Freitag, August 19, 2005

இரட்ஷகன் வருகிறான்.

பொ.கருணாகரமூர்த்தி



அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத முதலே அவள் கடிகாரம் துடிப்பதை நிறுத்திவிட்டிருந்தது, புதிய ‘செல்’ மாற்றவேண்டும். அவள் நடத்தும் மினி பாலர் பாடசாலைக்கும் அன்றுவிடுமுறை.
இந்நேரம் மீன் அங்காடியில் வியாபாரிகள் வந்து கூடத் தொடங்கியிருப்பார்கள். வர்ஷிணி அவர்களது நாலு வயதுக் குழந்தை அநாமிகாவுக்கு மடத்தலை [பேபி றஸ்க்] தேனீரில் நனைத்து ஊட்டுகையில் ‘வசீகரன் நேரத்துக்குப் போய் மீனைவாங்கி வந்தானாயின் இனிக் காலைப்பலகராமென்று எதையும் தேடி வினைக்கெடாமல் உள்ள விறகில் சமையலையே முடித்துவிடலாம்’ என்று எண்ணினாள். அவளின் மனதைப் புரிந்துவிட்டவன்போல தான் சீராக்கிக்கொண்டிருந்த நீரிறைக்கும் இயந்திரத்தை ஒரு பக்கமாகத்தள்ளி உரச்சாக்கொன்றால் மூடிவைத்துவிட்டு “வர்ஷி பையை எடும் நான்போய் மீன் வாங்கியாறன்” என்றுவிட்டு பற்பொடியை வாயிலிட்டுத் துலக்கிக்கொண்டு முகம் கழுவ கிணற்றடிக்கு ஓடிப்போன வசீகரனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சூரியக்கதிர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமால் அவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்து இருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்கள் வாழ்ந்திருந்த வீட்டின் திறப்பு அவர்களிடமே பத்திரமாக இருக்க வீடும் சுற்றுமதிலும் காணாமல் போயிருந்தன.
‘எம்மினமே’ வீட்டையும் , கூரையையும், மதிலையும் கல்லுக்கல்லாய் பெயர்த்துக் கொண்டுபோயிருந்தது. வீட்டிலுள்ள பொருட்கள் திருட்டுப்போவதென்பது எந்த நாட்டிலும் வழக்கந்தான். இங்கே தீராதபோரும் இழப்புக்களும் ஒரு வீட்டையே திருடிச்சென்று பிழைப்பதற்கு இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

மூன்றுவருஷ முன்னர் அரசுக்கும் போராளிகளுக்குமிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உண்டானதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்டுத் தத்தம் வாழிடங்களுக்கு மீளத்திரும்பிய மக்களுக்கு யுனெஸ்கோ நிறுவனம் வீடமைப்பதற்கென 50 சீமெண்ட் பக்கெட்டுக்கள், நாலோ ஆறோ கொங்கிறீட் தூண்கள், அலுமினியக் கூரைத்தகடுகள், வாளி, சமையல் பாத்திரங்கள் எனச்சில பொருட்களை நிவாரணமாக வழங்கியிருந்தது. இயல்பிலேயே வல்லவியான வசீகரன் அத்தூண்களை நிறுத்திக் கூரையமைத்து, தரைக்கு சீமெந்துபோட்டு , அரையளவு உயரத்துக்கு குந்துச்சுவர்வைத்து, மீதி உயரத்தின் இடைவெளியை பீப்பாய்த்தகரத்தாலும் , சப்புப்பலகையாலும் அடைத்து, அழகான சிறியதொரு வீட்டைச் சமைத்திருந்தான். தகரத்தால் வேய்ந்த கூரையின் இருபக்கங்களையும் சாய்வு ஒத்தாப்புக்களாக இறக்கி அவற்றினுள் ஒருபக்கம் சமையல், மற்றது அவனது மினி வேக்ஷொப். அதனுள்தான் உந்துருளிகள், விசையுருளிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கதவுகள், பூட்டுகள் திருத்தவேலைகளென்று ஏதாவது செய்துகொண்டிருப்பான்.

சமாதானத்தோடு வடக்கில் சிலபகுதிகளுக்கு மின்சாரவிநியோகமும் வந்துவிட்டதால் அவ்வப்போ மின்காற்றாடிகள், நீர்தாங்கி மோட்டார்களின் றீவைண்டிங் , வீடுகளுக்கு மின்சுற்றுக்கள் அமைத்தல் என்று வேலைகள் கிடைக்கும். வசீகரன் உழைப்பதற்கு எப்போதும் தயங்குவதில்லையாதலால் யாராவது கோழிக்கூடு அமைத்தல், கழிப்பறைக் கதவுமாற்றுதலன்ன சிற்றூழியங்களுக்குக் கூப்பிட்டாலும் மறுக்காதுபோய்ச் செய்துகொடுப்பதால் நகர்கிறது அவர்களது சீவியம்.
ஜேர்மனியிலிருந்து அவன் தோஷ்த்து வேந்தனின் கடிதம் ‘அடுத்தமாதம் ஊருக்குவருகிறேன்’ என்று வந்த நாளிலிருந்து ஒரு புது ஆளாய்மாறித் தானாகவே எல்லாக் காரியங்களையும் ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு செய்துமுடிக்கிறான்.
. சாதாரணவேளைகளில் காலையில் வேர்க் ஷொப்பினுள் புகுந்துவிட்டானேயென்றால் அவனை மதியம் அங்காடிக்கு அனுப்பி மீனோ, காய்கறிகளோ வாங்குவிப்பதானால் பெரும் வல்லையாகவிருக்கும். பத்துமணிக்கே வர்ஷிணி அவனை உருவத் தொடங்கினால் வேண்டாவெறுப்பாய் முனகிக்கொண்டு சந்தை கழுவுகிற நேரம் போய் ‘மீன்காரியின் காலிக்கடகத்தை தலைக்கு எடுக்கிவிட்டு வருகிறேன்’ என்று வருபவன் இப்போ என்னடாவென்றால் ‘நீ உத்தரவை காலாலே இடு, நான் தலையாலே முடிக்கிறேன்’ என்று நிற்கிறான். இந்த அதீத உற்சாகமும் பூரிப்பும் எங்கேயிருந்து வந்தனவென்பதுதான் அவளுக்கும் அடியோடு பிடிபடவில்லை.

உந்துளுருயில் வர்ஷிணியை வளைஞ்சு வளைஞ்சுகொண்டு திரிந்த காலத்தில் இருந்ததைப்போல முகத்திலொரு மலர்ச்சிகூடிவந்து சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் சிரிக்கிறான் சின்னப்பயல்போல. அவனை நுட்பமாகக் கவனிக்கிறவர்கள் யாரும் ‘கொஞ்சம் மேலான் பிசகிப்போச்சென்று’ நினைக்கப் போகிறார்களே என்றுகூட வர்ஷிணி லேசாகப் பயந்தாள்.

இரவு இரண்டுமணிக்கும் படுக்கையில் நித்திரை வராமல் புரண்ட வசீகரன் அவள் காதுச்சோணைகளை நீவிக்கொண்டு சொல்கிறான்: “இனி நமக்கொரு வாழ்வு வாறதெண்டால் அது வேந்தனாலைதான்.” அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. தம் வாழ்வில் ஒளியேற்ற குசேலரைத் தேடிக்கொண்டு ‘ஒரு கண்ணனே வருவதான’ ஒரு கனவில் இருக்கிறான் அவன்.வேந்தனுக்கு ஆடு அடிக்கவேணுமாம், கோழி பிடிக்கவேணுமாம், பனங்கள்ளுக்குச் சொல்லி வைக்கவேணுமாம், இராசவள்ளிக்கிழங்கு, பலாப்பழம், மாம்பழம், கப்பல் வாழைப்பழம் எல்லாம் வாங்கவேணுமாம் , முழ நீளப்பட்டியலே வைத்திருக்கிறான்.

“ உங்க தோஷ்த்து ஜெர்மனிக்குப்போயும் இப்ப பத்துப்பதினைந்து வருஷங்களாச்சு, ஒவ்வொருமுறை வாறபோதும் தவறாமல் ‘நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு’ என்கிறாரேயொழிய கூப்பிடுறதுக்கு உருப்படியாய் வழியொன்றும் பண்றதாய்க்காணமே.........”

“ •போறினுக்குப் போறதெண்டதேது டிப்ளோமட்ஸ் விசாவோடபோய் இறங்கிறமாதிரியான விஷயமே....... அதிலும் எத்தனை ஜவ்வுகள் சிக்கல்கள்...... றூட்ஸ் எல்லாம் இப்ப முன்னைமாதிரி இல்லை, ஒவ்வொன்றும் இறுகிப்போய்க்கிடக்கு. இடையிலை ஒவ்வொரு குளிர்தேசத்திலும் அங்கங்கே ஆறுமாதம் ஒருவருஷமென்று தொங்கவேணும்... அவனும் சுளுவாய் முடியிற விஷயமெண்டால் எனக்குப் பண்ணாமலிப்பனோ........ அவன் முன்னை வந்துபோன சமயங்களைவிடவும் இந்தமுறை போரழிவுகள், தாக்குதல்கள், சிதைவுகள், இடப்பெயர்வுகளுமாய் இந்த அவல வாழ்க்கையின்ரை தரிசனங்கள் அவன்ரை மனதைத்தொட்டு எங்களுக்கு ஏதோ ஒன்றை உருப்படியாய் பண்ணவைக்காமல் விடாது........ பாருமன்.”
வசீகரனும் நண்பனை இலகுவில் விட்டுக் கொடுத்துவிடமாட்டான்.

வேந்தன் அவனுடைய பால்ய நண்பன் மாத்திரமல்ல, உறவுக்காரனும். தந்தை வழியில் பார்த்தால் சகோதரனாம், வசீகரனின் தகப்பனுக்கு அவனின் அம்மம்மாதான் மச்சாளாம். அவரோ மச்சாளுக்குப் பதிலாய் மச்சாளின் மகளென்று இவன் தாயை முறைமாறி முடித்ததால் தாய்வழியில் பார்த்தால் மச்சானாம்.வசீகரனே தன்னுடைய உறவுமுறைகளத் தமாஷாகச் சொல்வான்: “ நானே இரண்டு தலைமுறை அப்பா வழியிலை றிவேர்ஸில் போயிட்டு அம்மா வழியாலை வந்தேனெண்டால் எனக்கு நானே மச்சானாகியிருப்பன் ”.
ஊர் பள்ளியில் இருவருமே ஒரேவகுப்பில் படித்ததால் வகுப்புகளுக்கு மட்டமடித்துவிட்டு மாட்டுக்காரவேலன், ராஜராஜசோழன் பார்க்கப் போனாலென்ன, கீரிமலைக்குப் போய் நீச்சலடிக்கிறதென்றாலென்ன இரண்டுபேரும் ஒன்றாகத்தான் போவார்களாம். ‘வெளிக்குப் போகிறதென்றால்கூட அவங்கள் இரண்டுபேருக்கும் ஒன்றாய்போனால்தான் சரியாகப்போகும்’ என்று அயலில் பகடி சொல்வார்களாம்.

வேந்தன் மனைவி கோமதியைப் பார்த்தாலும் சாதுபோலத்தான் இருக்கு. எல்லாருடனும் நல்லமாதிரித்தான் பழகுகிறாள். அப்படி வில்லத்தனங்கள் பண்ணக்கூடியவள் மாதிரித் தெரியவில்லை. ஆனால் இந்தத் தீனர்கள்மேல் அந்தக் காருண்யனின் பார்வை விழுகிறதில ஏன் இத்தனை மெத்தனம் என்பதுதான் அவனுக்கோ வர்ஷிணிக்கோ பிடிபடுகுதில்லை. ஆனாலும் அப்பாவித்தனமாய் வசீகரன் இன்னமும் வேந்தன் தன்னை ஜெர்மனிக்குக் கூப்பிடுவான் என்று நம்பிக்கொண்டிருப்பது வர்ஷிணிக்கு முட்டாள்த்தனமாகவும், அவன்மேல் கோபத்தையுண்டு பண்ணுவதாகவுமிருக்கிறது.
தன்குரலிலே ஒரு கடுமையை ஏற்றிவைத்திருப்பதான பாவனையில் புருஷனிடம் சொன்னாள்:
“ வேந்தனும் இவ்வளவு காலத்திலை தன்னுடைய குடும்பத்துக்குள்ளதான் ஒவ்வொருத்தரையும் ஜாக் அடித்து எழுப்பிவிட்டிருக்கிறாரே தவிர வெளியாலை யாருக்கும் வெள்ளைச்சல்லி காட்டின மாதிரித்தெரியேல்ல.”
“அவன்ரையும் பாரிய குடும்பந்தானே........ அவன் ஒருத்தன் தனிச்சு அடிச்சு என்னதான் செய்வான்?”
“நான் சொல்ல வாறதென்னென்றால் பச்சிலர் வாழ்க்கையில அவருக்கு உதவிறதுக்கு சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம்........ ஆனாப்பொதுவா குடும்பம் மனைவியெண்டு வந்தால் பிறகு அவளவை அவங்களைத் தங்கடை இஷ்டத்துக்கு எதுவும் செய்யவி டாளவையப்பா....... கால்கட்டு கைக்கட்டென்றது அதைத்தான்......... அவருக்கு மனதில மாற்றம் வந்தால் வருகுது, வராட்டிப்போகுது.........எதுக்கும் இன்னும் சும்மா வீண் நம்பிக்கைய வளர்த்துக் கொண்டிருக்காமல் இந்தமுறை தோஷ்த்தை இருத்திவைத்து நெற்றிக்கு நேரே விஷயத்தைக் கேளுங்கோ. அவர் ஒன்றும் எமக்கு நிந்தத்துக்குப் பண்ணவேண்டாம், போய்ச்சேர்ந்து உழைக்கத் தொடங்கினவுடனே முதல் காரியமாய் அவற்றை காசு வட்டியோடை திருப்பித்தருவமென்று...... முடிஞ்சால் கூப்பிடட்டும் , முடியாட்டிப் போகட்டும்..... உண்டு அல்லது இல்லையெண்டு இருப்பம். “
“நீர் ஏதோ கொடுத்துவைச்சதைக் கேட்கிற மாதிரியல்லே கதைக்கிறீர். அவனுக்கும் சொல்லக்கொள்ள மாட்டாமல் என்னனென்ன இடைஞ்சலுகளோ யாருக்குத் தெரியும்? செய்தானேயெண்டால் பார்க்கலாம்...... அதைவிட்டுப் •ப்றெண்டென்றாலும் இதைச்செய் அதைச்செய்யென்று •போஸ் பண்றது அன்•பெயர். என்ர அப்பரும் நேரத்தோட கண்ணைமூடிவிட அம்மா என்னைக் கஷ்த்தோடதான் வளர்த்தவ. ஆனாலும் அவ ‘தோழனோடும் ஏழமை பேசேல்.’ என்று எங்கிட்ட அடிக்கடி சொல்லுவா, அந்த வார்த்தை அவகுரலோட என்ர அடிமனதிலை தங்கி நிக்கிறதால என்னால யாரிட்டையும் எதையும் போய் யாசிக்கேலாது.”
“ உதைத்தான் ‘ஈகோ’வென்றது , இவனிட்ட என்ன கேட்கிறதென்ற கர்வம். கொம்மாவிட்டையும் அதுதான் நிறைய இருந்திருக்கோணும். நான் ’கேட்கிறது’ என்றன்.......... நீங்கள் ‘யாசிக்கிறது’ என்றியள்.எமக்குப் பொட்டுக்கிளாலை புகுந்தால்தான் போகலாமெண்டால் தலைகுனிஞ்சுதானே ஆகவேணும். காரியம் ஆகவேணுமென்றால் கிடந்து நுழைகிறவனுக்கும் கீழாலை நுழையிறதுக்கு அவனவன் ஆயத்தமாயிருக்கிறாங்கள்.”
“ எதை வேணுமெண்டாலும் சொல்லி என்னைத்திட்டும். எனக்கு தலை குனியறதல்லடா பிரச்சனை, அவனுக்கு நம்ம நிலமை, நாட்டு நிலமை உள்ளும் புறமும் நல்லாய் விளங்கும். நாம எடுத்து விளம்பித்தான் எல்லாம் தெரிஞ்சுகொள்ற பேர்வழியல்ல அவன், பெரிய தத்துவார்த்தியாக்கும்.”
“சாமி கும்பிடுங்கோவென்றாலும் ‘அவர்தானே கரும ஆதி. அவர் அறியாமல் ஒரு கருமம் இந்தப் பிரபஞ்சத்திலை இருக்குமோ’ என்கிறியள், •ப்றெண்டோடை பேசுங்கோவெண்டாலும் ‘அவனுக்கு எல்லாம் தெரியும்’ என்கிறியள்.”
“நீர் அறியமாட்டீர், யு.கேயிலை ( உடையார் கட்டு ) இரண்டுபேரும் தோட்டஞ்செய்யிற காலத்தில எத்தனை இரவுகள் நுளம்புக்கடிக்கு எழும்பி இருந்து சொறியிற நேரத்திலகூட இந்த மேகத்தை எப்பிடித் தொடுறது, வானத்தை எப்பிடி வளைக்கிறதெண்டு எத்தனை பிளானுகள் பண்ணியிருப்பம். அவன் தன்ரை குடும்பத்தைத்தான் முதல்ல நிமித்தவேணும்,. ‘ஒரு மனிதனுடைய தர்மங்கள் முதல்ல அவனுடைய குடும்பத்திலைதான் ஆரம்பிக்குமாம்’, அதனால முதல்ல உள்வட்டம், பிறகுதான் வெளிவட்டம்.”
குழந்தை அநாமிகாபோய் வர்ஷிணியின் மடியில் தலை வைத்துக்கொண்டு படுத்திருக்க வர்ஷிணியும் அவளது தலைக்குள் தன்விரல்களை விட்டுச் சுகமாகக் கோதிவிட்டபடி வசீகரனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அநாமிகா அந்தக்கோதலின் சுகத்தை அனுபவித்தபடியே இயல்பில் தாயிடம் ‘வளவள’ வென்று பேசவோ விவாதிக்காத அப்பா இன்று ‘என்ன விஷயமாக இப்படி விவாதிக்கிறார்’ என்பது புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டாள்: “ ஏனம்மா அப்பாவும் ஜெர்மனிக்குப் போகப்போறாராமோ........? ”
“ ம்ம்ம்ம்.......அப்பா கிழிச்சார், எங்கட செல்லக்குட்டிதான் நல்லாய் படிச்சு ஸ்கொலஷிப்பில ஜெர்மனி, அமெரிக்காவெல்லாம் போகுமாம்.”
“ கொளஷிப்”, “கொளஷிப்” என்று இரண்டுதரம் சொல்லிப்பார்த்துவிட்டு“ கொள- ஷிப்பிலை இல்லை........ நான் பிளேனிலைதான் போவன்.”
“ சரி........ என்ரை செல்லம் பிளேனிலைதான் முகிலுக்கு மேலால பறந்துபோகுமாம்.” என்றுவிட்டு அவளைவாரி முத்தமிட்டாள்.
“ முதல்ல உள்வட்டம் பிறகு வெளிவட்டம் என்றது சரிதான். பெண்சாதியின்ரை தம்பிக் களிசடையை எந்த வட்டத்திலை இருந்தாமணை கூப்பிட்டவர்? ”
“ களிசடையென்று நீயே சொல்லுறீர், அவன் போனதால இப்ப ஊர் திருத்தமல்லே....... அப்ப அதைச் சமூகசேவையிலை வைக்கிறது.”
“நல்ல சமூகசேவை..... அங்கைபோயும் அந்த நரகாலி டிறக்ஸ் ஏதோவித்து மாட்டுப்பட்டு உள்ளுக்கைதான் கிடக்குதாம்.” “இப்ப அவனுக்கு ‘நீ உன்ரை களிசடை மச்சானை எப்பிடிக் கூப்பிடலாம்?’ என்று கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பலாமென்றீரோ?” “உங்களுக்கு எல்லாம் தமாஷ்தான்.”
“இந்த இதயம் இருக்கல்லே இதயம்....... அது உடம்பிலுள்ள அத்தனை அங்கங்களுக்கும், இழையங்களுக்கும் முக்கிமுக்கி ஓய்வில்லாமல் இரத்தத்தை பம்ப்பண்ணிக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆனால் தன்னுடைய சுவர்த்தசைகளுக்குப் போதுமான சப்ளை இருக்கோ இல்லையோ என்கிறதை அறியாது. நாளடைவிலை சப்ளை போதாத செல்லுகள் இழையங்கள், தசைநாருகள் சாகத்தொடங்கினாப் போலதான் கடைசியா அது ‘பக் பக் பக்’கென்று நொண்டியடிக்கும். அதிலதான் ‘ஹார்ட் அட்டாக்’ வாறது. நான் நினைக்கிறன் அந்தமாதிரி வேந்தனும் என்னைத் தன்னுடைய இதயத்துக்குள்ளதான் வைச்சிட்டான்........”
“இண்டிமேசி கூடினதால •ப்றெண்ட் சப்ளை இல்லாமச் சாகிறதை உணரேலாம இருக்கென்றியள். அப்போ அவருக்கது புரியவர மூச்சுத்திணர்ற காலம் அந்திமம் வரவேணுமென்றியள்.”
“ அவன் உணராட்டிப்போறான் போகட்டும்...... அந்திமம் கருமாதி என்றெல்லாம் கதையாதையும், அவனும் குடும்பமும் சகல ஐஸ்வரியத்தோடையும் நூறுவருஷத்துக்கு வாழவேணும். மற்றவருக்கும் உதவி செய்யிறதுக்கு வசதியும் வாய்ப்பும் இருக்கிற ஒரு மனுஷன் வெளியுந்தல்கள் இல்லாமல் தன்னுணர்வில செய்தானேயெண்டால் அதை வரவேற்கலாம், பராட்டலாம். ஆனால் ‘ஏன் நீ அப்பிடிச் செய்யேல்லை, இப்பிடிச் செய்யேல்லையென்று’ கேட்கற உரிமை எப்பிடி இன்னொருவருக்கு வரும்? ”
என்றுவிட்டு நல்லதண்ணீர் அள்ளிவருவதற்காகப் பிளாஸ்டிக் குடத்தைச் உந்துருளியில் வைத்துக்கட்டினான். பின் அதில் ஏறி உட்கார்ந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு “இப்பிடியும் இருக்கலாமப்பா.......... ‘ஏய் மனுஷா...... இரக்கத்தை மட்டும் உன் மனதின்பக்கம் அணுகவிடாதே. அது நாளடைவில் உன்னை முழுக்கோழையாக்கிவிடும்’ என்று அவங்க தேசத்துக்காரர் ஒருத்தர்தான் சொல்லியிருக்கிறார், இவனும் அதைப்படிச்சிட்டு எதுக்குக் கோழையா.... வீரனாவே இருப்போமென்று தீர்மானிச்சிட்டானோ........?” என்று விட்டு உருளியை உந்தலானான்.
வர்ஷிணிக்கு ஆயாசத்திலும் சிரிப்புத்தான் வந்தது.

*****************
ஈழப்போர் உக்கிரமாக வெடிக்கு முன்னம் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு எல்லாரையும்போல வேலைதேடி அலைந்த காலத்தில் சும்மா சொல்லக்கூடாது தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடெல்லாம் இப்போதுள்ள அளவுக்கு ‘முனைவாக்கம்’ பெற்றிருக்கவில்லை. வங்கி சிறா•ப் , சுங்கப்பரிசோதகர்கள், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனங்களுக்கு பதினையாயிரம், மீன்பிடிக்கூட்டுத்தாபனம், கட்டிடக்கூடுத்தாபனம் , பொது எழுதுவினைஞர் சேவை, ஆசிரியர் நியமனங்களுக்கு பன்னிரண்டாயிரம் என்ற றேட்டுகளில் அரசபணி வாய்ப்புக்கள் நிறைய இருக்கத்தான் செய்தன. ஆனாலும் வசீகரனுக்கோ அவ்வளவு தொகைத்திரட்டி அவ்வாறான பணிகளில் அமரக்கூடிய பொருண்மியப் பின்னணி இருக்கவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இளைஞர்கள் கொஞ்சம் பணம் புரட்டக்கூடிய குடும்பங்களிலிருந்து பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே என்று ஐரோப்பியநாடுகளுக்கும், கனடாவுக்கும் வேலைதேடிச் சென்றுகொண்டிருந்தார்கள். வேந்தன் குடும்பத்தைப் பொறுத்தமட்டில் பத்துப்பதினைந்து செலவுசெய்து அவனையொரு அரச உத்தியோகத்தில் அமர்த்துவதைவிட ; இருந்த நிலத்தை ஈடுவைத்தும், கொஞ்சம் கடனையுடனைப்பட்டும் இருபத்தைந்தாயிரம் செலவுசெய்து பாரீஸ¤டாக ஜெர்மனிக்கு அனுப்பிவிடுவதென்பது உகந்த முதலீடாகப்பட்டது. அவனும் குடும்பப்பொறுப்பு, கரிசனையுள்ள பிள்ளை. பெற்றவர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் குடும்பத்தை அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே நிமிர்த்தி உயர்த்திவிட்டான். அவனும் ஜெர்மனி போய்ச்சேர்ந்து வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்தில் சடுதியில் பலமாறுதல்கள் ஏற்படலாயின.

பொழுது ‘எப்போது பொழுது செக்கலாகுமென்று’ காத்திருந்து முதுகுக்குப்பின்னால் கைகளைக் கோர்த்துக்கட்டியபடி வீதிக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு இருளோடிருளாகக் கலந்து கள்ளுக்குக்கேகிய அவன் தகப்பனார் தம்பாபிள்ளையர் இப்போதெல்லாம் டவுணிலிருந்து சங்கையாக ‘மெண்டிஸ் ஸ்பெஷல் சாராயம்’ எடுப்பித்து நடுக்கூடத்தில் சாய்மனைக்கட்டிலில் அமர்ந்து பந்தாவாகக் குடிக்கிறார்.

மாநகரசபையில் எழுத்தர் வேலைக்கு அடைக்கோழி மாதிரிக்கேரும் ஒரு பழைய ‘றலே’ உந்துருளியில் உந்தித்திரிந்த மூத்த சகோதரன் ராஜ்குமாரன் அதை வீட்டுக்கோடியில் சாய்த்துவிட்டு இப்போது புது யமஹா - •ப்ளாஷர் விசைஉருளியில் 80 கி.மீட்டர் வேகத்தில் வழுக்கித்திரிகிறான்.

குடும்ப அக்கறைகள் இல்லாதவனும் சுயநலமியுமான இரண்டாவது சகோதரன் ஒருத்தன் குடும்பத்தோடேயே ஒட்டாமல் ஒரு வேற்று மனுஷன்மாதிரி அவர்களோடு வாழ்ந்தவன், ராஜ்குமாரனையும் முந்திக்கலியாணம் பண்ணிக்கொண்டு மாமியார்வீடே சொர்க்கம் என்று வீட்டு மாப்பிள்ளையாகப் போய்விட்டிருந்தான். அவன்கூட இப்போது இரவுவேளைகளில் ஒவ்வொரு நாளைக்கொரு பிள்ளையாக உந்துருளியில் தாத்தா பாட்டியிடம் கூட்டிவந்து அவர்களுக்கு ‘ஆசீர்வாதங்கள்’ பெற்றுக்கொண்டு போகிறான்.

உக்கிரமான ஈழப்போர் தொடங்கமுன்னரே ஐந்தறையில் ஒரு வீடு எழுப்பியது, இரண்டு சகோதரிகளைக் கட்டிக்கொடுத்து அவர்கள் குடும்பங்களை ஜெர்மனிக்கு அழைத்தது, இளைய தம்பிமார் இரண்டுபேரையும் கனடாவுக்கு அனுப்பியது என்று நிறையவே சாதித்துவிட்டு ஒன்பது வருஷங்களின்பின் ஜெயராமனாக வந்து வேந்தன் இறங்கவும், பற்பல ஊர்களிலிருந்தும் பெண்களைப் பெற்றவர்களும், கல்யாணத் தரகர்களுமாக அவன் வீட்டில் குழுமத் தொடங்கினர்.
பார்த்த பல இடங்களிலும் அவன் மனசை ஈர்த்துவிட்டிருந்த கோமதி வீட்டாருடன் கடைசியில் தம்பாபிள்ளையர் சீதனத்தில் கடும் போக்குக்காட்டி ‘பிச்சாது ஒரு லட்ஷம்’ ரூபாயில் சம்பந்தமே குழம்பிவிடுமோ என்ற நிலைக்கு வந்தபோதும் வேந்தன் தேசவழமைப்படி வாயைத் திறவாது ‘அச்சாப்பிள்ளை’யாகவே இருந்தான்.
வசீகரனும் ஆற்றாமல்“ ஏன்டா....... மேற்கத்தை நாடுகளிலையெல்லாம் இப்போ நம்ம பெடியங்களுக்கு ‘நோ டௌறி’ என்கிறதுதான் புது ‘ட்றென்டாமே’ ....... வட் எபௌட் யூ கொம்றேட் ?” என்றதுக்கு“ இது ஆர்......ஆர்.......ஆற்றை விசர்க்கதை........... இப்ப இதுவே ஜெர்மனியாயிருந்தா இந்த ‘சம்மை’ ஜெர்மன்மார்க்கிலை டிமாண்ட் பண்ணியிருப்பன் தெரியுமே......? ஒரு சின்னச்சம்பவம் சொல்றன்கேள்:
‘என்ரை •ப்றெண்டு ஒருத்தன் கரவெட்டிப் பெடியன் நாலு மாசமுன்னே இங்கேவந்து கலியாணங்கட்டி வை•பை அங்கே கூட்டியந்தவன்........... பொண்ணு வந்தது வரக்குள்ள அவனிட்ட ‘ஏன் உங்கடை கார் எங்கே?’ என்றாளாம். அவனும் கபடில்லாமல் ‘பாங்கில கொஞ்சம் கிறெடிட் இருக்கு டியர், இன்னுமொரு ஆறுமாசத்தாலதான் காருக்கு லோன் எடுக்க வசதிப்படுமென்று’ உண்மையைச்சொல்ல‘உப்பிடியெண்டால் அப்பரிட்டை இன்னொரு பத்து லட்ஷத்தை காருக்கு நீங்கள் கூட்டிக்கேட்டிருக்கலாம்....... காணிவித்து வைச்சிருந்தவர்’ என்றாளாம். இது எப்பிடியிருக்கு...... நானும் சீதனத்தை ஆகக் குறைச்சனேயெண்டால் கோமதியே என்னைக் கோபிக்கிறமாதிரியும் வரும்.” என்றுவிட்டுச் சிரிக்கிறான்.

வாழ்க்கையில் நிறைய முன்னேறவேணும் சாதிக்கவேணும் என்ற கனவுகளுடனிருந்தவர்கள் இரண்டுபேரும் பள்ளிப்படிப்பு முடித்ததிற்கும் வேந்தன் ஜெர்மனிக்குப் புறப்படுவதற்குமிடையிலான இடைவெளிக்குள் சேர்ந்து முயன்றுபாராத தொழிலேயில்லை.
முதலில் முள்ளியவளை புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்குப்போய் தென்னந்தோப்புகளில் திரிந்து தேங்காய்கள் வாங்கி சாக்குகளில் கட்டி தட்டிவானிலே கொண்டுவந்து சாவகச்சேரி சுன்னாகம் சந்தைகளில் விற்றார்கள். சீசனிலை மிளகாய் கட்டி பாரவுந்துகளிலை கொழும்புக்கு ஏற்றினார்கள், எதிலும் இலாபம் அவர்கள் உழைப்புக்குப் போதுமானதாக இருக்கவில்லை.
தோட்டம் செய்துபார்ப்போமென்று முத்தையன்கட்டிலும், உடையார்கட்டிலும் காணிகளைக் குத்தகைக்கு எடுத்து மிளகாயும் வெங்காயமும் வைத்தார்கள். மிளகாய்செடிகள் பூத்து பிஞ்சுபிடிக்கிற நேரம் பார்த்து பாசனக்குளம் வற்றிக் கையை விரிக்கிறது. மனம் தளரவில்லை, சும்மா இருக்கவும் மனமில்லை. காடுவெட்ட, களனி துப்புரவாக்க, அரிவு வெட்ட, வேலியடைக்கவென்று அங்கேயே கூலிவேலை செய்தார்கள், போதவில்லை.
மணிச்சாமான்கள், வளையல்கள், அலுமினியம் பிளாஸ்டிக் பாத்திரங்களை கொழும்பில் மொத்த விலைக்கு வாங்கிவந்து முல்லைத்தீவில் பேருந்துநிலையப் பக்கமாக கடையொன்றைப் பிடித்து அதில்வைத்து விற்றார்கள். வெட்கத்தை விடுத்து வன்னிவிளாங்குளம் அம்பாள், தண்ணீரூற்று, முள்ளியவளை வில்லூன்றிப்பிள்ளையார் , புதூர் நாகதம்பிரான், மாடுமாதா, கோவில் திருவிழாக்களுக்கெல்லாம் எடுத்துப்போய் கடை விரித்தார்கள். எவ்வளவுதான் பாடுபட்டாலும் இவைகளெல்லாம் ஜீவித்திருக்கப் போதுமானதாய் இருந்ததேயொழிய அவர்கள் கனவுகள் இன்னும் தூரத்திலேயே இருந்தன.
வசீகரன் வேந்தனைக் கேட்டான் : “ மச்சான் திருவிழா மணிச்சாமான்கள் வியாபரத்தோடை ஒத்துப்போகும் பார்....... சின்னதாய் மல்லாகத்திலை சிகரமும் ஒன்றுகட்டி, மலையகத்தில லேசாப்பிடிக்கலாமாம் மார்க்கண்டற்றை செற் மாதிரி ஒரு சச்... சதுர்க்கோஷ்டியும் இறக்குவமே? ”“ டோலக் வாசிக்க, பித்தளைத்தகட்டில ‘சொடாங்’கென்றுபோட வொன்றுக்கும் ஆள்தேவையில்லை......... சும்மா நீயே பூந்து விளையாடுவாயாக்கும்........ நாய்வீட்டுநாயே...... இப்பவே பார்க்கிற உத்தியோகத்துக்கு ஊராட்களைக்கண்டால் காட்டுக்க பதுங்க வேண்டியிருக்கு இதுக்குள்ள சதுர் இல்லாததுதான் கேடென்ன? ”
“ இனி எங்களுக்கு யாரும் பெண்ணும் தரமாட்டாங்கள்தானே....... அதுதான். யோசனை ஒருக்கால் அப்பிடிப்போச்சு........ பிழைக்கவேணுமெண்டால் சன்லைற்றுப் பெட்டிகட்டி மீன்விக்கவும் தயாரெண்டு பறைஞ்சது யாராக்கும்? ”
“ பொம்பிளையளை வைச்சு அவர்களைச் சுரண்டியொரு நாய்ப்பிழைப்புத் தேவையா நமக்கு? ”
“ அதொரு கலைதானே கொம்றேட்? ”
“ கலை, கொலையென்டு பறைஞ்சாப் பல்லைத்தட்டிப்போடுவன் மூடிக்கொண்டிரு நாயே.”
“ நீ முக்காதை மூலம் வெளிக்கிடப்போகுது...... நான் சும்மாதான் விட்டுப்பார்த்தனான்.”
வேந்தன் கோமதி திருமணத்திலும் வசீகரன் பந்தல் போடுவதிலிருந்து, சந்தையில் அரிசிமூடை, காய்கறிசாமன்கள் , எண்ணை , சீனி வாங்குவது , கூறை எடுப்பது, ஐயர் மேளகாரர், சமையல்காரரை அழைப்பதோடு, நாலாம் சடங்கு முடிய பந்தல்கால்கள் பிரித்து அடுக்கி வைப்பதுவரை எல்லாக் காரியங்களையும் உள்வீட்டுப் பிள்ளையாயிருந்து கச்சிதமாகவே செய்துமுடித்தான்.

பந்தலுக்கு விரிக்க ஊரில் யாரிடமோ இரவலாக வாங்கிய கதிர்ப்பாய்களை ஒரு கை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வரும் பொழுது வசீகரன் வானத்தைப் பார்த்துக்கொண்டு சொன்னான்: “பெண்களைச் சுரண்டிறது, டீஸ் பண்றதெல்லாம் சூவானிஸம் சீதனம் வாங்கிறது •பியூடலிஸம் என்றெல்லாம் பல இஸங்கள்பற்றித் தோழர் ஒருகாலம் நம்மோட பறைஞ்சிருக்கு.”
“தோழர் எதை மனதிலவைச்சு முணுக்கிறாரெண்டு விளங்குது.... இப்பவும் அந்தக் கொன்செப்டிலை எனக்கு ஒரு மாற்றமுமில்லை. பெண்களை டீஸ் பண்றது எனக்கு என்றைக்குமே பிடிக்காதுதான். ஆனால் இதொரு மெட்டீரியலிஸ்டிக் உலகம் என்கிறதை நாங்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் பார், தத்துவங்களை எத்தனை தொன் வேணுமானாலும் நாங்கள் உற்பத்திசெய்யலாம், ஆனாலும் இதே நடைமுறை உலகத்திலதான் நாம் வாழவேண்டியிருக்கு. சோஷலிசமெல்லாம் எப்பவோ குடைசாய்ஞ்சுபோச்சு, என்ரை மச்சான்மார் என்னட்டைச் சீதனம் வேண்டாமெண்டாங்களோ, இன்னும் என்னத்தை உருவலாமெண்டுதான் இன்றைக்கும் உள்மடியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாங்கள், சீதனம் கூடாதுதென்கிறதில எனக்கு மறுப்பேயில்லை. அந்த வீட்டிலும் இரண்டுபேர் கனடாவிலையிருந்து உழைக்கிறாங்கள். அதனால இருக்கிறவனிட்டை எடு , இல்லாதவனை விடு. இதுதான் த மொடேர்ண் அண்ட் அப்பிளிக்கபிள் பிறின்சிபிள். பி அப்டேட்டட் வித் திங்ஸ் மேன்.”

ஜெர்மனிக்கு புறப்படுகையில் வேந்தன் கல்யாணத்திலே மாய்ந்து தேய்ந்த தோஷ்த்துக்கு தான் பாவித்து மீதமிருந்த ஷேவிங் கிறீமைத்தான் கொடுத்தான். ஒருகணம் ‘சுருக்’கென்றுதான் அவனுக்கும் இருந்தது. குறைந்தபட்ஷம் அவன் கொண்டுவந்திருந்த டீ-ஷேர்ட்களில் ஒன்றையாவது கூடவே கொடுத்திருக்கலாம். எல்லாம்நமது அந்நியோன்யத்தில் ‘நான் குறைவிளங்கமாட்டேன்’ என்றுதானே அப்படித் தருகிறானென்று உடனே சமாதானமுமானான்.

எல்லாமும் ‘அவன் அறிந்து வந்திருக்கிற புதுப் பிறின்சிபிள்களோ, முகம் விரவிய கண்களை வைத்துக்கொண்டு அவனையே தியங்கத்தியங்க பார்த்துகொண்டிருக்கிற புதுப்பெண்ணின் மோகமோ, கலியாணச் சந்தடி அலைச்சல்கள், தூக்கக்குறைவின் கலக்கங்களோ பயல் இப்ப கொஞ்சம் மயக்கத்திலதான் இருக்கிறான். இயல்பான சிந்தனை புத்தி இருக்காதுதான், போகட்டும். இதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்கள்.’ வர்ஷிணியிடம்கூட ‘அதுபற்றி’ இதுவரை ஒரு வார்த்தை வசீகரன் சொன்னதில்லை.

வேந்தனின் புதியவாசிப்புகளின் விளைவாயிருக்கும் சொல்கிறான்: உலகத்தில் ‘அதிஷ்டம்’ என்று ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம் , அப்பிடி நாங்கள் நம்பிறது சில பொசிடிவ்/சாதக இயக்கங்களின்...... ஒத்திசைவைத்தானாம்.
அப்பிடித்தான் சுதந்திரத்துக்குக்கூட இப்ப புதுவியாக்கியானம் வைத்திருக்கிறான்: ‘சுதந்திரம்’ என்றொரு விஷயம் உலகத்திலேயே இல்லையாம். எதிலிருந்து விடுதலை வேணுமென்று கருதுகிறோமோ அது கிட்டிய பிறகுதான் அந்தப் ’பேருண்மை’ புரியவருமாம். வசீகரனுக்கும் அதுகள் கொஞ்சம் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியுந்தான் இருக்கின்றன.
வேந்தனை ஜெர்மனிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில முதமுதல் வழியனுப்பிவிட்டு வந்தபோது அவனில் பாதியை யாரோ பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய்விட்ட மாதிரி இருந்தது. ஆரம்பத்தில் வேந்தனும் ஆறுதலாக நீண்ட நீண்ட கடிதங்கள் எழுதுவான்: நாட்டு நடப்புகள் , ஜெர்மனியரது பழக்கவழக்கங்கள் , பார்த்தவிடமெல்லாம் வழுக்கிக்கொண்டு செல்லும் மகிழுந்துகள், சுரங்கரயில்கள், நவீன போக்குவரத்து வசதிகள், வெள்ளை வெள்ளை ‘மிஷினுகள்’ என்று விரிவாக எழுதிவிட்டு அனேகமாக எல்லாக் கடிதங்களிலும் இறுதி வரிகளாக ‘பாஸ்போட்டைச் சீக்கிரம் எடுமச்சான் தாமதியாதை, தொடர்ந்து இரண்டுபேரும் ஒன்றாயிருக்க விரைவில் நான் வழியொன்று பண்ணுவேன்’ என்று முடித்திருப்பான். வசீகரனுக்கு அப்போதே தான் ஜெர்மனிக்குப்போய் அங்கத்தைய அகலமான மார்க் நோட்டுகளை விரித்துவைத்துப் படுத்திருப்பதைப் போலிருக்கும்.

பின்பெல்லாம் ஆறுமாசத்துக்கு ஒன்று என்றிருந்த கடிதப்போக்குவரத்து ஆண்டுக்கொன்றாகி அவன் திருமணத்தின் பின் நின்றேபோனது. இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நினைத்துக்கொண்டு இப்போது கடிதம் அதுவும் ‘வருகிறேனென்று’ போட்டிருக்கிறானென்றால் குஷி பிறக்காதா பின்னே?
இந்தக் காலவெளியில் வசீகரனின் வாழ்க்கை அஜந்தாவிலும் பல நிகழ்வுகள்.

வர்ஷிணியோடு காதலாகி அது வானளாவி வளர்ந்ததும் வேறு வழியில்லாமல் அவளுடன் ஓடிப்போக நேர்ந்தது.அமைதிப்படையினருக்கு ஆடுகள் ஏற்றிவந்த பாரவுந்தை இடைமறித்து விடுதலைப்புலிகள் மடக்கிக் கொண்டுபோகவும் அதைத் தேடிக்கொண்டு “ஆட்டுவண்டி எங்கே சொல்லுடா?” என்று வந்த படையினரிடம் அகப்பட்டு ‘என்ன ஆடு’ ‘என்ன வண்டி’ என்று புரியாமலே மிதிபட நேர்ந்து, வசதிகள் குறைந்த ஆஸ்பத்தரியில் உடம்பை அசைக்கமுடியாமல் பத்து வாரங்கள் படுத்துக்கிடந்தது.

அமைதிப்படையினரின் ஊர்சுற்றிவளைப்பில் அகப்பட்டுக்கொண்டு அவர்களால் தகிக்கும் வெய்யிலில் தார்வீதியில் உட்காரவைக்கப்பட்டு பிருஷ்டம் அவிந்தது.ஜெயசிக்குறு, சூரியக்கதிர்த் தாக்குதல்கள் வந்தது. மேலும் பதுங்குழி வாழ்வைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தது.இருந்த சிறிய வீட்டையும் ‘மக்களிடம்’ இழந்தது.தற்காலிக போர்நிறுத்தம்-சமாதானம் வந்தது.யுனெஸ்கோ உதவியுடன் கட்டிய வீட்டில் இப்போது ‘வாழ்ந்து’கொண்டிருப்பதெல்லாம் திவ்ய தரிசனங்கள்.

வாழ்வு வரண்டு உருள மறுகியபோது வர்ஷிணியும் சும்மா இருந்துவிடவில்லை. தனிப்பட்டமுறையில் பத்துப்பதினைந்து சிறுவர்களைச் சேர்த்துக்கொண்டு பாலர் வகுப்பொன்று நடத்துகிறாள். இரண்டொரு இடங்களில் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கும் பாடங்கள் சொல்லிக்கொடுத்து அவர்களைத் தயார்படுத்துகிறாள். தேசநிலமையில் எந்தப் பெற்றோரையும் பணம் தரச்சொல்லி வற்புறுத்தமுடியாது, கொடுத்தால் காணவேண்டியதுதான்.

அவர்கள் வன்னியில் இருந்தபோதுதான் அநாமிகா பிறந்தாள். அவனுக்கு வந்த சந்தோஷத்தில் கைகால் பரபரக்க என்ன செய்வதென்றே தெரியாமல் வேந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அவனும் பதிலுக்கு விநோதமான PC ஒன்றை (கணனி என்றேள் கருதற்க.) அனுப்பினான். றோஸாப்பூவொன்றினுள் அழகான ஒரு குழந்தையொன்று ஜோராகப் படுத்துக்கொண்டுள்ள படம் போட்ட போஸ்கார்ட் ஒன்று. அதைச் சரித்தால் அக்குழந்தை குறும்பாகக் கண்சிமிட்டும். அதைவாங்கிப் பின்பக்கத்தில் சிக்கனமாக ‘குழந்தை கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி, அனைவருக்கும் எம் நல்வாழ்த்துக்கள்’ என்று எழுதி ஒரு கவரில் வைத்து அனுப்பினான்.
90ல் வேந்தன் முதன்முதலாக யாழ்ப்பாணம் திரும்பிவந்தபோதுதான் அவன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னரும் மூன்று நான்கு தடவைகள் வந்துபோய்விட்டான். வந்து ஒவ்வொருமுறை புறப்படும்போதும் வசீகரனிடம் தவறாமல் “நீ பாஸ்போட்டை எடு, மற்றதெல்லாம் நான் வென்றுதருவேன்”என்று சொல்ல மட்டும் மறப்பதேயில்லை.
ஒருமுறை வேந்தன் நாட்டுக்கு தனியாக வந்திருந்தபோது திடீரென உக்கிரமான போர் வெடித்துவிட்டது. அந்நேரம் ஆனையிறவு அரசபடையினர்வசம் இருந்ததால் ஏ-9 பாதையூடான போக்குவரத்தெல்லாம் கிடையாது. கிளாலிக்கடல், சங்குப்பிட்டி, பூநகரி எல்லாம் 24 மணிநேரமும் சவளமான ஷெல்லடி பரநாசம். நடுஇரவுக்குப்பின் ஷெல்லடி ஒரு அரைமணிநேரம் ஓயுமென்றால் அதுவரை காத்திருந்து படகில் வெளிச்சமேதும் ஏற்றாமல் உயிரைக்கையில் பிடித்துகொண்டு கிளாலிக்கடலைக் கடக்கவேணும்.வேந்தனுக்கோ குறித்த தேதியில் திரும்பாவிட்டால் விமான டிக்கெட்டும் காலாவதியாகி வேலையையும் இழக்கவேண்டி நேரும் நிலமை.
ஒரு அமாவாசை இரவில் அத்தனை ஷெல் வீச்சுக்குள்ளாலும்வர்ஷிணி போகவேண்டாமென்று மன்றாடித்தடுக்கவும் எல்லாஇடமும் ஷெல்கள் நீக்கமற விழுந்துவெடித்துச் சிதறிக்கொண்டிருக்க வேந்தனோடு ஒரு உந்துருளியையும் விசைப்படகில் ஏற்றிக்கொண்டு கிளாலிக்கடலுக்கூடாக பூநகரி போய் அங்கிருந்து அவனை உருளியிலேற்றி 110 கி.மீட்டர் தொலைவிலுள்ள வவுனியாவரை உந்திச்சென்று வளியனுப்பிவிட்டு வந்தவன் வசீகரன்.
“ நீங்கள் முழுவிசரன்மாதிரி உயிரைப்பயணம் வைத்து அவருக்காக இவ்வளவு செய்துவிட்டும்........ ஒவ்வொரு பயணத்திலும் எத்தினை சிப்பம் துணிமணியளை, சொக்கிளேற்று பார்களைக் கொண்டு வந்து இறக்கியிருப்பர். எங்கட பிள்ளைக்கெண்டும் ஒரு சொக்கிளேற்று விள்ளலை , அரை மீட்டர் துணியைக் கொண்ணந்தும் நீட்டியிருப்பரே......... இதுக்குள்ள ப்ராண ஸ்நேகன் வேறை” என்றுவிட்டுப் பாட்டி மாதிரி கழுத்தை ஒடித்து வலிச்சம் காட்டுவாள் வர்ஷிணி.
“வர்ஷிணி நீர் உப்பிடி நினைக்கிறதும், கதைக்கிறதும் எனக்குச் சரியெண்டுபடேல்லை........... நானும் முடியாதென்று கைவிட்டால் அவன் ஜெர்மனிக்கு போறதெப்படி....... அது என்ரை சுயதர்மத்திலை செய்த, செய்யமுடிந்தவொரு காரியம்......... பிரதிபலனாய் எதையும் எதிர்பார்த்து அல்ல.”

********************
வேந்தன் குடும்பம் இரண்டு முயல்குட்டிகள் மாதிரிப்பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தது. “ நாம கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இண்டர்நெட்டில சூடைமீன் விலைக்கு •ப்ளைட் டிக்கெட்ஸ் கிடைச்சுது..... அதாலை வாய்ச்சதுதான் இந்தப்பயணம்” என்றார்கள்.
வர்ஷிணியின் புறு புறுப்பை அலட்ஷியம் செய்துவிட்டு அவர்கள் நின்ற நாட்கள் முழுவதும் தனக்கு வந்த கொஞ்சநஞ்ச வேலைகளையும் தள்ளிவிட்டு வேந்தனோடேயே பிணைந்துகொண்டு திரிந்தான் வசீகரன்.
வேந்தன் குடும்பத்துக்குப் பிரமாதமாகத்தான் விருந்து வைத்தான். அவ் விருந்தின்போது அவர்களின் குழந்தைகள் இருவரும் போட்டிருந்த அழகான ‘சன்சூற்றை’ அநாமிகா கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஆசையோடு கேட்டாள்:
“ நாங்களும் ஜெர்மனிக்குப்போனா எனக்கும் ‘சன்சூற்’ கிடைக்கும் என்னப்பா? ”
திடுக்குற்ற வசீகரன் ‘தாங்கள் அவளைத் தயார் பண்ணிவைத்துத்தான் அப்படிப்பேசுகிறாள் என்று வேந்தன் நினைக்கப்போகிறான்’ என்று அநமிகாவை நோக்கி கண்களை உருட்டி முழுசவும் ஏனென்று புரியாமல் ‘கப்சிப்’பென்று அடங்கிப்போனது குழந்தை.
சாப்பிட்டும்வேளை கொஞ்சம்போல நனவிடை தோய்ந்தான் வேந்தன்.‘புதுக்குடியிருப்பிலை குத்தகைக்கு காணிதந்த குலசிங்கம் எப்படியிருக்கிறான்?, அவன் தமையனுக்கு கழுத்திலை வளர்ந்த கழலைக்கு என்னாச்சு?, மணவறைச் சுப்பையர் மகள் சகுந்தலா ஆறேழு வருஷமாய் பிள்ளையில்லாமல் இருந்தாளே பிறகு பெத்துக்கொண்டாளோ?’ என்று யார்யாரையெல்லாமோ வெகு கரிசனையாய் விசாரிக்கிறான்......... ‘அட எப்பிடீடா நகருது உன்ரை நாய்ப்பிழைப்பு பிழைப்பு? என்று ஒரு வார்த்தை அவனைக் கேட்கவில்லை.
“சண்டை ஒய்ஞ்சிருக்கிற சமயந்தானே ஒருக்கால்போய் வன்னியையும் பார்த்துவரவேணும் போலைகிடக்கு” என்று வேந்தன் ஆசைப்படவும் “நாளைக்கே போவம் வெளிக்கிடு” என்றுவிட்டு யாரிடமோபோய் இரவலாய் ஒரு விசையுருளியை வாங்கிக்கொண்டுவந்து அவனைக்கூட்டிப்போனான்.

****************
நாளைக்கு வேந்தன் குடும்பம் ஜெர்மனிக்குத் திரும்புகிறது. இரவு வசீகரன் வர்ஷிணியிடம் வந்தான். “அவர்கள் நீர்கொழும்புக்கு போகப்பிடிக்கிற வேனிலை இடமிருக்காம்......... வேந்தன் என்னையும் ஏர்போட்டுக்கு வரச்சொல்றான் , பின்னைப் போகட்டே?”“போகிற வானிலை போவியள்தான் பிறகு வாறதுக்கல்லே ஆயிரம் ரூபாய் வேணும்.”முதமுதல் வேந்தன் ஜெர்மனிக்குப் போனபோது வெறும் பத்துரூபா ரயில் டிக்கெட்டில் கொழும்புக்கு வழியனுப்ப போனதுவும் அதுவே இப்போ ஆயிரமாகிவிட்டதுவும், ரயில்பாதையே இல்லாமல் போனதுவுமான காலங்காட்டும் விசித்திரக்கோலங்கள் ஒரு கனவைப் போலிருக்கின்றன.கொஞ்சிப் பார்த்தும் ‘இந்தமுறை போகவேண்டாமே’ என்று அவனைத் தடுக்க வர்ஷிணி ஊடல், காதல் எனப்பல தினுசான அஸ்திரங்களையும் பிரயோகித்தும் எப்படியும் கட்டுநாயகவுக்குப் போகவேவேணுமென்று கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் உன்னிக்கொண்டு நிற்கும் புருஷனது கையறுநிலை அவளுக்கும் மனதில் ஒரு ஈரத்தைக் கொண்டுவருகிறது.ஒரு முடிவுக்கு வந்தவளாய்“அநாமிகா ‘எல்லாரையும்போலத் தனக்கும் ஸ்கூலுக்கு Rucksack தான் வேணும்’என்று இப்ப ஒரு வருஷமாய் உயிரை வாங்கிறாள். அவளின்ர ஆசைக்காக ஒறுப்பித்துச் சேர்த்து ஒரு இரண்டாயிரம் ரூபா வைச்சிருக்கிறன்....... சரி போய் அவையளை வழியனுப்பிப்போட்டு கொழும்பில அவளுக்கொரு Rucksackகும், ஒரு சோடி சப்பலும் வங்கிக்கொண்டு வாங்களன் பின்னே.”

யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு தரைவழியாக பத்துமணி நேரப்பயணம். இரண்டு இடத்தில் மாத்திரம் சோதனைச்சாவடிகள் இருந்தன. வெளிநாட்டு போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவும் சாவடியில் இருந்ததால் கெடுபிடிகள் குறைவாக இருந்தன. இதுவே போர்க்காலமாயின் சோதனைச்சாவடிகளைக் கடப்பதே ஒரு நரகானுபவமாய் இருந்திருக்கும். காட்டின் நெடிய மரங்களூடு தெரிந்த நிலவு வானின் வேகத்துக்கு பட்டுத்துணியைப்போலத் துடிக்கவும் பார்த்த அவர்களது குழந்தைகள் குதூகலித்தனர். வழியில் புத்தளம் , சிலாபத்தில் வாங்கமுடிந்த செவ்விளனி, வறுத்தமுந்திரிப்பருப்பு, வாட்டிய/அவித்த சோளப்பொத்திகள் என்பவற்றை எல்லோருமே அனுபவித்துச் சாப்பிட்டார்கள். இடைக்கிடையே வானுக்குள் ஜெர்மனிய வாழ்க்கை பற்றிச் சிலாகித்துக்கொண்டு வந்தான் வேந்தன்: “ இந்தப் பயணம் அங்கே ஹைவேயிலயென்றால் மக்ஸிமம் ஒரு ‘த்றீ அவர்ஸ் டிறைவ்’தான். அதுக்காக அங்கத்தைய சமாச்சாரங்கள் எல்லாமே உசத்தி என்றில்லை. இக்கரைக்கு அக்கரைப்பச்சையென்ற கதைதான் பல விஷயங்கள். இன்னுஞ் சொன்னா........ பொழுது இருள்றதும் தெரியாது, விடியிறதும் தெரியாது, எல்லாத்துக்கும் மணிக்கூட்டை மணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருப்பம். நம்பமாட்டியள் நானங்கே போனதுக்கு பூரணநிலவைப் பார்த்தது இங்கை வந்துதான்.” வேன் சாரதி அப்பவியாய் கேட்டார்: “ஏன் தம்பி அங்கே நிலவெல்லாம் எறிக்காதோ அப்ப?”“எறிக்காதெண்டில்ல அண்ணை. வின்டர் காலங்களிலை அநேகமாய் பொழுதுகள் பனியும் மழையும் மப்பும் மூடாப்புமாயிருக்கும் தெரியாது. சம்மறிலை பகல்பொழுதுகள் நீண்டதாயிருக்கும், அதில நிலவு எறிச்சாலுந்தான் கட்டிடக்காட்டுக்குள்ளால காணமாட்டம். அநேகமான இரவுகளிலை வேலைக்குப்போயிடுவம். நிலவை எங்கே, யார் , பார்க்கிறது?
இஞ்ச றுபீஸ், அங்கை மார்க். பெருக்கிப்பார்க்க நல்லாத்தானிருக்கும். எடுக்கிற சம்பளத்தில பாதி வாடகைக்குப் போகும், அதோட போச்சா....... கரண்ட்பில் , காஸ்பில் , கணப்பு பாவிச்சகாசு, ஸ்நோ தள்ளின காசு என்றுபோட்டு பில்லுகள் தனித்தனியாய் வரும். பிறகு ரெலிபோன்பில், காருக்கான டாக்ஸ் இன்சூரன்ஸ், போக்குவரத்துச்செலவுகள் , உடுப்பு நடப்பு, அடுப்படியெண்டுபோக கையும் கணக்கும் சரியாத்தான் இருக்கும். மூத்திரம் முடுக்கினாலும் செலவெண்டிருக்கிற ஒரு நாட்டிலை ஒன்றைப் பெற்றுக்கொள்கிறதுக்காக இன்னொன்றை ஒறுக்க வேணும் அல்லது முற்றாகவே இழக்கவேணும்.
என்ன வைட்கொலர் ஜொப்புகளே பார்க்கிறது, இத்தாலிக்காரன்ரையோ, ஜப்பான்காரன்ரையோ றெஸ்ரோறெண்டு களிலை நின்ற நிலையிலை தேய்ச்சுக்கொடுக்கிறதிலை மாதத்திலை இருநூறு முந்நூறு மணித்தியாலங்கள் கழியும். அப்பிடியே செய்துகொண்டுவர ஒரு பத்து வருஷத்தில முழங்கால் மூட்டுக்கள் , நாரித்தண்டுவடங்கள் தேய்ஞ்சு குத்து உளைவு எடுக்கத் தொடங்கிவிடும். ஆசைப்பட்டால் பிறகு காசை எண்ணி , றுபீஸிலை பெருக்கிப்பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் பணத்தாலை விலைபேசவோ, மீட்கவோ முடியாத ஆரோக்கியத்தை முதல்லை இழந்துவிடுவம். எங்களை அறியாமலே அது மெல்ல மெல்ல விடைபெற்றுவிடும்...........வெளியிலிருந்து நோக்குகிறவர்களுக்கு எங்கட வசதிகள் மட்டும் தெரியும், ஆனால் நிம்மதியில்லாம மனவுளைச்சலில எப்பிடிக் குமைகிறோமெங்கிற சங்கதி அங்க வாழநேர்ந்தாலே தெரியவரும்.
வெளிநாட்டுக்கென வந்து இறங்கியபிறகு வாழ்க்கையிலை சந்தோஷமான தருணங்கள் என்றால் வெகு கொஞ்சந்தான்.சம்மர் டைம்ஸ்ல எப்போதாவது •ப்றெண்ட்ஸோடை சேர்ந்து வைக்கிற ஒரு கிறில் பார்ட்டி , பார்க்கிலயோ நடப்பதற்காக புறோமினேட்ஸ் என்று இருக்கிற பாதைகளிலோ ஓய்வாக ஒரு நடைபோய்வர வாய்க்கும் ஒரு பொழுது, ஒரு பார்ட்டியிலை பழைய •ப்றெண்ட்ஸை , ஊர்க்காரரைச் சந்திக்க நேரும் சில தருணங்கள்,நீந்தப்போகிற ஒரு நாள், ஒரு நல்ல கலை நிகழ்ச்சி இப்படி வெகுசொற்பந்தான்...........”

‘வேலையிலேயே கழிகின்றன பகல் பொழுதுகள்
வேலைக்கான தயார்ப்படுத்தலில் நம் இரவுகள்
மாற்றுப் போக்கின்றிக் குதிக்க நேர்ந்ததால்
நீந்தியே தீரவேண்டிய அகதிச்சுழி.’

என்று புலம்பெயர்வாழ்வைச் சித்தரிச்சு கிரிதரனென்று நம்ம கவிஞன்தான் ஒருவன் பாடியிருக்கிறான். எப்படிப் ‘பட்டு’ வந்திருக்கு பாருங்கோ வார்த்தைகள்? ”
‘இவன் பொதுவில் சொல்கிறானா, இல்லை தனக்குத்தான் சொல்றானா’ என்று வசீகரன் குழம்பிக்கொண்டிருக்க
“அதாவது நீந்திறதை நிறுத்தினால் ஆழவேண்டியதுதான் என்றியள்........ ஏன் மாப்பிள்ளை, தாலியைக் கட்டமுதல் இதுகளைப் பற்றி இந்தவெளிநட்டுக்காரர் யாரும் மூச்சுவிடுகிறதில்லையே........?” என்றுவிட்டு பெரிய ஜோக் அடித்தவர் மாதிரித் தானே தனியாகச் சிரித்து ஓய்ந்தார் அவன் மாமன்காரன்.

நீர்கொழும்பில் அவர்களின் ஒரு உறவுக்காரர் வீட்டில் சற்றுத்தரித்து மாலை விமானநிலையம் போவதாக ஏற்பாடு . நீர்கொழும்பை வேன் அடையவும் நிலம் தெளியத் தொடங்கியிருந்தது. மத்தியானவேளை அவர்களைப்பார்க்க கோமதியுடன் கூடப் படித்தோழியென்று ஒடிந்து விடுவாள் போன்றொரு ஒல்லியாய் ஒரு இளம்பெண் வந்திருந்தாள். அவர்கள் ஒன்றாகக்கூடி அமர்ந்து கலகலத்துச் சற்று ஓய்ந்தபோது வேந்தன் வசீகரனைத் தனியாகக் கூட்டிவந்து கேட்டான்: “ கோமதியின்ரை பழைய •ப்றெண்டாம் அது , வத்தளையில டீச் பண்றாளாம். இவளைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறாள், அவளுக்கேதாவது கொடுத்துத்தான் அனுப்பவேணும் சரியில்லை. நாங்க கொண்டுவந்த காசெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே ‘ஸ்வாகா’வாயிட்டுது. மாமனிட்டை வாய்வைக்கிறதும் மரியாதையாயிராது......... உன்னட்டை இருந்தால் ஒரு ‘ரூ தௌசன்ட் றுபீஸ்’ வெட்டு போனவுடனம் உனக்கு உண்டியல் சேர்விஸில அனுப்பி விடுறன்.”“ நோ ப்றொப்ளம் அட் ஓல்” என்றுவிட்டு கால்ச்சட்டைப் பக்கெட்டில் கையைவிட்டு இருந்த இரண்டாயிரத்தையும் அவனிடம் தூக்கிகொடுத்தான்.வந்ததிலிருந்து வேந்தனது மாமன் “எனக்கு இந்ததண்ணிதான் ஒத்துக் கொள்ளேல்லைப்போலை........ கொஞ்சம் நீர்க்கடுப்பாயிருக்கு” என்றுவிட்டுப் பாத்றூமுக்குப் போக்கும் வரவுமாயிருந்தார். அதனால் அவரை யாரும் விமானநிலையத்துக்கு வரச்சொல்லி வற்புறுத்தவில்லை.

மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வேந்தன்:“விடுதலைப்புலிகள் ஏர்ப்போட்டை அடிச்சாப்போலை இங்கை எப்படிப்பட்ட கெடுபிடிகள் சோதனைகள் என்டது தெரியுந்தானே.......... எல்லாத்தையும் திறந்துதிறந்து பார்த்துக்கொண்டு வைச்சு வினைக்கெடுத்துவாங்கள்....... நாங்கள் முதல்லை உள்ளபோறம். நீ ‘என்றன்ஸ் டிக்கெட்’டை எடுத்துக்கொண்டு பின்னாலை வா” என்றுவிட்டு ஒரு ட்றொலியில் சூட்கேஸ்களை வைத்துத் தள்ளிகொண்டு மனைவி குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தான்.
நுழைவுச்சீட்டு பெறுதற்கான கவுண்டருக்குப் போனபோது அங்கிருந்த காவலதிகாரி அவனது அடையாள அட்டையைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துவிட்டுக் “அனுமதிக் கட்டணம் இருநூறு ரூபாய்கள்” என்றான் சிங்களத்தில். அப்போதுதான் தன்னிடம் பணமே இல்லாத விஷயம் ‘திடுக்கென’ உறைக்க உள்ளே எட்டிப்பார்த்தான். அவர்கள் இரண்டாவது கண்ணாடித் தடுப்புக்கதவுகளையும் தாண்டி வெகுதொலைவில் போய்விட்டிருந்தனர்.
“ சொறி சேர்........ ஐ’ ஹாவ் சேஞ்ச்ட் மை ஐடியா ” என்று சொல்லி அடையாள அட்டையைத் திருப்பிவாங்கி காற்சட்டைப் பாக்கெட்டில் சொருகிக்கொண்டான்.
முதன்முதல் ஜெர்மனிக்கு வேந்தனை வழியனுப்பியபோது பிரிவாற்றாமல் அவனைக்கட்டி அழுதான்.பின்னர் வந்து கல்யாணம் கட்டிக்கொண்டு போனபோது அவன் மனைவி நிற்கிறாளேயென்ற சங்கோஜத்தில் ஒரு மீட்டர் தள்ளி நின்றே ‘குட் பை’ சொல்லிவிட்டுத் தனியே நின்று கலங்கினான்.இன்று ‘குட் பை’ சொல்லவே அமையாதவொரு தூரத்தில் அவன் போய்விட்டிருந்தான்.

உள்ளே போயிருந்தாலென்ன, பத்தாயிரம் ரூபா செலவு செய்து ஒரு பாஸ்போட் எடுப்பதற்கான வகை இவனிடம் உண்டோ இல்லையோ அவனது “ நீ பாஸ்போட்டை எடு மச்சான்” என்ற பல்லவியை இன்னொரு தடவை பாடியிருப்பான்.வசீகரன் செலவுக்குத்தரும் பணத்தை ஒறுத்துச் சிக்கனமாகச் செலவுசெய்து அதிலும் சிறுபகுதியைச் சேமித்து வைத்திருந்து அவன் பணமில்லாமல் அந்தரிக்கும் தருணங்களில் தூக்கித்தரும் காமதேனு வர்ஷிணி அவர்கள் ஓடிப்போன தினத்தின் முதலாவது ஆண்டின்போது அவன் கையைப்பிடித்து “உங்க மாமன் செய்துதந்த மாப்பிள்ளைமோதிரம் என்று நினைத்துக்கொள்ளுங்கோ” என்று சொல்லித் தனது சேமிப்பில் செய்வித்துப்போட்டுவிட்ட மோதிரத்தைப் பார்த்தான். லேசாக இருந்தாலும் எப்படியும் அநாமிகாவின் Rucksackக்குக்கும், சப்பலுக்கும் , பஸ்கட்டணத்துக்கும் வரும். ‘வேந்தன் கண்ணபிரானாகவே இருக்கட்டும், தன் ஏழ்மையைச்சொல்லி இறைஞ்சினாலே இரட்ஷிப்பவனென்றால் அவன் சங்காத்தம் வேண்டாம். நான் குசேலனாகவே இருப்பேன்.’ என்று நினைத்த வசீகரன் தன்மனதின் அடியாழ அடுக்குகளில் ஏதோ ஓர் மூலையில் லேசாக ஒரு ‘கசப்பு’ சுரந்திருப்பதை முதன்முதலாக உணர்ந்தான்.

**************

ஜூலை 2005 - காலச்சுவடு.