Dienstag, Mai 27, 2008

இடை

பொ.கருணாகரமூர்த்தி

அது பெர்லினில் இருபத்துநான்கு மணிநேரமும் திறந்திருக்கும் ஒரு றெஸ்ரோறன்ட். கோப்பியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகைகள். நம் தேர்வுப்படி நொடியில் அரைத்து கமகமக்கப்போட்டுத் தருவார்கள். வீதியில் ஐநு}று மீட்டருக்கு மிதந்துவரும் கோப்பியின் மணம் ஷேர்ட்டில் பிடித்து ஆளைஉள்ளே இழுக்கும். அது இருக்கும் வழியாக நானும் வரவேண்டியிருக்கவே மேலே கடந்து போகமுடியாதுள்ளே இழுபட நேர்ந்தது.
கிறில் பண்ணிய ~றிப்பும், தொட்டுக்கொள்ளக் காரமான பாபெகியூ ஸாசும், கோப்பியும் வாங்கிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

நாலு இளம்பெண்கள் ஏதோ இடையைக்காட்டுவதற்கான ஒருபோட்டியில் பங்குபற்றிவிட்டு நேரே வருபவர்கள் மாதிரி பேரிடை முழுவதும் தெரிய உடுத்திக்கொண்டு நடக்கையில் முக்கோண ஜட்டிகள் தில்லானா ஆட அட்டகாசமாக உள்நுழைந்தார்கள். கோடை காலம் இளசுகளின் உடைகள் கொஞ்சம் மனதை அலைக்கழிப்பதாகத்தான் இருக்கும். ஆனாலும் இது அநியாயாத்துக்கும் அதிகம். அன்று நான்தான் அதிகம் வதைபடவேணுமென்று நியதியாக்கும், அல்லது அத்தனை காலியிருக்கைகள் இருக்க அவர்கள் ஏன் அமர்வதற்கு என் ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையைத் தேரவேண்டும்?

அந்த நால்வரிலும் மேசையின் ஓரப்பக்கமாக என் பார்வை முழுதாய்ப்படும்படியான இடத்தில் இருந்தவள் அச்சில் வார்த்தெடுத்துப் பொலிஷ் செய்துவைத்தவொரு பொம்மையைப்போல இருந்தாள். எந்தவொரு ஜெர்மன் அழகுப்பாரம்பரியத்தின் நீட்சியோ இல்லை ஏதும் இடைக்கலப்பால் விளைந்த அதிசயமோ நோக்குவோரை மூர்ச்சையாக்கவல்லதொரு எழிலைக் கொண்டிருந்தாள்.
170செ.மீ உயர தேகத்தில் பெயருக்காவது ஒரு மறுவோ , பருவோ , புள்ளியோ இருக்கவேணுமே? அரையில் நேவி நீலநிறத்தில் ஒன்றரை சாணே இருக்கக்கூடிய ஸ்கேட்டும் , மேலே தலையணை உறை மாதிரி கையோ கழுத்தோ இல்லாத ஒரு மெல்லிய மீள் தகவுள்ள மார்புக்கச்சையும் (ஸ்றெட்ச் டொப்பிற்கு எப்படி நம்தமிழ்!) பற்றியிருக்க மீதிவனப்பு முழுவதும் காற்றாடிக் கொண்டிருக்கிறது. சின்ன வெள்ளிமணி மாட்டியிருந்த தொப்புளில் ஆரம்பித்து மிகமிக ஆழங்களில் பரவிய கற்பனைகளில் என் மனது சுகித்துத்தியங்க அவர்கள் ஓடர் பண்ணிய சாப்பாடுகள் வந்தன.
அவர்கள் ரசித்துச் சாப்பிடத் தொடங்கினார்கள்.

பார்க்கிறேன் அவள் சாப்பிடக் குனிகையிலாவது வயிற்றில் சின்ன மடிப்புக்கள் விழவேண்டுமே..........ஊகூம்!
குற்றவாளிகளுடன் விவாதிக்கவேண்டியதில்லை. அவர்களுக்கு தம் குற்றங்களின் முழுப்பரிமாணங்களும்; தெரிந்தேயிருக்கும்.
அவளைப் பார்க்கப் பார்க்கப் பார்க்க என் மனது முழுக்களவாகி வன்மமாக வளர்ந்து நான் முழுத்திருடனாகிவிட்டிருந்தேன்.

ஒரு யௌவனப்பெண் பார்வையில் பட்டவுடன் ஒரு ஆடவனின் மனதில் து}ண்டப்படும் மின்னேற்றங்கள் சமிக்கைகளாகி அவை வேண்டிய ஹோமோன்களைச் சுரக்கவைத்து அவனது இதயத்துடிப்பை அதிகரிக்கப்பண்ணும் வரையிலான தாக்கங்கள் பற்றியும் அவை கடத்தப்படும் வழி பற்றியும் இடையே சிறிது சிந்தி;க்கிறேன். மாற்றங்களின் இரசாயனம் புரிகிறது.
ஆனால் ஆதியிலிருந்தே ஆண்களைப் பெண்களிடம் பிணைத்து வைத்திருக்கும் அவ்வதிசயச் சமிக்கைகளை இந்தப் பெண்களால் மாத்திரமே உற்பத்தியாக்க முடிவதுதான் விந்தையாக இருக்கிறது. ஆனானப்பட்ட அறிவியல் மேதைகளுக்கே பிடிபடாத விஷயந்தானெனினும் அவர்கள் நிரையில் ஞானும் அதுபற்றிச் சற்றே சிந்தித்து வைத்தேன்.

என்னுள் இத்தனை ஹோமோன்களையும் குதித்தோடச்செய்தொரு தீயை வளர்த்துக்கொண்டிருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தவள்போல் கடித்த பேகரைப் தட்டில் வைத்துவிட்டு கைப்பையுள்ளிருந்து பேனாவைப் போலிருந்த எதையோ எடுத்தாள். அதன் முனைதை; திருகித்திறந்தாள். என்னைக் காந்திக்கொண்டிருந்த பட்டு இடுப்பில்; நிதானமாகக் குத்தி மருந்தை உள்ளே செலுத்தினாள்.
னுயைடிநவநள ஆநடநவரள iii வியாதியின் மூன்றாவது கட்டத்துக்கு (குணப்படுத்தமுடியாதபடி) வந்துவிட்டவர்களுக்கே தாமேபோட்டுக் கொள்ளும் இவ்வகை இன்சுலின் ஊசியைக் கொடுத்திருப்பார்கள்.
இப்பொழுது என்மேல் ஒரு நயாகராவே கொட்டியது,
என்னுள் ஓங்கிய தீயின் நீண்ட கங்குகள் ஒடுங்கிஇல்லாமற்போயின.

இவைகள் எதையுமே அறியாமல் தன் பேகரைச் சாப்பிடத்தொடங்கினாள் அவள்.

30.08.2002 பெர்லின்.

first blogged on 26.09.03 18:21

Dienstag, November 29, 2005

பால்வீதி

1.


மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள்.உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது.நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த வால்நெடுத்த கெண்டைக்குருவி ஒன்று எழுந்து பறக்கப்பஞ்சிப்பட்டு எமக்கு முன்னே தத்தித்தத்திச்சென்றது.நாமும் விடாது தொடரவும் கீசி வைதுவிட்டு எழுந்து பின்னோக்கி அரைவட்டமடித்துப் பறந்துபோய் மீண்டும் அதே இடத்தில் மண் குளித்தது.
தொடுவானத்திலிருந்து இன்னும் பெயரிடாத ஆயிரம் வர்ணங்கள் மையம் நோக்கி மெல்ல வந்து சேர்ந்தன. வழமையான நீலம் விடுப்பில் சென்றிருந்தது. குறுக்குமறுக்காக போர்விமானங்கள் கோடிழுத்துச்சென்றது போல் அடிவானத்தில் பல கோலங்கள் உண்டாயின. வெளிர் மின்னற்கொடிகள் சிலதோன்றித் துளிர்த்துதழைத்தோங்கி சடுதியில் மறையவும், நடுவானம் அரிந்து வைத்த கறுத்தக்கொழும்பான் மாம்பழமென செஞ்சிவப்பாகியது. நவீன ஓவியங்கள் போலும் சில கட்டமைப்புக்கள் தோன்றின. அடிவானத்தில் ஒளிரும் நியோன் விளக்குகள் போலும் குண்டுகுண்டாக ஊதாவர்ண எழுத்துக்களாலான தெளிவான கவிதைஒன்று தோன்றி மறைந்தது.பின் இன்னொரு கவிதை..... அது மறைய இன்னொன்று.....அது மறைய இன்னொன்று...... ஒரு கணம் வானமெங்கும் கவிதைகள் இறைந்து கிடந்தன. எதைப்படிப்பது..... எதை விடுவது............?எல்லாமே சிருஷ்டியின் நோக்கமும், பிரபஞ்ச இரகசியங்களும் கூறும் மந்திரக்கவிதைகள். படிக்க முதலே மறைந்து மறைந்து போயின. ஓவியங்களிலிருந்து ஒறேஞ்சிலும், ஆப்பிள்பச்சையிலும்,குருவிச்சம்பழநிறத்திலும், இதழ்களால் ஒளி உமிழும் மலர்கள் மலர்ந்தாடின. வானவீதியில் முண்டாசு கட்டிய மனிதர்கள் மாடுகளை ஓட்டிச்சென்றனர். மலர்கள் எவற்றையும் மாடுகள் மிதத்துச்சேதஞ்செய்யாதிருக்க வேண்டுமென மனது கவலை கொண்டது.
இந்த ஜென்மத்தில் அந்த இடத்திற்கு முன்னெப்போதாவது வந்ததாக ஞாபகம் இல்லை. மலைப்பாங்கான குளிர்வலயத்தில் வளரக்கூடிய பன்னங்கள், நெ·ப்ரலொப்பிஸ், அந்தூரியங்களும்உலர்வலயத்திற்கான மூங்கிற்புற்கள், இலாமிச்சை , அலரி, அன்னமுன்னாச்செடிகளும் மண்டிய புதர்க்காட்டினூடாக அந்தப்பாதை நீண்டு கட்புலஎல்லையில் அடிவானத்தைத் தொடுவது போலத்தோன்றினாலும் அதற்கு அப்பாலும் நீண்டது.
பாதையை ஒட்டி இருமருங்கிலும் செறிந்த தேக்குமரக்காடுகள் இருந்தன. கடந்து செல்லச்செல்ல ஓக், பைன் மரங்களும் அடர்ந்து வானத்தை நோக்கிச் சென்றன. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். எங்கள் தேகம் முழுவதும் ஹீலியத்தால் நிரப்பப்பட்டதுபோலும் மிக லேசாக இருந்தது. சிறு ஈரத்திற்காக துள்ளியபோது கூட முப்பது மீட்டர் தூரத்திற்கும் அப்பால்போய் விழுந்தோம். கனவும் நனவும்போல இரு அனுபவங்களைத் தொடர்பு படுத்தக்கஷ்டமாக இருந்ததால் நேரத்தை உணரமுடியவில்லை. ஹஷீஷ் புகைத்தமாதிரி நிறையற்று மேகங்கள் போல் அலைந்து திரிந்தோம். ஒருமுறை புகைத்தபோது இதைப்புகைக்கத்தொடங்கி அரைமணியிருக்குமா......... ஒரு மணியிருக்குமா....... அல்ல ஐந்தாறு மணிகளுக்கும் அதிகமாவென அறியமுடியாதிருந்தது.தற்செயலாய் துருத்திய அறிவு கேட்கிறது.... எந்தச்சிகரெட்டாவது மணிக்கணக்கில் புகையுமாடா?சரி..... அப்ப ஒரு பத்து நிமிஷந்தான் இருக்கும. மணி என்பது என்ன..... நிமிஷம் என்பதென்ன...... புரியமுடியாது மீண்டும் குழப்பியது. அனுபவங்களே மாயையோ..........?நாங்கள் நடக்கத்தொடங்கி எவ்வளவு நேரமிருக்கும்........?எவருக்குமே தெரியாது. இதை எண்ண சிரிப்புச்சிரிப்பாய் வந்தது. நான் பாட்டிற்கு இளித்துக்கொண்டிருக்கப்படாது. என் கெளரவம் என்னாகும். பட்டென நிறுத்திக்கொள்கிறேன். அவள் கண்டுகொண்டால் என்னை என்னவென்று நினைப்பாள்?........ என்னவாவது நினைத்துவிட்டுப் போகட்டுமே...... ஏன் நான் யாருக்காகவேனும் வாழ்ந்துகொண்டிருக்கிறேனா.........? இல்லைத்தான்.ஆனாலும் நான் அவள் மதிப்பிலிருந்து சரிந்து போதலாகாது.ஏன்.....? அவள் என்னை நம்பி வருகிறாள்....... என் பிரக்ஞையில், சித்தத்தில், அறிவில், திறமையில் நம்பிக்கை வைத்து........ தனி வழியில்.
அவளைத் தனிவழியே அழைத்துச்செல்லத் துணிந்தது என் பலமா..... பலவீனமா? தெரியவில்லை. கேட்டது "அழகியபெண்" என்றதும்....... கொஞ்சம் பரிவு, கொஞ்சம் காபந்துணர்வு, கொஞ்சம் ஆசை பிறந்ததென்னவோ உண்மைதான்.நவீனபெண்ணியவாதிகள் முதல் இரண்டும் "டூப்" மூன்றாவதுதான் நிஜம் என்பார்கள். ஏன் நான் பொய் சொல்ல வேணும்.........?நிலவில் இருப்பதைப்போல..... ஒரு பெண்ணின் அருகில் இருப்பதும் சுகமே. இவ்வுணர்வுகள் இயல்பூகமாக என் ஜீன்ஸ் வழி வந்தவை.
அப்போ காமம் தோன்றவில்லையா........?தோன்றுவதாவது........ அது எப்போதுதான் இல்லாதிருந்தது.....?ஒவ்வொரு இதயத்துடிப்பிலும்...... ஒவ்வொரு உணர்வின் தெறிப்பிலும்கலந்தேகிடக்கிறதே. காமம் நீங்கிய நான் அசாத்தியம்.அதைச்சொல்லவில்லையே.......? இக்கேள்வியில் உனக்கப்படியில்லை என்கிற பாசாங்கிருக்கு....... இருக்கட்டும். ஒவ்வொரு துளி இரத்தத்திலும்...... தசையிலும் அது உறைந்திருப்பதை உணர்ந்திருந்தும் பலரிடமும் இப்பாசாங்கிருக்கு.
திரும்பிப்பார்க்கிறேன்..........அவள் வந்துகொண்டிருக்கிறாள். ஆரோக்கியமான ஒல்லியான உடல்வாகு இடையில் வைன்கிளாஸை மாதிரி மேலும் ஒடுங்கிப்போகிறது. மெல்லிய ஊதாகலர் பின்னணியில் அடர்கத்தரிப்பூ வர்ணத்தில் சின்னச்சின்னப்பூக்கள் உடலெங்கும் செறிந்த கைத்தறிச்சேலையைக் கச்சிதமாக உடுத்தியிருக்கிறாள்.தனி முத்துப்பதித்த தோடுகள் அழகுபடுத்தும் பெரீய காதுமடல்களைத் தொடரும் கன்னக்கதுப்புக்களில் படர்ந்திருந்த மென்பூஞ்சுரோமங்களிலும், அம்மாலை ஒளியில் மஞ்சள் குளித்தது போலிருந்த அவள் தோற்றத்திலும் ஏராளமாய் பெண்மை வழிகிறது.பெரீய்ய தோற்பையொன்று தோளில் தொங்க முந்தானையின் ஒரு தலைப்பை எடுத்துப்போர்த்தியிருக்கிறாள்.
முதலில் அவள் முகத்தையும் விழிகளைளும் கவனிக்கப்படாது என்பதில் பிடிவாதமாயிருந்தேன். கவனித்தால் அவை ஹரிகேசனாகியஎன்னை விடுத்து எனக்குள்ளே இன்னொருவனுடன் பேசும். அவன் நொடியில் பலஹீனகேசனாகி விடுவான். அவள் விழிக்கோளங்களிருக்கே......... கொக்கயின் பார்ட்டி........ அவை கால்பவைதான் எவ்வகைக் கதிர்கள்? சும்மா பட்டமாத்திரத்தில் சித்தம் தடுமாறிப்போகுதே......கூடாது...... அவைகளை நான் நோக்கவேகூடாது...... நெப்போலியன் சுண்டெலிக்குப் பயப்படும் இந்த இரகசியம் அவள் அறியவேகூடாது.
2.
அவள் என்னை நம்பி வருகிறாள்.தன் உடமைகளைப் பறித்து விடமாட்டேன் என்று நம்புகிறாள். தன்னைப்பறித்து விட மாட்டேன் என்றுநம்புகிறாள்.தன் உயிரைப் பறித்துவிடமாட்டேன் என்றும் நம்புகிறாள்.என்னைத்தொடர்ந்து வருகிறாள்.அவள் என் அருகாக வரட்டும் என்று என் நடையின் வேகத்தைச்சிறிது தளர்த்தினேன்.அருகில் வந்ததும் கேட்டாள்: "உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வீர்களோ........."
"அவ்வப்போது பேசிப்பேன்..... தர்க்கிப்பேன்...... சண்டையெல்லாங்கூடப்பிடிப்பேன்........ வெளியில தெரியாது........ ஆனால்........ விடயத்தின் உஷ்ணந்தாங்காது போனால் மட்டும் வார்த்தைகள் எப்போதாவது தெறித்து வெளியில் விழுவதுமுண்டு."
" இப்பவும்....ஏதோ விழுந்தாப்போல......"
"இருக்கலாம்..... ஒரு விவாதமொன்று நடந்துகொண்டிருந்தது."
"சுவாரஸ்யமானதாக இருந்தால் நானும் பங்கேற்கலாமா.......... ரொம்ப அந்தரங்கமானது என்றால்........ வேண்டாம்........."
"அந்தரங்கமாவது........ அறிவார்ந்த விஷயமென்றால் எனக்கு எல்லாமே வெளிப்படைதான்....."
"என்னவாம்.......?" (குரலில் கொஞ்சம் கிசுகிசுப்புடன்)
"பெண்களாலதான் உலகமே அழகாகிறதென்கிறேன்...... இல்லை என்கிறது உள்ளேயிருந்து ஒரு முரட்டுக்குரல்......"
" எப்படி......?"
"பெண்கள் பூஞ்செடிகளைப் போல அழகும் வனப்புமாய் இருக்கிறார்கள்....... ஒரு பூஞ்சோலை ஊரின் எழிலைக்கூட்டுவதில்லையா....... அப்படித்தான்."
"ஆண்கள் பார்வையில் எனறிருந்தால்.........சரி"
"அப்போ..... ஆண்களுக்கொரு உலகம்..... பெண்களுக்கொரு உலகமென்று இருக்கவேணும் ........ ஒரு பெண்ணின் அழகை இன்னொரு பெண் ஒத்துக்கொள்ளமாட்டாளா என்ன...........?"
"ஒத்துக்கொள்ள மாட்டாள் என்றில்லை......... ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகுணர்ச்சியில வேறுபாடு உண்டு........ ஆணுக்குப் பெண்ணிடத்தில் கவர்ச்சி ஏற்பட அவமீதான காமந்தான் காரணம்"
"இல்லை... என்றலை..... காமம் என்பது ஒன்றும் விலக்கப்பட்ட சபிக்கப்பட்ட வஸ்த்தோ, உணர்வோ இல்லையே..... இன்னும் சரியாகச சொல்லப்போனால்...... காமந்தான் வாழ்வின் அடிப்படையே என்பேன்....... அனாதியிலிருந்தே பெண்தான் ஆணை ஆகர்ஷிப்பவளாக இருந்திருக்கிறாள்.........."
"பெண் போதைப்பொருள் அல்ல என்ற வாதமிருக்கே.....?"
"இல்லை என்றலை...... பாலை, பழமையை வைச்சு ஒருத்தரை இன்னொருத்தர் ஆளுமை செய்யறது தப்பிலுந்தப்பு....... ஆனால் ஆண் பெண்ணிடையேயான இயல்பான லயிப்பை கேலியாக்குதலோ, ஆகாதென மறுத்தலோ மடமையான குருட்டாம்போக்கே என்பேன்....... நீ இதைத்தான் ரசிக்கலாம்,இதை ரசிக்கவேகூடாது என்று யாருக்கு யாரும் கட்டளையிட முடியாது...... இந்த உரிமை உலகத்தில யாருமே எடுத்துக்கொள்ள முடியாது. ஹோமோஸெக்ஸ¤வல்ஸை பாருங்கள்..... நாம தப்பு என்றதால இல்லையென்றாகிவிடுமா.......?"
"இதை பெண்ணிலைவாதிகள் ரொம்ப விவாதிக்கிறாங்க இல்லை.....?"" விவாதிக்கிறாங்க சரி..... ஆனால் ரொம்ப வரட்டுத்தனமாயிருக்கு... பெண்களில்லாத உலகத்தில ஆண்களும், ஆண்களில்லாத உலகத்தில பெண்களும் உற்சாகமாயிருக்க மாட்டார்கள்... சின்னச்சின்ன வேற்றுமைகளைப் பெரிது படுத்திக்கொண்டு ஆணும் பெண்ணும்தர்க்கிச்சு அடிச்சுக்கொள்றத போல முட்டாள்த்தனம் வேறில்ல."
"அப்போ.... என்னசெய்யலாங்கிறீங்க?"
"முதல்ல..... இந்த வேண்டாத விவாதங்கள நிறுத்திட்டு.......ஆணும் பெண்ணும் சேர்ந்து அறிவு பூர்வமா சிந்திச்சு இந்த உலகத்தை இன்னும் அழகா.... ரம்யமா பண்ணவேணும். அன்பைபரவிப்பரவி எல்லைகள் அற்றதாய் இதை விஸ்த்தரிக்கவேணும்...... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...... என்று பூரிக்கிறானே.... ஒரு கவிஞன்..... இருப்பதை நுகர்வோம் களிப்போம்."
" கடவுள் நம்பிக்கை வர்றதா?"
"ஆஸ்த்திகனாகவோ.... இல்ல நாஸ்த்திகனாகவோ இருக்கக்கூடிய ஞானம் இன்னும் எனக்குக் கைவரவில்லை என்பதே சரி."
மாலைக்காடு இன்னும் மஞ்சள் குளித்துக்கொண்டிருந்தது.வானத்தில் பொருளும் நடையும் புதிய கவிதைகள் மேலும் பல தோன்றித்தோன்றி மறைந்து கொண்டிருந்தன.
"எதுவரை படித்தீர்கள்?" என்றேன். "ஆரம்பத்திலே சூனியம் தவிர்த்து எதுவுமேயிருக்கவில்லையாம். பின்பு எங்கிருந்தோ இவையெல்லாம் மெல்ல மெல்ல வந்து சேர்ந்துதாம். சிக்கல் கொண்டுதாம்........ இந்தச்சிக்கலை அதன் கட்டமைப்பை புரியற மாதிரிக் கொஞ்சம் படித்திருக்கேன்.........ஆனா இதெல்லாம் எதிலிருந்துதான் வந்தன...... ஏன் வந்தன......எதுக்குச்சிக்கல் கொண்டன...... எதன் வழிகாட்டலில போய்க்கொண்டிருக்கின்றன இதுகள்தான் புரியமாட்டேங்கிறது."
"நான் அந்தக் கவிதைகளைக் கேட்டேன்."
"நம்ப பாரதி கவிதைகள் மாதிரி எல்லாம் எளிமையாய்த்தான் இருந்தன..... ஆனாலும் எதுவுமே அர்த்தம் பிடிபடல்ல...... உங்களுக்கு?""நான்கூட வேகமாய்ப்படிக்கிற வகையில்லை...... ஒரு கவிதையைத்தானும் முழுசாய்ப்படித்து முடிக்கல..... சில கவிதைகள் மெற்றா·பிஸிக்ஸ் பற்றிப்பேசின மாதிரியிருந்துதே?" பிரபஞ்ச இரகசியத்தைப் பிட்டுவைக்கிற மந்திரக்கவிதைகளை அநியாயமா மிஸ் பண்ணிவிட்டோமோ........ கவலையாயிருந்தது.மனிதநடமாட்டமே இல்லாதிருந்த அந்தப்பிராந்தியத்தில் அக்கவிதைகளைப் புரிந்துகொண்ட ஜீவனேதாவது இருக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். சில கழுதைகள் ஆவரசுப்புதர்ப்பக்கமாக மேய்ந்துகொண்டு நின்றன.
3.
"ஆறாவது, ஏழாவது, எட்டாவது புலன்கள் நீங்கள் நினைப்பதுண்டா........?"
கடித்துக்கொண்டிருந்த தேன்புல்லைத் துப்பிவிட்டு "விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றாள்.
"இப்போ எம்மைச்சுத்தி எத்தனை ரகமான மின்காந்த அலைகளில எத்தனை மொழிகளில எத்தனை விதமான இசைகள் மிதந்து கொண்டிருக்கே...... எதையாவது கேட்கிறோமா?"
"இல்லை"
" அதை வடித்துச் செவியில செலுத்த ரேடியோ என்றொரு சாதனம் தேவைப்படுகுதில்ல....... இது போல எமது புலன்கள் கடந்த சக்திவீச்சுக்கள் இந்தப் பிரபஞ்சவெளியில எமக்குப் புலப்படாம இருக்கலாம்....... இன்னும் பல மில்லியன் வருஷங்களில பரிமாணம் அடைந்திருக்கப்போற மனிதன் அந்த சென்ஸ்களை எல்லாம் உணர்பவனாயிருப்பான் அவனுக்கு பிரபஞ்ச இரகசியங்கள் எல்லாம் புரிவதாயிருக்கும்."
"அவன் அந்த சென்ஸ்களையெல்லாம் அடைகிறவரையில் இருக்கிற தலைமுறை மனிதர்கள் பூமியை விட்டுவைத்திருப்பார்களா?"
" சும்மா ஒருஎதிர்பார்ப்புத்தான்."
"இந்த மாயைத்தத்துவம் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?"
"அது என்னை நல்லாவே குழப்புது"
"எப்படீன்னு சொல்லுங்க?"
"அது வஸ்த்துக்கள் எதையுமே இல்லேன்று நிராகரிக்குதில்ல.......எமக்கு சென்ஸ்..... அதாவது புலனுணர்ச்சி இருக்கிறதாலதான் எமது இருப்பையும், பிறவஸ்த்துக்களையும் பிரபஞ்சத்தையும், சூனியத்தையும் சொல்லமுடியுது........ ஸ்த்தூலவுடம்பு கொண்டிருக்கிற பொறிகள் இந்த உலகத்து வஸ்த்துக்களோட பெறுகிற அனுபவங்களாலதான் மனுஷனுக்கு அறிவோ, ஞானமோ பிறக்கிறது. இந்த ஞானத்தின் பிறப்பிடம் இருப்பிடம் வேற மனசா ஆத்மாவா என்றொரு கேள்வி இருக்கு..........மனசு என்று வைச்சா அந்த மனசைக்கொண்டிருக்கிற ஸ்த்தூல உடம்பு மாயை, அதன் அறிவு, ஞானம் எல்லாமே மாயை என்று நிறுவலாம்.........ஆத்மா என்றாகிறபோது இவ்வளவு ஞானம் வாய்த்திருந்தும் எதுக்குப் போய் கன்மாவில சிக்குப்படிறது என்பது புரியல........மேலும் கன்மாவின் வேலைகளைப் பார்க்கிறபோது ஏதோ பழிவாங்கற மாதிரியெல்லாம் படுது...... தவிர நான்கொஞ்சம் ஆச்சர்யப்படற மாதிரி ஒரு தியறி இருக்கென்றால்.........அது அத்வைதந்தான்."
"அதாவது சத்து, சித்து, சிவம் என்னாமல் எதையாவது புரியும்படி பேசறதா?"
"அத்வைதம் எதையுமே மறுக்கல்ல....... ஒன்றேயான பிரமத்தின் வேறுபட்ட தோற்றங்கள்தான் இப்பிரபஞ்சத்தின் வஸ்த்துக்கள் என்று விபரிக்குது. இதில அற்புதம் என்னவென்றால் தத்துவம் விஞ்ஞானத்திற்கு முந்திப்போய் எலக்ரோன் நுணுக்குக்காட்டி இல்லாமலேயே மூலகங்களுக்கு அல்லது தனியன்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமையைச் சொல்லுது......... இது ரொம்ப அபூர்வமான விஷயந்தான்....... ஆனால் இதுகள் எதனாலுந்தான உயிர், சிருஷ்டிப்பு, அதன் நோக்கங்கள் இதுகள்ல எனக்குத்தெளிவு கிடைக்கல.........பரமாத்மாவே ஆணவம், கன்மம் மாயையால பற்றுண்டு ஜீவாத்மாவாகி பின் பிறப்புக்களால ஸம்ஸ்காரம் பண்ணிக்கொண்டு பரமாத்மாவா ஆகிறதென்கிறதைதோ என் பிரக்ஞை ஒப்புதில்ல."
" விஞ்ஞானி நாப்பது மில்லியன் வருஷங்களுக்கு முன்னே பூமியில் உயிர் இருக்க வாய்ப்பேயில்லையென்று அடிச்சேசொல்லிடறான்........ அப்போ அதுக்கு முன்ன ஸம்ஸ்காரம் எல்லாம் எங்க நடந்திச்சாம்?""வேறொரு மண்டலத்திலயாயிருக்கலாம்."விழுந்து விழுந்து சிரிச்சாள். அவள் கனிந்து மகிழ்ந்து குலுங்கிச்சிரிப்பது மனதில் எங்கேயோ செல்லமாகக்கடிக்கிறது." இந்த உலகத்தில நீங்கள் பார்த்து ரொம்ப அதிசயிக்கிற..... அல்லது உயர்வானது என்று கருதிற விஷயந்தான் என்ன.?""இந்த உயிர் எங்கிற விஷயமும் பிரம்மம் மாதிரியே எங்க அறிவுவட்டத்தில சரியா பிடிபடாமத்தான் இருக்கு........ அதை விடுத்துப்பார்த்தால்....... நான் மனித உணர்ச்சிகளைத்தான் சொல்லுவேன்....... ஏன் மனிதன் என்று குறிப்பிட்டுச் சொல்கிறேன்னா மற்ற விலங்குகளில அது அவ்ளவா பரிணாமிக்கவில்லை...... இந்த உலகத்தை இன்னும் அழகாக்கிடறதா...... இல்லை கொழுத்திடறதா என்று தீர்மானிக்கறது நாளைய மனுஷன்ட உணர்ச்சிகளின் கைக்குவந்தாச்சு........ உலகத்து வளங்களை நுகர்றதில மனுஷருக்குள்ள சமத்துவம் இல்லை என்கிற அடிப்படை உண்மை ஒருத்தனுடைய உணர்வில தாக்கினதாலதான் பொதுவுடமைத்தத்துவமே தோன்றிச்சு. இன்றைய உலகில யார் அதிநாகரீகன் என்றால்...... எவனொருவனிடம் சூப்பர் ஸென்ஸிடிவ் மனம் இருக்கோ அவன்தான் என்று கையைக்காட்டுவேன்......... அஹிம்சை கருணை காருண்யம் என்கிறதெல்லாம் ஹை ஸென்ஸிடிவ் மனதாலதான் சாத்தியம். முழுதா விபரித்துவிடமுடியாத அபூர்வஉணர்ச்சிகளை அருட்டக்கூடியசக்தி கலை, இலக்கியம், இசை, இயற்கையழகு இதுகளுக்கும் இருக்கிறதால நான் இவைகளில்லயும் லயித்துப்போவதுண்டு.........."
இப்படிப் பேசிக்கொண்டே போனோம்.
4.ஒரு திண்மக்கோணத்துக்கு(Radian) ஆயிரத்திற்கும் மேல் ஒளிர் வெள்ளிகள் நிறைய சேஷ்த்திரம் பகலாகியது. ஒவ்வொரு முகிலும் ஒவ்வொரு வர்ணத்தில் தோய்ந்துகொண்டு எல்லாத்திசையிலும் சுயாதீனமாய் திரிந்துகொண்டிருந்தன.கட்சி மாநாடொன்றுக்குச் சென்று திரும்புபவர்கள் போல அணில்களின் கூட்டமொன்று எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்தது. கடந்து செல்லும் எந்தவொரு அணிலாவது எம்மை ஏறிட்டும் பார்க்கவில்லை.எதையாவது மிதித்துவிடாமலிருக்க பாதங்களை நிதானமாகத்தூக்கி வைத்து நடந்தோம்.பின் ஒரு கூட்டம் அகிழான்கள் வந்தன. சில பாத்தினடியில் புகுந்து கிச்சுக்கிச்சுமூட்டின. அவள் பயந்துபோய் பதிவாயிருந்த கொய்யா மரமொன்றின் கிளை¨யான்றில் ஏறிக்க¦¡ண்டாள். அகிழான்கள் கடந்து போனபின் என்னைத் தொடர்வதற்காக ஓடிவந்தாள்.
“ அகிழானுக்கே பயந்தாலெப்படி............... இனிக்கரடிகூட வரலாம். ”
“ சும்மா பயங்காட்டாதீங்க............. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் .”
“ நீங்கள் வந்த பின் காப்பான் "டைப்"பா........? ”
“ அதிபுத்திசாலி........... சாமர்தியசாலி.......... தைர்யசாலி.......... என்று நினைப்பதற்குரிய எவருடைய உரிமையையும் நான் மறுக்கேல்ல.........”
இரண்டு பக்கமும் ஈரலிப்பான பள்ளமான வயற்காட்டுப் பிரதேசங்களிருக்க நடுவே அணையைப் போன்றவொரு மேட்டுத்திடலில் பாதை தொடர்ந்தது. மேலே செல்ல இருமருங்கிலும் இருவாட்டி வயல்களில் சோளம் விளைந்து கதிர் தள்ளியிருந்தது.அவள் கீழே இறங்கிப்போய் நல்ல பால் பருவத்தில் பொத்திகளை முறித்து வந்து மடலையும் குந்துகளையும் நீக்கிச் சுத்தம் செய்துவிட்டுப் பவ்யமாக என்னிடம் நீட்டினாள். தானும் ஒன்றைக் கடித்து "சூப்பராயிருக்கு" என்றபடி இன்னும் பக்கமாக வந்தாள்.
“ சோளமென்றால் உங்களுக்குப்பிடிக்குமா.............? ” கேட்டேன்.
“ பொதுவா அடுப்பில ஏத்தாம கிடைக்கிற இயற்கையான காய்கனிகள்ல இஸ்டம் அதிகம். இளனி.........கரும்பு........கெக்கரி.............. இப்படியொரு பட்டியலேயிருக்கு. ”
“ சரி............... இப்படி பிடித்த விஷயங்களாய் இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்............. ”
“ மைல்கணக்கில நீள்ற பட்டியல்லயிருந்து............. எதைச்சொல்றது எதை விடறது............ ரொம்பக்கஷ்டம்........... ஏதோ கொஞ்சம் முயற்சி பண்றேன். ”
“ பண்ணுங்க......... ” “ ஆனந்தவல்லி என்கிற என்னை. ”
“ வெண்ணிலாவென்றல்லா கூப்பிட்டார்கள்? ”
“ என் ஒரிஜினல்பேர் ஆனந்தவல்லிதான்................ ஏன் கர்நாடகமாயிருக்கா? ”
“ அப்படி நான் சொல்லேல்லையே. ”
“ யாருமே நேர்ல உன் பேர் கர்நாடகமாயிருக்கென்று சொல்லிடமாட்டாங்க........ குறிப்பா ஆண்கள்னா................. ஆ.....அதுவா........"லவ்லி.....ஸ்வீட்"என்பாங்க. ”
“ ஏதோ ஆண்கள் என்றாலே பெண்களோட போட்டிபோடவென்றே ஜனிக்கிற ஜென்மங்கள் மாதிரித்தான் நீங்களும் நினைக்கிறீங்கள்..............சரி....மேல.”
“ எங்க குடும்பம்..........., எங்க ·பிலோசபி புரொபெஸர் அச்சுதனைப்போல இன்டெலெக்சுவலா........... ஈகோவில்லாம......... உண்மையான நேசத்தோட பழகுகிற ப்ரெண்ட்ஸ்.........., மற்றும் துறை போந்தமேதைகள், ஞானிகள், பெரியவா இவர்களுடைய அருகாமை, குழந்தைகள், பூக்கள், மரங்கள், பச்சைப்புல்வெளிகள், தோப்பு........ மலை, அருவி, கடல் என்று இயற்கையை அனுபவிக்கப்பண்ற பயணங்கள், உழைப்பும் நம்பகமுமான ஒரு கார், மழை, நாளையைப்பற்றின கவலையில்லாமலிருக்கும் பறக்கும் ஒரு பறவை, சுதந்திரமாய் நீந்திற ஒரு மீன்......... போதுமா?”
“ இன்ரெறெஸ்டிங்............. இன்னுங்கொஞ்சம். ”
“ புத்தகங்கள் , Zen , Surfism, Confuziusஸோ தத்துவங்கள், நாவல், கவிதை, பரதநாட்டியம், கர்நாடகஇசை.”
“ வாவ்................! ”
“ என்ன? ” என்பதாகப்பார்த்தாள்.
“ இத்தனை விஷயங்களுமே எனக்கும் பிடித்தவையென்றால் நம்புவீர்களா......? ”
“ நம்புவேன். ”
“ நானென்றால் இந்த முதற் பட்டியலிலே இன்னுமொன்றையும் தப்பாம சேர்த்துக்குவேன். ”
மீண்டும் அதே"வித"மாகப்பார்த்தாள்.
“ அது ரொம்ப பேர்ஸனல்............. அந்தரங்கம்..... ஆனா நான் இதுல உண்மை பேசிறேனென்றால் சொல்லியே ஆகணும் . அது......... வந்து.........வந்து......”
“ தைரியம் பத்தலயா.......... சொல்ல? ”
“ ச்சே........... அப்பிடியெல்லாமில்ல.”
“ அப்ப......... இருந்தா சொல்லிடுங்களேன். ”
“ காதலுடன் கூடிய செக்ஸ்.........!”
விழிகளை மேலே எறிந்துவிட்டு "காட்ச்" பிடித்தாள். அதை ஆமோதிப்பு என்பதா........மறுப்பு என்பதா............கிண்டல் என்பதா........? சரி விஷயத்தை மாற்றவேண்டும்.
“ கர்நாடக இசை என்றால் என்ன? ” என்றேன்.
" கர்ணம் எங்கிறது காது. செவிப்புலனுக்கு அதனால கிரகித்துக்கொள்ளக்கூடிய மேல்"கீழ் ஸ்ருதி எல்லைகளிருக்கு. இது விலங்குக்கு விலங்கு வேறுபடக்கூடச்செய்யும்.......... மானுஷச்செவியில புலனாகக்கூடிய எல்லா இசைவகையும் கர்நாடக இசைக்குள்ள அடக்கம்.”
“ ரொம்பத்தான் ஆசை......... சரி. நீங்கள் இசை கற்றுக்கொண்டீர்களா?”
“ கற்றுக்கொண்டது கொஞ்சம்.......... கேட்டதுதான் அதிகம். ”
“ பாடுவீர்களோ............?”
“ அடிக்கடி பாடுவேன்.................... எனக்குள்ளேயே அலாதியாய் ஆலாபனைகள் பண்ணிக்கொண்டு , சில வேளைகளில மிகமிக விஸ்த்தாரமாய்ப் முடிவேயில்லாம கற்பனைகளை வளர்த்துக்கொண்டு..................... பாடிக்கொண்டேயிருப்பேன்........ ஆனா பார்க்கிற யாருக்கும் தெரியாது. ”
“ இப்போ எனக்காகவும். ”
இயல்பாக முதலில் வெட்கப்பட்டாள். வானத்து மஞ்சள் முகத்தில் தெறிக்கிறது. சமாளித்துக்கொண்டு "பிகு" ஏதுமில்லாமல் பாட ஆரம்பித்தாள்.தாழ்தொனியில் பூஞ்சிறகொன்று காற்றில் அசைந்து அசைந்து மிதந்து வருவதைப்போல ஹிந்தோளத்தை மிக மிருதுவாக ஆலாபனை பண்ணினாள்.ஸ்ருதி மெல்ல மெல்ல மேலே ஏறி, ஏறிவிட்ட பட்டமொன்றின் வாலைப்போல அங்கங்கு சுழித்தும் ஒடித்தும் துடித்தும் ஜாலங்கள் காட்டியது.ஒரு வண்ணத்துப்பூச்சி பறக்கப்போதுமான லேசான பிரயத்தனத்துடன் அனாயாசமாய் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்தும் நுழைந்தும் மீண்டது. அந்த ரசானுபவத்தில் திளைத்துச்சிலிர்த்து என்ன இவள் கூடப்பறக்கிறேனா, நடக்கிறேனா என்பது புரியாமல் மயக்கமாகவிருந்தது. வளமான பிரயோகங்களாலான ஆலாபனை முடிந்து அவள் தரையிறங்கவும் “ சபாஷ் ” என்றேன்.
“ நிஜமாலுமா..............?”
“ நிஜமாலும் இத்தனை அற்புதஞ்செய்வீர்களென்று நான் நினைக்கவேயில்லை!”
தலையைச்சாய்த்துப் பாராட்டை ஏற்றுக்கொண்டு “ மேலே பாடவா........? ” என்றாள்.
"ஜோராய்! ”
“ மா......... ரமணன்..........உமாரமணன்................. மலரடி பணி மனமே தினமே........ ”
பாபநாசசிவன் கீர்த்தனை. எத்தனை கேட்டாலும் திகட்டாத காந்தர்வக்குரலில் நிரவல் செய்து ஸ்வரங்களில் மந்த்ரங்களைத் தூவும் கற்பனைகள் காட்டி சாஹித்யத்தில் பாவங்களை உருகி ஓடவிட்டாள்.தாளம் போட நான் தடுமாறவும் கையில் "ரூபகம்" காட்டித்தந்தாள். கார்வைகளும் அதில் ராகத்தைத்தெறிக்க வைக்கும் நளினம்பொருந்திய அசைப்புகண்டன்கூடிய பிருகாக்களும் என்னே சுகம்! இதயத்தின் மிக ஆழத்திலிருந்து வானவில்லொன்று பிரவகித்து உயிர்பூரா வியாபிக்க மனம் சிறைப்பட்டுப்போகிறது.கீர்த்தனை முடிந்ததும் என்னையும் ஏதாவது பாடும்படி வற்புறுத்தினாள்.
“ இவ்வளவு சுதி சுத்தமாய்...........நுட்பமாயெல்லாம் பாட வராது........... ஏதோ கொஞ்ச நாள் வீணை படிச்சேன். அதுக்கான நேரத்தை ஒதுக்கி உழைச்சு என் குருத்தினிக்கு நான் 'சின்செயரா'ராயில்லை..................அதனால பாதியில நிறுத்திட்டன்.”
“ பரவாயில்லை....... முடிஞ்சவரையில தெரிஞ்சமாதிரி பாடுங்க..... இங்க வேறு யார்தானிருக்கா......... கலைங்கிறதே கற்றுக்கொள்றதும் தெரிஞ்சுக்கிறதுமான விஷயந்தானே?”
அவள் விடுகிறமாதிரியில்லை. எதைப்பாடுவது........... என் கீழ் மத்திமக்குரலுக்கு ஏற்றதாயிருக்க வேணுமே.......... ? யோசித்துவிட்டு ஹம்சநந்தியில் நேரடியாகவே“ ஸ்ரீநிவாஸ திரு வேங்கடமுடையாய் ஜெயகோவிந்த முகுந்த அனந்த தீனசரண்யன் எனும்பெயர் கொண்டாய் தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்...... ஸ்ரீநிவாஸ
ஜெகம் புகழும் ஏழுமலை மாயவனே திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே ஜெகந் நாதா சங்கு சக்ர தரனே திருவடிக்கபயம் அபயம் ஐயா.........ஸ்ரீநிவாஸ ”என்று பாடிமுடித்தேன்.
“ பரவாயில்லை......... நல்லாவே பாடறீங்களே! ”
எனக்கும் தெரியும் இது பரவாயில்லை ரகந்தான்.
“ நீங்க வற்புறுத்தினதுக்காக ஏதோ முயற்சி பண்ணினேன்............... இதெல்லாம் சங்கீதத்துக்குள்ள வராது. ” "நோ.....நோ.....நோ..... யூ ஆ ரூ மொடெஸ்ட்......... நல்லா ஸாதகம் பண்ணினாத்தேறிடுவீங்க........... எங்க இன்னொன்று.”
“ ஐயையோ............. இன்னொன்றா............ அவ்வளவுக்கு வருத்திக் கொள்ளத் துணிஞ்சாச்சா................. சரி........ ஒரு தில்லானா? ”
“ சூப்பர்.......!”
ஸ்ரீ ரஞ்ஜனியில் மஹராஜபுரத்தார் தானே கொம்போஸ் பண்ணி அடிக்கடி பாடும் தில்லானா ஒன்று ஞாபகம் வருகிறது.
"தகதீம் ததீம் நாகிருதீம்ததோம் திருதீம் திரனா தனதிரனாநாகிருதாநி தோம் திருதீம்நாகிருதாநி தோம் திருதீம்தரிகிட தீம் தரிகிடதீம் தரிகிடதீம்தரன தீம் திரனா திரனாகிடதக தரிகிடதீம் தக்கிட தரிகிடதீம்தாகிட ததீம்த தக தளாங்கு தகதீம்தளாங்கு தக தீம் தளாங்கு தா தீம் தளாங்கு தக தீம்."
கையில் "ஆதி" போட்டவள் கைப்பையை என்னிடம் தந்துவிட்டு மெல்லிய விரல்களைக்காற்றில் வீசி நளினமாக ஆடினாள்.கலை தரும் வகை தெரியாத பரசவத்தில் ஆழத்தோய்ந்தோம். பின் தானாகவே அம்புஜம் கிருஷ்ணன் காபியில் கொம்போஸ் செய்த
"அரவிந்தப்பதமலர் நோகுமோ அடிமை எனக்கிரங்கி ஆட்கொள்ளவந்திடில்"
என்கிற உருப்படியை பாவம் பிழியப்பிழிய உருக்கினாள். தொடர்ந்து இந்தியில் "பஜன்" ஒன்றைப் பாடவும் இலேசான அவள் குரல் வானம் வரை ஏறிப்பின் காட்டுப்புலம் முழுவதும் பரவ களைப்பின்றி நாம் நடந்தோம்.
கீழே பதிவில் தாழ்நிலவயலிடையே குட்டையொன்றில் பொன்வானம் பிரதிபலித்துப் பாரிய தங்கத்தாம்பாளமென மின்னியது. மேலும் நடக்கையில் சிறிய கண்மாயொன்று வந்தது. அதிலே அமர்ந்தோம். வயல்களுக்கான பாசனவாய்க்காலொன்று அதன் கீழே “ கிளுக் ” “ கிளுக் "கென்றது.
“ சாப்பிடலாமா....? "என்றாள்.
“ ஏது? ”
“ புளியோதரை கொண்ணாந்திருக்கிறேன்.”
தன் தோற்பையைத் தூக்கிக்காட்டினாள். வாய்க்காலில் கையை அலம்பிவிட்டு சாப்பிட்டோம். வாழைமடலில் கட்டியிருந்த புளியோதரையை கட்டுச்சாப்பாட்டுக்கேயுரிய வாசனையுடன் திவ்யமாகவிருந்தது.மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். வானத்து நட்ஷத்திரங்கள் ஒவ்வொன்றாக மெல்ல விடைபெறத்தொடங்கின. பாதையின் இருமருங்கிலும் நின்ற நாணல்களும், பால்மொண்டிகளும் பூனைவாலொத்த குந்துகளாலும், கதிர்களாலும் எம்மை வருடின.கோவை, கூழாம்பழங்களை வைத்து நன்னிக்கொண்டிருந்த சிறுகுரங்குகள் நெற்றியில் கைவைத்து எம்மை நோக்கிவிட்டு விரைந்து மரங்களில் தாவின.எமது காலரவத்தைக் கேட்ட குழிமுயல்கள் குட்டிகளுடன் விரைந்துபோய் புதர்களுள்ளும், பற்றைகளுள்ளும் ஒளிந்துகொண்டன.மேலே நடந்து செல்லவும் பாதை மணற்பாங்கானதாக மாறியது. வருவது ஒரு ஆற்றுப்படுக்கையாக இருக்கலாம். அதை ஊர்ஜிதம் செய்வதுபோல காற்றும் அதீதமான குளிரை அள்ளிவந்து போர்த்தியது.
“ குளிருதே.............. ஸ்வெட்டரைக் கொண்டு வந்திருக்கலாம்............"என்றாள்.
“ ஆமாம்.............. எடுத்து வந்திருக்கலாந்தான்............ ” என்றேன் நானும் என்னிடமும் ஸ்வெட்டர் இருப்பதைப்பால.தனியாகப் பறந்து வந்த கொக்கு ஒன்று தன் இடது சிறகைப்பதித்து அரைவட்ட "டைவ்" அடித்துத் திசையை மாற்றிக்கொண்டு பறந்தது. மீதமிருந்த வெள்ளிகளும் ஓய்வெடுக்கச் செல்லத்தொடங்கின. ஆற்றின் படுகையிலிருந்து தொடர்ந்த மணற்பாதை புல்லுகளும் செடிகளும் செறிந்து வளர்ந்த மண்பாதையாகியது அதைக்கவனித்தே நடக்க வேண்டியிருந்தது. நடைபாதையைவிட்டுக் கொஞ்சம் விலகினாலும் தொட்டாற்சுருங்கியும், நாயுருவியும் கால்களைப் பிராண்டின.பழுக்கக் காய்ச்சிய இரும்பைப்போல தகதகத்துக்கொண்டிருந்த வானம் மெல்ல மெல்ல ஆறிப்போக வயல்வெளிகளின் பின்னே தெரிந்த காடுகளும் இருட்டில் இல்லாமற்போயின.மேலே செல்ல மிருதுவாகவும் பாதங்களுக்கு சுகமாகவுமிருந்த மணற்பாதை ஈரமானதாகக் காணப்பட்டது. பாதை மெல்லச் சரிவாகச் சென்று பள்ளத்தில் இறங்கியது. அங்கே “ சிலுங் ” “ சிலுங் ” “ சிலுங் ” கென்று சிற்றருவியொன்று நடந்துகொண்டிருந்தது. பாலியாறு என்பது இதைத்தானோ?ஆழம் அதிகமில்லை. இலகுவாகக் கடந்து வெளியேறினோம். தூரத்தில் புள்ளிப் புள்ளியாக மினுக் மினுக்கென்று வெளிச்சங்கள் தெரிந்தன. அவை ஏதேனும் வீடுகளிலிருந்து வரும் வெளிச்சமா இல்லை காவற்கொட்டில்களிலிருந்து வருகின்றனவா தெரியவில்லை. வேட்டைக்குப் போவபவர்களின் சூழ்களாகக்கூட இருக்கலாம். இருள் அதிகமான அதிகமாக என்னை நெருங்கி நெருங்கி நடந்தாள். அவள் நாசியும் என் தோட்பட்டையும் ஒரே உயரமாகவிருந்ததால் அவள் மூச்சின் உஷ்ணம் என் கழுத்தையும் தோட்பட்டையையும் சுட்டது. அந்த நெருக்கமும் அவளிடமிருந்து வந்த பெண்வாசனையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமயத்தில் தோளும் தோளும் உராய்ந்தன. சில தடவைகள் பாதையிலிருந்த கிடங்குகளில் காலிடறுப்பட்டு விழப்போனாள். அடுத்த தடவை அவள் காலிடறியபோது தெறிவினையாக அவள் இடது கையைப்பற்றினேன். பாதஇரசம் கொண்ட பாத்திரத்தினுள் கையைப்புதைத்த மாதிரி சில்லென்றிருக்கிறது. இது எதனால்................. பயத்தினாலா?நான் அவள் கையைப்பற்றிக் கூட்டிப்போவது ஒன்றும் தப்பாகப்படவில்லை. மிகவும் நியாயமாகவே இருந்தது. அவளும் ஆட்சேபிக்கவில்லை. பூனைவால் பூவைப்போல மிருதுவாயிருந்த அவள் விரல்களுக்கு வலிக்காமலும், அதேவேளை பறிபட்டுவிடாத அளவுக்கு அழுத்தமாகவும் பற்றிப்பிடித்தேன். குளிர்ந்திருந்த அவள் கையும் நேரமாக ஆக உஷ்ணமாகிறது. இந்த ஸ்பரிஸத் தொடுப்பூடாக ஏதோவொரு அதிர்வெண்ணில் மாய அலையொன்று என்னுள் செலுத்தப்பட என்னுள்ளிருந்த ரயில் எஞ்ஜின் அருட்டப்பட்டு அதன் பகுதிகள் சூடாகி ஜிவ்ஜிவ் என்கிறது. அந்த ஸ்பரிசம் தேவையாகவுமிருக்கிறது. அத்தொடுகை மட்டும் அறுந்துவிட்டால் உயிர் இயங்காதுபோகச் சக்தியற்றுச் சாய்ந்துவிடுவேன் போலுமிருந்தது.இந்த உரிமை எப்படி வந்தது என்று சிந்திக்க விருப்பமில்லாதிருந்தது. இடையில் அந்த சண்டைப்பிரகிருதி “ விட்றா கையை அயோக்கியப்பயலே............” என்றால் அந்த சுகத்தை இழந்து போய்விடுவேனோ? இந்த படவாவின் முகத்தை இப்போது கண்ணாடியில் பார்க்கவேண்டும். என்ன திருடனைப் போலிருப்பான்.இது ரொ¡ம்பவும் தப்பென்றால் அவள் கையை உதறிவிட்டிருக்கலாமே..................அவளும் என்னைப்போலவே தன்னுள் போராடுகிறாளோ............ கையை உதறுதல் என்னை அவமதித்ததாகவோ புண்படுத்தியதாகவோ இருக்கும் என எண்ணுகிறாளோ?முழங்காலுக்குக் கீழும் அலம்பல் கட்டால் விளாசியதுபோல “ சரக்"கென்று முள்ளம்பன்றியொன்று அடித்துவிட்டு என்னைத் தேய்த்து உராய்ந்துகொண்டு குறுக்கே ஓடவும் “ ஐயே ” என்று அலறிக்குதித்தவள் தள்ளிக்கொண்டு என்னில் தாவிச்சாய்ந்தாள். அடுத்து மேலே என்ன கரடிதான் விழுந்து பிடுங்கப்போகிறதோவும் தெரியாது............. அவளும் பயப்படவேண்டாமேயென்று “ என்ன முயலாக்கும்.” என்றேன்.
அவளின் மொத்தலால் மார்பின் மென்மையான ஸ்பரிசம்பட்டு மனம் நெக்கி அலைந்தது.
“ இவ்வளவு பக்கமிருக்கே......... சும்மா அலையாமல் அள்ளேன்டா பரதேசி.”
அவன் சொன்னான். என்னை வம்பில் மாட்டிவிட்டுவும் சொல்லுவானவன். அவனை முழுவதும் நம்பிவிடவும்கூடாது.என் உணர்ச்சிகளை அவள் முழுவதும் புரிகிறாளா...............? புரிந்துகொண்டுவிட்டு “ ப்பூ................. இவ்வளவுதானா நீ.................?” என்று துப்பினாளேயானால்.............. எப்படி நான் நொறுங்கி ஒடுங்கிப்போய் விடுவேன்?
5.
என்றோ ஒரு நாள் அரைத்தூக்கத்தில் கேட்டுவிட்டு மறந்துபோன ஒரு ஹிந்துஸ்தானி மெலடி, பின்னால் பலதடவைகள் நான் அதை நினைவில் கொண்டுவர முயன்றும் அதன் கட்டமைப்போ இல்லை சாயலின் ஒரு சிறு கூறுதானோ நினைவுக்கு மறுதரிசனம் தரமுடியாதென்று முரண்டு பண்ணியது.......... இப்போ வலியவே பூரணமாய்ப் பெருகி வந்து என் இசைப்புலம் முழுவதையும் நனைத்தது.மின்மினிகள் குறுக்கும் மறுக்கும் பறந்தன. எமது அரவத்தை உணர்ந்து கொண்ட ஆட்காட்டிப்பறவைகள் குரல் கொடுத்தன.மணற்பாதை அகன்று மணற்பாங்காகி பாதங்கள் ஈரத்தை உணரத்தொடங்கவும் மீண்டும் அருவி குறுக்கிட்டது. அருவியின் இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த மருதமரங்களின் கிளைகள் குனிந்து அருவியைத் தொட்டுக்கொண்டு நிற்பது இருட்டில் பல இராட்சத அரக்கர்கள் அப்படி அணிவகுத்து நிற்பதைப்போலிருந்தது. அவளையும் அவை அப்படித்தான் பயங்காட்டினவோ என்னவோ................ உரசல் இப்போது அதிகமாகவேயிருந்தது.இந்தப்பாதையும் அருவியுமென்ன இருட்டில் கில்லித்தாண்டல் விளையாடுகின்றனவா? பின்னல் ஜடையின் பிரிகளைப்போலத் தம்பாட்டில் பிணைந்தும் பிரிந்தும் ஒன்றோடொன்று பின்னிச்செல்கின்றனவே?நடந்தோம். மறுபடி அருவிவந்தது. இம்முறை நாலைந்து அடிகள் வைத்தவுடனே நீர் மட்டம் முழங்கால்வரை ஏறியது. நடுவில் ஆழம் அரைக்கு மேலேயே போகலாம். முழங்கால்வரை சேலையை மடித்துச் சிரமப்பட்டாள். எனக்கு ஒரேவழிதான் புலப்பட்டது. கேட்டேன். “ நான் வேணுமென்றால் சேலை நனைந்துவிடாமல் உங்களைத் தூக்கிக்கொள்ளவா...............?”அவள் “ வேண்டாம்” என்று மறுக்கவே அவகாசம் தராது நான் லங்கோட்டுடன் நின்றுகொண்டு வேஷ்டியை மடித்து உத்தரீயம் போலத்தோளில் போட்டுவிட்டு அவளை ஒரு வாழைக்குட்டியைப்போல அலாக்காய்த் தூக்கிக்கொண்டு நடந்தேன்.ஆழம் இடுப்புவரை இருக்கத்தான் செய்தது. உணர்ச்சிகளை முறிக்கவேண்டிய தண்ணீர் என்னுள் இன்னும் அனலைமூட்டி வளர்க்கிறது. மயிர்க்கால்கள் வேறு சிலிர்க்கின்றன. " கீலா"விலிருந்த காவாலித்தவளை ஒன்று எங்கிருந்தோ உரத்து விசிலடிக்கிறது.கொஞ்சம் இறுக்கமாகவே...................... அணைத்தேன்.பட்டாக அரைத்த மாவினுள் விழுந்து புரண்டு அளைந்த மாதிரி அவள் தேகம் தந்த சுகம் “ மோடி கிறுக்குதடி தலையை................. கனியே நினது இன்பம் வேணுமடி.........!” என்று ஏங்க வைத்தது. சற்றே தேவைக்கு அதிகமாகவே கைகள் இறுக்கி அணைத்துக்கொண்டன. தண்ணீர் மட்டம் முழங்காலளவுக்கு வந்தபோது இறங்க எத்தனித்தாள். மேலும் இறுக்கினேன்.ஒரு மானைப்போலத் திமிறி விடுவித்துக்கொண்டு தள்ளிப்போய் நின்றாள். என் ஆசைகள் அருவியில் கொட்டப்பட்டு சங்கடம் நிறைந்த கணம் நகரா நிற்கையில் அவன் வந்து “ வந்தனங்கள் அனந்தம்” என்றான். (முன்பொரு முறை சுவரில் ஆணி அடிக்கும்போது விரலில் சுத்தியலால் அறைபட்டுத் துடித்துக்கொண்டிருக்கையில் வந்து "வந்தனம்” சொன்ன பிரகிருதி அல்லவா? ) அவளுக்கு 'சொறி' சொல்லவேணுமா............... வேண்டாமா என்று குழம்பித் தவிக்கையில் அவன் எந்த ஆணையோ அட்வைஸோ தராமல் சும்மா என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். என்னுள் ஆற்றாமையும் கோபமும் பிரவகிக்கின்றன.
என் வட்டத்தில் எத்தனை “ அழகு ரூபிணிகளை"க் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறேன். அனைவரும் அலர் அகவைப்பருவத்து மாணவிகள். இயற்பியலில் ஓட்டமின்னியல் பாடம். அன்று கரும்பலகையில் மின்சுற்று ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறேன். காதில் கேட்கிறது. “ மாஸ்டருக்கு வடிவான பல்லடி.”
“ போடீ கட்டைத்தாரா............... அவர் எனக்குத்தான் மாட்ச்!”விமர்சனங்களைக் காதில் போடாதிருந்தால்தான் பாடம் நடத்தலாம். முன் பெஞ்சில் ஒருத்தி “ கிசு கிசுப்பான” குரலில் சொன்னாள்:
“ சேர்............ இவ உங்கள அத்தானாம்...........!”
யார்தான் அந்தத் துணிச்சற்காரி?"சட்"டெனத் திரும்பினேன். என்னையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த வகுப்பின் ஹீரோயினான அழகி நாணித் தலைகவிழ்கிறாள்.
இன்றைய இச்சலனத்தின் மூலவேர்தான் என்ன? அவளது கலையா...............? எளிமையா...............? அறிவா? அல்லதுஎம் தனிமையா................? அவள் தொடர்ந்து வரவில்லை. சற்று நின்றேன். வருவதாயில்லை. “ எங்குதான் போய்விடப்போகிறாள்..............?” மனது வக்கிரம் கொள்கிறது. மெதுவாக நடந்தேன். பாதையை விட்டிறங்கி காட்டினுள் மெல்ல ஒளிந்திருப்போமா? அப்போது என்னதான் செய்கிறாளென்று பார்ப்போம்.வேண்டாம். நிஜமாகவே அவள் என்னைத்தொலைத்து விட்டாளாயின் எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்? நளன் காலத்திலிருந்து வரும் பழி.அவள் ஓடி வரும் காலடி அதிர்வு கேட்கிறது. அருகில் வந்ததும் மூச்சு வாங்கிய படியே "சொறி ஹரிகேசன்” என்றாள்.
“ எதுக்காம்.....?”
“ இவள் அருவியில் மூழ்கியே போவதாகவிருந்தாலும் உங்களைத்தொட்டுத் தூக்க நான் வைத்திருந்திருக்கப்படாது....... It's absolutely my fault!..... Yes I admit it......I admit it. நானும் ஒரு நிமிஷம் மயங்கிவிட்டேனென்று வைப்போமே............ நாளைக்கு உங்களுக்கு இன்றைக்கு என் மேல இருக்கிற அபிப்பிராயம் இருக்காதில்ல................?”மாடுகளுக்கு குறியிழுத்த மாதிரி தோலும் உரோமமும் சேர்ந்து கருகும் மணம் காற்றில் எழுந்து வந்து குமட்டியது.மெளனமாக நடந்தோம். பனியில் குளித்த தேன் புற்கள் பாதங்களை நனைத்தன. உடலின் முன் பக்கம் கெழுத்தி மீனைப்போலவும், பின் பக்கம் டொல்·பினைப் போலவுமிருந்த விலங்கொன்று வானில் "டைவ்" அடித்துப்போனது.நாங்கள் கவனிக்காத கணமொன்றில் சூரியனிலிருந்து உடைத்துக்கொண்டு வந்துவிட்ட ஒரு பெரிய துண்டுபோல் ஒரு வெள்ளி வடகிழக்கில் தோன்றித் துள்ளித்துள்ளி எறித்தது.“ அதோ விடிவெள்ளி.......!” என்றாள்.வானத்தின் வெள்ளிப் பனித்திட்டுகளிடையே ஸ்லெட்ஜ்களில் குள்ளமான மனிதர்களிருக்க அதில் பிணைத்திருந்த ஏழெட்டு நாய்கள் அதை வேகமாக இழுத்துக்கொண்டு வழுக்கின.
"Fritjz Capra வோட Tao of Physics படித்தீர்களா.............?” கேட்டாள்.
“ கேள்விப்பட்டிருக்கிறேன்............... இனிமேல்த்தான் படிக்கவேணும்.”
கீழ்வான விளிம்பில் மெல்லச் சிவப்பேறியது. புலர்வானத்தின் புதுநிறங்கள் உத்வேகம் தந்தன.
“ ம்ம்ம்............ பார்த்தீர்களா.................. வானத்தை அது விடிவெள்ளியேதான்!”
குதூகலித்தாள்.மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருக்கொழுந்து, இரவுராணிப்பூக்களுடன் என்றுமே பார்த்திராத ஆயிரம் மலர்கள் எல்லாமே இதழ்களால் ஒளி உமிழ்வனவாய் வானத்தில் மேலும் பூக்க பவனத்தில் மேலும் சுகந்தம் நிறைந்தது.
'Teddy bear' ஐப்போலிருந்த முகிலொன்று தூரத்தே காட்டில் இரகசியமாய் வழுக்கி வழுக்கி இறங்கிக்கொண்டிருந்தது.
இன்னும் பாதை அடிவானம் நோக்கி நீள்வதாயிருந்தது.
ஆனால் தெளிவாகவிருந்தது.
நாங்கள் நடந்தோம்.

***************************

(இன்னுமொரு காலடி" லண்டன்" 1998)

Freitag, August 19, 2005

இரட்ஷகன் வருகிறான்.

பொ.கருணாகரமூர்த்தி



அன்று சனிக்கிழமை. இளமதியம் ஆகிவிட்டிருந்தது. முதநாள் இரவு இறுக்கிய மழையில் ஊர்த்தரை முழுவதும் வாரடித்துப் போயிருந்தது. சூரியரும் முடிந்த அளவுக்கேறி மினுங்கிக் கொண்டிருந்தாலும் பெரிசாக அழத்தாமலிருந்தார். வர்ஷிணி பதினொருமணியிருக்கும் என நினைத்தாள். இரண்டுமாத முதலே அவள் கடிகாரம் துடிப்பதை நிறுத்திவிட்டிருந்தது, புதிய ‘செல்’ மாற்றவேண்டும். அவள் நடத்தும் மினி பாலர் பாடசாலைக்கும் அன்றுவிடுமுறை.
இந்நேரம் மீன் அங்காடியில் வியாபாரிகள் வந்து கூடத் தொடங்கியிருப்பார்கள். வர்ஷிணி அவர்களது நாலு வயதுக் குழந்தை அநாமிகாவுக்கு மடத்தலை [பேபி றஸ்க்] தேனீரில் நனைத்து ஊட்டுகையில் ‘வசீகரன் நேரத்துக்குப் போய் மீனைவாங்கி வந்தானாயின் இனிக் காலைப்பலகராமென்று எதையும் தேடி வினைக்கெடாமல் உள்ள விறகில் சமையலையே முடித்துவிடலாம்’ என்று எண்ணினாள். அவளின் மனதைப் புரிந்துவிட்டவன்போல தான் சீராக்கிக்கொண்டிருந்த நீரிறைக்கும் இயந்திரத்தை ஒரு பக்கமாகத்தள்ளி உரச்சாக்கொன்றால் மூடிவைத்துவிட்டு “வர்ஷி பையை எடும் நான்போய் மீன் வாங்கியாறன்” என்றுவிட்டு பற்பொடியை வாயிலிட்டுத் துலக்கிக்கொண்டு முகம் கழுவ கிணற்றடிக்கு ஓடிப்போன வசீகரனைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சூரியக்கதிர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்க முடியாமால் அவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்து இருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்கள் வாழ்ந்திருந்த வீட்டின் திறப்பு அவர்களிடமே பத்திரமாக இருக்க வீடும் சுற்றுமதிலும் காணாமல் போயிருந்தன.
‘எம்மினமே’ வீட்டையும் , கூரையையும், மதிலையும் கல்லுக்கல்லாய் பெயர்த்துக் கொண்டுபோயிருந்தது. வீட்டிலுள்ள பொருட்கள் திருட்டுப்போவதென்பது எந்த நாட்டிலும் வழக்கந்தான். இங்கே தீராதபோரும் இழப்புக்களும் ஒரு வீட்டையே திருடிச்சென்று பிழைப்பதற்கு இந்தச் சமூகத்துக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

மூன்றுவருஷ முன்னர் அரசுக்கும் போராளிகளுக்குமிடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உண்டானதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்டுத் தத்தம் வாழிடங்களுக்கு மீளத்திரும்பிய மக்களுக்கு யுனெஸ்கோ நிறுவனம் வீடமைப்பதற்கென 50 சீமெண்ட் பக்கெட்டுக்கள், நாலோ ஆறோ கொங்கிறீட் தூண்கள், அலுமினியக் கூரைத்தகடுகள், வாளி, சமையல் பாத்திரங்கள் எனச்சில பொருட்களை நிவாரணமாக வழங்கியிருந்தது. இயல்பிலேயே வல்லவியான வசீகரன் அத்தூண்களை நிறுத்திக் கூரையமைத்து, தரைக்கு சீமெந்துபோட்டு , அரையளவு உயரத்துக்கு குந்துச்சுவர்வைத்து, மீதி உயரத்தின் இடைவெளியை பீப்பாய்த்தகரத்தாலும் , சப்புப்பலகையாலும் அடைத்து, அழகான சிறியதொரு வீட்டைச் சமைத்திருந்தான். தகரத்தால் வேய்ந்த கூரையின் இருபக்கங்களையும் சாய்வு ஒத்தாப்புக்களாக இறக்கி அவற்றினுள் ஒருபக்கம் சமையல், மற்றது அவனது மினி வேக்ஷொப். அதனுள்தான் உந்துருளிகள், விசையுருளிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், கதவுகள், பூட்டுகள் திருத்தவேலைகளென்று ஏதாவது செய்துகொண்டிருப்பான்.

சமாதானத்தோடு வடக்கில் சிலபகுதிகளுக்கு மின்சாரவிநியோகமும் வந்துவிட்டதால் அவ்வப்போ மின்காற்றாடிகள், நீர்தாங்கி மோட்டார்களின் றீவைண்டிங் , வீடுகளுக்கு மின்சுற்றுக்கள் அமைத்தல் என்று வேலைகள் கிடைக்கும். வசீகரன் உழைப்பதற்கு எப்போதும் தயங்குவதில்லையாதலால் யாராவது கோழிக்கூடு அமைத்தல், கழிப்பறைக் கதவுமாற்றுதலன்ன சிற்றூழியங்களுக்குக் கூப்பிட்டாலும் மறுக்காதுபோய்ச் செய்துகொடுப்பதால் நகர்கிறது அவர்களது சீவியம்.
ஜேர்மனியிலிருந்து அவன் தோஷ்த்து வேந்தனின் கடிதம் ‘அடுத்தமாதம் ஊருக்குவருகிறேன்’ என்று வந்த நாளிலிருந்து ஒரு புது ஆளாய்மாறித் தானாகவே எல்லாக் காரியங்களையும் ஒரு சிறுவனின் உற்சாகத்தோடு செய்துமுடிக்கிறான்.
. சாதாரணவேளைகளில் காலையில் வேர்க் ஷொப்பினுள் புகுந்துவிட்டானேயென்றால் அவனை மதியம் அங்காடிக்கு அனுப்பி மீனோ, காய்கறிகளோ வாங்குவிப்பதானால் பெரும் வல்லையாகவிருக்கும். பத்துமணிக்கே வர்ஷிணி அவனை உருவத் தொடங்கினால் வேண்டாவெறுப்பாய் முனகிக்கொண்டு சந்தை கழுவுகிற நேரம் போய் ‘மீன்காரியின் காலிக்கடகத்தை தலைக்கு எடுக்கிவிட்டு வருகிறேன்’ என்று வருபவன் இப்போ என்னடாவென்றால் ‘நீ உத்தரவை காலாலே இடு, நான் தலையாலே முடிக்கிறேன்’ என்று நிற்கிறான். இந்த அதீத உற்சாகமும் பூரிப்பும் எங்கேயிருந்து வந்தனவென்பதுதான் அவளுக்கும் அடியோடு பிடிபடவில்லை.

உந்துளுருயில் வர்ஷிணியை வளைஞ்சு வளைஞ்சுகொண்டு திரிந்த காலத்தில் இருந்ததைப்போல முகத்திலொரு மலர்ச்சிகூடிவந்து சின்னச்சின்ன விஷயத்துக்கெல்லாம் சிரிக்கிறான் சின்னப்பயல்போல. அவனை நுட்பமாகக் கவனிக்கிறவர்கள் யாரும் ‘கொஞ்சம் மேலான் பிசகிப்போச்சென்று’ நினைக்கப் போகிறார்களே என்றுகூட வர்ஷிணி லேசாகப் பயந்தாள்.

இரவு இரண்டுமணிக்கும் படுக்கையில் நித்திரை வராமல் புரண்ட வசீகரன் அவள் காதுச்சோணைகளை நீவிக்கொண்டு சொல்கிறான்: “இனி நமக்கொரு வாழ்வு வாறதெண்டால் அது வேந்தனாலைதான்.” அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. தம் வாழ்வில் ஒளியேற்ற குசேலரைத் தேடிக்கொண்டு ‘ஒரு கண்ணனே வருவதான’ ஒரு கனவில் இருக்கிறான் அவன்.வேந்தனுக்கு ஆடு அடிக்கவேணுமாம், கோழி பிடிக்கவேணுமாம், பனங்கள்ளுக்குச் சொல்லி வைக்கவேணுமாம், இராசவள்ளிக்கிழங்கு, பலாப்பழம், மாம்பழம், கப்பல் வாழைப்பழம் எல்லாம் வாங்கவேணுமாம் , முழ நீளப்பட்டியலே வைத்திருக்கிறான்.

“ உங்க தோஷ்த்து ஜெர்மனிக்குப்போயும் இப்ப பத்துப்பதினைந்து வருஷங்களாச்சு, ஒவ்வொருமுறை வாறபோதும் தவறாமல் ‘நீ பாஸ்போட்டை எடு, பாஸ்போட்டை எடு’ என்கிறாரேயொழிய கூப்பிடுறதுக்கு உருப்படியாய் வழியொன்றும் பண்றதாய்க்காணமே.........”

“ •போறினுக்குப் போறதெண்டதேது டிப்ளோமட்ஸ் விசாவோடபோய் இறங்கிறமாதிரியான விஷயமே....... அதிலும் எத்தனை ஜவ்வுகள் சிக்கல்கள்...... றூட்ஸ் எல்லாம் இப்ப முன்னைமாதிரி இல்லை, ஒவ்வொன்றும் இறுகிப்போய்க்கிடக்கு. இடையிலை ஒவ்வொரு குளிர்தேசத்திலும் அங்கங்கே ஆறுமாதம் ஒருவருஷமென்று தொங்கவேணும்... அவனும் சுளுவாய் முடியிற விஷயமெண்டால் எனக்குப் பண்ணாமலிப்பனோ........ அவன் முன்னை வந்துபோன சமயங்களைவிடவும் இந்தமுறை போரழிவுகள், தாக்குதல்கள், சிதைவுகள், இடப்பெயர்வுகளுமாய் இந்த அவல வாழ்க்கையின்ரை தரிசனங்கள் அவன்ரை மனதைத்தொட்டு எங்களுக்கு ஏதோ ஒன்றை உருப்படியாய் பண்ணவைக்காமல் விடாது........ பாருமன்.”
வசீகரனும் நண்பனை இலகுவில் விட்டுக் கொடுத்துவிடமாட்டான்.

வேந்தன் அவனுடைய பால்ய நண்பன் மாத்திரமல்ல, உறவுக்காரனும். தந்தை வழியில் பார்த்தால் சகோதரனாம், வசீகரனின் தகப்பனுக்கு அவனின் அம்மம்மாதான் மச்சாளாம். அவரோ மச்சாளுக்குப் பதிலாய் மச்சாளின் மகளென்று இவன் தாயை முறைமாறி முடித்ததால் தாய்வழியில் பார்த்தால் மச்சானாம்.வசீகரனே தன்னுடைய உறவுமுறைகளத் தமாஷாகச் சொல்வான்: “ நானே இரண்டு தலைமுறை அப்பா வழியிலை றிவேர்ஸில் போயிட்டு அம்மா வழியாலை வந்தேனெண்டால் எனக்கு நானே மச்சானாகியிருப்பன் ”.
ஊர் பள்ளியில் இருவருமே ஒரேவகுப்பில் படித்ததால் வகுப்புகளுக்கு மட்டமடித்துவிட்டு மாட்டுக்காரவேலன், ராஜராஜசோழன் பார்க்கப் போனாலென்ன, கீரிமலைக்குப் போய் நீச்சலடிக்கிறதென்றாலென்ன இரண்டுபேரும் ஒன்றாகத்தான் போவார்களாம். ‘வெளிக்குப் போகிறதென்றால்கூட அவங்கள் இரண்டுபேருக்கும் ஒன்றாய்போனால்தான் சரியாகப்போகும்’ என்று அயலில் பகடி சொல்வார்களாம்.

வேந்தன் மனைவி கோமதியைப் பார்த்தாலும் சாதுபோலத்தான் இருக்கு. எல்லாருடனும் நல்லமாதிரித்தான் பழகுகிறாள். அப்படி வில்லத்தனங்கள் பண்ணக்கூடியவள் மாதிரித் தெரியவில்லை. ஆனால் இந்தத் தீனர்கள்மேல் அந்தக் காருண்யனின் பார்வை விழுகிறதில ஏன் இத்தனை மெத்தனம் என்பதுதான் அவனுக்கோ வர்ஷிணிக்கோ பிடிபடுகுதில்லை. ஆனாலும் அப்பாவித்தனமாய் வசீகரன் இன்னமும் வேந்தன் தன்னை ஜெர்மனிக்குக் கூப்பிடுவான் என்று நம்பிக்கொண்டிருப்பது வர்ஷிணிக்கு முட்டாள்த்தனமாகவும், அவன்மேல் கோபத்தையுண்டு பண்ணுவதாகவுமிருக்கிறது.
தன்குரலிலே ஒரு கடுமையை ஏற்றிவைத்திருப்பதான பாவனையில் புருஷனிடம் சொன்னாள்:
“ வேந்தனும் இவ்வளவு காலத்திலை தன்னுடைய குடும்பத்துக்குள்ளதான் ஒவ்வொருத்தரையும் ஜாக் அடித்து எழுப்பிவிட்டிருக்கிறாரே தவிர வெளியாலை யாருக்கும் வெள்ளைச்சல்லி காட்டின மாதிரித்தெரியேல்ல.”
“அவன்ரையும் பாரிய குடும்பந்தானே........ அவன் ஒருத்தன் தனிச்சு அடிச்சு என்னதான் செய்வான்?”
“நான் சொல்ல வாறதென்னென்றால் பச்சிலர் வாழ்க்கையில அவருக்கு உதவிறதுக்கு சந்தர்ப்பங்கள் இருந்திருக்கலாம்........ ஆனாப்பொதுவா குடும்பம் மனைவியெண்டு வந்தால் பிறகு அவளவை அவங்களைத் தங்கடை இஷ்டத்துக்கு எதுவும் செய்யவி டாளவையப்பா....... கால்கட்டு கைக்கட்டென்றது அதைத்தான்......... அவருக்கு மனதில மாற்றம் வந்தால் வருகுது, வராட்டிப்போகுது.........எதுக்கும் இன்னும் சும்மா வீண் நம்பிக்கைய வளர்த்துக் கொண்டிருக்காமல் இந்தமுறை தோஷ்த்தை இருத்திவைத்து நெற்றிக்கு நேரே விஷயத்தைக் கேளுங்கோ. அவர் ஒன்றும் எமக்கு நிந்தத்துக்குப் பண்ணவேண்டாம், போய்ச்சேர்ந்து உழைக்கத் தொடங்கினவுடனே முதல் காரியமாய் அவற்றை காசு வட்டியோடை திருப்பித்தருவமென்று...... முடிஞ்சால் கூப்பிடட்டும் , முடியாட்டிப் போகட்டும்..... உண்டு அல்லது இல்லையெண்டு இருப்பம். “
“நீர் ஏதோ கொடுத்துவைச்சதைக் கேட்கிற மாதிரியல்லே கதைக்கிறீர். அவனுக்கும் சொல்லக்கொள்ள மாட்டாமல் என்னனென்ன இடைஞ்சலுகளோ யாருக்குத் தெரியும்? செய்தானேயெண்டால் பார்க்கலாம்...... அதைவிட்டுப் •ப்றெண்டென்றாலும் இதைச்செய் அதைச்செய்யென்று •போஸ் பண்றது அன்•பெயர். என்ர அப்பரும் நேரத்தோட கண்ணைமூடிவிட அம்மா என்னைக் கஷ்த்தோடதான் வளர்த்தவ. ஆனாலும் அவ ‘தோழனோடும் ஏழமை பேசேல்.’ என்று எங்கிட்ட அடிக்கடி சொல்லுவா, அந்த வார்த்தை அவகுரலோட என்ர அடிமனதிலை தங்கி நிக்கிறதால என்னால யாரிட்டையும் எதையும் போய் யாசிக்கேலாது.”
“ உதைத்தான் ‘ஈகோ’வென்றது , இவனிட்ட என்ன கேட்கிறதென்ற கர்வம். கொம்மாவிட்டையும் அதுதான் நிறைய இருந்திருக்கோணும். நான் ’கேட்கிறது’ என்றன்.......... நீங்கள் ‘யாசிக்கிறது’ என்றியள்.எமக்குப் பொட்டுக்கிளாலை புகுந்தால்தான் போகலாமெண்டால் தலைகுனிஞ்சுதானே ஆகவேணும். காரியம் ஆகவேணுமென்றால் கிடந்து நுழைகிறவனுக்கும் கீழாலை நுழையிறதுக்கு அவனவன் ஆயத்தமாயிருக்கிறாங்கள்.”
“ எதை வேணுமெண்டாலும் சொல்லி என்னைத்திட்டும். எனக்கு தலை குனியறதல்லடா பிரச்சனை, அவனுக்கு நம்ம நிலமை, நாட்டு நிலமை உள்ளும் புறமும் நல்லாய் விளங்கும். நாம எடுத்து விளம்பித்தான் எல்லாம் தெரிஞ்சுகொள்ற பேர்வழியல்ல அவன், பெரிய தத்துவார்த்தியாக்கும்.”
“சாமி கும்பிடுங்கோவென்றாலும் ‘அவர்தானே கரும ஆதி. அவர் அறியாமல் ஒரு கருமம் இந்தப் பிரபஞ்சத்திலை இருக்குமோ’ என்கிறியள், •ப்றெண்டோடை பேசுங்கோவெண்டாலும் ‘அவனுக்கு எல்லாம் தெரியும்’ என்கிறியள்.”
“நீர் அறியமாட்டீர், யு.கேயிலை ( உடையார் கட்டு ) இரண்டுபேரும் தோட்டஞ்செய்யிற காலத்தில எத்தனை இரவுகள் நுளம்புக்கடிக்கு எழும்பி இருந்து சொறியிற நேரத்திலகூட இந்த மேகத்தை எப்பிடித் தொடுறது, வானத்தை எப்பிடி வளைக்கிறதெண்டு எத்தனை பிளானுகள் பண்ணியிருப்பம். அவன் தன்ரை குடும்பத்தைத்தான் முதல்ல நிமித்தவேணும்,. ‘ஒரு மனிதனுடைய தர்மங்கள் முதல்ல அவனுடைய குடும்பத்திலைதான் ஆரம்பிக்குமாம்’, அதனால முதல்ல உள்வட்டம், பிறகுதான் வெளிவட்டம்.”
குழந்தை அநாமிகாபோய் வர்ஷிணியின் மடியில் தலை வைத்துக்கொண்டு படுத்திருக்க வர்ஷிணியும் அவளது தலைக்குள் தன்விரல்களை விட்டுச் சுகமாகக் கோதிவிட்டபடி வசீகரனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அநாமிகா அந்தக்கோதலின் சுகத்தை அனுபவித்தபடியே இயல்பில் தாயிடம் ‘வளவள’ வென்று பேசவோ விவாதிக்காத அப்பா இன்று ‘என்ன விஷயமாக இப்படி விவாதிக்கிறார்’ என்பது புரியாமல் இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுக் கேட்டாள்: “ ஏனம்மா அப்பாவும் ஜெர்மனிக்குப் போகப்போறாராமோ........? ”
“ ம்ம்ம்ம்.......அப்பா கிழிச்சார், எங்கட செல்லக்குட்டிதான் நல்லாய் படிச்சு ஸ்கொலஷிப்பில ஜெர்மனி, அமெரிக்காவெல்லாம் போகுமாம்.”
“ கொளஷிப்”, “கொளஷிப்” என்று இரண்டுதரம் சொல்லிப்பார்த்துவிட்டு“ கொள- ஷிப்பிலை இல்லை........ நான் பிளேனிலைதான் போவன்.”
“ சரி........ என்ரை செல்லம் பிளேனிலைதான் முகிலுக்கு மேலால பறந்துபோகுமாம்.” என்றுவிட்டு அவளைவாரி முத்தமிட்டாள்.
“ முதல்ல உள்வட்டம் பிறகு வெளிவட்டம் என்றது சரிதான். பெண்சாதியின்ரை தம்பிக் களிசடையை எந்த வட்டத்திலை இருந்தாமணை கூப்பிட்டவர்? ”
“ களிசடையென்று நீயே சொல்லுறீர், அவன் போனதால இப்ப ஊர் திருத்தமல்லே....... அப்ப அதைச் சமூகசேவையிலை வைக்கிறது.”
“நல்ல சமூகசேவை..... அங்கைபோயும் அந்த நரகாலி டிறக்ஸ் ஏதோவித்து மாட்டுப்பட்டு உள்ளுக்கைதான் கிடக்குதாம்.” “இப்ப அவனுக்கு ‘நீ உன்ரை களிசடை மச்சானை எப்பிடிக் கூப்பிடலாம்?’ என்று கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பலாமென்றீரோ?” “உங்களுக்கு எல்லாம் தமாஷ்தான்.”
“இந்த இதயம் இருக்கல்லே இதயம்....... அது உடம்பிலுள்ள அத்தனை அங்கங்களுக்கும், இழையங்களுக்கும் முக்கிமுக்கி ஓய்வில்லாமல் இரத்தத்தை பம்ப்பண்ணிக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆனால் தன்னுடைய சுவர்த்தசைகளுக்குப் போதுமான சப்ளை இருக்கோ இல்லையோ என்கிறதை அறியாது. நாளடைவிலை சப்ளை போதாத செல்லுகள் இழையங்கள், தசைநாருகள் சாகத்தொடங்கினாப் போலதான் கடைசியா அது ‘பக் பக் பக்’கென்று நொண்டியடிக்கும். அதிலதான் ‘ஹார்ட் அட்டாக்’ வாறது. நான் நினைக்கிறன் அந்தமாதிரி வேந்தனும் என்னைத் தன்னுடைய இதயத்துக்குள்ளதான் வைச்சிட்டான்........”
“இண்டிமேசி கூடினதால •ப்றெண்ட் சப்ளை இல்லாமச் சாகிறதை உணரேலாம இருக்கென்றியள். அப்போ அவருக்கது புரியவர மூச்சுத்திணர்ற காலம் அந்திமம் வரவேணுமென்றியள்.”
“ அவன் உணராட்டிப்போறான் போகட்டும்...... அந்திமம் கருமாதி என்றெல்லாம் கதையாதையும், அவனும் குடும்பமும் சகல ஐஸ்வரியத்தோடையும் நூறுவருஷத்துக்கு வாழவேணும். மற்றவருக்கும் உதவி செய்யிறதுக்கு வசதியும் வாய்ப்பும் இருக்கிற ஒரு மனுஷன் வெளியுந்தல்கள் இல்லாமல் தன்னுணர்வில செய்தானேயெண்டால் அதை வரவேற்கலாம், பராட்டலாம். ஆனால் ‘ஏன் நீ அப்பிடிச் செய்யேல்லை, இப்பிடிச் செய்யேல்லையென்று’ கேட்கற உரிமை எப்பிடி இன்னொருவருக்கு வரும்? ”
என்றுவிட்டு நல்லதண்ணீர் அள்ளிவருவதற்காகப் பிளாஸ்டிக் குடத்தைச் உந்துருளியில் வைத்துக்கட்டினான். பின் அதில் ஏறி உட்கார்ந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு “இப்பிடியும் இருக்கலாமப்பா.......... ‘ஏய் மனுஷா...... இரக்கத்தை மட்டும் உன் மனதின்பக்கம் அணுகவிடாதே. அது நாளடைவில் உன்னை முழுக்கோழையாக்கிவிடும்’ என்று அவங்க தேசத்துக்காரர் ஒருத்தர்தான் சொல்லியிருக்கிறார், இவனும் அதைப்படிச்சிட்டு எதுக்குக் கோழையா.... வீரனாவே இருப்போமென்று தீர்மானிச்சிட்டானோ........?” என்று விட்டு உருளியை உந்தலானான்.
வர்ஷிணிக்கு ஆயாசத்திலும் சிரிப்புத்தான் வந்தது.

*****************
ஈழப்போர் உக்கிரமாக வெடிக்கு முன்னம் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு எல்லாரையும்போல வேலைதேடி அலைந்த காலத்தில் சும்மா சொல்லக்கூடாது தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடெல்லாம் இப்போதுள்ள அளவுக்கு ‘முனைவாக்கம்’ பெற்றிருக்கவில்லை. வங்கி சிறா•ப் , சுங்கப்பரிசோதகர்கள், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனங்களுக்கு பதினையாயிரம், மீன்பிடிக்கூட்டுத்தாபனம், கட்டிடக்கூடுத்தாபனம் , பொது எழுதுவினைஞர் சேவை, ஆசிரியர் நியமனங்களுக்கு பன்னிரண்டாயிரம் என்ற றேட்டுகளில் அரசபணி வாய்ப்புக்கள் நிறைய இருக்கத்தான் செய்தன. ஆனாலும் வசீகரனுக்கோ அவ்வளவு தொகைத்திரட்டி அவ்வாறான பணிகளில் அமரக்கூடிய பொருண்மியப் பின்னணி இருக்கவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக இளைஞர்கள் கொஞ்சம் பணம் புரட்டக்கூடிய குடும்பங்களிலிருந்து பிரான்ஸ் ஜெர்மனி நோர்வே என்று ஐரோப்பியநாடுகளுக்கும், கனடாவுக்கும் வேலைதேடிச் சென்றுகொண்டிருந்தார்கள். வேந்தன் குடும்பத்தைப் பொறுத்தமட்டில் பத்துப்பதினைந்து செலவுசெய்து அவனையொரு அரச உத்தியோகத்தில் அமர்த்துவதைவிட ; இருந்த நிலத்தை ஈடுவைத்தும், கொஞ்சம் கடனையுடனைப்பட்டும் இருபத்தைந்தாயிரம் செலவுசெய்து பாரீஸ¤டாக ஜெர்மனிக்கு அனுப்பிவிடுவதென்பது உகந்த முதலீடாகப்பட்டது. அவனும் குடும்பப்பொறுப்பு, கரிசனையுள்ள பிள்ளை. பெற்றவர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் குடும்பத்தை அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே நிமிர்த்தி உயர்த்திவிட்டான். அவனும் ஜெர்மனி போய்ச்சேர்ந்து வேலை கிடைத்தவுடனேயே குடும்பத்தில் சடுதியில் பலமாறுதல்கள் ஏற்படலாயின.

பொழுது ‘எப்போது பொழுது செக்கலாகுமென்று’ காத்திருந்து முதுகுக்குப்பின்னால் கைகளைக் கோர்த்துக்கட்டியபடி வீதிக்கு வந்து கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டு இருளோடிருளாகக் கலந்து கள்ளுக்குக்கேகிய அவன் தகப்பனார் தம்பாபிள்ளையர் இப்போதெல்லாம் டவுணிலிருந்து சங்கையாக ‘மெண்டிஸ் ஸ்பெஷல் சாராயம்’ எடுப்பித்து நடுக்கூடத்தில் சாய்மனைக்கட்டிலில் அமர்ந்து பந்தாவாகக் குடிக்கிறார்.

மாநகரசபையில் எழுத்தர் வேலைக்கு அடைக்கோழி மாதிரிக்கேரும் ஒரு பழைய ‘றலே’ உந்துருளியில் உந்தித்திரிந்த மூத்த சகோதரன் ராஜ்குமாரன் அதை வீட்டுக்கோடியில் சாய்த்துவிட்டு இப்போது புது யமஹா - •ப்ளாஷர் விசைஉருளியில் 80 கி.மீட்டர் வேகத்தில் வழுக்கித்திரிகிறான்.

குடும்ப அக்கறைகள் இல்லாதவனும் சுயநலமியுமான இரண்டாவது சகோதரன் ஒருத்தன் குடும்பத்தோடேயே ஒட்டாமல் ஒரு வேற்று மனுஷன்மாதிரி அவர்களோடு வாழ்ந்தவன், ராஜ்குமாரனையும் முந்திக்கலியாணம் பண்ணிக்கொண்டு மாமியார்வீடே சொர்க்கம் என்று வீட்டு மாப்பிள்ளையாகப் போய்விட்டிருந்தான். அவன்கூட இப்போது இரவுவேளைகளில் ஒவ்வொரு நாளைக்கொரு பிள்ளையாக உந்துருளியில் தாத்தா பாட்டியிடம் கூட்டிவந்து அவர்களுக்கு ‘ஆசீர்வாதங்கள்’ பெற்றுக்கொண்டு போகிறான்.

உக்கிரமான ஈழப்போர் தொடங்கமுன்னரே ஐந்தறையில் ஒரு வீடு எழுப்பியது, இரண்டு சகோதரிகளைக் கட்டிக்கொடுத்து அவர்கள் குடும்பங்களை ஜெர்மனிக்கு அழைத்தது, இளைய தம்பிமார் இரண்டுபேரையும் கனடாவுக்கு அனுப்பியது என்று நிறையவே சாதித்துவிட்டு ஒன்பது வருஷங்களின்பின் ஜெயராமனாக வந்து வேந்தன் இறங்கவும், பற்பல ஊர்களிலிருந்தும் பெண்களைப் பெற்றவர்களும், கல்யாணத் தரகர்களுமாக அவன் வீட்டில் குழுமத் தொடங்கினர்.
பார்த்த பல இடங்களிலும் அவன் மனசை ஈர்த்துவிட்டிருந்த கோமதி வீட்டாருடன் கடைசியில் தம்பாபிள்ளையர் சீதனத்தில் கடும் போக்குக்காட்டி ‘பிச்சாது ஒரு லட்ஷம்’ ரூபாயில் சம்பந்தமே குழம்பிவிடுமோ என்ற நிலைக்கு வந்தபோதும் வேந்தன் தேசவழமைப்படி வாயைத் திறவாது ‘அச்சாப்பிள்ளை’யாகவே இருந்தான்.
வசீகரனும் ஆற்றாமல்“ ஏன்டா....... மேற்கத்தை நாடுகளிலையெல்லாம் இப்போ நம்ம பெடியங்களுக்கு ‘நோ டௌறி’ என்கிறதுதான் புது ‘ட்றென்டாமே’ ....... வட் எபௌட் யூ கொம்றேட் ?” என்றதுக்கு“ இது ஆர்......ஆர்.......ஆற்றை விசர்க்கதை........... இப்ப இதுவே ஜெர்மனியாயிருந்தா இந்த ‘சம்மை’ ஜெர்மன்மார்க்கிலை டிமாண்ட் பண்ணியிருப்பன் தெரியுமே......? ஒரு சின்னச்சம்பவம் சொல்றன்கேள்:
‘என்ரை •ப்றெண்டு ஒருத்தன் கரவெட்டிப் பெடியன் நாலு மாசமுன்னே இங்கேவந்து கலியாணங்கட்டி வை•பை அங்கே கூட்டியந்தவன்........... பொண்ணு வந்தது வரக்குள்ள அவனிட்ட ‘ஏன் உங்கடை கார் எங்கே?’ என்றாளாம். அவனும் கபடில்லாமல் ‘பாங்கில கொஞ்சம் கிறெடிட் இருக்கு டியர், இன்னுமொரு ஆறுமாசத்தாலதான் காருக்கு லோன் எடுக்க வசதிப்படுமென்று’ உண்மையைச்சொல்ல‘உப்பிடியெண்டால் அப்பரிட்டை இன்னொரு பத்து லட்ஷத்தை காருக்கு நீங்கள் கூட்டிக்கேட்டிருக்கலாம்....... காணிவித்து வைச்சிருந்தவர்’ என்றாளாம். இது எப்பிடியிருக்கு...... நானும் சீதனத்தை ஆகக் குறைச்சனேயெண்டால் கோமதியே என்னைக் கோபிக்கிறமாதிரியும் வரும்.” என்றுவிட்டுச் சிரிக்கிறான்.

வாழ்க்கையில் நிறைய முன்னேறவேணும் சாதிக்கவேணும் என்ற கனவுகளுடனிருந்தவர்கள் இரண்டுபேரும் பள்ளிப்படிப்பு முடித்ததிற்கும் வேந்தன் ஜெர்மனிக்குப் புறப்படுவதற்குமிடையிலான இடைவெளிக்குள் சேர்ந்து முயன்றுபாராத தொழிலேயில்லை.
முதலில் முள்ளியவளை புதுக்குடியிருப்புப் பகுதிகளுக்குப்போய் தென்னந்தோப்புகளில் திரிந்து தேங்காய்கள் வாங்கி சாக்குகளில் கட்டி தட்டிவானிலே கொண்டுவந்து சாவகச்சேரி சுன்னாகம் சந்தைகளில் விற்றார்கள். சீசனிலை மிளகாய் கட்டி பாரவுந்துகளிலை கொழும்புக்கு ஏற்றினார்கள், எதிலும் இலாபம் அவர்கள் உழைப்புக்குப் போதுமானதாக இருக்கவில்லை.
தோட்டம் செய்துபார்ப்போமென்று முத்தையன்கட்டிலும், உடையார்கட்டிலும் காணிகளைக் குத்தகைக்கு எடுத்து மிளகாயும் வெங்காயமும் வைத்தார்கள். மிளகாய்செடிகள் பூத்து பிஞ்சுபிடிக்கிற நேரம் பார்த்து பாசனக்குளம் வற்றிக் கையை விரிக்கிறது. மனம் தளரவில்லை, சும்மா இருக்கவும் மனமில்லை. காடுவெட்ட, களனி துப்புரவாக்க, அரிவு வெட்ட, வேலியடைக்கவென்று அங்கேயே கூலிவேலை செய்தார்கள், போதவில்லை.
மணிச்சாமான்கள், வளையல்கள், அலுமினியம் பிளாஸ்டிக் பாத்திரங்களை கொழும்பில் மொத்த விலைக்கு வாங்கிவந்து முல்லைத்தீவில் பேருந்துநிலையப் பக்கமாக கடையொன்றைப் பிடித்து அதில்வைத்து விற்றார்கள். வெட்கத்தை விடுத்து வன்னிவிளாங்குளம் அம்பாள், தண்ணீரூற்று, முள்ளியவளை வில்லூன்றிப்பிள்ளையார் , புதூர் நாகதம்பிரான், மாடுமாதா, கோவில் திருவிழாக்களுக்கெல்லாம் எடுத்துப்போய் கடை விரித்தார்கள். எவ்வளவுதான் பாடுபட்டாலும் இவைகளெல்லாம் ஜீவித்திருக்கப் போதுமானதாய் இருந்ததேயொழிய அவர்கள் கனவுகள் இன்னும் தூரத்திலேயே இருந்தன.
வசீகரன் வேந்தனைக் கேட்டான் : “ மச்சான் திருவிழா மணிச்சாமான்கள் வியாபரத்தோடை ஒத்துப்போகும் பார்....... சின்னதாய் மல்லாகத்திலை சிகரமும் ஒன்றுகட்டி, மலையகத்தில லேசாப்பிடிக்கலாமாம் மார்க்கண்டற்றை செற் மாதிரி ஒரு சச்... சதுர்க்கோஷ்டியும் இறக்குவமே? ”“ டோலக் வாசிக்க, பித்தளைத்தகட்டில ‘சொடாங்’கென்றுபோட வொன்றுக்கும் ஆள்தேவையில்லை......... சும்மா நீயே பூந்து விளையாடுவாயாக்கும்........ நாய்வீட்டுநாயே...... இப்பவே பார்க்கிற உத்தியோகத்துக்கு ஊராட்களைக்கண்டால் காட்டுக்க பதுங்க வேண்டியிருக்கு இதுக்குள்ள சதுர் இல்லாததுதான் கேடென்ன? ”
“ இனி எங்களுக்கு யாரும் பெண்ணும் தரமாட்டாங்கள்தானே....... அதுதான். யோசனை ஒருக்கால் அப்பிடிப்போச்சு........ பிழைக்கவேணுமெண்டால் சன்லைற்றுப் பெட்டிகட்டி மீன்விக்கவும் தயாரெண்டு பறைஞ்சது யாராக்கும்? ”
“ பொம்பிளையளை வைச்சு அவர்களைச் சுரண்டியொரு நாய்ப்பிழைப்புத் தேவையா நமக்கு? ”
“ அதொரு கலைதானே கொம்றேட்? ”
“ கலை, கொலையென்டு பறைஞ்சாப் பல்லைத்தட்டிப்போடுவன் மூடிக்கொண்டிரு நாயே.”
“ நீ முக்காதை மூலம் வெளிக்கிடப்போகுது...... நான் சும்மாதான் விட்டுப்பார்த்தனான்.”
வேந்தன் கோமதி திருமணத்திலும் வசீகரன் பந்தல் போடுவதிலிருந்து, சந்தையில் அரிசிமூடை, காய்கறிசாமன்கள் , எண்ணை , சீனி வாங்குவது , கூறை எடுப்பது, ஐயர் மேளகாரர், சமையல்காரரை அழைப்பதோடு, நாலாம் சடங்கு முடிய பந்தல்கால்கள் பிரித்து அடுக்கி வைப்பதுவரை எல்லாக் காரியங்களையும் உள்வீட்டுப் பிள்ளையாயிருந்து கச்சிதமாகவே செய்துமுடித்தான்.

பந்தலுக்கு விரிக்க ஊரில் யாரிடமோ இரவலாக வாங்கிய கதிர்ப்பாய்களை ஒரு கை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு வரும் பொழுது வசீகரன் வானத்தைப் பார்த்துக்கொண்டு சொன்னான்: “பெண்களைச் சுரண்டிறது, டீஸ் பண்றதெல்லாம் சூவானிஸம் சீதனம் வாங்கிறது •பியூடலிஸம் என்றெல்லாம் பல இஸங்கள்பற்றித் தோழர் ஒருகாலம் நம்மோட பறைஞ்சிருக்கு.”
“தோழர் எதை மனதிலவைச்சு முணுக்கிறாரெண்டு விளங்குது.... இப்பவும் அந்தக் கொன்செப்டிலை எனக்கு ஒரு மாற்றமுமில்லை. பெண்களை டீஸ் பண்றது எனக்கு என்றைக்குமே பிடிக்காதுதான். ஆனால் இதொரு மெட்டீரியலிஸ்டிக் உலகம் என்கிறதை நாங்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும் பார், தத்துவங்களை எத்தனை தொன் வேணுமானாலும் நாங்கள் உற்பத்திசெய்யலாம், ஆனாலும் இதே நடைமுறை உலகத்திலதான் நாம் வாழவேண்டியிருக்கு. சோஷலிசமெல்லாம் எப்பவோ குடைசாய்ஞ்சுபோச்சு, என்ரை மச்சான்மார் என்னட்டைச் சீதனம் வேண்டாமெண்டாங்களோ, இன்னும் என்னத்தை உருவலாமெண்டுதான் இன்றைக்கும் உள்மடியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாங்கள், சீதனம் கூடாதுதென்கிறதில எனக்கு மறுப்பேயில்லை. அந்த வீட்டிலும் இரண்டுபேர் கனடாவிலையிருந்து உழைக்கிறாங்கள். அதனால இருக்கிறவனிட்டை எடு , இல்லாதவனை விடு. இதுதான் த மொடேர்ண் அண்ட் அப்பிளிக்கபிள் பிறின்சிபிள். பி அப்டேட்டட் வித் திங்ஸ் மேன்.”

ஜெர்மனிக்கு புறப்படுகையில் வேந்தன் கல்யாணத்திலே மாய்ந்து தேய்ந்த தோஷ்த்துக்கு தான் பாவித்து மீதமிருந்த ஷேவிங் கிறீமைத்தான் கொடுத்தான். ஒருகணம் ‘சுருக்’கென்றுதான் அவனுக்கும் இருந்தது. குறைந்தபட்ஷம் அவன் கொண்டுவந்திருந்த டீ-ஷேர்ட்களில் ஒன்றையாவது கூடவே கொடுத்திருக்கலாம். எல்லாம்நமது அந்நியோன்யத்தில் ‘நான் குறைவிளங்கமாட்டேன்’ என்றுதானே அப்படித் தருகிறானென்று உடனே சமாதானமுமானான்.

எல்லாமும் ‘அவன் அறிந்து வந்திருக்கிற புதுப் பிறின்சிபிள்களோ, முகம் விரவிய கண்களை வைத்துக்கொண்டு அவனையே தியங்கத்தியங்க பார்த்துகொண்டிருக்கிற புதுப்பெண்ணின் மோகமோ, கலியாணச் சந்தடி அலைச்சல்கள், தூக்கக்குறைவின் கலக்கங்களோ பயல் இப்ப கொஞ்சம் மயக்கத்திலதான் இருக்கிறான். இயல்பான சிந்தனை புத்தி இருக்காதுதான், போகட்டும். இதெல்லாம் சின்னச்சின்ன விஷயங்கள்.’ வர்ஷிணியிடம்கூட ‘அதுபற்றி’ இதுவரை ஒரு வார்த்தை வசீகரன் சொன்னதில்லை.

வேந்தனின் புதியவாசிப்புகளின் விளைவாயிருக்கும் சொல்கிறான்: உலகத்தில் ‘அதிஷ்டம்’ என்று ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம் , அப்பிடி நாங்கள் நம்பிறது சில பொசிடிவ்/சாதக இயக்கங்களின்...... ஒத்திசைவைத்தானாம்.
அப்பிடித்தான் சுதந்திரத்துக்குக்கூட இப்ப புதுவியாக்கியானம் வைத்திருக்கிறான்: ‘சுதந்திரம்’ என்றொரு விஷயம் உலகத்திலேயே இல்லையாம். எதிலிருந்து விடுதலை வேணுமென்று கருதுகிறோமோ அது கிட்டிய பிறகுதான் அந்தப் ’பேருண்மை’ புரியவருமாம். வசீகரனுக்கும் அதுகள் கொஞ்சம் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியுந்தான் இருக்கின்றன.
வேந்தனை ஜெர்மனிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில முதமுதல் வழியனுப்பிவிட்டு வந்தபோது அவனில் பாதியை யாரோ பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய்விட்ட மாதிரி இருந்தது. ஆரம்பத்தில் வேந்தனும் ஆறுதலாக நீண்ட நீண்ட கடிதங்கள் எழுதுவான்: நாட்டு நடப்புகள் , ஜெர்மனியரது பழக்கவழக்கங்கள் , பார்த்தவிடமெல்லாம் வழுக்கிக்கொண்டு செல்லும் மகிழுந்துகள், சுரங்கரயில்கள், நவீன போக்குவரத்து வசதிகள், வெள்ளை வெள்ளை ‘மிஷினுகள்’ என்று விரிவாக எழுதிவிட்டு அனேகமாக எல்லாக் கடிதங்களிலும் இறுதி வரிகளாக ‘பாஸ்போட்டைச் சீக்கிரம் எடுமச்சான் தாமதியாதை, தொடர்ந்து இரண்டுபேரும் ஒன்றாயிருக்க விரைவில் நான் வழியொன்று பண்ணுவேன்’ என்று முடித்திருப்பான். வசீகரனுக்கு அப்போதே தான் ஜெர்மனிக்குப்போய் அங்கத்தைய அகலமான மார்க் நோட்டுகளை விரித்துவைத்துப் படுத்திருப்பதைப் போலிருக்கும்.

பின்பெல்லாம் ஆறுமாசத்துக்கு ஒன்று என்றிருந்த கடிதப்போக்குவரத்து ஆண்டுக்கொன்றாகி அவன் திருமணத்தின் பின் நின்றேபோனது. இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் நினைத்துக்கொண்டு இப்போது கடிதம் அதுவும் ‘வருகிறேனென்று’ போட்டிருக்கிறானென்றால் குஷி பிறக்காதா பின்னே?
இந்தக் காலவெளியில் வசீகரனின் வாழ்க்கை அஜந்தாவிலும் பல நிகழ்வுகள்.

வர்ஷிணியோடு காதலாகி அது வானளாவி வளர்ந்ததும் வேறு வழியில்லாமல் அவளுடன் ஓடிப்போக நேர்ந்தது.அமைதிப்படையினருக்கு ஆடுகள் ஏற்றிவந்த பாரவுந்தை இடைமறித்து விடுதலைப்புலிகள் மடக்கிக் கொண்டுபோகவும் அதைத் தேடிக்கொண்டு “ஆட்டுவண்டி எங்கே சொல்லுடா?” என்று வந்த படையினரிடம் அகப்பட்டு ‘என்ன ஆடு’ ‘என்ன வண்டி’ என்று புரியாமலே மிதிபட நேர்ந்து, வசதிகள் குறைந்த ஆஸ்பத்தரியில் உடம்பை அசைக்கமுடியாமல் பத்து வாரங்கள் படுத்துக்கிடந்தது.

அமைதிப்படையினரின் ஊர்சுற்றிவளைப்பில் அகப்பட்டுக்கொண்டு அவர்களால் தகிக்கும் வெய்யிலில் தார்வீதியில் உட்காரவைக்கப்பட்டு பிருஷ்டம் அவிந்தது.ஜெயசிக்குறு, சூரியக்கதிர்த் தாக்குதல்கள் வந்தது. மேலும் பதுங்குழி வாழ்வைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தது.இருந்த சிறிய வீட்டையும் ‘மக்களிடம்’ இழந்தது.தற்காலிக போர்நிறுத்தம்-சமாதானம் வந்தது.யுனெஸ்கோ உதவியுடன் கட்டிய வீட்டில் இப்போது ‘வாழ்ந்து’கொண்டிருப்பதெல்லாம் திவ்ய தரிசனங்கள்.

வாழ்வு வரண்டு உருள மறுகியபோது வர்ஷிணியும் சும்மா இருந்துவிடவில்லை. தனிப்பட்டமுறையில் பத்துப்பதினைந்து சிறுவர்களைச் சேர்த்துக்கொண்டு பாலர் வகுப்பொன்று நடத்துகிறாள். இரண்டொரு இடங்களில் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் பிள்ளைகளுக்கும் பாடங்கள் சொல்லிக்கொடுத்து அவர்களைத் தயார்படுத்துகிறாள். தேசநிலமையில் எந்தப் பெற்றோரையும் பணம் தரச்சொல்லி வற்புறுத்தமுடியாது, கொடுத்தால் காணவேண்டியதுதான்.

அவர்கள் வன்னியில் இருந்தபோதுதான் அநாமிகா பிறந்தாள். அவனுக்கு வந்த சந்தோஷத்தில் கைகால் பரபரக்க என்ன செய்வதென்றே தெரியாமல் வேந்தனுக்கு ஒரு கடிதம் எழுதினான். அவனும் பதிலுக்கு விநோதமான PC ஒன்றை (கணனி என்றேள் கருதற்க.) அனுப்பினான். றோஸாப்பூவொன்றினுள் அழகான ஒரு குழந்தையொன்று ஜோராகப் படுத்துக்கொண்டுள்ள படம் போட்ட போஸ்கார்ட் ஒன்று. அதைச் சரித்தால் அக்குழந்தை குறும்பாகக் கண்சிமிட்டும். அதைவாங்கிப் பின்பக்கத்தில் சிக்கனமாக ‘குழந்தை கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி, அனைவருக்கும் எம் நல்வாழ்த்துக்கள்’ என்று எழுதி ஒரு கவரில் வைத்து அனுப்பினான்.
90ல் வேந்தன் முதன்முதலாக யாழ்ப்பாணம் திரும்பிவந்தபோதுதான் அவன் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னரும் மூன்று நான்கு தடவைகள் வந்துபோய்விட்டான். வந்து ஒவ்வொருமுறை புறப்படும்போதும் வசீகரனிடம் தவறாமல் “நீ பாஸ்போட்டை எடு, மற்றதெல்லாம் நான் வென்றுதருவேன்”என்று சொல்ல மட்டும் மறப்பதேயில்லை.
ஒருமுறை வேந்தன் நாட்டுக்கு தனியாக வந்திருந்தபோது திடீரென உக்கிரமான போர் வெடித்துவிட்டது. அந்நேரம் ஆனையிறவு அரசபடையினர்வசம் இருந்ததால் ஏ-9 பாதையூடான போக்குவரத்தெல்லாம் கிடையாது. கிளாலிக்கடல், சங்குப்பிட்டி, பூநகரி எல்லாம் 24 மணிநேரமும் சவளமான ஷெல்லடி பரநாசம். நடுஇரவுக்குப்பின் ஷெல்லடி ஒரு அரைமணிநேரம் ஓயுமென்றால் அதுவரை காத்திருந்து படகில் வெளிச்சமேதும் ஏற்றாமல் உயிரைக்கையில் பிடித்துகொண்டு கிளாலிக்கடலைக் கடக்கவேணும்.வேந்தனுக்கோ குறித்த தேதியில் திரும்பாவிட்டால் விமான டிக்கெட்டும் காலாவதியாகி வேலையையும் இழக்கவேண்டி நேரும் நிலமை.
ஒரு அமாவாசை இரவில் அத்தனை ஷெல் வீச்சுக்குள்ளாலும்வர்ஷிணி போகவேண்டாமென்று மன்றாடித்தடுக்கவும் எல்லாஇடமும் ஷெல்கள் நீக்கமற விழுந்துவெடித்துச் சிதறிக்கொண்டிருக்க வேந்தனோடு ஒரு உந்துருளியையும் விசைப்படகில் ஏற்றிக்கொண்டு கிளாலிக்கடலுக்கூடாக பூநகரி போய் அங்கிருந்து அவனை உருளியிலேற்றி 110 கி.மீட்டர் தொலைவிலுள்ள வவுனியாவரை உந்திச்சென்று வளியனுப்பிவிட்டு வந்தவன் வசீகரன்.
“ நீங்கள் முழுவிசரன்மாதிரி உயிரைப்பயணம் வைத்து அவருக்காக இவ்வளவு செய்துவிட்டும்........ ஒவ்வொரு பயணத்திலும் எத்தினை சிப்பம் துணிமணியளை, சொக்கிளேற்று பார்களைக் கொண்டு வந்து இறக்கியிருப்பர். எங்கட பிள்ளைக்கெண்டும் ஒரு சொக்கிளேற்று விள்ளலை , அரை மீட்டர் துணியைக் கொண்ணந்தும் நீட்டியிருப்பரே......... இதுக்குள்ள ப்ராண ஸ்நேகன் வேறை” என்றுவிட்டுப் பாட்டி மாதிரி கழுத்தை ஒடித்து வலிச்சம் காட்டுவாள் வர்ஷிணி.
“வர்ஷிணி நீர் உப்பிடி நினைக்கிறதும், கதைக்கிறதும் எனக்குச் சரியெண்டுபடேல்லை........... நானும் முடியாதென்று கைவிட்டால் அவன் ஜெர்மனிக்கு போறதெப்படி....... அது என்ரை சுயதர்மத்திலை செய்த, செய்யமுடிந்தவொரு காரியம்......... பிரதிபலனாய் எதையும் எதிர்பார்த்து அல்ல.”

********************
வேந்தன் குடும்பம் இரண்டு முயல்குட்டிகள் மாதிரிப்பிள்ளைகளுடன் வந்து சேர்ந்தது. “ நாம கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இண்டர்நெட்டில சூடைமீன் விலைக்கு •ப்ளைட் டிக்கெட்ஸ் கிடைச்சுது..... அதாலை வாய்ச்சதுதான் இந்தப்பயணம்” என்றார்கள்.
வர்ஷிணியின் புறு புறுப்பை அலட்ஷியம் செய்துவிட்டு அவர்கள் நின்ற நாட்கள் முழுவதும் தனக்கு வந்த கொஞ்சநஞ்ச வேலைகளையும் தள்ளிவிட்டு வேந்தனோடேயே பிணைந்துகொண்டு திரிந்தான் வசீகரன்.
வேந்தன் குடும்பத்துக்குப் பிரமாதமாகத்தான் விருந்து வைத்தான். அவ் விருந்தின்போது அவர்களின் குழந்தைகள் இருவரும் போட்டிருந்த அழகான ‘சன்சூற்றை’ அநாமிகா கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஆசையோடு கேட்டாள்:
“ நாங்களும் ஜெர்மனிக்குப்போனா எனக்கும் ‘சன்சூற்’ கிடைக்கும் என்னப்பா? ”
திடுக்குற்ற வசீகரன் ‘தாங்கள் அவளைத் தயார் பண்ணிவைத்துத்தான் அப்படிப்பேசுகிறாள் என்று வேந்தன் நினைக்கப்போகிறான்’ என்று அநமிகாவை நோக்கி கண்களை உருட்டி முழுசவும் ஏனென்று புரியாமல் ‘கப்சிப்’பென்று அடங்கிப்போனது குழந்தை.
சாப்பிட்டும்வேளை கொஞ்சம்போல நனவிடை தோய்ந்தான் வேந்தன்.‘புதுக்குடியிருப்பிலை குத்தகைக்கு காணிதந்த குலசிங்கம் எப்படியிருக்கிறான்?, அவன் தமையனுக்கு கழுத்திலை வளர்ந்த கழலைக்கு என்னாச்சு?, மணவறைச் சுப்பையர் மகள் சகுந்தலா ஆறேழு வருஷமாய் பிள்ளையில்லாமல் இருந்தாளே பிறகு பெத்துக்கொண்டாளோ?’ என்று யார்யாரையெல்லாமோ வெகு கரிசனையாய் விசாரிக்கிறான்......... ‘அட எப்பிடீடா நகருது உன்ரை நாய்ப்பிழைப்பு பிழைப்பு? என்று ஒரு வார்த்தை அவனைக் கேட்கவில்லை.
“சண்டை ஒய்ஞ்சிருக்கிற சமயந்தானே ஒருக்கால்போய் வன்னியையும் பார்த்துவரவேணும் போலைகிடக்கு” என்று வேந்தன் ஆசைப்படவும் “நாளைக்கே போவம் வெளிக்கிடு” என்றுவிட்டு யாரிடமோபோய் இரவலாய் ஒரு விசையுருளியை வாங்கிக்கொண்டுவந்து அவனைக்கூட்டிப்போனான்.

****************
நாளைக்கு வேந்தன் குடும்பம் ஜெர்மனிக்குத் திரும்புகிறது. இரவு வசீகரன் வர்ஷிணியிடம் வந்தான். “அவர்கள் நீர்கொழும்புக்கு போகப்பிடிக்கிற வேனிலை இடமிருக்காம்......... வேந்தன் என்னையும் ஏர்போட்டுக்கு வரச்சொல்றான் , பின்னைப் போகட்டே?”“போகிற வானிலை போவியள்தான் பிறகு வாறதுக்கல்லே ஆயிரம் ரூபாய் வேணும்.”முதமுதல் வேந்தன் ஜெர்மனிக்குப் போனபோது வெறும் பத்துரூபா ரயில் டிக்கெட்டில் கொழும்புக்கு வழியனுப்ப போனதுவும் அதுவே இப்போ ஆயிரமாகிவிட்டதுவும், ரயில்பாதையே இல்லாமல் போனதுவுமான காலங்காட்டும் விசித்திரக்கோலங்கள் ஒரு கனவைப் போலிருக்கின்றன.கொஞ்சிப் பார்த்தும் ‘இந்தமுறை போகவேண்டாமே’ என்று அவனைத் தடுக்க வர்ஷிணி ஊடல், காதல் எனப்பல தினுசான அஸ்திரங்களையும் பிரயோகித்தும் எப்படியும் கட்டுநாயகவுக்குப் போகவேவேணுமென்று கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் உன்னிக்கொண்டு நிற்கும் புருஷனது கையறுநிலை அவளுக்கும் மனதில் ஒரு ஈரத்தைக் கொண்டுவருகிறது.ஒரு முடிவுக்கு வந்தவளாய்“அநாமிகா ‘எல்லாரையும்போலத் தனக்கும் ஸ்கூலுக்கு Rucksack தான் வேணும்’என்று இப்ப ஒரு வருஷமாய் உயிரை வாங்கிறாள். அவளின்ர ஆசைக்காக ஒறுப்பித்துச் சேர்த்து ஒரு இரண்டாயிரம் ரூபா வைச்சிருக்கிறன்....... சரி போய் அவையளை வழியனுப்பிப்போட்டு கொழும்பில அவளுக்கொரு Rucksackகும், ஒரு சோடி சப்பலும் வங்கிக்கொண்டு வாங்களன் பின்னே.”

யாழ்ப்பாணத்திலிருந்து நீர்கொழும்பு தரைவழியாக பத்துமணி நேரப்பயணம். இரண்டு இடத்தில் மாத்திரம் சோதனைச்சாவடிகள் இருந்தன. வெளிநாட்டு போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவும் சாவடியில் இருந்ததால் கெடுபிடிகள் குறைவாக இருந்தன. இதுவே போர்க்காலமாயின் சோதனைச்சாவடிகளைக் கடப்பதே ஒரு நரகானுபவமாய் இருந்திருக்கும். காட்டின் நெடிய மரங்களூடு தெரிந்த நிலவு வானின் வேகத்துக்கு பட்டுத்துணியைப்போலத் துடிக்கவும் பார்த்த அவர்களது குழந்தைகள் குதூகலித்தனர். வழியில் புத்தளம் , சிலாபத்தில் வாங்கமுடிந்த செவ்விளனி, வறுத்தமுந்திரிப்பருப்பு, வாட்டிய/அவித்த சோளப்பொத்திகள் என்பவற்றை எல்லோருமே அனுபவித்துச் சாப்பிட்டார்கள். இடைக்கிடையே வானுக்குள் ஜெர்மனிய வாழ்க்கை பற்றிச் சிலாகித்துக்கொண்டு வந்தான் வேந்தன்: “ இந்தப் பயணம் அங்கே ஹைவேயிலயென்றால் மக்ஸிமம் ஒரு ‘த்றீ அவர்ஸ் டிறைவ்’தான். அதுக்காக அங்கத்தைய சமாச்சாரங்கள் எல்லாமே உசத்தி என்றில்லை. இக்கரைக்கு அக்கரைப்பச்சையென்ற கதைதான் பல விஷயங்கள். இன்னுஞ் சொன்னா........ பொழுது இருள்றதும் தெரியாது, விடியிறதும் தெரியாது, எல்லாத்துக்கும் மணிக்கூட்டை மணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருப்பம். நம்பமாட்டியள் நானங்கே போனதுக்கு பூரணநிலவைப் பார்த்தது இங்கை வந்துதான்.” வேன் சாரதி அப்பவியாய் கேட்டார்: “ஏன் தம்பி அங்கே நிலவெல்லாம் எறிக்காதோ அப்ப?”“எறிக்காதெண்டில்ல அண்ணை. வின்டர் காலங்களிலை அநேகமாய் பொழுதுகள் பனியும் மழையும் மப்பும் மூடாப்புமாயிருக்கும் தெரியாது. சம்மறிலை பகல்பொழுதுகள் நீண்டதாயிருக்கும், அதில நிலவு எறிச்சாலுந்தான் கட்டிடக்காட்டுக்குள்ளால காணமாட்டம். அநேகமான இரவுகளிலை வேலைக்குப்போயிடுவம். நிலவை எங்கே, யார் , பார்க்கிறது?
இஞ்ச றுபீஸ், அங்கை மார்க். பெருக்கிப்பார்க்க நல்லாத்தானிருக்கும். எடுக்கிற சம்பளத்தில பாதி வாடகைக்குப் போகும், அதோட போச்சா....... கரண்ட்பில் , காஸ்பில் , கணப்பு பாவிச்சகாசு, ஸ்நோ தள்ளின காசு என்றுபோட்டு பில்லுகள் தனித்தனியாய் வரும். பிறகு ரெலிபோன்பில், காருக்கான டாக்ஸ் இன்சூரன்ஸ், போக்குவரத்துச்செலவுகள் , உடுப்பு நடப்பு, அடுப்படியெண்டுபோக கையும் கணக்கும் சரியாத்தான் இருக்கும். மூத்திரம் முடுக்கினாலும் செலவெண்டிருக்கிற ஒரு நாட்டிலை ஒன்றைப் பெற்றுக்கொள்கிறதுக்காக இன்னொன்றை ஒறுக்க வேணும் அல்லது முற்றாகவே இழக்கவேணும்.
என்ன வைட்கொலர் ஜொப்புகளே பார்க்கிறது, இத்தாலிக்காரன்ரையோ, ஜப்பான்காரன்ரையோ றெஸ்ரோறெண்டு களிலை நின்ற நிலையிலை தேய்ச்சுக்கொடுக்கிறதிலை மாதத்திலை இருநூறு முந்நூறு மணித்தியாலங்கள் கழியும். அப்பிடியே செய்துகொண்டுவர ஒரு பத்து வருஷத்தில முழங்கால் மூட்டுக்கள் , நாரித்தண்டுவடங்கள் தேய்ஞ்சு குத்து உளைவு எடுக்கத் தொடங்கிவிடும். ஆசைப்பட்டால் பிறகு காசை எண்ணி , றுபீஸிலை பெருக்கிப்பார்த்துச் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் பணத்தாலை விலைபேசவோ, மீட்கவோ முடியாத ஆரோக்கியத்தை முதல்லை இழந்துவிடுவம். எங்களை அறியாமலே அது மெல்ல மெல்ல விடைபெற்றுவிடும்...........வெளியிலிருந்து நோக்குகிறவர்களுக்கு எங்கட வசதிகள் மட்டும் தெரியும், ஆனால் நிம்மதியில்லாம மனவுளைச்சலில எப்பிடிக் குமைகிறோமெங்கிற சங்கதி அங்க வாழநேர்ந்தாலே தெரியவரும்.
வெளிநாட்டுக்கென வந்து இறங்கியபிறகு வாழ்க்கையிலை சந்தோஷமான தருணங்கள் என்றால் வெகு கொஞ்சந்தான்.சம்மர் டைம்ஸ்ல எப்போதாவது •ப்றெண்ட்ஸோடை சேர்ந்து வைக்கிற ஒரு கிறில் பார்ட்டி , பார்க்கிலயோ நடப்பதற்காக புறோமினேட்ஸ் என்று இருக்கிற பாதைகளிலோ ஓய்வாக ஒரு நடைபோய்வர வாய்க்கும் ஒரு பொழுது, ஒரு பார்ட்டியிலை பழைய •ப்றெண்ட்ஸை , ஊர்க்காரரைச் சந்திக்க நேரும் சில தருணங்கள்,நீந்தப்போகிற ஒரு நாள், ஒரு நல்ல கலை நிகழ்ச்சி இப்படி வெகுசொற்பந்தான்...........”

‘வேலையிலேயே கழிகின்றன பகல் பொழுதுகள்
வேலைக்கான தயார்ப்படுத்தலில் நம் இரவுகள்
மாற்றுப் போக்கின்றிக் குதிக்க நேர்ந்ததால்
நீந்தியே தீரவேண்டிய அகதிச்சுழி.’

என்று புலம்பெயர்வாழ்வைச் சித்தரிச்சு கிரிதரனென்று நம்ம கவிஞன்தான் ஒருவன் பாடியிருக்கிறான். எப்படிப் ‘பட்டு’ வந்திருக்கு பாருங்கோ வார்த்தைகள்? ”
‘இவன் பொதுவில் சொல்கிறானா, இல்லை தனக்குத்தான் சொல்றானா’ என்று வசீகரன் குழம்பிக்கொண்டிருக்க
“அதாவது நீந்திறதை நிறுத்தினால் ஆழவேண்டியதுதான் என்றியள்........ ஏன் மாப்பிள்ளை, தாலியைக் கட்டமுதல் இதுகளைப் பற்றி இந்தவெளிநட்டுக்காரர் யாரும் மூச்சுவிடுகிறதில்லையே........?” என்றுவிட்டு பெரிய ஜோக் அடித்தவர் மாதிரித் தானே தனியாகச் சிரித்து ஓய்ந்தார் அவன் மாமன்காரன்.

நீர்கொழும்பில் அவர்களின் ஒரு உறவுக்காரர் வீட்டில் சற்றுத்தரித்து மாலை விமானநிலையம் போவதாக ஏற்பாடு . நீர்கொழும்பை வேன் அடையவும் நிலம் தெளியத் தொடங்கியிருந்தது. மத்தியானவேளை அவர்களைப்பார்க்க கோமதியுடன் கூடப் படித்தோழியென்று ஒடிந்து விடுவாள் போன்றொரு ஒல்லியாய் ஒரு இளம்பெண் வந்திருந்தாள். அவர்கள் ஒன்றாகக்கூடி அமர்ந்து கலகலத்துச் சற்று ஓய்ந்தபோது வேந்தன் வசீகரனைத் தனியாகக் கூட்டிவந்து கேட்டான்: “ கோமதியின்ரை பழைய •ப்றெண்டாம் அது , வத்தளையில டீச் பண்றாளாம். இவளைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறாள், அவளுக்கேதாவது கொடுத்துத்தான் அனுப்பவேணும் சரியில்லை. நாங்க கொண்டுவந்த காசெல்லாம் யாழ்ப்பாணத்திலேயே ‘ஸ்வாகா’வாயிட்டுது. மாமனிட்டை வாய்வைக்கிறதும் மரியாதையாயிராது......... உன்னட்டை இருந்தால் ஒரு ‘ரூ தௌசன்ட் றுபீஸ்’ வெட்டு போனவுடனம் உனக்கு உண்டியல் சேர்விஸில அனுப்பி விடுறன்.”“ நோ ப்றொப்ளம் அட் ஓல்” என்றுவிட்டு கால்ச்சட்டைப் பக்கெட்டில் கையைவிட்டு இருந்த இரண்டாயிரத்தையும் அவனிடம் தூக்கிகொடுத்தான்.வந்ததிலிருந்து வேந்தனது மாமன் “எனக்கு இந்ததண்ணிதான் ஒத்துக் கொள்ளேல்லைப்போலை........ கொஞ்சம் நீர்க்கடுப்பாயிருக்கு” என்றுவிட்டுப் பாத்றூமுக்குப் போக்கும் வரவுமாயிருந்தார். அதனால் அவரை யாரும் விமானநிலையத்துக்கு வரச்சொல்லி வற்புறுத்தவில்லை.

மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வேந்தன்:“விடுதலைப்புலிகள் ஏர்ப்போட்டை அடிச்சாப்போலை இங்கை எப்படிப்பட்ட கெடுபிடிகள் சோதனைகள் என்டது தெரியுந்தானே.......... எல்லாத்தையும் திறந்துதிறந்து பார்த்துக்கொண்டு வைச்சு வினைக்கெடுத்துவாங்கள்....... நாங்கள் முதல்லை உள்ளபோறம். நீ ‘என்றன்ஸ் டிக்கெட்’டை எடுத்துக்கொண்டு பின்னாலை வா” என்றுவிட்டு ஒரு ட்றொலியில் சூட்கேஸ்களை வைத்துத் தள்ளிகொண்டு மனைவி குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தான்.
நுழைவுச்சீட்டு பெறுதற்கான கவுண்டருக்குப் போனபோது அங்கிருந்த காவலதிகாரி அவனது அடையாள அட்டையைப் புரட்டிப்புரட்டிப் பார்த்துவிட்டுக் “அனுமதிக் கட்டணம் இருநூறு ரூபாய்கள்” என்றான் சிங்களத்தில். அப்போதுதான் தன்னிடம் பணமே இல்லாத விஷயம் ‘திடுக்கென’ உறைக்க உள்ளே எட்டிப்பார்த்தான். அவர்கள் இரண்டாவது கண்ணாடித் தடுப்புக்கதவுகளையும் தாண்டி வெகுதொலைவில் போய்விட்டிருந்தனர்.
“ சொறி சேர்........ ஐ’ ஹாவ் சேஞ்ச்ட் மை ஐடியா ” என்று சொல்லி அடையாள அட்டையைத் திருப்பிவாங்கி காற்சட்டைப் பாக்கெட்டில் சொருகிக்கொண்டான்.
முதன்முதல் ஜெர்மனிக்கு வேந்தனை வழியனுப்பியபோது பிரிவாற்றாமல் அவனைக்கட்டி அழுதான்.பின்னர் வந்து கல்யாணம் கட்டிக்கொண்டு போனபோது அவன் மனைவி நிற்கிறாளேயென்ற சங்கோஜத்தில் ஒரு மீட்டர் தள்ளி நின்றே ‘குட் பை’ சொல்லிவிட்டுத் தனியே நின்று கலங்கினான்.இன்று ‘குட் பை’ சொல்லவே அமையாதவொரு தூரத்தில் அவன் போய்விட்டிருந்தான்.

உள்ளே போயிருந்தாலென்ன, பத்தாயிரம் ரூபா செலவு செய்து ஒரு பாஸ்போட் எடுப்பதற்கான வகை இவனிடம் உண்டோ இல்லையோ அவனது “ நீ பாஸ்போட்டை எடு மச்சான்” என்ற பல்லவியை இன்னொரு தடவை பாடியிருப்பான்.வசீகரன் செலவுக்குத்தரும் பணத்தை ஒறுத்துச் சிக்கனமாகச் செலவுசெய்து அதிலும் சிறுபகுதியைச் சேமித்து வைத்திருந்து அவன் பணமில்லாமல் அந்தரிக்கும் தருணங்களில் தூக்கித்தரும் காமதேனு வர்ஷிணி அவர்கள் ஓடிப்போன தினத்தின் முதலாவது ஆண்டின்போது அவன் கையைப்பிடித்து “உங்க மாமன் செய்துதந்த மாப்பிள்ளைமோதிரம் என்று நினைத்துக்கொள்ளுங்கோ” என்று சொல்லித் தனது சேமிப்பில் செய்வித்துப்போட்டுவிட்ட மோதிரத்தைப் பார்த்தான். லேசாக இருந்தாலும் எப்படியும் அநாமிகாவின் Rucksackக்குக்கும், சப்பலுக்கும் , பஸ்கட்டணத்துக்கும் வரும். ‘வேந்தன் கண்ணபிரானாகவே இருக்கட்டும், தன் ஏழ்மையைச்சொல்லி இறைஞ்சினாலே இரட்ஷிப்பவனென்றால் அவன் சங்காத்தம் வேண்டாம். நான் குசேலனாகவே இருப்பேன்.’ என்று நினைத்த வசீகரன் தன்மனதின் அடியாழ அடுக்குகளில் ஏதோ ஓர் மூலையில் லேசாக ஒரு ‘கசப்பு’ சுரந்திருப்பதை முதன்முதலாக உணர்ந்தான்.

**************

ஜூலை 2005 - காலச்சுவடு.

Montag, April 04, 2005

கதறீனா

-பொ.கருணாகரமூர்த்தி-

அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப் போர்வை தந்த கதகதப்பில்; பாவனி பூனைக்குட்டியைப்போல் பக்கத்தில் முடங்கித் தூங்கிக்கொண்டிருக்கிறாள். படுக்கைஅறை போன் உறுத்தாமல் கூக்காட்டுகிறது. அதற்குள் விடிந்துவிட்டதா என்ற ஆச்சர்யத்தில் மணிக்கூட்டைப் பார்க்கிறேன்......... இல்லை விடிந்திருக்கவில்லை மணி ஒன்றரைதான் ஆகியிருந்தது. போனில் யாருடைய அழைப்பென்று பார்த்தேன். என் அலுவலகத்திற்கு வந்த அழைப்பொன்றே தன்னியக்கமாக என் போனுக்குத் தரப்பட்டிருக்கிறது . முன்பொருமுறை இப்படித்தான் ஒருவருக்கு அகாலவேளையொன்றில் போன் பண்ண நேர்ந்தபோது அவருடைய தானியங்கி பேசியது: "தோழரே உலகந்தான் பாதியாகக் கிழிந்துபோனாலும் இவ்வேளையில் என்னால் ஒன்றும் ஆகப்போறதில்லை. ஆகையால் தயவுசெய்து நாளை காலை தொடர்புகொள்ளவும். நன்றி."
இனி என்ன எழும்பியதுதான் எழுப்பியாயிற்று......... பேசிவிடவேண்டியதுதான்.
"ஹலோ..........வணக்கம். இணைப்பில் இங்கே கணியன்."
" வணக்கம்! திரு.கணியன்......... நான் ஜொகான் பம்பேர்க்......... ஹில்சென்பா·க்கிலிருந்து பேசுகிறேன். தங்களுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடிய வேளையில் போன்செய்ய நேர்ந்தமைக்கு முதலில் பொறுத்தாற்றவும். "
" பரவாயில்லை........... அதுவும் என் தொழிலில் ஒரு பகுதிதான்........ நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள்."
" ஸ்ரீ£லங்கன் தமிழ் பிரஜை சம்பந்தப்பட்ட வழக்கொன்றுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர் இங்கே உடனடியாகத் தேவைப்படுகின்றார்."" என்ன பொலீஸ் வழக்கா? ""இல்லை........ இது கொஞ்சச் சொத்துக்கள் சம்பந்தமான குடிசார் வழக்கு...... இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒப்பந்தமொன்று. "" சரி........... எங்கே எப்போது ? "" வின்டர்பேர்க் குடிசார்மன்றில் காலை பத்துமுப்பதுக்கு."" அது முன்னூற்றைம்பது கிலோமீட்டருக்கு மேலிருக்குமே ஏன் நீங்கள் முன் கூட்டித்தெரிவிக்கவில்லை? "" முதலில் நீதிமன்றமே சீகன் சர்வதேச மொழிபெயர்ப்பு பணியகம் மூலம் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாடு சென்றிருந்த அவர்களின் மொழிபெயர்ப்பாளர் உரிய நேரத்துக்குத் திரும்ப முடியவில்லையென்று ·பாக்ஸ் கொடுத்திருப்பதாக இப்போது அறிவிக்கிறார்கள்......... அதனால்தான் பிரச்சனை......... மன்னிக்கவும். "
" தவணை எடுக்கவே முடியாதா? "
" காலதாமதம் மேலும் சிக்கல்களைத்தான் அதிகரிக்கும். சீக்கிரம் முடித்துவிடவே விரும்புகிறோம்." " சரி. பொறுங்கள்.............. இன்றைய என்வேலைத்திட்டத்தைப் பார்க்கிறேன்." நல்லகாலம் . அன்றைக்கு அதிமுக்கியம் என்று கருதமுடியாதவையும் பின் போடத்தக்கவையுமான சில பணிகளே இருந்தன.
" ஓகே......... என்னால் சமூகமளிக்க முடியும்."
" மிக்க நன்றி.......... வணக்கம்."
மீண்டும் படுக்கைக்குத் திரும்பினேன்.டெலிபோன் சம்பாஷணையால் விழித்துக்கொண்ட பாவனி என் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டு விபரம் கேட்டாள்.
" என்ன கேஸாமோ? "
" ஓம்............ கேஸ்தான். "
" எங்கே....... எப்போ? "
"வின்டர்பேர்க்கில........... காலமை."
" அது போலந்து பக்கமல்லே............. அதால போடர் பாய்ஞ்சு வந்த நம்ம சனம் யாரும் மாட்டிட்டுதோ? "
" இல்லை இந்த இடம் இன்னும் கொஞ்சம் தென் மேற்கே........... இதேதோ சொத்து சம்பந்தமான ஒப்பந்தமாம்........... இப்பதான் நம்ம ஆட்களும் நிறைய வீடு......... கடை......... ......... நிலமென்று வாங்குகிறார்களே......... ஏதுமப்பேர்ப்பட்ட பிரச்சனையாகவிருக்கும். நான் போன்ல விபரம் கேட்கேல்லை ......... தட்'ஸ் அன்·பெயர்."
" அவசரமாமோ? "
" தவணைக்கு முடிக்க விரும்புது பார்ட்டி. "
" நாலைந்து மணி நேர டிறைவிங் வருமே......... ஏலுமேப்பா உங்களுக்கு? "
"திடீரென்று ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு முடியாமல் போறதால ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்க உதவுறதில ஒரு சந்தோஷம். அதோட புதிசா ஊரிலேயிருந்து உதவியென்று வந்திருக்கிற கடிதங்களுக்கு இதில வர்ற சம்பளமும் டிராவலிங்பட்டாவும் உதவும். "
"சரிதான்........ உங்களைத் தனியாய் விடுறதும் றிஸ்க்......... அப்போ நானும் வாறன் . "
" வாட்........ எ பிறிட்டி ஐடியா......... ஐ அப்பிசியேற் யுவர் பிளெஷர் கொம்பனி டார்லிங். காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே........அவன் காரியம் யாவினும் கைகொடுத்து......."
" போதும்....... கவிஞரே போதும்! "
நிச்சயம் என்னைப்போலவே அந்தக் கவிஞனும் அனுபவிச்சிருக்கவேணும்.
" சரிசரிசரி.......குளிர்றதேபோதும் எக்ஸ்றா வேணாம்............ எத்தனை மணிக்கு இறங்கிறோம் ? "
"ஒருநாள்போல ஒருநாள் இருக்காது. ஸ்கூல்ஸ் வக்கேஷன்ஸ் முடியிற டைம் ' ஹைவே 2 ' வில போக்குவரத்து இறுகச் சந்தர்ப்பமிருக்கு. ஒரு நாலரை ஐந்துக்கே இறங்கிவிடுகிறது சே·ப் அன்ட் பெட்டர். "
பாவனி வள்ளுவன் காலத்திலும் வாசுகியின் ஒன்றிவிட்ட சித்திமகளாகவேனும் கொஞ்சக்காலம் வாழ்ந்திருக்க வேண்டும். அக்காலத்தில் இருந்ததாக நம்பப்படும் வழக்கங்களின் எச்சங்கள் மிகமிக அதிகம் . தானே அலாரம் வைத்து நாலுமணிக்கு எழும்பிக்கொண்டு கொஞ்சம் பியர்ஸ் ஆப்பிளன்ன பழவகைகளோடு வழிக்கொறியலுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ¤ம் பிளாஸ்க்கில் கோப்பியும் எடுத்துத் தானும் உடுத்தித்தயாராகிக்கொண்டு எனக்கு முகம் கழுவியவுடன் குடிப்பதற்கான நெஸ்கபேயையும் எடுத்துக்கொண்டுவந்து தன் குளிர்ந்த கைகளை என் கண்களில் இதமாக ஒற்றி என்னை எழுப்பினாள்.
ஆனால் ஒன்று காருக்குள் ஏறினதுமே சீமாட்டிக்குக் கண்கள் வலியம் டபிள் டோஸ் அடிச்சதுபோல ஒருமாதிரிச் சொருகிக்கொண்டுபோகும். பாவனி எப்போதாவது நித்திரைவராமல் அவஸ்த்தைப்பட நேர்ந்தால் ஆளை காருக்குள் சும்மா உட்காரவைத்துவிட்டு அதை ஸ்டார்ட் பண்ணிவிட்டால் போதும்........ அடுத்த நிமிஷமே "ஹொர்....ஹொர்' கேட்கும்.
பாவனியின் கண்கள் தூக்கக்குறைவால் சிவந்து சொக்கிக் குறாவிக்கொண்டிருக்கின்றன. அவளைப் பேசவைக்கிற மாதிரி ஏதாவது பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது கிச்சக்கிச்ச மூட்டிக்கொண்டிருக்கவேணும் அல்லது கார் ஹைவேயில் ஏற முதலே அவள் 'ஸோலோ' வாசிக்கத்தொடங்கிவிடுவாள். காரை ஓட்டிக்கொண்டு இரண்டாவதைப் பண்ணமுடியாதாகையால் நான் முதலாவதைப் பரீட்சித்தேன்.
"முன்னாலை போகிற புதுமொடல் நிசான் மிக்கிறா தௌசனின் பின்பக்கத்தைப்பார்த்தீரா? " அசுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு
"ஏன் உங்களுக்குத் தெரிஞ்ச ஆட்களாருமதில போகினமோ?'' என்றாள்.
"இல்லையப்பா காரின்ரை பின் ஷேப்பைப்பாரும்......... பார்க்க உமக்கு என்ன தோன்றுதென்று சொல்லும்? "கொட்டாவி விட்டபடி மீண்டும் எனது வில்லங்கத்துக்காகப் பார்த்தாள். பார்த்துவிட்டு
"ஏன் எப்பிடியிருக்கு? "
"அதின்ரை ஹ¥ட்டும் பொடியும் சேர்ற இடம் ஒரு பெண்ணின்ரை இடுப்பு மாதிரி அழகாய் ஒடுங்கேல்லை? ""அடடடடடடா............... மிக்கிறா மினி மைனருக்கு இடுப்பு......... சிற்றோனுக்கு மூக்கு......... பீட்டிலுக்கு முழி......... மொண்டியாவுக்கு சொக்கு......... சியாறாவுக்குச் சிரிப்பு தெருவிலபோகிற காருகளிலுமே உங்களுக்குப் பெண்டுகள் அம்சமாகவே தெரியுது. நல்ல ஒரு சைக்கியார்டிஸ்டைப் பார்த்து முதல்ல இதைச் சுகப்படுத்தலாமோவென்று கேட்கவேணும்."
" இருக்கட்டுமே........... அது என்னுடைய சார்ப் சென்ஸ் ஒப் டேஸ்ட் ......... ஒரு ஒப்பீடு ......... ஒரு அழகியல் தரிசனம்......... அதை நானொரு பலவீனமாய் ஒரு போதும் நினைக்கேல்ல. "
"அப்பிடியே இருக்கட்டும் ராஜா........இருந்தால் அதுகளை வெளியே பினாத்தாமல் உனக்குள்ளேயே வச்சிரன் கண்ணா. "
" இந்தப் பூமியில காதல் மயக்கங்கள் கல்யாணம் இதுகளெல்லாம் இன்னும் இருக்குதில்ல? "
" ஸோ............வாட்? "
" சோபனமும் இளமையும் மிக்க குமரியே..........உன்னோடு கொஞ்சவும் ஸ்பரிசிக்கவும் முயங்கவும் எனக்கு இச்சையாகவுள்ளது என்பதுதான் உண்மையும் நோக்கமுமாகவுமிருக்க அதை ஒப்பனை பண்ணி 'மயிலே உன்னிடம் மயங்குகிறேனென்றோ'......... 'அழகே உன்னை ஆராதிக்கறேனென்றோதானே' பயலுகள் பசப்புறாங்கள்? சில பெண்ணியவாதிகள் மறுக்கிறார்கள் என்கிறதுக்காக பெண்ணினத்தின் மேல் ஆண்களுக்கு அனாதியிலிருந்தே வரும் ஆகர்ஷிப்பு மாறிவிடுமா? இப்போ நீர் என்னுடைய பெஸ்ட் ·ப்றென்ட் என்கிறதால என்னுடைய உணர்வுகளை பூச்சில்லாமல் உம்முடன் பகிர்ந்துகொள்றன்......... படுக்கை அறையில மாதிரி. "
" கிழித்தீர்......... பூப்போல 'பொண்ணு' ஒன்று என்று எதிர்ல பக்கத்தில வாற கார்கள் எதிலாவது சொருகிவிடாமல் நிதானமாய் ஓட்டப்பாரும். "
உதடுகளைச் சுழித்தொரு வலிச்சம் காட்டினாள்.
" காரிகைகளின் அம்சங்களைப் பார்த்துத்தான் காரையே மனுஷன் இணக்கினானென்கிறதைச் சொல்ற பரிபாடல் கவிதை ஒன்றிருக்கு தெரியுமோ? "
" பரிபாடலென்றால்...? "
"அழிஞ்சுபோகவிருந்த சங்கத்தமிழ் இலக்கியம் ஒன்று தற்செயலாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சாவாலே காப்பாற்றப்பட்டது."
" வேண்டாமென்றால் விடவா போறியள்.............கொஞ்சம் எளிமையாய் விளங்கிற வகையாயிருந்தால் சொல்லுங்கோ."

"நின் சொகுசும் தண்மையும் 'பென்ஸ¤'ள

நின் நளினமும் பாந்தமும் 'சிவிக்'குள
நின் கந்தமும் ஜொலிப்பும் 'கியா'வுள
நின் சந்தமும் இசையும் 'மொறிசு'ள
நின் எளிமையும் மிருதும் 'கோல்·'புள
நின் சாந்தமும் காந்தியும் '·பியட்'டுள
நின் வேகமும் துடிப்பும் 'றெனோ'வுள
நின் உழைப்பும் உறுதியும் 'சாப்'புள
நின் ஒளிப்பும் ஒண்மையும் '·போட்'டுள. "

" இப்படிச் சந்தமும் வேகமும் மிருதும் காருகளில மட்டுமிருக்க நீங்கள் மட்டும் சௌவ்ளே......... டொச்சு வைக்கல் லொறியள் மாதிரி விட்ட விட்ட இடத்திலேயே நகராமல் முக்கிக்கொண்டிருந்து மற்றவையின்ரை உயிரை எடுப்பியளாக்கும்? "
" அதுதானே கிளி உங்களோடையே நாங்கள் சாகிறது? "
" முந்தி ஒருநாள் வாசுவின்ர வை·ப் மாலதியை சின்ன மேக் எண்டாலும்....... மொறிஸ்மைனர் மாதிரிச் செக்ஸியாய் இருக்கிறாள் எண்டனீங்கள்............ இப்பிடித் தறிகெட்ட கற்பனைகளோட தெருவிலபோற காருகளிலேயே கிண்ணென்றிருக்கிற மாரைப்பார் மடியைப்பாரென்கிற மனுஷனென்று தெரிந்திருந்தால் பப்பா உங்களுக்கு என்னைத் தந்தேயிருக்கமாட்டார்.......................... ம்ம்ம்ம்ம்ம்ம் . "
" இந்தக் கவிதைகள் எழுதிறவங்கள் இருக்கிறாங்களே அவங்களுக்குக் தோன்றுகிற கிறுக்கல்களை எதுக்கு நாலு பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கிறாங்கள் தெரியுமே.......... சிலவேளை தங்களைப்போலை கற்பனை வேறும் நாலுபேருக்கிருந்து ரசனையை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தலாமென்றொரு ஆதங்கந்திலதானே? "
" இப்படி வந்து நடுவழியில உங்களோட ராவுப்படறதுக்கு 'ராமா'வென்று நான் வீட்டிலேயே இருந்திருப்பன்."தலையில் அடித்துக்கொண்டாள். " யார் அந்த வில்லன்? " " சாவக்கொல்லுவன். "
" அப்ப நான் யாரோடை ராவிறதாம்? "
விரையும் சாலையிலிருந்து என் பார்வையை விலக்காமலே என் ஞானவலயத்தின் பக்கப்புலன்களால் பாவனி கண்களைச் சுழற்றி என்னைத் துளைப்பதை உணர்கிறேன்.
" வீட்டில விட்டிட்டு வந்திருந்தால் உடனே 'விசுக்'கென்று ஒரு சேலையைச் சுத்திக்கொண்டு கோயிலுக்குப் போய் "அப்பனே மயூரபதியப்பா............... என் கர்ப்பத்தை அநியாயமாய் இப்படித் தள்ளிக்கொண்டே போறியே..... அந்தக் காலவெளியை ஈடுசெய்யிற மாதிரி இரட்டைக்குழவிகள்ல மூன்றாய்க் கொடுத்திடப்பா'வென்று முட்டியிருப்பீர்."
நான் வண்டியை விரட்டுவதற்கு இடையூறில்லாமல் லேசாய் என் வலது தோளில் சாய்கிறாள். பின் இருவரிடையே வேண்டாதொரு மௌனம் கனக்கிறது. குழந்தை பற்றிப் பேச்சு வந்தால் பாவனி இப்படித்தான் அடிக்கடி மௌனமாகிவிடுவாள்.
காரை நூற்றிநாற்பதுக்கும் நூற்றிஐம்பதுக்குமிடையில் விரட்டியதாலும் ......... நவீன அறிவியலின் கைங்கரியமான ஆட்டோ நவிகேட்டரின் துல்லியமான வழிகாட்டலாலும் பத்து மணிக்கெல்லாம் நீதிமன்றின் வளாகத்துள் நுழைந்துவிட்டோம்.
எங்கள் தலைக்கறுப்பைக் கண்டதுமே காத்திருந்த இரண்டு ஜெர்மன்காரர்கள்; நேராக எம்மிடம் "குட்டன் மோர்கன்'' என்றபடி வந்து கைலாகுதந்து "நான் ஜொகான் பம்பேர்க்......... இவர் என் சகோதரர் திரு. கெவின் பம்பேர்க்......... இன்னும் ஒரு சகோதரர் திரு. மத்தியாஸ் ஸ்மிட்த்தும் சகோதரி திருமதி. சப்றினா ஹொ·ப்மானும் கூட வந்திருக்கிறார்கள். நீங்கள் திரு.கணியன்............ கூட வந்திருக்கும் இளம்மாது உங்கள் உதவியாளராக இருக்கலாமென்பதும் எம்கணிப்பு. '' என்றனர் விநயமாய். "அவர் என் மனைவியுங்கூட.........'' என்றேன். " முற்றிலும் பொருத்தமானவர்தான் '' என்று முகமனுக்குக் கூறிவிட்டு எங்களை மேலே கூட்டிச்சென்றனர்.
"இன்னும் அரை மணிநேரம் இருக்கிறதே......... நாங்கள் எதிரிலிருக்கிற கா·பேரீறியாவில் ஒரு கோப்பி குடித்துவிட்டு வாறமாதிரி உத்தேசம்'' என்றேன்." கவலையைவிடுங்கள் காலை ஆகாரமே உங்களுக்காக மேலே தயாராகவுள்ளது.'' என்று முதலாம் மாடியில் எங்களை ஒரு விசாலமான ஓய்வு அறைக்குள் அழைத்துச்சென்றார்கள். அறையின் மையமாக இருந்த பெரிய மேசையில் எமக்கான காலை ஆகாரம் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது.நாங்கள் காலை உணவை முடிக்கும்வரை நல்ல தாதியரைப்போலக் கூடவிருந்து உபசரித்தவர்கள் எம்மிடம் தேர்தெடுத்த வார்தைகளில் தந்திக்குரிய சிக்கனத்துடனும் விழிப்புடனும் அளவாகவே உரையாடினார்கள். சாப்பாடானதும் எடுப்புத்தொலைபேசிகளை அணைத்துவிட்டு நேரே விசாரணை மண்டபத்துள் நுழையவே நேரம் சரியாயிருந்தது.
விசாரணை நடைபெறும் மண்டபவாசலில் இருந்த அறிவிப்புப்பலகையில் அன்று விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளில் அது இரண்டாவது எனவும் இதர சுருக்க விபரங்களும் அச்சிடப்பட்டிருந்தன.

தேதி: 13.03.2002
வழக்கு இலக்கம் : 08 05 54
நேரம் 10:30 மணி
வாதிகள்: (1) திரு. ஜென்ஸ் பம்பேர்க். (2) திரு.கெவின் பம்பேர்க். (3) திருமதி. சப்றினா ஹொ·ப்மான்......... (4) திரு. மத்தியாஸ் ஸ்மிட்த்.
வாதியின் சட்டநெறியாளர்: திரு.பீட்டர்ஸ் ·பிறிடெறிக்.
பிரதிவாதி: திருமதி. கதறினா எலிசாராணி பம்பேர்க்சட்டநெறியாளர்: ------------
நீதிபதி : திருமிகு. கார்லோஸ் லுக்ஸம்பேர்க்
சரியாகப் பத்து முப்பதுக்கு உள் நுழைகிறோம். பிரதிவாதியான தமிழ்ப்பெண் எப்படி இருப்பாரோ என்று அறிய ஆவலாக இருந்தது. முன் நாற்பதுகளில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்தார்கள்.
சாம்பல் நிறத்தில் பெரியகொலர் வைத்த புல்லோவரும் கணுக்காலுக்கு மேல் ஒரு சாண்வரை வரும் கறுத்த முக்கால் பாவாடையும் அணிந்திருந்தார். வழக்கு ஆரம்பிக்கும்வரையில் இரண்டு கைவிரல்களையும் கோர்த்துப் பின்னி நெஞ்சுக்கு நேரே வைத்துக்கொண்டு கண்களைமூடி தேவனுடன் எதையோ விசாரஞ்செய்பவரைப்போல முகத்தில் பரவும் விகாசத்துடன் இருந்த அவர் தோற்றம் அங்கி அணியாதவொரு கன்னியாஸ்த்திரி ஜெபித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. ஒடிசலான தேகம் கறுத்தமுரசும் லேசான மிதப்புப் பல்வரிசையோடு ஒரு சந்நியாசினியைப்போலிருந்த அம்மாதை பம்போர்க் எனப்படும் ஜெர்மன்காரர் நிச்சயமாகப் பாலியல் நோக்கங்களுக்காகத் திருமணம் செய்திருக்கமாட்டார்.
ஜெர்மன் நீதி மன்றங்கள் ஒன்றும் உயரமான ஒரு அரைவட்ட டெஸ்க் சாட்சிக்கூண்டுகளென்று இந்திய சினிமாக்களில் வருவதைப் போலிருக்காது. ஒரு சிறிய கல்லூரி விரிவுரைமண்டபத்தைப் போலிருக்கும். நீதிபதிக்குச் சமதையாக அவர் எதிரிலேயே வாதி, பிரதிவாதி, சாட்சிகள், சட்டத்தரணி, மொழிபெயர்ப்பாளர்கள், பதிவாளர், எழுத்தர், உதவியாளர்கள், பொலீஸ் வழக்காயின் பொலீஸ்காரர்கள் அனைவரும் அமர்ந்து பேசலாம். விசாரணைகளின்போது யாரும் கைகட்டி நிற்பதோ; போலி பவ்யம் காட்டுவதோ இல்லை.
எதிரிலிருப்பவர்களை ஊடுருவித்துளைப்பது போன்றதொரு பார்வைகொண்ட நீதிபதி அவரது நீண்ட கறுத்த அங்கியைப் பெண்பிள்ளைகளைப்போல மடித்துக்கொண்டு தனது ஆசனத்தில் அமர்ந்தவுடனேயே வழக்கு ஆரம்பிப்பதாக அறிவித்தார்.
பிரதிவாதியின் பக்கத்தில் எனக்கு ஆசனம் போட்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் பாவனி . பார்வையாளர்களென்று எவருமில்லை. வழமைபோல் முதலில் வாதிகளின் அறிமுகம். பின்னர் பிரதிவாதியின் அறிமுகம். அதைத்தொடர்ந்து வழக்கின் விபரத்தை நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு வரிகளாக ஒரு உத்தியோகத்தர் வாசிக்கவும் நான் அதை பிரதிவாதிக்குத் தமிழ்ப்படுத்தப் பணிக்கப்பட்டேன். திருத்தங்கள் இருக்குமாயின் பிரதிவாதி சுட்டிக்காட்டின் அவை கவனத்துக்கு எடுக்கப்படுமெனவும் நீதிபதி சொன்னார்.
" கதறினா எலிசாராணி செபஸ்டியான்புள்ளே என்னும் கன்னிப்பெயருடையவரும்......... 1961ம் ஆண்டு வைகாசி மாதம் 17ந்தேதி ஏத்துக்கால் நீர்கொழும்பு ஸ்ரீ£லங்காவில் பிறந்த இலங்கைப் பிரஜையுமாகிய நான்."
" சரி. "
" 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம்தேதி கொழும்பிலுள்ள ஜெர்மன் தூதுவராலயத்தில் கொழும்பு மத்தியபகுதி விவாகப்பதிவாளர் முன்னிலையில் ஜெர்மனி லூணபேர்க்கில் 1936ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் தேதியன்று பிறந்தவரும் பெர்லினர் வீதி. 25......... ஹில்சென்பா·கை வதிவிடமாகக்கொண்டவருமான திரு. வேர்ணர் பம்பேர்க் என்னும் ஜெர்மன் பிரஜையை விவாகப்பதிவு செய்துகொண்டதன் மூலம் திருமணம் செய்துகெண்டேன் .........."
" சரி."
" 17.08.2001 இயற்கை எய்திவிட்ட திரு. வேர்ணர் பம்பேர்க்கின் பிள்ளைகளாகிய திரு. ஜென்ஸ் பம்பேர்க். திரு.கெவின் பம்பேர்க். திருமதி. சப்றினா ஹெல்முட். திரு. மத்தியாஸ் ஸ்மிட்த் ஆகியவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உபகாரமாத் தரும் இருபதினாயிரம் ஜெர்மன் மார்க்குகளைப் பெற்றுக்கொண்டு அதன் பிரதியுபகாரமாக திரு. வேர்ணர் பம்பேர்க்குக்குச் சொந்தமான அசையும் அசையாச் சொத்துக்களிலும் ......... அவரது பிறமுதலீடுகளெதிலும் இனிமேல் பாத்தியதை அதாவது உரிமை கொண்டாடமாட்டேனென்று இம்மன்றில் உறுதி மொழிகின்றேன்."
மூன்றாவது நீண்ட வசனம் வாசிக்கப்பட்டதும் எனக்குள் தட்டிய பொறியில் வழக்கின் தன்மையும் அத்தோடு இருக்கக்கூடிய அனைத்துச் சதிகளும் ஓடி வெளித்தன.
கதறீனாவை வேர்ணர் பம்பேர்க் என்கிற ஜெர்மன்காரர் இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
வாதி : 4 மத்தியாஸ் ஸ்மித் என்பவர் வாதிகளின் தந்தையான வேர்ணர் பம்பேர்க்கின் சட்டரீதியல்லாத இன்னொரு மனைவியின் புத்திரன்.
இறந்ததாகச் சொல்லப்படும் இந்த ஜெர்மன்காரின் இந்த அப்பாவி விதவையின் பேதமையைப் பயன்படுத்தி அவரின் முதல் இரண்டாவது தாரத்துப் பிள்ளைகளாகச் சொல்லப்படும் இக்கிங்கிரர்கள் ஆளுக்கு இருபதினாயிரம் மார்க்குகள் என்றொரு சிறிய எலும்பை முன்னால் எறிந்துவிட்டு கிழவரின் அனைத்துச் சொத்துக்களையும் சுருட்டுவதற்கு கூட்டுச்சேர்ந்து சூழ்ச்சி பண்ணுகிறார்கள். வாக்குமூலஒப்புதல் சட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி என் கண்முன்னாலே கோழியைக் கேட்டுக் குழம்புவைக்கின்ற சதியொன்று அரங்கேறப்போகிறது. இந்தப்பிரச்சனையில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. இவ்வளவு கால வாழ்வனுபவமிருந்தும் இத்தனை பேதையாக இருக்குமவர்மீதெனக்குக் கோபம் கோபமாக வருகிறது. கூலிக்கு நாற்று நடவந்தவன் எல்லைக்கு வழக்குப் பேசுவதெங்கனம்?
" அதென்ன தம்பி அசையும் அசையாச் சொத்துக்கள்? "
நிதானமாக விளக்கினேன்.
" பிற முதலீடுகளென்றென்னவோ சொன்னாங்களே...........? "
" அவர் ஏதாவது கொம்பனிகளிலே தொழில்துறைகளிலே இன்வெஸ்ட்மென்ட் செய்திருப்பார் ......... பங்குகள் வைத்திருப்பார். அந்தச் சொத்துக்களிலும் பங்கு கேட்கமாட்டேனென்று."
சொல்லப்பட்ட விஷயம் எத்தனை வீதந்தான் புரிந்ததோ தெரிவில்லை. மனுஷி மலங்க மலங்க என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
என் முகத்தை வெகுஇயல்பாக வைத்துக்கொண்டு
" அம்மா.....இஞ்சைபாருங்கோ இவங்கள் உங்களை நல்லாய்ச் சுத்தப்பார்க்கிறாங்கள்......... அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கென்று உங்களுக்குத் தெரியாதுதானே. அவர் சொத்துக்களின் முழுவிபரத்தை எனக்குத் தெரிவித்த பிறகுதான் அதுபற்றி நான் முடிவுசொல்லாமென்று சொல்லுங்கோ. இப்பவே முடிவுசொல்ல வேண்டிய அவசியமில்லை......... தாராளமாய்க் கால அவகாசம் கேட்கலாம்......... கேளுங்கோ.'' உதவ முயன்றேன்.
நான் சொன்னவை அவரைப் பாதித்ததாகவோ; நான் காட்டிய கோணத்தில் அவற்றை அவர் புரிய முயன்றதாகவோ தெரியவில்லை. தொடர்ந்தும் வெகுளியாகவே முழித்துக்கொண்டிருந்தார்.
" கண்ணின் மணிபோல என்னை வைச்சுக்காத்த என்ரை பம்பேர்க் மகராசனே இல்லையாம்..........எனக்கேன் தம்பி அவங்கட சொத்து......... அது அவங்கடதானே? "
போச்சுடா........... அதைச்சொல்லிமுடித்ததும் அவருக்குப் பொலுக்கென்று கண்ணீர் கொட்டிற்று. டிஸ¤வை எடுத்து ஒத்திக்கொண்டார்.
நீதிபதி " பிரதிவாதி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார் போலிருக்கிறதே என்ன விஷயம்? '' என்றார் ஆர்வத்துடன்.
" அவருக்கு தன் கணவரின் நினைப்பு வந்துவிட்டதாம்......... அவர் எப்படித் தன்னைக் கவனித்துக்கொண்டாரென்பதைச் சொல்கிறார்."
"பிரதிவாதி இவ்வழக்கு சம்பந்தமான விஷயங்களை மட்டுமே இங்கு பேசலாம்."
" உணர்ச்சிவசப்படவேண்டாம்........... எங்கிறார் தலையாரி. '' என்றேன்.
" ஐ குட் நொட் கீப் எவே ஹிஸ் தோட்ஸ் மை சண்........ இட்ஸ் இம்பொஸிபிள."
" அம்மா உந்தப் பாஷை அவங்களுக்கும் கொஞ்சம் விளங்கும் ......... பிறகு கதை கந்தலாய்ப்போயிடும். எங்கட பாஷையில மட்டும் கதையுங்கோ."
"எந்த மசிராண்டிக்கெண்டாலுந்தான் எனக்கென்ன பயம்? "
திருமதி . கதறீனா பம்பேர்க் யாருக்கும் பயப்படவேண்டியதில்லைத்தான்......... அவர்தான் ஒப்பந்தமெதுவும் செய்துகொள்ளமாட்டேன் முடியாது என்று மறுத்துவிடுவாரோவென்று அவரை ஒரு நரிக்குரிய தந்திரப்பார்வையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வாதிகள்தான் உள்ளுக்குப் பயந்துகொண்டிருக்கிறார்கள்."இம்பொசிபிள்'' என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மனுஷி ஏதோகுறுக்கே இழுப்பதாகப் புரிந்துகொண்ட (வாதி:1) ஜென்ஸ் பம்பேர்க் கலவரமானான். அமைதி இழந்து கைகளைப் பிசைந்துகொண்டிருந்தான்.
நான் சூசகமாகச் சொல்வதைப் பற்றிக்கொள்ளும் வல்லபம் அவரிடம் அறவே இல்லை. நான் மனுஷியை மீண்டும் நாசூக்காக உசார்ப்படுத்த முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.மன்றில் அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமேல் அவரோடு வலிந்து மல்லுக்கட்டி எதையும் புரியவைக்க முடியாது. மேலும் இதிலுள்ள றிஸ்க் என்னவென்றால்............ அங்கு சொல்லப்படுவதைவிடவும் அதிகமான வார்த்தைகள் உபயோகித்து பிரதிவாதியுடன் உரையாடினேனாயின் அது நான் பிரதிவாதிக்குப் புத்திமதி சொல்வதான சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்கள் என் மொழிபெயர்ப்பை முழுவதும் மறுதலிக்கலாம்.
நான் பணியை சரியாகத்தான் செய்தேனா என்பதை உறுதிப்படுத்தவும் இரண்டாவது ஒப்பீட்டுக்காகவும் அவர்கள் என் மொழிபெயர்ப்பை எனக்குத் தெரியாமலேயே ஒலிப்பதிவுகூடச் செய்யலாம். பிரதிவாதி சொல்வதை உடனடியாக அப்படியே பெஞ்சுக்குச் சொன்னேனாயின் விஷயம் உடனேயே முடிவுக்கு வந்துவிடும்.
நான் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு முரணானதுதான்......... எனினும் என் ஆற்றாமையில் பிரதிவாதி சொல்வதை நீதிபதியிடம் சொல்வதுபோன்ற பாவனையுடன் சொன்னேன்.
" குழப்பமாகவுள்ளது........... நிதானமாகத்தான் முடிவுசெய்யவேண்டும் என்கிறார்."
முதலாவது மகனுக்கு வந்த சினத்தில் முகம் சிவந்தது. எழும்பி நாலரைக்கட்டைச் சுதியில் கத்தினான்:
" எங்கள் நிபந்தனைகளை ஏற்கெனவே அவருக்குச்சொல்லியிருந்தோம். அவர் தனக்குச் சம்மதம் என்றும் அதை இன்று சட்டமூலம் உறுதிசெய்வதாகவுந்தான் இங்கு வந்தார். இப்போ முரண்படுவது எங்களை ஏமாற்றுவதாகும்."
" உவன் ஏனாமணை முக்கிறான்........? '' என்றார் கதறீனா.
நீதிபதியிடம் கேட்டேன்.
"வாதி நம்பர்:1 என்ன சொல்கிறாரென்று பிரதிவாதி கேட்கிறார்.........? "
நட்பான தோரணையில் 'சொல்லும்படி' சைகை காட்டினார்.
" நீங்கள் தங்களுடைய நிபந்தனைகளுக்குச் சம்மதப்பட்டுத்தான் வந்தீங்களாம் என்கிறான். ஒன்றுக்கும் அவசரப்படாதையுங்கோ நிதானமாய் யோசியுங்கோ நிதானம். நிதானம்! "
" நான் மறுப்பேதும் சொல்லேல்லையே? "
அவரை நோக்கி முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு
"அம்மா.............. இதை நல்லாய் நுட்பமாய் கவனியுங்கோ......... இங்கே ஒருக்கால் ஒத்துக்கொண்டால் ஒத்துக்கொண்டதுதான் பிறகு மாத்திச்சொல்லவோ, வாபஸ் வாங்கவோ முடியாது. அவங்கள் செய்யவிருக்கிற ஒப்பந்தத்தில பாவிக்கிற வாசகங்களைப் பார்த்தால் உங்கள் கணவருக்கு நீங்கள் நினைக்கிறதைவிட அதிகம் சொத்துக்கள் இருக்குப்போலயிருக்கு. அவருக்கிருக்கக்கூடிய முழுச்சொத்துக்களில் சட்டத்தின்படியும் தர்மத்தின்படியும் ஐந்தில் ஒரு பங்காவது உங்களைச் சேர்ந்தாகவேண்டும். சொத்தின்ரை மொத்தப்பெறுமதி தெரியாமையிருக்கையில இந்த எண்பதினாயிரம் ஒரு மூக்குப்பொடியாய்க்கூட இருக்கலாம். முழுச்சொத்து விபரத்தையும் கேட்கிற அதிகாரமும் உரிமையும் உங்களுக்கு இருக்கு............ உங்களுக்கு இன்னும் நிறையச் சந்தர்ப்பமிருக்கு. இன்னும் நல்லா யோசிச்சு முடிவைச் சொல்றனெண்டு சொல்லுங்கோ? "
" பிறகேன் அப்பன் இன்னொருவாட்டி உலைவான்? "
இது சரிப்பட்டுவாற கேஸல்ல........... இப்போது எனக்குச் சங்கடமாகவிருந்தது.
அவர் ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தால் அவன் விபரத்தைப் பிட்டுப்பிடுங்கியிருப்பான்.'எவ்வளவு சொத்து காலஞ்சென்ற கனவான் வேர்ணர் பம்பேர்க்குக்கு இருக்கிறதென்று பிரதிவாதிக்குத்தெரியுமா' என்ற கேள்வி பெஞ்சிலிருந்து வராதவரை இக் கூட்டுச்சதிக்கு பெஞ்சும் ஒத்துழைப்பதாகவே எனக்குப் பட்டது. இச்சந்தர்ப்பத்தில் நானொரு சட்டத்தரணியாக இல்லாதிருக்கிறேனே என்று ஆதங்கமாகவிருந்தது.
எதிர்க்கட்சிக்காரரிடம் தனியாய்பேசி அதிக பணத்தை வாங்கிக்கொண்டு தான் ஒப்புக்கொண்ட வழக்கில் தாமே தோற்றுத் தன் கட்சிக்காரரை "அம்போ'வெனக் கைவிடும் பல சட்டத்தரணிகளை நான் இங்கும் பார்த்திருக்கிறேன்.
ஒரு அப்பாவித் தமிழ்ச்சகோதரி கண்முன்னே வஞ்சிக்கப்படுகிறாள். என்னால் எதுவுமே செய்யமுடியாதிருக்கிறது.
கண்ணை மூடி அரை நிமிஷம் சிந்தித்த பின்னால் கதறீனா சொன்னார்:"அவங்கள் நாலு பேருமாய் வலியவந்து எனக்கு எண்பதினாயிரம் மார்க்குகள் தருகிறோமென்று சொல்லுறாங்கள். கர்த்தர் எனக்குத்தர விரும்புகிறது அதுதானென்றால் நான் எதுக்கு மல்லுக்கட்ட வேணும் ? அது சரியுமல்ல.ஒரு மீனுக்கே வகையற்ற அபலை நான் . ஆண்டவனோ இந்த மனிதர்கள் ரூபத்தில் ஒரு ஓடம் நிறைஞ்ச மீனுகளைத் தருகிறான். அதற்குமேலும் கடலிலுள்ள மீன் பூராவும் எனக்குத்தான் என்று ஆசைப்படுவது மகாதப்பு மகன்......... அதர்மம். எதைக்கொண்டு வந்தோம் கொண்டு போவதற்கு? எதைத்தான் இங்கு தேடினோம் இழப்பதற்கு? எவன் தந்தானோ அவனே கொள்வான். எதுவும் தங்காது......... நாம் எல்லாரும் ஓட்டைப்பாத்திரங்கள்தான் வைத்திருக்கிறோம் மகன்.நான் என்னுடையதென்றதுவும் அவர்கள் தங்களதென்றதுவும் எல்லாமே தேவனின் இராட்சியத்துக்கே உரியவை. அவனுக்குச் சம்மதமில்லாத எதுவும் எனக்கு வேண்டாம். அவன் சித்தம் எதுவோ எல்லாம் அதன்படி நடக்கட்டும்.எனக்கென்ன பிள்ளையா குட்டியா சொத்தை வைச்சுக்காக்க.........? விழுகிற இடத்தில புதைக்கப்படப்போகிற ஒரு அகதி. அந்தமனுஷன் பெற்றமக்களுக்கே பாத்தியதையுள்ள பிதுரார்ஜிதங்களை நான் அனுபவிக்கிறது பரலோகத்துக்கே அடுக்காது . அந்த மனுஷனோட வாழ்ந்த சின்ன உறவுக்கு அவங்களாய் மனமொப்பித்தாறது எதுவெண்டாலும் எனக்கு சம்மதமெண்டு சொல்லு மகன். "
பிரதிவாதி புரிதலோடு என்னுடன் ஒத்துழைப்பராயின் எதையாவதுசொல்லி ஒப்பந்தத்தை நிறுத்திவிடலாம். இது பலியாடே ' சீக்கிரம் வெட்டு வெட்டு ' என்கிறது. கீதையின்சாரத்தை ஒரு கிறிஸ்தவப்பெண் மொழிவது வியப்பாயிருந்தாலும் மறுபடியும் மறுபடியும் தரையிலே நின்றுகொண்டு ஒரு லௌகீகியாகவே சிந்திக்கும் எனக்கு அவர் முடிவைப்பாராட்ட முடியவில்லை. வீணாக அவசரப்பட்டு சூழ்ச்சியும் தந்திரமும்கொண்ட இந்த ஒப்பந்தத்தை மன்றில் ஒப்புக்கொள்வதால் அவருக்கு வரவிருக்கும் இழப்புக்களைத் தெரிந்துகொள்ளாமலும் அதையடுத்து நடக்கவிருப்பவற்றை ஊகிக்கக்கூட முடியாமலுமிருக்கும் அவரின் அசட்டுத்தனத்தின்மேல் எனக்குத் தாளமுடியாத எரிச்சலே வந்தது. இனி எதுவும் என்னால் செய்வதற்கில்லை. "இந்தக் குத்தியன்தான் குறுக்கே நிக்கிறான்''என்றொரு வார்த்தை இங்கிலீஷில் வந்துதேயென்றால் என்கதையும் தலைகீழாய்விடும். விஷயம் கைநழுவிப்போகிறதுதான். ஆனாலும் வேறுமார்க்கமில்லை. நான் நாற்றை மட்டும் நாட்டிவிட்டுப்போகும் முடிவுக்கு வந்தேன்.
அவரது பூரண சம்மதத்தை அப்படியே பெஞ்சுக்கு எடுத்துச் சொன்னேன். வாதிகள் அனைவருக்கும் தம் வியூகத்தில் வென்றுவிட்ட ஆனந்தம். அதைக்கொண்டாட அவர்கள் வீட்டில் பெருவிருந்தே ஏற்பாடாகலாம். அனைவரும் அழுத்தம் குறைந்து றிலாக்ஸ் ஆனார்கள். அனைவர் முகத்திலும் அதுவரை இல்லாத ஒரு விகசிப்பு!
இறுதியாக அவ்வொப்பந்தத்தை திருமதி. கதறீனா பம்பேர்க் சுயஅறிவுடனும்......... எவருடைய நிர்ப்பந்தமின்றியும்......... பிரக்ஞைபூர்வமாகவும் செய்கின்றாரென அசகுபிசகுகளுக்கு இடந்தராத சட்டநுணுக்கங்களுடனான வாசகங்களால் புனையப்பட்டு அக்குடிசார்மன்றில் பதிவுசெய்யப்பட்டது.
எம்மைத் தனியறையில் தங்கவைத்தது......... அவர்களாகவே எமக்குக் காலைச்சாப்பாட்டு ஏற்பாடுபண்ணி வைத்திருந்தது......... எல்லாமே வழக்கு ஆரம்பிக்க முதல் நாம் கதறீனாவைச் சந்தித்து அவர்களது ஒப்பந்தம் பற்றித் தெரிந்துவிடாமலிருக்கவும், அவரை உசார்ப் படுத்திவிடாமலிருக்கவும் வாதிகள் பண்ணிய மாயவியூகத்தின் பகுதிகளென்பது இப்பொழுதுதான் புரிகிறது.
மன்றில் சாந்தசொரூபிபோல் தெரிந்த நீதிபதி, மழுங்க மழுங்கச் ஷேவ் செய்து உயர்ரக உடைகளில் கனவான்கள்போலத் தோன்றிய வாதிகள், அவர்கள் சட்டத்தரணி, எவர்மீதும் எமக்கு மரியாதை ஏற்படவில்லை. வழிப்பறிக்காரர்கள்போலவும் ......... சவப்பெட்டி தூக்கிச்செல்ல வந்தவர்கள் போலவும் தெரிந்தார்கள். அம்மன்றின் நிழலில் நிற்கவே பிடிக்கவில்லை. சீக்கிரம் விட்டு வெளியேறினோம்.
தெளிவான வானம். அற்லஸில் பார்த்தாற்போல் சுருக்கங்கள் மடிப்புக்களுடன் மரகதப்பச்சை வெல்வெட்டைப் போர்த்திக்கொண்டு முடிவில்லாமல் நீளும் வின்டர்பேர்க்கின் மலைத்தொடர்கள்மேல் சூரியக்கதிர்கள் தடையில்லாது இறங்கி ஒளிர நாளும் நாடும் அழகாகவே இருந்தன. உயரமான குன்றுகளிலிருந்து கீழே பார்த்தால் பேர்லினைப்போலவே ஊர் முழுவதும் நீக்கமற தேவாலயங்கள் செறிந்திருப்பது தெரியவே கன்னத்தில்போட்டுக்கொண்ட பாவனிக்கு அவ்வனைத்துத் தெய்வங்கள் தேவதைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவள் போல் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பிறந்தன.
வின்டர்பேர்க்கை ஒரு றவுண்ட் வந்து அவ்வூரில் சிறப்பாக என்னனென்வெல்லாம் இருக்கென்று விசாரித்தோம். தங்களுர் திராட்சையில் கைத்தயாரிப்பிலான உலர் வைன் பிரசித்தம் என்றார்கள்......... வாங்கினோம் (செமை கிக்). மற்றும் பலபுராதன கோட்டைகளும் அரும்பொருளகங்களும் உள்ளன என்றார்கள்......... போய்ப்பார்த்தோம். மாலை மயங்கத் தொடங்க வயிற்றையும் கிள்ளத்தொடங்கியது. இத்தாலியன் உணவகமொன்றில் புகுந்து சலாத்தும் ஸ்பாகெட்டியும் ......... லசானியாவும் சாப்பிட்டுவிட்டு பெர்லின் நோக்கிப் புறப்பட்டோம்.
கோவில்களின் செறிவைப்பொறுத்தவரையில் தமிழகத்துக்கு திருச்சியென்றால் ஜெர்மனிக்கு பெர்லின். இத்தனை போரழிவுகள் சிதைவுகளின் பின்னும் பூஜைகள் ......... ஆராதனைகளுண்டோ இல்லையோ பெர்லின் நகர எல்லைக்குள் மாத்திரம் 160 தேவாலயங்கள் இருப்பதால் நகருள் எங்கு நின்று எத்திசையில் நோக்கினும் பார்வைப்புலத்துள் குறைந்தது இரண்டு தேவாலயக் கோபுரங்களாவது தென்படும். ஐந்தாவது மாடியிலிருக்கும் எம் பிளாட்டில் பாவனி அதிகாலையில் எழுந்து குளித்துப் பூசி காயத்திரி மந்திரத்தை செபித்துக்கொண்டு; குசினி ஜன்னலினூடு தெரியும் 2 கோபுரங்களையும்......... வதியும் அறை ஜன்னலினூடு தெரியும் 3 கோபுரங்களையுந்தான் சேவிப்பாள்.
" மனுஷி கணவனோடு வாழ்ந்த காலத்தில் மனுஷனுக்கென்னென்ன ஆஸ்திகள்.........என்னென்ன சேமிப்புகள் இருக்குதென்று விசாரிக்காமலேயே அறியயாமலேயே வாழ்ந்திருக்குதென்றால் ஆள் கொஞ்சம் வித்தியாசமான டைப்தான்.'' என்றாள் பாவனி.
" நானும் உதைத்தானப்பா இப்ப யோசிச்சனான்.''
"அந்தப் பெருங்குணத்துக்காகத்தான் கிழவன் மனுஷியைக் கட்டிச்சோ யார்கண்டது? நாலு பிள்ளைகளோடு ஒரு யாழ்ப்பணத்துத் தமிழ்ப்பெண்ணைத் திருமணஞ்செய்து கொண்டு அப்பிள்ளைகள் அத்தனை பேரையுமே இங்கே அழைத்துப் படிக்கவைத்து அவர்களையும் நல்ல நிலையில் வைத்திருக்கும் ஒரு ஜெர்மன்காரரை எனக்குத் தெரியும். இன்னொருவர் ' ஒரு குடும்பத்தைத் திருமணஞ்செய்தேன் ' என்று நாவல்கூட எழுதியிருக்கிறார். அவருக்கும் அப்படி அனுபவங்களாக்கும். ஒரு விஷயத்தைக் கவனித்தீரா............ திருமணங்களுக்கு காரணங்கள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. நம் பெரியாரைப் பார்க்கேல்லையா? வயதான பின் மனிதர்கள் திருமணம் செய்யிறது மேற்கிலதான் அதிகம். ஆர்ஜென்டினா எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே தன்னோடு பலகாலங்கள் நண்பராகவும் 12 வருடங்கள் உதவியாளராகவும் இருந்த மரியா கோடமாவை தன் 84வது வயதில்தான் திருமணம் செய்தார்."
ஹைவேயில் வாகனங்கள் குறைவாகவிருக்கவே சவாரி சந்தோஷமானதாக இருந்தது.
" எனக்கென்றால் இனி மனுஷியை இருக்கிற வீட்டாலும் மெல்லக் கலைச்சுப்போடுவாங்கள். தெருவில தனிச்சு நின்று அந்தரிக்கப்போகுது என்றதுதான் கவலையாயிருக்கு. "
" நான் நினைக்க நீர் சொல்லுறீரப்பா.......... இட்ஸ் றியலி அமேஸிங்! நாமென்னதான் வேறை செய்ய முடியும்? "
இப்படிப் பலதடவைகள் நமக்கு நடந்திருக்கின்றது. " டாய்லெட்ல தனியக் கண்டபோது பின்னால சிலவேளை உதவுமேயென்று எங்கட பிஸினெஸ் காட்டை மனுஷிக்குக் குடுத்தனான்."
"·பன்டாஸ்டிக்........... யூ ஆர் அன்கொம்பெயறபிளி க்யூட் அன்ட் கிளெவர் டியர். "
எனக்கு இப்போது அவள்மேல் முன்னெப்பொழுதையும்விட அதிகமாகக் காதல் வந்தது.ஒரு முன்னிலவுக்காலம் அது. நேரத்துடனேயே வந்துவிட்ட உழவாரஅலகு வடிவில் முற்றாதவொரு நிலவு மென்னூதா முகில்களினிடையே நீந்திக்கொண்டு அந்தக் குளிரோடும் வனிலா ஐஸ்கிறீமாய் உருகிக் கொஞ்சிக் கொஞ்சிப் பொழிகிறது.
பவானி கைகளை உயர்த்தி அழகாகச் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு சுகமான தூக்கத்துக்குப் பூனைக்குட்டி மாதிரி தன் இருக்கையில் பலதினுசிலும் கோணங்களிலும் சாய்ந்தும் முடங்கியும் உட்கார்ந்து இசைவு பார்க்கிறாள்.

கோலம்போடும் பெண் அழகு
தலைசீவும் பெண் அருவி
சமர்த்தான பெண் புதையல்
சோம்பல் களையுமிவள் கவிதை
என்னுள் பொறிக்கும் கவிதையோடு ஒரு முத்தத்துக்கான உத்தேசத்துடன்கடைக்கண்ணால் மெல்லப் பார்க்கிறேன்.
அவள் தூங்கிவிட்டிருந்தாள் தன் குழந்தைக்கான கனவுகளுடன்.
...............................................................................
தாமரை டிசெம்பர் 2003.