவாட்டிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தாள். பணம் செலுத்தியானதும் அவளின் போட்டோ ஒட்டியிருந்த ஒரு பத்திரத்தைக் காட்டினார்கள். மெடிகல் ·பிட்னெஸ் சேர்டிபிகேட் என்பதைத்தவிர மீதமெல்லாம் தாய்மொழியில் கிளறியிருந்தது. ஜீன்ஸ¤ள் நுழைந்துகொண்டு நொடியில் அறைக்குளிருந்து புறப்பட்டு வந்தவள் காலங்காலமாக அவனையே காதலித்தவளைப்போல சித்தார்த்தன் கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு போய் டாக்ஸியில் ஏறினாள்.டாக்ஸியில் என்ன அவளுடன் பேசுவது என்றே அவனுக்குத்தெரியவில்லை. சற்றுத்தூரம் போனதும் அவளே பேசினாள்: “ சாருக்கு எந்த ஊர்? ”
“ பிறந்தது ஸ்ரீலங்கா............. இப்ப இருக்கிறது ஜெர்மனி.”
“ ஏன் அவ்வளவு தூரத்தில? ”
சித்தார்தனுக்கு கொஞ்சம் புழுகவேணும் போலிருந்தது, அல்லது சமாளிக்கவுந்தான் இயலாது.“ உத்தியோகம் ” என்றான் யோசிக்காமல்.ஹொட்டல் அறைக்குள் வந்ததும் ஜெர்க்கினைக் கழற்றி ஹாங்கரில் போட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்துகொண்டு முதலில் 'பசிக்குது' என்றாள். மேசையில் இருந்த மெனுவை அவளிடம் கொடுத்து "வேண்டியதை ஓடர்பண்ணிக்கொள் "என்றான். சேர்விஸை போன்அழைத்து தனக்கானதை ஓர்டர் பண்ணிக்கொண்டே "சாருக்கு"என்றாள். ஒரு பெண்ணுடன் ஹொட்டல் அறையில் தனிமையில் இருக்கும் அனுபவம் தரும் பரபரப்பே அவனுக்கு இன்னும் அடங்கியிருக்கவில்லை. சும்மாதானும் எதையோ ஓர்டர் பண்ணிச் சாப்பிடுவதாகப் பெயர்பண்ண அவள் இறால் , கோழி என்று பல ஐட்டங்களை வருவித்து நன்கு ரசித்துச்சாப்பிட்டாள்.
சாப்பாடானதும் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு "உனக்கும் வேணுமா?” என்று அவளுக்கும் ஒன்றை நீட்டினான்."உவ்வே "என்று குமட்டிக்காட்டித் "என்னிடம் கெட்டபழக்கங்கள் எதுவும் இல்லை” என்றாள். அடுத்து என்ன செய்வது................ எப்படி ஆரம்பிப்பது ஒன்றும் தெரியவில்லை. அவள் ஜீன்ஸையும் , ப்ளவுஸையும் கழற்றி ஹாங்கரில் போட்டுவிட்டு வந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திச்சோம்பல் முறித்தவாறே கொட்டாவி விட்டபடி"ஒரே அசதி............. நான்கொஞ்சம் சீக்கிரமே படுக்கலாமா? "என்றாள்.
“ என்ன காரணம் அவ்ளோ அசதி...........? ”
"இரண்டு பேர் (விரல்களில் காட்டினாள்) ஒரு ஜப்பான்காரனும் ஒரு பிரெஞ்ச்காரனும் இன்று பகல் பூரா என்னைப் பிசைந்தெடுத்துவிட்டார்கள்.”
"உண்மையாகவா.......? ”
பிறேஸியரை அவிழ்த்துக்காட்டினாள். எலுமிச்சை நிறத்ததான சின்னமார்புகள் அங்கங்கே தேமல் படர்ந்ததுபோலக் கன்றிச் சிவந்து போயிருந்தன.
"பகலிலும் வேலைசெய்வீர்களோ? ”
"எப்போதுமென்றில்லை........... கேஸ் வந்தால் போன் பண்ணுவார்கள். ”
"போகாமலுமிருக்கலாந்தானே.........?”
" பணம் வேண்டியிருக்கே............ அதுவும் நாளைக்கு எனக்கு 'மெடிகல் செக் அப்' ஐந்நூறு பாத்துக்கள் அழுதால்தான் டாக்டர் சேர்டிபிக்கேட் தருவான். ”
"இன்று நான் நாலாயிரம் பாத்துக்கள் கொடுத்தேனே.................. உனக்கு அதில் எத்தனை கிடைக்கும்? ”
“ அவங்கள் கமிஷன் நூறு போக, மீதியெல்லாம் அரசாங்கத்துக்கு வரி கட்டிவிடுவார்களாம். ஐநூறுதான் தந்தார்கள். ”
"உண்மையாகவா.......? ”
தன் ஹான்ட் பாக்கைத்திறந்து ஐந்து நூறு பாத் தாள்களை எடுத்துக்காட்டினாள்.
"சரி நான் உனக்கு ஆயிரம் பாத்துக்கள் தாறேன். ”
"தாங்ஸ்............ மிகவும் நல்ல மனது உங்களுக்கு! ”
சிகரெட்டை அணைத்துவிட்டு சித்தார்த்தனும் போர்வைக்குள் புகுந்துகொண்டான். எனினும் முன்னேறத் தயக்கமாயிருந்தது. அவளது நொந்த மார்புகளைப் பார்த்த பின்னால் அவனை வருத்திக்கொண்டிருந்த காமத்தில் பாதி விடை பெற்றுக்கொண்டுவிட்டது. சும்மா அவள் மேல்கையைப்போட்டு இடையைக் கட்டி நெருக்கினான், வெந்நீர்ப்பை மாதிரி வெதுவெதுப்பாயிருந்தது. வயிற்றைத் தடவிப்பார்த்த விரல்களுக்கு அவை என்றுமே அனுபவித்திராத ஸ்பரிசமாதலால் கோதுமை மாப்பெட்டிக்குள் விழுந்த அணிற்பிள்ளை மாதிரி மீள மனமின்றிச் சற்று நேரம் அங்கேயே குதித்து விளையாடின. பணத்துக்கே வந்தவளாயினும் ஏற்கெனவே கசங்குப்பட்டு வந்திருப்பவளை இன்னும் தான் முகர்வது தர்மமாகுமா? அவன் மனதின் ஒருமூலை தத்துவவிசாரம் செய்ய ஆரம்பிக்கவும் கைகளை எடுத்தான்.
அவள் “ விஷயத்தைச் சீக்கிரம் முடித்தீர்களாயின் நான் சற்றே தூங்குவேன், கொன்டெமை எங்கே வைத்திருக்கிறீர்கள்? ” என்றாள்.
“ என்ன..........கொன்டெமா? ”
“ ம்.....கொன்டெம்! ”
“ அது எதுக்கு.........?"
“............ப்ச்! ” என்ன கேள்வியிது என்ற மாதிரிப்பார்த்தாள்.
“ ரொம்ப அவசியமா, ஏன் நீ கொண்டாரல்லயா? .....................? ”
“ அவசியம். பின்னே உங்களுக்கு எயிட்ஸ் இல்லையென்று எப்படி நம்பிறது? ”
'நியாயந்தான் , நான் எந்தவொரு பெண்கூடவும் இதுவரை போனதேயில்லேடி’ என்பதைச்சொன்னால்கூட இவள் நம்பிவிடுவாளா என்ன, இப்படி எத்தனை பேர்தான் வாக்குறுதி கொடுத்தார்களோ.... இப்படி ஒரு தொழில் பண்றவள் நம்பவுங்கூடாதுதான். இவளுடன் பேசித்தன்னை நிரூபிக்க முயற்சிப்பது அபத்தமாயிருக்கும்.
“ நிஜமாக நீ கொன்டெம் கொண்டுவரவில்லையா............. ? ”
“ பெண்ணைக் கூட்டிவரமுன் கொன்டெம் வாங்கி வைத்துவிடவேண்டுமென்று உங்களுக்குத்தெரியாதா? ”
ஏதோ தினப்படி அவனுக்கு இதுதான் தொழில் என்பது மாதிரிக்கேட்டுவிட்டுக் கையால் வாயைப்பொத்திக்கொண்டு சத்தம் வராமல் சிரித்தாள். அவனுக்குத் தன் முட்டாள்த்தனம் உறைத்தது.
“ பத்து மணியாகிறதே கொன்டெம் எங்கே கிடைக்கும் இனி...........? ”
“ கடைகள் எல்லாம் பூட்டியிருப்பார்களே.......... ச்சொச்சொ..........”
றிசெப்சனில் விசாரிக்கலாமென்று போனைச்சுழற்றினான். அங்கும் பெண்குரலொன்று "ஹலோ கான் ஐ ஹெல்ப் யூ ?" எனவும் கூச்சத்தில் வார்த்தைகள் வரமறுத்தன.
“ சொறி.....எவ்றிதிங் ஓகே. ” என்றுவிட்டு றிசீவரை வைத்தான்.
அசதியில் இருப்பவளை வெளியில் அனுப்பி "எப்படியாவது கொன்டெம் கொண்டுவா” என்று அனுப்புவதும் நியாயமாகப்படவில்லை. நான் போய் இனியாரை விசாரித்து கொன்டெமுக்காக பாங்கொக் வீதிகளில் 'லோ' 'லோ' 'லோ' வென்றலைந்து வெட்கக்கேடு. மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். ஒன்றுமில்லாமல் இரவெல்லாம் இவளுடன் என்ன ஜென் பெளத்தம் பற்றியும், கொன்பூஸியஸ் பற்றியெல்லாமா விசாரம் செய்யமுடியும்........... விடியும்வரை எப்படித்தான் இவளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்வது? அவளைத் திரும்பிப்பார்த்தான். கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள். 'பொருட்பெண்ணிடம் எதையுமே அனுபவிக்கமுடியாதென்று' சும்மாவா சொன்னார்கள். எரிச்சல் அதிகமாக அவளிடம் சொன்னான்: “ நீயுன் வீட்டுக்குப்போறதென்றால் போ.”அவள் திடுப்பென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவனைக் கேட்டாள்:
"நிஜமாகத்தான் சொல்கிறீர்களா? ”
" யெஸ்............ ”
" ஏன் என்னைப் பிடிக்கலையா? ”
"பிடித்தென்ன மிஸ், கொன்டெம்தான் இல்லையே.......? ”
“ உங்களை நிலையை நினைத்தால் எனக்கு பரிதாபமாகவிருக்கு................ ஆனாலும் கொன்டெம் இல்லாமலென்பது படுபயங்கரமான றிஸ்க்! கொன்டெமில்லாமல் கூடவேகூடாதென்பது எங்கள் கம்பனி உத்தரவுகூட.......அப்படியே நாலு இடத்தில் நேர்ந்தால் சுகாதாரமாயிருக்காதே? ”
யார்யாரெல்லாம் தன்மீது 'பரிதாபப்படுகிறார்கள்' என்பதை நினைக்க எரிச்சல் இன்னும் அதிகமாகியது.
“ உன் நியாயத்தை ஒப்புக்கொள்வதால்தான் சொல்கிறேன்.................. நீ போகலாம். ”
" ஒன்றும் கோபமோ வருத்தமோ இல்லையே.............? ”
“ இல்லை. ”
ஆயிரம் பாத்துக்களை இழக்கவேண்டியிருக்கேயென்று நினைத்தளோ பிறகும் அவள் தயங்கிக்கொண்டு நின்றாள்.
அவன் பர்ஸை எடுத்து ஆயிரம் பாத்துக்களை எண்ணவும் அவள் முகம் பிரகாசமாகியது.
“ நீங்களாகத்தான் என்னை அனுப்பிவைத்தீர்களென்று ஒரு குறிப்பும் வேணும். ”
டைரியில் ஒரு தாளைக்கிழித்து எழுதிவிட்டு அதில் ஆயிரம் பாத்துக்களையும் வைத்து மடித்துக்கொடுத்தான்.
நன்றியுடன் பெற்றுக்கொண்டு அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வணங்கி விடைபெற்றாள்.
மறு நாள் டாக்ஸிக்காரன் சித்தார்த்தனைத் தூரத்தில் கண்டதும் பெரிதாக ஸலாம் வைத்தான்.
“ கொம்பனி எப்படி? ”
இவன் உதட்டைப்பிதுக்கியதைப் பார்த்துவிட்டு சொன்னான்:
“ உங்கள் டேஸ்ட் எனக்குப்புரிகிறது சார்........... உங்கள் டேஸ்ட்டுக்குத் தகுந்த மாதிரிப்பெண்கள் கிராமங்களில்தான் கிடைப்பார்கள்......... என்ன ஒரு இருநூறு கிலோ மீட்டர்வரை பணயம் செய்யவேண்டிவரும். ”
“ அதனாலென்ன................ ”
அவன் வந்த நோக்கமே அதுதானே. (4)
அன்றே 200 கி.மீட்டர் தொலைவிலிருந்த சராபுரி (நம்ம ஊர்ப்பெயர் மாதிரியில்லை?) என்ற ஊருக்குப் புறப்பட்டார்கள். சற்றே மலைப்பாங்கான பகுதி அது. ஐயன்னா, ஓவன்னா வளைவுகள் கொண்ட வீதியில் காரை இலாவகமாக ஓட்டிக்கொண்டே டாக்ஸிக்காரன் சொல்லிக்கொண்டு வந்தான். “ நாகரீகம் பரவாத கிராமம் அது. நீங்கள் இங்கே ஒரு நாளைக்கு அழுத பணம் அங்கே ஒருவாரத்திற்குப்போதும். 'பேயிங் மருமகனாக' அவர்கள் குடும்பத்தில் உங்களை ராஜா மாதிரி உபசரிப்பார்கள். ”
சராபுரி சேர்ந்ததும் முதன்முதலில் அவன்கூட்டிப்போன இடமே சித்தார்த்தனுக்குப் பிடித்துப்போய்விட்டது.இருபதுக்கு உள்ளும் புறமுமான வயதிலும், தோற்றத்திலும் அதிகம் வித்தியாசமில்லாமல் லட்டும், ஜாங்கிரியும் மாதிரி இரண்டு பெண்கள் இருந்தார்கள். மாலிகா , கனீத்தா என்று இருவரும் சகோதரிகளாம். யாரை வேணுமானாலும் வைத்துக்கொண்டு இரண்டுவாரங்கள் தங்க 3500 பாத்துக்கள் என்றார் (அப்பன்) மாமா.எடுத்த எடுப்பிலேயே ஐயாயிரம் பாத்துக்களை வீசி அவர்களை அசத்தினான் சித்தார்த்தன். என்ன வகைச்சாப்பாடெல்லாம் பிடிக்குமென்று கனீத்தாவைக்கொண்டு மாமி கேட்பித்தார். உள்ளதே அரைகுறை , அதிலும் அவர்கள் ட, ஸ, ல, ள க்களைப் பேதமற நசித்துச் சப்பிச் செப்பிய ஒரு வகையான மழலை ஆங்கிலத்தின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள அசாதாரண திறமை வேண்டியிருந்தது. முதலில் குளிக்க வெந்நீர் போட்டுத்தந்தார்கள். குளித்துமுடிந்ததும் ஒருத்தி பெரிய "டவலை"க் கொண்டுவந்து தலையை நன்கு உலர்த்திவிட்டாள். இன்னொருத்தி பெண்களுக்குச் செய்வதுபோல் அகில்புகையைக் கொண்டுவந்து அவன் கேசத்துக்குப் பிடித்தாள். சூப்பர் சாப்பாடானதும் இருபெண்களையும் மாமியாரே அனுப்பிவைக்க அவர்கள் அவனுக்கு இடமும் வலமுமாக பாமா ருக்மணியென வந்து நின்றனர். முதற்பார்வையிலேயே கனீத்தாவின் கண்களின் அதீத காந்தம் அவனைக் ஈர்த்துவிட்டிருந்தது. அவர்கள் அவனுக்கு காட்டிய அறையினுள் அவளையே தன் "சூட்கேஸைக்” கொண்டு போய் வைக்கச்சொன்னான்.
அவனது முதலிரவு அலாதியாய் அமைந்தது. மகா அனுபவஸ்த்தன் போல ஒரு சிப்பம் கொன்டெம் எடுத்துப்போயிருந்தான். ஒன்றுக்குத்தானும் வேலையிருக்கவில்லை. இவன் 'எல் போட் கேஸ்’ என்பதைப் புரிந்துகொண்டு அவனுக்கேற்ற விதத்தில் படு பாந்தமாக கனீத்தா அனுசரித்தாள். சித்தார்த்னுக்கும் அவளை விவரிக்க முடியாத வகையில் பிடித்துப்போனது. போகப்போக கனீத்தாவுடனான பிணைப்பின் ஆழம் அதிகமாகி அவளை ஒரு பொருட்பெண் என நினைக்கவே அவனால் முடியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஜென்மஜென்மாந்தர உறவிருப்பதாகவும் அதன் தொடர்ச்சியாகத்தான் தான் தாய்லாந்து வந்து அந்தச் சராபுரிக்கிராமத்தில் அவளைச்சந்திக்க நேர்ந்ததாகவும் எண்ணினான். வாலிபம் வந்தநாள் முதற்கொண்டு தான் கொண்ட காமத்திற்கும் விரகத்திற்கும் முதன் முதலில் அர்த்தம் கற்பித்தவள் யாராக இருந்தாலென்ன அவளுக்கு தன்னை ஒருவிதத்தில் நன்றிக்கடன் பட்டவனாக உணர்ந்தான். அவளைப் பிரிந்துவிடுதல் என்பது அவனால் இனிமேல்முடியாது போலிருந்தது.
மறுநாள் காலை பனிமூட்டம் படிந்தொடுங்கி வெளிச்சம் தோன்றவும் ஜன்னல் வழியே கீழே மலையின் அடிவாரத்தில் வீதிகளும் வீடுகளும் உருவாகின. எங்கேயோ வெளியே செல்வதற்காக புறப்பட்ட 'மாமா’ இவன் அறைக்கு வெளியே வரும்வரை காத்திருந்து சொல்லிவிட்டுத்தான் போனார்.
“ ஏன் அப்படி.............? ”
“ அதுதான் வழக்கம். ”
மதியம் இவன் குளிப்பதற்கு ஆயத்தமாகவும் “ மைத்துனன் "என்று சொல்லிக்கொண்டு கப்பிறிக் காற்சட்டையும் கையில்லாத பனியனும் அணிந்த ஒரு இளைஞன் வந்தான். மூத்தபிள்ளையான அவனுக்குத் திருமணமாகிவிட்டதாவும் இப்போ இரண்டு வீடுகள் தள்ளியிருப்பதாகவும் கனீத்தா சொன்னான். அரை லிட்டருக்கும் மேல் ஒலிவ் எண்ணெய் கொண்டுவந்து அவனை ஒரு சிறிய மரவாங்கில் புற்பாய் ஒன்றைவிரித்துப் படுக்கச் சொல்லிவிட்டு, அவனுடம்பெல்லாம் தேயோதேயென்று சூடுபறக்கத் தேய்த்து மசாஜ் செய்துவிட்டான். சுகம்ம்ம்மாக இருந்தது. சித்தார்த்தன் அவனுக்கு நூறு பாத்துக்கள் கொடுக்கவும் வாங்கிக்கொள்ள கடைசிவரை மறுத்துவிட்டான்.மாலை கனீத்தாவுடன் அந்த ஊரைச்சுற்றினான். ஊரை வளைய வரும் சிறிய அருவியும் , அதன் சிறு நீர்வீழ்ச்சியும் , எங்கும் கோப்பியும், சோயாவும் பயிரிட்ட தோட்டங்களுமாக பசுமையாக இருந்தது சராபுரி.இன்னொரு நாள் அங்கு கூடும் சந்தையை போய் வேடிக்கை பார்த்தான். அங்கும் அவனது விருப்பத்திற்குரிய செங்கரும்பும் , இளநீர்க்குலைகளும் நிறைய வந்திருக்கவே புகுந்துவிளையாடினான். சராபுரியின் யார்வீட்டு மருமகனோ ஒரு வெள்ளைக்காரன் முகத்தில் தேன்நிலவுக்களை மாறாமல் ஒரு சுதேசிக்குமரியை அணைத்துக்கொண்டு அங்கே வந்திருந்தான்.ஒரு இரவு வாடகைக்கார் வைத்துக்கொண்டு திருவிழா நடந்துகொண்டிருந்த பங்சொங் என்ற பக்கத்துக்கிராமத்திற்கு கனீத்தாவுடன் போய் அவர்களின் நாட்டுக்கூத்தும் கிராமிய நடனங்களும் பார்த்தான். நம்மூர் நாட்டிய நாடகங்கள்போல ஆனால் பாவங்களும் , முத்திரைகளும் குறைந்த பல நடன நிகழ்வுகள் அங்கே நடைபெற்றன. மாமியார் வேறு இறைச்சி , நண்டு, கணவாய், இறால், எனத்தினம் ஒரு சமையல் வேளைக்கொரு சூப்பென்றாக்கி அவனைத் திக்குமுக்காடப் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தது. கனீத்தாவுடன் சுற்றோசுற்றென்று ஊரைச்சுற்றியாகிவிட்டது. எனினும் பிரிதலை மனதால் எண்ணிப்பார்க்கவே கஷ்டமானதாக இருந்தது. ஒரு நாள் அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் “ நீ என்ன உசத்தி? ” என்று அறிவுஜீவித்தனமான எதிர்க்கேள்வியெல்லாம் போடமாட்டாள் என்ற துணிவில்
“ எதற்கு இப்படியான ஒரு வாழ்க்கை முறை? "என்றான் நோவேற்படாதவாறு.
“ அல்லது எப்படி உங்களைச் சந்தித்திருப்பேன்..............? ”
அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் கீழே பார்த்தாள். சற்று இடைவெளிவிட்டு தன் நைட்கவுணின் பொத்தான் ஒன்றைத்திருகியபடி சொன்னாள்:“ அப்பாவுக்கு குறைவான வருமானம்.......... நான்தான் குடும்பத்தை கவனிக்கவேணும்............ மேலே கொண்டுவரவேணும்............... நிறைய பணம் சம்பாதித்து ஸ்திரமான நிலைக்கு வந்து ஒரு சூப்பர் மார்க்கெட்டும் கட்டிக்கொண்ட பின்னால் நான் சுதந்திரப்பறவையாகிவிடுவேன். ”வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு மலர்ந்தாள். “ அதற்கிடையில் எயிட்ஸ¤ம் வந்து விடலாமல்லவா? ”
மீண்டும் இரண்டு நிமிடங்கள் மெளனமாய் தரையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சொன்னாள் :
“ எயிட்ஸ் கொலனியில கொண்டுபோய் குடியேற்றிவிடக்கூடிய ஆபத்தும் இருக்குத்தான்.............. ஆனால் வேற வழி எதுவும் எனக்குத்தெரியல்லே............ வாழ்க்கை அவ்வளவு தூரம் எங்களுக்கு அபாயகரமானதாகவும் இறுக்கமானதாயிருக்கு சார்......”
பணம் அதிகம் சம்பாதிக்க விரும்பியவர்கள் தங்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளை இலகுவான மூலதனமாக்கிச் சம்பாதித்தனர். அது அங்கீகரிக்கப்பட்ட தேசியத்தொழிலாக குற்றவுணர்வோ லஜ்ஜையோவின்றி தேசம் முழுவதும் நடைபெற்றது.
“ என்னோட உனக்கு எப்பவும் வாழ இஷ்டமா கனீத்தா.............? ”
“ நான் அவ்வளவு பேராசைக்காரியில்லை.”
“ நான் உன்னைக் குஷிப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை................... ”
“ நிஜமாலுமா...............? ”
“ நிஜமாலும்.......... ”
“ நடக்கக்கூடியதா...........? ”
“ நடக்கும். ”
“ அப்போ என்னையும் ஜெர்மனிக்கு கூட்டிப்போய்விடுவீர்கள்.......... இல்லை?”
“ கூட்டிப்போவேன்.......... ”
“ என் கனவுகள் எல்லாம் எளிதாய்விடுமில்லை.....................? ”
அவன் கேள்வியின் 'த்வனி’ முழுவதையும் அவள் இன்னும் புரிந்து கொள்ளவில்லையென்றே பட்டது.
(5)
பெர்லினில் அவர்கள் விமானம் தரையிறங்கியது. கண்களை அகல விரித்துவிரித்து எல்லா இடங்களையும் அதிசயித்துப் பார்த்தாள்.விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள் அவர்களை வேடிக்கை பார்க்க வீட்டில் வந்து கூடினர்.சித்தார்த்தன் வீட்டிலிருக்காத, மற்றும் வேலைக்குப் போன நேரங்களில் வந்திருந்த நண்பகளிலொருவன் “ நானும் போய் கூட்டி வாறதுக்கு தாய்லாந்தில ஒரு பொம்பிளை ஒழுங்கு பண்ணித்தரேலுமோ......?” என்றானாம்.இன்னொருவன் தான் சாப்பிடக்கொடுத்த கடலையால் தன்னையே சுண்டிப்பார்க்கிறானாம்.இன்னொருவன் “ சோக்கான குட்டி"என்று கன்னத்தில கிள்ளிறானாம்.இவர்களெல்லாருக்கும் ஏதாவது கொடுத்தால் 'தங்களோடையும் அவள் படுக்கவந்திடுவாள்’ என்று நினைக்கிறார்கள்.
சித்தார்த்தன் கண்டிப்பாக அவளிடம் சொல்லி வைத்தான்.
“ ·ப்றெண்டென்று சொல்லிக்கொண்டு நான் இல்லாத நேரம் வாற ஒரு நாயையும் உள்ளே எடுக்காதே.”
சித்தார்த்தன் வேலையால் வந்ததும் பொழுதுபோக்குக்காக ஒவ்வொருதினமும் ஒவ்வோரிடத்துக்கு அவளை அழைத்துப்போனான். சில நாட்கள் கழித்து மாலை நேர ஜெர்மன் வகுப்பொன்றிலும் அவளைச் சேர்த்துவிட்டான்.ஜெர்மன் இலக்கணம் அவளுக்கு புரியவே முடியாமலிருந்தது.
“ ஏன் சித்தார்த்தன்............... அவசியம் நான் ஜெர்மன் படிக்கவேணுமா? ”
“ அப்போதானே பார்ட் ரைம் ஜொப்பென்றாலும் கிடைக்கும் ”
“ கிடைத்து.............. ”
“ வீட்டுக்கு நீ பணம் அனுப்பவேண்டாமா............... உன் கனவுகள் நிறைவேற வேண்டாமா..............? ”
“ சரி....... ” என்றாள் மூன்றாம்பிறை ஸ்ரீதேவிமாதிரியின் மன்னையுடன்.
ஒரு மாதம் கழித்து பெர்லின் திரும்பிய அமலன் நேராக அவனிடம் வந்து “ காழ்......... காழ்.......... காழ்........... ” என்று கத்தினான். “ வாழைப்பழத்தை வாங்கிச் சாப்பிட்றாவென்டால் தோலையும் மடியில கட்டிக்கொண்டு வந்து நிக்கிறியே வெலுத்தி................. நான் கொழும்பிலேயே அறிஞ்சிட்டன் ”
“ அதுக்குள்ள அங்கேயும் நாறிட்டுதுதே................. நாறட்டும். ஆனால் குதிக்கிற உங்களில் ஒருவரேனும் என் உணர்ச்சிகளின் இரசாயனத்தை கொஞ்சமாவேனும் புரிஞ்சுகொண்டு பேசுகிறீர்களில்லையே எண்டதுதான் என்னுடைய ஆதங்கம். ”“ இருக்குமிருக்கும்................. முன்னபின்ன காணாமலிருந்திட்டுக் கண்டறியாத 'ஒண்டை'க்கண்டால் உப்பிடித்தான் சிலருக்குப் பித்தம் தலைக்கேறிச் சித்தம் பிசகிறதாம்................ பிறகு இந்தமாதிரி விளங்காத்தனமாய் எல்லாம் புசத்துவாங்களாம்................. ·ப்றொயிட் சொல்லியிருக்கிறார். விசர்பிடிச்ச குக்கனே எக்கேடாவது கெட்டுத்தொலை.”
"அதென்ன குக்கன்? ”
“ விசர்பிடித்தால் வாலைத் தொங்கப்போட்டுக்கொண்டு, நாக்கால ஒழுக ஒழுக அலையுமே நாலுகால்ல............. கண்ட இடத்தில அடிச்சுக்கொல்லுவாங்கள்....... அதைத்தான் உம்ம லெவலுக்கு சற்றே சங்கை கருதிக் காவியத்தமிழில் பகர்ந்தோம்.......... ”
அமலன் போனபின்பு கனீத்தா அவனிடம் கேட்டாள்:
“ ஏன் உங்கள் ·ப்றென்ட் கோவிச்சிட்டுப் போறார்? ”
“ அவனுக்குக் கொஞ்சம் எரிச்சல் தாறமாதிரியான மூலவியாதி கனீ............... அதோட இப்பதானே ஊரிலிருந்து வந்தவன் தண்ணி வித்தியாசத்தில சலமும் எரிஞ்சு தலப்பு கடுப்பாய்க் கடுக்குதாம்.”
“ பொய்....... பொய்...... பொய்........ நீங்கள் ஒன்றும் என்னைச் சமாதானப்படுத்த முயலவேண்டாம்............... உங்க ·ப்றென்ட்ஸ் எவருக்குமே நீங்கள் என்னைக் கட்டுறது இஷ்டமில்லை........ இது எனக்குப் புரியாமலில்லை. ”
" கனீ டியர்............ உனக்கு நானாச்சு, நீ எந்தப் பிரமஹத்தியையும் கண்டுகொள்ளாத.”
அப்போதைக்குச் சமாதானமானாலும் அந்நிகழ்வின் பின்னால் அமலனை எப்போ கண்டாலும் ஏதோ காட்டுவிலங்கு ஒன்றைக் கண்டதுபோல மிரண்டாள்.
வாழ்விலும் வெளியிலும் வசந்தம். தெருவாகனங்களும் ரயிலும்கூட சந்தமும் இசையும் கொண்டே இயங்குவனவாகப்பட்டன. இயற்கையும் இசையும்கூட முன்னதைவிட இன்பம் தருவனவாக இருந்தன.அவளுடனான இணைவில் வாழ்வின் அவன் திறந்தே பார்த்திராத புதிய கதவுகள் பல திறந்துகொண்டன. பிரேமை தரும் புதிய அனுபவங்களால் இன்னும் வாழவேண்டிய ஆசையும் புது உற்சாகம் பிறந்தன. தன்னை இந்த வாழ்வுக்காய் புதிதாகப் பிறந்தவனாய் உணர்ந்தான்.
ஒரு சனிக்கிழமை சித்தார்த்தன் கனீத்தாவையும் காரில்கூட்டிக்கொண்டு காய்கறிகள் வாங்குவதற்கு தமிழ்க்கடைக்கு கடை ஒன்றுக்குப்போனான். சுடிதாரும் கொலுசும் வாங்கித்தரச்சொன்னாள். வங்கிக்கொடுத்தான். மரக்கறி செக்ஷனுக்குவந்தபோது அவனுக்குப்பிடித்தமான குரங்குவாலன் பயற்றங்காயும், நல்ல பிஞ்சு வெண்டைக்காய்களும் கிடக்கக்கண்டு கடைக்காரரிடம் ஒவ்வொரு கிலோ போடச்சொல்லவும் இன்னொரு உதவியாளர் உள்ளேயிருந்து கமறினார் : "அது ஊத்தவானின்ரை ஓடருக்கு எடுத்துவைத்திருக்கிறன்...................... ”
கடைக்கார இளவல் நெளிந்துவிட்டு ஒரு அசட்டுச்சிரிப்புடன்
“ அண்ணை குறை நினைக்காதையுங்கோ............. உந்த இரண்டு ஐட்டத்திலயும் எங்களுக்கு நெடுங்கால வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து பவ்பத்துக்கிலோ ஓடர் இருக்கு.......... இருக்கிறதே காணும்போலத் தெரியேல்ல................. இண்டைக்கு வேற மரக்கறியில பார்த்து எடுங்கோ........... சோக்கான முத்தல் பலாக்கொட்டையெல்லாம் அங்காலயிருக்குப் பாத்தியளே............. அடுத்த முறையாகட்டும் உங்களுக்கு நான் வேண்டிய மரக்கறி எடுத்து வைத்துத்தாறன். ” என்று சொல்லிக்கொண்டிருக்கவும் நடுத்தரவயது தாய்லாந்துக் குண்டுமாமி ஒருவர் காரில் வந்து பெரிய கூடையுடன் இறங்க கடைக்காரின் காய்கறிகளின் இருப்பில் பாதி வெண்டைக்காய் பயற்றங்காயுட்பட அவருக்கே வியாபாரமாகியது. அவர்தானாம் 'ஊத்தவான்’.
கனீத்தாவைக் கண்டவர் மிகவாஞ்சையுடன் வந்து அவளுடன் தாயில் பேசி அவளைப்பற்றி விசாரித்தார். அவள் என்னை அறிமுகம் செய்யவும் எனக்கும் நமஸ்கரித்தார். அவரது ஊரும் சராபுரிக்கு மிகச்சமீபம்தானாம், திரும்பத்திரும்பச் சொல்லிமகிழ்ந்தார். இவள் போன் நம்பரைக்கேட்டு வாங்கிக்கொண்டார்.
“ எதுக்காம் இத்தனை காய்கறி? ”
கடைக்கார இளவல் கனீத்தாவை மேற்கண்ணால் பார்த்துக்கொண்டு மீண்டும் நெளிந்தான்.
“ அவ தாய்ப்பெண்கள் 'வேலை செய்யிற கிளப்' ஒன்றுக்கு சாப்பாடு சப்ளை பண்ணிறவாம். ” என்றுவிட்டு இரகசியமாக கண்ணடித்தான்!
கனீத்தா வீடடின் ஜன்னல்களுக்கெல்லாம் புது கேட்டின்கள் தைத்துப்போட்டாள். கண்டபடி இறைந்துகிடந்த புத்தகங்களையெல்லாம் தூசுதட்டி ஷெல்·பில் அடுக்கிவைத்தாள். உடுப்புகள் எல்லாவற்றையும் கழுவி ஸ்திரிபோட்டாள். பாத்றூம் உட்பட வீடு முழுவதும் பளிச்சென்று துலங்கியது. சமையலையும் முடித்து வைத்துவிட்டு அவனை எதிர்பார்த்திருப்பதில் தமிழ் மரபுபேணும் குடும்பப்பெண்களை ஒரேயடியாய் தூக்கியடித்தாள்.அவனுக்கு எங்கிருந்தோ வந்தவள் எதற்காகத் தனக்கு இப்படியெல்லாம் பண்ணவேண்டும் என்றிருந்தது. எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போலவும் இந்தக் கனவு கலைந்துவிடாதிருக்க வேணுமென்று ஏக்கமாயும் இருந்தது.
நாளாக ஆக கனீத்தாவுக்கும் வீட்டைச்சுத்தம் பண்ணுவதுவும், ஜெர்மன் வகுப்புக்குப் போய்வருவதுவும் தினப்படி நேரசூசிகை போட்டதுபோல் செய்ய லேசாக அலுப்புத்தட்டத் தொடங்கியது.சித்தார்த்தனுக்கும் அவளின் நூடில்சையும் , சூப்பையும் சாப்பிட்டுச்சாப்பிட்டு நூடில்சைக் கண்டாலே புரட்டத்தொடங்கியது.ஒரு வித்தியாசம் இருக்கட்டுமேயென்று தமிழ்நாடு றெஸ்ரோறன்டுக்குக் கூட்டிப்போனால் கனீத்தாவுக்கு உறைப்பும், புளிப்பும், மசாலை வாசமும், கொத்துமல்லியிலையும் அறவேபிடியாது, சரியாகச் சாப்பிடமாட்டாள்.சீனாவோ தாய்லாந்து றெஸ்ரோறன்டுக்குப் போனால் அவனால் அனுபவித்துச் சாப்பிடமுடியாதிருக்கும்.
ஒரு நாள் சித்தார்த்தனுக்கு எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த போது ஐந்திணைக்கவிதை ஒன்று ஞாபகம் வரவும் புன்னகைத்தான். இதைக்கவனித்துக் கொண்டிருந்த கனீத்தா "என்னவாக்கும் தனிமையில் மோனப்புன்னகை? ” என்றாள்.
“ ஒன்றுமில்லை ஐந்திணை ஐம்பது என்றொரு பழைய இலக்கியத்தில் முன்பு படித்த கவிதை ஒன்று ஞாபகம் வந்துது அதுதான்................. ”
“ நல்ல வேடிக்கையாக இருக்குமோ? ”
“ அல்ல........... காதலை , அன்பை , விட்டுக்கொடுத்தலை உணர்த்துவதாக இருக்கும்.......... ஒரு அற்புதக்கவிதை. ”
“ சொல்லுங்கள் பார்க்கலாம். ”
“ சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டி கலைமா - தன் கள்ளத்தின் ஊச்சம் சுரமென்பதென்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி......................... "எண்டால்.......?”"அதாவது காட்டில் மேய்ந்துகொண்டிருந்த ஒரு ஜோடி மான்களுக்குக் கடுமையான தாகம் எடுத்ததாம். எங்கும் நீருக்காக அலைந்தோ அலைந்துவிட்டுக் கடைசியில் ஒரு சுனையை அடைந்தபோது அது வற்றி ஒரு சொற்ப தண்ணீரே அங்கு காணப்பட்டுதாம். ஆவல் மிகுதியால் இரண்டு மான்களுமே நீரில் இறங்கி வாயைத் தண்ணீரில் வைத்துக்கொண்டாலும் சுனையிலுள்ள நீர்மட்டிலும் சற்றும் குறையவே காணோமாம்.கலைமானோ பாவம் பெண்மான் தாகம் தாங்கமாட்டாதது அ·தே குடிக்கட்டும் என்று தான் குடிப்பது போலப்பாவனை பண்ண....... பெண்மானோ ஆண்மானுக்குத்தான் தாகம் அதிகம் அதுவே முழுவதையும் குடிக்கட்டும் என்று நினைத்து தானும் சும்மா குடிப்பதுபோலப் பாவனை பண்ணிற்றாம்.................. ”
கனீதாவுக்கு கவிதையினதோ, கவிதை சுட்டும் சம்பவத்தின் நயமோ சிறிதும்பிடிபடவில்லை. நல்லூரில் தீர்த்தத்தை அடுத்துவந்த சந்தனத்தையும் வாங்கிக் குடித்த வெள்ளைக்காரன் மாதிரிக்கு விளங்கிய பாவனையில் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்துவிட்டு.
" இரண்டுபேரும் பங்கிட்டுக்குடித்திருக்கலாமே........ பைத்தியக்கார மான்கள்." என்றாள்.
இவளுக்குத் தான் 'தொப்ளர் இபெ·க்ட்டைப்' புரியவைக்க நேர்ந்தால் எப்படியிருக்கும் என எண்ணிப்பார்த்த சித்தார்த்தன் வாய்விட்டே சிரித்துவிட்டான்.
“ என்ன வந்தது உங்களுக்கு இன்றைக்கு? "என்றாள் கனீத்தா கோபமாக.
ஒரு மனைவியிடம் கிடைப்பதெல்லாம் இவ்வளவுந்தானா? கவிதை, இலக்கியம், தத்துவம் சார்ந்த அவனது தேடல்களை அவளுடன் விசாரம் செய்ய முடியவில்லையென்றால்.......................... தவித்தான்.காதலிகூட இருந்து பாட்டுக் கலந்திடவேண்டும் என்று அவாவியவன் வாஞ்சை, அனுபவமென்ன சாதாரணமானதா?அவளின் இதயத்தை என்னதான் புரிய முயற்சித்தாலும் விளைவு ஏதோ ·பில்டர் கண்ணாடியால் பார்த்த மாதிர,¢ மொழிபெயர்ப்புக் கவிதை படித்தமாதிரியான அனுபவந்தான்.அவளுக்கும் அப்படித்தான். என்னதான் பேசினாலும், எவ்வளவுதான் பேசினாலும் ஏதோ பொச்சம் அடங்காதமாதிரியிருந்தது.
ஊத்தவான் ஒருநாள் நலங்கேட்டுப் போன்பண்ணினாள். போன்தானே பேசுகிறாள் பேசிவிட்டுப்போகட்டும்.................. என்று சித்தார்த்தன் நினைக்கவும் கனீத்தா டெலிபோன் றிசீவரைப்பொத்திக்கொண்டு “ அவளை எப்போது வீட்டுக்கு அழைக்கலாம்? "என்றாள். “ வேண்டாம் ” என்று சைகையால் காட்டினான்.கனீத்தாவின் முகம் முதல் தடவையாக இருண்டது. தாயில் எதையோ சொல்லிவிட்டு றிசீவரை வைத்தாள். உதடுகள் துடித்துக்கொண்டிருக்க கண்களிலிருந்து சில வைரமுத்துக்கள் நிலத்தில் குதித்தன.
“ நான் மனம்விட்டுப் பேசக்கிடைத்த ஒரே நட்பு, அவ இங்க வாறதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை................ நீங்கள் சொன்ன பிரேமை இவ்வளவுதானா......................?” விம்மினாள்.சித்தார்த்தனுக்கு உள்ளூரக் கலவரமாகிவிட்டிருந்தது. சமாளித்துக்கொண்டு அவளைச் சமாதானப்படுத்தினான்.
“ இது இந்த அளவுக்கு உன்னை நோகவைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை டியர்................ ”
“ ஊத்தவான் எங்கள் வீட்டுக்கு வர்றது உங்களுக்கு கெளரவக்குறைச்சல் என்று நினைக்கிறியள்.................. எனக்குத்தெரியும்.”
“ கெளரவக்குறைச்சல் என்பதெல்லாமில்லை............ எதுக்கு அவ சினேகிதம்.............இங்கே ஜேர்மன்காரர்களைக் கல்யாணம்செய்த தாய் நாட்டுப்பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு மன்றமே வைத்திருக்கிறார்களாம்............... அட்டிரஸை எடுத்து ஒருநாள் அங்கே போனமென்றால் எத்தனை பேரைச்சந்திக்கலாம்.! ”
“ ஊத்தவான் எனக்க அயலூர்க்காரி என்பதுதான் உங்களுக்குத்தெரியுமே...........அவமாதிரி மற்ற வேறுயாரும் என்மேல உண்மைப் பட்ஷமாயிருக்காயினம்............... அவ எனக்கு விசாஎல்லாம் புதுப்பித்துத்தாறன் என்டிருக்கிறா................. ”சித்தார்தனுக்கு இப்போது சுரீரென்று பற்றிக்கொண்டு வந்தது. தேவையில்லாமல் விசா புதுப்பித்துத்தருகிறேன்............... அதுஇது என்று தங்கள் வீட்டுவிடயங்களில் மூக்கைநுழைக்கும் ஊத்தவானின் நோக்கங்கள் நிச்சயம் நல்லதாயிருக்காது.
“ அப்ப விசா எப்பிடிப் புதுப்பிப்பது என்பது தெரியாமலோ உன்னைக் கூட்டிக்கொண்டுவந்தனான்? ”
'அதற்கேன் மனுஷன் இப்படிச்சீறுகிறான்’ என்பது கனீத்தாவுக்கும் பிடிபடவில்லை.அன்று முழுக்க மன்னையைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள். அவன் “ சரி சரி ஒரு நாளைக்கு அவளைக் கூப்பிடு............... ” என்றதும் மீண்டும் முகம் விகசித்து முழுநிலவானது.
ஒரு நாலுநாள் போயிருக்கும் சித்தார்த்தன் மாலை வேலையால் திரும்பவும் கனீத்தா ஒரே பாட்டும் கூத்துமாய் ஸெற்றிக்கும் ஸோபாவுக்குமாகக் குதித்துக்கொண்டிருந்தாள். இயல்பிலேயே அவளுக்கு டிவி ஷம்பூ விளம்பரங்களில் வருபவர்களைத் தோற்கடிக்கும் கருகருவென்ற நேரான கேசம். அதில் அன்று செறிவான சிறுசிறு பின்னல்கள் பின்னிவிட்டுத்தலையில் பல நிறங்களில் மணிகள் கோர்த்து குறுக்கும்மறுக்குமாக வலைவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
“ என்ன இதெல்லாம்...................? ”
“ இன்று ஊத்தவான் வந்திருந்தாவே............”சரி............... எவளாவது வந்து தொலையட்டும்............ இவள் மூஞ்சியை இறக்கிவையாமல் இருந்தால் சரிதான்.
" அப்புறம்"
“ அவதான் இதெல்லாம் எனக்குப் பண்ணிவிட்டா......... ” தலையைப் பல கோணங்களிலும் சரித்துச் சரித்துத் தன் அலங்காரத்தைக் காட்டினாள் குழந்தை மாதிரி.
“ வேறை..............? ”
“ ·ப்றைட் றைஸ், ஜியாஸி (இது உள்ளே பொடிபண்ணப்பட்ட இறைச்சி, வெஞ்சனங்கள் சேர்த்து நிரப்பப்பட்டிருக்கும். விருந்துகள் விழாக்களின்போது ஆவியில் வேகவைத்துத் தயாரிக்கப்படும பஸ்டா வகையிலான ஒரு சீன உணவு. பார்வைக்கு சின்னச்சின்ன சமோஸாக்களைப் போலவிருக்கும், காரமான சோஸ் எதனுடனாவது தொட்டுக்கொண்டு விளையாடினால் சும்மா கணிதம் பேசும்.) எல்லாம் கொண்டு வந்தாவே.......... ”
(6)
கனீத்தாவின் பெற்றோர்களிடமிருந்து கடிதங்கள் ஒழுங்காய் வந்தன. சித்தார்த்தனையும் சுகம் விசாரித்து எழுதியிருக்கிறார்கள் என்று வாசித்துச்சொல்லுவாள்.ஊத்தவானும் ஏதோ கட்டிக்கொடுத்த மகளைச் சீராட்ட வாற மாதிரி மாதத்தில் இரண்டு மூன்று தடவைகள் வந்து போய்க்கொண்டிருந்தாள்.
இலையுதிர்காலம் ஆரம்பித்து விட்டிருந்த ஒரு மாலை சித்தார்த்தன் வழமைபோல் வேலையால் ஒரு சீப்பு பியருடன் வந்து பஸ்ஸரை அழுத்தினான். கலகலத்துக்கொண்டு வந்து கதவைத்திறக்கும் கனீத்தாவைக் காணவில்லை.
'சொல்லிக்கொள்ளாமல் எங்கும் போகமாட்டாளே................ கடைகளில் குளிர்காலத்து சேல்ஸ் நேரம்............. எங்கேயாவது ஷொப்பிங் போயிருப்பாள்.’ என்று எண்ணிக்கொண்டு தனதுதிறப்பினால் கதவைத்திறந்து உள்ளே வந்து காத்திருந்தான்.
இரவு ஏழே முக்கால் மணியுமாகியது. கனீத்தா வந்தபாடில்லை. பொலீஸ¤க்குத் தகவல் கொடுக்கலாமா என நினைத்தான். ஊத்தவானுடன் எங்காவது வெளியே போயிருப்பாளோ.................. அப்படிச்சொல்லாமல் கொள்ளாமல் எதையும் செய்யும் வழக்கமில்லையே............... ஊத்தைவானின் டெலிபோன் நம்பர் எங்காவது எழுதிவைத்திருக்கிறாளா பார்க்கலாமென்று அலுமாரியைத்திறந்தான். அவளுக்காக அவன் முதன்முதல் வாங்கிக்கொடுத்த வெள்ளிமருவிய சூட்கேஸைக் காணவில்லை.ஏதோ விபரீதமாக நடந்துவிட்டதென்பது புரிந்தது. அடுத்து என்ன செய்வதென்பது தெரியவில்லை. அவள் பிரிந்து போகவேணுமென்று முடிவெடுத்தால் நான் வற்புறுத்த முடியாதுதான். எதையும் சொல்லிக்கொண்டு செய்திருக்கலாமே............ ஆசியாக்கடை இன்னும் பூட்டியிருக்கமாட்¡ர்கள். அவர்களுக்கு போன் பண்ணினான்.
“ தம்பி உங்களிட்ட நிறைய காய்கறிகள் வாங்குகிற அந்த தாய்லாந்து தடிச்ச மனிசி ஊத்தவானோ கூத்திவானோ என்று அவவின்ர டெலிபோன் நம்பர் அல்லது அட்டிறஸ் தெரியுமோ? ”
“ டெலிபோன் நம்பர் தேடினால் எடுக்கலாந்தான்.............. ஆனால் எனக்கு அவவின்ரை அட்டிறஸ் தெரியும்.............. பல தடவை அவவீட்டுக்கு நானே நேரேபோய் சரக்கு சப்ளை பண்ணியிருக்கிறன் ”
“ நல்லது................. சொல்லும் ”
“ Rehberg U-Bahn இல (சுரங்க ரயில்) இறங்கி வெளியே வந்தால்................. ட்றெயின் போற திசையில வலப்பக்கமாய் இரண்டாவது அப்பார்ட்மென்ட் வீடு வாசல்ல கிளிங்கலில (அழைப்புமணி) பெயர் இருக்கு. ”
காரை எடுக்கப்போனவன் ஒரு கணம் இந்நேரம் டிராபிக்குக்குள்ளால் நூற்றெட்டு சிக்னல்களில் நின்று நின்று போவதைவிட ட்றெயினிலேயே போனால் சீக்கிரம் போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டு விரைந்துபோய் ஊ-பாணைப் பிடித்தான். இடையில் Adenauer Platz என்ற சந்திப்பில் இறங்கி ட்றெயின் திசைமாறவேண்டி அதற்கான நகர்படிகளை நோக்கி ஓடுகிறான். எங்கிருந்தோ ஒரு பாலஸ்தீனி இளைஞன் இவனைக் கண்டுவிட்டு குளவியாய் அவனை நோக்கி ஓடிவந்தான்.
"ஹேய்.............மன்.......... ஹேய்.............. ”
"என்ன? ”
"என்னிடம் ஹஷீஷ் வாங்கு. ”
" வேண்டாம். ”
"ஏன் வேண்டாம்? ”
"நான் பாவிப்பதில்லை........ ”
"ஏன் பாவிப்பதில்லை.............? ”
" பழக்கமில்லை."
"ஏன் பழக்கமில்லை?"“...................”" தொலை........ கஞ்சல் பாக்கிஸ்த்தானி.”
அத்தையின் பாடல்ல, குத்தியன் மாருக்கு நிக்கிறான்.............ம்ம்ம். இவனுடன் பேச்சை வளர்த்தினால் அடுத்த படலம் அவன் சட்டையைப் பற்றிக்கொண்டு புரள்வதாய்த்தானிருக்கும். அதற்கு இப்போ நேரமில்லை. கத்தியெடுத்துச் சொருகவும் தயங்காது இந்தக் கும்பல். பகவானே உம்மால் முடிந்தால் தம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், கல்வியையும் தொலைத்துவிட்டு வழிதவறி நிற்கும் இந்த மா·பியாக் குழந்தைகளை இரட்ஷியும். கன்னத்தில் போட்டுக்கொண்டு அடுத்த ட்றெயின் வரும் மேடைக்கு ஓடினான். வீட்டைக்கண்டுபிடிப்பதில் எதுவித சிரமமுமிருக்கவில்லை. பஸ்ஸரை அமுக்கவும் ஊத்தவானே கதவைத்திறந்தாள்.
“ கனீத்தா இங்கே வந்தாளா...............? ”
“ ஜா......... வந்தாள்............. அடுத்த அறையிலிருக்கிறாள்...... ”
ஒரு வதியும் அறையை மருவிய இன்னொரு அறையைக்காட்டிவிட்டு அவள் உள்ளே நகர்ந்தாள். சித்தார்த்தன் அந்த அறைக்குள் நுழைந்தான்.உள்ளே ஒரு கட்டிலில் அசோகவனத்துச் சீதைமாதிரி அமர்ந்திருந்தாள் கனீத்தா. அவனைக்கண்டதும் நிதானமாக எழுந்துவந்தாள்.
“ எதுக்கு இப்பிடிச் சொல்லாமல் கொள்ளாமல்.................? ”
சற்றே திறந்திருந்த கதவை முற்றாகச் சாத்திவிட்டு வந்தவள் முதல்தடவையாக அவன் கண்களை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள். கண்கள் லேசாக ஈரங்கொண்டு மின்னின. அக்கணம் அவனுக்கு அவள் யாரோ ஒரு அந்நியள் மாதிரிப்பட்டாள்.
“ சித்தார்த்தன் நீங்கள் நல்லவரில்லை. மிக........ மிக....... மிக....... மிகவும் நல்லவர். ஆனால் எனது வாழ்க்கை அங்கேயில்லை என்று எனக்கு படுகுது................உங்களுக்கு எதிரில் நின்று நான் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்படும் தைரியம் மனத்தெம்பு எனக்கில்லை சித்தார்த்............... ”
“ உன்னை யாரும் பயமுறுத்தினாங்களா............ என்ன நடந்தது சொல்லு கனீத்தா என்னிடம் எதையும் மறைக்காதை......ப்ளீஸ். ”தலையை இரண்டு பக்கமும் மெதுவாக ஆட்டினாள்.
“ பின்னே என்னை விட்டிட்டுப் போக இப்ப என்னதான் அவசியம் வந்தது............... உன் மூளையை யார் கழுவிவிட்டது ..........? உனக்கு இதெல்லாம் வேண்டாத சகவாசமென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவைச்சது இதுக்குத்தான் .................. ”
“ சித்தார்த்தன்.............. என் மூளையை யாருமே சலவை செய்யேல்லை.............ஒழுங்காகத்தான் இருக்கு. நீங்கள் வீணாக ஊத்தவானைச் சந்தேகிக்க வேண்டாம்...... அவர் நல்லவர், என் விஷயத்தில் அவர் தலையீடு ஒன்றுமேயில்லை. பூஜ்யம். எனக்கு வழி வேறொன்று இருக்கிறதாக எனக்குப்படுகிறது................. எதிர்காலம் பற்றி எனக்குத்தெரிகின்ற காட்சிகளையும், கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில எடுத்துச்சொல்ல எனக்கு திறமை போதாமலிருக்கு. வருந்துகிறேன். இது நானே எடுத்துக்கொண்ட தீர்க்கமான முடிவுதான், இதற்குள் வேறு எவருடைய ஆலோசனைகளோ நிர்ப்பந்தமோ இல்லை, சத்தியம். ”
“ உனக்கு நான் என்னதான் குறைவைத்தேன்.............? ”
“ நீங்கள் எனக்கு ஒரு குறையும் வைக்கவில்லை................ ஆனால் எனக்காக நீங்களாகவே பல குறைகளை ஏற்றுக்கொண்டும் , சகித்துக்கொண்டும் வாழுகிறீர்கள்.............. அதுதான் எனது துன்பம். ”
"அப்போ இவ்வளவு நாள் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்.................பைத்தியக்காரத் தனமாய் இப்ப என்னதான் சொல்ல வர்றே நீ ............. ”(அவள் தன் மழலை ஆங்கிலத்தில் செப்பியதன், செப்பமுயன்றதன் பிழிவு இது.)
“ சித்தார்த்தன்........... என்னைப்பாருங்கள். நல்ல தாம்பத்யம் என்பது வெறும் மோகங்களாலோ, செக்ஸினாலோ அமைந்துவிடுவதில்லை................. அங்கே அடிப்படையிலான ரசனைக்கலப்புகள் கருத்துப்பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேணும், அப்போதுதான் அது சுவைபடும்................. எங்களுடைய வாழ்க்கையைப்பாருங்கள்............... குறைந்தபட்ஷம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப்போகிறதாவென்று................. நான் கிராமத்தில் பிறந்து நாகரீகம் தெரியாமல் வளர்ந்துவிட்ட ஒரு பட்டிக்காட்டுப்பெண். உங்களின் கவிதையிலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும் எனக்கு எக்காலத்திலும் எனக்கு ஈடுபாடு வரப்போவதேயில்லை................ எனக்காக நீங்கள் உங்களின் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிட்டீர்கள்................. உங்களின் சிறந்த சிநேகிதன் என்று நீங்கள் சொல்ற அமலனே இப்போ வீட்டுக்கு வாறதில்லை. உங்கள் பெற்றோரை நினைத்தாலே எனக்குப் பயமாகவே இருக்கிறது.................. இந்த ஒருத்தியால் அவர்களையும் நீங்கள் இழக்கப்போவது எனக்குப் புரியாமலில்லை. எந்தக்காலத்திலும் உங்கள் தாயாரிடம் உங்கள் மருமகளை இன்ன இடத்தில் பிடித்து வந்தேன் என்று சொல்லிவிடமுடியுமா...............? யோசித்துப்பாருங்கள். நீங்களே சொல்றபடி பொம்மை மாதிரி இந்த உடலைத்தவிர வேறென்னதானிருக்கு என்னிடம்.............? நீங்கள் இலட்சிய வாழ்வொன்றை உங்கள் ரசனைக்கேற்ப ஏற்படுத்திக்கொள்ள முற்றிலும் தகுதிகளும் வாய்ப்புக்களும் கொண்டவர். பாயவே தெரியாத இந்தக்குதிரையோட சேர்ந்து நீங்களும் நொண்டுவதை இடறுப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தர்மம் இல்லை. தெரிஞ்ச தேவாங்கு என்பதற்காகத் தோளில்போட்டுக்கொண்டு அவதிப்பட வேண்டிய அவசியமும் உங்களுக்குமில்லை. இலேசாகவும் உல்லாசமாகவும் பனிச்சறுக்கல் மாதிரிப்பயணிக்கக்கூடிய உங்கள் கால்களுக்குள் புகுந்துகொண்டு இடைஞ்சல் பண்ணிக்கொண்டு நான் சமாதானமாக இருப்பேனென்று நினைக்கிறீர்களா............ அதில எனக்குச் சம்மதமோ, இஷ்டமோ இல்லை. எனக்கு நன்றாகவே தெரியுது......... எனது பாதை வேறு. அதிலதான் நான் பயணப்படவேணும், பயணப்படவும் முடியும். அதனால் அந்தப்பாதைக்குத்தான் நான் இப்போ வந்திட்டன். அதில எப்பிடிச் சறுக்கப்போறேனென்றது எனது விதி. என்னோடு சேர்ந்து வர்றதென்பது, உங்களுக்கு முழுக்கத் துன்பமான அனுபவமாயுமிருக்கும், உங்களால அது முடியவும் முடியாது. என் மேலான பிரேமையால சமூகத்தையும், உறவுகளையும் கணக்கிலெடுக்காது என்னோடு வாழவிரும்பும் உங்களுடைய தியாகத்தையும், மனோதைரியத்தையும் நான் மதிக்கிறேன், போற்றுகிறேன். உங்கள் ஈடுசெய்யமுடியாத அன்புக்கு எனது நன்றிகள்.ஆனால் இந்தப்பிரிவு எங்களிருவருக்கும் நல்லது. என்னைப் புரிந்துகொள்ளுங்கள் சித்தார்த்தன். ”
அன்று நள்ளிரவாகும்வரை அவர்கள் விவாதித்துக்கொண்டார்கள்.
அடுத்த கோடையில் ஒரு நாள் தற்செயலாக பிஷ்மார்க் வீதியில் தாய்லாந்து, தாய்வான், பிலிப்பின்ஸ் என்று கிழக்காசிய இளசுகளாலேயே செறிந்ததும் Butterflies என்று திருநாமங்கொண்டதுமான செக்ஸ்பார் அருகே சித்தார்த்தனின் காருக்கு முன்போன டாக்ஸியொன்று நிறுத்தப்பட வேறும் இரண்டு குமரிகளுடன் கனீத்தா இறங்கிப்போவதைக் கண்டதும் அவன் மெல்ல ஹோர்ணை அடித்தான்.
“ ஹாய்............... சித்தார்த்!"என்று கண்கள் விரிய குதூகலத்துடன் கைகளை அசைத்துக்கொண்டு ஓடி வந்தாள்.
“ எப்பிடியிருக்கிறீர்கள் சித்தார்த்தன் செளக்கியமா..............? ”
“ செளக்கியமே......... ”
“ நீ........... எப்படி...?”
“ செளக்கியத்துக்கு குறைவில்லை.............. புதுசா கார் பழக ஆரம்பித்திருக்கிறேன்............. சீக்கிரம் லைசென்ஸ் கிடைத்திடும்.”
“ அப்படியா..............சந்தோஷம். ”
“ ஊரிலிருந்து கடிதங்கள் எல்லாம் வருகிறதா.........?”
“ வந்துகொண்டேயிருக்கு........... எல்லோருமே செளக்கியமாம். இவளைப்பார்த்தாயா........... எந்நாட்டுக்காரிதான் வந்து ஒரு வருஷமேயாகவில்லை, அதற்குள் தங்களூரில் புதுவீடு வாங்கிவிட்டாளாம்........................ நானும் வெகு விரைவில் ஒரு சூப்பர் மார்க்கெட் வாங்கிவிடுவேன்.”
அவள் கண்கள் கனவுகளால் நிரம்பியிருந்தன.


சரிநிகர். 25.02.1998 ..................................

Montag, Februar 21, 2005

கலைஞன்.

-பொ.கருணாகரமூர்த்தி-


அமைப்பில் ஒரு அரண்மனைக்குரிய கம்பீரத்தை கொண்டிருந்தும் பல காலமாகவே கைவிடப்பட்டிருக்கும் Charlottenburg - Witzleben ரயில் நிலையம் பெர்லினில் கிழக்கு மேற்காக நீளும் சிறியதொரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நிலையத்திற்குத் தெற்காக பள்ளத்தாக்கின் இரு புயங்களையும் 2-ம் உலகப்போரிலும் சிதைவுறாத ஸ்திரமான இரும்புப்பாலம் இணைத்து நிற்கிறது. பாலத்தின் கிழக்கு முகத்தில் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட Friedrich சக்கரவர்த்தியும், மேற்கு முகத்தில் Sophie - Charlottenburg ம் காவல் தேவதைகள்போல் நிற்கின்றனர்.
பாலத்தில் தொடர்வது ஐரோப்பாவிலேயே அகலங்கூடிய 10 டிராக்குகள் கொண்ட Kaiser Damm வீதி. தீராத போக்குவரத்துடன் இருக்கும் Kaiser Dammவீதியிலிருந்து பள்ளத்தாக்குக்குச் சமாந்திரமாக Dresselstrasse என்றொரு சிறுவீதி பிரிந்து செல்கிறது. ட்றெசெல்வீதி 8-ம் நம்பரிலுள்ள எனது ஒன்றரை அறை அப்பார்ட்மெண்டின் வடக்குப் பார்த்த ஜன்னலில் சாதாரண கமெரா ஒன்றின்மூலம் பத்து மேடைகளுடனான ரயில்நிலையத்தின் முக்கால்பகுதியும், பள்ளத்தாக்கும், இரும்புப்பாலமும் அடங்கும்படியாகப் படம் பிடிக்கலாம்.


மொஸ்கோ, வார்ஷோவிலிருந்து பெர்லினூடாக பாரீஸ், சூரிச், றோம் போகும் யூரோசிட்டி, இன்ரர்சிட்டிஎக்ஸ்பிரஸ், ரயில்கள் தரித்துச்செல்வதற்கு இப்போது ஜூலொஜிகல் கார்டன் ரயில்நிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தவிரவும் ஏழு நிமிஷத்துக்கு ஒருதடவை பெர்லின் நகரத்தின் விரைவுவண்டிகள், அயல் மாநிலங்களுக்கு சென்றுவரும் , இன்டர்சிட்டி றீஜனல் எக்ஸ்பிரஸ்கள்கூட Charlottenburg - Witzleben ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. 'பெர்லின் நகரம் பிரிசுவரால் பிரிக்கப்பட்டபோதே(1963) இந்த நிலையத்தை மூடிவிட்டார்கள்' என்று பாலத்தையட்டி 'கியோஸ்க்' வைத்திருக்கும் ஜெர்மன் கிழவி சொன்னாள்.


பனிமூட்டமுள்ள காலங்களில் யூரோசிட்டி, இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்துகளின் விரைவும், ஏராளமான தானியங்கிச் சிக்னல் விளக்குகளின் வெளிச்சங்களும் பார்க்க வெகு ரம்யமாக இருக்கும். ட்றெசெல் வீதிக்குச் சமாந்திரமாகத் தொடரும் ரயில் நிலையத்தின் மேடைகள் எனது தொகுப்புக்குவீட்டுக்கு அண்மித்தாகவே முடிவடைகின்றன. அவை முடிவடையுமிடத்தில் நிலக்கரிவண்டிகளின் காலத்தில் அவற்றுக்குத் தண்ணீர் நிரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர்த்தாங்கி இன்னும் நின்றுகொண்டிருக்கிறது. அருகில் நிலக்கரி வைத்திருக்கப்பயன்பட்ட சிறு சிறு கிட்டங்கிகள் ஒரு புராதன அரும்பொருள்காட்சியகத்தின் பகுதிகள் போலச் சிதைவுறாது காட்சிதருகின்றன.

ரயில் நிலையத்தின் நெடிய 10 மேடைகளிலும் வார்ப்பிரும்பில் இணக்கிப்போட்டிருந்த செடிகொடிவேலைப்பாடுகளுடன்கூடிய நீண்ட வாங்குகள் அனைத்தும் பாவனையில்லாததில் துருவேறிவிட்டன. பயணச்சீட்டு வழங்கல் மாடத்தின் அருகே சுவரில் எழுதப்பட்டிருக்கும் அக்காலப் பயணச்சீட்டுக் கட்டணவிபரணையைப் பார்த்தால் சிரிப்பு வரும். பெர்லின் முழுவதும் 24 மணிநேரமும் ரயில்கள், பஸ்கள், டிராம்கள் என எந்தப் பொதுவாகனத்திலும் பயணம் செய்வதற்கான கட்டணம் 1.00 மார்க்! நகரத்தின் ஒருகோடியிலிருந்து இன்னொருகோடிவரையில் எந்தப் பொதுவாகனத்திலாவது ஒருமுறை போய்வர 65 பெனிக்குக்கள்!
குளிர்காலம் போய் வசந்தம் ஆரம்பிக்கையில் மேடையின் விரிசல்களிடையேயும், தண்டவாளங்களுக்கு இடையிலேயேயும்புற்களும் சிறுசெடிகளும் முளைக்கும். கோடையில் முழுவளர்ச்சியடைந்து பசுமை காட்டிவிட்டு மீண்டும் குளிர்காலத்தில்கொட்டும் பனிக்குவியல்களிடையே மறைந்து காணாமல் போய்விடும்.வானம் சிவந்துள்ள அந்திக்கருக்கலில் அல்லது ஏகாங்கி நிலவின் பின்னணியில் கோளக்கூம்புருவில் கிரீடம்போல் அமைந்த அந்நிலையத்தின் கோபுரத்தைப் பார்க்க நேர்ந்த்தால் 'ஒரே நாளில் கிரீடத்தையும் - குடியுரிமையையும் பறித்து நடுவீதிக்கு விரட்டப்பட்ட ஒரு மகாராணியைப் பார்ப்பதுபோல மனது சோகம் கொள்ளும்.



அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப் புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்று அருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து (சிப்பாய்களின் Hammock) கன்வேஸ் தூளி ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடு வெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்கு வெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல் அவன் தூளி காலியாக இருந்தது.


மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் ஸ்டேசனின் Gold-regen மரங்களோடு தொடரும் வடக்குப்புற மதிலின் சிதிலமான பகுதியைத் தாண்டிக் கடந்துகொண்டு கையில் ஒரு சாப்பாட்டுப் பொதியுடன் மீண்டும் அவன் வருவதைப்பார்த்தேன். வந்ததும் அணிந்திருந்த ஜக்கெட்டைக் கழற்றித் தூளியில் போட்டுவிட்டு, சப்பாத்துகளையும் கழற்றி ஒரு பக்கமாக வைத்துவிட்டு வெறுங்காலுடன் நடந்துபோய் மேடையின் மறுகோடியில் இருந்த தண்ணீர்க்குழாயில் முகம் கைகால் கழுவிவிட்டுவந்து நிலத்தில் சம்மணமிட்டமர்ந்து பொதியை அவிழ்த்துச் சாவகாசமாகச் சாப்பிட்டான். பின் ஜாக்கெட்டுப்பையிலிருந்து ஒரு பியர் கானை எடுத்துக்கொஞ்சம் குடித்துவிட்டு அதையும் இரும்புவாங்கில் ஒரு பக்கமாக வைத்துவிட்டு தானும் அதில் சற்றே தள்ளி அமர்ந்து சிகரெட் பிடித்தான். அப்போது நாலாவதோ ஐந்தாவதோ மேடையில் நகரத்துள் மட்டும் ஓடும் S - Bahn எனப்படும் விரைவு ரயில் ஒன்று நூறு கி.மீட்டர் வேகத்தில் கடந்து போனதை வேடிக்கை பார்த்தான். பின் பியர் கானைக் கையில் எடுத்துக்கொண்டு அம் மேடையின் முழு நீளத்துக்கும் ஆறேழு தடவைகள் நடந்தான். அவன் நடந்து அணுக்கமாக வந்தபோது தெருவிளக்கின் வெளிச்ச்தில் இன்னும் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. உயர்ந்த ஒல்லியான தேகம். சதா சிந்தனை வயப்பட்டவன்போல் தோற்றமளித்தான். சாயம்வெளிறியும் அங்கங்கு தேய்ந்துமிருந்த டென்னிம் ஜீன்ஸ் அணிந்திருந்தான். தலையை வாரிவிடுவதில் அக்கறை எதுவுமில்லை, ஒரு கிழமை வயதான தாடி, கண்வலயத்தில் லேசான ஐரோப்பியச்சுருக்கங்கள். வயதும் அவனுக்கு 35-க்கும், 50திற்கும் இடையில் எத்தனையுமிருக்கலாம்.

மறுநாள் அவன் வெளியேபோய் வரும்போது தொல்பொருள் ஆய்வாளர் கண்டால் அக மிக மகிழவல்ல தோற்பை ஒன்றைக் கொண்டுவந்தான். தினமும் இரவில் ஏதாவது சாப்பாடு வெளியிலிருந்து கொண்டுவருவதும், சாப்பிட்டுவிட்டுத்தூங்குவதும், பின் மறுநாள் பகல்வெளியேறுவதும் தினப்படி நடவடிக்கைகளாக இருந்தாலும் எங்கேயும் வேலை பார்ப்பபவன் போலவுந்தெரியவில்லை. சில நாட்களில் மதியம்வரை தூளியைவிட்டிறங்காமல் படுத்திருப்பான். வெளியில் சென்று கவனிக்கவேண்டிய காரியங்கள் ஒன்றுமில்லாமலிருக்கவேண்டும் அல்லது ஆர்வமில்லாமலிருக்கவேண்டும். ரயில் நிலையத்துக்கு குடிவந்து ஒருமாத மேலாகியும் அவன் தன் காற்சட்டையையோ ஜாக்கெட்டையோ மாற்றாததிலிருந்து அந்தத்தோற்பையில் 'மாற்றுடுப்புக்கள் ஏதாவது வைத்திருப்பான்' என்ற என் ஊகமும் நசித்துப்போனது. தினமும் இரண்டு மணிநேரம் ஒரு பூக்கடையில் வேலைசெய்தாலோ, செய்திப்பத்திரிகை விநியோகித்தாலோகூட இப்படித் தூளிகட்டித் தூங்கவேண்டிய அவசியமின்றி ராஜகுமாரனாகவே வாழலாம். மனிதன் வாழ்வுபூராவும் எதையாவது செய்துகொண்டு பிஸியா இருந்துவிட்டால் சோர்வும் துன்பமும் அணுகாதாம். 'வயசு எழுபதாகிறதா.....பரவாயில்லை உடனே பரதநாட்டியம் கற்க ஆரம்பித்துவிடு.' என்றாராம் ஒஸ்கார் வைல்ட். மனிதனின் மரபான வாழ்வுமுறை சலிக்கும்பொது ஐரோப்பிய இளைஞர்கள் சிலர் வேறொரு வாழ்க்கைமுறையை முயன்று பார்க்கின்றனர். இவ்வாறான வித்தியாசமான வாழ்வுமுறையைத் தேர்பவர்கள் தனியனாகவும் , ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பதுபேர்கொண்ட கூட்டமாகவும் வாழ்வதுண்டு. இவர்கள் தங்கள் கூட்டுவாழ்வுக் கொம்பனியில் நாய்களையும் விரும்பிச் சேர்த்துகொண்டுருப்பார்கள். சங்கிலிகளும், இரும்பாணிகளும், றிவேட்டுகளும் பொருத்திய தோலிலான ஆடைகளையே விரும்பி அணிவார்கள். மாணவர்கள், வேலையற்றோரைவிட கலைஞர்கள், இலக்கியர்கள், நிறையப்படித்தவர்கள்கூட இக்கூட்டத்தில் சேர்ந்துவிடுவதுண்டு.
எங்கேயாவது கைவிடப்பட்ட பழையதொகுதிவீடுகள், கட்டிடடங்களைக் கண்டுவிட்டால் இவர்களுக்குக் கொண்டாட்டந்தான். அவற்றை ஆக்கிரமித்துத் தம் ஜாகையை அங்கேயே அமைத்துக்கொண்டுவிடுவார்கள். 'ஒடோனோம்ஸ்' என்று அழைக்கப்படும் இவர்கள் குடியமர்ந்துவிட்ட கட்டிடங்களிலிருந்து இவர்களை வெளியேற்ற அவற்றுக்குச் சொந்தமான நிறுவனங்களும் அரசும் பின்னால் பெரும்பாடுபடவேண்டியிருக்கும். முதலில் மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகத்தை நிறுத்திப்பார்க்கும். அவர்களோ பதிலுக்கு வீதிகளில் போக்குவரத்தைத் தடைபண்ணி ரகளை பண்ணுவார்கள். தாங்கள் வெளியேறவேண்டுமானால் அரசால் இலகுவில் நிறைவேற்றிவிட முடியாத கோரிக்கைகள் எதையாவது வைப்பார்கள். மனிதவுரிமைஅமைப்புகளும் உடனே சேர்ந்துகொண்டு அவர்களுக்குச் சாதகமாகக்கூவ அரசுஒவ்வொருமுறையும் பின்வாங்குவதைத்தவிர வேறுவழியிருக்காது. தற்கொடைப் போராளிகளுக்கடுத்ததாக அரசுகள் பயப்பிடும் மற்றொரு விஷயமென்றால் அது இந்த 'ஒடோனோம்ஸ்' விவகாரந்தான். சிலர் தலைமயிருக்கு பல்வேறு வர்ணங்களில் சாயமடித்திருப்பார்கள். சிலர் நடுத்தலையில் 3 செ.மீட்டர் அகலத்துக்கு நீண்ட முடிப்பட்டியை விட்டுவிட்டு மீதியை மழித்துவிட்டு அப்பட்டியிலுள்ள கேசத்துக்கு மரங்கொத்திப்பறவையை மாதிரிச்சாயமடித்து ஜெலியைப்பூசி நிறுத்திவிட்டார்களாயின் அது கோழிக்கொண்டைமாதிரி விறைத்து நிற்கும். இவர்கள் வட்டத்தில் மறிஜுவானா, கொக்கையின், ஹஷீஸ் எனப்போதைப் பொருட்களும் கொஞ்சம் அதிகமாகவே புழங்கும். அங்கவீனர்கள், முதியவர்கள், மாணவர்கள், வேலையற்றவர்கள், ஏதிலிகளுக்கெல்லாம் உயரிய சமூகப்பாதுகாப்பை வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் 'ஒடோனோம்ஸ்'களின் எண்ணிக்கை அதிகரிப்பதுவும் ஒரு சமூகச்சிக்கல்தான்.இவர்களுள் சிலர் கிடைக்கும் சமூக உதவிப்பணம் பியரில் ஹஷீஸில் தீர்ந்த பின்னால் சுரங்க ரயில் நிலையங்களிலும், இருட்டான முக்குகள் சந்துகளில் நின்று பிச்சை எடுப்பதுவுமுண்டு. தங்கள் நாயுடன் ஒரே போர்வையுள் மூடிப்போர்த்திக்கொண்டிருந்து "ஒரு பியர்கானுக்கு சில்லறை வேணுமே" என்று உண்மைசொல்லி யாசிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தேரும் வாழ்வுமுறைக்கு என்னதான் காரணங்கள் கற்பித்தபோதும் உழைப்புக்குப் பின்வாங்கும் இவர்கள் கொள்கையும் போக்கும் பொது உற்பத்திக்குப் பின்னடைவான மறை அம்சமே. ஒரு நல்ல குணாம்சம் என்னவென்றால் கறுப்பரோவெள்ளையரோ எந்த வெளிநாட்டவர்கள்மீதும் இவர்கள் எந்தத் துவேஷமும் பாராட்டுவதில்லை!

ஒருநாள் இரவு சாப்பாட்டைமுடித்துக்கொண்டு வார்ஷோவிலிருந்து பாரிஸ¤க்குச் செல்லும் நைட் இண்டர்சிற்றி ரயிலை ஜன்னலிலிருந்து வழியனுப்பிவிட்டு படுக்கை, தலையணையுறைகளை மாற்றிக்கொண்டிருந்தேன். J.S.Bach ன் பிரசித்த மெலோடியான 'Jesus Christus meine Verlangen' இன் அருமையான பல்லவி ஸோலோவாக சக்ஸபோனில் புறப்பட்டு மிதந்து வந்தது. யாரோ சவுண்ட் சிஸ்டத்தையோ, தொலைக்காட்சியையோ சத்தமாக வைக்கிறார்கள் என்று இருந்தேன். ஒரு Contrad bass ன் ஒத்திசைவுகூட இல்லாமல் சக்ஸபோன் தனித்தே பல சுருதிகளிலும் பிளிறுவது மெலிதான சந்தேகத்தையுண்டுபண்ண ஜன்னலுக்கு வந்து பார்த்தேன்.
அவன் Dressel வீதியின் சோடியம் ஆவி விளக்கில் மேடையின் இரும்புவாங்கில் ஆரோகணித்தமர்ந்து ஒரு சக்ஸபோனை வைத்து வாசித்துக்கொண்டிருந்தான். அதன் பின்னும் பீத்ஹோவனின் ஒரு அழகான கோர்வையை அரைமணிக்கும் மேலாக உற்சாகம் ததும்ப வாசித்தான். அவனது கற்பனைகளும் அலாதியான கமகப் பிரயோகங்களின்போது அக்கருவியில் மட்டும் வரும் இனியபிளிறலும் செறிந்த இசை மிகவும் வித்தியாசமாக சுகமாக இருந்தது. அது முடிந்தபின் ஷம்பேன் போத்தலைத்திறந்து தொண்டையை நனைத்தபின் வேறொரு கோர்வை. அந்த இரவு வெகுநேரம் ஆனந்த பரவசத்துடன் நெளிவுசுழிவுகளுடன்கூடிய மிகநுட்பமான இசை அவனது சக்ஸபோனிலிருந்து பொங்கிப்பிரவகித்து Charlottenburg பள்ளத்தாக்கு முழுவதையும் நிறைத்து மேவியது.

பாவம்............ இவனும் ஒரு கலைஞன்!

கலை மனிதனை ஆகஷிக்க வல்லதுதான், அதுவே போதையாகி அதற்கே அடிமையாகி அதைத்தவிர வேறெதுவுமில்லையாகி அதைக்கொண்டு வாழ்வை நகர்த்தமுடியாத நிலை வந்தபின்னாலும் அதையே கட்டிப்பிடித்துக்கொண்டும் விலக்கமுடியாமலும் தவித்துச் சோம்பேறியாகிப்போகும் பட்டினிக்கலைஞர்கள் உலகம் முழுவதும்தான் உள்ளனர். வாழ்க்கையின் மறுபரிமாணங்களைக் காணத்தவறுவது, தறவிடுபவை பற்றிய பிரக்ஞை இன்றி இருப்பதுவும் இவர்களின் பொதுக்குணங்கள்.ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்கவித்துவான் இருந்தார். அடுப்புக்கால்களை நாய் நர்த்தி விளையாடும் அளவுக்கு இருக்கும் அடுப்பங்கரை நிலமை. மனிதன் விடிந்ததிலிருந்து மிருதங்கத்தை எடுத்துவைத்து அதைத்தடவித்தடவி 'குமுக்கு' 'குமுக்கு' என்று கும்மிக்கொண்டிருப்பாரே தவிர இந்தண்டையிருக்கிற துரும்பை எடுத்து அந்தண்டை போடமாட்டார். கர்ப்பிணி மனைவி விறகுடைப்பாள். இவர் திண்ணையில் ஒருகாலை மடித்து மறு தொடையின்மேல் போட்டுக்கொண்டு பான்பராக்கோடு வெற்றிலையைக் குதப்பியபடி சும்மா பார்த்துக்கொண்டு இருப்பார்."விடுங்கோ மாமி" என்றுவிட்டு கோடலியை வாங்கி நான் உடைத்துக்கொடுத்தால் " கடினவேலை செஞ்சா அப்புறம் எனக்கு விரல்கள் ஜதிக்கட்டுக்களுக்கு வசையிறதில்லையடா அம்பி." என்பார்.குடல் காயத்தொடங்கின பிறகு என்ன சாம்பலுக்குத்தான் ஜதிவேண்டிக்கிடக்கோ?
மறுநாள் இந்த சக்ஸபோன் கலைஞன் மேடையில் ஒரு புல்லை வைத்துக்கடித்துக்கொண்டு அணில்களும் புலுணியும் ஓடிப்பிடித்து விளையாடுவதை வெகுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.


இவனிடம் போய் ஒரு 'ஹலோ' சொன்னால் பேசுவானோ முறைப்பானோ தெரியவில்லை. சில கலைஞர்கள் கிறுக்கர்களாகவும் இருப்பதுண்டு.பாவம், குளிர்காலம் வர என்னதான் செய்யப்போகிறான்? என் அறையில் ஒரு கட்டிலைப்போட விடலாந்தான், அதற்கு வீட்டுச்சொந்தக்காரியிடம் அனுமதி பெறவேண்டும், இந்தச்சாக்கில் அவள் வீட்டுவாடகையை வேறு உயர்த்திவிடலாம்.அறையைக் கொடுத்தபின்னால் அவன் ஷாம்பேன் போத்தல்களையும், பியர் புட்டிகளையும் கொண்டுவந்து நிரப்பினால்? உடுப்பையே மாற்றிக்கொள்ளாதவன் குளிப்பதில்லையென்று ஒரு 'பொலிசி'யைக்கூட வைத்திருக்கலாம், யார் கண்டது?பின்னர் கிடாய் மொச்சை கமழும் பெம்மானுடன் மானுஷன் உறைவதெங்கனம்? வானத்தால் போன பிசாசை ஏணிவைத்து இறக்கின கதையாகிவிடலாம்.


ஒரு வாரம் ஆகியிருக்கும். ஒடோனோம்ஸ் கூட்டம் ஒன்றிலிருந்து பிரிந்து தனியாக வந்துவிட்டவன்போலவே தெரிந்த அந்தக் கலைஞனைக் காணவில்லை. அவனுக்கு வேறெங்காவது இதைவிட நல்ல ஜாகை வாய்த்திருக்கலாம்; அல்லது வேறெங்காவது பரதேசம் புறப்பட்டிருக்கலாம்; தன் கூட்டத்தினருடன் போதை வஸ்த்தின் லாகிரியில் அமிழ்ந்து மீள்வதில் காலம் எடுத்திருக்கலாம் என எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் ஒருநாள் திரும்பவும் வந்தான். அன்றும் இளம் நெல்வயலில் இளங்காற்றடித்ததுபோல இசை நளின அலைகளைக் கொண்டு சுகமான சந்தங்களுடன் குதித்துக் குதித்துப்பரவசப்பட்டது. விமானம் ஒன்று இறங்குவதைப்போல தாழ்சுருதியில் பதிந்து சமதரையைத்தொடுவதுபோல இறங்கிப் பின் திடுப்பெனக் 'கொங்கோடெ'னச் சிலிர்த்துப் பிளிறிச்செங்கோணத்தில் மேலே எழுந்து உயர்ந்து வித்தாரங்காட்டியது.


அவன் பசி எடுத்தால்தான் இசைப்பானோ, இல்லை வயிறு நிரம்பியுள்ள குஷியில் இசைப்பானோவென்று ஒன்றுந்தீர்மானமாகச்சொல்ல முடியாது. ஷாம்பேன்போல ஒன்று தொண்டையை நனைக்கப் போதுமாயிருந்தால் போதும். அவனது சக்ஸபோன் குதிகொள்ளும். குளிர் காற்று மிதமாக வீசத்தொடங்கவும் சிறிய ஒரு இடைவெளிவிட்டுவிட்டு பெரியதொரு அட்டைப்பெட்டியை மூலைவிட்டமாக வெட்டி அதன் 'ட' ஒதுக்கில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைத்து அலுமினியத்தாளில்சுற்றி வைத்திருந்த 'கலமாறிஸை' (கணவாய்மீன் பஜ்ஜி) 'ஸோஸ்' ஒன்றில் தொட்டுச்சாப்பிட்டான். பின் ஷாம்பேன்.அன்று வழக்கத்தைவிட முன்னதாக ஆரம்பித்திருந்தும் அடிக்கொருதடவை கடந்து செல்லும் ரயில்களின் இரைச்சலையும் பொருட்படுத்தாது பாரிஸ் ரயில் சென்ற பின்னாலும் வெகுநேரம் இசைவேள்வி நடத்தினான்.மீண்டும் ரேவதி சாயலில் நிறைய ஏக்கமும், பெற்றோரைத் தவறவிட்டுவிட்ட ஒரு பிள்ளையின் தவிப்பும் கலந்திருந்த ஒரு கிளாசிகல் கோர்வையை அனுபவித்து அனுபவித்து வாசித்தான். அடுத்து 'Lilly was here'. மறுநாள் மதியம் வரையில் ஒருகாலை வெளியே தொங்கவிட்டபடி தூளியுள் படுத்திருந்தான். பின் எப்போ எழுந்து போனானோ தெரியாது.


அவனது இசை கேட்டு ஒருமாதமாவது ஆகியிருக்கும். ஆளை அந்தப்பக்கம் காணவே இல்லை.ஒரு நீண்ட (மாதத்தின் முதலாவது) சனிக்கிழமை மாலையில் Ku'Damm Karrie Passage இனுள் அவனைக் கண்டேன். அன்று வியாபாரஸ்தலங்கள் எல்லாம் மாலை 20.30 மணிவரை திறந்திருக்கும். அதனுள்ளிருந்த ஒரு றெஸ்ரோறண்ட் வாசலில் நின்று இவன் தன் சக்ஸபோனை வாசித்துக்கொண்டிருந்தான்.அருகில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தொப்பியுள் அவ்விடத்தைக் கடந்துபோவோரும் , அவ்வுணவுச்சாலையில் இருந்து வெளிப்படுவோரும் காசுகள் போட்டனர். பரட்டைத்தலையுடன் அநாதைபோல் தென்பட்ட ஒரு பத்துவயதுச்சிறுவன் வத்தகைப் பழக்கீறல் ஒன்றை நாடியால் தண்ணீர் சொட்டச்சொட்டச் சுவைத்துக்கொண்டு இவன் சக்ஸபோன் வாசிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவனோ சேரும் சில்லறையில் கருத்தின்றிக் கண்களைமூடித் தன் சங்கதிகளில் ஒன்றி ஸ்வரப்ரதாபங்களில் உருகி வாசித்துக்கொண்டிருந்தான்.


இந்த Passage இனுள் நிறையவே றெஸ்ரோறண்ட்களும், பார்களும் அதன் சுற்றுவட்டத்திலும் அநேகம் ஷொப்பிங் கொம்பிளெக்ஸ்களும் இருப்பதால் அந்த இடம் எப்போதும் ஜனநடமாட்டத்துடன் ஜே'ஜே' என்றிருக்கும். எனக்கும் மெல்ல வயிற்றைக்கிள்ளவே அங்கிருந்த 'இம்பிஸ்' ஒன்றில் சூடாக உருளைக்கிழங்கு சிப்ஸ¤ம் பியரும் வாங்கிக்கொண்டு சீமெந்து பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து அவனை நானும் ரசித்தேன். Herbert-Von-Karajan ன் சில கற்பனைகளைத் தந்துவிட்டுதிடுப்பெனச் 'Sailing' என்ற ஜனரஞ்சகமான றொக் பிட்டுக்கு சுழன்றுவந்தபோது கும்பல் கணிசமாகவே சேர்ந்துவிட்டது. அவன் வாசிப்பில் கிறங்கிப்போவிட்ட சுவைஞர் ஒருவர் நுரை ததும்ப பெரிய கிளாஸில் பியர் வாங்கிவந்து கொடுத்தார். அதில் தொண்டையைக் கொஞ்சம் நனைத்துவிட்டு சில 'அண்டர்கிரவுண்ட்' இசைச்சித்தர்களுடன் சஞ்சரிக்கலானான். எதுவுமே முன்பொருநாளுந்தான் கேட்டறியாத இசைக்கோலங்கள்.கேட்பவர் அனைவரையும் கிறங்கடித்தான்.


தெருப்பாடகர்கள், வயலின்வாசிப்போர்களென்று எத்தனையோ வீதிக்கலைஞர்களைச் சந்தித்திருக்கிறேன்.சீமான்களது இசை அரங்குகளில் சீமான்கள்போலவே மெட்டாக உடுத்திப்போய் எத்தனையோ சிம்போனிகளைக் கேட்டிருக்கிறேன். இருந்தும் அவனது காயலான்கடை ரக வாத்தியத்திலிருந்து கிளம்பும் நாதத்தில் தோய்ந்துள்ள மாயலாகிரி எனக்குள் ஏற்படுத்தும் அதிர்வுக்ளைப்போல் எதுவும் ஏற்படுத்தியதில்லை. அவனது இசையோடு சேர்ந்து ஏதோவொரு அலைவரிசையில் வரும் விபரிக்க முடியாத காந்தக்கதிர்கள் என்னை அவனோடு கட்டிப்போடுகிறது, கிளர்த்துகிறது, பஞ்சாகக்கிளப்பி மேலே மேலே முகில்களோடு மிதக்கவைக்கிறது.

வாசித்து நன்றாகவே களைத்தபின்னால் 'Udo Lindenberg' ன் 'Auf wiedersehen' என்ற மெலோடியை (மீண்டும் சந்திப்போம்) மென்சோகம் தோய்த்து மங்களமாக வாசித்தபோதுபோது சுவைஞர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து" தயவுசெய்து மீண்டும் ஒரு முறை " "மீண்டும்" என்று கேட்கவும் சம்மதித்து மீண்டும் ஒருமுறை வாசித்தான். 'இத்தனை வித்தகனுக்கு சொந்தமாய் ஒரு கூரை இல்லை' என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.

அவனை அன்று பார்த்ததுதான்.

உயிர்தரித்திருக்க ஒரு மனிஷனுக்குத் தேவையான உணவு, உடை, படுக்கை, சூடான ஒருவதிவிடம் இவற்றைத்தேடி அக்கலைஞன் உலகத்தின் எக்கோடிக்குக்குத்தான் சென்றாலும் பரவாயில்லை என்று மனம் விரும்பினாலும் தினமும் காலையில் எழுந்ததும் கண்கள் அவன் வந்திருக்கிறானா, தூளியுள் தூங்குகிறானா என்றே தேடுகின்றன.
அதன் பின் வந்த ஒவ்வொரு வசந்தத்திலும் நிலையத்தின் வளவின் நிற்கும் Gold-regen (தங்கமழையென்று அர்த்தம்) மரங்களின் மெலிந்தடர்ந்த நீண்ட கிளைகளின் பொன்மஞ்சள் பூம்பாளைகள் எல்லாம் ஏககாலத்தில் மலர்வதால் பூக்களின் பார்ந்தாங்காமல் அவை தலைகீழாக விழுதுகள் போலத்தொங்குகின்றன. கஸ்டானியன் மரங்களும் தவறாமல் பழுத்துத் தம் விதைகளை நிலமெங்கும் இறைத்துவிடுகின்றன. அவனது தூளியும் தோற்பையும் அவனுக்காகக் காத்துக்கொண்டு இன்னும் அங்கேயே இருக்கின்றன. அணிலும் புலுணியும் மேடைகள் பூராவும் ஓடிப்பிடித்து விளையாடுகின்றன. பாரீஸ் ரயிலும் தவறாது 11.05க்குக் கடந்து விடுகிறது.

இசை மட்டும் இல்லை.


பனிமலர் (லண்டன்) ஜூன் -92

Dienstag, November 23, 2004

பகையே ஆயினும்...............

பொ.கருணாகரமூர்த்தி

ந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன.
“ஏன் உள்ள வைச்சுத்தான் வெட்டிறதுக்கென்ன?”என்றேன்.
“சுவர் பழுதாகிவிடாதா.......?” என்று பதில் கேள்வி போட்டான்.
“எல்லாருமே படியில வைச்சுத்தான் இறைச்சி வெட்டுவாங்களோ இங்கே........?”என்றேன்.
அவன் ஒரு கருடப்பார்வை பார்க்க....... மனைவி சொன்னாள்: “ அவனோட என்னத்துக்கு வீண் பேச்சு........ துஷ்டனைக் கண்டால் தூரவிலகென்றிருக்கு....... இந்த வீடு எமக்குத்தோதுப்படாது....... வேற வீடு பார்த்துப்போயிடுவம்....” தளபாடங்களை ஏற்றி இறக்கின என் தேக நோ எடுபடவே இன்னும் மாதமாகும் போல இருந்தது, இந்த வீடு எடுக்கப் பட்ட மாய்ச்சல் ஒன்றும் அவள் அறியாததல்ல.இருந்தும் ஏதோ நூறுமார்கிற்கு டசின் வீடு கிடைப்பதான பாவனையில் பேசினாள்............. “முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுப்பார்ப்பம்........ அறவே ஏலாமப்போனால் பிறகு பார்ப்பம்.....” “ம்ம்ம்ம்ம்ம்.......எல்லாம் உங்களுக்கு பிறகு பார்ப்பந்தான்......”
கழுத்தை நொடித்தாள் பெரிய அம்மாமி மாதிரி!

அடுத்த சனிக்கிழமை முழுவதும் சுவரில் எலெக்றிக் டிறில்லரால் தொளைகள் போட்டுக்கொண்டிருந்தான். சத்தம் நாராசமாய் காதைத்தொளைக்கவும் இளையவள் சாம்பவி (ஆறுமாதம்) பயந்து வீல் என்று அலறினாள். இன்றைக்கு வீட்டில் இருக்கமுடியாதென்று தோன்ற......‘கனகாலமாய் எங்களைத் தங்களிடம் விசிட் பண்ணுவதேயில்லை’ என்று குறைப்பட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவனுக்குப் போன்பண்ணினேன். “உனது நெடுங்காலத்தைய குறை இன்று தீர்க்கப்படுகிறது.”
மனைவி ஓடிவந்து ரிசீவருக்கு மறுபுறமிருந்த காதில் கிசுகிசுத்தாள். “சொல்லாமல் கொள்ளாமல் போய் நிக்கப்போறம்...... கறிபுளி இருக்கோவென்றெல்லாம் கேளுங்கோ”
“சாய் கேட்டாலுந்தான்........ இல்லையென்டு ஆரும் சொல்லுவினமே.....எதுக்கும் வழியில இறங்கி மீன் வாங்கிக்கொண்டுபோவம்”. போனோம்.
சனி விடுமுறைநாள் முழுவதாய் நண்பன் குடும்பத்துடன் முடிந்தது.
மறுநாள் ஞாயிறு பிள்ளைகளுக்கு தமிழ்ப்பள்ளிக்கூடம்.
மனைவி கூட்டிப்போய்விடுவார். நான் வீட்டில் தனியே சாம்பவியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளோ தூங்க மறுத்து ஈரத்துவாலையைப் பிழிவதைப்போல் உடம்பை முறுக்கிக் காட்டி என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
போதாக்குறைக்கு துருக்கிக்காரன் பாக்கியிருந்த தொளைகளைப் போடத்தொடங்கினான். அந்த டிரில்லரோ நிமிடத்திற்கு 500 தடவைகள் அடித்து அடித்து தொளைபோடும் வகையானது.
சைரன் பிடித்தது போல் சத்தம் வரவும் சாம்பவி மீண்டும் பயந்து அலறினாள்! நேரே அவனிடம் போனேன். “உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா......... குழந்தைதூங்கமுடியாமல் அழுகிறது....... நேற்றுப்பூராவும் வீட்டிலேயே இருக்கமுடியாதபடி பண்ணினாய்..... போதாக்குறைக்கு இன்றைக்கு வேறு ஆரம்பித்துவிட்டாய்! ஓய்வுநாளில் அமைதியைக் கெடுக்கக்கூடாதென்று சட்டமிருக்கு......... தெரியாதா உனக்கு? "

“சட்டத்திற்கு எனக்கு இன்றைக்கு மட்டிலுந்தான் இதுகள் பண்ண நேரம் கிடைக்குமென்ற சங்கதி தெரியுமா?”
அதிபுத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பதில்கேள்வி போட்டான். இனி இவனோடு குஷ்தி போடுவதில்தான் வாழ்வின் பெரும்பகுதி கழியப்போகிறது என்று எண்ணிக்கொண்டேன். யார்தான் போன் பண்ணினார்களோ............ சற்று நேரம் கழித்து 2 பொலிஸ்காரர்கள் வந்து அவனை விசாரித்து இரையவேண்டாமென்று எச்சரித்து விட்டுப்போனார்கள்.

பொலீஸ் போனதும் பஸ்ஸர் ஒலித்தது. கண்ணாடியினூடு பார்த்தேன். இறைச்சி வெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு துருக்கி நிற்கிறார்.

என்னிடமும் திரிசூலமொன்று ஒன்றரை மீட்டர் நீளப் பிடியுடன் ( பண்ணைகளில் உருளைக்கிழங்கு கெலிக்கப்பாவிப்பது) கூரிய இலைகளுடன் இருந்தது , அதை எடுத்துக்கதவின் பின்னே தயாராக வைத்துவிட்டு கதவைத்திறந்தேன்.
“பொலிஸிலேயா கொம்பிளெயின் பண்ணிறாய்................பாக்கிஸ்த்தானி.........? இன்னொரு தரம் பண்ணினேயென்றால்.........சொருகிவிடுவேன்....சொருகி..!” என்றுவிட்டுக்கத்தியின் வாதாரையை செளவுரக்கத்தியைப்போல் உள்ளங்கையில் தடவிக்காட்டினான்.

“என்னட்டும் இருக்கடா ஐட்டம்......”

லபக் எனத்திரிசூலத்தை எடுத்தேன். “நீ கத்திசொருகிற ஆளென்றால் நான் உன் குடலையே பிடுங்கி உன் கழுத்திலேயே போட்டுவிடுற டைப்பாக்கும்......” என்றுகொண்டு சூலத்தின் முனையை அவன் வயிற்றில் வைக்கப்போனேன் . மிரண்டுபோனான்.........!

“உன்னை பிறகு கவனிக்கிறமாதிரி கவனிக்கிறன்..........”

“உப்பிடி எத்தனையோ வீரசிங்கங்களைக் கண்டிருக்கிறன் ........ நீ மாறு.........!” தரையில் காலை ஓங்கி உதைத்துவிட்டு வந்தவேகத்திலேயே திரும்பிப்போனான்.
கடைக்குப் போயிருந்த மனைவியிடம் துருக்கி ஆவேசம் பொங்கிக் கெம்பின விஷயம் நான் சொல்லவேயில்லை. சொன்னால் வேற வீடு....... என்று உடனேயே ஆரம்பித்து விடுவாள்!

அடுத்த நாள் மாலை நான் வேலையால் வந்தும் வராததுமாய் மகன் கிரிதரன் ஓடி வந்து சொன்னான்: “இன்றைக்கு ஹாஸன்ட பப்பா ஒரு பெரீய்ய்ய ஆடு வாங்கியாந்தவர்.........!” (துருக்கிதான்).
“என்னடா உளர்றாய்........?” “ஒன்றும் உளறேல்ல.......உம்மை...... வேணுமென்டால் அக்காவையும் கேட்டுப்பாருங்கோ.......... "
அக்கா ஆர்த்தி உடனே ஓடி வந்து தம்பிக்கு சாட்சிக்கு ஆஜரானாள்.

“ஓமப்பா...... உசிர்ர்ர்ர்...... ஆடு......! இவ்வளவு உயரம்.”என்று கையை தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் பிடித்துக்காட்டினாள்.
“அவை ஆடே வாங்கியிட்டினம்..... நீங்களெனக்கு இன்னும் நாயிக்குட்டி வாங்கித்தரேல்லை யென்னா.......?”தன் நீண்ட நாள் ஆதங்கத்தை முன்னூற்றிமூன்றாவது தடவையாகக் என்னிடம் கொட்டினான்

அன்றிரவு முழுவதும் அவர்கள் வீட்டு பாத்றூம் 'கடாமுடா' என்று குருஷேஷ்திரக் களேபரமாயிருந்தது. மறுநாள் காலை குப்பைக் கொன்ரயினருள் ஆட்டின் மண்டையோடும் , தோலும் , கொம்புகளும் , நகங்களும் கிடந்தன. ஹவுஸ் வார்டனிடம் புகார் செய்தேன.

அவனுமோ “நானும் பல தடவைகள் அவனுக்கு எடுத்துச்சொல்லியாயிற்று...... அழிச்சாட்டியம் பிடிச்சபயல் கேட்கிற மாதிரியில்லை..... துருக்கிக்காரன் ஆட்டை உள்ளுக்குக் கொண்டு வர்றதைக்கண்ட இரண்டு உறுதியான சாட்சிகள் இருந்தால் நாங்கள் பொலிசில முறைப்பாடு கொடுக்கலாம்.........கொடுப்போமா ?"என்றான்.

மனைவி மீண்டும் தொணதொணக்கத் தொடங்கினாள்.
“இனிக் குஷ்திபோடிறதே சீவியமாயிருக்கப்போகுது......... பொலிசும் கையுமாகத்திரியத்தான் இனி உங்களுக்கு நேரம் சரியாயிருக்கும்........பேசாமல் வேற வீடு பாருங்கோப்பா..........நல்ல அயலான் அமையிறதுக்கும் கொடுப்பினை இருக்கவேணும்.......!” பெருமூச்செறிந்தாள்.

துருக்கிக்கும் ஆடு அடிக்கிறது , புல் தரையில் கிறில்மூட்டி இறைச்சி வாட்டிறதையும் தவிர வேறு வேலையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சதாகாலமும் வீட்டிலேயே கிடந்தான்.
ஒரு முறை இரவுநடுச்சாமம் தன் வீட்டிலிருந்த அப்புறப்படுத்த வேண்டியிருந்த ஒரு பழைய அலமாரியையும், ஸெற்றியன்றையும் எப்படித்தான் நகர்த்தினானோ, நகர்த்திக்கொண்டு போய் கீழே வீட்டின் பிரதான நுழைவாசல் அருகில் வைத்துவிட்டுப் போய் போர்த்துக்கொண்டு படுத்துவிட்டான்(முறைப்படி முனிசிப்பாலிட்டி லாரியை வரவழைத்து அவர்கள் தரும்தேதியில் அவர்களிடத்திலேயே கையளிக்கவேண்டும், அல்லது அதற்கென்றான இடத்தில் கொண்டுபோய் போடவேண்டும் மீறி அங்கேயிங்கே போட்டால் அபராதம் எல்லாம் உண்டு). மேற்படி கைங்கரியம் பிதாமகருடையதுதான் என்பதைக் கண்டுபிடிக்க ஹவுஸ்வார்ட்டுக்கும் சிரமமிருக்கவில்லை.
விடிந்ததும் விடியாததுமாய் போய் அவனிடம் சத்தம் போட்டான்!அவனோ அவைகள் 'தன்னுடையதேயில்லை.... தான் போடவேயில்லை' என்று சாதித்தான்.
பின்னேரம் முகத்தில் ஆத்திரம் பிரவகிக்க வந்து கதவைத்தட்டினான்.“என்ன...?”

“ஹவுஸ்வார்ட்டிடம் என்னைக் காட்டிக்கொடுத்தது நீதானே......? ஒரு வெளிநாட்டுக்காரனாய் வேண்டாம் ஒரு இஸ்லாமியச்சகோதரனாய் இப்படி நீ செய்யலாமா.......?”

“கொஞ்சம் பொறு..... நீ சொல்றபடிக்கு நான் எதையாவது செய்திருந்தால்..... நீ சொல்வது நியாயம் என்றாகும்...... நான்தான் எதுவுமே செய்யவில்லையே.......!”
“சும்மா புழுகாத....... முந்திப் பொலிஸ{க்கும் போன் பண்ணின ஆளல்லா நீ....!”“உன்னட்ட திட்டு வேண்ட வேண்டியிருக்கிறதும் எந்நேரம் பார்.....! முந்தி நீ எவ்வளவுதான் சத்தம் போட்டபோதும் நான் சகித்துக் கொண்டேன்.... பொலீஸ{க்குப போகவேயில்லை...... இப்பவும் நீ அலமாரியைத்தான் வெளியே போட்டியோ...... ஆட்டுத் தலையைத்தான் போட்டியோ எனக்குக் கவலையில்லை ஹாஜி....!”

என் வார்த்தைகள் எதையுமே நம்பவில்லை என்பதை 'உர்' ரென்ற அவன் உறங்குட்டான் முகம் காட்டியது. “இந்த வீடு நமக்குச் சரிப்பட்டு வராதெண்டு இன்னுமாப்பா உங்களுக்குப்புரியேல்லை.......?” “புரிஞ்சு போச்செண்டுதான் வையுமன்..... இப்ப என்னை என்ன செய்யச்சொல்லுறீர்........?”

“ஆங்ங்........ ஆனந்தி வீட்ல போய்ப் படுக்கச்சொல்றன்.........!”

ஆனந்தி, என் கல்லூரி சகமாணவியருத்தி. என் இலக்கிய சிநேகிதி.
அவ பெயரே இவள் நான் சொல்லித்தெரிந்து கொண்டதுதான்.
பாத்திர அறிமுகம் போக அதற்குமேல் மீதிக்கற்பனைகள், இயக்கம் , தயாரிப்பு எல்லாம் இவளது! எனக்கு ஆத்திரமூட்டவென்று எண்ணும்போதெல்லாம் இவள் ஆனந்தி சஹஸ்ரநாமம் உச்சரிப்பதுண்டு. சமயங்களில் .துருக்கிக்காரனே தேவலை .

எங்களுக்கு வீடு கிடைத்துவிட்டதென்று பார்க்க வந்துவிட்டு “.....பழசுதான் புது வீடென்றில்லை...... கட்டிப் பத்துவருஷமென்டாலும் இருக்கும்...... ஆகப் பெருத்துப்போச்சு............., ஹைசுங் (கணப்புக்கானஎரிபொருள்) காசெல்லே கனக்க வரப்போகுது........., “ “ ஊ-பாணுக்கு(சுரங்கரயில்) இன்னும் கொஞ்சம் கிட்டவெண்டால........... சோக்காயிருக்கும்........ “. என்றெல்லாம் விமர்சனங்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் தவறாது மனைவி துருக்கிக்காரன் பண்ணுகிற நட்டணைகளையும் சொல்லிவைக்க அவர்களும் “இதென்ன எங்கட தேசமே......... விரும்பின இடத்தில வீடுகட்டி குடியிருக்க..... எங்கையும் ஒரு நெகரிவ் பொயின்டும் இருக்கத்தானே செய்யும்” என்று சொல்லி உள்@ர மகிழ்ந்தனர்.
துருக்கி இப்பொழுதும் வாசலிலோ, லி·ப்டில் கண்டாலோ வழியில் எதிர்ப்பட நேர்ந்தாலோ, ஒரு Guten Tag (வந்தனம்) சொல்வதோ, அல்லது ஒரு மைக்கிறோ மீட்டராவது புன்னகைப்பதோ கிடையாது. பார்வையை வேறெங்காவது திருப்புவான். எதிராளியைக் கண்டுவிட்ட முள்ளம்பன்றியை மாதிரிச் சிலிர்த்துக்கொள்வான்.
வீட்டின் கொம்பவுண்டினுள் சிறுவர்களுக்கான ஒரு விளையாட்டிடம் உண்டு. ஒரு மணற்குழியும் , சறுக்குச்சாய்வும் அங்குண்டு. எங்கள் பிள்ளைகள் அங்கே எப்போதாவது விளையாடப் போனால் நாங்கள் யாராவது கண்காணித்தபடி இருக்க வேணும் அல்லது அடுத்த பத்தாவது நிமிஷத்துள் ஹாஸன், தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக் கொட்டிவிட்டானென்றோ அல்லது பாக்கீர் (அவன் பிள்ளைகள்தான்) நிக்கருக்குள் தண்ணீரை வார்த்துவிட்டானென்றோ திரும்பி வருவார்கள் .சின்னக்குஞ்சுகளென்றாலும் பெரியவர்களையும் மரியாதை பண்ணத்தெரிந்தே வைத்திருந்தார்கள். வழியிலோ , படியிலோ கண்டால் முந்தையரை மறந்துவிடாது நினைவுறுத்தி முகத்தை அஷ்டகோணலாக்கி வலிச்சம் காட்டவோ, முழு நாக்கையும் வெளியே நீட்டி பழிப்புக்காட்டவோ தவறுவதில்லை.மனைவி சொல்லுவாள: “ விரியனின் குட்டி நாகம்....... அதன் குட்டி நட்டுவக்காலி........... ஆரேனும் எங்கட தமிழ்ப்பிள்ளையளாய் இருந்திருக்கோணும் அதிலேயே துவைச்சுக் காயப்போட்டிருப்பன் ..............! “.
“பாவம் அவர்கள்......... குழந்தைகள்! பெரியவர்களே பண்பாட்டு விழுமியங்களை அறியாதவர்களாக இருக்கும்போது குழந்தைகள்தான் என்ன செய்யும்.......?”
“ஐயோ......ஐயோ.........இந்த மனுஷனை வேற வீடு பார்க்கச்சொன்னால்....... விளங்காத மாதிரி என்னென்னவோ எல்லாம் புசத்துதே..........! கோத்திரத்தில ஆருக்கும் இந்தமாதிரி மேற்படியான் பிசகியிருந்திருக்கோ என்று ஆராயாமல் அப்பார் அவசரப்பட்டுக் காலைவிட்டிட்டாரே.......... ஐயோ ஐயோ ஐயோ!” அடித்துக்கொண்டு புலம்புவாள்.
யானையிடமிருந்தும் தப்பித்துவிடலாம்........ நுளம்பிடம் முடியுமோ....?. இவ்வாறு பரிதவித்துக் கொண்டிருக்குங்காலம்............................ஒரு ஞாயிறு காலை தூக்கமும் விழிப்பும் கலந்த மோனநிலையில் பெட் கா.·.பிக்கான காதலுடன், கட்டிலிலிருந்தபடியே குலாம் அலிகானின் கஜல் இசையில் கிறங்கியிருக்கிறேன்..........................

தற்செயலாக முன்னராக எழுந்துவிட்ட கிரிதரனுக்கும் ஆர்த்திக்கும் யார் முதலில் 'கேம் போயை' விளையாடுவது என்பதில் பெரும் போர் மூண்டது. இருவரும் கட்டிலில் கட்டிப்பிடித்துப் புரண்டு இழுபறிப்படுகையில் ஆர்த்தி சட்டெனத் தன் பிடியைச் சற்றே தளர்த்தவும் கிரிதரன் நெற்றியில் இடித்துக்கொள்ள நேர்ந்தது. இதனால் கடுஞ்சினமுற்ற தாய் ஓடிவந்து ஆர்த்தியின் முதுகில் -பொளாச்- என்று சாத்தினாள். சாத்தலில் துடித்துப்போனவள் விசித்துக் கொண்டு போய் தன் அறைக்குள் ஸோலோவாக 'வயோலா' வாசிக்க ஆரம்பித்தாள். கஜலில் துய்க்க முடியாதபடிக்கு ஆர்த்தியின் நீண்ட ஆலாபனை எரிச்சலூட்டிக்கொண்டிருக்கவும்............. பஸ்ஸர் வேறு 'கிர் கிர்' என்கிறது.
'ஆர்த்திக்கண்ணா போய் கதவைத்திறவடா- என்றேன.;
“ங்ங்ங்ங்ங்........ நான் இன்னும் அழுது முடிக்கேல்ல டாடி......!” என்று விட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள.
இன்று ஞாயிறு கடிதங்கூட வராதே..... யாரயிருக்கும்.......? யோசனையுடன் எழுந்து சாரத்தை இறுக்கிக் கட்டிவிட்டு , ஒரு ஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு போய் கதவைத்திறந்தால்..............நான் என்றுமே காணாதபடி 'டிப் டொப்' கோட்சூட் கெட்டப்பில் துருக்கியும் , ஏற்றாற்போல் மெட்டாக உடுத்திய மனைவியும், பிள்ளைகளுமாக ஸ்ரீசோமாஸ்கந்தக்கோலத்தில் எங்கேயோ தொலைப்பயணம் புறப்பட்டவர்கள்போல் காட்சிதந்தனர்! எதுக்கிப்ப இங்க வாறான் கசுமாலம்........... கைமாத்துக் கேட்கப்போறானோ? நான் ஒன்றுமே புரியாதபடிக்கு நெற்றியைச் சுருக்கவும்.....................

"நாங்கள் ஊருக்குப் புறப்படுகிறோம்...... அதுதான் குட் பை சொல்ல வர்றோம்........"என்றபடி கையை நீட்டினான். நீண்ட அவன் கைகளைப் பற்றிக் குலுக்கியபடியே கேட்டேன்:
“என்ன Urlaub (விடுமுறையா)பா..... துருக்கிக்கா......?” என்றேன்.
“keinen Urlaub aber fuer immer!"( விடுமுறைக்கல்ல..... நிரந்தரமாய்......! ) முகம் ஓடிக்கறுக்கிறது.

“ Oh was(என்ன)!!!!-"

Ja....... Kollege எங்கள் அகதி விண்ணப்பம் மூன்றாவது தடவையும் ஜெர்மன் இறுதி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டு விட்டது.............................இனி அப்பீல் எடுக்கமுடியாது.......... கிளம்புவதைத்தவிர வேறு மார்க்கமேயில்லை.......”. அவன் குரல் உடைந்து கரகரத்தது.
என் கண்முன்னேயே பாரிய பனிமலை ஒன்று தகர்ந்து தண்ணீராய் ஓடும் அவலம். இதயம் இனம்புரியாத வலியில் துவண்டு புரண்டது. அவன் மனைவி “உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால்..........எங்களிடமுள்ள சில பொருட்களை உங்களுக்குத் தரலாமென்று விரும்புகிறோம்......”என்றபடி ஒரு பிளாஸ்டிக்பை ஒன்றை மனைவியிடம் நீட்டினாள். தயங்கி அவள் என்னைப்பார்க்க
"பரவாயில்லை வாங்கும்" என்றுவிட்டு அந்தவாரம் முழுவதையும் ஓட்டுவதற்காக இருந்த ஐம்பது மார்க்கை அவனுக்குக் கொடுக்கலாமா வாங்குவானா என்று சிந்திக்கவும்

“Danke.” (நன்றி)
என்றபடி பையைவாங்கிக்கொண்டு உள்ளே போனவள் வேறொரு நல்லகாரியம் செய்தாள்.
கிரிதரனுக்கு பாடசாலை ஆரம்பிக்கும்போது பாவிப்பதற்கு வாங்கிய புதியசெற் உடுப்பொன்றை இன்னொரு பிளா ஸ்டிக்பையில் வைத்துக் கொண்டுவந்து ஹாஸனிடமும் , ·பிறிட்ஜிலிருந்தவொரு சொக்கலேட்பாரை பாக்கீரிடமும் தந்தாள்.

மீண்டும்"குட் பை" சொல்லியபடி கைலாகு தந்தான், துருக்கியர் பாணியில் என்னைக் கட்டிப்பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டான். எல்லோர் கண்களுமே தளும்பி நின்றன.

பகையேயாயினும் பிரிவு இன்னாததுதான்!

அவர்களை பிரிந்து போவதை புள்ளியாகி கண்மறையும் வரையில் எம்வதியும் அறை ஜன்னலால் எட்டிப்பார்த்துக் கொண்டு நின்றோம்.
பின் மனைவி அவர்கள் தந்துவிட்டுப்போன பையை ஆராய்ந்தாள்.
அடியில் கனதியாக இருப்பது உருளைக்கிழங்கும் வெங்காயமுமென்று ஊகத்திலேயே புரிந்தது. மேலே பிரித்தும் பிரியாமலும் சில மா , சீனிப்பக்கெட்டுக்கள், கொஞ்சம் வாட ஆரம்பித்துவிட்ட காய்கறிகள், சூரியகாந்தி சமையல் எண்ணைய்ப் போத்தல்களின் நடுவே வெள்ளியென பளபளத்து நிறுதிட்டமாய் நீட்டிக்கொண்டு நிற்கிறது அவனது கத்தி!

- அம்மா - ( Paris ) ஆனி. 1997


Montag, November 22, 2004

ஆமோ........ அ.·.தோ சங்கதி!

பொ.கருணாகரமூர்த்தி

டைநடுச் சங்க கவிகளிடையே காமம் அதிகம் கொண்டு விளங்கியவராகக் கருதப்படும் கவிஞர் மொத்தினார்க்குமினியர் ஆவர். இவர் பன்னிய ' புலுணிவிடுதூதெனும் ' காதலருங்காப்பியத்தின் முதல் அத்தியாயாத்தில் வரும் 31வது பனுவல் தற்கால வழக்கில் அச்சிட முடியாத பல வார்த்தைகளைக் கொண்டிருப்பதாகப் பழந்தமிழ் வல்லாளர் கூறுவர்.அல் (இரவு) + கொல் => அல்கொல் என்பதே மருவி அல்குல்லாகியது என்பதை ஆய்ந்து நிறுவியவரும் இவரேயாவர்.
அவர் தம் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான சம்பவமொன்றுண்டு.
கற்றவருக்கான பொதுவிதியாக இப்புலவருக்கும் வருமானமோ மிகக்குறைவு.
அவருக்கு ஊருக்கு வெளியில் போய் விவசாயமோ, வாணிகமோ உடலாலான ஊழியமோ புரிந்து பொருளீட்டிவரும் வல்லபங்களும் கிடையாது. சும்மா வீட்டையும் மனைவியையுமே வளைய வந்துகொண்டிருப்பார்.
ஒரு நாள் புலவர் மனைவிதான் அயலவர் வீடொன்றில் போய் கொஞ்சப் பணம் கடன் வாங்கிக்கொண்டு போய் கடற்கரையில் மீன் வாங்கிவந்து அதை அரிந்து வைத்துவிட்டு அதைச் சமைப்பதற்காக புதுமிளகாயை எடுத்து வந்து வீட்டின் தலை வாசலை ஒட்டியுள்ள திண்ணையில் அமைந்திருந்த அம்மிக்கட்டில் கூட்டு அரைக்கலானார்.
பொழுது போகாத புலவர் மனைவியின் அருகில் போய் காற்பலகை ஒன்றைப்போட்டு அமர்ந்து கொண்டு தன் கவித்துவத்தைப் பற்றியும், தன் கவிதைக்குப் பொருள் சொல்லமுடியாமல் திணறித்தோற்றுப்போன புலவர்களைப் பற்றியும், தான் எந்தெந்த மன்னர்களி;ன் சபைகளிலெல்லாம் போய் கவிதைகள் பாடிப் பரிசுகள் வென்று வந்தேனென்றும் பழங்கதைகளைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்க வேறு வகையில்லாத மனைவியோ புலவர்பிரான் கூறியவற்றுக்கு " ஊம் " கொட்டிக்கொண்டிருந்தார். திடீரெனப் புலவருக்குத் நீர்த்துளி ஒன்று தெறித்துத்தன் கண்ணில் விழுந்தாற் போலிருக்கவேஅவர் அலறலானார்:
"ஐயைய்ய............ ஐயைய்ய.......... அடியடியயடியடியடியடி......... பத்தி எரியுதடி பத்தி எரியுதடி என்னிரு கண்களுமே பத்தி எரியுதடி"
" என்னாச்சு உங்களுக்கு......... ஐயோ என்னாச்சு உங்களுக்கு? "மனைவியும் பதறலானார்.
"அனலாய் அழத்துதடி அப்பாலே தெரியாமல்பக்கத்தில் நானிருக்கும் சித்தமேயற்று நீயும் மொத்தினார்க்கு மினியன் மேலே காரப்புதுமிளகாய் சேர்த்தரைத்த செந்நீரை எத்திவிட்ட பாதகத்தி செப்பு இனி இயல்பதாக எப்படி நான் கவிதை செய்வேன்? எப்படி நான் கவிதை செய்வேன்?இன்றெனக்கு அவையிலே பட்டளித்து மன்னன் தரும் பொற்கிளியும் புண்ணாச்சு போ! "
என்று புலம்பித் துடித்தார்.
மனைவியோ " ஐயகோ ஏனிந்த அபாண்டம் சொன்னீர்............. நானெங்கே சுவாமி உங்கள் மேல் நீர் தெளித்தேன்? அது கோழியின் திருவிளையாடல்........... இங்கே எனக்கும் இரண்டொரு துளிகள் பட்டிருக்கு" என்று சொல்லி " கீழே பாருங்கள் " என்று கையைக் காட்டினார்.
வீட்டின் தாழ்வாரத்திலிருந்து வழிந்து ஒரு பழைய மட்பாண்டத்தில் தேங்கியிருந்த மழைநீரை அங்கே சில கோழிகள் குடிப்பதுவும் தலையைச்சிலுப்பி அலகால் பக்கவாட்டில் தெறிப்பதுவுமாக இருந்தன. அப்போது மேலும் சில துளிகள் அவர் மேல் தெறித்தன.
"ஆமோ........... அ·தோ சங்கதி! நானேதோ நீர்தான் மிளகாய்கூட்டுத்தண்ணீர் தொட்டகையைத்தான் என்மேல் உதறினீரோ என்று எண்ணிவிட்டேன்............. அது போகட்டும்............ நீர் விரைவாய் சமையும் " என்றார் புலவர்.




இடை

பொ.கருணாகரமூர்த்தி

அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பதினெட்டு வகைகள். நாம் தேர்ந்தபடி நொடியில் அரைத்து கமகமக்கப்போட்டுத் தருவார்கள். வீதியில் ஐந்று மீட்டருக்கு மிதந்துவரும் கோப்பியின் மணம் ஷேர்ட்டில் பிடித்து ஆளை சும்மா உள்ளே இழுக்கும். அது இருக்கும் வழியாக நானும் வரவேண்டியிருக்கவே மேலே கடந்து போகமுடியாதுள்ளே இழுபட நேர்ந்தது.கிறில் பண்ணிய 'றிப்'பும், தொட்டுக்கொள்ளக் காரமான பாபெகியூ ஸாசும், கோப்பியும் வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
நாலு இளம்பெண்கள் ஏதோ இடை அழகைக்காட்டுவதற்கான ஒருபோட்டியில் பங்குபற்றிவிட்டு நேரே வருபவர்கள் போலொரு கோலத்தில் பேரிடை முழுவதும் தெரிய உடுத்திக்கொண்டு நடக்கையில் முக்கோண ஜட்டிகள் தில்லானா ஆட அட்டகாசமாக உள்ளே நுழைந்தார்கள். கோடை காலம் இளசுகளின் உடைகள் கொஞ்சம் மனதை அலைக்கழிப்பதாகத்தான் இருக்கும். ஆனாலும் இது அநியாயாத்துக்கும் அதிகம். அன்று நான்தான் அதிகம் வதைபடவேணுமென்று நியதியாக்கும், அல்லது அத்தனை காலியிருக்கைகள் இருக்க அவர்கள் ஏன் அமர்வதற்கு என் ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையைத்தான் தேரவேண்டும்?
அந்த நால்வரிலும் மேசையின் ஓரப்பக்கமாக என் பார்வை முழுதாய்ப்படும்படியான இடத்தில் இருந்தவள் அச்சில் வார்த்தெடுத்துப் பொலிஷ் செய்துவைத்தவொரு பதுமையைப்போல இருந்தாள். எந்தவொரு ஜெர்மன் அழகுப்பாரம்பரியத்தின் நீட்சியோ இல்லை ஏதும் இடைக்கலப்பால் விளைந்த அதிசயமோ நோக்குவோரை மூர்ச்சையாக்கவல்லதொரு எழிலைக் கொண்டிருந்தாள்.170செ.மீ உயர தேகத்தில் பெயருக்காவது ஒரு மறுவோ , பருவோ , புள்ளியோ இருக்கவேணுமே? அரையில் நேவி நீலநிறத்தில் ஒன்றரை சாணே இருக்கக்கூடிய ஸ்கேட்டும் , மேலே தலையணை உறை மாதிரி கையோ கழுத்தோ இல்லாத ஒரு மெல்லிய மீள் தகவுள்ள மார்புக்கச்சையும் (ஸ்றெட்ச் டொப்பிற்கு எப்படி நம்தமிழ்!) பற்றியிருக்க மீதிவனப்பு முழுவதும் காற்றாடிக் கொண்டிருக்கிறது. சின்ன வெள்ளிமணி மாட்டியிருந்த தொப்புளில் ஆரம்பித்து மிகமிக ஆழங்களில் பரவிய கற்பனைகளில் என் மனது சுகித்துத்தியங்க அவர்கள் ஓடர் பண்ணிய சாப்பாடுகள் வந்தன. அவர்கள் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.
நானுந்தான் பார்க்கிறேன் அவள் சாப்பிடக் குனிகையிலாவது வயிற்றில் சின்ன மடிப்புக்கள் விழவேண்டுமே..........ஊகூம்!குற்றவாளிகளுடன் விவாதிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தம் குற்றங்களின் முழுப்பரிமாணங்களும்; தெரிந்தேயிருக்கும்.அவளைப் பார்க்கப் பார்க்கப் பார்க்க என் மனது முழுக்களவாகி வன்மமாக வளர்ந்து நான் முழுத்திருடனாகிவிட்டிருந்தேன்.
ஒரு யௌவனப்பெண் பார்வையில் பட்டவுடன் ஒரு ஆடவனின் மனதில் தூண்டப்படும் மின்னேற்றங்கள் சமிக்கைகளாகி அவை வேண்டிய ஹோமோன்களைச் சுரக்கவைத்து அவனது இதயத்துடிப்பை அதிகரிக்கப்பண்ணும் வரையிலான தாக்கங்கள் பற்றியும் அவை கடத்தப்படும் வழி பற்றியும் இடையே சிறிது சிந்திக்கிறேன். மாற்றங்களின் இரசாயனம் புரிகிறது. ஆனால் ஆதியிலிருந்தே ஆண்களைப் பெண்களிடம் பிணைத்து வைத்திருக்கும் அவ்வதிசயச் சமிக்கைகளை இந்தப் பெண்களால் மாத்திரமே உற்பத்தியாக்க முடிவதுதான் விந்தையாக இருக்கிறது. ஆனானப்பட்ட அறிவியல் மேதைகளுக்கே பிடிபடாத விஷயந்தானெனினும் அவர்கள் நிரையில் ஞானும் அதுபற்றிச் சற்றே சிந்தித்து வைத்தேன்.
என்னுள் இத்தனை ஹோமோன்களையும் குதித்தோடச்செய்தொரு தீயை வளர்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தவள்போல் கடித்த பேகரைப் தட்டில் வைத்துவிட்டு கைப்பையுள்ளிருந்து பேனாவைப் போலிருந்த எதையோ எடுத்தாள். அதன் முனையைத் திருகித்திறந்தாள். என்னைக் காந்திக்கொண்டிருந்த பட்டு இடுப்பில்; நிதானமாகக் குத்தி மருந்தை உள்ளே செலுத்தினாள். Diabates Melytus type -1` வியாதியின் குணப்படுத்தமுடியாத கட்டத்துக்கு வந்துவிட்டவர்களுக்கே தாமேபோட்டுக் கொள்ளும் இவ்வகை இன்சுலின் ஊசியைக் கொடுத்திருப்பார்கள்.இப்பொழுது என்மேல் ஒரு நயாகராவே கொட்டியது, என்னுள் ஓங்கிய தீயின் நீண்ட கங்குகள் ஒடுங்கிஇல்லாமற்போயின.
இவைகள் எதையுமே அறியாமல் தன் பேகரைச் சாப்பிடத்தொடங்கினாள் அவள்.
30.08.2004 பெர்லின்.

ஆத்தி

பொ.கருணாகரமூர்த்தி

அந்த
மரத்தை ஆத்தி என்று அவ்வூரில் சொன்னார்கள். எமக்கு வவுனிக்குள நீர்ப்பாசன நிலக்குடியேற்றத்திட்டத்தின் மூலம் யோகபுரத்தில் கிடைத்த காணியில் அரசே கட்டித்தந்த சிறிய வீட்டு முன்றலில் நின்றது. நெடிதுயர்ந்த பெரிய விருட்ஷமென்று சொல்லமுடியாது. தெருவிலிருந்து நோக்கையில் வீட்டை மறைத்துக்கொண்டு நிற்கப் போதுமானது. சின்னத்தம்பிப்புலவர் வீட்டுவாசலில் நின்றிருந்த

பொன்பூச்சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபைவீசு புகழ் நல்லுர்ரான் வில்லவரா யன்கனகவாசலிடைக் கொன்றை மரம்.
மாதிரிக்கு யாருக்கும் எமது வீட்டை அடையாளங்காட்டிக் குறிப்புச்சொல்லி விடுவதற்கும் உதவியாய் நின்றது அம்மரம்.


அனேகமாக காடுகளை வெட்டும்போது ஒரு காணியின் வீதிப்பக்க எல்ல¨யிலோ , இரண்டு காணிகளுக்கிடையில் அமையக்கூடிய எல்லை நிரையிலோ வரும் மரங்களைத் தறிக்காது விட்டுவைப்பது வழக்கம்.
அந்தக் காணி காடாக இருந்தபோது அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிய நல்ல மனிதர்;களுக்கு என்னதான் தோன்றியதோ வீட்டுக்குத் தெற்காக நின்ற அந்த மரத்தையும் வளவின் வடகிழக்கு மூலையில் ஒரு கொண்டல் மரத்தையும் விட்டு வைத்துவிட்டார்கள்.
கொண்டலின் கிளை பூராவும் தங்கமஞ்சளாகப் பூத்துத்தொங்குகையில் ஒரு அழகுதான். 'கொண்டல் வண்ணன்' என்று சிவனை அழைத்ததுவும் ரம்யமானதொரு கற்பனைதான். நன்கு முற்றிய கொண்டல் பழத்தை உடைத்தால் உள்ளே சொக்கிளேற்றுகள் போலும் சிறிய சிறிய வில்லைகள் அடுக்கில் காணப்படும். அதன் தித்திப்போ விபரிக்கமுடியாது. ஆனாலும் சாப்பிடமுடியாது. அன்னமுன்னா பழம் மாதிரித் திகட்டி வயிற்றைப்புரட்டும் ஒரு வகை இனிப்பு.
இந்த ஆத்திமரத்தின் பூ மெல்லிய றோசாவை விரும்பிய கத்தரி நிறத்திலிருக்கும், பெரிய அழகென்று கொண்டாடமுடியாது. அவரைக்காயைப்போல் மெலிதாக புளியங்காய்போல் வளைந்து நுனியில் விரியும் சிறிய ஒலிபெருக்கியைக்கொண்டு தலைகீழாகத் தொங்கும். அவரைக்காயைப் போலவே சற்று வைரமாக இருக்கும் அதன் காயைப் பிடுங்கி வெற்றிலைபோல் வாயிலிட்டுச் சப்பிக் குதப்பிவிட்டுத் துப்புவோம். ஆத்தியின் இலையை ஆடுமாடுகளும் விரும்பித் தின்னுகின்றன, இந்தமரம் வேறு தொன் கணக்கில் காய்த்துத்தள்ளுகிறதே, இதன் காயிலிருந்து முழுமனிதகுலத்துக்கும் பயன்படவல்லமாதிரி ஒரு உணவை ஏன் தயாரிக்கமுடியாதென்று அப்போதே எனக்குள்ளிருந்த விஞ்ஞானிக்கு சிந்தனைகள் முகைத்ததுண்டு.
ஆத்தி மரத்தின் புறப்பட்டை தடிமனான தக்கையைக் கொண்டிருக்கும். அத்துடன் அக்கோறைமரம் வாகாக திட்டுகளையும் மொக்குகளையும் தன்னுடலெங்கும் கொண்டிருந்ததால் பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்த நான் அதில் அடிக்கடி ஏறி இறங்குவேன். அம்மரத்தின் கிளைவேர்கள் ஆலமரத்தைப்போல் தரைக்கு வெளியாகவே ஆரம்பித்து நாலு திசையிலும் நீண்டுசென்று தரையுள் புகுந்தன.
அன்றும் மாலையில் அவ்வேர்களினிடுக்கில் சிறு ஓடக் கவிவைப்போலும் உட்கவிந்திருக்கும் சார்மனையில் ஒரு சாக்கை விரித்துப் படுத்துக்கொண்டு வானத்தைப்பார்க்கிறேன். உலகத்திலுள்ள நிறங்களையெல்லாம் கரைத்து யாரோ அங்கே ஊற்றிவிட்டதைப் போலிருக்கிறது.
அதன் கீழாக சில வெண்முகில்கள் ஒன்றையன்று துரத்தியபடி சென்றுகொண்டிருக்கின்றன. லேசாக வீசிக்கொண்டிருக்கும் காற்று குளிரைக் கொண்டிருக்கிறது. வவுனிக்குளத்திலிருந்தோ பாலியாற்றிலிருந்தோ கொக்குகளும், நாரைகளும், நீர்க்காகங்களும், கூழைக்கடாக்களும் மன்னார்க் கடலை நோக்கிப் பறந்துகொண்டிருக்கின்றன.
" மரத்துக்க பாம்பைப்பூச்சியிருந்தாலும் எழும்பி வீட்டுக்குள்ள வா." என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.
எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே " இந்த ஆத்தி பாருங்கோ கோறைமரம்........... பாம்பைப் பூச்சியைக் குடிவரும், தறித்துவிடுங்கோ " என்று தவறாது அறிவுரை சொன்னார்கள்.அம்மரம் முற்றத்தில் ஏராளமாய் சருகுகளையும் உலர்ந்த காய்களையும் கொட்டிப் பெருக்குவதற்கு சிரமம் பண்ணியதேயல்லாமல் அதன் ஆயுளில் எமக்குப் வேறொரு நட்டணையும் பண்ணி யாமறியோம்.
நான் ஊருக்குப் போயிருந்த ஒரு நாளிரவு அம்மா வைத்துக்கொண்டு படுத்திருந்த தலையணைக்குக் கீழே ஏதோவொன்று நழுக்கு பிழுக்கென்று நழுவிச்சாம். எழுந்து விளக்கை ஏற்றிப்பார்த்தால் கருநாகமொன்று 'எஸ்' ஸாக வளைந்து படுத்திருக்குதாம்.அம்மா தும்புக்கட்டையை எடுத்து அடிக்க ஓங்கவும் அது தன் ஓட்டமட்டிக் நிக்கோனை எடுத்துப் படமெடுக்குதாம்.
அம்மாவின் மனத்திலூறிய ஏராளம் ஜீவோபகாரத்துடன் உள்ள மெயின், உப , கடவுளர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தோன்றி பாம்பை அடிப்பதினின்றும் தடுத்தாட்கொண்டுவிட்டனர். அந்தப் பயங்கரமான அனுபவத்தின் பின்னர் ஒரு நாள் அம்மாவும் "ஆத்தியைத் தறிக்கத்தான் வேணும்" என்றார்.
அப்பாவுக்கு லோகாயத விஷயங்களில் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் எதுவும் கிடையாது. அவர் பெரும்பான்மையரின் கருத்தை எதிர்த்து மல்லுக்கட்டவெல்லாம் போகமாட்டார்.ஆத்தியைத் தறிப்பது என்று முடிவெடுத்தான பின்னரும் யாரும் அதை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டாதிருக்கவே நான் ஒரு நாள் எங்கள் கோடா¢யை எடுத்து வேருள்ள பக்கமாக போட்டுப்பார்த்தேன். அக்கோடரியும் கள்ளி, மொந்தன், பெருங்கதலி இனங்களைத் தறிக்க மட்டுமே தயாரிக்கப்பட்டதாயிருக்கவேணும் , அதன் வெட்டு வாதாரை சுருண்டு திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்த்தது. மரம் தறித்தல் அப்போதைய பதின்மூன்று வயதுப் பையனுக்கான வேலையாகவும் படவில்லை, அப்போதைக்கு விட்டுவிட்டேன்.
அது 1963ம் ஆண்டு, ஒரு சித்திரை மாதம். காலபோக அறுவடைக்குப் பின்னால் யோகபுரத்தில் எல்லோர் வீடுகளுள்ளும் நெல்லுச்சாக்குகள் நிறைந்திருந்த நேரம். சித்திரை சிறுமாரி என்றே சொல்வார்கள். இது மாறாக ஒருவாரமாகத் தொடர்ந்து வன்னிப் பிரதேசமெங்கும் அடைமழையாகப் பெய்துகொண்டிருந்தது.
அப்போது அது எட்டுப் பத்து வருஷங்களுக்குள்ளான குடியேற்றத்திட்டந்தான்.இன்று போலவே அன்றும் எங்கும் தார் போடப்படாத பாதைகள் , மழை பெய்தால் டிராக்டரைத் தவிர வேறெந்த வாகனம்தானும் அப்பாதைகளில் செல்லமுடியாது. குறைந்த பட்ஷம் ஒரு டிராக்டர் வைத்துக்கொள்ள வசதி உள்ளவர்கள் மட்டும் வெளியில் வந்து நடமாடித்திரிய ஏனையவர்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு போத்தல் மண்ணெய் வாங்குவதானாற்கூட மூன்று மைல் தொலைவிலுள்ள மல்லாவிக்கோ அன்றேல் ஏழு மைல் தொலைவிலுள்ள வவுனிக்குளக்கட்டுக்குப் போனாலே சாத்தியம். கஞ்சியோ பொங்கலோ ஆக்கிச் சாப்பிட்டுவிட்டு பொழுது சாயவும் ஏதோ ஊரடங்கு அமுலில் இருப்பதைப்போல மக்கள் படுத்துக்கொண்டார்கள்.
சூரியன் தொலைவில் காட்டுக்குள் பதுங்கிவிடவும் வானத்தின் வர்ணங்கள் மெல்ல மெல்ல விடைபெறத்தொடங்கின. அது வானிலை அவதானிப்புகளோ , அவற்றை மக்களிடம் எடுத்துச்சென்று எச்சரிக்கவல்ல ஊடகங்களோ வளர்ச்சி அடையாதிருந்த நேரம். அப்பாவிடம் ஒரு சுருட்டுக்குப் புகையிலைவாங்க வந்த அயலிலுள்ள சின்னத்தம்பிக்கிழவன் நெற்றியைச்; சுருக்கிக்கொண்டு வானத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: " திக்குகள் நல்லாய்க் காணன்.................ம்ம்ம் , கெட்ட ஊதற்காற்றொன்று தெல்லுமாறிமாறி வீசுதுகாண்.............. புயலொன்று இறங்கலாங்காண்."
அக்குடியேற்றக் கிராமத்தில் யாருக்கும் காய்ச்சல் , குணங்கல் என்று வந்தால் பார்வை பார்த்து, " விடுவிடு சங்கரி........... இறுஇறு சங்கரி........... பொறுபொறு சங்கரி.......... கடுகடு சங்கரி............ நறுநறு சங்கரி "என்று விபூதி மந்திரிச்சுக்கொடுப்பது கிழவன்தான்.
கிழவன் வீட்டுக்குப் போய் ஒரு கால் மணியாகியிராது.
நாலைந்து மழைத்துளிகள் என் முகத்தில் குளிர்ந்தன.
" அட மழை வருகுது உள்ள வா .. .. .." என்று அம்மா மீண்டும் கூவினார். தென் மேற்கில் மின்னித்தெரிய மழை மெல்ல மெல்ல இறங்கத்தொடங்கியது. சற்றைக்கெல்லாம் பலமான காற்றும் வீசத்தொடங்கியது. மழை மெல்ல வலுக்கத் தொடங்கியதும் காற்றும் ஆர்ப்பரித்துப் பலமாக வீசத்தொடங்கியது. கொலனி குடியேற்ற வாசிகளுக்கு ஐம்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் இலவசமாக கட்டித்தந்த இரண்டு அறைகளும் முன்பின்னாக ஆளோடியாக ஒடுங்கிய இரண்டு விறாந்தைகளையுங்கொண்ட சிறுவீடுகள் அவை. அனேகமானோர் வீட்டின் முன்னுக்கும் பின்னுக்கும் அமைந்த விறாந்தைகளில் சாய்வு பத்திகள் இறக்கியிருந்தார்கள். உள் அறைகளில் ஒன்றுக்கு மட்டுமே நிலத்திற்கு சீமெந்து இடப்பட்டுள்ளதால் அனேகமானோருக்கு அதுவே படுக்கை அறை. காற்று வேகம்பிடிக்க ஜன்னல்கள் படபடவென அடிக்கத்தொடங்கின. திறாங்குகள் உடைந்துபோயிருந்த ஜன்னல்களை அவை திறந்து திறந்து அடிக்காதபடிக்கு இழைக்கயிற்றால் வரிந்து கட்டினோம்.முதலில் காற்று கிழக்கு மேற்காக வீசியது. எமது வீட்டின் கிழக்குப் பக்கமாக ஆடுகள் கட்டவும் விறகு சேமித்து வைத்திருக்கவும் போட்டிருந்த ஒத்தாப்பின் கூரை கப்புகளுடன் பிடுங்குப்பட்டு வீசப்பட அங்கே கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து அலறிக்கொண்டு மேற்கு விறாந்தைக்கு வந்து சேர்ந்தன. அம்மா விறாந்தையிலிருந்த மேசை ஒன்றைச் சரித்துப் போட்டு எரிப்பதற்காக வைத்திருந்த இரண்டு புறவெட்டுப் பலகைகளையும் மேசையுடன் சேர்த்து ஒரு மாதிரி அண்டைகட்டி ஆடுகளை அதற்குள் நிற்பதற்கு வசதி பண்ணிவிட்டார்.ஒரு கணம் காற்று வேகம் குறைவது போலிருந்தது. அடுத்து பத்து நிமிஷத்தில் நான் சும்மா என்பதுபோல் காற்று மீண்டும் ஆர்முடுகித்தன் திசையையும் மாற்றி இப்போது தென்மேற்கிலிருந்து அசுரத்தனமாக வீசியது. அச் சிறுவீடுகள் தனியார் ஒப்பந்தக்காரர்களால் பாலியாற்றுக் குறுமணல் நிறைவீதத்தில் கலந்து அரிந்த கொங்கிறீட் கற்களால் கட்டப்பட்டவை.அணை ஒன்றைத் திறந்துவிட்டதைப்போல வானம் பிரிந்து சாய்கோணத்தில் சாந்து பூசப்படாத அச்சுவர்களில் கொட்டவும் கேட்பானேன், மழைநீர் சுவரூடாக தங்குதடையின்றி நுழைந்து வீட்டுக்குள் பெருகியது.
போதிய கோணிசாக்குகள் இல்லாததால் கடந்தபோக அறுவடையின் நெல்லு ஐம்பது புசல் வரையில் சீமெந்துத்தரை அறையில் தரையில் கொட்டப்பட்டிருந்தது. சுவர் ஊறி உள்ளே வந்த நீரால் நெல்லு நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. அம்மா துக்கம் தாளாது அழவேதொடங்கிவிட்டார்.
அதற்குள் முன் விட்டு மணி ஆறு பிள்ளைகளுடன் என்னதான் செய்தாளோ அவள் புருஷனும் யாழ்ப்பாணம் போய்விட்டார், பக்கத்து வீட்டு நல்லையர் குடும்பம் என்ன செய்துதுகளோ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்தார். இரண்டு வீடுகளும் ஒரு நூற்றைம்பது மீட்டர் தள்ளியே இருந்தன. காற்று வீசிய வேகத்தில் வெளியே கால் வைத்தால் உருட்டிச் செல்லப்பட்டுவிடும் அபாயம். அவர்களைப் போய் பார்க்கவும் முடியவில்லை.அதற்குள் அப்பாவும் பூநகரிக்கோ முறிகண்டிக்கோ கரி சுடப்போயிருந்தார்.மன்னார்க்கடலிலிருந்து பிரளயக்கூவலுடன் வீசிய சூறாவளியில் ஆத்தி மரம் தலையைச்சுற்றி அருள் வந்ததுபோல் ஆடியது. அதன் சுழற்சிவேகத்தில் நுனிமரம் சுழன்று சுழன்று தரையை அடித்தது. சற்றைக்குள் ஆத்தி வேருடன் பிடுங்கப்பட்டு காற்றிலே ஒரு துரும்பைப்போலும் பறப்பதைப் பார்ப்போம் என்றிருந்தது. மரம் வீட்டில் வேறு மோதித்தொலைத்தால் என்ன விபரீதம் நடக்குமோவென்று பயமாகவுமிருந்தது.
அத்தனை அமளிதுமளிக்குள்ளும் அம்மா குசினிக்குள் புகுந்து சோற்றுப்பானையையும் , கறிச்சட்டிகளையும் மற்ற அறைக்குள் தூக்கிவந்து காரமான ஆரதக்கறிகள், தயிருடன் கொஞ்சம் சோறு குழைத்து எனக்கு கையில் தந்தாரென்பது ஞாபகம். எல்லோரது அம்மாக்களைப்போலவும் எனது அம்மாவும் ஆரதக்கறிவகைகள் சமைப்பதில் மிகவும் கெட்டிக்காரி. சாப்பாடான பின் சூடாக தேனீர் குடித்தால் இன்னும் தெம்பாக இருக்கும்போலிருந்தது. அடுப்புக்கால்கள் உட்பட குசினி நனைந்து தெப்பலாயிருந்தது.
நான் நனையாத நெல்லை அறையின் மற்றப்பக்கத்திற்கு மண்வெட்டியால் வாரிவிட்டு அதன்மேல் பாயைப்போட்டு படுக்க முயற்சித்தேன்.
அம்மா டிரங்குப்பெட்டியைத் திறந்து தோய்த்து உலர்ந்த தனது நூல்சேலைகள் இரண்டை எடுத்துத் தந்து " நல்லாய் போர்........." என்றார்.
காற்று மீண்டுமொருமுறை தன் திசையை மாற்றவும் தெற்கு விறாந்தையின் ஓடுகள் எடுத்து வீசப்பட்டுத் தரையில் விழுந்து படபடவென நொருங்கும் சப்தம் கேட்டது.
ஜலப்பிரளயம் வந்துவிட்டதாக எண்ணிய அம்மா
"காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியி னோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க........."
என்று கந்தசஷ்டிகவசத்தைப் பாடலானார்.
வடக்கின் குடியேற்றக் கிராமங்களிலெல்லாம் மணிக்கூடுகள் அவ்வளவுக்கு புழக்கத்திலிருக்கவில்லை. நேரம் தெரியவில்லை. "அம்மா இரண்டு மணியிருக்கும்'' என்றார். பளீரென்று ஒரு பெரு மின்னல் தெறித்து வானந்தான் பற்றி எரிந்ததோ உலகமே பளீர்சிவப்பாகியிருக்க நீண்ட நேரத்துக்கு இடி இடித்து எதிரொலித்தது. சற்றுநேரம் எத்திசையில் நோக்கிலும் கண்களில் சிவப்பே தெரிந்தது.காற்று ஒருவித தாளகதியுடன் தன் வேகத்தை ஏற்றியிறக்கிக்கொண்டு 'ஓ.. .. ஓ.. .. .'.வென்று வீசவும் ஆத்திமரம் தன் கேசத்தை வீசிப்பேயாடுவதுபோல் சுழன்றாடுவதைப் பார்க்க படுபயங்கரமாக இருந்தது. மீண்டும் ஒருதரம் வான வாவி தலைகீழாகப் புரண்டு கொட்டவும் பெருவெள்ளம் வீட்டினுள் இதோ நுழைகிறேன் நுழைகிறேன் என்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல்போலவே தெரிந்ததில் பாக்குக்கடல்தான் மன்னாரை மேவியிங்கு வந்துவிட்டதோ என்றிருந்தது. இந்த அவலம் வன்னியில் யோகபுரத்துக்கு மட்டுமேயானதா இல்லை முழு உலகத்துக்குமாவென்றுந் தெரியவில்லை. இனி வீட்டின் சுவர்கள் சரிந்துவிடக் காற்றில் அடிபட்டுவிடுவோமோ? கெடுதியும் அவலமும் விளைவிக்கவென்றே அவதாரம் எடுத்த ஒரு அசுரனைப்போலவும், ஊழிக்காற்றாக வந்து சுழன்றாடிக்கொண்டிருக்கும் புயல் மேலும் என்னவெல்லாம் செய்ப்போகிறது என்று தெரியாததால் நான் உள்ளுரப் பயத்தால் உறைந்துபோயிருந்தேன். அனேகமாக அப்பா இனி எங்களைப் பார்க்கமாட்டார், எனது அடுத்த பிறந்த நாள் இனி வரவேவராது என்று நம்பினேனாயினும் வெகு இயல்பாக இருப்பது போலும் நடித்துக் கொண்டிருந்தேன். ஒரு புயலை அனுபவிப்பது வாழ்வில் இதுதான் முதன்முறை.காணிநிலம் இல்லாத எளிய மக்களுக்கே குடியேற்றக்காணிகளைப் பங்கீடு செய்வதில் முதலிடம் கொடுப்பார்கள். அப்படிக் கிடைத்த காணியில் குடும்பமாக குடியேறியிருந்து விவசாயம் செய்யாவிட்டால் அக்காணியின் பெர்மிட்டை ரத்துச்செய்துவிடுவோம் என காணிக்காரியாலய அதிகாரிகள் பயமுறுத்தவும், யாழ்ப்பாணக்கல்லூரி ஒன்றில் ஒழுங்காகவே படித்துக்கொண்டிருந்த என்னை கல்லூரி அதிபர் எவ்வளவோ தடுத்தும் கேளாது அப்பா விடுத்துக்கொண்டுவந்து மாணவர்கள் அமர்ந்து படிக்க கதிரை மேசை வசதிகள்கூட இல்லாத யோகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சேர்த்துவிட்டார்.
அங்கு வந்த ஆரம்பத்தில் அப்பா செய்வித்துத்தந்த நாலுசில்லு வண்டியைத் தரதரவென இழுத்துக்கொண்டு திரிவதில் ஏதோ "·பெறாறி ஸ்பைடரில்" உல்லாசிப்பதுபோலும் எனது புலன்கள் அனைத்தும் ஒன்றிச் சுகித்திருந்தன. பின் அவ்வன்னிப்பிரதேசத்தில் அடிக்கடி மிகமலிவாகக் கிடைக்கக்கூடிய மான், மரை, பன்றியிறைச்சிகளில் என் கவனம் திருப்பப்பட்டிருந்ததில் எனது கல்வியின் இழப்பு அவ்வளவாகத் தோற்றவில்¨லை. பின்னர் அப்படித்தான் படிப்புத் தொலைந்து போனாலும் ஒரு டிராக்டரை வாங்கிவைத்துக்கொண்டு அங்கேயே பிழைத்துவிடலாமென்று பாமரத்தனமாக என்னை நானே சமாதானம் பண்ணிக்கொண்டேன்.
வாரவிடுமுறைகளை ஊரில் அனுபவிக்கவேண்டி வெள்ளிக்கிழமை மதியமே யாழ்ப்பாணத்துக்கு பஸ் ஏறிவிடும் ஆசிரியர்களின் கைப்பையையோ, பொதியையோ மல்லாவிச்சந்திக்குச் சுமக்க நேர்கையில் பல தடவைகள் அப்பாவின் தொலைநோக்கில்லாத செயலுக்காக மனம் வருந்தியதுண்டு.
தவணைவிடுமுறைகளின் போது ஊர் செல்லும்போதெல்லாம் பாட்டி "அடுத்த ஆண்டு அவனை இங்கேகொண்டு சேர்த்துவிடுங்கோ நான் பார்த்துக்கொள்றன்" என்பார். எனக்கும் கண்களில் முட்டிக்கொண்டு வந்துவிடும்.
நாளைய நமது இருத்தல் பற்றித்தெரியாதபோது வவுனிக்குளம் வர நேர்ந்தமை எனக்குள் மீண்டும் இப்போது அழுகையைக்கொண்டு வந்தது.
இருந்த அத்தனை சேலைகளால் போர்த்தியபோதும் ஊசிக்குளிரால் உடம்பு வெடவெடத்தது. நான் படுத்திருந்த பாயில் உட்கார்ந்திருந்த அம்மா அதுவரை ஊறாதிருந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும் ஊடுசுவரின்மீது ஒரு சாக்கினால் போர்த்துக்கொண்டு; ஒருக்களித்துச் சாய்ந்திருந்தார். அவர் வாயில் இன்னும் கந்த சஷ்டிகவசம். 'இவ்வளவு துன்பம் செய்கிற கடவுளை எதற்குத்தான் பாடுகிறாரோ' என்றிருக்கிறது எனக்கு. இவ்வளவு பயங்கரத்துள்ளும் தூக்கம் வேறு வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறது. எப்போதுதான் அயர்ந்தேனோ, கண்விழித்தபோது காற்றும் மழையும் சற்றுக் குறைந்திருந்தன. அம்மா "இனி புயல் ஓய்ந்துவிடும்" என்றார். மேலும் ஒரு மணி நேரத்தில் காற்றின் வேகம் தணிந்தது ஆனாலும் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தது.நிலம் வெளுத்த பின்னாலும் மழை பெய்துகொண்டிருந்ததால் அயலவர்கள் என்னசெய்கிறார்கள் என்று போய்ப்பார்க்க முடியவில்லை. ஒருவாறாக ஏழு மணிவரையில் மழை ஓய்ந்தது. சூரியனும் வெளியில் வந்து ஊரைப்பார்க்கத் தயங்கிக்கொண்டிருந்தது.சின்னத்தம்பிக்கிழவன் கையில் அவரது கைப்பிடியில் எலிசபெத்மகாராணி எடின்பறோ கோமகன் இணையின் படம் போட்ட, நாற்பதாம் ஆண்டில் கறுப்பாயிருந்த குடையுடன் வந்தார்.
"என்னுடைய குடிலையும் நாம்பனுகளையும் காணேல்லை" என்றவர் "இராசையாவின் பட்டறைக்கொட்டில் கூரைத்தகரங்கள் கிழிக்கப்பட்டுப் பணியாரக்குள கலிங்கில அங்கங்கே விசிறப்பட்டுக்கிடக்காம்" என்றார்.வெள்ளம் வடிய சனங்கள் மெல்ல மெல்ல சகதிக்குள்ளால் வெளியில் நடமாடத்தொடங்கினர். அனேகமானோரின் வீடுகளின் கூரை ஓடுகள் முக்காற் பங்கும் காற்றில் பறந்துவிட்டிருந்தன.ஊர் குருசேஷ்த்திரமாகி பெருமரங்கள் எல்லாமே சாய்ந்திருந்தன. பிடுங்கப்பட்டவை முறிக்கப்பட்டவை ஏதோவொரு ஒழுங்கில் ஒன்று கூட்டப்பட்டு ஆங்காங்கு குவிக்கப்பட்டிருந்தன. முருங்கைகள் வாழைகளின் கதைகள் சொல்ல வேண்டியதில்லை.ஊர் முழுவதற்கும் பயன் தந்துகொண்டிருந்த இராசையா ஆசாரியார் வீட்டு ஜம்புநாவலும், கறிவேம்பும் சாய்ந்திருந்ததைக் கண்டு அவர் தாயார் தலையிலடித்துக்கொண்டு அழுதார். அவர்களிடம் திருத்த வேலைக்கு வந்திருந்த மாட்டுவண்டிகள் அடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டுபோய் முள்ளுக்கம்பிவேலிக்கு அப்பால் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன.எங்குதான் வீசப்பட்டுதோ வளவுக்குள் நின்ற கொண்டல் மரத்தை அங்குரத்துடன் காணவில்லை. வாழைகள் குட்டியும் குலையுமாக முறுக்கித் திருகப்பட்டு நார்களாக்கப்பட்டிருந்தன.கூரைகளோ, பத்திகளோ இறக்கப்படாது தனித்து நின்ற வீடுகள் பலவும் கூரைஓடுகளை முற்றாகவே இழந்திருந்தன.
எமக்கு தெற்கு விறாந்தையில் இரண்டு நிரை (இருபத்தைந்து முப்பது) ஓடுகளைத் தவிர ஆத்திமரம் ஒதுக்கமாய் நின்றிருந்த வடக்குப் பக்கத்து ஓடுகள் அப்பிடியே இருந்தது யோகபுரத்தில் எல்லாருக்கும் படு ஆச்சர்யம்.
'வங்காளவிரிகுடாவில் திடீரென ஏற்பட்ட பவனமணடல அமுக்க மாற்றத்தால்கிளம்பிய புயலே இப்படி வடமேற்காகச் சுழன்று குமரிமாவட்டத்திலும் , வன்னியிலும் கிழக்கு இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் காரணமாம்.'
இப்புயலின்போது இராமேஸ்வரத்தையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் பாம்பன்பாலம் தகர்ந்துபோனது.இலங்கை - கிழக்கு மாகாணக் கடற்கரையோரத்தில் குடிசை போட்டு வாழ்ந்த பல மீனவக் குடும்பங்கள் உட்பட அங்கே பத்தாயிரம்பேர்கள் வீட்டையும் கூரையையும் இழந்தார்கள்.வவுனிக்குளப் பிரதேச குடியேற்றத்திட்டத்தின் பிதாமகரான அப்போதைய அரசாங்க அதிபர் ஆழ்வார்ப்பிள்ளை நேரில் வந்து சேதங்களைப் பார்வையிட்டார். அவருடன் கூடவந்த அலுவலர்கள்; பட்டாளம் சிறுசிறுகுழுக்களாகப் பிரிந்து எல்லா கொலனி யூனிட்டுகளுக்கும் சென்று ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஏற்பட்ட நஷ்டங்களைக் கணக்கெடுத்தார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் முதல் நிவாரணமாக பல லொறிகளில் ஓடுகளும், மூலை ஓடுகளை வைத்துக்கட்ட சீமெந்தும், கோதுமைமா மூடைகளும் வந்திறங்கின. மாங்குளம் துணுக்காய் கிறவல் வீதியைத் தவிர்த்து யோகபுரம், ஒட்டன்குளம் , கொத்தம்பியாகுளம், துணுக்காய் எப்பகுதியுள்ளுமே லொறிகள் போகமுடியாதாகையால் யோகபுரம் முதலாம் யூனிட் பல நோக்க கூட்டுறவுச் சங்க வளவினுள்ளும், இரண்டாம் யூனிட் நெற்சங்க வளவிலும் , மூன்றாம் யூனிட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை விளையாட்டு மைதானத்திலும் அவை இறக்கப்பட்டு கொலனிவாசிகளுக்கு விநியோகிக்கப்பட மக்கள் மாட்டு வண்டிகளிலும், தலைச்சுமையாகவும் அவற்றை எடுத்துச் சென்றார்கள்.
எமக்கும் நாற்பது ஓடுகள் தந்திருந்தார்கள், அவற்றையரு சாக்கில் போட்டுக்கட்டி சைக்கிளில் இரண்டு நடைகளில் சகதியில் தாண்டிமிதந்து எடுத்து வந்திருந்தேன். புயலால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இவ்வுடனடி நிவாரணம் ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.
இவ்வேளை பாலியாற்றங்கரைக்கு மேற்காகவுள்ள பாண்டியன்குளத்தில் காடுவெட்டுவதற்கு வந்த (அப்பாவுக்குத் தெரிந்த) ஒப்பந்தக்காரர் ஒருவர் புயல் அனர்த்தங்களுடன் சற்று ஓய்வுவேண்டிப்போலும் தன் பட்டாலியனுடன் காடுவெட்டும் நீண்டபிடியுடனான கத்திகள், பளபளவென மின்னும் கோடாரிகளெனப் பல ஆயுதங்களை எங்கள் வீட்டில் வைத்துவிட்டு எங்கேயோ போயிருந்தார். அவற்றுள் பளீரென்று வாதாரை மின்னிக்கொண்டிருந்த கூரிய கோடரியைப் பார்த்ததும் மீண்டும் எனக்குள்ளான சைத்தான் உயிர்பெற்றுக் கைகளைப் பரபரக்க வைக்கவும் கோடரியில் ஒன்றை எடுத்துச்சென்று ஆத்தியில் இடுப்பில் போட்டேன். பச்சை வெட்டுச்சிராய்கள் 'ஷ்யுக்... ஷ்யுக்' என்று பறக்கப் பறக்க கோடரி 'சதக்...சதக்'கென்று இறங்குகிறது. ஒரு சுற்று இறங்கியதும் மேற்பட்டையை அடுத்துள்ள உட்பகுதியிலிருந்து பாலும் உதிரமும் கலந்தது போல் திரவம் வடியவும் மனதை ஏதோ பண்ணுகிறது.மீசை கறுக்காதா, கிருதா நெடுக்காதா என்ற ஏக்கங்கள் படிந்திருந்த பருவத்தில் மரத்தைத் தனியாக வெட்டுவதுதென்பது ஒரு வித ' பெரியஆள்த்தனமாகவே' படுகிறது. தொடங்கிய காரியத்தை இடைநிறுத்துவதா? தொடர்ந்து வெட்டினேன். பச்சையும் உயிருமாயிருந்த ஆத்தி காற்றில் 'ஓ' வென்று இரைந்துகொண்டு பாட்டில் சாய்கிறது.
பாட்டத்தில் சாய்ந்த ஆத்தியைப் பார்க்கவும் நெஞ்சில் கழிவிரக்கம் பிறக்கிறது. அதன் இருப்பின் கம்பீரம் இல்லையென்றாகி அவ்விடத்தில் பாழ்வெளி! மனது ஒப்புகின்றதில்லை , பிசைபடுகின்றது. ஜடமோ உயிரோ ஒன்றின் வீழ்ச்சியை பார்க்க நேர்வது அவலம். கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ........? நெஞ்சில் ஒருவகை அவசமும், அந்தகாரம் நிறைகிறது.
உட்பாவாடை அணியாமல் சேலை கட்டுவதற்கோ, பாடி இல்லாமல் ரவிக்கை போடுவதற்காகவோ அம்மாவால் தனியாக ஓரங்கட்டப்பட்டு அடிக்கடி அர்ச்சிக்கப்படும் அயல்வீட்டுத் திலகம்மாமி மரம் சாய்ந்ததும் இதற்காகவே காத்திருந்தவர்போல விரைந்து வந்து தன் ஆடுகளுக்காக இலைகளை ஒடித்துச் சாக்குகளில் அடைந்தார்.
வயலுக்குப் போய் வரம்புகளை வெட்டி வெள்ளத்தைக் கடத்திவிட்டுவந்த சின்னத்தம்பிக்கிழவன் மட்டும் ஆத்தி சாய்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு " சின்னப்பெடியா!" என்றார்." என்னப்பா?" "என்னொரு மடைவேலை செய்துபோட்டாய் காண்.......... திடீரெண்டு என்ன வந்ததுனக்கு?" " இல்லையப்பா அது புயல்ப்போது சுழன்றாடின ஆட்டத்துக்கு முறிஞ்சிருந்துதேயென்றால் வீட்டையரு பக்கம் பெயர்த்துக் கொண்டு போயிருக்கும்........? "
" ஆனால் அது அப்பிடி ஒன்றுஞ்செய்யேல்லையே கிளி........ வீரையென்றால் கிழிஞ்சிருக்கும்...... முதிரையென்றால் முறிஞ்சிருக்கும்...... பாலையென்றால் சரிஞ்சிருக்கும்...... இந்த ஆத்தி நார்மரமாயும் கோறையாய் இருந்ததாலுந்தான் இந்தப்புயலிலே அப்பிடிக் கசங்கியும் பிழைச்சு நிண்டது காண் ................"
"ஆமோ......?"" ஆத்தியின்ரை ஒதுக்கிலதான் உன்ரை வீட்டு ஓடுகள் தப்பினது காண்.........!"பண்ணியது முழுமுட்டாள்த்தனந்தான். சின்னத்தம்பிக்கிழவன் "காண் காண் காண்" எனவும் எனக்குள் துக்கம் அதிகரித்தது.
'அவள் நினைவுகள் என்னால் ஒதுக்கிவிட முடியாதபடி என்னுள் தோன்றித்தோன்றித் துன்பம் செய்கின்றனவே........... என்றோ ஒருநாள் நான் அறியாமல் செய்துவிட்ட ஒரு பாவத்தைப்போல........' என்று ஒரு உருதுக் கவிதையின் வரிகள் வரும். (நன்றி. அப்துல் ர·குமான்)
பச்சைமரத்தின் அருமை புரிந்த நாள்முதலாய் என் நினைவில் தொடர்ந்தும் படர்ந்தும் வரும் அவ் ஆத்திமத்தின் பவிசு இப்போதும் என்னை வருத்தாத நாளேயில்லை.
மூடாப்பு மந்தாரம் குறைந்து சற்றே வெய்யில் மினுங்கவும் மக்கள் தம்மிடம் நனையாதிருந்த தானியங்களுடன், கிழங்கு போன்றவற்றைப் பண்டமாற்றுச்செய்து உணவுப்பிரச்ச¨யைச் சமாளித்துக்கொண்டிருந்தார்கள்.
புயல் அடித்து ஓய்ந்து ஒரு வாரம் ஆகியிராது.
" நட்டாங்கண்டல் , வவுனிக்குளம் , மூன்றுமுறிப்பு, பன்றிவிரிச்சான், இரணைக்குளம் , பனங்காமம், ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை, பகுதிகளில் இன்றைக்கு மீண்டும் லேசாய் புயலடிக்கப்போகுதாம்." என்ற செய்தி விதானையார் வீட்டு டிரான்சிஸ்டர் றேடியோவிலிருந்து வவுனிக்குளப்பகுதி முழுவதும் பரவியது.
முன்னரைப்போல பல பயங்கரமாய் இருக்காதெனும்........ மன்னார், கள்ளியடி, வெள்ளாங்குளம் மீனவர்களைக் கடலுக்குப் போகவேண்டாமென்று எச்சரிக்கப் பட்டிருப்பதாவும் சொன்னார்கள்.
சுட்ட கரியை லொறி வியாபாரிகளுக்கு விற்றுவிட்டு எமக்கு என்னாச்சோ ஏதாச்சோவென்ற பரிதவிப்போடு அப்பாவும் வந்துசேர்ந்திருந்தார்.ஊரில் யாருமே ஓடுகளை அதற்குள் வேய்ந்திருக்கவில்லை. எமக்கு இரண்டு நிரை ஓடுகள்தானே கொண்டுவந்தவுடனேயே அப்பா எடுத்து ஒவ்வொன்றாக மேலே தரத்தர நான் வேய்ந்து முடித்துவிட்டேன்.மக்கள் பத்திகளையும் ஒத்தாப்புகளையும் சரிசெய்து தாம் சேகரித்த சொற்ப விறகுகளையும், தானியங்களையும், மழையிலிருந்து காப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.
மாலையானதும் மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நடுவானத்திலிருந்து தரையைத்தொட வெளிர் நீலத்தில் இறங்கிய நீண்ட மின்னற்கொடிகள் செவ்வூதாவாகி செஞ்சிவப்பாகிப் பொறித்ததில் பர்வதமொன்று பிளந்து உருண்டதுபோலும் அண்டம் உலுக்கப்பட்டு அதன் அதிர்வுகள் வியாபித்து வாழ்ந்தன. மழை மெல்ல மெல்ல வலுத்து நடுநசியில் உக்கிரமாகியது. சூறாவளியும் தன்னை மக்கள் சீக்கிரத்தில் மறந்து விடுதலாகாதென்று பின்னிரவில் மீண்டும் கோதாவுக்கு வந்திறங்கித் தன் வீரப்பிரதாபங்கள் அனைத்தையும் காட்டிச் சுழன்று சுழன்று சமராடியது.
வடக்குத் தெற்காக வீசிக்கொண்டிருந்த சூறாவளி ஒரு தரம் உச்சிவிட்டு தெற்கு வடக்காக சுழன்று பாட்டத்தில் கிடந்த ஆத்தியை உருட்டி வளவின் மூலையில் எங்கோகொண்டுபோய் ஒதுக்க, எங்கள் வீட்டு ஓடுகள் முழுவதும் காற்றுடன் அப்பளமாய் எழுந்து பறக்குந்தட்டுக்களாய் பறந்து முற்றத்தில் 'கலிங் கலிங்' கென விழுந்து நொறுங்கிக்கொண்டிருக்க, வானச்சமுத்திரம் தலைகீழாகப் புரண்டு வீட்டினுள் நேராகப் பிரவகித்தது.
.. .. .. .. .. .. ..
03.02.2001 பெர்லின். (காலம் மே- 2002-- கனடா)

Samstag, Dezember 13, 2003

என் இனமே..........என் சனமே...........!

பொ.கருணாகரமூர்த்தி

பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவியிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன்.

"மத்திய மலைப்பகுதியில் ஜெர்மனியின் வசந்தத்தையும் , கரையோரமாக ஸ்பெயின் கனறித்தீவின் வெண்மணல் புரளும் கோடைகாலத்துக் கடற்கரைகளையும் ஒருசேரக்கொண்ட அழகிய தீவு இலங்கையென்று எங்கள் டீச்சர் சொல்லியிருக்கிறார்." என்று தன் கனவுகளை மகள் கனிமொழி விரிக்க

"எங்கள்(?) பயேர்ண் மாநிலத்தை விடவும் சிறிய குட்டித்தீவாமே இலங்கை? " என்று தன் ஆச்சர்யத்தை எல்லாளன் குவிக்கவும்

" குட்டித்தீவென்றால் அது நிச்சயம் அழகானதாய்த்தானிருக்கும்." என்று மிகவும் தெரிந்தவளைப்போல ஆமோதித்தாள் ஆறுவயது வெண்ணிலா.

பிள்ளைகளின் ஜீவிதக்கனவும் அவர்களின் பாடசாலைவிடுமுறையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னான போர் ஓய்வும் அதிசயமாய் காலப்பாட்டையில் ஒருங்குவியவும் வீட்டுக்குக் கார்பெட் போடவும் தளபாடங்கள் வாங்குவதற்காகவும் கட்டியசீட்டை அவசரமாக எடுத்து விமான டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொண்டு ஆரவாரமாக இலங்கைக்குப் புறப்பட்டோம்.

என்ன தோன்றிற்றோ ஐயாவுக்கு எங்கள் வீட்டை நம்மூரிலேயே குடியிருப்பு அடர்த்தி குறைவான ஒரு இடத்திலேயே கட்டியிருந்தார். சூரியக்கதிர்தாக்குதல்கள் இடப்பெயர்வுகளின்போது கல்லுக்கல்லாய் வீட்டையும் ஓடுகள், ஜன்னல் நிலை கதவுகள் மதில் கேற் உட்பட அனைத்தையும் ஒருவாறு இடம்பெயர்த்துவிட்ட எம் இனமும் சனமும் காலி வளவில் எதுக்கு இவங்களுக்கு இந்தப் பெரிய மரங்களென்று முற்றத்தில் நின்ற வேம்பையும் மாவையும் வேலியையும் சேர்த்துப் பெயர்த்துவிடவே வீட்டின் திறப்புகள் மட்டுமே எஞ்சின. பெரியம்மா வீட்டிலே தங்கியிருந்த அம்மா ஏற்கெனவே எமக்கு எல்லா விபரமும் எழுதியிருந்தாராதலால் நாங்களும் பெரியம்மா வீட்டுக்கே போயிறங்கினோம். வழியில் பஸ்ஸ¤க்குள் கணியன் "ஐயோ கதவைச்சாத்தாமல் ஓடுறானுவள் நான் கீழை விழப்போறேன்.............. ஐயோ சீற்றுக்குக் கீழாலை றோட்டும் தெரியுது ஹில்·ப.......ஹில்·ப" என்று கத்தினான்.

எங்களைப் பார்க்கத் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்த உறவுகள், நண்பர்கள் செங்கரும்பு, நுங்கு, செவ்விளனிக்குலைகள், இராசவள்ளிக்கிழங்கு, வெள்ளரிப்பழம், கெக்கரிக்காய், மாம்பழம், என்று கொண்டுவந்து குவித்த வண்ணமிருந்தார்கள். பெரியம்மாவேறு ஒடியல்கூழ், மாங்காய்போட்டு வாளைமீன் குழம்பு ,இறால் பொரியலென்று தினமும் சமைத்து அசத்திக்கொண்டேயிருக்க பொழுதுகள் சந்தோஷமாய்க் கழிந்துகொண்டிருந்தன.

இருந்த வெய்யிலுக்கும் காங்கைக்கும் போய் தொண்டமானாற்றுக் கடலில் இறங்கினால் நல்லாயிருக்கும் போலிருந்தது, போனோம். எனினும் கடலில் இறங்கக் கால்கள் கூசின.

அது சுழிகள் அதிகமுள்ள கடல். திடீர் திடீரென வந்து ஆட்களை இழுத்துச்சென்றுவிடும். முன்னமுமொருமுறை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாலு பிள்ளைகளை ஈவிரக்கமில்லாமல் ஒரேயடியாய் இழுத்துச்சென்று கொன்ற கடல். அப்போதெல்லாம் வராதபயம் இப்போது தொண்டமானாற்றுக் கடலைப்பார்க்க வந்தது.

குமுதினிப் படகினில் யார் வெட்டினார்கள்
நெடுந்தீவுக் கடலினில் யார் கொட்டினார்கள்
அமுதெனும் சிறுவனை யார் குத்தினார்கள்
அதனாலே வரும் பாவம்யார் கட்டினார்கள்
கப்பல் உலாவரும் கடலே பேசு
உப்புக் காற்றே ஊதத் தொடங்கு !


"ஊ ஊ ஊ ஊ..... " என்று ஊதிச்செல்கிற உப்புக்காற்று புதுவையாரின் கவிதை வரிகளைக் காதில் சொல்லிச்செல்லவும் கடல் சிவப்பாக இருப்பதுபோலவும் கடலில் வீசப்பட்ட பாலகர்கள் அலைகளோடு மிதந்து வருவது போன்றும் பிரமை தட்டியது.

எங்கள் கிராமமான புத்தூருக்கு கொய்யகம் கட்டிவிட்டதுபோலிருக்கும்; குறிச்சிக்கு காளியானையென்று பெயர். அங்குதான் சரவணன் வீடு இருக்கிறது. இக்காளியானையைக் கடந்தும் சாவகச்சேரி நோக்கிய திசையில் ஒரு மைல் தள்ளித்தான் எங்கள்வீடு இருந்தது. அக் குறிச்சிக்கு அந்திரானை என்று பெயர். புத்தூருக்கும் அச்சுவேலிக்கும் இடையில் தூக்கிச் சொருகிவிட்டுள்ளதுபோலுள்ள பகுதி ஆவரங்கால். இவ்விநோதமான பெயர்கள்; எதன் வேரிலிருந்து தோன்றியவையோ தெரியவில்லை. ஏதாவது காரணப் பெயர்களாகக்கூட இருக்கலாம். ஊரணி, புத்தர்கலட்டி, நாரந்தனை, அம்போடை, குஞ்சு மந்துவில், வாதரவத்தை, வீரவாணி என்று ஒன்றுசேர்ந்த பத்தூர்கள்தான் காலப்போக்கில் மருவிப் புத்தூரானது என்றுகூட ஒரு கருத்து இருக்கிறது.


காளியானையின் பெரும்பான்மையர் வெள்ளாளர்கள்தான் எனினும் புத்தூர் மேற்கின் வெள்ளாளர்கள் காளியானை வீடுகளில் சம்பந்தம் கலப்பதோ, சொம்பு எடுப்பதோ இல்லை. நாட்டில் மணியம், விதானை, உடையார் பதவிகளை வகிக்க ஒறிஜினல் வேளாளரால் மட்டுமே முடிந்த காலத்திலிருந்து மேற்கு வெள்ளாளர் மணியத்தின் மகன் மணியம், விதானையின் மகன் விதானை , றிஜிஸ்த்தார் மகன் றிஜிஸ்த்தாரென்று பதவிகளைப் பரம்பரைச் சொத்தாக்கி அனுபவித்தவர்களாதலால் ஒரு காலத்தில் இவர்களுக்கு ஊருக்குள் நிலபுலன்கள், தோட்டம், வாரம், எடுபிடி, படிப்பு பந்தா ஏனையோரைவிட அதிகம் இருந்தன.
மேற்கில் ஒருவருக்கு யாழ் - மின்சாரநிலைய வீதியில் மலாயா கபேயிலிருந்து ராணி தியேட்டர் உள்ளிட்ட சி.வி. பாட் கடைவரையிலான கட்டடங்கள் சொந்தமாயிருந்தன. இன்னொரு குடும்பத்துக்கு யாழ் சின்னக்கடையில் பாதிக்கும் மேற்பட்ட கடைகளும் , யாழ் கச்சேரிவளவும், பழையகச்சேரியும் (பின்னால் நில அள¨வாளர் அலுவலகமானது) அதனருகே மலைவேம்புகள் நிற்கும் பெருவளவில் ஆரம்பித்து நிலங்கள் தற்போதைய புளு றிபண் ஹொட்டல்வரை சொந்தமாயிருந்தன. தங்கள் நிலபுலங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவென்றே சரிவரத் தெரியாதோர் ஊரில் இன்னும் அநேகம்பேர் இருக்கின்றனர்.

காளியானையார் பெருநிலபுலன்களோ, கோட்டை கொத்தளங்களோ வைத்து ஆண்டதாய் சரித்திரம் கிடையாது. ஆனால் யாரையாவது பிடித்துக்கேட்டால் "என்ரை காணிக்குள்ள வடக்குப்பக்கமா வீடுகட்டினனேயெண்டால் புத்தூர் தபாற்கந்தோரிலிருந்தும்; தெற்குப் பக்கமாகக்கட்டினனேண்டால கைதடித் தபால்கந்தோரிலிருந்தும் காயிதம் வரும்" என்றும் பீற்றுவார்கள்.
அவர்கள் தோம்பு இருப்பதாகச்சொல்லும் காணிகள் பலவும் ஊரி நிறைந்த தரிசுகளும் கலட்டிகளுந்தான். நடப்பில் இப்போதும் பலபேருடைய வீடுகள் மண்வீடுகள்தான், அனேகமானோரின் வளவுகளுக்குச் செப்பனான வேலிகளே கிடையாது. ஆனாலும் அக்காலிப்பெருங்காய டப்பாக்களில் இன்னும் நாங்கள் வெள்ளாளர் என்ற ஜாதியவாசனை மட்டும் விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

சரவணனை என் நண்பன் என்பதிலும் 'கிளாஸ் மேட்' என்று சொல்வதுதான் பொருத்தம். தமிழில் வகுப்புத்தோழன் என்றாலும் அதுவும் அவனை நண்பனென்பதற்கே அணுக்கமாக்கும். நண்பனென்றால் எமக்கு பல விஷயங்களில், கருத்துக்களில் இரசனைகளில் ஒற்றுமைகள் இருந்திருக்கும். அவனிடம் அரசியல் உலகியல் கருத்துக்களில் வேற்றுமைகளிருந்தால் பரவாயில்லை சாதியம், மனித நேயம், பெண்விடுதலை ஆகியவற்றில் நவீனசிந்தனைப் போக்குகளின் வாடையே அறியாத பூர்ஷ¥வாக அவனிருப்பதால் என் மனதுக்கு அணுக்கமானவனாகக் கொள்ளமுடியாமல் இன்னும் சில மனத்தடைகள் உள்ளன என்போமே.

கல்லூரி நாட்களில் ஒரு நாள் சரவணன் சொன்னான்: "அரசாங்கம் புத்தர் கலட்டியில் பெளத்த பாடசாலையைக் கட்டினதுதான் கட்டிச்சு எளியான் சாதியெல்லாம் செருப்பு நடப்போடை எங்கடை ஊருக்குள்ளால முற்றத்தால திரியுதுகள்"

" மேற்குத்தெரு வேளாளர் தங்களுடைய கல்லூரியில் தாழ்த்தப்பட்டிருந்தோருக்கும் இடங்கொடுத்திருந்தால் அவர்களுக்கு சிங்களம் படிக்க வேண்டிய நிலமை எதுக்கு வருகுது? சாதியம் இந்த மதத்தின் மாற்றவேமுடியாத சாபக்கேடென்றுதானே அம்பேத்கார் தானாகவே பெளத்தத்தை; தழுவினார், பெரியார் எல்லோரும் இஸ்லாத்துக்கப் போங்கடா என்றார். பெளத்தபாடசாலை சிங்களமெல்லாம் இங்க வந்ததுக்கே நம்முடைய ஐக்கியக்குறைவுதானே காரணம்?"

சாதியத்தை இப்படிப்பற்றியிருக்கும் சரவணன் விலங்கியலிலோ தாவரவியலிலோ சேதனப் பரிணாமம் , மரபியல் பகுதிகள் சிறப்பாகவே செய்வான். ஒரு நாயுக்கும் மனிதனுக்குமுள்ள (முலையூட்டி விலங்குகள் என்ற வகையில்) ஒற்றுமைகளைக் கேட்டால் மைல் நீளப்பட்டியலே போடுவான். அதெல்லாம் சும்மா பரீட்சைக்கு மாக்ஸ் வாங்கத்தான்............ ஆனால் மானுஷத்துக்குள் சாதியச் சங்கதிகள் நித்தியம் வாய்ந்தவை.

மேற்குத்தெருவிலிருந்து வரும் ஒரு மாணவி நான் ஸ்கூலுக்குக் மட்டம் போடும் நாட்களில் எனக்கான நோட்ஸ்களையெல்லாம் பிரதி எடுத்துத் தருவதுடன் வகுப்பில் ஏனைய மாணவிகளைவிட என்னோடு கொஞ்சம் நெருக்கமாக இருந்தாள். என்னிடமும் அவளுக்கான மென்மையான பக்கங்கள் கொஞ்சம் இருக்கவே செய்தன. பின்னாளில் விடுதலை இயக்கப்பாசறைப் பணிகளில் என் கவனங்கள் குவிந்துவிட சங்கதி டெவலப் பண்ணுப்படாமலே போனது. அதைவிட அவளிடமும் வேறு காரணங்கள் இருந்திருக்கும். அதுவே சரவணனுக்கு உளைஞ்சிருக்கவேணும் ஒருநாள் என்னிடம்: " உவள் உப்பிடித்தான் எல்லோரோடையும் குழையிறாள்...........வேசை."" என்றான்.

சரவணனுக்கும் வறுமையோடான விவசாயக் குடும்பந்தான். எண்ணிக்கை சரிவரத்தெரியவில்லை சாவிச்செற் போல மில்லிமீட்டர் வித்தியாசங்களில் ஆண்களும் பெண்களுமாக ஏழெட்டுச் சகோதரங்கள். எல்லாமே ஒருமாதிரியான மலிவான மண்ணெய் நாறும் கூப்பன் துணிகளில் தொள்ளல்சட்டைகள் தைத்துப் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போகுங்கள். அவர்களுக்கு வெங்காயம் மிளகாய் பயிர்ச்செய்யக்கூடிய தறை கொஞ்சம் அந்திரானையில் இருந்தது. அத்தோடு அவனது தந்தை ஒரு வண்டி மாடுவைத்துக்கொண்டு சீவியத்தைத் தள்ளிக்கொண்டிருந்தார்.
கல்லூரிநாட்களில் எனக்குச் சேதன இரசாயனத்தில் கொஞ்சம் சிக்கல்களிருந்தன. அதனால் நான் யாழ்ப்பாணத்தில் ரியூட்டோரியல் வகுப்புக்களில் பிரபலமாயிருந்த வி.ரி.கந்தசாமி மாஸ்டரிடம் அப்பகுதிகளில் பிரத்தியேகமாக டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்பாடக்குறிப்புகள் சிலது தனக்கும் தேவையென்று சரவணன் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்தான், அரைமணிக்கு மேலாகப் பேசிக்கொண்டிருந்திருப்போம்.

அக்கா இருவருக்குமாகச் சூடாகத் தேனீர் கொண்டு வந்தார். எம்பேச்சு வளர்ந்துகொண்டிருந்தது. எனக்கு எப்போதும் தேனீர் கோப்பி மிதமாக சூட்டிலிருக்கையிலே குடித்துவிட வேணும்.
சரவணனோ தேநீரைத் தீண்டுவதாயில்லை. "தேனீர் ஆறிவிடப்போகிறது குடியப்பனே" என்று இரண்டு மூன்று தடவைகள் சொல்லியிருந்திருப்பேன். நான் அதை வேறுயாருக்கோ சொல்கிறேன் போன்றதொரு பாவனையில் தேவநிஷ்டையில் இருந்தான். எனது கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டு அப்பாவித்தனமாக "நல்ல அளவான சூடா இருக்கப்பா குடி " என்றுகூடச் சொல்லிப்பார்த்தேன். அவன் அதைச் சட்டைசெய்வதாயில்லை. இனியென்ன நான் பருக்கி விடவாமுடியும்? சிலவேளைகளில் ஆறின தேனீர்தான் அவனுக்குப் பிடிக்கும்போல, பிறகு குடிப்பானென்று இருந்தேன். கடைசி வரையில் அவன் குடிக்கவேயில்லை. நான் தேநீர் குடிப்பதில்லையென்றோ அல்லது "நான் இன்று கெளரிவிரதமென்றோ காயத்திரி விரதமென்றோ" என்றோகூடச் சொல்லவில்லை. தன் பாட்டுக்கு எழுந்து போனான்.

அதை அவதானித்த அம்மாவும் அக்காவையே ஏசினார்.

"அவங்கள் எங்கள் வீடுகள்ல தேத்தண்ணியெல்லாம் குடிக்காங்கள், நீ ஏன் கொடுத்தனி?"
" ஏனாமணை குடிக்காயினம்..............?"
"அது ஆரம்பத்தில இருந்தே அப்பிடித்தான்...............!"
" தம்பியின்ரை கிளாஸ்மேற்றாச்சேயென்றுதான் கொடுத்தனான், வந்தது மூன்றாம் நூற்றாண்டுப் பிரகிருதியென்று யாருக்குத் தெரியும்?"
" நானென்ன அவனுக்கு வெத்திலையா வைச்சன்........... தனக்கு நோட்ஸ் வேணுமெண்டான் வந்தான், தேத்தண்ணி குடிக்காட்டிப்போறான் ..............எமக்கென்ன?"

மறுநாள் பள்ளிக்கூடத்தில் வெகு இயல்பாக என்னிடம் பேசினான். எனக்கு அவனைத் தவிர்க்க வேணும் போலிருந்தாலும் தவிர்க்க முடியாதபடியரு நிர்ப்பந்தம். இரசாயனவியல் செய்முறைகளில் என் ஆய்வுசாலைப் பார்ட்னர் அவன்தான், பிணைத்துவிட்டிருந்தார்கள். வட்டவட்டமான கையெழுத்தில் அவன் தயாரிக்கும் பிறாக்டிக்கல் றெக்கோர்ட் அழகாகவிருக்கும்.

அது திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கல்லூரி முதல்வராக இருந்த நேரம். மாணவர்களின் உயர் எண்ணிக்கைக்கு வகுப்பறைகள் போதுமானதாக இருக்கவில்லை. தேவையான நிதியை ஊர் மக்களிடமே திரட்டிக் கட்டங்களை விஸ்த்தரிப்பதென்று பெற்றார் ஆசிரியர் சங்கத்தில் முடிவுசெய்து அதிபரோடு சேர்ந்து கல்லூரி வளர்ச்சியில் ஆர்வமுள்ள ஊர்ப்பிரமுகர்களும் , பெற்றோரும் , ஆசிரியர்களும், சில மாணவர்களுமாக ஊருக்குள் ஒரு நாளைக்கு ஒரு பிரிவென்று வைத்துக்கொண்டு நிதி திரட்டப் புறப்பட்டோம்.

நிதி திரட்டும் குழுவானது பிரமுகர்களின் வழிகாட்டலில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளுக்குப் போவதைத் மிகக் கவனமாகத் தவிர்த்துக்கொண்டிருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. குழுவில் எல்லோரிடமும் தமாஷாகப் பேசிப்பழகக்கூடிய பண்டிதர் சுப்பிரமணியத்திடம் என் மனக்குறையை வெளியிட்டேன். பண்டிதரோ
"நீயும் நல்ல விசர்க்கதை பறையிறாய்............... கறையான் புத்தெடுக்க நாகம் குடிபுகுந்த கதையாயல்லோ நாளைக்கு முடியும்" என்று அலறவும் முழுக்குழுவினரும் அதுபெரும் அங்கதம்போல் கோரஸாய் சிரித்து ஓய்ந்தனர்.
ஸ்ரீசோமாஸ்கந்தக்கல்லூரிக்கு ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து ஆசிரியர்கள் நியமனமாவதைக்கூட மேற்கு வேளாளர்கள் தம் அரசியல் செல்வாக்கைப் பாவித்துத் தடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
முற்போக்குக் கருத்துக்கள் கொண்ட இவ்வதிபரோ 1972ல் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளையும் துணிச்சலாக அனுமதித்துப் பெருமை கொண்டார்.

தியாகி சிவகுமாரன் மரணித்திருந்த நேரம். பொலீசாரைக் கண்டிக்கும் விதத்திலும் பாடசாலைகளைப் பகிஷ்கரிகுமாறும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்த மாணவர்கள் பலர் கைதானபோது சரவணனும் அகப்பட்டு கோப்பாய் பொலீஸில் 3 நாள் றிமாண்டி¢ல் இருந்தான்.
அடுத்த நாள் நான் கோப்பாய்ச்சந்தி ஐயர்கடையில் வாங்கிப்போன இட்லி வடையையும் ஒறேஞ்பார்லியையும் சாப்பிட்டான்.

1974ல் ஏப்ரலில் பல்கலைக்கழக புதுமுகப்பரீட்சை அண்மிக்கவும் வாரவிடுமுறையில் அச்சுவேலி ரியூட்டறியன்றில் சில பாடங்களில் இருவரும் மேலதிக வகுப்புக்கள் எடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு ஞாயிற்றுக்கிழமை இயற்பியல் ஆசிரியருக்கு முதனாள் ஓவராகப்போட்ட சாராயம் எழுந்திருக்க விடாமற்பண்ணியதால் வகுப்பு 'கட்' ஆனது.
கட்டப்பராய் பாலேந்திரனுக்கு ஐடியா வந்து சொன்னான் ~~தொண்டமானாத்துக் கடலிலே போய் ஒரு முங்கு முங்குவோமா?"
" உடுப்புக்கெங்கை போறது?"
"பென்டரோடை இறங்கவேண்டியது............வெய்யில்லை பதினைஞ்சு நிமிஷத்தில காஞ்சுடும்."
"காஞ்சுடும் காஞ்சுடும்."
அனுபவசாலிகள் வழிமொழிய எல்லாச் சைக்கிள்களும் தொண்டைமானாறு நோக்கித் திரும்பின. இடையில் புதுப்பனங்கள்ளுச் சேகரித்தோம். மதியம் திரும்பும் வரையில் கடலில் விளையாடினோம்.. கடல் குளிப்பு பசியைக்கிளப்புமென்பது தெரிந்ததுதான். குளிப்போடு பனங்கள்ளு சேர்ந்துகொண்டு கொடுமை செய்தது. பனங்கள்ளும் கடற்குளிப்பும் சேர்ந்துகொண்டு திடீரென வயிற்றில் 'பேர்ள் ஹாபர்'தாக்குதலைத் தொடங்கின. எல்லோருக்கும் குளுக்கோஸ் ஏற்றினால்தான் எடுத்து மறுஅடி வைக்கலாம் போலொரு நிலமை. கண்கள் சொருகத்தொடங்க கணமும் கடலில் நிற்கமுடியவில்லை. வீடு நோக்கிப் புறப்பட்டோம்.

இடையில் தோட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு இழுத்துக் கொண்டிருந்தனர். கிழங்கைப்பார்த்த சிவபாதம் (பின்னாள் குட்டிமணி, தங்கத்துரையுடன் வெலிக்கடையில் மடிந்தவன்) அபிப்பிராயப்பட்டான்.
" இந்தக் கிழங்கை டிசுப்பேப்பர் மாதிரி மெல்லிசாய் வெட்டி மச்சான் மிளகாய்த்தூளும் உப்பும் தூவிப்பொரிச்சு அடிச்சால்.........."
"அடிச்சால்...........?"
"இந்தப்பசிக்கொரு கணிதமாயிருக்கும்."
" நான் பின்னே இருக்காதென்றனே......... நீயும் கனக்க அடிச்சிட்டாய் இந்தா கையைத்துடை." என்று தன் அப்பியாசக் கொப்பியிலிருந்தொரு தாளைப் கிழித்துக்கொடுத்தான் இன்னொருவன்.

எதைப்பார்த்தலும் சாப்பிடவேணும் போலிருந்தது. பசி இப்படியெல்லாம் பண்ணுமென்று ஜீவிதத்தில் உணர்ந்தது அன்றுதான். கட்டப்பராய், இடைக்காட்டுப் பையன்கள் குறுக்குப்பாதையால் வெட்டிக்கொண்டு போய்விட, வீதி எங்களுக்கு பட்டத்துவால்போல் துடித்துக்கொண்டிருக்க நானும் சரவணனும் மட்டும் தனியாக கண்களைப் பூஞ்சிக்கொண்டு வந்துகொண்டிருந்தோம்.

அச்சுவேலியை பஸ் நிலையத்தைக் கடக்கவும் வீதியோரக்கடைகளில் கொத்துரொட்டி அடிக்கும் சத்தமும் வீதிக்கு வலம் வந்த அதன் வாசமும் சைக்கிள் சில்லுகடையே குறுக்காக யாரோ அலவாங்கைச் செலுத்தியதுபோல் அவற்றை மேற்கொண்டு நகரமுடியாதபடி அழுத்திப்பிடித்தன.
" கொத்து அடிக்காமல் என்னால அங்கால ஒரு அடிகூடப்போகேலாது." என்றேன்.
"நான் கூடாதென்றேனே..............என்னட்டைச் சல்லிக்காசில்லை." என்றான் சரவணன்.
என்னிடம் நோட்ஸ் புத்தகங்கள் வாங்குவதற்காக அம்மா முதனாள் தந்திருந்த பத்து ரூபாய் இருந்தது. அவதிக்குதவாத காசு பிறகெதுக்கு முதல்ல இந்தப்பிரச்சனை களைந்து உயிர்பிழைப்போம்.

" என்னட்டை இருக்குக்காசு , நோ புறப்ளம்."

நாங்கள் டியூசனுக்கு வந்து போகும்பும்போது டீ குடித்து சிகரெட் புகைக்கும் வாடிக்கைக்கடை. இருவரும் அவசரமாய் உள் நுழைந்தோம்.
ஆளுக்கு டபுள் கொத்து சூடாக அடித்து நிமிர்ந்தபோதுதான் முன்னாலிருப்பவர்கள் கலங்கலில்லாமல் தெரிந்தனர்.
பின்னால் கோல்ட் லீ·பின் தீரத்துக்கு செஸ்ரோரொபியின் பெப்பர்மின்ட் காரக்கூட்டு திவ்யமாயிருந்தது. சரவணன் புகையெல்லாம் பிடிக்கமாட்டான். சூழஇருப்பவர்களின் அசெளகர்யங்களுக்கும் ஆரோக்கியக்குறைவுக்கும்; சூழல் மாசுபட்டுப்போவதற்கும் தான் ஏதுவாக இருப்பதைத் தாங்கமுடியாத உயர் சீலம் அவனது.

ஐந்து வருஷங்களுக்கு முன்னர் நான் ஒரு முறை தனியாக இலங்கைபோய் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.
இப்போது நான் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு வந்திருந்தான். நீண்ட இருபது வருஷங்கள். முன்னந்தலையில் கொஞ்சம் நரை விழுந்திருந்ததைத் தவிர அவனில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. என் தொப்பையைக் கிண்டலடித்தான்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப்பட்டம் பெற்ற பின்னால் உள்ளுராட்சி சிறகத்திலே சேர்ந்தானாம் , அரச சேவையில் இருந்தவர்களெல்லாம் வெளிநாடு வெளிநாடென்று கழன்றுவிட சேவைமூப்பின் அடிப்படையில் விரைவிலேயே சிறகத்தின் உயர் அதிகாரியாகியிருந்தான்.

சர்வதேசம் - உள்ளுர் என்று பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தோம். தன் சகோதரிகள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டதாகவும் அவர்களில் இருவருக்கு கனடா மாப்பிள்ளைகள் கிடைத்ததால் அவர்கள் அங்கேயே போய்விட்டதாகவும் சொன்னான். மீதிக்குடும்பம் சூரியக்கதிர்த்தாக்குதலில் இடம் பெயர்ந்து போனதிலிருந்து(வன்னி) பாண்டியன் குளத்திலேயே தங்கிவிட்டதாகவும் தான் கோப்பாயில் சட்டத்தரணி பாலசிங்கத்தின் ஒரே மகளைத் திருமணஞ்செய்ததாகச் சொன்னான். அறுபதுகளிலேயே புது போர்ஜோ 504 இலே உலவிய பணமனிதன். சற்று இடைவெளிவிட்டு கொடுப்புக்குள் சிரிப்போடு "செமை சீதனம்........... அநேகமாய் அவற்றை முழுஆதனமும்" என்றான்.இருக்காதா பின்னே?

" நீ சிங்களத்தியைக் கட்டினதும் அறிஞ்சன்............. ஏன் இப்படிக் குறுக்க இழுத்தனீ..........? "

நான் கார் விபத்தொன்றில் சிக்கி இடுப்பை உடைத்துக்கொண்டு ஆஸ்பத்தரியில் இரண்டு மாதங்கள் காலை மேலே தூக்கிக்கொண்டெல்லாம் அசையாமல் படுத்திருந்திருக்கிறேன். அதுபற்றி யாருக்குமே இங்கு தெரிந்திருக்கவில்லை. விசித்திரமாய் சிங்களத்தியைக் கட்டினேன் என்றொருசெய்தி இத்தனை கடல்கள் மலைகள் பாலைவனங்கள் தாண்டி வந்திருக்குப் பாருங்களேன்.

என் ஆயிஷா மாத்தளைத் தமிழ்ப்பெண். பத்து வயதிலேயே ஜெர்மனிக்கு வந்துவிட்டவர். இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவளெனினும் அவள் பெற்றுக்கொண்ட கல்வியும் , டீசநயன கழச வாந றுழசடன என்ற சேவை அமைப்பில் சேர்ந்துகொண்டு இரண்டு வருஷங்கள் எதியோப்பியாவில் புரிந்த தன்னார்வப் பணியும் அவளுக்கு எந்த மத மார்க்கத்திலுமே நம்பிக்கை இல்லாமற் செய்துவிட்டன. அவள் தேடல்களெல்லாம் மானுஷ , வாழ்வியல் மார்க்கத்தில்தான். பகுத்தறிவும் , இலக்கியத்தாகமும் மானுடநேயமுமுள்ள பெண்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்க பிள்ளைகள் வந்து அவனுக்கு "வணக்கம்" சொன்னார்கள்.

"அட ஆச்சர்யமாயிருக்கு........... பிள்ளைகள் தமிழ் கதைக்கினமே?"

"தமிழ்பிள்ளைகள் தமிழ்கதைக்காமல்...........?"

"எனக்கு சிங்களமோ ஜெர்மனோ புரியாது. ஜெர்மன்காரர்கள் மொழிப்பற்று அதிகமுள்ளவர்களாம், லேசில் இங்கிலிஷ் பேசமாட்டார்களென்றும் அறி;ந்திருக்கிறேன். உன்ர வை·புக்கு இங்கிலிஷ்; பேச வருமில்லை?"

"எல்லாவற்றையும்விடத் தீந்தமிழ் நன்றாய் வரும்."

" சும்மா விடுகிறாய் எனக்கு."
"பேசித்தான் பாரேன்."
எமது சம்பாஷணைக்கு இடையூறில்லாது தானே தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டுவந்த ஆயிஷாவுக்கு

"இது சரவணன் என் ஸ்கூல் நண்பன்" என்றே அறிமுகம் செய்து வைத்தேன்.
"வணக்கம்" நமஸ்கரித்தாள்.

"இப்படியரு நண்பர் இருப்பது எனக்குத்தெரியாதே...........ஏன் நீங்கள் இவருக்குக் ஏதும் கடிதங்;கூடப் போட்டதாகத்தெரியவில்லையே?" என்றவள் அவனைப்பார்த்து "ஏன் நீங்கள் குடும்பத்தையும் கூட்டிவந்திருக்கலாமே?" என்றாள் அப்பாவியாய்.

அப்பிடியெல்லாம் லேசில் வந்திடுவார்களா இவர்கள்............
ஒரு இடைவெளிவிட்டுத்தான் இவர்களால் பழகமுடியும்; என்பதோ,
என் உயர்ந்த நண்பர்கள் வரிசையில் இவன் இல்லை என்பதோ, யாழ்ப்பாண சாதியத்தையும் அதன் உட்கட்டுமானங்களையும் அறிந்திராத அவளுக்கு எப்படிப் புரியப்போகிறது? ஏன் இவ்வளவுகாலம் கழித்தென்னைப் பார்க்க வந்திருக்கிறானே............ என் கணிப்புகள் தவறாகக்கூட இருக்கலாம். இந்த நீண்டகால இடைவெளி நிச்சயம் அவன் சிந்தனையோட்டங்களை, கருத்துக்களைப் புடம் போட்டுமிருக்கலாம்.

"இவ்வளவு சரளமாய்த் தமிழ் கதைக்கிறாவே?"

" கதைப்பா..........விஷயத்தைப் பொறுத்து இதைவிட அதிகமாகவும் கதைப்பா."
" உனக்குப் பொன்னென்ன பூவென்ன கண்ணே.........ஞாபகமிருக்கா?"
என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான்.
"ஐயோ.... முழுக்கத்தான் சொல்லுங்களேன்....... நானும் சிரிக்க" என்று ஆர்வமானாள் ஆயிஷா.

"அப்போ ஸ்ரீதரின் 'அலைகள்' என்றொரு படம் வந்து கலக்கிக்கொண்டிருந்த நேரம். இருவருமாகப் படத்தை மெற்னி பார்த்திட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தோம். அதில வர்ற இந்தப்பாட்டின் பல்லவியை வழி நெடுகிலும் கண்களை மூடியபடி மூக்குப்பொடி அள்ளுகிற மாதிரி கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
புதுக்கல்யாணப் பெண்ணாக உன்னை
புவிகாணாமப் போகாது கண்ணே.........
என்று அனுபவித்து பாடிக்கொண்டு நீர்வேலிச்சந்திக்குக்கிட்ட வந்த சரவணனுக்கு பட்டப்பகல்ல முன்னால நிறுத்தியிருந்த தட்டிவான் தெரியாமப்போச்சு."

"பிறகு?"

"பிறகென்ன இடிபட்டுத் தொபுகடீரென்று விழுந்து மூக்குடைஞ்சதுதான்."

" பிறகு? "

"பிறகென்ன மூக்கால ரத்தம் ஓடத்தொடங்கிவிட்டுது."

"பிறகு?"

" கோப்பாய் ஆஸ்ப்பத்தரிக்குப்போய் மருந்து கட்டினதுதான்."

இப்படிப் பல சம்பவங்களை மீட்டுயிர்ப்பித்துச் சிரிக்கையில் கூடவே என் பிள்ளைகள் அங்கு வந்து செய்த தமாஷ்களையும் அவனுக்குச் சொன்னேன்.

"இங்கே பெரியம்மாவிட்ட ஒரு வெள்ளைக்குட்டிப்பூனை ஒன்று இருக்கு, அங்கார்............ அதில நின்று தெண்டா எடுக்குது அதுதான். சனசந்தடியயில்லாமல் வெளிச்சுப்போயிருந்த வீட்டில் நாங்களும் போயிறங்கி அமர்க்களம் பண்ணினது அதுக்கும் குஷியை ஏற்படுத்தியிருக்க வேணும். நடையிலும் தலைவாசலிலும் குசினியிலுமாக எங்களோடு உரசிக்கொண்டு திரிஞ்சுது. குட்டிப்பூனையல்லே.......... பெரியம்மா சொன்னா: இந்தப்பூனையும் குறுக்கையும் மறுக்கையும் சும்மா சுத்துது ஆற்றையன் காலுக்குள்ள அநியாயமாய் மிதிபடப்போகுது."

"அப்பிடியெண்டால் அதின்ரை பாட்டரியைக் கழற்றிவிடுங்கோவன்.சும்மா இருக்கும்" என்றான் கணியன்.

பின்பொருநாள் பெரியம்மா மீன்குழம்புக்கு மிளகாய் கூட்டரைக்க அம்மியைக் கழுவிக்கொண்டிருந்தார்.
அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்த வெண்ணிலா கேட்டாள்:
" பாட்டி... என்ன தெய்யிறீங்கள்? "
"அம்மி கழுவுறன்டா."
" அம்மியென்டால்...........?"
" இதுதான் அம்மி......... இதில அரைக்கிறது கிறைண்டர்."
" அப்பிடியெண்டா எங்கை அதோன்ரை பிளக் வயர் ?"
" இதுக்கு கன்றென்ட் தேவையில்லை, இப்பிடித்தான் அரைக்கிறதென்று இழுத்து அரைத்துக்காட்டினார். அவளுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம்."

" நான் பள்ளிக்கூடத்தால் திரும்பும்வேளைகளில் வழியில் வெற்றிலை வாங்கிச் சப்பும் மாடு மேய்க்கும் மனுஷி என்னைப் பார்த்து சரியாக அப்பாவைப் போலவே இருக்கிறீர் என்றவர் இன்னும் என்னை எமது மூத்த அண்ணன் என்று நினைத்தே என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்."

நம் பேச்சிடையே ஆயிஷா சரவணனுக்கு எத்தனை பிள்ளைகள் என்பதை விசாரித்து தன் உறவினருக்காக வாங்கிவந்த சில உடுப்புக்களை அவனுக்குக்கொடுக்க முன் வந்தாள். நானும் என் பங்குக்கு இரண்டு டீ சேர்ட்டுக்களையும் இரண்டு டிரெளசர் துணிகளையும், லோஷனோடு ஒரு ஷேவிங் செட்டையும் சேர்க்க அவற்றோடு உருகிவிடாது எஞ்சியிருந்த சொக்கலேட் சட்டங்கள் சிலவற்றையும் ஒரு பையில் வைத்து ஆயிஷா கொடுத்தாள். வாங்கிக்கொண்டு விடைபெற்றுச்சென்றான்.

அவன் போனபின்னால் நாங்கள் முற்றத்தில் கொஞ்சநேரம் பாட்மின்டன் விளையாடினோம். மாலையானாலும் வியர்த்தொழுகியது.
"ஒரு டவல் தாரும் குளிச்சிட்டு வாறேன் " என்றேன். "இதோ" என்றுவிட்டுத் தலைவாசலுக்குள் போன ஆயிஷா சரவணனுக்கு வைத்த தேநீர் தீண்டப்படாமல் இருப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டு
"என்னப்பா உங்கள் சிநேகிதர் தேத்தண்ணி குடிக்கவேயில்லை, மறந்திட்டார்." என்றாள். தேநீர் கிளாசை எட்டிப்பார்த்த எழிலியும் " ஓம் அப்பா.................... அந்த மாமா தேத்தா குச்சேல்ல.." என்றாள் வருத்தத்துடன்.

ஆயிஷாகூடத் தன் வாழ்க்கையில் கொஞ்சம் நிறவெறி, பாசிசம், நாஷிசத்தை அனுபவித்திருந்திருக்கலாம், ஆனால் சாதியம்?
என் பிள்ளைகளுக்கும் அவைகளை உணரும் வயது பற்றாது.
முன்னவற்றைவிடவும் சாதியம் நீண்டகால வரலாறுடையது. அறிவை விடவும் அனாதியானது. ஒரு சகமனிதனின், விருந்தோம்புவானின் உணர்வுகளைச் சட்டை செய்யாத உள்வைரம் பாரித்திட்ட வன்மம் அது. ஜென்மாந்தரங்களுக்கும் தொடர்வது.

ஜாதிய அநாகரீகங்கள், அவமானங்கள், அவமதிப்புகளின் நிழல்கூட இவர்கள் மேல் படவேண்டாம். அதன் அசிங்கமான முகத்தைக் காண புரிய நேர்ந்தால் இவர்களும் வெட்க வேண்டிவரும்.

" ஜா.......... சிநேகிதன் மறந்துவிட்டான்............... நீங்களும் மறந்துவிடுங்கள்." என்றேன்.

"எல்லா வெள்ளாளனையும் சந்தேகி " என்ற கூற்று முதன்முதலாக மிகவும் அர்த்தம் மிக்கதாகப் பட்டது.

தேநீர் ஆடைகட்டி வெகுநேரமாகியிருந்தது.

*********************
(மல்லிகை , ஜனவரி-2003 38வதுஆண்டுமலர்.)